சுஜா சுதா இரண்டு பேரும் வீல் என்று அலற விநாயகம் ''குதிச்சுட்டா குதிச்சுட்டா'' என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க நான் நெஞ்சுக்கூடு அதிர க்வார்டர்ஸ் நோக்கி ஓடினேன்.அத்தை வீட்டின் பின்னால்குத்தவைத்து துணி தேய்த்துக் கொண்டிருக்க அவளது எண்ணெய் தடவினது போன்ற முழங்கால்களை வைலெட் கலர் உள் பாவாடையை அந்த அவசரத்திலும்கவனித்தேன்.என்னைப் பார்த்ததும் அவள் சரேல் என்று சேலையை இழுத்துவிட்டுக் கொண்டு என்ன எனறாள்.விசயத்தைச் சொன்னதும் அவள் பதறி முனுசாமியை அழைத்து வரும்படி சொல்லிவிட்டு ஓடினாள்.முனுசாமி விடுமுறைநாள் மதிய உறக்கத்தில் இருந்த மொத்த பேரையும் எழுப்பிக் கொண்டு ஓடி கிணற்றை துழாவும் கொரண்டி போன்ற உபகரணங்களுடன் ஓடி வந்தான்.நாங்கள் போகும் முன்பே விநாயகத்தி சைரன் சத்தம் கேட்டு சிறு கூட்டம் கூடி இருந்தது.கிணற்றின் சிமின்ட் விளிம்பைச் சுற்றி ஒரு கூட்டம் .க்வார்ட்டர்சைச் சேராத வெளிநபர்கள் கூட நின்றிருப்பதைக் கவனித்தேன்
நான் மயக்கம் வருவது போல உணர்ந்தேன். ஏனோ சங்குவின் நினைவு வந்தது.ரூபியின் ஆடையற்ற சிவந்த உடல் கிணற்று நீரின் ஆழத்தில் நீரின் மெல்லிய முட்டலுக்கு ஒரு செடி போல அசைந்துகொண்டு கிடக்கும் ஒரு காட்சி உள்ளே தோன்றி விட்டிருந்தது.அடி வயிற்றிலிருந்து ஒரு கசப்புத் திரவம் பொங்கி வர வர வாந்தி எடுத்தேன்.
ஆனால் ரூபி சாகவில்லை.அவளுக்கு நீச்சல் தெரிந்திருந்தது.நீந்தி கேணியின் ஓரத்தில் இருந்த திண்டைப் பிடித்து ஏறி அதன் மீது அமர்ந்திருந்தாள்.சுஜா வீசிய உள்ளாடையை மட்டும் அணிந்திருந்தாள்.முழு ஆடையும் அணிந்து கொள்வதற்குள் எங்கள் கூச்சலில் கூட்டம் சேர்ந்துவிட தலை நிமிராமல் மேலிருந்து அவள் மேல் எறியப் படும் குரல்களுக்கு செவி கொடாமல் அவளது மொக்கு முலைகளை முழன்காலோடு இறுக்கி அணைத்து மறைத்தவாறு பாசி பொங்கும் கிணற்று நீர்ப் பரப்பையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..விநாயகம் கிளிப் பிள்ளை போல ''டிரஸ் எல்லாம் அவுத்துட்டு கிணத்துல குதிச்சுட்டா''என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்க அத்தை அப்படியே குறுகி கிணற்றடியில் உட்கார்ந்து அழுவதையும் பெண்கள் அவளை வட்டமாய்ச் சூழ்ந்து கொண்டு ஆறுதல் சொல்வதையும் பார்த்தேன்.பின்னொருநாள் கேரளவனம் ஒன்றில்காணிகள் வெட்டி வைத்திருந்த குழி ஒன்றில் குட்டி யானை ஒன்று விழுந்து கதற அதைச் சுற்றி பிற யானைகள் சூழ்ந்து கொள்ளும் ஒரு காட்சியை பார்க்கநேர்ந்தது.சட்டென்று அப்போது இந்தக் காட்சி ஏனோ நினைவுக்கு வந்தது..விநாயகத்தின் அம்மா அவனை நெருங்கி அதட்டி வீட்டுக்குப் போகச் சொன்னாள்
ரொம்ப ஆலோசனைக்குப் பிறகு என்ஜினீயர் சொன்னபடி முனுசாமி கொண்டுவந்த தடக் கயிற்றை அவள் பிடித்துக் கொள்ள அவனும் அவரும் சேர்ந்து அவளைத் தூக்கினார்கள்...மேலேறி வந்ததும் ஆண்கள் மெல்ல சிரிப்புடன் விலகிப் போக அவள் அங்கேயே ஆடைகளை மாற்றிக் கொள்ள அதுவரை தலை தாழ்ந்து அழுது கொண்டிருந்த அத்தை சட்டேன்று எழுந்து பக்கத்திலிருந்த வேப்ப மரத்தில் இருந்த ஒரு கொப்பை முறித்துக் கொண்டு அது வரை நான் அவளிடம் பார்த்திராத ரௌத்திரத்துடன் அவளை நோக்கிப் போனாள்..ஒரு மரத்தை உலுக்குவது போல அவள் ரூபியை சடேர் சடேரென்று அடித்துக் கொண்டே இருந்ததை யாரும் தடுக்கவில்லை.ஆனால் கடைசிவரை ரூபியின் கண்களில் ஒரு சிறு சலனம் கூட தென்படவில்லை.தூரத்தில் எதையோ வெறித்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தாள்...
