Saturday, November 6, 2010

சுருதி

எப்போதும் போல
இந்தக் கவிதையின்  மறுநுனி
உங்கள் கையில் இருக்கிறது
கயிறு இழுக்கும் போட்டி போல
இது  பல சமயம் ஆகிவிடுகிறது
என்பதை அறிந்திருக்கிறேன்
பெரும்பாலும் நான்தான் துவங்குகிறேன்
ஆனால் நீங்கள்தான்
அநேகமாய் முடிக்கிறீர்கள்
கவிதைக்குள் நான் வைக்காத
கண்கள் உங்களுக்கு மட்டும்
எப்படியோ கிடைத்துவிடுகின்றன
சிலசமயம் என் உயிரிலிருந்து
பிறந்த இசையைக் கேட்காமல்
புறக்கணித்து விடுகிறீர்கள் 
பல சமயங்களில்
நான் அழுத இடத்திலெல்லாம்
நீங்கள் சிரித்து வைக்கிறீர்கள்
நான் புன்னகைத்த வரிகளில்
ஏனோ புரண்டு புரண்டு அழுகிறீர்கள்
எப்போதாவதுதான்
இருவரும் சுரம் சேரும்
கவிதை வந்து சேர்கிறது
இருவர் சுவர்களும் விழுந்து
சட்டென்று  வெளிச்சம் வந்த அறையில்
முதன் முதலாய்க் கண்டதும்
தோன்றும் வியப்பு போல
பட்டாம் பூச்சி
இறகை நிறுத்தி
மீண்டும் அசைக்கும்
ஒரு நொடிக்குள்ளாகவே 
நிகழக் கூடும்
அந்த உத்தேசத் தருணத்துக்காகவே
நீங்களும் நானும்
வேறு வேலை செய்யாமல்
தூங்காமல்
கூடாமல்
ஊடாமல்
புரட்சி செய்யாமல்
சமாதானம் பேசாமல்
கடவுளுடன் கதறாமல்
கம்யூனிசம் பண்ணாமல்
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டும்
படித்துக் கொண்டும் இருக்கிறோம்

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails