Friday, January 28, 2011

சுவர்

நான்
என் கண்ணை  அறிந்ததிலிருந்து
இந்தச் சுவரை அறிவேன்
வெயிலோ இள மழையோ
சுடுங் கோடையோ
சுருள் கத்திக் குளிரோ
எல்லா நேரங்களிலும்
எல்லா  திசைகளிலும்
விழித்திருக்கும்போதும்
வளை இருட்டில்
ஒளி புதைந்திருக்கும்போதும்
என்னைச் சுற்றி
ஒரு மலைப் பாம்பு போல்
கணத்த மூச்சுடன்
பரவிக் கிடக்கிறது
இந்தச் சுவர்.

ஒவ்வொரு முறை
இந்த சுவருக்கு மறுபுறம்
என்ன இருக்கிறது
என வியப்பதுண்டு
சற்றேனும்
விபரச் சுமை கொண்டவரென்று
தோன்றுபவர் எல்லாரிடமும்
கேட்பதுமுண்டு
பலர் எந்தச் சுவர் என்று
திரும்பிக் கேட்டனர்
மலைப் பாம்பு
விழுங்கிய இரை
மலைப்பாம்பே ஆனது போல்
அவர்கள்
திரும்பிய திசைகளெங்கும்
சுவற்றில் முட்டி முட்டி
 சுவர்களாகவே
மாறிவிட்டிருந்தது அறிந்து விலகினேன்
இன்னும் சிலர்
சுவற்றுக்கப்புறம்
கிடப்பதுதான் ஏடன் தோட்டம்
என்று விவரித்தனர்
பறக்கும்  வானவில்கள்
சிரிக்கும் மலர்கள்
உயிர் கசிந்து வழியும் கனிகள்
கிடக்கும் கடவுளின் தோட்டம் என்றனர்
என்றும் இறங்காத முலைகளுடன்
என்றும் உதிராப் புன்னகையுடன்
தேன் கண்ணியர்
திரியும் தோட்டம்
என்றும் வீழாத குறிகளுடன்
படர் தோள் ஆடவர் கூட்டம்
அலையும் தோட்டம்
என்றபோது
என் இதயம் ஏங்கி
அது நோக்கி
எம்புவதை உணர்ந்தேன்

ஆனால் இன்னும் சிலரோ
நம்பாதே என்று எச்சரித்தனர்
உதிரப் பற்களுடன்
கடுவாய்ப் புலிகள்
அலையும் காடது எனறார்கள்
வழிதப்பியவர்களின்
எலும்புகள்
அவற்றின் வயிற்றில்
குலுங்கும்போது
எழுப்பும் சப்தம்
இரவின் அமைதியில்
சிலசமயம் இங்கும் கேட்கிறது என்றார்கள்

நான் இப்போது
விலக்கப் பட்ட காதலன் போல் ஆகிவிட்டேன்
இரவும் பகலும்
சுவரைப் பற்றி
சுவரிலே எழுதி எழுதி
அழித்துக் கொண்டிருந்தேன்

என் கனவுகள்  கூட
சுவரைப் பற்றியதாகவே இருந்தன
அல்லது சுவற்றைக்
கடந்து கிடக்கும்
வெளி பற்றி...
ஓர் முழுநிலவன்று
என் நெஞ்சுக் கூட்டையே
ஒரு சுவரென உணர்ந்து
சுவாசம் முறிந்து
மயங்கியபோது
மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்
பல வைத்தியர் வந்தும்
என் நோய்
தப்பிக் கொண்டே இருந்தது
எல்லா மருந்துகளும்
நீர்த்துவிட்ட
 ஒரு மோசமான  இரவின் முடிவில்
பக்கத்துப் படுக்கையில்
இருந்தவர் எழும்பி
என்னருகில் வந்தார்
என்னுடன்  வா என்றழைத்துப் போனார்
ஒரு திருகாணி போல்
முறுகி முறுகி
மேலேறிய
படிக்கட்டுகள் வழி
அவர் போய்க் கொண்டே இருந்தார்
ஒரு  யுக ஏறலுக்குப் பிறகு
படிகள்
ஓரிடத்தில் நிலைத்தன
அவர்
தாடிக்கடியில்
மிதக்கும் விழிகளுடன் திரும்பி
இங்கிருந்து பார்
சுவற்றுக்கப்புறம்
உள்ள  உலகை
என்று சொல்லி விலகினார்
நான் நடுக்கத்துடன்
ஏறிப் பார்த்தேன்

இந்த சுவற்றுக்கு  அப்பால்
இருப்பது
ஏடன் தோட்டமோ
கொடு மிருகக்  காடோ
என்ற பதைப்பில்.....


ஆனால் கண்டேன்
இந்த சுவற்றுக்கப்புறம்
இருந்தது
இன்னுமொரு சுவரே....
அதற்குப் பிறகு
இன்னுமொரு சுவர்
அதற்கப்புறம்
இன்னுமொரு....
அதற்கப்புறமும் .....




Tuesday, January 18, 2011

ஜெயமோகனும் பாலகுமாரனும் பின்னே நானும்..

