கிடக்கும்
பழங் கோயிலின்
இடிபாடுகளில்
இள முலைகள் துள்ள
தனித்துத் திரிந்த
ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன்
தனக்குப் பயமில்லை
தான் தனித்தில்லை
என்றாள் அவள்
இங்கு பறவைகள் இருக்கின்றன
என்றாள்
நூற்றுக் கணக்கில் ..
பிறகு
ஊழி வரும்வரை
உறங்க முடியாத தெய்வங்கள்
ஆயிரக் கணக்கில் ..
காலத்தில் உறைந்த விழிகளை
மூட முடியாமல்
பார்த்துக் கொண்டே இருக்கின்றன
எப்போதும்
எல்லாவற்றையும்
என்று சிரித்தாள்
அது வீசப் பட்டது போல
பெருகி
வெளியெங்கும் நிறைந்தது
அந்த சிரிப்பின்
முடிவில்
வைரம் போல் மின்னும்
இரண்டு கூர்க் கொடும்பற்களை
நான் ஒரு கணம் பார்த்தேன்
அஞ்சி
ஓவென்று அலறினேன்
அவள்
வாய் மீது விரல் வைத்து
அஞ்சாதே
என்று புன்னகைத்த பொழுது
யாரோ எய்தது போல
இளவெயில் நிறத்தில்
ஒரு பட்டாம்பூச்சி இறங்கி
அவள் உதடுகள் மேல் அமர்ந்தது .
நான் அது சிறகுகள் அசைய அசைய
மது உண்பதைப் பார்த்தேன்
அப்போது
ஒரு புத்தனின் கண்கள்
அவளிடம் இருந்தது
அல்லது
முலை கொடுக்கும் தாயின் கண்கள்
ஆனால்
ஒரு ஓவியத்தின் கண்கள்
மாற்றப் பட்டாற்போல்
சட்டென்று
அவள் கண்கள் சாய்ந்து சோம்பிற்று
எனது வெறும் கைகளைக் கண்டு
எனக்கென
ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா
உன் தோட்டத்தில்
என்று வான் நோக்கிக் கூவினாள் அவள்
அது கேட்டு
கோபுரங்கள் நடுங்கின.
பிறகு
புனல் போல் இளகும் கண்களுடன்
புகை கலைவது போல
மெலிய மழைக் கம்பிகள்
ஊடே நுழைந்து நுழைந்து
அவள் என்னை விட்டு
விலகி கருவறைக்குள் போவதை
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்
செய்வதற்று ..
ஒரே ஒரு பூ வில்
இருந்தது
அவள் சாஸ்வதம்.