இணையத்தில் நான் எழுத ஆரம்பித்து ஏறத்தாழ ஆறு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது.அதற்குள் ஏறக் குறைய 150 இடுகைகள் எழுதிவிட்டேன் என்று திரும்பிப் பார்க்க வியப்பாக இருக்கிறது.பெரும்பாலும் கதை கட்டுரை கவிதை என்று படைப்புகள்தான்.சினிமா விமரிசனங்கள்.அறச் சீற்ற பாவனைக் கட்டுரைகள்.இலக்கிய மொக்கைகள்,இலக்கியமற்ற மொக்கைகள்,கோஷ்டி இலக்கியம் [சாரு vs ஜெமோ] இவை எதுவும் இல்லாமலே இந்த ஆறு மாத காலத்தைத் தாண்டிவிட்டதை சோனா கஞ்சிற்கு உறை அணியாமல் போய் நோயில்லாமல் தப்பி வந்து விட்டதைப் போல் ஒரு சாகசமாகவே கருதுகிறேன்.எது என்னைச் செலுத்துகிறது என்று யோசிக்க மேலும் மேலும் வியப்பே மிஞ்சுகிறது.இன்னும் நான் பிரபலம் இல்லை.என்னைத் தேடிப் படிப்பவர் சிலரே.ஆயினும் சளைக்காமல் எழுதுகிறேன்.
உண்மையில் எழுதுவது என் உடல்நிலையையும் மண நிலையையும் வெகுவாகப் பாதிக்கிறது.என்னால் எதையும் உணர்வுப் பூர்வமான ஈடுபாடு இல்லாமல் எழுத முடிவதில்லை.சில கவிதைகளை,கதை அத்தியாயங்களை யோசிக்கும் போதே தன்னை மீறி விம்மி கண்ணீர் வந்து என்னடா இது ரொம்ப டி ராஜேந்தர்த்தனமா இருக்கே என்று நானே வெட்கி இருக்கிறேன்.ஆனால் இதுவே என் நிலை.எழுதுவது என் உடல் நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.நான் எப்போது தீவிரமாக எழுத அமர்ந்தாலும் என் வயிற்று தசைகள் எல்லாம் இறுகி இரண்டு மூன்று முறை டாய்லட் போய் விடுமாறு ஆகி விடுகிறது.அடிக்கடி அங்கு போகிறேன் எனில் என் மனைவி என்ன பெரிய கவிதையா என்று கேலி செய்யும் வரை ஆகிவிட்டது.உடல் தத்துவம்,கண்ணி போன்ற சில தொடர்களை அந்தரத்தில் தொங்க விட்டிருப்பதன் காரணம் கற்பனை வறட்சியினால் அல்ல.அவை உணர்வுப் பூர்வமாக என்னை வெகுவாகப் பாதிக்கக் கூடிய அத்தியாயங்கள் ஆக இருப்பதால் தான்.இரு வாரங்களுக்கு முன்பாக அகத்தியர் அத்தியாயத்தை நடு இரவில் எழுந்து மிகுந்த படைப்பு ஊக்கத்துடன் எழுதியதில் கடுமையான வயிற்று வலி ஆகி ஒரு நாள் முழுக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன்!வலி நிவாரண ஊசிகள் எல்லாம் போட்டும் வலி குறையாததால் பயம் வந்துவிட்டது.அந்த அத்தியாயத்தில் அகத்தியரைப் பற்றி சற்று கேலியாக எழுதி இருந்ததில் அவர் எதுவும் கோபித்துக் கொண்டு விட்டாரோ என்று கிலி ஆகி குணம் அடைந்து வெளியே வந்தவுடன் சதுரகிரி வருவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்.எழுத்து எவ்வளவு அபாயங்களைக் கொண்டு வருகிறது என்று பாருங்கள்.
சுஜாதாவைப் பற்றிக் குறையாக சுஜாதா ஏன் இலக்கியம் இல்லை எனில் அவர் உணர்வு ஈடுபட்டுடன் எழுதுவதில்லை என்கிறார் ஜெயமோகன்.இதைச் சொன்ன போது அவருடன் சண்டைக்குப் போனேன்.எனக்கும் இப்போது யோசிக்க அது சரியெனத் தோன்றுகிறது.சுஜாதா மொழிவித்தகர். ஆனால் அவர் எழுத்து சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் ராணுவம் செய்யும் பேரேட் போலதான் ..அவர் அந்த மொழியை வைத்துக் கொண்டு நிஜப் போருக்குப் போகவே இல்லை .இணைய நண்பர்கள் அப்பாதுரை, ஆர் வி எஸ் எழுத்து பற்றியும் இதே கருத்து உண்டு.இவர்கள் மொழி அபாரமாக இருக்கிறது.வாழ்வை நுணுகி ஆராயும் கண் இருக்கிறது.ஆனால் அதை வைத்துக் கொண்டு இவர்கள் கொசு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.ஏன் எனத் தெரிய வில்லை.அவர்கள் இந்த உணர்வு ஈடுபாட்டை அஞ்சுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.தவறில்லை.சுஜாதாவே அப்படித்தான்.இந்த ஒரு காரணத்தினாலேயே பாலகுமாரனை அவர் எவ்வளவோ விசயங்களில் தத்தியாக இருந்தாலும் நான் விரும்புகிறேன்.மனுஷன் நெஞ்சுக் கூட்டுக்குள் கையை விட்டு உங்கள் இதயத்தைப் பிசைந்து விடுவார்.மனுஷன் எல்லா விசயத்தையும் நாபிக் கமலத்திலிருந்துதான் பீல் பன்னி எழுதுவார்.
நான் அஞ்சான்கிளாசிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.ஆனால் உண்மை அதுவே.தமிழ்வாணன் படித்துவிட்டு கிடைத்த சாணிக் காகிதங்களைப் புத்தகம் போல் சுருட்டி தொப்பியும் கண்ணாடியும் வரைந்து கெய்ரோவில் சங்கர்லால் என்று யோசித்து யோசித்து எழுதி வைத்திருந்ததை ஒரு எழுத்தறிவில்லா அ- இலக்கிய ஆடு ஒன்று தின்றுவிட்டது..அதன் பிறகு முப்பது வயது வரை ஏதாவது நான் எழுதாத நாளே இல்லை.ஆனால் ஒன்று கூட பிரசுரம் ஆகவில்லை.ஏன் எனில் ஒன்று கூட அனுப்பவில்லை!.அனுப்பாததற்கு காரணம் சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடும்.சிறு வயதிலிருந்தே எனக்குள் தபால் நிலையங்கள் வங்கிகள் போன்ற அரசு அலுவலகங்கள் மீது பெரும் அச்சம் இருந்தது.அவற்றின் மீது இன்னும் எனக்கு அச்சமும் பிரமிப்பும் உண்டு. இன்று நானே ஒரு அரசு அலுவலனாக ஆகிவிட்டாலும் கூட..மிகச் சிறு வயதிலிருந்தே நான் அதீத கூச்ச உணர்வும் தாழ்வுணர்வும் உடையவன்.என் தம்பிக்கும் இது இருக்கிறது.ஒருவேளை குடும்பத்தில் ஓடுகிறது போல.ஒரு தடவை ஆனந்த விகடனுக்கு கதை அனுப்பப் போகையில் ஸ்டாம்பு போதாது என்று அங்கிருந்த ஊழியர் ஏதோ சொல்லி விட கூனி குறுகி கண்ணீர் மல்கி நின்றது நினைவிருக்கிறது.இந்த அதீத கூச்ச உணர்வினால் என் வாழ்வில் நல்ல வேலை, காதல் என்று பல விசயங்களை இழந்திருக்கிறேன்.இந்த தொட்டால் சிணுக்கம் குறைய முப்பது வயதாயிற்று.இன்னும் முழுதாய் மாறவில்லை .இன்று உளவியலில் அது ஒரு குறைபாடாக அறியப் பட்டு சிகிச்சை முறைகள் வந்திருக்கின்றன.ஆனால் அன்று இதெல்ல்லாம் சொல்லி தெளிவாக்கிவிட ஆள் இல்லை..மனுஷ்ய புத்திரனை அவரது துவரங்குறிச்சி கட்டிலிலில் இருந்து தூக்கிவிட நண்பர்கள் வந்தது போல எனக்கும் யாரேனும் கிடைத்திருந்தால் சற்று வெளிச்சம் கிடைத்திருக்கக் கூடும்.
என்னுடைய பதட்டத்துடன் நான் போராடி வெளி வர ஏறக்குறைய முப்பது வருடம் ஆகிவிட்டது,ஆனால் இதற்குள் நான் எனது எழுத்துக் காய்ச்சலை இழந்திருந்தேன்.இது வரை எனது எழுத்தை பதின்மத்தில் சந்தித்த தோழி ஒருவர் மட்டுமே படித்திருக்கிறார்.நானும் அவளும் மாறி மாறி கவிதை எழுதி விமர்சித்துக் கொள்வோம்.புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம்.சுஜாதா எங்கள் கனவு எழுத்தாளர்.அவரது பிரிவோம் சந்திப்போம் எங்கள் கனவுப் புத்தகம்.நான் அதற்கு சினிமா ட்ரீட்மென்ட் கூட ஒன்று சுமாராய் செய்து வைத்திருந்தேன்.நாங்கள் பிரிந்து வேறு திசைகள் போனோம்.அவர் திருமணத்திற்கு அப்புறம் இசை இலக்கியம் எல்லாம் ஒரு பெண்ணுக்கு தகுதிகள் அல்ல தடைகள் என்று கண்டு கொண்டார்.இப்போது வாராந்தரிகளில் நாப்கின் விளம்பரங்கள் கூடப் படிப்பதில்லை.நெடுநாள் தொடர்பே இல்லை.போன வருடம் தீபாவளி என்று திடீர் என்று போன்.''பிரிவோம் சந்திப்போம்.பார்த்தியா''எனறாள்.நான் ட்ரீட்மென்ட் எழுதி வைத்திருந்த சுஜாதாவின் நாவல் வேறு யாரோ படமாய் எடுத்திருந்தார்கள்.அன்றைய டிவி படம் அதுதான்.மோசமில்லை.ஆனால் அது என், எங்கள் படம் இல்லை .நாங்கள் சற்று நேரம் மௌனமாய் இருந்தோம்.நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.
மிகச் சமீபத்தில்தான் இணையத்துக்கு வந்தேன்.இலவசமாகத் தராங்களே என்றுதான் எழுத ஆரம்பித்தேன்.மெல்ல மெல்ல அது என்னை ஒரு பழைய பிசாசு திரும்ப வருவது போல் பிடிப்பதை உணர்கிறேன்.எதிர்பாராத நேரங்களில் எல்லாம் அது என் உச்சியைப் பிடித்து உலுக்குகிறது.தூக்கம் இழக்கச் செய்கிறது.மனைவியோ குழந்தைகளோ பேசுவது காதில் விழாமல் காய்ச்சல் கார விழியுடன் கேளாத ராகத்தைக் கேட்கும் முயற்சியில் பாகிரதியை பேனா முனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பித்து கொண்டவன் போல் என் வீட்டிலேயே அன்னியனாகத் திரிகிறேன்.முதலில் இந்தக் கணினியை நிறுத்து என்று கூச்சலிடுகிறாள் மனைவி.சரியெனத் தோன்றினாலும் கேட்பதில்லை.ஏதோ உலக இலக்கியம் படைக்கப் போவது போல போல உண்மையிலேயே உயிரைக் கொடுத்துதான் எழுதுகிறேன்.இந்தக் கிறுக்கல்களுக்கே இத்தனைப் பாடு என்றாள் ஜெயமோகன்,சாரு போன்றவர்களை யோசிக்க மலைப்பாக இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை இது உயிரோடு கரும்பு மெசினுக்குள் போய் வருவது போல அவர்கள் தினசரி போய் வருகிறார்கள்.இத்தனை புத்தகங்களுக்கும் போன மாதம் முடிந்த இரண்டாவது பை பாசுக்கும் அப்புறம் பாலகுமாரன் இன்னும் 1500 பக்கங்கள் உடையாரின் அடுத்த பாகம் இருக்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்!
