Thursday, June 30, 2011

பாலியல்கவிதை

1.அய்யோ என்று கத்தினாள் அவள்
ஏன் இப்படி கத்துகிறாய்
என்றேன் நான்
அய்யோ என்று
பிறகு சின்ன எழுத்தில் கிசுகிசுத்தாள்
வலிக்குது என்றவுடன் திடுக்கிட்டு தடுத்து ...
'இது பாலியல் கவிதையாக
இருந்தால் உடனே நிறுத்திவிடு
ரிஷ்ய சிருங்கர்கள்உலவும் இடம்.'.என்றேன்
அவள் முறைத்து
'நீ என்கால் மீது நிற்கிறாய்!' என்றாள்

2.சனிக் கிழமை சனிக் கிழமை
உளுந்தங்களி உருட்டித் தருவாள் ஆச்சி
வழிய வழிய
நல்லெண்ணெய் தடவி ...
மாமிசம் தின்னா ஜாதிக்கு
கடவுள் கொடுத்த மாமிசம் என்பாள்
ஆச்சி போய்
ஆண்டுகள் ஆயிற்று
அவளோடு போயிற்று
அவள் அறிந்தவைகளும்..
உருட்டிக் கொடுத்த
உளுந்தங்களியின் வாசனை மட்டும்
மூக்கிலேயே இருந்தது ..
முந்தாநாள்
அவள் முலை நுகர்ந்தபோது
எழுந்துவந்தது....


3.கல்லிடைக் குறிச்சி
பச்சை அப்பளம்
சாப்பிட்டிருக்கிறீர்களா?
தின்னும்போது
அப்படித்தான் இருக்கிறது
அவள் உதடுகள் ...

4.நாரத்தை ஊறுகாய் ''
என்றேன் அவளிடம்
''வாசனையும் சுவையும் ''

புரியாமல் எதுவென்றாள் முதலில்..
பிறகு புரிந்து
'' ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்..............''

Thursday, June 23, 2011

நமீதா பூச்சி...

என்றைக்கும் இல்லாத திருஇரவாய் எழுபது கிலோ டால்டா டின் போல ''கண்ணா லட்டு தின்ன ஆசையா''என்ற படி நமீதா என்கனவில் ஏறிவெண்கலக் கடைக்குள் ஆனை புகுந்தது போல நெருங்கி வரவும் பயந்து வீரிட்டலறி எழுந்து வேர்த்து தாகமாகி அடுப்பறையில் நீர் குடிக்க விளக்கைப் போட்டதும் இருட்டை மேய்ந்து கொண்டிருந்த ஆயிரம் கரப்பான் பூச்சிகள் கலைந்தோடின.

ஒற்றை பூச்சி மட்டும் ஓடாது நின்று கடுகுக் கண்களால் என்னையே முறைத்தது.நான் பாதி குடித்த தண்ணீரின் மேல் ''என்னா''என்றேன்.அது மீசையை நீவி விட்டுக் கொண்டு ''ஆனை மேல எழுதறே பூனை மேல எழுதறே..எங்களைப் பத்தி ஒன்னு எழுதினியா''என்று கண்ணகி போல் நீதி கேட்டது.நான் கண்கள் சொருக யோசித்து ''ரயில் பூச்சி பற்றி எழுதி இருக்கிறேன்''என்றேன்.
அது அலட்சியமாய் ''ஹ!உலகில் கோடிக கணக்கான பூச்சி இனங்கள் உண்டு அதில் ஒரு பூச்சி பற்றி அரைக் கவிதை!'என்றது''சமூக நீதி வர்க்கச் சமன்பாடு இது பற்றியெல்லாம் அறிவாயா நீ?''
நான் திடுக்கிட்டேன்.இது அறிவு ஜீவி கரப்பான் பூச்சி போலிருக்கிறதே!
''உன் வயிற்றிலேயே ஒரு கோடி பூச்சி உண்டே அறிவாயா நீ''
நான் மேலும் திடுக்கிட்டேன்.என் வயிற்றுக்குள் ஒரு கோடி கரப்பான் பூச்சியா ?பிறகு அது பாக்டீரியாக்கள் என்று தெளிந்தேன்.அவை பூச்சிகளா என்ன?இருக்கலாம்.எங்கள் ஊரில் குழந்தைக்கு உடல் சரியில்லை எனில் டாக்டர் ''பூச்சிக்கு மருந்து சாப்பிட்டாயா;;என்றுதான் முதலில் கேட்பார்.'';'

''உங்களால் தான் எங்களுக்கு எத்தனை தொல்லை..வயிற்றுப் போக்கிலிருந்து வாந்தி பேதி வரை ...உங்களைப் பற்றி நான் ஏன் கவிதை எழுத வேண்டும்?''
''அது நாணயத்தின் ஒரு பக்கம்...நீ நேற்று இரவு சாப்பிட்ட முட்டை பரோட்டாவை ஜீரணிக்க ஒரு கோடி பூச்சிகள் உன் வயிற்றில் இன்னமும் தூங்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றன.அறிவாயா அரை மூளைக் காரனே?''
''மன்னிக்கவும் எனக்கு பூச்சிகளைப் பற்றி அதிகம் தெரியாது.நான் பூச்சியலாளன் அல்லவே?''
''பூனைகளைப் பற்றி எழுதுகிறாய்.நீ என்ன பூனையிலாளனா ?''
நான் இப்போது அதன் வாதத்தின் நீதியை புரிந்து கொண்டேன்.ஒரு துரோகி போல் என்னை உணர்ந்தேன்.வாயில் வெள்ளை நுரை தப்ப புஸ்புஸ் என்று நின்ற பூச்சியிடம் நாளையே எழுதுகிறேன் என்று வாக்களித்துவிட்டு திரும்ப வந்து படுத்தேன்.

படுத்த பத்தாவாது நிமிடம் ''கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா'என்று நமீதா மீண்டும் வந்தார்.இம்முறை அலறி எழுவதற்குள் பட படவென்று சிறகை விரித்து பறந்து வந்து மார் மீது அமர்ந்துவிட்டார். நமீதாவின் கொங்கைகள் துவங்கும் இடத்தில் இரண்டு பெரிய சிறகுகள் ...கரப்பான் பூச்சியின் சிறகுகள்..முலைத்திருந்தன..ச்சே முளைத்திருந்தன....நமீதா தன் புதிய மீசைகளை ஒதுக்கிய படி என்னை முத்தமிட குனிந்த போதுதான் மீண்டும் அலறி விழித்துக் கொண்டேன்.இப்போது விடிந்திருந்தது,அடுப்பறையில் கரப்பான் பூச்சிகளைக் காணவில்லை.எனினும் இரவில் கரப்பான் பூச்சியிடம் கொடுத்த சத்தியம் நினைவு வந்தது.ஆச்சியிடம் கொடுத்தாலும் பூச்சியிடம் கொடுத்தாலும் சத்தியம் காப்பாற்றப் படவேண்டியது.யோசித்து யோசித்து ஒரு பெரிய தட்டியில் இப்படி எழுதி வெளியே வைத்தேன்

இங்கு
ஆனைகள் பற்றியும்
பூனைகள் பற்றியும்
மட்டுமல்ல
பூச்சிகள் பற்றியும்
நயம் சந்தத்துடன்
நவீன கவிதைகள்
செய்து தரப் படும்


எந்தப் பூச்சியும் விலக்கல்ல 

நமீதா பூச்சி தவிர்த்து..

Tuesday, June 21, 2011

வழி

முனுசாமி ட்ரான்ஸ்போர்ட்
மினி பஸ்சில் இருந்து
இறங்கி விட்டீர்களா..
அங்கிருந்து
பிரியும் வலது பக்க சாலையைத்
தவிருங்கள்
அங்கிருக்கும்
கிருஷ்ணன் குட்டியின்
டீக கடையையும்தான் 
தேயிலையில் மரத் தூள கலக்குகிறான்
இடது பக்க சாலையில்
வானம் பார்த்த பானைகளில்
தீ மூட்டி சமைக்கும்
குறவர்களைக் கடந்து வாருங்கள்
அவர்கள் வளர்க்கும்
நாயின் கண்களைப்
பார்க்காதிருங்கள்
அந்தப் பெண்களின் மார்புகளையும்தான்...

ஐந்து நிமிட பொடிநடையில்
கையில் வாளுடன்
ஆளுயர அய்யனார் வந்துவிடுவார்.
வருகிறாரா
அவர் பக்கம் போக வேண்டாம்
அவரைத் தாண்டியதும்
ஒரு பெரிய புளிய மரம் வருகிறது
காய்க்கும் பருவம்தான்
நிறைய காய்த்துதிர்ந்து கிடக்கும்
ஆனால் குத்தகைக் காரன் உண்டென அறிக
அதை ஒட்டிய
கால் தடத்தில் இறங்குங்கள்
உடை முட்கள் சற்று அதிகம்தான்
செருப்பு அணிந்திருக்கிறீர்கள் தானே?
ஆனால் பாம்புகள் கிடையாது
காயம் படாமல் அப்படியே
வந்தால் ஒரு அரளிச் செடி வரும்
செவ்வரளி ...

