Monday, May 30, 2011

உடல் தத்துவம் 17

எச்சரிக்கை -முதிர் வாசகருக்கு மட்டும் 

எச்சரிக்கை 2-பாத்திரங்கள் வெளிப் படுத்தும் அரசியல் நிலைப்பாடுகள் எழுதுபவரின் நிலைப்பாடாய் இருக்க வேண்டிய  அவசியமில்லை.

''உலகத்துல பாதி பேர்கிட்ட உள்ள பொருளை எவ்வளவு அரிதான பொருளாக்கி வைச்சிருக்கோம் பாத்தியா''என்றான் அன்வர் திரும்பி நடந்து வருகையில்.வழியெங்கும் அவனை அன்வர் பாய் ஆசுன் ஆசுன் என்று யாரேனும் விளித்துக் கூவிக் கொண்டே இருந்தார்கள்.நான் புரியாமல் ''என்ன பொருள்?''என்றேன்

''அதான் பொம்பிளைங்க சாமானைத்தான் சொல்றேன்.தங்கம் விலை அதிகம்னு சொன்னா ஒரு லாஜிக் இருக்கு.சப்ளை  கம்மி டெமான்ட் ஜாஸ்தி.சாமானுக்கு ஏன் இத்தனை டெமாண்டு?அதான் நிறைய இருக்குதே.''என்று சிரித்தான்.பிறகு படு சீரியசாய்  .''எல்லாவற்றிற்கும் பதுக்கல்தான் காரணம்''என்று சொன்னான்.கல்கத்தாவுக்கு அடிக்கடி வர நேர்வதால் கம்யூனிஸ்டுக்கள் மொழியை தவிர்க்க முடிவதில்லை என்று சொன்னான்.''பொழுது போகலைன்னா ஏதாவது ஒரு கூட்டத்துக்குப் போய் என்ன சொல்றாங்கன்னு கேட்பேன்.பெங்கால்ல இந்த மாதிரி தெரு முனைக் கூட்டங்களுக்குப் பஞ்சமே கிடையாது ''

.''பல சமயம் அவனுங்க சொல்றது சரியா இருக்கறா மாதிரியே இருக்கும் நாளைக்கே எல்லா அநியாயமும் சரியாகி ஜன்னத் பூமில இறங்கிட்டாப்பில இருக்கும்.ஆனா ஒண்ணுமே நடந்திருக்காது..ஆனா பாரு நான் பம்பாய்ல சேரில பொறந்து வளர்ந்தவன்.வறுமைன்னா என்னன்னு எனக்குத் தெரியும்.பம்பாய்ல கம்யூனிஸ்ட்டை சாமானுக்குள்ள போன பேனு மாதிரி லென்ஸ் வச்சுதான் தேடனும்.துணி பேக்டரில, பெஸ்ட் பஸ் டிப்போலன்னு கொஞ்ச பேர் சிகப்புக் கொடியோட நிப்பாங்க..அங்கியும் இப்ப பி எம் எஸ் கரன் வந்துட்டான்.அங்க எல்லாம் காங்கிரசும் மராட்டிக் கட்சிக் காரனும் தான் மராட்டி மனுஷ் காரனுக்கு வேலையே யாரெல்லாம் ஊரை விட்டு விரட்டனும்னு யோசிக்கரதுதான்.அதுல ஆரம்பிச்சு இப்ப மதத்தையும் சேர்த்துகிட்டு எங்களை நாட்டை விட்டு விரட்டனும்னு சொல்றான்.எங்க ஆளுங்க தொழில்ல கொஞ்சம் பெரிய ஆளா வந்துட்டா கூட மால் கேட்டு மிரட்டறது தரலைன்னு கடையையே ஆளோடு எரிச்சுட்டுப் போய்டறது.அப்படின்னு போகுது.அவன் தனியா ஒரு கவர்மெண்டு நடத்திகிட்டு இருக்கான்.அரசாங்கத்துக்கு வரி கட்டலைன்னாலும் பரவா இல்லை அவனுக்கு கட்டணும் சில சமயம் வரி எங்க ஆள் ரத்தமாவும் எங்க பொண்ணுங்க மானமாவும் இருக்கும்''என்றான்.