அன்றிரவு நான் அத்தை வீட்டுக்கு படுக்கப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் தவித்தேன்.ஆச்சி போய் விட்டு வந்து ''அங்கே சமையல் சாப்பாடு எதுவுமே ஆனாப்பிலேயே தெரில...அந்தம்மா சாமி படத்துக்கு முன்னால முக்காடு போட்டு அழுதுட்டு இருக்கு..அந்தப் பொண்ணு முன் ரூம்ல கால் மேல காலைப் போட்டுட்டு ஒண்ணுமே நடக்காதது மாதிரி கதைப் புத்தகம் படிச்சுட்டு இருக்குது ..உடம்பெல்லாம் ஒரே ரத்தக் கோரை...மருந்து கூட போடாம..''எனறாள்.''சரி நான் கொஞ்சம் சாதம் வடிச்சுத் தாரேன் போய் சாப்பிடக் குடு என்னா ..''
''ஆச்சி நான் இன்னைக்கு இங்க படுத்துக்கறேன்''
ஆச்சி ''இன்னைக்குதான் நீ அங்க போய் படுக்கணும்.பிரச்சினைன்னு வந்தவுடனே ஓடுறவன் என்ன ஆம்பிள''என்றாள்.
நான் ஆம்பிள்ளையாகப் பிறந்ததை நொந்து கொண்டே அவள் தந்த பாத்திரங்களுடன் போனபோது ஆச்சி சொன்னது போலவே ரூபி முன்னறையில் படுத்தவாறே அவள் கிணற்றில் குதித்த அதே குட்டைப் பாவாடையோடு உள்ளாடை தெரிய கால் மேல் கால் போட்டுக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்..கால்கள் முழுவதும் வரிவரியாய் சிகப்புக் கோடுகள் கசிந்து கொண்டிருக்க முகம் வீங்கியிருந்தது.அழுதிருக்கலாம்.ஆனால் என்னைப் பார்த்ததும் காட்டிக் கொள்ளாது ';அட வந்திட்டியா கொடு கொடு ரொம்ப பசிக்குது'' என்று பாத்திரங்களைப் பிடுங்கிக் கொள்ள நான் பலவீனமாய் ''அத்தைக்கு ?''என்றேன் .;;''அவ இன்னைக்கு சாப்பிடுவான்னு எனக்குத் தோணலே..நீ வேணும்னா கேட்டுப்பாரு''
உள்ளே அத்தை இருதயத்திலிருந்து ரத்தம் சொட்டும் ஏசுவின் படத்தின் முன்பு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதன் பக்கத்திலேயே வெறும் தரையில் சுருண்டு படுத்திருக்க மெழுகுவர்த்திச் சுடர் நான் உள்ளே நுழைந்தவுடனே யார் என்று சலித்தது.
அத்தை சாப்பிட மறுத்துவிட்டாள்.அன்றிரவு முழுவதும் எழுந்து எழுந்து ஏசுவை ஏறிட்டு உள்ளேயே பேசிக் கொண்டிருந்தாள்..வல்லமை கொடு என் பிதாவே என் தேவனே என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க நான் தூங்கிவிட்டேன்.இடையில் ஒருதடவை சேர்ந்து பிரார்த்திக்க வருமாறு ரூபியைக் கூப்பிட்டு வரச் சொன்னாள்.ரூபி அதற்கு கேலியாக ''இவள்சிலுக்குத் தனத்துக்கெல்லாம் கர்த்தர் மயங்கமாட்டார்னு சொல்லு ''என்று சிரித்தாள்.[அப்போதுதான் ஜெயமாலினிக்களின் காலங்கள் முடிந்து சிலுக்குவின் காலம் தொடங்கி இருந்தது]சட்டென்று என்னை அருகே இழுத்து 'அது சரி பொம்பிளப் பிள்ளைங்க பின்னால நீங்க ஏன்டா வந்தீங்க''எனறாள் ரகசியமாக...''பார்த்திட்டில்லே.. என்னை டிரஸ் போடாம ...அதுக்குத்தானே வந்தீங்க நீயும் அந்த குண்டனும்...முதல்லியே சொல்லியிருக்கலாம் இல்லே..பார்க்கறியா இப்ப பார்க்கறியா''என்று அவளது சட்டையைக் கழற்ற ஆரம்பிக்க நான் தப்பித்து ஓடிப் போனேன்.