இதன் நடுவில் பாரதி ,ஷெல்லி எல்லாம் சின்ன வயதிலேயே செத்துப் போனது யதேச்சை இல்லையோ என்று வேறு ஒரு சிந்தனை.இது பைத்தியக்காரத் தனம் என்று அவ்வப்போது பின்மண்டையில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் மத்திய வயதில்.இது நான் சம்பாதிக்க வேண்டிய நேரம்.இதற்கு விழிக்கிற விழிப்பை சிந்துகிற புத்தியை பங்கு வணிகத்திலோ தொழிலிலோ செலவழித்தால் ..என்று யார் யாரோ புத்தி சொல்கிறார்கள்.அக்கறையுடன்தான் சொல்கிறார்கள்.கொஞ்சநாள் அதையும் செய்து பார்க்கிறேன்.செத்த பெண்ணைப் புணர்வது போல் இருக்கிறது.
ஆனால் கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்டினால் கூட இந்த பிசாசு பிடித்தவர்கள் நிறைய பேரைக் காணமுடிகிறது.பாரதியில் இருந்து.கைக் காசு,வாழ்நாள் எல்லாம் செலவழித்து அபிதான சிந்தாமணி எழுதிய சிங்காரவேலு முதலியார்,போலிஸ் ஆபிசில் குமாஸ்தா பணியில் இருந்து கொண்டே ஐந்து பாகத்தில் சித்த மருத்துவ அகராதியை வாழ்வு முழுவதும் எழுதி எந்த அங்கீகாரமும் பெறாது போய்ச் சேர்ந்த சாம்பசிவம் பிள்ளை போன்ற அகராதி எழுத்தாளர்கள் முதல் சி சு செல்லப்பா வரையான எத்தனையோ சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள்.வழியெங்கும் விழுந்து கிடக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மிகப் பெரிது.இன்னும் ஒரு எலும்புக்கூடாய் மாற நான் ஏன் துடிக்கிறேன் என வியக்கிறேன்.அதே சமயம் இவர்கள் பேரெல்லாம் இழுத்துப் போட்டுக் கொள்வதால் என்னுடைய எழுத்தின் தரம் பற்றிய பிரமைகள் எதுவும் எனக்கில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.நான் இப்போதுதான் மண்ணைக் கீறி இருக்கிறேன்.வலு இருந்தால் முளைத்து வருவேன்.அல்லது எத்தனையோ பழைய பேப்பர்க் கடைகளில் கிடைக்கும் எண்ணற்ற காகிதம் நிரப்பிகளில் நானும் ஒருவனாய் ஆவேன்.
சரி ரொம்ப சுய புராணமாகப் போய் விட்டது.எழுத்து,படைப்புத்திறன் பற்றி எல்லாம் ஆர்தர் கோஸ்லர் The act of creation என்று நல்ல புத்தகம் ஒன்று எழுதி இருக்கிறார்.அதில் இந்த அவஸ்தைகள் பற்றி எல்லாம் விவரித்ததை பாளையங்கோட்டை மைய நூலகத்தில் மரம் இன்னும் மணக்கும் ராட்சத மேசைகளில் சாய்ந்து கொண்டே படித்திருக்கிறேன்.எழுதி விட்டு அவனும் அகாலமாய் [தற்கொலை]செத்துப் போனான் என்றே நினைவு.இந்த எழுத்தெனும் தெய்வம் வாங்கி இருக்கும் பலிகளின் வரிசை பெரிது.on writing என்று ஸ்டீபன் கிங் அற்புதமான ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.தமிழில் எழுதுவது பற்றி ஜெமோதான் அவ்வப்போது எழுதுவார்.எழுதுவது எப்படி என்று ரா கி ரங்கராஜன் புத்தகம் எழுதி கொஞ்ச நாள் கிளாசும் எடுத்தார் என்று நினைவு.எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய புத்தகம்.
கடைசியாக ,நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் என் உயிர் போய் விட வேண்டும் என்று சிவாஜி சொன்னதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.அந்த மாதிரி போன நடிகர்கள் உண்டு.அது போல்,எழுதிக் கொண்டிருக்கும் போதே செத்துப் போன எழுத்தாளர்கள் உண்டா என்ன..அது போல் இதுவரை யாரும்செய்துவிடவில்லை எனில் சரித்திரத்தில் அந்த இடத்தை நான் முன்பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
இன்ஷா அல்லாஹ்...
உங்கள் எழுத்துக்களில் உங்கள் மனநிலையை உணர முடிகிறது. எழுதுவது ஒரு வரப் பிரசாதம். இது எல்லோருக்கும் அமைவதில்லை. நீங்கள் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். ஒரு எழுத்தாளருக்கு இது போன்ற ஒரு மனநிலை வருமா! எனக்கு இது மிகவும் வியப்பாகவும், புதிராகவும் அதே சமயம் சற்று வேதனையாகவும் இருக்கிறது. இந்த நிலை வேறு சில தாக்கத்தினாலும் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். உரிய மருத்துவரை அணுகினால் இது நிச்சயம் சரியாகிவிடும். நீங்களும் உங்கள் எழுத்து பணியை நிறைவாக செய்ய முடியும். தமிழ் இலக்கிய உலகின் சாதனையாளர்கள் பட்டியலில் நீங்களும் ஒருவராவீர்கள். என்றும், எல்லாம் நல்ல படியாக நடக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநினைத்து நினைத்து ரசித்த வரிகள்
ReplyDelete>>> சரித்திரத்தில் அந்த இடத்தை நான் முன்பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
ஆழமான உண்மை; தோண்டுவோருக்குத் தான் தெரியும்.
ReplyDelete>>>ஒரு பழைய பிசாசு திரும்ப வருவது போல் பிடிப்பதை உணர்கிறேன்.
:-) riot!
ReplyDelete>>>ஆனால் அதை வைத்துக் கொண்டு இவர்கள் கொசு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
இலக்கியம் என்றால் என்னவென்று யாருமே இது வரை விளக்கியதில்லை. சாவு மேளமும் சமுதாய சிக்கலும் எழுதினால் தான் இலக்கியமா? பெண்ணின் வயிற்றுக் குழிக்குள் விரல் வைத்து சுவைக்க நினைப்பது இலக்கியமில்லையா? இலக்கிய உடுக்கைகள் முப்பது வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப் படுகின்றன. சத்தம் மட்டும் அப்படியே தான் இருக்கிறது. கௌசல்யாவின் எழுத்தைப் படித்துப் பாருங்கள்: http://kousalya2010.blogspot.com/ - தீவிர இலக்கியம் என்று நீங்களும் கண்ணாடி மேல் கல்லெறிகிறீர்கள் என்று தோன்றும்.
ReplyDeleteபிரபலத்துக்காக எழுதுவது என்ற தூண்டுதல் கொஞ்சம் செறிக்கச் சிக்கலானதாக இருக்கிறது.
ReplyDeleteநீங்கள் ஆதர்சப்படுத்தியிருக்கும் சுஜாதா போன்றவர்கள், இணைய யுகத்தில் அத்தனை பரவலாகப் படிக்கப் பட்டிருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து. அவர் புகழில் சாணியடிக்கவில்ல, எழுத்தின் வீச்சும் தாக்கமும் இணையத்தில் மிக மிகப் பரவலாகக் காணப்படுகிறது. குமுதம் சாவியில் எழுதிய இரண்டு பக்க மார்பு விம்மலும் சில்க் வயிறும் அரை நிமிட சுய இன்பத்துக்கு இணையென்று நினைக்கிறேன். அந்த நிமிடத்தின் பரவசம் - அத்தோடு முடிந்தது. இணையம் என்பதால் மட்டுமல்ல, பரவலான வளர்ச்சியும் படிப்பவர் மனதின் இழுப்பும் வெகுவாக மாறியிருக்கின்றன. உங்கள் எழுத்தின் துணிச்சல் பிரமிக்க வைக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
பஸ்ல போட்ட பின்னூட்டத்தையே இங்கும் போடுறேன்...
ReplyDelete...ஒவ்வொரு பத்தியிலும் ஜெமோ வந்து எட்டிப்பார்த்திடுறார். உசிரு முக்கியம் உடம்பா பார்த்துக்கோங்கப்பூ... :)
இந்த பதிவிலும் உங்கள் எழுத்து நடையையும், பதிவை நீங்கள் முடித்திருக்கும் விதத்தையும் மிகவும் ரசித்தேன். உங்கள் எழுத்து பணி நல்ல நிலையில் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த எழுத்துப் பிசாசு என்னையும் போட்டு பாடாய் படுத்துகிறது. கக்கூஸ் போகும் நேரம் கூட ஏதேனும் வித்தியாசமாய் சிந்தித்து ஒன்றை நம்மாலும் எழுத முடியுமா என்று முயற்ச்சிக்கிறேன். பாடப்பாட ராகம் போல நன்றாகத் தான் இருக்கிறது. ஆனாலும் நிரம்ப எழுத வீட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் போலிருக்கிறது. மகளும், மனையாளும் ரொம்பவே அதிருப்தி அடைகிறார்கள். நான் இப்போது இணையக் கைதியாகிவிட்டேன். நான் ஒன்றும் இதிகாசமோ, இலக்கியமோ படைக்கவில்லை. இருந்தாலும் புதுத் தண்ணீர் வந்த காவிரி காலைப் பிடித்து இழுப்பது போன்று எழுத்து உள்ளே இழுக்கிறது. கரையில் இருந்து பார்த்தாலே நிறைய பெருஞ்சுழிகள் இருப்பது தெரிகிறது. இருந்தாலும் மாட்டிக் கொள்கிறேன். உங்களுக்கு செத்த பெண்ணை புணர்வது போல என்றால், எனக்கு சுயஇன்பம் பெறுவது போல. கதையோ, கவிதையோ, கட்டுரையோ நமக்குள் நாமே புதைந்து எழுதும் பொது வரும் உணர்வு அது..
ReplyDeleteபோன மாதத்தில் ஒரு நாள் இனிமேல் நான் எழுதப் போவதில்லை என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் பண்ணி சொன்னேன். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு போல மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு பல் தேய்த்து கணினி முன் அமர்ந்திருந்தேன்... எழுத ஆரம்பித்த பின்னர் சிந்தனை நேர் படுகிறது. ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கிரமாக யோசிக்க முடிகிறது. இன்னும்.. இன்னும்.......
அருமையான introspection . நேற்று இன்னொரு எழுத்தாளரிடமிருந்து எழுதுவது ஒரு வேள்வி என்று தெரிந்து பிரமித்து போனேன் .the amount of dedication they have is awesome.urs is in no way lesser to them and ur writing proves that.
ReplyDeleteஆனால் தெக்கிட்டான் சொல்வது போல உடம்பை பார்த்துங்க பாஸ் .
திரும்ப ஒரு முறை சொல்கிறேன்.அந்த கடைசி வரி அபத்தம் எல்லாம் வேணாமே ப்ளீஸ்!
but do keep writing .do i sound selfish?
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. :) :) :)
ReplyDelete!!!
ReplyDelete>>>எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய புத்தகம்.
அவ்ளோ வருத்திக்காத நாங்க எல்லாம்
ReplyDeleteகமெண்ட்’ஆவது போடலாமா ;)
தெக்கி சொன்னது தான்...டேக் கேர்!
தொடர்ந்து எழுதுங்க..
அனைவருக்கும் நன்றி.தனித் தனியாக பதில் எழுதி அது பெருகி விட்டதால் தனியாகவே இன்னொரு பதிவாய் எழுதி விடுகிறேன்.[விதி யாரை விட்டது]
ReplyDeleteகூகுல் பஸ்ஸில் ஏறித்தான் இங்கு வந்தேன். நிறுத்தம் தெரியாமல் இறங்கிவிட்டேன் போலிருக்கிறது. உங்கள் எழுத்துநடை இறங்கியதில் தவறில்லை என்று நிரூபித்துவிட்டது. பதிவு நன்றாக உள்ளது. அதன் எள்ளல் அருமை. இருந்தாலும் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் தமிழ் எழுத்தாளர்கள், எழுத்தை உணர்வாக உடலாக வாழ்வதாக “செவ்வி“-யடிக்கும் ஆட்கள் மீதான கொலைவெறி தாக்குதலாக உள்ளது. பிணத்தை புணர்தல் போன்றவை அருமை. முதல் பத்தி நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வரிகள்.. ”சோனா கஞ்சிற்கு உறை அணியாமல் போய் நோயில்லாமல் தப்பி வந்து விட்டதைப் போல் ஒரு சாகசமாகவே கருதுகிறேன்.” ஆனால் நீங்கள் போன இடத்தில் உள்ளவர்கள் நிலையையும் யோசிக்க வேண்டும். ))) எழுத்தின்மீதும் எழுத்தாளர்கள் மீதுமான உங்கள் கருத்து மற்றும் விமர்சனங்கள் உங்களை சரியான திசைநோக்கி நகர்த்தும்- உறையோடோ, உறையில்லாமலோ. )))
ReplyDeleteஎழுத்தின் Delirium மீது ஏனிந்த தாக்குதல்? பித்துநிலை என்பது எழுத்தின் ஒரு அடிப்படையான இலக்கணமும்கூட. ஆனால் எதையாவது எழுதிவிட்டு இப்படி பித்துநிலையில் எழுத்து “வெந்து“ வெளிப்பட்டதாக கூறிக்கொள்பவர்களைப் பார்த்தால் உங்களைப்போல நொந்துதான் எழுத வேண்டும். வேறு என்ன செய்ய?
பின்நவீனத்துவ “குசு“ம்பு எல்லாம் விடுகிறீர்கள். முயற்சி செய்யுங்கள் சாகித்ய அகாதமி கிடைக்காமலா போய்விடும். வாழ்த்துக்கள்.))
அன்புடன்
ஜமாலன்.
for followup....
ReplyDeleteஇன்னும் ஒரு இலக்கியவியாதியா..? பதிவுலகம் தாங்குமா..?
ReplyDeleteஇருந்தாலும் வருக, வருகவென்று வரவேற்கிறேன்..!
150 பதிவுகள் எழுதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களே.. நானும் இப்போதுதான் பார்க்கிறேன்.. வருத்தங்கள் எனக்கு..! தப்பித்தீர்கள் நீங்கள்..!
உங்களுடைய சீரான எழுத்து நடை பெரிதும் கவர்கிறது..!
வாழ்க வளமுடன்..!