Tuesday, November 16, 2010

எழுத்து எனும் பிசாசு 2

போன பதிவைப் படித்து விட்டு ஒரு நண்பர் இது நீங்கள் குறைந்த பட்சம் இருபது வருடமாவது இலக்கிய  உலகத்தில் ஆண்டு அவிந்து காதோரம் எழுத்துக்  கிருதா கடல்நுரை போல் வெளுத்த பிறகு செய்திருக்கவேண்டிய கட்டுரை என்றார்.ஆனால் பாருங்கள்.நான் எப்போதும் வரிசைப் படி எதையும் செய்ததில்லை.கதையோ கவிதையோ முதலில் கடைசி வரியைத்தான் எழுதுவேன்.பிறக்கும் போதே என் கல்லறையில் எழுத வேண்டிய வாசகத்தோடுதான் நான் பிறந்ததாக நினைக்கிறேன்.Here is my epitaph.'HERE LIES A MAN WHO TRIED TO WRITE HIS WAY TO IMMORTALITY'
வெறும் முயற்சி மட்டுமா முயற்சி முளைத்ததா என்பதைக் காலமே தீர்மானிக்கும்.[சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சினிமாவில் சொல்வது போல இது ஒரு இலக்கிய கிளிஷே].

ஆனால் எது இலக்கியம் என்று யார் தீர்மானிக்கிறார்கள் என்று அப்பாதுரை கேட்டார்.என்னுடைய கதை ஒன்றைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் 'amusing'என்று சொன்னார்.எனக்கு அது ஏனோ பாராட்டாகத் தோன்றவில்லை.அவரே 'disturbing'என்று சொல்லி இருந்தால் என் நடையில் ஒரு வரி மிடுக்கு கூடி இருக்கும்.அவர் குறிப்பிட்ட படைப்பு என்னை ஒரு கள்ளக் காதலி போல் பலநாள் இம்சை செய்த  பிறகு எழுதியது.அது வெறுமனே சுவராஸ்யம் மட்டும்தானா.பெண்ணின் வயிற்றுக் குழியில் விரல் வைத்து சுவைக்க நினைப்பது இலக்கியம் இல்லையா
என்று அவர் கேட்டார்...


மார்கஸ் டி சாதி  எழுதியது எல்லாம் பெண்ணின் உடல் குழிகள் வளைவுகள் பற்றிதான்.அதற்காகப் பல முறை சிறைப் படுத்தப் பட்டும் மனம் சிதறி இறக்கும் வரை அவன் அதை எழுதுவதை நிறுத்தவில்லை.
நான் சொல்ல விரும்பியதன் மிகச் சரியான உதாரணம் அவன்.எழுத்தினால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்கள் அதிகம்.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் எழுத்து எனும் அரக்க மரத்திற்கு ஊற்றப் பட்ட ரத்தம் அதிகம்.கொஞ்சமாவாது உங்கள் புத்தி சுவாதீனத்தை இழக்கத் தயார் இல்லை எனில் எழுத வராதீர்கள்.இது குடி போலவேதான்.ஆரம்பத்தில் நீங்கள் தான் அதிகாரத்தில் இருப்பதாக அது உங்களை நம்பவைக்கிறது.மெல்ல மெல்ல உங்கள் வாழ்வை அது கையில் எடுத்துக் கொண்டு விட்டது என்பதை நீங்கள் உணரும்போது காலம் கடந்து போய் இருக்கிறது.ஆர் வி எஸ்  சொன்னது போல எழுத்து மெல்ல உங்களை மற்றவரிடமிருந்து முக்கியமாக உங்கள் குடும்பத்திடமிருந்து அன்னியராக்கி விடுகிறது. நீங்களும் அவர்களும் ஒரே வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும் ஒரே உலகத்தை அல்ல.பெரும்பாலான எழுத்தாளர்களின் மணவாழ்க்கை சிலாக்கியமானதாக இலை.நிறைய பேர்களுக்கு நாடோடி வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது..நிறைய எழுத்தாளர்கள் சராசரிக்கும்  அதிகமான ஆளுமைக் கோளாறுகள் உடையவர்கள்.மனச் சிக்கல்கள் நிரம்பியவர்கள்.பலர் இதற்காக ரகசியமாக சிகிச்சை பெறுபவர்கள்.மது அருந்திய குரங்கைத் தேள் கடித்தது போன்ற ஒரு அதிர்வில்தான் பலர் இருக்கிறார்கள்.ஆனால் இந்த அவஸ்தையில்தான் அவர்கள்  எழுத்து புண்ணிலிருந்து கசியும் குருதி போல் ஒழுகி வருகிறது.இந்தச் சுட்டியைப் பாருங்கள்.எழுத்தும் துறவும் பித்தும் எவ்வளவு நெருக்கமானவை என்று புரியும்.
http://navinavirutcham.blogspot.com/2010/11/14.html.

எல்லோருமா இப்படி எழுதுகிறார்கள் என்று ஒரு தோழி கேட்டார்.சிலருக்கு எழுத்து வெறும் தொழில் நுட்பம் மட்டுமே என்பது உண்மை.இன்னும் சிலர் அவர்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் உதிரத்தில் நனைத்துதான் எழுதுகிறார்கள்.உண்மையில் இந்த இரண்டு வகையில் எதாவது ஒரு வகையாக இருந்து விடுவதே நல்லது.வணிக எழுத்தாளர்கள் அதற்கான பலனை புகழை அன்றே அடைந்து விடுகிறார்கள்.தீவிர இலக்கியம் செய்வார்கள் வாழும் காலத்தில் புறக்கணிக்கப் பட்டாலும் மெல்ல அவர்கள் தங்கள் சாயுச்சியத்தை எப்படியோ அடைந்துவிடுகிறார்கள்.நடுவாந்திரங்களுக்கு இவ்வுலகமும் இல்லை அவ்வுலகமும் இல்லை.ஒரு எழுத்தாளன் அஞ்ச வேண்டிய இடம் இதுவே.அவர்கள்   சரித்திரத்தில் இன்னுமொரு பெயராக எண்ணிக்கையாக ஒரு அடிக் குறிப்பாக மட்டுமே ஆகி மறைகிறார்கள்.

நீங்களும் இன்னொரு இலக்கிய வியாதியாக மாறிவிட்டீர்களா என்று ஒரு நண்பர் அச்சம் தெரிவித்திருந்தார்.சமீபகாலமாக உங்கள் எழுத்து மிகுந்த இலக்கியத் தரத்துடன் இருக்கிறதே என்று இன்னொரு நண்பர்  வருந்தி இருந்தார்.அவர்களுக்கெல்லாம்  நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது ஒரு தற்காலிகப் பின்னடைவு என்பதே.ஒரு மிகப் பெரிய பரப்பிய எழுத்தாளனாக ஆவதற்கு நான் மேற்கொண்டிருக்கும் கடினமான இந்தப் பிரயாணத்தில் எந்த சபலத்துக்கும் நான் இடம் கொடுக்கமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.It is just an acute literary disorder.சீக்கிரம் குணமாகி பழைய படி மொக்கையாய் எழுத ஆரம்பித்துவிடுவேன்.கவலையை விடுங்கள்..ஆனால் பாருங்கள் பரப்பிய இலக்கியத்தின் பொற்காலம் முடிந்து விட்டது என்று ஜெமோவின் கோர்ட் சமீபத்தில்தான் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.அதுதான் சற்று கிலேசமாய் இருக்கிறது.

மேலும் நான் இலக்கியம் இலக்கியம் என்று மூச்சுக்கு மூன்று இலக்கியம் போடுவதற்கும் என்னுடைய படைப்புகள் இலக்கியமாக இருப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.உதாரணமாக சமீபத்தில் .பாலகுமாரன் எழுத்தைப் பற்றி ஜெமோ விமர்சிக்கும் போது அவர் ஒரு காம எழுத்தாளர் என்பது போல் எழுதி இருந்தார்.எனக்கு அதைப் படித்ததும் ஒரு எழவும் புரியவில்லை.ஏன் எனில் பாலகுமாரன் காமம் என்பது என்ன காமத்தை எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் கதாகாலேட்சபம் செய்து கொண்டிருப்பாரே தவிர அவரது ஒட்டு மொத்த படைப்புகளில் உள்ள காமம் சாரு போன்றவர்களின் ஒரு சிறு கதைக்கு உறை போடக் கூட காணாது.[இரட்டை அர்த்தம் உத்தேசிக்கப் பட்டதே]கனவுகள் விற்பவன் என்றொரு கதை.தாந்த்ரீகம் பற்றிய கதை .புகுந்து விளையாடி இருக்கலாம்.எத்தனை அல்குல் எத்தனை முலை போட்டாலும் கதையில் நியாயப் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் கடைசி வரை கதைப் பெண்  அதிகபட்சம் அடிவயிற்றைத் தடவுகிறாள் அவ்வளவுதான்.அதேபோல்தான் எனது இலக்கியமும்.இலக்கியம்னா அது பெரிய கடல்னா என்று பேசிக் கொண்டிருப்பேனே தவிர அது மாதிரி தவறு எதுவும் செய்துவிடமட்டேன்.

நண்பர் தெக்கிகாட்டான் என்னிடம் ரொம்ப ஜெமோவின் பாதிப்பு தெரிகிறது என்று எச்சரித்திருந்தார்.எனக்கு என்னவோ அவர்தான் ஜெமோவினால்  அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது போல தெரிகிறது.கடவுளைக் கடைசிவரை மறக்க முடியாத பெரியாரிஸ்ட் போல அவர் ஆகிவிட்டார் என நினைக்கிறேன்.அல்லது ஆறு தாண்டியும் இன்னமும்
பெண்ணை தனது மனதில் இருந்து இறக்கிவிடாத பௌத்தத் துறவி போல.

அதேசமயம் ஜெமோவை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த நாணமும் கொள்ளவில்லை.அவர் பெரும்பாலும் பயன்படுத்தும்  மலையாளம் கலந்த குமரி வழக்கு மொழி இன்று நான் தினமும் புழங்கும் மொழி..அவர் கதைகளில் வரும் இடங்களை நிலப் பரப்பை நான் தினமும் கடந்து செல்கிறேன்.இலக்கியம் தவிர வரலாறு.யட்சிகள்,இந்திய தத்துவம் போன்ற அவரது ஆர்வங்களில் எனக்கும் ஆர்வம் உண்டு.அதேசமயம் அவற்றில் எனது நிலைப்பாடு பெரும்பாலும் அவரது நிலைபாட்டுக்கு நேர் எதிர்.[அவரது தளங்களில் எனது பின்னூட்டங்களில் இதைக் காணலாம்]நான் ஆர்வம் கொண்டுள்ள இந்தத் துறைகளில் பொருட்படுத்தும்படியான கட்டுரைகளை அவர் மட்டுமே இன்று தொடர்ந்து எழுதுகிறார்.மற்றவர்களெல்லாம் எந்திரன் படத்துக்கு பத்துப் பக்க விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவேதான் அவர் சொல்வதில் பலவற்றில் உடன்பாடு இல்லை எனினும் தொடர்ந்து வாசிக்கிறேன்.மெல்ல மெல்ல எனக்கான தர்க்கங்களை  உருவாக்கிக் கொள்ள இது உதவுகிறது.ஆனால் இது அவரது பஜனைக் குழுவில் நானும் சேர்ந்துவிட்டேன் என்று சிலரால் புரிந்துகொள்ளப்படுகிறது என அறிகிறேன். நீங்கள் வாசிக்கும் ஜெமோ சாரு போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினை போன்ற தருணங்களில் ஏன் மௌனகுருவாகி விட்டார்கள் என்று அவர் கேட்டார்.எனக்கும் இதில் தனிப்பட்ட வருத்தம் உண்டு.இவர்களால் வணிகப் போலியாக அறியப் படும் பாலகுமாரன் கூட இலங்கைப் பிரச்சினையில் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.சமீபத்தில் கூட தமிழர்களுக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் பதிலாக இலங்கை சீனர்களின் கையில் சிக்கிச் சீரழியும் என்று குறி சொல்லி இருந்தார்.ஆனால் இதை ஒற்றை அளவு கோலாக  வைத்துக் கொண்டாள் ஜெமோ சாரு மற்றும் பல தீவிர இலக்கிய வாதிகளைவிட அவரைத்தான் மேலான இலக்கியவாதியாக கொண்டாட வேண்டி வரும்.


மேலும் எனக்கு மலையாளத்திலிருந்து வரும் எதன் மீதும் ஒரு கவர்ச்சி உண்டு.நான்அதிகம் புழங்குகிற இடமாய் அது இருப்பதால்.இது முற்றிலும் புவியியல் சார்ந்த ஒரு சாய்வு.மலையாள இலக்கியம்,மலையாளப் படங்கள்,மலையாளப் பெண்களின் தெங்கிள முலைகள் எல்லாம்  எனக்குப் பிடிக்கும்.[ஆனால் மலையாள  ஆண்களை எனக்குப் பிடிக்காது.ஆகவே மலையாளிகள் நமக்கு செய்யும் துரோகங்கள் பற்றிய சுட்டிகளை எனக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டுகிறேன்]ஜெமோ,சு ரா  போன்றோரை நான் அதிகம் வாசிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.நாகூரிலோ மதுரையிலோ பிறந்து புழங்குபவர் ருசி வேறுவிதமாக இருக்கக் கூடும்..

உலகைப் புரட்டி சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டாமா இலக்கியம் அவ்வாறு செய்யாத இலக்கியம் என இழவுக்கு என்று யாரேனும் சொல்லலாம்.இலக்கியம் சமூக மாற்றத்தைக் கொண்டு வரலாம்.ஆனால் அது உபவிளைவே.அவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வந்த படைப்புகள் எல்லாம் அந்த உத்தேசத்தில் எழுதப் பட்டவை அல்ல.அதனால்தான் பிரச்சார முன் நோக்கத்துடன் எழுதப் பட்ட படைப்புகள் எதுவும் காலத்தில் நிற்கவில்லை.நல்ல படைப்பாளி எப்போதும் சரியான அல்லது நியாயமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பவனாகவும் இருப்பான் என்று நாம் என் எதிர்பார்க்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை..சமீபத்தில் திருவனந்தபுரம் புத்தகக் கண்காட்சியில் நெருதாவின் சுயபுராணம்[பின்னே..நானும் இலக்கியவியாதி ஆகி விட்டேன் இல்லையோ] வாங்கினேன்.அதில் நெருதா  தான் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருத்தியை பட்டுப் புடவை கொடுத்து கவிழ்த்த கதையை விவரித்திருக்கிறான்.அதிலும் அவள் பாட்டாளி வர்க்கம் வேறு என்று அறிந்தபோது எனது பச்சைத் தமிழ் ரத்தம் சிகப்பாய் கொதிப்பதை என்னால் தடுக்கவே முடியவில்லை.ஆனாலும் எளவு அவன்
நல்ல கவி என்ற எனது கருத்தை அது மாற்றவில்லை.

ஆகவே நண்பர்களே ஒரு இலக்கியக் குடிகாரனின் பாவமன்னிப்புப் படலம் இத்துடன் இப்படியாக முடிகிறது..இதை ஏற்றுக் கொண்டு தீவிர இலக்கியவாதி என்ற பழிச் சொல்லில் இருந்து  என்னை விடுவித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அனுபந்தம்
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய மேலும் சில புத்தகங்கள்