''எதிரடியா எங்க ஆளுங்களும் இப்ப அதே வேலையைப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.எங்க ஏரியாவுல ஒரு ஹிந்து காபிர் வந்து ஒரு புல்லைக் கூட விக்க முடியாது.பாகிஸ்தானுக்கா போச் சொல்றேன்னு உள்ளயே பாகிஸ்தான் கொடியை.ஏத்திகிட்டு அலையறான்.இதுதான் இன்னைக்கு பம்பாய் நிலைமை.ஒரு வகைல நாங்க இரண்டு பெரும் தலாக் சொல்ல முடியாத ஆனா எப்பவும் அடிசுசுட்டிருக்கிற புருஷன் பொஞ்சாதி மாதிரி ஆயிட்டோம்.ஆனா இதெல்லாம் மீறி கூட அங்கே கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு.ஆனா இந்த கல்கத்தா வருஷம் வருசமா அப்படியே இருக்கு.தேவடியாளுங்க கூட சடையும் பேணுமா அழுது வடிஞ்சுட்டு.என்னமோ சரியில்லை இங்கே.நியாயமா எல்லா நம்பிக்கையும் பிறக்கற இடமா இந்த பூமி இருக்கனும்.ஆனா எல்லா நம்பிக்கையும் சாகற இடமா இருக்குது ''

எனக்கு அவன் பேசும் அரசியல் தத்துவங்களில் அதிகம் மனம் நிலைக்கவில்லை.அது அவனது கேள்வி சிலுவை என்று உணர்ந்தேன்.என் கேள்வி வேறு.பொம்பிள சாமானுக்கு ஏனித்தனை கிராக்கி என்று அவன் சாதாரணமாய் கேட்டதில் உழன்று கொண்டிருந்தேன்.இந்தக் கேள்விக்குப் பதில் தேடுவதுதான் என் வாழ்வின் அடிப்படை என்பது போல்... என் பிரச்சினை உடலும் காமமும் தான் என்பதைத் தெளிவாக அந்தக் கணம்தான் உணர்ந்தேன் எனச் சொல்ல வேண்டும்.அவன் சொன்னது போல காமத்துக்கு ஏன் இத்தனை 'டிமாண்ட்?.ஒருவேளை அவனே மேலும் சொன்னது போல 'பதுக்கி வைப்பது'தான் தட்டுப்பாட்டுக்குக் காரணமா?பின்னொருநாள்  திருக்குறுங்குடியில் குரங்குச் சாமியார் என்று ஒருவரை ஒருதடவை சந்தித்தேன்.வங்கியில் மேலாளராய் இருந்தவர் திடீரென்று போட்டிருந்த சட்டையை இரண்டு ஒண்ணாச்சு இன்று என்று கூவிக் கொண்டே ஆபிஸ் நடுவே கிழித்து சாமியாராகிவிட்டார் என்று சொன்னார்கள்.அவர் ஒருதடவை இதே போல் ''அரைக் கிலோ கறி அதில கொஞ்சம் மசிரு அதுல போகுது எல்லார் உசிரு என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தார்.

ஆனால் அன்வர் துறவி அல்லவே.என் மனதுக்கு திண்டுக்கல் செல்வி ''மாதநாளில் கூட துணி சொருகுவதை யாராவது பார்க்கறான்' என்று சொன்னது நினைவு வந்தது.முதுகு சொடுக்கியது.அன்வரின் மீது கோபம் வந்தது.இவன் இங்கு எதற்கு என்னைக் கூட்டி வந்தான்?காமம் தீர்த்தலை கழிப்பறைக்குச் செல்வது போல என்னை உணரச் செய்துவிட்டான்.நான் இறுக்கத்துடன் பேசாது நடந்தேன்
''என்னாச்சு?'பேச்சையே காணோம்.'
.நான் சற்று நேரம் கழித்து ''கோழிப் பண்ணைல கூண்டு கூண்டா கோழி அடச்சுவச்ச மாதிரி ஒவ்வொரு ரூமா அடச்சு வச்சிருக்காங்க.அன்வர்''என்றேன்
அன்வர் என்னை உற்றுப் பார்த்தான்.

