Thursday, September 8, 2011

ஸ்ட்ரைக்கர் 1

ஒற்றைச் செருப்பு எங்கே என்ற தமிழ்வாணனின் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?மணி மொழி என்னை மறந்துவிடு?கருநாகம்?பேய் பேய்தான்?இவை எல்லாவற்றையும் டவுன் மார்க்கட் நடுவில் இருந்த முனிசிபாலிட்டி நூலகத்தில்தான் நான் படித்தேன்.சந்தையின் தினசரி இரைச்சல் நடுவே நானும் பரமு அக்காவும் வேடிக்கை பார்த்துக் கொண்டே மார்க்கட்டுக்கு எதிரே இருந்த கடைகளில் இஞ்சி சேர்த்த கரும்புச் சாறும் குடித்துவிட்டு போய் புத்தகம் எடுத்துக் கொண்டு வருவோம்.தமிழ்வாணன் மட்டுமல்ல லட்சுமி ஹேமா அனந்த தீர்த்தன்,பி வி ஆர். போனவர்களும் படித்தேன்.ஆனால் தமிழ்வாணன் தான் முதல்.

பரமு அக்காவின் முழுப் பெயர் பரமசிவம்.ஆண் பிள்ளைப் பெயர்தான்.ஆனால் பிள்ளைமார் வீடுகளில் பெண்களுக்கும் வைப்பார்கள்.ஆறுமுகம் என்று கூட வைப்பார்கள்.அதே போல் ஆண்களுக்கு கோமதி பார்வதி என்று பெண் பெயர்களும் வைப்பதுண்டு.பரமு அக்காவின் அப்பா மார்க்கட்டில் வாழை மண்டிக் கமிசன் வைத்திருந்தார்.விடி காலையிலேயே எழுந்து போனார் எனில் நடுராத்திரிதான் வீட்டுக்கு வருவார்.பத்தரை மணி வாக்கில் நானும் பரமு அக்காவும் அவருக்கு சாப்பாடு தூக்குச் சட்டியில் கொண்டு போவோம்.அதாவது நான் பள்ளி போகாத நாட்களில்.அக்கா சமைந்தவுடன் ஆச்சி பொட்டப்புள்ள இப்படி ஊர்க் காட்டில விரிச்சிகிட்டுப் தனியா போறது நல்லா இல்லைன்னு சொல்லித் தடுத்துவிட்டாள்..அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன்.இரண்டுங்கெட்டான் பருவம்.ஒருநாள் அக்கா என் தொடையைத் தடவி இனிமே நீ வேஷ்டி அல்லது பேண்ட் போட்டுட்டு வா என்றதும் வெட்கப் பட்டு ஒருவாரம் அவள் வீட்டுக்குப் போகாமல் இருந்தேன்.


அக்கா அழகு.அதுவரை நான் பார்த்த பெண்களிலேயே என்று சொல்லவேண்டுமோ.மாநிறம்தான்.ஆனால் மாநிறப் பெண்கள் அழகாக இருந்தால் மிக அழகாக அமைந்துவிடுகிறார்கள்.நான் பார்த்த பிள்ளைமார்ப் பெண்களுக்கெல்லாம் முன்பல் இரண்டும் வாய்க்கு வெளியே தேங்காய்த் துருவி போல நீட்டிக் கொண்டிருக்கும்.அவ்வாறு இல்லாவிடில் அவர்கள் வழி சுத்தமான பிள்ளைமார் அல்ல என்று எனது ஆச்சி சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவ்விதம் பரமு அக்காவுக்கு இல்லாததே எனக்குப் பெரிய அழகாக தெரிந்தது.அவளுக்கு அரிசி மாதிரி பல்.ஆனால் அதைப் பார்க்க அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை.சிரிக்கும்போது உதடைக் கடித்துக் கொண்டுதான் சிரிப்பாள்.உதட்டுக்கு வரும் முன்பே அது கண்ணுக்கு வந்துவிடும்.அங்கிருந்து காட்டில் நெருப்பு பரவுவது போல அவள் கன்னத்தை முழுவதும் சிகப்பாக்கி நிதானமாகத்தான் உதடுகளை வந்தடையும் அப்போது உங்களுக்கு அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ளவேண்டும் போல இருக்கும்.ஒருதடவை சொல்லியே விட்டேன்.அவள் ''அடி''என்று செல்லமாக சிரித்தாள்.''உங்க அம்மைகிட்ட சொல்லி உனக்கு சீக்கிரம் ஒரு பொண்ணு கட்டிக்க''

.அப்படி கட்டினால் நான் உன்னைத்தான் கட்டுவேன் என்று வாய்வரை வந்துவிட்டது.ஒரு மாதிரி கன்றுக் குட்டிக் காதல்.நான் ரொம்பக் கிட்டத்தில் பார்த்த முதல் பெண் அவள் என்ற காரணமாய் இருக்கக் கூடும் என்றாலும்..இன்று நான் நினைக்கையிலும் என் நினைவில் அவள் அழகு தேய்ந்துவிடவில்லை.நாங்கள் இருவருமே நகராட்சிப் பெண்கள் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தோம்.அங்கு ஐந்தாம் வகுப்புவரை பையன்களுக்கும் அனுமதி உண்டு.அதன் பிறகு நான் சாப்டர் ஸ்கூலுக்குப் போய்விட்டேன்.ஒன்தாம் வகுப்பில் அக்கா சமைந்தாள் .பேட்டைக்குப் போகிற சாலை வளைவில் இருந்த நயினார் வகை மண்டபத்தில்  வைத்து பெரிய அளவில் சடங்கு செய்தார்கள்.அன்றுதான் முதன் முதலாக பாயாசத்தில் பூந்தி கலந்து சாப்பிடுவதைப் பார்த்தேன்.அதன்பிறகு அவள் பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டார்கள்..அதன் பிறகு ஒரு வருடம் கிட்ட அவளை நான் வீட்டுக்கு வெளியே பார்க்கவே இல்லை.ஒரு நாள் அம்மா ''ஆச்சியிடம் உரைக்கு மோர்வாங்கி வா என்று அனுப்பியபோதுதான் மீண்டும் நான் அவளைப் பார்த்தேன்.அழி போட்ட முதல் அறையில் இருந்து ஆச்சி ஆச்சி என்று நான் கத்திக் கொண்டிருக்க அக்கா உள்ளிருந்து வந்தாள்.''ஏன் இப்படி கத்துதே.என்ன வேணும் ஆச்சிக்கு உடம்பு சரியில்லை.தூங்குதா 'என்ற படி வெளியே வந்தாள்.நான் ஒரு கணம் அப்படியே கல்லால் அடித்தது போல நின்றுவிட்டேன்.அக்காவா இது?சிகப்புப் பாவாடை தாவணியில் வேறு ஆள் போல இருந்தாள்.முகத்தில் லேசாய் மஞ்சள் பூசி இருக்க காதோரம் பூனை மயிர் இரங்கி கை வைத்த ஜாக்கட் வைத்து இடுப்பில் புதிய வளைவுகள் வந்து கொலுசு எல்லாம் அணிந்து அசையும்போதேல்லாம் அது சிதற....

''ஏலே ஏன்னா?இப்படிப் பார்க்க..என்ன வேணும்?""
நான் தடுமாறி ''மோரு..அம்மா கேட்டாங்க''
''ஆமா மோரு கேட்கற லட்சணத்தைப் பாரு''
அவள் மோர் எடுத்துக் கொடுக்கும்போது ''பரமுக்கா நீ ஆளே மாறிட்ட''என்றேன் மெதுவாய்.
அவள் வேறெங்கோ பார்த்து ''ம்க்கும்.என்ன மாறிட்டனாம்"'என்றாள்
பிறகு ''அது கிடக்கட்டும்.வீட்டில உட்கார்ந்து உட்கார்ந்து போரடிக்குது...லைப்ரரில இந்தப் புத்தகத்தைக் கொடுத்துட்டு வேற ஏதாவது எடுத்திட்டு வருவியா"'என்றாள்.நான் சரி என்றேன்.

லைப்ரரியன் என்னைக் கண்டதுமே கொதிப்படைந்து ''ஏலே எங்கலே உங்க அக்கா?புத்தகம் எடுத்திட்டுப் போய்ஆறு மாசமாச்சு..ஆபிசரு என் உசிர எடுக்கான்''என்றார்.

''நான் ''அக்கா சமைஞ்சிடுச்சு''சார்.''என்றதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.''சமைஞ்ச புள்ளைக்கு எதுக்குல கதைப் பொஸ்தவம்?பேசமா குப்புற அடிச்சுப் படுத்துக்கச் சொல்லு''என்று அந்த புத்தகத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

நான் திரும்பி போகையில் ஆச்சி முன் அறையில் உட்கார்ந்து கல் அரவையில் எதையோ திரித்துக் கொண்டிருக்க .''பரமு மச்சில இருக்கா போய்ச சொல்லு''என்றாள்.நான் மரப் படிகள் அதிர மச்சு ரூமுக்குப் போனேன்.அங்கு லைப்ரரியன் சொன்னது போலவே அவள் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு ராணி படித்துக் கொண்டிருந்தாள்..என்னைப் பார்த்ததும் எழுந்து கொண்டு ''என்னடா பொஸ்தகம் வாங்கிட்டு வந்தியா''என்றாள் ஆவலுடன்.
நான் ''தரமட்டேன்னுட்டான்''என்றதும் ஒருகணம் அவள் முகம் வாடியது.''போறான எழவெடுத்தவன்'என்றவள் ஒரு கணம் யோசித்து ''உனக்கு உடனே போகனுமா''என்றாள்
நான் ''இல்லியே ஏன்''
''கேரம் போர்ட் வெளாடுவோமா''
''கேரம் போர்டா ..எங்க இருக்கு''
''இருக்கே''என்று அறை மூலையில் சாய்த்து வைத்திருத்த கனமான கேரம் போர்டை தூக்கி வந்தாள்.
அப்படித்தான் எங்கள் விளையாட்டு ஆரம்பித்தது.லீவு நாட்களில் முழுக்க அவள் வீட்டில்தான் கிடந்தேன்.வெறி பிடித்தது போல் விளையாடிக் கொண்டே இருந்தோம்.சில நாட்களில் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டேன்.எப்போதும் அங்கு ஸ்ட்ரைக்கர் போர்டை மோதும் ஒலி டக் டக் என்று கேட்டுக் கொண்டே இருந்தது.அந்த மூன்று நாட்களில் மட்டும் ஆச்சி ''அவளுக்கு உடம்புக்கில்லை.மூணு நாள் கழிச்சு வா''என்றுவிடுவாள்.அந்த நாட்களில் எல்லாம் பித்து பிடித்தது போல இருப்பேன்.''அதென்ன சரியாக உனக்கு மாதத்தில் மூன்று நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது என்று கேட்டதற்கு அவள் முகம் சிவந்து ''அது அப்படித்தான்''என்றாள்.

கேரம்போர்டில் அவளது திறமை ஆச்சர்யமூட்டுவது.ஒரு தடவை கூட அவளை என்னால் ஜெயிக்க முடிந்ததில்லை.சில நேரங்களில் எனது முகவாட்டம் பார்த்து அவளே விட்டுக் கொடுத்து விடுவாள்.சைனிஸ் கட எல்லாம் அடிக்கத் தெரியும் அவளுக்கு.

கேரம்போர்டு தவிர அவளிடம் ஒரு மர்பி ட்ரான்சிஸ்டர் இருந்தது.அது மௌனமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை.எப்போதும்  சளசளவென்று பேசிக் கொண்டோ பாடிக் கொண்டோ இருக்கும்.''அதுக்கு கட்டை வங்கியே சொத்தெல்லாம் போயிரப் போகுது என்று ஆச்சி சலித்துக் கொள்வாள்

பரமு அக்கா அழகாகிக் கொண்டே போவதை நான் நேரடியாகவே உணர்ந்தேன்.என் கண் முன்னாலேயே அவள் மாபெரும் அழகியாகிக்  கொண்டிருந்தாள்.அது அவளுக்கும் தெரிந்திருந்தது.மார்புகள் விரிந்து மெல்லிய சிவந்த பருக்கள் முகத்தில் எழும்ப...ஒரு நாள் நான் போனபோது ஆச்சி இல்லை .அவள் கீழே பின்கட்டிலிருந்து சிந்தால் சோப்பு வாசனையோடு நெஞ்சோடு ஒட்டிய ஈரப பாவாடையோடு வந்து ''குளிச்சிட்டிருந்தேன்''என்று கடந்து போனாள்..அலமாரியில் இருந்து துவர்த்தை எடுக்கும்போது உயர்ந்த கைகளுக்கிடையே தெரிந்த மெல்லிய ரோமக் கற்றையும் கூடவே எழும்பிய மார்புகளும் மூச்சடைக்கவைத்தன.அடுத்த அறையில் அவள் ஈர உடைகளைக் களையும் ஒலிகளைக் கெட்டுக் கொண்டு தணல மேல் இருப்பது போல் நின்றிருந்தேன்.
ஆடை மாற்றிக் கொண்டு கூந்தலை நீர் சிதற உதறிய படியே வெளியேவந்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க 'ஏலே என்னத்தைப் பார்க்கே ?'
''ஒண்ணுமில்லை''
''ஒன்னுமில்லாததையா இப்படி விழுந்து விழுந்து பார்க்கே''என்று சிரித்தாள்.அன்று முழுவதும் எனக்கு ஆட்டத்தில் கவனமே இல்லாமல் மைனஸ் மைனசாகப் போட்டுக் கொண்டிருந்தேன்.


ஏனோ அன்றிரவு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.சாதாரணமாய்த் தொடங்கிய காய்ச்சல் எதற்கும் அடைபடாமல் ஒரு மாதம் வரை இழுத்து டைபாய்டு என்று பின்னால் கண்டு பிடித்து டவுன் சர்க்கார் ஆஸ்பத்திரியில் ஊசி மேல் ஊசியாய் போட்டுத் தேற்றி அனுப்பி வைத்தார்கள்..இடையில் ஒரு தடவை அக்கா வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தாள் ''எலே என்னா எதைக் கண்டு பயந்தே''என்று சிரித்த போது ஏதோ உளறினேன்

திரும்ப அவளைப் பார்க்க சரியாக மூன்று மாதமாகிவிட்டது.

ஆச்சி ''ஏலே நால்லாயிடுச்சா உடம்பு .பரமு மேல இருக்கா போ'''என்றாள்.
பரமு அக்கா என்னைக் கண்டதும் சட்டென்று எழுந்துவந்து என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள் .அவளது வெப்பமான மூச்சு மார்பின் மீதேறி போவதை நான் என் முகத்தில் உணர்ந்தேன்.அவள் மார்பு நடுவிலிருந்து கோகுல் பவுடரின் வாசனை நாசியை நிறைத்தது.பின்னர் விலக்கி ''ச்சீ''என்று சிரித்தாள்.''அய்யோ நீ இப்ப பெரிய பிள்ளைல்லா...இல்லே?"'.

நான் கேரம்போடு விளையாடுவோமா என்று கேட்டேன்.சரி என்றாள்.ஆனால் முன் போல் அவள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை கவனித்தேன்.தொடர்ச்சியாக மைனஸ் போட்டுக் கொண்டிருந்தாள்.அடிக்கடி தட்டட்டிக்குப் போகும் சிறிய வாசலைப் பார்த்துக் கொண்டால்.அங்கிருந்து பார்க்க அடுத்த வீட்டின் தட்டட்டியும் மச்சு அறையும் தெரியும்.ஏன் இங்கிருந்து தாவி அங்கு போய் விடக் கூட முடியும்.அங்கு யாரைப் பார்க்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை.அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு வாசிங் பவுடர் கம்பனியின் குடோன் மட்டுமே இருந்தது.மச்சு அறையின் வாசல் எப்போதும் பூட்டியே கிடக்கும்

ஆனால் மறுநாளே அந்த அறை திறந்துகிடப்பதை நான் பார்த்தேன்.அக்காவை ஆச்சி கூப்பிட கீழே போய் இருந்த போது தட்டட்டிக்குப் போக அங்கே அகலக் கண்ணாடி ஸ்டேப் கட்டிங் பெல்பாட்டம் பேண்ட பட்டைப் பெல்ட்டுடன் சரத்பாபு மாதிரி ஒரு ஆள் இங்கேயே பார்த்துக் கொண்டு புகை விட்டுக் கொண்டிருக்க என்னைப் பாத்ததும் திடுக்கிட்டு சட்டென்று வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.

அதன்பிறகு பரமு அக்கா வேறு மாதிரி ஆகிவிட்டாள்.அவளுக்கு என்னுடன் கேரம் போர்டு விளையாடுவதில் விருப்பமே இல்லது போயிற்று.நான் மாடிஏறிப் போகும்போதெல்லாம் ஏதோ ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டது போல் பதற்றத்துடன் இருந்தாள்.ஒரு நாள் நான் போகும்போது கட்டிலில் படுத்துக் கொண்டே ஏதோ படித்துக் கொண்டிருந்தவள் பதறி எழுந்து அதை மறைத்துக் கொண்டாள்.அது ஏதோ ஒரு கடிதம் போல் இருந்தது. என்னைக் கண்டதும் சிடுசிடுத்து ''எக்சாமுக்குப் படிச்சிட்டியா நீ''என்றாள்
.
ஒரு நாள் மதியம் வாத்தியார் ஒருவர் இறந்துவிட்டாரென்று பள்ளி விட்டுவிட்டார்கள்.நான் ஆச்சி வீட்டுக்குப் போனேன்.ஆச்சி முன் அறையில் சேலையை விரித்து வாய்பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.மேலே இலங்கை வானொலி கரகரத்துக் கொண்டிருந்தது.நான் ஏதோ ஒரு உள்ளுணர்வில் ஒரு பூனையைப் போல சத்தமிடாது படிகளில் ஏறிப் போனேன் ஆனால் உள்ளே முழுவதும் ஏறும் முன்பே நான் அறிந்துகொண்டுவிட்டேன்..சிலோன் ரேடியோவின் மங்கையர் மலரையும் மீறி கசிந்த மூச்சுசிதறல்கள் முனகல்கள் என்னை வந்தடைந்து விட்டன.அக்காவின் கட்டிலுக்கு எதிரே ஒரு கண்ணாடி வைத்த பீரோ இருந்தது.அது வழியாக எல்லாம் தெரிந்துவிட்டது.அக்கா இடுப்பில் மட்டும் ஒரு பச்சைப் பாவாடையோடு நின்று கொண்டிருந்தாள்.சரத்பாபு அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருக்க அவன் தோளில் அவள் முகம் கண் மூடிக் கிடந்தது. நான் கண்ணீருடன் ஒரு யுகம் போல அந்த கண்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.
ஏதோ ஒரு வினாடியில் அந்தக் கண்கள் திறந்தன.சட்டென்று நேர் எதிரே கண்ணாடியில் தெரிந்த என் கண்களை சந்தித்தன.விரிந்தன.

நான் கீழிறங்கி வந்துவிட்டேன்.








LinkWithin

Related Posts with Thumbnails