India -A million mutinies now-V.S.Naipaul
The Historian-Elizabeth kostova
White Mughals
Nine lives -both by William Dalrymple
கடைசிப் புத்தகம் மிக அற்புதமான புத்தகம் என சிபாரிசு செய்கிறேன்.Paul theroux ற்கு
பிறகு நான் ஆழ்ந்து படித்த ஒரு பயண இலக்கியம்.அங்கே இட்லி சாப்பிட்டேன் இங்கே புட்டு என்ற வகை பயண இலக்கியம் அல்ல.பல இடங்களில் இயல்பாய் கண்ணீர் பொங்குவதைத் தவிர்க்க முடிய வில்லை.இந்தியாவின் இன்றைய நிலை பற்றிய ஒரு அனாயசமான குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்நூல் அளிக்கிறது.தமிழில் கட்டாயம் மாற்றம் செய்யவேண்டிய புத்தகம்.கிழக்கு கவனிக்க..

டிஸ்கி-இந்தக் கட்டுரையை எழுதியதும் படித்துப் பார்த்தேன்.பாதி எனக்கே புரியவில்லை.மீதியால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை எனத் தோன்றியது.ஆஹா..நீங்கள் சந்தேகப் பட்டது உண்மைதான் போல் இருக்கிறது.நான் இலக்கிய வாதி ஆகிவிட்டேன்.

11 comments:

  1. உங்கள் முடிவை வழிமொழிகிறேன் :)

    ReplyDelete
  2. என்னவோ நல்லபடியா உருப்படாமல் போனால் சரி !
    epitaph எல்லாம் ஓவரா இல்லை?
    thanks for the books list ..இந்த முறை சென்னை கண்காட்சியிலும் தமிழ் தான் எனக்கு .பட்டியல் தயாராகிறது.உங்கள் பங்குக்கும் சிபாரிசு செய்யுங்கள் .
    பத்மநாபனை தரிசித்தீர்களா?

    ReplyDelete
  3. இலக்கியவாதி, இலக்கியம் என்பதற்கான அளவுகோல்கள் இன்றுவரை எனக்கு தெரியாது. புனைவெது இலக்கியமெது என்று தெரியாமல் தான் அனுதினமும் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் செந்தமிழில் எழுதி வாசகனை வசியப்படுத்தினால் அது இலக்கியத்தரமான படைப்பாக மாறிவிடுகிறது. பலவகை படைப்பிலக்கியங்களில் அதிகமாக எல்லோரையும் வசியப்படுத்துவது அல்குல் மற்றும் ஸ்தனம் பற்றி பேசி மினுக்கும் மேனி இலக்கியங்களே. ஒரு மனோவியாதி கொண்டவனின் பிதற்றல்களோ, ஒரு pervert இன் வாழ்வில் நிகழும் உணரமுடியா சம்பவங்களின் தொகுப்போ தான் சமகாலத்தில் இலக்கியம் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து சற்று விலகி நின்று பார்த்தால் பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு இன்னும் செம்மையான பணி செய்திருக்கிறது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் படைத்த பல பதத்தை சினிமாப் பாடல்களில் எடுத்தாண்டிருக்கிறார்கள். கண்ணதாசனிலிருந்து "மன்மத ராசா.." எழுதுவோர் வரை.

    மக்களின் வாழ்வியலை படம்பிடித்து காட்டும் படைப்புகள் இலக்கியத்தில் அடங்குமா?
    இலக்கியத் தரம் என்பது எதை வைத்து அளக்கப்படுகிறது?
    இலக்கியத்தின் முக்கிய மூலக்கூறு என்ன?
    என்னுள் இதுபோன்ற பல கேள்விகள் இலக்கியத்தை பற்றி....
    (இப்படி ஐந்தாறு முறை இலக்கியம் என்ற சொல் வரும்படி எழுதியதால் என்னையும் இலக்கியம் எழுதும் வாதி என்று நினைத்துவிடவேண்டாம். நான் ஒரு மொக்கை கதை எழுத்தாளன் மட்டுமே)

    நீங்கள் சொல்வது போல் எழுத்தாளன் புற உலகோடு அன்னியப்பட்டு போகிறான். சிந்தித்து சிந்தித்து மற்றவர்களின் விசித்திரமான பார்வைக்கு இரையாகிறான். இது போன்ற செயல்களே அவனை தனிமைப்படுத்தி முடிவில் எழுத்து அவனை ஆட்கொண்டு அடிமை படுத்துகிறது என்பது என் தாழ்மையான எண்ணம். மேலும் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி...