அதை விலக்கினால்
பாழடைந்து இடிந்த
ஒரு ஆழ்துளைக் கிணறு தெரிகிறதா
அங்குதான் வரவேண்டும்
அங்குதான் நான் இருக்கிறேன்

போன வருடம் இதே மாதத்தில்
கந்த சாமிக கோனார் பேத்தியின்
துரோகம் தாங்காமல்
குதித்து
தலை சிதறிச் செத்துப் போனதில் இருந்து...
தனியாய்..

வாருங்கள்
காத்திருக்கிறேன்..

Friday, June 17, 2011

கொஞ்சம் பிதற்றல்...

1.ஆழக் குதிக்கும்
'அலை கடலினுள்
குனிந்து நோக்கினேன்
யுகத் தொடக்கத்திலிருந்து அங்கே
நீலநாவாய் என
மிதந்து கிடக்கும்
வலியச் சுழல்மீனும்
நிமிர்ந்து நோக்கியது

ஒரு கணம்..

பாறையின் உச்சியில் இருந்து
குனிந்து நோக்கும் மீனாக
நானிருந்தேன்
உறை கடலில் இருந்து
அண்ணாந்து நோக்கும்
மனிதனாக அது ...





2.நேற்று 
அனல் எரியும்
மாநகரக் கூடல்
இன்று அலையின்
உப்பு தெறிக்கும் குமரிமுனை
நேற்று ஜனத்திரள் நடுவே
தொலைந்த துளி..
இன்று
நெடிய கடற்கரையில்
ஒற்றையாய் உலவும் காகம்
நேற்று பிடரியில் சுடுவெயில்
இன்று மார்பில் அறையும் குளிர்மழை
நேற்று அவளுடன் உறவில்
இன்று தனிமையில் பிரிவில்

அதனால் என்ன....
நேற்றும் நான்
இன்றும் நான் ..

சலிக்கச் சலிக்கத்
தன்னைத் தின்றும்
தான் தீராத
நான்..


3.வழக்கம் போல
இன்றும் விடிந்தது
இன்று காலையும்.

வழக்கம் போலவே
இன்றும் நான்
உயிரோடிருக்கிறேன்..

வழக்கம் போலவே
என்பதைத் தவிர
இதில் வேறு செய்தி
எதுவும் இல்லை...

4.ஒரு எச்சில் தட்டு போல
கிடக்கிறது நிலவு
சிதறிய பருக்கைகளாய்
விண்மீன்கள்...

வேறெப்படியும்
தோன்றவில்லை
வெறும் வயிற்றோடு
வீதியில் படுத்துக் கொண்டு
விண்ணை வெறிப்பவனுக்கு

5.பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
பசிய இலை
நெளிந்து
பச்சைப் புழுவாய் மாறிற்று
புழுவும் விரிந்து
சர்ப்பமாகக் கூடுமென
அஞ்சி விலகினேன்

காத்திரு
என்று அதட்டியது ஒரு குரல்
புழு மலர்ந்து
பூவாகவும் கூடும் என்றது



6.அப்புறம் ஒரு உதவி
நான் வேலைக்குச் சென்று வரும்வரை
இந்தக் கவிதையை சற்று
உங்கள் பாதுகாப்பில் வைத்திருங்கள்
பத்திரம்
பலநேரம்
தப்பித்துப் போயிருக்கிறது


Wednesday, June 8, 2011

வார்த்தை வாதை வாழ்க்கை 4


கொஞ்ச நாட்கள் முன்பு ஜெயமோகன் பாலகுமாரனைப் பற்றி எழுதி இருந்தார்.. சுஜாதாவைப் பற்றியும் பாலகுமாரன் பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஒரு பெரிய பின்னூட்ட எதிர்ப்பலை எழுந்து அவர் புறவாசலை மூடும்படி ஆகிவிட்டது.உண்மையில் சாரு ,எம் ஜி ஆர் ,சிவாஜி பிரச்சினைகளில் கூட இவ்விதம் நிகழவில்லை.தளத்தின் அளவுப் பிரச்சினை என்று அவர் சொன்னாலும் நித்தியானந்தா பிரச்சினையின் போது இதை விட அதிக பின்னூட்டங்கள் வந்த நினைவு. ஒருவேளை பின்னூட்டங்களின் தொனி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.விஷயம் சற்று உணர்ச்சி மீதுரவும் ஆகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.நானும் இது சம்பந்தமாக நடந்த சொற் சிலம்பத்தில் கலந்து கொண்டு பின்னூட்ட தேரை நிறுத்திய அபகீர்த்தி அடைந்தேன்.