 
மெட்டி படத்திலிருந்து இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல் இளமையில் நான் திரும்பத் திரும்பக் கேட்ட பாடல்.பாடியது தீபன் சக்கரவர்த்தி போல் யாரோ என்று நினைத்திருந்தேன்.மெல்ல மெல்ல நாட்களின் சருகுகள் மூடிய எத்தனையோ நல்ல விசயங்களில் ஒன்றாய் இந்தப் பாடலும் ஆகியது.சமீபத்தில் ஜெயமோகனின் தளத்தின் மூலமாக இதைப் பாடியவர் பிரம்மானந்தன் என்று தெரிந்தது.ஆனால் அவரைப் பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரை மிகுந்த அதிர்ச்சியையும் மனச் சோர்வையும் அளித்தது.
பிரமானந்தன் ஞாபகத்தின் புதைகுழிகளில் தொலைந்த இன்னுமொரு நட்சத்திரம்.ஜெயிக்கிற ஒவ்வொரு ஜேசுதாசுக்கும் பின் திறமை இருந்தும் தோற்கடிக்கப் படும் ஒரு நூறு பிரம்மானந்தன்கள் இருக்கிறார்கள்.இசை மட்டுமலாது இலக்கியம் சினிமா என்று எல்லா துறைகளிலும் பாடப்படாத புகழின் மென் வெளிச்சம் தொடாத ஓராயிரம் நிழல்கள் நெளிந்து கொண்டே இருக்கின்றன.பின்னர் நினைவிலிருந்து உதிர்ந்து போகின்றன.திறமை மட்டுமே அல்ல ஜெயிப்பதற்குத் தேவையான விஷயம்.வேறு என்னென்னவோ வித்தைகள் தேவைப் படுகின்றன.அவற்றைக் கற்றுக் கொள்ளாதவர்கள்,அவை எல்லாம் கற்றுக் கொள்ள மாட்டேன் என்று தருக்கிய நடையுடன் நிமிர்ந்த பார்வையுடன் அலைந்தவர்களை எல்லாம் வாழ்வு அலட்சியமாய் ஒரு குப்பையைப் போல கசக்கி வீசி எறிந்திருக்கிறது..பிரம்மனந்தன் தன கடைசிக் காலங்களில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அனாமி யாக குடிப்பதற்கு காசு கேட்டவாறு திரிந்தார் என்று சொல்கிறார்கள்.கேட்கும் போதெல்லாம் முதுகு சொடுக்கும் இந்தப் பாடலைப் பாடிய அதே குரல் யாசகம் கேட்டுத் திரிந்திருக்கிறது என்று வாசித்த போது சட்டென்று எல்லாவற்றின் மீது நம்பிக்கை உடைந்தது.

...ஜெயமோகன் திரும்பத் திரும்பத் தன நாவல்களில் தனிமனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தத்துவத்தின் வீழ்ச்சியைப் பேசிக் கொண்டே இருப்பார்.பெரும்பாலும் ஆழ்ந்த மனச் சோர்வுடனே அவரது நூல்களை விட்டு விலகுவேன்.ஏற்கனவே அத்துணை வெளிச்சமற்ற என் உலகம் மேலும் பயமுறுத்தும் அந்தகாரத்துடன் என்னைச் சுற்றி எந்நேரமும் உடைந்து விழுந்துவிடக் கூடும் என்ற பதற்றத்துடன் சூழ விலகி ஓடி சுஜாதாவின் புத்தகத்தையோ பால குமாரனையோ படிக்க ஆரம்பிப்பேன்.மெல்ல கோழை உருகி மூச்சு சீராவதை உணரும் ஆஸ்த்மா நோயாளி போல தளர்ந்து வெளியே நடக்கையில் ஒவ்வொரு தடவையும் நினைத்துக் கொள்வேன்.இனி ஜெமோ மட்டுமல்ல தீவிர இலக்கியம் என்ற பெயரில் வரும் எதையுமே தொடக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.ஒவ்வொரு முறையும்... இந்த முறையும் நினைத்தேன்.இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது.யாரிந்த பிரம்மானந்தன் இவரைப் பற்றி எழுதி ஜெமோ என் நிம்மதியில் எதனால் முள் தொடுக்கிறார் என்று அவர் மீது மெல்லிய சீற்றம் கூட எழுந்தது.சட்டென்று உதறி ரத்தப் படலம் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த பின்னால்தான் என் உலகம் நிமிர்ந்தது.நான் ஏன் இன்னும் காமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நீண்ட நாள் கேள்விக்கும் பதில் கிடைத்தது.எளிய பதில்தான்.நான் காமிக்ஸ் படிப்பதும் பாலகுமாரன் படிப்பதும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடாமல் இருக்கத்தான்...

http://www.jeyamohan.in/?p=11498

Thursday, January 13, 2011

கத்தி

ஒரு பாத்திரத்தில்
மழைநீர் நிறைவது போல்
கொஞ்சம் கொஞ்சமாக
சத்தங்கள்
மூளையில்
நிரம்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துப்
பதற்றம் கொள்கிறேன்
கவனம் கொள்ளாவிடில்
முன்பு போல்
அது கனம் கூடி
பிறர் மேல் வெடிக்கும் அபாயம்
உண்டென அறிந்து
தியானம் செய்தோ
கவிதை எழுதியோ
காட்டுக்குள் நுழைந்தோ
அனுமதியின்றி உள்ளே நிரம்பியதைக் 
கவிழ்க்க முயற்சிக்கிறேன்
கவிழ்க்க கவிழ்க்க
புதிய சத்தங்கள்
பூரான்கள் போல்
ஆயிரம் கால்களுடன்
பெருகி வருவதை
அச்சத்துடன் அறிந்து நடுங்குகிறேன்
களிப்புடன்
என்னைச் சுற்றி விளையாடும் பிள்ளைகள்,
கவிதைப் புத்தகம்
படிக்கும் மனைவி,
கணினியில் கதைக்க வரும் தோழி
என்று எல்லார்  உலகத்தையும்
நொடியில் சிதைத்தழிக்கும்
உதிரக் குறி கொண்ட 
கத்தி ஒன்று
மெல்ல மெல்ல
என் மூளையில்
கூர் தீட்டப் படுவதை
இந்த முறையும்
என்னால் தடுக்கமுடியவில்லை தோழர்களே...
மன்னியுங்கள்...

Sunday, January 9, 2011

கண்ணி 3




எச்சரிக்கை-முதிர்ந்த வாசகர்க்கானது


விடிந்தும் விடியாததுமாக சண்முகம் அந்தப் பெண்ணை சைக்கிளில் பின்சீட்டில்  வைத்து ஜன்க்சனுக்குக் கொண்டு போய் மதுரைக்கு முதல்வண்டிக்கு ஏற்றிவிட்டான்.''ரொம்ப அழுதுச்சாடா'என்று நான் கேட்டதற்கு 'இல்லையே சிரிச்சுட்டே போச்சு''என்று சொன்னான்.''யார்ட இவன் கோழி கழுத்த திருகரப்ப  ரொம்ப வலிக்குதான்னா கேட்பாங்க''என்றவன் என்னை உற்றுப் பார்த்தான்.''நீ அவ கண்ணை ஏன் பார்த்தே'''என்றான்.அதற்குள் முதல்வண்டி வந்துவிட பேப்பர் இறக்க ஆரம்பித்தேன்.அறையைப் பெருக்கும் போது பெண்கள் காதில் அணியும் ஒரு சிறிய திருகு கிடைத்தது.தங்கத் திருகு.எடுத்து வைத்துக் கொண்டேன்.பாயில் சிகப்பாய் இருந்த கறை அவளின் ரத்தமாகத்தன் இருக்கவேண்டும்.எல்லா வீடுகளுக்கும் பேப்பர்  போட்டுவிட்டு வீடு போய்ச் சேர்ந்து வீட்டிற்குள் நேரடியாகப் போகாமல் பின்னால் சுற்றிப்  போய் கிணற்றில் தண்ணீர் இரும்பு வாளியில் மொண்டு குளித்தேன்.அம்மா ''யாராச்சும் செத்துப் போயட்டாளா''என்று கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை.சாப்பிட்டுவிட்டுப் படுத்தவனால் மதிய சாப்பாட்டுக்குக் எழுந்திருக்கவே முடியவில்லை.முயன்று பார்த்துவிட்டு யாரோ நெஞ்சின் மீது ஏறி நின்று அழுத்தினார்போல உணர்ந்து மீண்டும் தூங்கிவிட்டேன்.அப்பா வந்து பார்த்துவிட்டு ''ஏலே நாலு மணியாச்சே.பொஸ்தகம் போடப் போகலியா'என்றார்.''மத்தியானம் சாப்பிடக் கூட எழும்பலே.அந்த சண்முகம் பயலோட சுத்ததேனு சொன்னாக் கேட்கறியா.ராத்திரில அந்தப் பக்கம் ஏதோ வாதை சுத்துறதா வேற சொல்றாங்க.என்னவோ போ.வர வர உன் போக்கு வரத்து சரியில்லை ''என்றார்.நான் விருட்டேன்று எழுந்து அமர்ந்து ''ஒன்னும் இல்லை.மனுஷன் ஒருநாள் அசந்து தூங்கப் படாதா...பொச்தகம்தானே போடணும்.இதோ போறேன்'''என்று கைலியை இறுக்கிக் கொண்டு கிளம்பி சட்டென்று தடுக்கி தலை சுற்றிக் கீழே விழுந்தேன்.மரம் முறிந்து விழுவது போன்ற சத்தத்துடன் நான் விழுவதை நானே வியப்புடன் கவனித்தேன்.முகம் குப்புற விழுந்ததில் சிள் மூக்கோ எதுவோ உடைந்து சிகப்புக் கோடாய் ரத்தம் பரவுவதை அருகாமையில் பார்த்தேன்.சத்தம் கேட்டு ''ராசா என்னால ஆச்சு''என்று அம்மா கீழிருந்து ஓடிவர மயங்கும் முன்பு ''ஒரே ரத்தம்டா ''என்று சண்முகத்தின் குரல் கேட்டது

டவுன் முனிசிபாலிட்டி மருத்துவமனையில்  முடை நாற்ற படுக்கையில் மூட்டைப் பூச்சிகளின் நடுவில் பத்துநாட்கள் இருந்தேன்.பக்கத்தில் ஒருபாய்சன் கேஸ் மூன்றுநாட்கள் எல்லோர்  உயிரையும் வாங்கிச் செத்துப் போனான்.மனைவி வேறு யாருடனோ தொடர்பு வைத்திருந்ததை நேரில் பார்த்து விஷம் குடித்துவிட்டான் என்று சொன்னார்கள்.இரண்டு நாட்கள் உணர்வின்றி கிடந்தேன்..அந்த இரண்டு நாட்களும் நிறைய பினாத்தினேன் என்று சண்முகம் வந்து சொன்னான்.''ஏலே..பயந்தாங்குளி ..நீயே உளறிக் காட்டிக் கொடுத்துடுவே போல் இருக்கே'.ஆம்பிலதானலே நீ.இல்ல அலியா.'''
நான் ''பயமெல்லாம் இல்லை.''என்றேன்.பிறகு தயக்கமாக ''அந்தப் பொண்ணு ஊரில இருந்து யாரையும் கூட்டி வந்துடுச்சுன்னா''என்றேன்
''அதெல்லாம் வராது.வந்தா இந்நேரம் வந்திருக்கும்.வந்தாலும் என்ன...நான்தானே பண்ணேன்''
''நான் கூட இருந்தேனே''என்றேன் பலவீனமாய்.'நான் நினைச்சா தடுத்திருக்கலாம்''
''நல்லவேளை நீ தடுக்கலே'என்றான் சண்முகம்.அவன் கண்கள் சட்டென்று உறைந்து நிலைத்தன.''அப்படி பண்ணி இருந்தா அன்னிக்கு நிலைக்கு அங்கியே உன்னைக் கொன்னிருப்பேன்''



வீட்டுக்குத் திரும்பினாலும் நான் உள்ளுக்குள் சரியாகவில்லை என்பதை உணர்ந்தேன்.பகல்களில் பிரச்சினை இல்லை.இரவுகள்தான் நரகமாக இருந்தன.இப்போது பெண்களைப் பற்றிய எனது நினைவுகள் மிகவும் மாறியிருந்தன.எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பதற ஆரம்பித்தேன்.அவர்கள் மீது ஆழமான ஒரு வெறுப்பு கலந்த இரட்டை உணர்வு ஏற்பட்டது.யார் பேச வந்தாலும் அஞ்சி விலக ஆரம்பித்தேன்.ஆனால் இரவுகள் வேறுவகை.இரவுகளில் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.சில நாட்கள் அவர்களை வெவ்வேறு கொடூரமான  வழிகளில் துன்புறுத்தி ரத்தம் சொட்ட சொட்ட வன்கலவி செய்தேன்..சில நாட்கள் அவ்வாறு செய்துகொண்டிருந்த சண்முகத்தை அடித்து வீழ்த்தி  அவர்களைக் காப்பாற்றினேன்.அதன் விளைவாக அவர்கள் எனைக் காதலிக்க முன்வர ஊத்தைப் புனல்குழி நாற்றப் பிறவாசல் என்று தத்துவம் பேசி துறவறம் போனேன்.

ஒருநாள் காலையில் மாடியிலிருந்த என் ரூமிலிருந்து ஜன்னல்  வழி தற்செயலாய்க் கீழே பார்க்க அடுத்த சந்து வீட்டின் மேல் கூரை அற்ற பாத்ரூமில் ஒரு பெண் குளிப்பதர்காய்ப பாவாடையைத் தலைமேல் கழற்றி மாற்றும் போது சட்டென்று ஒருகணம் இறகுரித்த கோழி போல் அவள் உடல் சிவப்பாய்த் தெரிந்தது.கைகால்கள் பதறி வாயில் கசப்பு சுரந்து வாந்தி எடுத்தேன்.எல்லாப் பெண்களையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட வேண்டுமென்ற வெறி எழுந்தது.''தேவடியாளுங்க தேவடியளுங்க''என்று திட்டிக் கொண்டே இருந்தேன்.அப்போதுதான் தோன்றியது.கடந்த மூன்று மாதங்களாக என் குறி எழும்பவே இல்லை.எனக்குள் ஒரு அச்ச அலை பரவ பீரோவிலிருந்து  ஏனோ அந்த தங்கத் திருக்கை எடுத்துக் கொண்டு பாத்ரூம்  சென்று அதைப் பார்த்தவனமே கரமைதுனம் செய்ய முயற்சித்தேன்.கண் மூடி அவள் நடு அறையில் நிர்வாணமாக திகைத்து நிற்பதைக் கற்பனிக்க முயன்றேன்..ஆனால் குறி எழும்பவே இல்லை.அது சுருங்கி ஒரு கருகிய பறவை போல் உயிரற்று கிடந்தது.''ஐயோ நான் பேடியாகி விட்டேன்!இயலாமையில் கண்ணீர் பெருகி கன்னத்தில் வழிய கையில் குறியைப் பிடித்துக் கொண்டே  பாத்ரூம் சுவரில் சாய்ந்து அழ ஆரம்பித்தேன்.

மதியம் சண்முகம் வீட்டுக்கு வந்தான்.அவனுக்கு கல்யாணமாம்.செய்துங்கநல்லூர் பொண்ணுடே.என்று சொன்னான்.பெண் போட்டோவைக் காண்பித்தான்.பெரிய கண்களும் குழந்தைக் கன்னங்களுமாய் மிக அழகாக இருந்தாள்.அடி வயிற்றிலிருந்து ஒரு பொறாமை கனல் எழுந்தது.சண்முகம் சந்தோசமா இருந்தான்.ஆள் வேறு சதை போட்டு வசீகரமாக இருந்தான்.அந்த இரவுக்குப் பிறகு அவன் தினம் தினம் அழகாகிக் கொண்டே போகிறான் என்று தோன்றியது.அவன் பேசப் பேச அவன் மேல் வெறுப்பு கூடிக் கொண்டே இருந்தது.எப்போது போகப் போகிறான் என்று இருந்தது.
அன்று மாலையில் குளித்து பவுடரெல்லாம் பூசிக் கொண்டு மேட்டுத் தெருவில் அப்பா சொன்னாரென்று கடன் கொடுத்திருந்த வீடு ஒன்றிற்குப் போனேன்.இன்றைக்கு எல்லாம் தந்துறதா சொன்னான்.போய் வாங்கிட்டு வந்துடு என்றார்.போன போது அவர்  இல்லை.ஒரு கிழவன் பீழைக் கண்களுடன் சொக்கலால்  பீடி பிடித்துக் கொண்டு திண்ணையில் குந்தி அமர்ந்திருந்தான்.''கோயிலுக்குப் போய் இருக்காக ஆச்சியும்  ஐயரும் வருவாக .இருங்க.''என்றான்.அடுக்களை இருட்டிலிருந்து யாரோ எட்டிப் பார்த்தார்கள்.பாவாடை தாவணியில் ....அவள்!

ஒரு கணம் நெஞ்சதிர கண்களில் உயிர் பிதுங்கப் பார்த்தேன்.அவள் இல்லை.வீட்டு வேலை செய்யும் சிறுமியாக இருக்கவேண்டும்.அல்லது அவர்களின் பெண்ணா தெரியவில்லை.பாவாடையின் பின் பக்கம் கிழிசல் வழி பளீரென்று ஒரு வெட்டில் தொடை தெரிந்து மறந்தது. பெரிய கண்களும் மாவடு நிறமுமாக அவளைப் போலவேதான் இருந்தாள்..கிழவன் இன்னமும் பீடி குடித்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ''எப்ப வருவாக''என்றேன்.
''இப்பதான் கிளம்பிப் போனாக அரைமணி ஆவும்.இன்னு பிரதோஷம் இல்லே.நீங்க வருவீங்கன்னு இநேரம்வரை இருந்தாங்க. ''.
நான் போய்விட்டு காலை வருகிறேன் என்று சொல்ல நினைத்தேன்.பெரும்பாலான பிள்ளைமார் வீட்டில் ஆறுமணிக்கு அப்புறம் லட்சுமி வெளியே போயிடுவாள் என்று பணம் தர மாட்டார்கள்.ஆனால் அப்போது விதி போல் சரியாக அந்தப் பெண் வெளியே வந்து ''காப்பி சாப்பிடுங்க''என்று ஒரு கடுத்த திரவத்தை செம்பு டம்ளரில் கொடுத்துவிட்டு மரக்கதவோரம் மார்பை அழுத்திக் கொண்டு நின்றது.காபியை உயர்த்திக் குடிக்கும் போதுதான் அந்தப் பெண்ணின் அக்குள் பகுதியிலும் சட்டை கிழிந்து இருப்பதைப் பார்த்தேன்.கருத்த விரல்களில் அடர் சிகப்பில்  மருதாணி இட்டிருக்க டம்ளரை வாங்கிக் கொண்டு பிருஷ்டம் அசைய அடுக்களை இருட்டுக்குள் போனது.நான் வாசலைப் பார்த்தேன்.கிழவனைக் காணோம்.பீடி வாங்கப் போய் இருப்பான்.உடம்புக்குள் ஒரு பாம்பு புகுந்தது போல் அதிர்ந்து கொண்டே இருக்க மெல்ல எழுந்து உள்ளே போனேன்.உள்ளே அங்கனக் குழியில் அது குத்தவைத்து டம்ளரைக் கழுவிக் கொண்டிருக்க சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்து ''தண்ணி வேணுமாண்ணே''என்று எழும்போது சட்டென்றி தாவி அணைத்தேன்.அவள் அதிர்ந்து கண்கள் விரிய ''அண்ணே விட்டிருன்னே''என்றபோது என்னுள் ஏதோ உடைய ''ஒழிஞ்சு போங்க  தேவடிய்யளுங்களா''என்று அவள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தேன்.'

Saturday, January 8, 2011

மரணத்தின் ஓசை ...

ஒரு சிறிய  இலை
பழுத்துத்
தங்கமாகி
தரை மேல்
ஒரு மெல்லிசை சரிவது போல்
விழுவது போன்றே
விழ விரும்புகிறேன்
மென்மையாய் அரவமில்லாமல்...
ஆனால்
புயல் காற்றில்
பிடுங்கி எறியப் படும்
பெரு மரம் போலதான்
ஆகிறது எப்போதும்...

நான்
இன்னும் சத்தம் குறைவாக
சாகக் கற்றுக் கொள்ளவேண்டும்
என்று
நண்பர்கள் சொல்கிறார்கள்....

அடுத்தமுறை
சரியாகச் செய்கிறேன் என்கிறேன்
ஒவ்வொரு முறையும்..

Sunday, January 2, 2011

உடல் தத்துவம் 16

''பெண்களை நாம் அவர்களது உடல்களாகவே பார்க்கப் பழகிவிட்டோம்''என்றார் டாக்டர்.''ஏனெனில் அதுதான் நமக்கு வசதியாக இருக்கிறது.இல்லையா''

நான் பேசவில்லை.அவர் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவர் அதை அவர் படித்தப் புத்தகங்களில் இருந்தே சொல்கிறார் எனப் புரிந்தது.

''அவ்வாறு ஆண்கள் பார்ப்பதைத் தடுப்பதற்கு மாத்திரை ஏதாவது கண்டுபிடிக்கப் படவில்லையா டாக்டர்''என்றதில் இருந்த கேலியை அவர் தவறவிட்டுவிட்டார் எனப் புரிந்து''டாக்டர் எப்போதாவாது  நீங்கள் கொலை செய்திருக்கிறீர்களா'''என்றதில் அவர் சற்று திடுக்கிட்டு ''நாம் தினமும் யாரைவாது கொலை செய்துகொண்டுதான் இருக்கிறோம்''

''இந்தக் கவித்துவ எழவெல்லாம் வேண்டாம் டாக்டர்.நான் சொல்வது நிஜக் கொலை.கிடக்கட்டும்.உங்களை யாராவது கொலை செய்யும் நோக்கத்துடன் கையில் கத்தியுடன் துரத்தி வந்திருக்கிறார்களா...''என்றேன்.''தாராவியில் காவிக் கட்சிக் காரன்  பத்துபேர் ஒரு கும்பலாக என்னை அதன் பீச்சந்துகள் முழுக்க துரத்தித் துரத்தி ஒரு நாள் முழுதும் சூரிக்  கத்தியுடன் அலைந்திருக்கிறான்கள்.அந்த நாள் முழுக்க புழுக்கள் நெளியும் மலக் கிடங்கில் ஒளிந்திருந்து தப்பித்தேன் டாக்டர்.மலம் என்றதும் உங்கள் முகம் கோனுகிறது டாக்டர்.உங்கள் வீட்டு கக்கூஸ் கூட யூடிகொலான் அடித்து சுகந்தமாய் இருக்கிறது.ஆனால் உலகின் மிகப் பெரிய சேரியான தாராவியில் நுழையும் முன்பே உங்களுக்கு மலம் நொதிக்கும் நாற்றம் தான் வரும்.அந்த சேரிக்குள்  ஐந்து வருஷம் வாழ்ந்திருக்கிறேன்.பத்து ரூபாய்க்காகவும் ஒரு குடிசை போடும் அளவுள்ள துண்டு நிலத்துக்காகவும் உங்கள் நண்பனே உங்களை எப்போது வேண்டுமானாலும் ஒரு துருப் பிடித்த பிளேடினால் கழுத்தை அறுத்து கொன்றுவிடக் கூடிய சூழலில் எந்நேரமும் முழுதாய்த் தூங்காது பதற்றத்துடன் கஞ்சாவோ சரக்கோ அடித்தால்தான் தூங்கமுடியும் என்ற நிலைமையில் 24 மணிநேரமும் அலைந்திருக்கிறேன்.அங்கே கக்கூஸ் எல்லாம் தனியாகக் கிடயாது சாரே.அந்த இடத்தில் ஒரு குடும்பமே  வசிக்க முடியும் என்பதால் கக்கூசே வீடு தெருவே கக்கூஸ்...அள்ளி முடியாது என்று சொல்லி எந்தப் பீ வண்டியும் வராது.அப்படிப் பட்ட ஒரு மலக் கிடங்கு பக்கத்தில் ஒரு சாக்கு வீட்டில் ஒருநாள் முழுக்க உங்களை அடைத்துவைத்து உங்களுக்கு அபிராமி அந்தாதி சொல்ல வருகிறதா என்று பார்க்க சில சமயம் ஆசை வருகிறது.அசட்டுப் பிசட்டென்று நீங்கள் உதிர்க்கும் தத்துவ முத்துக்களைக் கேட்கும்போது சிலசமயம்..''

டாக்டர் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க ''பத்து பைசா பொரைக்கு கன்னித் தன்மையை இழக்கத் தயாராக  இருக்கிற சிறுமிகளைத் தெரியுமா டாக்டர்''என்றேன்.அவர் முகம் முற்றிலும் வெளுத்துவிட்டது.ரொம்பப் போய்விட்டோமோ என்று உணர்ந்து சற்று தாழ்ந்து நான் முதன் முதலாய் ஒரு வேசியிடம் போன கதையைச் சொன்னேன்.

மால் கடத்தும் லைனுக்கு வந்தும் சில வருடங்கள் நாஞ்சில் பிள்ளைவாளாகவே சில விசயங்களில் இருந்தேன்.ஒருநாள் உடன் இருந்த தோழன்தான் என்னிடம் சில தொழிலுக்குதவாத சில கொள்கைகள் இருப்பதைக் கண்டுபிடித்து சோனா கஞ்சிற்குக் கூட்டிப் போனான்.''இங்க பாரு பாபு இந்தத் தொழில்ல இருக்கவே இருக்கக் கூடாதது இரக்கம்.ஒரு  நொடி யோசிக்காம அடுத்தவன் கழுத்தை அறுக்க முடியனும்.இல்லேன்னா அவன் உன் கழுத்தை அறுத்துடுவான்.''
''அது சரி  அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்''
''சம்பந்தம் உண்டுடே.இதுவும் ஒரு வகைல கொலை போலதான் வா தெரியும்''
சமீபத்தில்தான் ஒரு பெரிய டீலை நாங்கள் இருவரும் வெற்றிகரமாக முடித்திருந்தோம்.கமிசனாகக் கிடைத்தப் பச்சைக் காகிதங்கள் அவன் மூளையை அரிக்கத் தொடங்கிவிட்டது என அறிந்தேன்.''யாருக்குடி தெரியும் நாளைக்கே நான் செத்துப் போகலாம்''என்றான்.அவன் சொன்னது போல் மறுநாள்  செத்துப் போகவில்லை ஆனால் அடுத்த மாதமே பம்பாயில் நடந்த ஹிந்து முஸ்லிம் கலவரம் ஒன்றில் சிக்கி இறந்துபோனான் உண்மையில் அன்வர் இறந்து போனதற்காய் நான் பெரிதாக வருத்தப் படவில்லை.அவனது பிஸ்னெஸ் எல்லாம் எனக்கு வந்தது ஒரு காரணம்.

பம்பாயின் காமத்திபுரத்தைவிட சோனாகச்சி  ரொம்ப மோசமாக இருந்தது.காமத்திபுராவை பூசாரி போன்றவர்கள் வந்து சற்றேனும் சில அடிப்படைவசதிகளைச் செய்திருந்தார்கள்.இங்கு எந்தப் பூசாரியும் வரவில்லை.ஷோபா பஜாரில் ஒரு குஜராத்தியிடம் பேசிவிட்டுக் கிளம்பியபோது கச்சி போறேன் என்றபோது ''அரே யார் கலீஜ்.பொம்பிள வேணும்னா சொல்லு  நான் போன் நம்பர் தரேன்.டீசண்டா இருக்கும்.இங்க எல்லாம் சாக்கடை என்றதை அன்வர்  மறுத்து சுகத்துக்குப் போகலே சேட்டு.எடுகேசன் என்று சிரித்தான்.

நாங்கள் போன சமயம் இரவு விழும் நேரம் ஒரு பெரிய மிருகம்போல கச்சி விழித்து ஒரு பெரிய ஜனத் தொகையே தெருக்களில் நகர்ந்து கொண்டிருக்க முட்டுச் சந்துக்கள் எங்கும் கை ரிக்ஷாக்கள் அடைத்துக் கொண்டிருக்க தெரு முழுக்க ஹிந்தித் திரைப் படப்பாடல்களும் பெங்காலி நாட்டுப் புறப பாடல்களும் வழிந்து கொண்டிருந்தன.ஒருவர் பேசுவதை அடுத்தவர் கேட்பதே சிரமமாக இருந்தது.பாண் கடைகளின் வாசலெல்லாம் பத்து வயது முதல் அத்தனை பருவத்திலும் பெண்கள்.கண்கள் மட்டுமே உயிராய் மீதி எல்லாம் ரூஜும் பாண் சிகப்பும் பஞ்சும் அடைத்த சோகை யான தக்கைப் பெண்களிலிருந்து எல்லா துவாரகளிலும் சதை பிதுங்கி வழியும் சதுக்கப் பூதங்கள் வரை.''அன்வர் சைக்கிள் ரிக்சாவின் பின்னாலிருந்து ''முன்னால் அடைத்துக் கொண்டிருந்தவனை ஜாவ் ஜாவ் என்று அதட்டிக் கொண்டிருக்க ''என்ன அவசரம் ''என்றேன்.அன்வர் இருக்கையில்  உல்லாசமாக  சாய்ந்து கொண்டு பானை பளீரென்று தரையில் சிவப்பு அருவி போல் துப்ப பின்னால் ஸ்கூட்டர் செலுத்தி வந்தவன் ''அரே சைத்தான் என்று கத்த சிரித்தான்.''ஆமா என்ன அவசரம்..எங்கே ஓடிவிடப் போறாளுங்க தேவடியாளுங்க...''என்றான்.பக்கத்திலிருந்த கட்டிடத்து வாசலில் நின்ற பெண் ஆசுன் ஆசுன் என்று வருந்தி அழைத்துக் கொண்டிருக்க ''போடி பப்ளிமாஸ்'' என்றான்.ரிக்சா  வாலா பீடியை கடித்துக் கொண்டே திரும்பி 'அமி கொத்தா ஜாய்?'என ''லக்ஷ்மிபாய்'' என்று கத்தினான் அன்வர்.அவள் சற்றுத் தரமான கை என்று சொன்னான்.பிறகு என்னிடம் திரும்பி ''உனக்கு தமிழ்த் தேவடியாதானே வேணும் இல்லே? .

நான் பதில் யோசிப்பதற்குள் ரிக்சா நின்றுவிட்டது.மிகப் பழுப்பான மூன்று மாடிக் கட்டிடம் அது.முன்பு இருந்த பாண் கடையில் பெரிய கூட்டம் நின்றிருக்க யாரோ அன்வரைக் கண்டுகொண்டு ''அரே தேகோ ஹமாரா பாய் ஆகி'''என்று கத்தினார்கள்.குல்லா அணிந்த ஒருவன் தாண்டிவந்து ''சலாம் பாய் ''என்றான்.அன்வர் சிரித்து ''ராநிபாய் இருக்காளா '''
''இருக்கா பாய்.புதிசா ஒரு சின்னப் பொண்ணு நேபால்லிருந்து வந்திருக்கு ஒப்பனே ஆவலை இன்னும் புக் பண்ணிடுவோமா .''
''அரே நேபாளில்லாம் வேணாம் தமிழ் தமிழ் இருக்கா நம்ம தோஸ்த்துக்கு.எடுகேசன்!''என்று காவிப் பல் தெரிய சிரித்தான்.
அவன் மோவாயைத் தடவி பின்னால் திரும்பி ''அரேமோகன்தாஸ் ''என்று நீண்டபெங்காலியில் கத்த மோகன்தாஸ் நெற்றி நிறைய மேல்நோக்கித் தீற்றிய குங்குமத்துடன் ஆடு வெட்டுபவன்போல் வந்து ''ஆசுன்'என்றான்.அன்வர் வரவில்லை என்றுவிட்டான்.'இன்னிக்கு வெள்ளிக் கிழமை பாபு'

மோகன்தாசுக்கு கொஞ்சம் தெலுங்கு பேசவரும் என்று பின்னால் தெரிந்தது.ஆனால் அவன் தனக்குத் தமிழும் பேசவரும் என்று நினைத்துக் கொண்டு பேசியது தமிழ் அல்ல என்று சொல்ல விரும்பாமல் அவன் பின்னாலேயே பாம்பு போல் நெளிந்து நெளிந்து ஏறினேன்.வழியெங்கும் தீப்பெட்டி போல் அறைகளில் விதம் விதமான பெண்கள் ரகம் ரகமான ஆண்களுடன் இருக்க சில அறைகளில் குடும்பங்கள் கூட இருந்தன.ஒரு அறையில் காளி படத்துக்கு முன் சிறு பெண்கள் அமர்ந்து பஜனை பாடிக் கொண்டிருக்க ''நவராத்திரி வருது பாபு''என்றான் விளக்கமாக.ஒரு அறையில் நீலக் குழல்விளக்கின் அடியில் படுக்கைமீது ஒரு வெள்ளைக் காரன் முழு நிர்வாணமாக நின்று கொண்டு ஒரு சிறுமியை அவன் இடுப்பு நோக்கி அழுத்திக் கொண்டிருக்க மோகன்தாஸ் சட்டென்று உள்புகுந்து பெண்ணை கன்னத்தில் அடித்தான்.''கதவை அடச்சுக்க மாட்டியா ப்ரீ ஷோவா காட்டறே .தெரியுமா .இது ராணிபாய் இடம்.''' அவள் வெள்ளைக்காரன்தான் சாத்த  மாட்டேங்கிறான் என்பது போல் சொல்ல வெள்ளைக் காரனிடம் சண்டைக்குப் போனான் அவன்..அவன் ஆங்கிலத்தில் ''claustrophobic  யூ ஸீ''என்று ஏதோ சொல்ல'' டீசண்டா  நடந்துக்க சாஹேப்'' என்று சொல்லிவிட்டு மேலும் என்கூட நடந்தான்.''ரொம்ப மோசமானவங்க இந்த வெள்ளைக் காரப் பயலுவதான்''என்றான்.''அவனுகளுக்கு எல்லாம் சின்னப் பொண்ணுங்கதான் வேணும்.வயசுக்கு வரலேனா இன்னும் ரொம்ப அலைவானுங்க.பொறக்கறதுக்க முன்னாலேயே  பொம்பளப் புள்ளைங்கள புக் பண்ண ரெடியா திரியறானுங்க  ''என்றவன் திரும்பி ''உங்களுக்கு எப்படி.அவுக்காத மொட்டு தான்   வேணுமா'''நான் இதற்குள் நிலை தடுமாறி காய்ச்சல்காரன் போல் ஆகியிருக்கப் பதில் சொல்வதற்குள் பழனி முருகன் படம் போட்ட ஒரு அறை முன்பு நின்று கதவு தட்டி ''கோலோ'''என்றான்

திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக்  கொண்ட தமிழ் என்கிற தமிழ்ச் செல்விக்கு இருபதிலிருந்து எந்த வயதும் இருக்கக் கூடும்.பனியனும் மிடியுமாய் இருந்தாள்.தமிழ் என்றதும் ''இந்த டிரஸ் போதுமா பாவாடை தாவணி மாத்திக் கொள்ளணுமா''என்றது எனக்குப் புரியவில்லை.''இல்லே முந்தி வந்த தமிழ் ஆசாமிக்கு நான் பாவாடை போடாவிட்டால் சாமானே எழும்பாது..அவன் கிழித்த பாவாடைகள் மட்டும் மூன்றிருக்கிறது.இன்னுமொரு தமிழனுக்கு நான் குளித்துக் கொண்டிருக்கையில்தான் செய்யவேண்டும்.எனக்கு சைனஸ் பிரச்சினை உண்டு.அவன் வரும்போதெல்லாம் குளித்துக் குளித்து எப்படியும் டாக்டரிடம் போக வைத்துவிடுவான் என்று சிரித்தாள்.''என்னைக் குளிக்கச்  சொல்வானே தவிர அந்த நாய் குளிக்கவே மாட்டான்.குஞ்சையும் கழுவ மாட்டான்.''என்று சிரித்தவள் நிறுத்தி ''உனக்கு அது மாதிரி ஆசை இருந்தா சொல்லிவிடு.பாவாடைக்குத் தனிக் காசு .குளிக்க பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை.''
'நான் ''இல்லை'' என்றேன்.'

உடையைக் கழற்ற ஆரம்பித்தவள் நான் அப்படியே அமர்ந்திருப்பது பார்த்து என்னை உற்றுப் பார்த்து ''நீ புதுசா'''எனறாள்.பிறகு பெரு மூச்சுடன் '''ஹவ் ச்வீட் எனறாள் சுத்தமான ஆங்கிலத்தில்.
 எல்லாம் முடித்த பின்பு சிகரட் வைத்திருக்கிறாயா என்று கேட்டு வாங்கிப் புகைத்தாள்.
'என்னுடைய பிரான்ட் பார்த்துவிட்டு ''சார்மினார் ரொம்பக் காரம் ஆச்சே. ஆனால் நீ ரொம்பப் பால்ப் பையன் போல் அல்லவா இருக்கிறாய்''

''எந்த ஊர்'''
''நாகர்கோயில்''
''அங்க எனக்கொரு அத்தை இருந்தா.நீ திண்டுக்கல் போய்  இருக்கிறாயா''
''இல்லை பக்கத்தில் கொடைக்கானல் போய்  இருக்கிறேன்''
அவள் கண்கள் ஒளிர்ந்து ''கொடைக்கானல்!ஒவ்வொரு சம்மரும் டூர் போவோம்.ஒவ்வொரு டூரிலும் எனக்கும் என் தங்கைக்கும்  சண்டை வந்துவிடும''
என்றவள் .'உனைப் பார்த்ததால் என்னுடன் காண்வென்டில்  படித்த் ஒரு பையன் நினைவு வருகிறது.பெயர் அஜித்தோ என்னவோ..என் பின்னால் சுற்றிச் சுற்றி வந்தான்.செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன்''என்று சிரித்தாள்.''எங்கே இருக்கிறானோ''
சற்றுநேரம் சீலிங்கை நோக்கிப் புகைவிட்டுக் கொண்டே இருந்தாள்.
''பாட்டு கேட்போமா'''என்று அங்கிருந்த டெல்லி  மேக் டேப் ரிகார்டரில் ஒரு கேசட்டைச் சொருக  .அது பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள உள்ளம் துள்ளும் என்று பாட ஆரம்பித்தது.
''இளையராஜா .பிடிக்குமா ''
''ரொம்ப''
''அவரால்தான் நான் இங்கு வந்தேன்''
நான் புகைப்பதை நிறுத்தி ''இளையராஜாவாலா ?''
''அவர் பாட்டுக்களைப் வண்டியில் போட்டு போட்டுத்தான் அவன் என்னை மயக்கினான்''
''ட்ரைவர் ?"'
''ம்ம்'என்றவள் தாடை இறுகியது.'
சட்டென்று எழுந்து உட்கார்ந்து ''என் தங்கை என்னை விட அழகு தெரியுமா உனக்கு'அதன் பொருட்டு சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் சண்டை வருவதுண்டு 'என்றவள் 'குனிந்து தன் வயிற்றைப் பார்த்தாள்..''மூன்று அபார்ஷன் ஆகிவிட்டது.அதற்குள்.அடுத்த அபர்சனுக்கு நீ இருக்க மாட்டாய் என்கிறாள் டாக்டர்.''
மறுபடி படுத்துக் கொண்டு ''வீட்டில் ஏசி இல்லாமல் தூக்கமே வராது எனக்கு.ஆனால் இங்கு தனியாக அழக கூட இடமில்லை.மாத நாட்களில் துணி சொருகுவதைக் கூட யாராவது பார்த்துக் கொண்டிருக்கிறான்.இப்போது பராவாயில்லை வெயில் காலங்களில் நரகம்.மேலெல்லாம் வந்து போனவனின் நாற்றம்.யோனியில் வாயில் புத்தியில் ..''அவள் சட்டென்று நிறுத்தி ''அட...நான் ஏன் இதெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன் உன்னிடம்?நீ இன்னுமொரு மலம சாப்பிட வந்த பன்றி''என்றாள்.அந்தக் கணம் அவள் முகம் அச்சம் தருவதாய் இருந்தது..


பிறகு மெல்ல இளகி ''ஏனோ உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு வேளை பள்ளியில் என்பின்னால் அலைந்த பையன் போல் நீ இருப்பதால் இருக்கலாம்.அல்லது  உன் குஞ்சை நீ கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கிறாய் அது காரணமாக இருக்கலாம்''எனறாள் சிரித்து .

பிறகு நெருங்கி '''எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இருக்கிறது இந்த வாழ்வில்.அது ஒன்றுதான் என்னைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.என்றைக்காவது அவனை அந்த ட்ரைவரை நேரில் சந்திக்கநேர்ந்து அவன் கொட்டைகளை இந்தக் கொரடால்அப்படியே வேரோடு பிடுங்கிவிடவேண்டும'.நடக்குமா?என்றாள். '

Saturday, January 1, 2011

புதியது கேட்கும்....

புதிய ஆண்டில்
புதிதாய்
ஒரு பரிசு கொடு
என்று கேட்ட
செம்பொன் நிறத் தேறல்
போல
பழகிய
 பழையோளுக்கு...
இன்று காலை
புதிதாய்ப்
பொழிந்த பனியில்
இன்று காலையே
புதிதாய்ச் செய்த
புதிய பூவுடன்
இன்னும்
உதடுகள் விட்டு
இறங்காத உஷ்ணத்துடன்
சுடச் சுட
புத்தம் புதிய பதிப்பாய்
முத்தம் ஒன்று வா.....

LinkWithin

Related Posts with Thumbnails