''பாவம் ஆயிடுச்சாக்கும்?இங்கே எல்லாமே காட்டு நியாயம்தான்.பாபு.தின்னு அல்லது தின்னப் படு.இங்கே ஒருத்தன் உயிர்வாழனும்னா இன்னொருத்தனைக் கொல்லனும்.காட்டிக் கொடுக்கணும்.அல்லது கூட்டிக் கொடுக்கணும்.உனக்கென்ன இப்ப.உங்க ஊர் பொண்ண பார்த்தவுடனே கஸ்டமயிடுச்சா...அப்ப எங்க ஊருப் பொண்ணுங்க தேவடியாளா இருந்தா பரவாயில்லையா ''என்றான் .குரலில் லேசாக கோபம் இருந்தது.''இப்ப என்ன பண்லாம்..அந்தப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ்க்கை கொடுக்கறியா.''

''அதில்லை..அந்தப் பொண்ண இந்த இடத்துல இருந்து நகர்த்திட முடியாதா .யாரோ ஒருத்தன் லவ் பண்றேன்னு ஏமாத்தி இங்க கொண்டு விட்டிருக்கான்''

''இங்க எல்லார் கதையும் அதுதான்.மத்தவங்க எல்லாம் பிறக்கும் போதே தேவடியாளாப் போகணும்னு வேண்டிக்கிட்டு இங்க வந்து சேர்ந்துட்டாங்களா என்ன ''என்று சிரித்தான்.

''அத விடு.நீ நினச்ச உடனே கூட்டிட்டு போயிடலாம்னு நினக்கரியா..வெள்ளைக் காரன் காலத்துல இருந்து நடக்குது இங்கே இது..உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கும் இந்த கச்சி.ஏறக்குறைய ஒரு ராஜாங்கம் மாதிரிதான்.ராசா மந்திரி காவலாளி உளவாளி எல்லாம் உண்டு.நீ அவளைக் கூட்டிட்டு சந்து தாண்டுறது முன்னால வெட்டிப் போட்டுடுவான்.அப்படியே நீ கூட்டிட்டுப் போயிட்டாலும் யார் கூட்டிட்டு வந்தது யாரோட வந்ததுன்னு துப்பெடுத்து வந்துடுவான்.புரியுதா.இதற்கு தீர்வு இது இல்ல.நான் இதுக்கு கூட்டிட்டு வரலை உன்னை.இந்தத் தொழில்ல தெரியாத மூலையே உனக்கு இருக்கக் கூடாதுன்னு தான் கூட்டிட்டு வந்தேன்.இந்த மாதிரி நோஞ்சான் மனச வச்சுகிட்டு இதுல ரொம்ப நாள் இருக்க முடியாது.செத்துப் போய்டுவே ''என்றான்..

நான் பேசவில்லை.அன்று இரவு முழுக்கத் தூங்காமல் புரண்டு அதிகாலை கோழி கூவும் போது உறங்கினேன்.பகல் முழுக்க உறங்கி மதியம்தான் எழுந்தேன்.

மறுநாள் மாலை அன்வர் என்னை ஹூக்ளி நதிக கரையில் புகழ்பெற்ற தக்ஷிநேச்வர் காளி கோயிலுக்கு அழைத்துச் சென்றான்.''நேத்து பண்ண பாவத்துக்குப் பரிகாரம்''என்று சிரிக்காமல் சொன்னான்.ஒருவேளை அதை உள்ளூர நம்புகிறான் போலவோ என்னவோ..

''எங்க தீன்ல பாவ மன்னிப்பு பரிகாரம் எல்லாம் கிடையாது.''என்றான்.''ஆனா பாவம் பண்ணாம எப்படி வாழறது?அதுவும் இந்தியாவுல மும்பைல தாராவில ஒரு முஸ்லிம் எப்படி பாவம் பண்ணாம வாழறது?''என்ற போது அவன் முகம் சிவந்து உதடுகள் துடித்தன.அவனை நான் அப்படி அதுவரை பார்த்ததே இல்லை.

கோயிலில் கூட்டம் இருந்தது.நவராத்திரி சமயம் ஆதலால் .எங்கு பார்த்தாலும் பஜனைகளும் மணி முழக்கமும்.''காளிமாதா கி ஜே''என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது.தலை முக்காட்டை பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு கை நிறைய வளையல்களும் நாணமுமாக.பெங்கால் பெண்கள் மதுரைப் பெண்களைப் போல கருப்பாகத் தான் இருந்தார்கள்.ஒரு மாதிரி எண்ணெய் தடவினார் போன்ற கருப்பு..நான் செல்வியை வங்காள உடையில் நினைத்துப் பார்த்தேன்.''அவனுக்கு நான் பாவாடைல இருக்கப்ப பண்ணினா தான் மூடு வரும்''என்று சொன்னது நினைவு வந்தது.

''இதுதான் ராமகிருஷ்ணர் இருந்து தேவியை தரிசம் பண்ணிய இடம்'' என்று ஒரு முதியவர் சொன்னார்

.''ராமகிருஷ்ணர் ஒரு சாது.விவேகானந்தரின் குரு.விவேகானந்தர் ...'என்று அன்வர் விளக்க முற்பட நான் அவனைக் கடுமையாக பார்த்தேன்.''இது கூட எனக்குத் தெரியாது என நினைக்கிறாயா?உண்மையில் உனக்குத் தெரிந்ததுதான் ஆச்சர்யம்''என்றேன்.அவன் இகழ்ச்சியான குரலில் ''ஒரு ஆச்சரியமும் இல்லை.அல்லாவையும் நபியையும் விட விநாயகரையும் ராமனையும் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்.தெரிந்தாக வேண்டும்.உயிர்ப் பிரச்சினை பாபு.மதராசில் பிறந்த உனக்குப் புரியாது''

அதுவரை அருகில் மௌனமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அந்த முதியவர் வறண்ட நிலத்தின் வெடிப்புகள் போன்ற அவரது முகத்தில் இடுங்கிய கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நெருங்கி வந்து ''ஆமி சாது''என்றார்.பின்னர் கை நீட்டி ''பக்ஷீஷ்''என்றார்.அன்வர் ''அதானே பார்த்தேன்''என்று சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக் கையில் வைத்து ''ஜா என்றான்.'

'பெங்கால்ல நவராத்திரி ரொம்ப பெரிசா இருக்கும்.பம்பாய்ல தீபாவளி மாதிரி.ஜனங்கள் செலவழிக்கத் தயங்க மாட்டாங்க.தான தர்மமும் பெரிசு பெரிசா நடக்கும்.எல்லா இடத்திலையும் நல்ல வியாபாரம் நடக்கும்.''என்றான்''பிறகு மெதுவாக ''சோனா கச்சியில கூட ''

நான் சட்டென்று பின்னந்தலையில் இரும்புத் தடியால் தாக்கப் பட்டவன் போல நிலை குலைந்தேன்.அந்த வாக்கியம் என்னைப் புரட்டிப் போட்டுவிட்டது.உதறிக் கொண்டு எதிரே நின்றிருந்த காளியை உற்றுப் பார்த்தேன்.அவள் மேல் பூக்கள் விழுந்து கொண்டே இருந்தன.அவளது நாக்கு ரத்தச் சிகப்பாய் இருக்க அவள் கண்கள் என் மீது படிந்து கிடப்பது போன்றொரு பிரமை எழுந்தது.வங்காளத்தில் காளியே பெரும் தெய்வம்.கல்கத்தா என்ற பெயரே அவளால் வந்தது.ஆனால் அவள் இருக்கும் அதே ஊரில்தான் உலகின் பெரிய பெண் சந்தையும் இருக்கிறது.இங்கு அவள் மீது மலர் மாலைகள் ஒவ்வொன்றாய் விழுந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் அங்கே இன்னும் வயதுக்கு வராத பெண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளில் கூட ஆண் குறிகள் நுழைக்கப் பட்டுக் கொண்டே இருகின்றன..!இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் ஏன் அண்டை நாடுகளில் இருந்தும் பெண்கள் மாடுகளைப் போல வாங்கப் பட்டும் விற்கப் பட்டும் காளியைக் கொண்டாடும் கல்கத்தாவுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள் அதுவும் நவராத்திரி நாட்களில் அதிகமாக!.

உண்மையில் நேரு சொல்லும் வேற்றுமையில் ஒற்றுமையை நீங்கள் கல்கத்தாவின் சோனா கச்சியில்தான் பார்க்கலாம்.எத்தனை விதம் விதமான பெண்கள்.எல்லா பிராயத்திலும் எல்லா அளவுகளிலும்.'ஆனால் எல்லாம் ஒரே காரியத்திற்காக.ஒரு தசைத் துண்டு இன்னொரு தசைக் குழியில் நுழைவதற்காக!

எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.கிழவன் ஒரு ரூபாயுடன் திருப்தி அடையாமல் என்னையும் அணுகி ''சாது.பக்ஷீஷ்''என்றான்.கொட்டுச் சத்தங்கள் அதிகரிக்க இரைச்சல் மிகுந்தது.அவன் என் முகத்துக்கு அருகே கை நீட்டி மறுபடி ''பைசா''என்றான்..அன்வர் கோபமடைந்து 'ஜா''என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.அவன் மண்ணில் விழுந்து உதட்டை வெட்டிக் கொண்டான்.மெலிதாக ரத்தம் கசியும் வாயுடன் தடுமாறி எழுந்தான்.   கோபத்துடன் அன்வர் கொடுத்த ரூபாயை அவன் மீதே வீசினான்,கோயிலில் மணி ஓசை உச்ச கட்டத்தை அடைந்தது. ''காளி மாதா கி ஜே'என்ற கோஷம் விண்ணை முட்டியது.
.'

Sunday, May 29, 2011

தேவி


எதையோ தேடியாரோ அழைத்தது போல்திடீரென்று கிளம்பி
நான் அங்கு சென்றேன்
ஏறத்தாழ ஐந்து மணி நேரம்
செங்குத்துமலை பாதையில்
மூச்சு சிதற நடை..

போன பொழுதில்
அந்திபகலின் பாவாடை விளிம்பில்
நீலச் சரிகையைப் பின்னிக் கொண்டிருந்தது மஞ்சள் வெளிச்சம் பழுக்கத் துவங்கியிருக்க  கொழுத்த பசுக்கள்
அன்றைய தினத்தின்
கடைசிப் புற்களை
மேய்ந்து கொண்டிருந்தன
கடைகளில் சிறு பெண்கள்
மணிகள் கிணுகிணுப்பது  போல 
தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்

யாரும் என்னைக் கவனிக்கவே இல்லை
கோயில் திறந்தே கிடந்தது
மினுங்கும் விளக்குகள்
நடுவே மிகத்
தனியாய் தேவி
நின்று கொண்டிருந்தாள்
அவள் கண்கள்
இரு எண்ணெய்த் துளிகள் போல
என்னை நோக்கி ஒளிர்ந்து வந்தன
தூரத்தில் கல் மண்டபங்களின் ஆழங்களில்
குரல்கள் எதிரொலித்தன
ஒரு குடம்
தண்ணீருக்குள் அமிழ்வது போன்ற சத்தங்கள் ..
குரலுக்கு உடையவர்கள்
அருகில் வர நான் காத்திருந்தேன்