இன்று நான் மனதுக்கு நெருக்கமாக உணரும் எழுத்தாளன் ஜெய மோகனே.அதுவே ஒரு காலத்தில் பால குமாரனாக இருந்தது.ஆனால் இன்றைய இலக்கிய உலகில் இதைச் சொல்வது 'நான் ஒரு தற்குறி'என்று சொல்வதற்கு சமம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.பாலகுமாரன் என்பது இன்று தீவிர இலக்கிய உலகில் சொல்லகூடாத கெட்ட வார்த்தை. யுவன் சந்திரசேகர் நாவல் ஒன்றை சாரு பாலகுமாரன் நாவல் என்று விமர்சித்தார்.அதாவது அச்சொல் ஒரு வசை.இலக்கிய வரலாறோ விமர்சனமோ எழுதுபவர்கள் எல்லாம் பாலகுமாரனைக் கவனமாகத் தவிர்த்து விடுவார்கள்.சுஜாதாவை போனால் போகிறது என்று 'நகரம்னு ஒரு சுமாரான சிறுகதை எழுதியிருக்கார்'என்பார்கள்.உண்மையில் ஜெயமோகன்தான் இவர்களைச் சற்றுப் பொருட்படுத்தி விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டார் என ஒப்புக் கொள்ளவேண்டும்.

ஆனாலும் அவரது மேலோட்டமான அங்கீகாரத்தின் கீழ் அவர் வைத்த மதிப்பீடுகள் என்னை மன உளைச்சலில் தள்ளியது.ஏன் எனில் என் இளமையின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமித்தது அவர் எழுத்துக்கள்.அவரது வாசகிகள் பலர் அவருக்கு அப்பா என்று விளித்து கடிதம் எழுதுவார்கள்.ஆண்கள் குருவே என்பார்கள்.[இப்போது ஜெயமோகனுக்கும் இது போன்ற கடிதங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன]நான் அந்த அளவு செண்டி இல்லை எனினும் இப்போதும் அவர் பெயர் என்னுள் ஒரு நெகிழ்வை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.இந்த வழிபாட்டு உணர்வு ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப் படுவது என்று ஜெயமோகன் சொல்கிறார் இருக்கலாம்.எல்லா உணர்வுகளுமே உருவாக்கப் படுபவைதான்.



புருஷவதம் பாலகுமாரனின் சிறந்த நாவல்களில் ஒன்று .பழையனூர் நீலி பற்றிய கதை ஒன்று உண்டு.முன்பு எங்கள் ஊரில் கோயில் விழாக்களில் வில் அடித்துப் பாடுவார்கள்.இப்போது அந்த இடங்களில் எல்லாம் ரிக்கார்ட் டான்ஸ் ஆடுகிறார்கள்.கேட்டால் 'கலை நிகழ்ச்சி'என்கிறார்கள்.பழையனூர் நீலி கதைப் பாடலைக் கேட்டு பயந்து இரவுகளில் தூங்காமல் இருந்ததுண்டு.சில பெண்கள் கதை கேட்கும்போதே கண்ணீர் விடுவதையும் பல்லைக் கடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.பொதுவாகவே ஆண்களுக்கு அடிவயிற்றில் ஒரு சங்கடமான உணர்வைக் கொடுக்கும் கதை.'அம்மன்,அருந்ததி' போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றதிற்கு உளவியல் காரணங்கள் உண்டு.ஏறக் குறைய எல்லா பெண்களுமே இங்கு ஆண்களால் வஞ்சிக்கப் பட்டுவிட்டதான ஒரு உணர்வில் இருக்கிறார்கள்.பல சமயங்களில் அந்த உணர்வு உண்மையானதே.அவர்களுக்கு நீலி கதை பிடித்திருந்ததில் வியப்பு இல்லை.தன்னை ஏமாற்றிக் கொன்ற கணவனை பல பிறவிகள் கடந்தும் காத்திருந்து பழி தீர்த்துக் கொண்ட கதை. பாலகுமாரன் இந்த கதைப் பாடலை விரித்து அற்புதமாக எழுதி இருக்கிறார்.வழக்கமான அவரது கிளிஷேக்கள் குறைவு.அந்தக் கால செட்டிக்களின் வாழ்வு,காசி வாழ்க்கை ,நிரஞ்சர்கள் என்ற கேடி சாதுக்களின் அட்டகாசங்கள் ,யாத்திரை செய்கிறவருக்கு அன்றிருந்த சிரமங்கள் எல்லாவற்றையும் விரிவாக எழுதி இருக்கிறார்.தீவிர இலக்கிய முகமூடிகளை கழற்றி விட்டுப் படிக்க நிறைவான உணர்வைத் தரும் கதை.சினிமாவாய் எடுத்தால் பிய்த்துக் கொண்டு ஓடும்.  ********************************************************************************** எனக்குப் பிடித்த அழகான ஹிந்திப் பட ஹீரோயின்கள் என்று ஒரு வரிசை போடலாம் என விரும்புகிறேன்.நான் சற்றே பழைய ஹிந்தி படப் பாடல்களின் ரசிகன்.ஹிந்திப் பட நாயகிகள்  கவர்ந்த அளவு பழைய தமிழ்ப் படங்களின் நாயகிகள் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.பத்மினி சரோஜா தேவி எல்லாம் அழகிகளாகவே எனக்குப் படவில்லை.பத்மினியிடம் கொஞ்சம் ஆண்மை அம்சம் தூக்கலாக இருப்பதாகக் காணலாம்.பானுமதி ஸ்டைல்.அழகல்ல.சரோஜா தேவி அந்தக் கால ஊர்வசி,அதாவது லூசுப் பெண்.அவர் காமடி நடிகையாக போய் இருக்க வேண்டியவர்.சபாஷ் மீனா போன்ற படங்களைப் பார்த்தால் புரியும்.எல்லாம் எம் ஜி ஆர் பார்த்த பார்வை.ஆனால் இன்றைக்கு வருகிற அத்தனை தமிழ்ப் படங்களிலும் நாயகிகள் ஏன் அரைக் கிராக்குகளாகவே லூசுப் பெண்களாகவே காண்பிக்கப் படுகிறார்கள் என யாராவது உளவியல் பகுப்பாய்வு செய்து சொன்னால்  நன்றாக இருக்கும்.ஆதென கீர்த்தன ஆரம்பத்திலே கருப்பு வெள்ளைப் படங்களில் வந்த சாவித்திரியை மட்டுமே நான் கொஞ்சம் அழகென்று ஒத்துக் கொள்வேன்.அதுவும் மிஸ்ஸியம்மா போன்ற படங்களில் மட்டும்.இல்லை இவர்கள் எல்லாம் அழகென்று தம் பிடிப்பவர்களுக்கு சைரா பானுவை அறிமுகப் படுத்துகிறேன்.சாய்ராவின் கண்கள் மிக அற்புதமானவை.சற்றே சோகத்தால் தலை கவிழ்ந்த தாமரை மொக்குகள் போன்ற கண்கள் ..இந்தப் பாடல்களைப் பாருங்கள்.
     

Saturday, June 4, 2011

வார்த்தை வாதை வாழ்க்கை 3

ஏறக்  குறைய ஒரு மாதமாக இணையத்திலிருந்து விடுதலை.அல்லது இணையத்துக்கு என் இம்சையிலிருந்து ....இந்த இடைப் பட்ட காலங்களில் நிறைய பிரயாணமும் புத்தக வாசிப்பும் நிகழ்ந்தன.நிறைய புத்தகங்கள் வாங்கினேன்.புகழ் பெற்ற கோயில்களுக்குப் போனேன்.போய்விட்டு தெய்வம் இருப்பது எங்கே என்று தத்துவ விசாரத்தில் இறங்கினேன்.சில மன நல மருத்துவர்களைச் சந்தித்து வழக்கம் போல அவர்களது மன நலம் குறித்து சந்தேகப் பட்டேன்.நிறைய அலைந்தேன்.அழுதேன்.சிரித்தேன்.எதையும் எழுதவில்லை.எழுத முயற்சிக்கக் கூட இல்லை.மூளையின் வயரை அதன் இணைப்பிலிருந்து பிடுங்கி விட்டாற்போல் நிம்மதியாக இருந்தது.

