Thursday, November 11, 2010

சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்..

இன்றும் அது
நான் அலுவலகம் செல்ல
வெளிப்படுகையில்
வாசல் அருகே காத்திருந்தது
நான் சினந்து
நேற்றே உன்னை வராதே
என்றேனே எனக் கத்தினேன்
குற்றம் செய்துவிட்ட குழந்தை போல்
அது தலை குனிந்து நின்றது
நான் புறக்கணித்து
அலுவலகம் போனேன்
போன உடனே
உங்களுக்காக வெகுநேரம்
யாரோ காத்திருகிறார்கள்
என்றான் பையன்
வரவேற்பறையில் புத்தகங்கள் 
படித்துக் கொண்டு ..அதுவேதான்!
என்னை வேலை செய்ய
விட மாட்டாயா  என்று
கண்ணீர் மல்கினேன்
நான் இதற்கு சரியான
ஆள் அல்ல
என்று விளக்கிப் பார்த்தேன்
வேறு உத்தமமமான
ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
குடும்பம் வேலை ஆரோக்கியம்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
நீ சொல்வதை எல்லாம்
செய்து கொண்டிருப்பார்கள்
அவர்களைப்  பிடி என்றேன்
அது தளராமல்
'நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்
பலர் அழைக்கப் படுகிறார்கள்
சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்'
என்றது.
ஐயோ என்று
நான் ஆவேசமாகக் கத்தியதற்கு
மொத்த அலுவலகமும் ஓடி வந்தது
விபரம் அறிந்து சினமுற்றார்கள்
ஒரு மனிதனை
நல்லவிதம் வாழவிடமாட்டாயா
என்று அதனுடன் சண்டைக்குப் போனார்கள்
அது கையில் வைத்திருந்த
புத்தகங்களைக் கிழித்து
கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளினார்கள்.
அது வாசலில் ஒருகணம்
தயங்கி நின்றது
பின் தளர்வாய் நடந்து
வீதிகளில் தேய்ந்து மறைந்தது
தெரு முனையில் பைஜாமா
அணிந்த ஒருவரை அணுகி
அது ஏதோ பேசுவதை
ஜன்னலில் இருந்து கடைசியாய்க் கவனித்தேன்
 நீண்ட நாட்கள் கழித்து
என் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
மனைவி குழந்தைகளை நினைவு கூர்ந்து
பூவும் இனிப்பும்
மாலையில் வாங்கிப் போனேன்
அது வந்ததா
என்று மனைவியிடம் விசாரித்ததற்கு
எது எனறாள்.
நிம்மதியாய் உணர்ந்தேன் 
ஒரு நீண்ட கலவிக்குப் பிறகு
எல்லோரும் உறங்கிய பிறகு
கணினியைத் திறந்து
வெறுமனே அமர்ந்திருந்தேன்
சட்டென்று எழுந்து
ஜன்னல் திரை விலக்கி பார்த்தேன்
சில சமயம்
கீழே தோட்டத்து
பவழமல்லி நிழலில்
அது என் பார்வைக்காய்
ஏங்கி நின்றிருக்கும்
நிற்க வில்லை .
நான் திரும்ப கணினியின் முன்பு
கொஞ்ச நேரம் அபத்தமாய்க் காத்திருந்தேன்
அது வரவே இல்லை.
ஏனோ
கண்ணீர் பெருகி  
அழ ஆரம்பித்தேன்.

10 comments:

  1. //நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்
    பலர் அழைக்கப் படுகிறார்கள்
    சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்//

    சிலரே தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.... என்னைப்போல...

    குலுங்கி அழும் அழுகுரல் கேட்டாவது வரட்டும்... ;-)

    ReplyDelete
  2. கடைசி வரைக்கும் "அது" என்ன அப்படின்னு என் சிற்றறிவுக்கு தெரியல பாஸ்!

    ReplyDelete
  3. கடைசி வரைக்கும் அது எதுன்னு சொல்லவே இல்லயே... நல்லா இருக்கு..

    ReplyDelete
  4. 'vestiges of lateral anguish'..தொடரட்டும்.

    ReplyDelete
  5. போகன்,

    இத்தனை நாட்களாய் இந்தத் தளம் கண்ணில் பட்டுத் தொலைக்கவில்லையே என நினைத்துக் கொண்டேன். வலையில் சமீபமாய் வாசித்ததில் உங்களின் பக்கம் மிகுந்த நிறைவைத் தந்தது.

    ReplyDelete
  6. ம்ம்.. ரொம்ம்ம்ப நல்லாருக்கு... எனக்கு அலுவலகத்தில அப்ப அப்ப காத்திருக்கும்... வீட்டில நான் அதுக்குக் காத்திருக்கணும்.. =)).. உங்கள மாதிரி அழுவாச்சி வந்த நாட்களும் உண்டு..

    ReplyDelete
  7. இத்தனை நாள் ஏன் என் கண்ணில் படவில்லை இந்த தளம்...

    ReplyDelete
  8. இந்த அது எது என்று மண்டையை உடைத்து எனக்கு கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.ஆகவே இந்த அது எது என்று சொல்லிவிடுகிறேன்.பலர் அழைக்கப் படுகிறார்கள் சிலர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பது விவிலிய வாசகம்.நாம் எப்போதுமே ஒரு எலிப் பந்தயத்தில் இருக்கிறோம்.மிகச் சிலருக்கு இந்த எலிப் பத்தாயத்தில் இருந்து விடுபட சிலநேரங்களில் ஒரு அழைப்பு வருகிறது.அது எழுத்தாக இருக்கலாம்.அது ஆன்மீகமாக சமூக விடுதலையாக ஓவியமாக சிற்பமாக ஏன் செங்கல் கொத்துவதாக கூட இருக்கலாம்.ஆனால் எல்லாராலும் அந்த அழைப்பை ஏற்றுப் போய்விட முடிவதில்லை.இந்த இருத்தலியல் திண்டாட்டத்தையே இங்கு கவிதையாகச் செய்தேன்[பிரிஞ்சுதா].

    ReplyDelete
  9. :))) போகன் எனக்கு தலைப்பிலிருந்து முதல் பத்து வரிகளுக்குள்...

    //என்றான் பையன்
    வரவேற்பறையில் புத்தகங்கள்
    படித்துக் கொண்டு ..அதுவேதான்!
    என்னை வேலை செய்ய
    விட மாட்டாயா என்று
    கண்ணீர் மல்கினேன்//

    அந்த இடம் வந்ததும் வெளங்கிருச்சு. அட விடுங்கங்க, அழுத்திகிட்டு வரும் பொழுது அடிச்சி விடுங்க, முயற்சியற்ற நிலையிலதானே சிறந்த படைப்புகள் வந்து விழுகிது...

    அருமையா இருந்துச்சு குலோசிங் :)

    ReplyDelete
  10. தெகா இந்தக் கவிதை புரிலன்னு நிறைய கம்ப்ளைன்ட் வந்ததும் சந்தோசமா இருந்தேன்.நாங்களும் இலக்கியம் ஆயிட்டோம்ல அப்படின்னு...)))இப்ப புரிஞ்சுடுச்சுன்னு சொல்றீங்களே...ம்ம்...இன்னும் கொஞ்சம் கவனமா புரியாம எழுதக் கத்துக்கணும் போல...))நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails