ஊர் உறங்கி விட்டாலும்
இரவெல்லாம்
ஒற்றையாய் விழித்திருந்து
ஊளையிடும் அனாதைத் தெருநாய்போல
குரைத்துக் கொண்டே இருக்கும்
இந்த மனத்திலிருந்து
ஓடி விட மிக விரும்பினேன்
உக்கிர கோடையில்
புழுக்க வீட்டிலிருந்து
கதவு திறந்து
திண்ணைக்குப் போய்விடுவது போல
பிடிக்காத சினிமாவிலிருந்து
வெளியேற முடிவது போல
சரியாய் வராத கவிதையை
அப்படியே விட்டுவிடுவது போல
வெளியேற முடிந்தால்...
என்று ஏங்கினேன்
அந்தி இறங்கும் நேரத்தில்
ஆவாரம் பூக்கள்
நுரைத்திருந்த
இருப்புப் பாதை ஓரம்
நிழலாய் வந்தவன் தந்தான்
'இது மௌனத்தின் சாவி'என்றான்
முதல் தொடுகையில்
எந்தக் குமிழும்
வெடிக்க வில்லை
ஆனால் மெல்ல
குரல்கள் யாவும்
மழை தீர்ந்த ஈசல்கள் போல்
உதிர்ந்து விழுவதைக் கவனித்தேன்
அல்லது வீதி வளைவில்
ஓடி மறையும்
வாகனங்கள் போல
தொலைந்து போயின
சட்டென்று ஆளற்றுப் போன
சாலை போல் ஆனது மனது
எப்போதும் அர்த்தமற்று
மதிய நேரத்தில்
கத்திக் கொண்டிருக்கும்
புழக்கடைக் காகம் போல
பிதற்றிக் கொண்டிருக்கும்
என்னை விட்டுவிட்டு
தெருவில் இறங்கி
தொலைந்தே போனவர்களில்
நானும் இருந்தேன்..
எப்போதும் அர்த்தமற்று
ReplyDeleteமதிய நேரத்தில்
கத்திக் கொண்டிருக்கும்
புழக்கடைக் காகம் போல
அந்த நேரமும் ,காகமும் எத்தனை ஒரு கிளர்வை தரும் தெரியுமா? முன் மாலை பொழுதில் அந்த காகத்தின் கரைதல் ஒரு சங்கீதம் ..
தேடலை நோக்கி செல்லும் கால்கள் சரியான இலக்கை அடையட்டும் .
நான் நானை கண்டு மகிழட்டும்
எல்லாம் பார்க்கும் பார்வையில்தான் இல்லையா...என் பார்வை எப்போதுமே கொஞ்சம் எதிர்மறையாகத் தான் இருக்கும்..எல்லாக் கருமேகங்களிலும் வெள்ளிச் சரிகையைக் காணும் மன நிலை இன்னும் எனக்கு வாய்க்கவில்லை.ஆனால் ஒன்று தெரியுமோ .. தீவிர இலக்கியம் நேர்மறையான வாழ்க்கை நோக்கை ஒரு மேலோட்டமான ஆழமற்ற சிந்தனையாகவே கருதுகிறது.
ReplyDeleteமிக அருமையான தொடக்கம்..
ReplyDeleteதீர்வு கண்டே பழகிய பாதசாரிக் கண்ணும் அறிவும் சில ஞானங்கள் போதைப் போர்வைக்குள் ஒளிந்திருப்பதை அறியாதென்பது சிக்கலான உண்மை :)
படம் பொருத்தம் - எங்கே பிடித்தீர்கள்?
அல்லது வீதி வளைவில்
ReplyDeleteஓடி மறையும்
வாகனங்கள் போல
தொலைந்து போயின
சட்டென்று ஆளற்றுப் போன
சாலை போல் ஆனது மனது
எப்போதும் அர்த்தமற்று
மதிய நேரத்தில்
கத்திக் கொண்டிருக்கும்
புழக்கடைக் காகம் போல
//
very nice words !
very nice expressions!
பத்மா அவர்கள் குறிப்பிட்ட புழக்கடை காகத்தை நானும் ரசித்தேன்..
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி.இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய சிந்தனை..நான் ஏற்கனவே எல் எஸ் டி என்று ஒரு கவிதை எழுதினேன் ..ஹக்ஸ்லியின் Doors of perception படித்துவிட்டு Timothy leary போன்றவர்களின் கட்டுரைகளைத் தேடித் படித்தபிறகு மனத் திறப்பு மருந்துகளாக கருதப்படும் psychadelic drugs பற்றி ஒரு ஆர்வம் ஏற்பட்டது. நம் மனம் எனும் பல அடுக்கு அங்காடியில் நாம் அறியாத அறைகளில் தெரியாத பூதங்கள் தூங்குகின்றன ..விஷயம் ஒன்றும் புதிது இல்லைதான் .நம் சித்தர்கள் புகுந்து விளையாடிய இடம்தான்..இன்னமும் சரஸ் இல்லாத சாமியாரை காசியில் பார்ப்பது அரிது ..
ReplyDeleteஅருமை போகன்! மிகவும் அருமை! தொடர்ந்து பலமுறை படித்தேன்.
ReplyDeleteரசித்து படித்தேன் மீண்டும் மீண்டும்....காகமும் ஓடி மறையும் வாகனங்களும் கண்முன்னே வந்து வந்து போயின... ;-)
ReplyDelete