''அவள் வரலையாம் என்று சொன்னதும் அத்தை முகம் சுருங்கியது.மறுபடியும் யேசுவோடு பேச ஆரம்பிக்க நான் களைப்பில் உறங்கிப் போய் விட்டேன்.கனவில் அந்தக் கிணறு மீண்டும் வந்து அதில் சங்கு ரூபி இருவரும் நிர்வாணமாகக் குதித்து மிதக்க நான் மீண்டும் பின்சிகை பறக்க ஓடி அத்தையிடம் சொன்னேன்.ஆனால் அத்தையும் ஓடிவந்து அந்தக் கிணற்றுக்குள் அவளது வைலட் உள் பாவாடையைக் கழற்றிவிட்டு அவளது சொம்பு மார்புகள் துள்ள அவர்கள் பின்னால் குதித்தாள்.நான் கதறிக் கொண்டு ஓடுகையில் ஒரு உயரமான ஆள் மேல் முட்டிக் கொண்டேன்.நிமிர்ந்து பார்க்க மஞ்சள் அங்கியில் புரளும் தாடியுடன் சொட்டும் இருதயத்துடன் ஏசு நாதர் 'பாவத்தின் சம்பளம்''என்றார்.
விதிர்த்து விழித்த போது அத்தையை அருகில் காணவில்லை.மெழுகு அழுது புரண்டு அணைந்திருந்தது.ஜன்னல் வழி வரும் இரவின் சாம்பல் வெளிச்சத்துக்கு கண் பழகும்வரை நெஞ்சு அதிர காத்திருந்தேன்.சங்கு அத்தை ரூபி எல்லோருமே கிணற்றில் விழுந்துவிட்டார்கள் என்பது புத்தியில் இருந்து விலக சற்று நேரமாகியது.மெல்ல எழுந்து முன் அறைக்கு வந்தேன்.ரூபி தூங்கியிருந்தாள்.அவள் அருகில் அத்தை ஒரு நிழல் சித்திரமாய் அமர்ந்து அவளது கால் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொன்டிருந்தாள்.நான் சற்று நேரம் அவர்களையே பார்த்தவாறே நின்றிருந்தேன்
திரும்ப வந்து பாயில் படுத்தபோது ஜன்னலின் மேல் கம்பி மேல் ஒரு ஒற்றை நட்சத்திரப் புள்ளி வந்திருந்தது...
இனம் புரியாத ஒரு பரிமாணத்தைத் தொடுகிறீர்கள்.. முழுமையும் படித்தால் புலப்படும். காத்திருக்கிறேன்.
ReplyDelete'குட்டி யானை' நல்ல டச்!
வார்த்தைகளை அருமையாகக் கையாளுகிறீர்கள். இது எப்படி?
ReplyDeleteவார்த்தைகளை கையாளுவது மட்டுமல்ல... தெளிவான நடை, தொடர்ச்சியாக சுவை கெட்டாமல் உரைந்டையை கையாளும் திறன்.. என பல + உங்களிடம் உள்ளன.. இது உரைநடையில்.. கவிதை நான் பார்த்த அளவில் .. சிறப்பாக இல்லை.
ReplyDeleteஎத்தனை மனிதர்கள் !எத்தனை அனுபவங்கள் !
ReplyDeleteஅப்பாதுரை சார் இந்தக் கதையின் சாவி carl jung கின் உளவியலில் இருக்கிறது...சிக்மன்ட் பிராய்டின் உளவியல் நிரப்ப மறந்த அல்லது மறுத்த இடங்களை அவர் நிரப்பினார் என்று கருதுகிறேன்.archetypes என்று அவர் சொல்லும் ஆழ்மனப் படிமங்கள் மீது எனக்குத் தீராத ஈர்ப்பு உண்டு...நம்முடைய புராணங்கள் போன்றவற்றை ஜுங்கிய உளவியல் வழி வாசித்தால் ஆச்சர்யமான சில இடங்களை நாம் அடையலாம்..அகத்தியர் போன்ற தொன்மங்களுக்கு என்னை இட்டுச் சென்றது இதுதான்.கீழைத்தேய அறிவு மூலங்களை அணுக பிராய்டியத்தைவிட அவர் உளவியல் முறையே சரியாக இருக்கும். பிராய்டியம் தமிழில் ஓரளவு தி ஜா இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் கதைகளில் காணலம்.ஜன்கிய உளவியலை அறிந்து பயன்படுத்தியவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.வெங்கட்ராமின் காதுகளை ஓரளவு சொல்லலாம்.பாலகுமாரன் சில குறியீடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.ஆனால் அவை அவர் அறிந்து பயன்படுத்தியது அல்ல.ஆனால் அவரது வெற்றிக்கு இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.Because archetypes appeal to people very easily.
ReplyDeleteஆங்கிலத்தில் john fowls எழுதிய Magus படித்துப் பாருங்கள்.[சுஜாதா இவர் பற்றி எழுதி இருக்கிறார்]இன்னும் ஆழமான புரிதலுக்கு கதையிலேயே குறிப்ப்பிடப் படும் Golden bough உதவும்.உண்மையில் கதையின் முடிவு உங்கள் ஆழ்மனதில் அறிந்ததாகவே இருக்கும்.ஆனால் அது கடைசி அத்தியாத்தில்தான் உங்களால் புரிந்து கொள்ளப் படும் என்பதுதான் சுவராஸ்யம்!
என்னவெல்லாம் பார்த்து விட்டான்
ReplyDeleteஇந்த பையன் இந்த வயதில்!!!!!!!
விளிம்பு விவரங்கள் சராசரிப் புலனறிவுக்குள் அடங்கும் வரை சற்று சங்கடம்தான் புரிவதற்கு. படிக்கப் பிடிக்கிறது. soft rationalization செய்கிறீர்களோ என்ற சந்தேகம் வருகிறது இப்போது.
ReplyDeleteமேகஸ் படித்திருக்கிறேன். கல்லூரியில் alternate reading பிரிவில் பரிந்துரைக்கப்பட்டப் abridged version புத்தகம். திரைப்படமும் (பழைய மேகஸ்) நன்றாக இருந்தது. சென்னை நாட்களில் ப்ரிடிஷ் எம்பசியில் பார்த்த பல ஓசிப்படங்களில் ஒன்று.
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் முழுப் புத்தகத்தைத் தேடிப்படிக்கத் தோன்றுகிறது.
(சுஜாதாவின் விபரீதக் கோட்பாடுகளை மேகசுக்கு முன்னால் படித்தேன்)
சுஜாதாவின் வி.கோ வுக்கும் பௌல்ஸ் நாவலுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் பின்னாளில் பௌல்ஸ் போன்றவர்களைப் படித்த போது தோன்றிய எண்ணம்: சுஜாதா (காயத்ரி, வி.கோ, மேகத்தைத் துரத்தினவன்), ராஜேந்திரகுமார் (வணக்கத்துக்குரிய...) எல்லாருமே psychoanalysis and occult phenomenon தொட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஹிட்ச்காக் influenceம் இருப்பதாகத் தோன்றியது.
ReplyDeleteபவுல்சின் French lieutenant's woman தான் அதிகம் அறியப் பட்ட நாவல் எனினும் இதுதான் எனக்கு மிகப் பிடித்த நாவல்.படித்தபோதே நாம் எழுதினால் இது போல ஒரு intricate plot உள்ள நாவல் ஒன்றை எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.அதில் கிரேக்கப் புராணத்திலிருந்து சில பிளாட்கள் மிக புத்திசாலித்தனமாக கையாளப் பட்டிருக்கும்.இங்கு நான் நிறைய விவிலியக் குறியீடுகளைப் பயன் படுத்தி இருக்கிறேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்...உண்மையில் நான் பாதி கதையை மறை பொருளாக குறியீடுகள் மூலமாக ஏற்கனவே சொல்லிவிட்டேன்.இங்கு மேகி அத்தையின் பெயரிலேயே அவளது விதி ஒளிந்திருக்கிறது.டான் ப்ரவ்ன் எழுதிய டாவின்சி கோட் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...
ReplyDeleteஅவருடைய the collector புத்தமும் பிரபலம். (சினிமாப் படம் எடுத்தால் பிரபலம் :)
ReplyDeleteடவின்சி கோட் சுமார் தான் என்பது என் அபிப்பிராயம்.
மேகி அத்தையின் பெயரில் அவளது விதி: ம்ம்ம்.. ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே? திரும்ப முதலிலிருந்து படிக்க வைக்கிறீர்கள்.. :)
நீங்கள் புத்தகப் பிரியர் என்று தோன்றுகிறது.. நீங்கள் படிக்கும் புத்தகங்களின் ஆழம்/அகலம் பிரமிக்க வைக்கிறது.
ReplyDelete(ஒன்றிரண்டு ஆசிரியர்களைத் தவிர, மற்றவர் புத்தகங்களைப் பொதுவாக திரைப்படமாக வந்த பின்னோ அல்லது தெரிந்தவர் யாராவது சொல்லியோ அறிந்தே எனக்குப் பழக்கமாகி விட்டது)
ரூபிக்கு ஏன் அம்மாவிடம் இந்த கோபம்?
ReplyDelete