காத்திருக்கையில்
சுற்றிலும் நிழல்கள்
வேகமாக வளர்ந்து வந்தன
கல் தூண்கள்
மூச்சு விடுவது போல விம்மின
வௌவால்கள் மௌனப் படம் போல
தூண்கள் மாற்றி மாற்றி அமர்ந்தன
குரல்கள் நெருங்கி விலகி
நெருங்கி விலகிச் சென்றன
தூபத்தின் வாசனை சட்டென்று
பெருகி
கருவறையை நிறைத்தது
இருள் இன்னும் திரண்டு 
தீபங்கள் இன்னும் கூர்ந்தன
 ஆயிரம் கண்கள்
என்னைப் பார்ப்பது போல் உணர்ந்தேன்
யுகம் யுகமாய்
அங்கேயே நிற்கும் சிற்பங்களின் கண்கள்...

இப்போது சட்டென்று
குரல்கள் யாவும் நின்றுவிட்டன
ஒரு கம்பளிப் போர்வை போல
கனத்த மௌனம் அங்கே நிறைந்தது
என் பின்னமுதுகில்
வியர்வைத் துளி ஒன்று புறப்பட்டு
உருண்டு உருண்டு இறங்கியது
உள்ளிருந்து யாரோ ஒரு பெண்
கிளுகிளுத்துச் சிரிக்கும் சப்தம் கேட்டது
கூடவே இசையாய்
தளும்பும் சலங்கை ..
யாரோ துருத்தி போல் மூச்சுவிடும் ஓசை  கிளம்பி பிரகாரத்தில் அலைந்தது 
நான் 'எல்லாம் பிரமை'
என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கருவறையில் தேவியின்
கல்முலைகள்
ஒருகணம்
உயர்ந்து தாழ்ந்தது
பீடத்திலிருந்து பூமி வெடித்தார் போல்  பெரும் ஒலியுடன் அவளிறங்கி வர ஆரம்பித்தாள்

அச்சத்துடன் நான்
பின்வாங்க முயன்ற போதே
உணர்ந்தேன்.
என் கால்கள்
இரண்டும்
நின்ற இடத்தில் வேர்விட்டு
கல்லாய் இறுகி இருந்தன
என் முதுகுத் துளி வேர்வை
கூட கல்பூவாய்
உறைந்திருந்தது

அங்கிருந்த ஆயிரம் சிலைகளுடன்
நானும் ஒரு சிலையாய்
மாறியிருப்பதை ..
நான் உணர்ந்த போது
நேரம் கடந்துவிட்டிருந்தது.

Friday, May 27, 2011

யட்சி


இன்னமும் இருட்டு
பிசுபிசுக்கும்
விடிகாலைக் கருக்கலில்
சுனை நீரில் நாகம் போலே
சத்தமின்றி
தெருக்களில் நழுவி
ஆற்றுக்குப் போனேன்

குளிரில் நடுங்கும்
வடக்கு நட்சத்திரத்தையும்
வழுக்கும் படிகளையும்
தவிர அங்கு
யாருமில்லை
கால்நுனியைத் தின்னப் பார்க்கும்
கருத்த மீன்களை விலக்கி
நீராலான சுவர் போல
தூங்கிக் கிடந்த நதியினுள்
ஆழத் தோண்டும்
ஆராய்ச்சியாளன் போல
குனிந்தபோதே
அவளைப் பார்த்தேன்