படித்த புத்தகங்கள்

மாதொரு பாகன் -பெருமாள் முருகன்
நெடுஞ்சாலை -கண்மணி குணசேகரன்
புருஷ வதம்-பாலகுமாரன்
அன்டன் செகாவின் சிறுகதைகள் -ரா கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பு
a million mutinies-v.s.naipaul
கன்னி-பிரான்சிஸ் கிருபா
கசாக்குகள்-டால்ஸ்டாய் [மொழிபெயர்ப்பு]
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டாம் பகுதி
பண்டைய இந்தியா -டி கோசாம்பி

வாசிப்பில்

நான் கண்டஇந்தியா -செஸ்டர் பவுல்ஸ்
சிக்கவீர ராஜேந்திரன்-மொழிபெயர்ப்பு நாவல் கன்னடத்திலிருந்து

படித்தவை பற்றி சிறு சிறு குறிப்புகள் எழுத விருப்பம்.



             **********************************************************************************************


மாதொரு பாகன் என்றதும் மூன்றாம் பாலினர் பற்றிய புத்தகமாக இருக்கக் கூடும் என முதலில் நினைத்தேன்.இது வேறு 'கருவைக் 'கொண்ட கதை.வாரிசுக்காக பிறரால் கருவாக்கப் படுவது ஒன்றும் இந்தியாவில் புதிது இல்லை.புராணங்களில் இது பற்றிய நிறைய குறிப்பு உண்டு.ஆனால் மிகச் சமீபத்திய காலம் வரை அதுவும் தமிழகத்தில் இது நடை பெற்றிருக்கிறது என்ற தகவல் தரும் அதிர்ச்சிதான் இந்த நூலின் ஆதார சரடு.வடவருடன் ஒப்பிடுகையில் [ஏன் மலையாளிகளுடன் கூட ]நம் ஆட்கள் பாலியல் விவகாரங்களில் சற்று இறுக்கம் கூடியவர்களே.நம் இலக்கியங்களில் அரவாணிகள்,ஒரு பால் உறவு,பொது மகளிர் தவிர திருமணத்துக்குப் புறம்பான காதல், லோளிடாக்கள்போன்ற சமாச்சாரங்கள் பற்றி அதிகம் காணக் கிடைக்காது. பெருமாள் முருகனின் மொழி அற்புதமாக இருக்கிறது.நகர பாவனைகள் எதுவும்அற்ற ஒரு கிராமத்துத் தம்பதியினர் இடையே உருவாகும் நெருக்கம் கோட்டோவியத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் சேர்ப்பது போல நுணுக்கமாக விவரிக்கப் பட்டிருக்கிறது.குறை என நான் கருதுவது க்ளைமாக்சை நோக்கியே மொத்த கதையும் ஆரம்பத்திலிருந்தே ஒரு ராணுவ ஒழுங்குடன் நகர்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.நாவல் என்று இதை வகைப் படுத்த இயலாது.அதற்கான பரந்த தளம் இல்லை.சற்று நீண்ட சிறுகதைதான் இது
                                 *********************************************************************


ருஷ்ய இலக்கியத்தை அணுகுகிறவர்கள் செய்யக் கூடாத தவறு என்று நான் கருதுவது முதலிலேயே டால்ச்டாயையோ டாச்டவ்ச்கியையோ படித்துவிடுவது.[அந்தத் தவறை நான் செய்தேன்]ஒருவர் காவிய எழுத்தாளர்.ஒருவர் உணர்ச்சி எழுத்தாளர்.அதன்பிறகு செகோவ் போன்ற மென் நடையாளர்களைப் படிப்பது சற்று அலுப்பாக இருக்கக் கூடும்.இது தமிழில் ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் சாருவையும் படித்து விட்டு வண்ண நிலவன் போன்றோறோரை படிக்க முயலும் போது ஏற்படும் தடுமாற்றத்தைப் போல இருக்கக் கூடும்.அவ்வாறு அலுப்பில் ஒதுக்கி வைத்திருந்த செகோவை [வேறு எதுவும் படிக்கக் கிட்டாததால்] திருப்பி படிக்கும் போது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.என்னுள் உறைந்து போய் விட்டது என்று நான் நினைத்திருந்த ஒரு நரம்பை செகோவ் உயிரூட்டி மீட்டுவதைக் கண்டேன்.நான் படித்தது என்சிபி எச் சோவியத்து ஒன்றியம் உயிரோடு இருந்த நாட்களில் ரா கிருஷ்ணையா என்பவர் மொழி பெயர்ப்பில் வெளியிட்ட ஒரு புத்தகம்.அற்புதமான மொழிபெயப்பு .

மேற் சொன்னவர்களைப் போல செகோவ் உரத்த குரலில் பேசுவதில்லை.தனக்குத் தானே தனக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கும் ஒரு கிழவனைப் போன்று மெலிய எள்ளலுடன் பாவனைகள் அற்ற தணிந்த மொழியில் மெல்ல ஏறும் விஷம் போல ஒரு குழந்தையின் விசும்பல் போல இதயத்தைப் பிசையும் கதைகள் ..தொகுப்பில் வான்கா ஆறாவது வார்டு என்ற இரண்டு கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

                 *************************************************************************
ஹிந்தி சினிமாவின் பொற்காலம் என எழுபதுகளையும் எண்பதுகளின் முற்பகுதிகளையும்நினைக்கிறேன்.குல்சார்,ஷ்யாம்பெனகல்,ரிஷிகேஷ் முகர்ஜி போன்றவர்கள் உலவிய காலகட்டம்.ஐவரி மெர்ச்சன்ட் சசி கபூர் கூட்டணி புதிய அலை சினிமாக்களை உருவாக்கிய நேரம்.அமோல் பாலகர்,தீப்தி நாவல்,நசிருதீன் ஷா ,மொஷ்மி சட்டர்ஜி,ஸ்மிதா போன்றவர்கள் நாயக நாயகிகள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல என்பது போன்ற அணுக்கத்தை ஏற்படுத்திய காலம்.குறைந்த பட்ஜெட்டில் கலைப் படங்களுக்குரிய கூர்மையுடன் அதே சமயம் எதையும் உரக்கச் சொல்லாமல் மென்மையான கதை சொல்லலில் வெற்றி பெற்ற காலம்.இந்த அலையை உடைத்து பாடாவதி காதல் கதைகளை ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகப் படுத்தி நாசம் பண்ணியதில் ஏக் துஜே கேளியேவுக்கும்ஹீரோ போன்ற படங்களுக்கும் பங்கு உண்டு.இன்றையஹிந்திசினிமாதரையிலநடப்பதில்லை.சாமாநியனுக்க்கான சினிமா இல்லை அது.சினிமாவின் மிகப் பழைய அர்த்தத்தில் பயாஸ்கோப் காண்பிக்கும் வேலையைத் தான் இன்று அது செய்கிறது.

இந்தக் கால கட்டத்தில் சஞ்சீவ் குமார் நடிப்பில் குல்சாரின் இயக்கத்தில் வந்த படம் அங்கூர்.ஷேக்ஸ்பியரின் காமடி ஒப் எரர்ஸ் கதையைத் தழுவி எடுக்கப் பட்டது.இரட்டையர்கள் பற்றிய குழப்பங்கள்தான் கதையின் விதை.ஆனால் எவ்வளவு மென்மையான யதார்த்தமான காமடி!ஒப்பிடுகையில் கிரேசி மோகன் வகை தமிழ் அபத்தங்களுக்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடு!ஒரு மோசமான மனநிலையில் இப்படத்தை யூ ட்யூபில் பார்த்தேன்.பேய்கள் தூங்கும் நள்ளிரவில்பித்தனைப்போலசிரித்துக்கொண்டேஇருந்தேன்.குல்சாருக்கு நன்றி!

.http://en.wikipedia.org/wiki/Angoor_(film)


                                             *********************************

ஸ்டீபன் கிங்கின் டார்க் டவர் என்ற நாவலில் அந்தி விழும் நேரம் தோளில் மாட்டிய வில்லோடு நாயகன் இருண்ட கோட்டையைத் தேடி போய்க் கொண்டே இருப்பான்.நெருங்கிய காடு கடந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை மார்பு வரை வளர்ந்த புற்கள்ஒரு பச்சைக் கடல் போல பரந்து கிடக்கும் வெளியில் புற்களை அளைந்து அளைந்து மிகத் தனிமையாய் போய்க் கொண்டிருப்பான்.அப்போது மிகப் பின்னால் இருந்து ஒரு காற்றலை கிளம்பி ஒரு நகரும் சுவர் போல புல்வெளியை பிரித்துக் கொண்டு அவனைக் கடந்து போவதை அற்புதமாக விவரித்திருப்பார் கிங்.அதை படிக்கையில் நான் ஏறக் குறைய ஒரு சடோரி போன்ற ஒரு உணர்வை நானே அந்த புல்வெளியில் தனித்து நடக்கும் நாயகன் போன்ற அத்வைதப் பிரமையை அடைந்தேன்.என் காதில் காற்று விஸ் விஸ் என்று பறக்கும் ஒலி கூட கேட்டது இந்த திபெத்தியப் புல்லாங்குழல் இசை ஏறக் குறைய அப்படி ஒரு உணர்வுக்கு என்னை இட்டுச் சென்றது









Thursday, June 2, 2011

கூடு வெளி


ஒரு கரிய நாளில்
அமிலத் துளி போல
திடீரென்று மேலே விழுந்து விட்ட
துரோகத்தின் துயர விஷத்தை
துளித் துளியாகப்
பருகிக் கொண்டிருந்தேன்
கவிதை ,இசை,மழலையின் குழறல்
என்று எதற்கும் செவி கொடாது
திரும்பத் திரும்ப
மரணத்தால்
நிரம்பி வழிந்து கொண்டிருந்தது
மனக் கோப்பை ...

தொலைந்த இரவுகள்
கண்களின் கீழே
கசடாய்த் தேங்க 
நம்பிக்கையின் நிறமற்ற கண்களில்
படியாது
பகல் பொழுதுகள் மடிந்தோடின..
அப்படி ஒரு பகலின்
இறுதிக் கணங்களில்தான் கவனித்தேன்.
என் ஜன்னலின் வெளியே..அதை...

ஒரு பச்சைக் குடை போல்
வெளியை எதிர்த்து
நின்றிருந்தது அது..
பூக்கும் ருதுவில்
ஒரு வேப்பமரம்...

இவ்வளவு நாளாய்
அது அங்கே
நின்றிருந்ததை
அதுவரை நான் உணர்ந்ததே இல்லை
அருகருகே ஆண்டுக் கணக்கில்
வசித்திருந்தால் கூட
எங்களுக்குள் ஒரு எளிய அறிமுகம் கூட
அதுவரை ஏன் நிகழ்ந்ததே இல்லை
என்ற வியப்புடன் 
மெதுவாய்
என் குகையில் இருந்து
ஒரு சாகப் போகிற மிருகம் போல
நடுங்கும் கால்களுடன் இறங்கி
அதன் கீழே நின்றேன்

அதன் அந்தரங்கத்தில் இருந்து
உயிர்ப்பின் ஓசை
ஒரு அலை போல
என்னை நோக்கி எழும்பிப்
பரவிக் கொண்டே இருந்தது
அப்படி ஒரு இசையை
நான் கேட்டதே இல்லை
முழுக்க முழுக்க காதலால் மட்டுமே
நிரப்பப் பட்ட இருவர்
புணரும்போது
அப்படி ஒரு இசை எழும்
என்று பின்பொருநாள்
ஒரு அறிவர் சொன்னார்.

நான் முலை நோக்கித் தாவும்
சிசு போல
அதை நோக்கி ஆர்வத்துடன் நகர்ந்தேன்


பழுப்புப் பூமியின் மேல்
ஒரு ராட்சதத் தொடை போல
தன்னை அழுத்தி நின்றிருந்த
அதன் அடிமரத்தை தொட்டேன்

என் விரல் பட்டதும்
உச்சியில் பாடிக் கொண்டிருந்த
பறவை சட்டென்று பாட்டை நிறுத்தியது
ஓடிக கொண்டிருந்த
அணில்கள் யாவும்
ஓவியம போல் உறைந்து நிற்க ,
என்றும் உயிர்ச் சக்தி குன்றாத
எறும்புகள் கூடத் தயங்கி நின்றன


ஒரு பிரபஞ்ச வெடிப்பின்
முந்திய கணம் போல
அங்கு கனத்திருந்த
மௌனத்தை உடைத்து
நான் கண்ணீர் வழிய
கரகரத்த குரலில்
''நேசிக்கிறேன்'' என்றேன்
''எல்லாவற்றையும் நேசிக்கிறேன்
எதையும் வெறுக்கவில்லை ''

என்று உரத்த குரலில் அதற்கு வாக்குறுதி அளித்தேன்


ஒரு நீண்ட நிமிடத்துக்குப் பின்பு 
பறவைகள் மீண்டும் பாடத் துவங்கின
எறும்புகள் வேகமாக நகர
அணில்கள் விடுபட்டு குதித்தோடின
இலைகள் காற்றோடு
மீண்டும் பேசத் துவங்க
மரம் ஒரு வீணை போல
மீண்டும் அதிரத் தொடங்கியது

மெல்ல அது என் விரல் வழி
என்னுள் ஏறி என்னை நிரப்பியது
பிறகு கரைத்தது
என் கூடுகள் ஒவ்வொன்றாய் வெள்ளத்தில் சரியும் கரைகள் போலக் கழன்று விழுந்தன..
.

அதன் பிறகு 
எப்போதுமே
நான் இப்பூமி மேல்
தனியனாய் உணர்ந்ததே இல்லை..

LinkWithin

Related Posts with Thumbnails