    ReplyDelete
  4. (போன கமெண்ட்டின் தொடர்ச்சி...)
    மக்களின் வாழ்வியலை படம்பிடித்து காட்டும் படைப்புகள் இலக்கியத்தில் அடங்குமா?
    இலக்கியத் தரம் என்பது எதை வைத்து அளக்கப்படுகிறது?
    இலக்கியத்தின் முக்கிய மூலக்கூறு என்ன?
    என்னுள் இதுபோன்ற பல கேள்விகள் இலக்கியத்தை பற்றி....
    (இப்படி ஐந்தாறு முறை இலக்கியம் என்ற சொல் வரும்படி எழுதியதால் என்னையும் இலக்கியம் எழுதும் வாதி என்று நினைத்துவிடவேண்டாம். நான் ஒரு மொக்கை கதை எழுத்தாளன் மட்டுமே)
    நீங்கள் சொல்வது போல் எழுத்தாளன் புற உலகோடு அன்னியப்பட்டு போகிறான். சிந்தித்து சிந்தித்து மற்றவர்களின் விசித்திரமான பார்வைக்கு இரையாகிறான். இது போன்ற செயல்களே அவனை தனிமைப்படுத்தி முடிவில் எழுத்து அவனை ஆட்கொண்டு அடிமை படுத்துகிறது என்பது என் தாழ்மையான எண்ணம். மேலும் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி...

    ReplyDelete
  5. என்ன பாஸ் இது இப்படி எல்லாரும் இலக்கியத்தை அனாதையா விட்டுட்டோம்னா யார்தான் அதைக் காப்பாத்தறது..ஐயோ நான் 'அது' இல்லே நிச்சயமா நான் 'அது' இல்லவே இல்ல என்று கதறும் அளவுக்கா இன்றைய இலக்கிய உலகம் இருக்கிறது?அப்புறம் இன்றைய இலக்கியம் எதனால் பெர்வெர்ட்டுகளால்நிறைந்திருக்கிறது என்று கேட்கிறீர்கள்..கோணல்களிலேயே பெத்த கோணலான என்னிடம் போய் இப்படிக் கேட்டுட்டீங்களே..எல்லாக் கவிதைகளையும் கதைகளையும் யோனியில் ஆரம்பித்து யோநியிலேயே முடிக்கும் ,பிட்டுப் படம் மூலம் பொழுதை ஓட்டும் [மாமல்லன்]கலாச்சாரக் கேடன் என்னிடம் போய்...

    ReplyDelete
  6. பிட்டுப் படம் பார்க்காதோர் வாழ்வு பட்டுப் போய்விடும்... என்று பட்டுத் திருந்தியவர்கள் சொல்கிறார்கள். :-) :-)

    அது தெரிந்ததுதான்.. நீங்க கொஞ்சம் இலக்கியம் அப்படின்னு எழுதிட்டீங்களா உடனே எனக்கும் பத்திகிச்சு.. பாருங்க இப்ப உங்க கமெண்ட்டுக்கு எவ்வளவு கரீட்டா செந்தமிழ் பதில் போடறேன்...

    அப்புறம் அப்பாஜி சொன்னா மாதிரி.. உங்கள் கடைசி வரியை நானும் வழிமொழிகிறேன். ஒட்டு நம்பர் ரெண்டு. ஓ.கே ;-)

    ReplyDelete
  7. நல்லா நொந்தீங்க RVS.

    இலக்கியம் என்பது ஹிபோக்ரெசி சாயம் பூசிய சுவர். சுவற்றில் எழுதியதெல்லாம் இலக்கியமில்லை; எழுதாமல் விட்டதில் எத்தனையோ இலக்கியம். சிலபேர் இலக்கியக் கூர்க்காக்கள் போல் சுவற்றை வலம் வந்து கிறுக்குவோரை வேந்டலிசம் என்று விரட்டுகிறார்கள்.

    ஆளாளுக்கு டிபைன் பண்ணிக்கிட்டுத் திரியறோம். படிப்பவர் மனதை படித்தக் கணத்துக்கு அப்பால் ஒரு கணம் சுண்டினால் இலக்கியம். இது நம்பல் சொல்றான். நிம்பல் கேட்டால் கேக்றான் கேக்காட்டி போரான்.

    ax2+bx+c=0லும் அதன் தீர்விலும் இருக்கும் இலக்கியத்தை எத்தனை பேர் ரசிக்கிறோம்?

    ReplyDelete
  8. சில்லறை தேடினால் சித்தாந்தம் கிடைக்குது. பேஷ்!
    >>>எல்லாக் கவிதைகளையும் கதைகளையும் யோனியில் ஆரம்பித்து யோநியிலேயே முடிக்கும்

    ReplyDelete
  9. நண்பர் தெக்கிகாட்டான் என்னிடம் ரொம்ப ஜெமோவின் பாதிப்பு தெரிகிறது என்று எச்சரித்திருந்தார்.//

    போகன், தனிப்பதிவாவே போட்டு விசயத்தை தொட்டுப் பேசியிருக்கீங்களா? இப்போதான் எனக்கு இது தெரிய வந்துச்சு. நல்லது, நல்லது?

    நான் சொன்னதை நீங்க அப்படி எடுத்துக்கிட்டீங்களா... நான் சொல்ல வந்தது ஆங்காங்கே நீங்க ஜெமோவை மேற்கோல் காட்டி பேசுவதனை சுட்டியிருந்தேன் :))

    //எனக்கு என்னவோ அவர்தான் ஜெமோவினால் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது போல தெரிகிறது.//

    அட நீங்க வேற, போகன். நான் இன்னும் அந்த அளவிற்கெல்லாம் வளரலீங்க. புரியறதில்ல :D

    //அல்லது ஆறு தாண்டியும் இன்னமும்
    பெண்ணை தனது மனதில் இருந்து இறக்கிவிடாத பௌத்தத் துறவி போல.//

    ஆமாங்க, அந்த விசயத்தில மனசின் ஒரு ஓரத்தில நாற்காலி போட்டு உட்கார்ந்துச்சிக்கி, ஏன்னா நிறைய உசிரு போயிருச்சில்ல அதான். ஹ்ம்ம்ம்ம்

    மற்றபடி உங்க எழுத்து நடை எனக்கு பிடிச்சிருக்கு. தொடர்ந்து கொடுங்க. உடம்பையும் பார்த்திக்கிட்டே!

    ReplyDelete
  10. //படிப்பவர் மனதை படித்தக் கணத்துக்கு அப்பால் ஒரு கணம் சுண்டினால் இலக்கியம். இது நம்பல் சொல்றான். நிம்பல் கேட்டால் கேக்றான் கேக்காட்டி போரான்.//
    கேக்றான்! கேக்றான்!! கேக்றான்!!!

    ReplyDelete
  11. பத்மா வழக்கம்போல் என்னுடைய பகடியைத் தவறவிட்டுவிட்டீர்கள்.epitaph எல்லாம் ஓவர்தான்.ஆனால் அவையடக்கத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லை.எழுத்தாளன் ஒன்று புழு போல மண்ணில் மூக்கைத் தேய்த்துக் கொண்டு நிற்பான்.இல்லையேல் மலைக் கழுகு போல வனாந்திரத்தின் உச்சிகளில் திரிவான்.சொல்வதற்கு அவனுக்கு இருக்கவேண்டிய தகுதி அதை முன்பே வேறு யாரோ சொல்லாமல் இருப்பதுதான்.தமிழில் எனது லிஸ்ட்டில் தற்போது முத்து லிங்கத்தின் கடிகாரம் அமைதியாய் எண்ணிக் கொண்டிருகிறது மற்றும் கண்மணி குணசேகரனின் சாலை மட்டுமே இருக்கிறது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails