Tuesday, June 4, 2013

மழை நாளிலே ...

மழைக்காலம் வந்துவிட்டது 
மழைக் காலத்திற்கே உரியனவாய் சில சடங்குகளை நான் வைத்திருக்க்றேன் 
மழைக் காலத்திற்கு என்று சில நூல்களைப் படிக்கவும் சில படங்களைப் பார்க்கவும் ஒதுக்கி வைத்திருப்பேன் 
திகில் கதைகளை  மழை இரவில் படிப்பது போல ஒரு த்ரில் உலகத்தில் இல்லை .வெயில் உச்சி மயிரைக் கருக்கும்போது அவற்றைப் படித்து ''என்னத்த''என்று சொல்லக் கூடாது 
மலையாள  மொழிபெயர்ப்புகளையும் நான் மழைக் காலத்தில் தான் படிப்பேன் 
natural  history  சம்பந்தமான சில புத்தகங்களையும் நான் இந்த மழைக் காலத்தில் படிப்பேன்.சளசள வென்று மழை வெளியே சத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது தவளைகளின் பின்னணிக் குரல்களுடன் டேவிட் அட்டன்பரோவைப் படிக்கையில்  டார்வினைப் புரிந்து கொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கும் 

இந்த மழைக் காலத்துக்கென நான் சேர்த்து வைத்திருக்கும் சில நெல்மணிகள் 

1.last chance to see-Douglas adams
2.The botany of desire-Michael pollan
3.The mothman prophecies-john keel
4.The silver bridge -Gray barker
5.The panda's thumb-stephen jay gould
6.The forbidden archeology-michael cremo 
7.collapse -jared diamond
8.To the ends of earth-paul theroux

பிறகு கையில் படிக்காமல் தேங்கிக் கிடக்கிற அத்தனை மலையாள மொழிபெயர்ப்புகளையும் .

முன்பு துறவிகளுக்கு ஒரு விதி உண்டு .அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கக் கூடாது .(இதில் ஒரு நுணுக்கம் உண்டு.எந்த ஒரு இடத்துக்கும் மனம் பழக அங்கே ஊன்றிக் கொள்ள மூன்று நாள் போதும் என்று சொல்வார்கள் .இது என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன் )மழைக் காலம் தவிர.அப்போது அவர்கள் எங்காவது உலர்வான இடத்தில் தங்கி தங்கள் நூல்களைப் பயில வேண்டும் .பயண வசதிகள் சரியாக இல்லாததாலும் தொற்று  வியாதிகள் பயத்தாலும் அவ்விதம் செய்தார்கள் இப்போது நல்ல வாகன வசதி  உடல் ஆரோக்கியமும் இருந்தால் மழைக் காலத்திலும் பிரயாணம் செய்யலாம் .சிலர் மழைப் பயணம் என்று தனியாகப் போகிறார்கள் .போய்விட்டு chasing monsoon போன்ற புத்தகங்கள் எழுதுகிறார்கள் எனினும் மழைக் காலத்தில் எங்காவது கூடுறைவதுதான்  எனக்குப் பிரியமானது 

பத்து வருடங்களுக்கு முன்பு நான் கேரள எல்லை மலைப் பகுதியில் ஒரு காட்டு பண்ணை வீட்டில் ஒருவாரம் சேர்ந்தார் போல மழைக் காலத்தில் தங்கி இருந்தேன் .ஒரு பெரிய நாவல் எழுதி முடிக்க வென்று திட்டம்.ஒரு வரி கூட எழுதவில்லை ஒரு வரி கூடப் படிக்கவில்லை.முற்றிலும் மழையின் விதம் விதமான சத்தங்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன்..ஓட்டாலும் மரத்தாலும் வேயப்பட்ட வீடு அது. அந்த வீட்டை தினம் ஒரு கதியில் ஒரு சுதியில் மழைத்தாரைகள் உடைத்து உள்ளே புக முயல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.பின்னொரு நாள் முரகாமியின் kafka on  the shore  படிக்கையில்  ஏறக்குறைய இதுபோன்ற அனுபவத்தை அவரும் எழுதி இருந்தது கவனித்து சந்தோஷப்  பட்டுக் கொண்டேன் 

தினம் மாலையிலும் காலையிலும் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து தருவார்.மோட்டா அரிசி மீன் குழம்பு கடலைக்  கறி புட்டு பப்படம் பயறு பழம் என்று .
நான்காம் நாள் அவர் வரவில்லை 
பசி ஆளைத் தின்றுவிட்டது 
மழையின் ஒவ்வொரு தட்டலும் என் வயிறுக்குள் கிடந்த அக்கினியைத் தூண்டி எழுப்பியது 
 வீட்டைச் சுற்றிலும் பலா மரங்கள் இருந்தன .ஆனால் பலாப் பழத்துக்குள் போகும் வித்தையும் பலமும் என்னிடம் இல்லை.ஒரு பெரிய பழத்தை தூக்கி வீட்டுக்குள் வைத்துக்  கொண்டு மணிக்கொரு தடவை அதற்குள் போக முயற்சித்து சோர்ந்தேன் ,ஒரு நாய் தேங்காயைச் சுற்றிச் சுற்றி வருவது போல அதைச் சுற்றி சுற்றி வந்தேன.ஒரு கணத்தில் ஓநாய் போல பசி தாங்காமல் கூவ கூடச் செய்தேன் 


பிறகு எதோ ஒரு கணத்தில் அயர்ந்து எச்சில் வழியத்  தூங்கினேன் 
கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு விழித்தேன் 
தளும்பி எழுந்து கதவைத் திறந்தேன் 
மழை நின்றிருந்தது 
இலைகள் ஜலதரங்கம் போல சொட்டிக் கொண்டிருந்தன 
ஒரு பெரிய பொன் கத்தி போல வெயில் தாழ்வாரத்தில் இறங்கிக் கொண்டிருந்தது 
சாப்பாடு கொண்டு வருகிறவரின் பைக் முற்றத்தில் நின்றிருந்தது 
அதைச் சுற்றி சிறு ஓடைகள் உருவாகி  மணிச் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தன 

''சாரி சாரே.இன்னலே வராம் பத்தில்லா.பாறை மறிஞ்சு  ரோடு ப்ளாக் ஆயி''என்றார் அவர் 
அவர் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து புட்டு மணம் ஒரு புன்னகை போல எழுந்து வந்து கொண்டிருந்தது 


நான் முறுவலித்து ''பரவாயில்லை''என்றேன் ''இன்று மழை வருமா?""
அவன் வானம் பார்த்து ''வரும் சாரே''என்றான் .பிறகு தயக்கமாய் ''சார் மழைத் தணப்புக்கு ''என்று ஒரு குப்பி மதுவை எடுத்து வைத்தான் 
நான் மீண்டுமொரு நாள் மழையை வரவேற்கத் தயாராகிவிட்டேன் 

LinkWithin

Related Posts with Thumbnails