இன்னுமொரு சருமம் போல
போர்த்தியிருந்து
வெள்ளைத் துண்டைதவிரக்
அவளது கருத்த முலைக் குன்றுகள் மேல்
எதுவும் அணிந்திருக்கவில்லை
முலை வடிந்திறங்கிய
அந்த இடத்தில்
குழிந்த சுழலில் இருந்து
அவள் மதனம்
காட்டருவி போல்
பெருகி பெருகிவந்து
நதியோடு கலந்து கொண்டே இருந்தது
நதி முழுக்க
நசுங்கிய மல்லிப் பூக்களைப் போல்
அது மணத்தது
விடி வெள்ளிக்கு முன்பே
தினமும்
பாலை மரத்திலிருந்து
இறங்கிக் குளிக்கும்
மனிதர்கள் பார்க்கக் கூடாத
யட்சி அவள் என்று அறிந்தேன் நான்
அச்சத்தின் குளிரையும் மீறி
காமத்தின் வெம்மை
என்னுள் தணலாய் எழுந்தது
என்னையும் மீறி
ஒரு கூரிய அம்பு போல்
என் குறி எழுந்து
அவளை நோக்கி
நீந்திச் சென்றது

காமத்தின் தொடுகை
அறிந்து திரும்பினாள் அவள்
அரத்தால் அறுத்துக் கட்டியது
போன்ற கண்கள்
புதிதாய் திறந்த
புண் போன்ற செவ்விதழ்கள்
அடியில் மினுங்கும்
வாள்போன்ற பற்கள்...

அவள் என் காமம் கண்டு
புகையும் எரிகாட்டில் அலையும்
கூகையைப் போன்று
எட்டுத் திக்கும்
எதிரொலிக்க நகைத்தாள்

''ஓராயிரம் சலிப்பான
நாட்களும் இரவுகளும்,
உக்கிரமாய் உடலின்
கடைசி அணு  வரை
வாழும் ஒரு இரவும்...
எது வேண்டும்
நீயே தேர்ந்தெடு ''என்று உத்தரவிட்டாள்

நான் யோசிக்கும் போதே
அவளது ஒற்றை ஆடையையும்
அலை பிடித்திழுத்துப்
பசியுடன் தின்றது

கருத்த வெண்ணை போலே
நிலவொளியில் மினுங்கும் அவள் உடல்,
கல்லுரளி போன்று
முரணும் அவள் முலைகள்,
கருஞ்சுழியாய்க் காலத்துக்குள்
கரைந்து கரைந்து போகும்
அவள் யோனி
எல்லாவற்றையும்
நான் பார்த்து பார்த்து
ஒரு யுகம் போலே நின்றேன்
பிறகு நீண்டதொரு
பெருமூச்சுடன்
''ஓர் இரவு''என்றேன்

Thursday, May 26, 2011

பொன்னியின் செல்வன்


நள்ளிரவில்
ராஜராஜச் சோழனை
என் கட்டிலின் காலருகே
சத்தியமாக நான் எதிர்பார்த்திருக்கவில்லை
பதறி எழுந்து உற்றுப் பார்த்தேன்
அவரேதான்


முகத்தில் சரித்திரத்தின்
சுமை வரிவரியாகத் தெரிந்தது
உடைகள் முழுக்க
காலத்தின் புழுதி படிந்திருக்க
கண்கள் அழுக்கடைந்த
வைரங்கள் போலிருந்தன

ஏனென்று விசாரித்தேன்
நான் எழுதப் போகும்
புதிய சரித்திர நாவலிடமிருந்து
தயவு செய்து
தன்னை விடுவித்துவிடும்படி
கேட்டுக் கொள்ளவே
தான் வந்திருப்பதாக
அவர் சொன்னார்.
உங்களால்தான் ஆயிரம் வருடங்களாக
நான் இதைத் தூக்கிக் கொண்டே அலைகிறேன்
என்று அவர் தனது உடைவாளைக் காண்பித்தார்.
[அதன் முனையில்
இன்னமும் பாண்டியர்களின் ரத்தம் காயாது இருந்தது ]

நான் தூங்கி ஆயிரம் வருடமாகிவிட்டது என்றார்
பெரிய கோயிலின் அத்தனை
இருட்டு மூலைகளிலும்
வவ்வால்களோடு வவ்வாலாக
தானும் தலை கீழாகத் தொங்குவதாக
விசனத்துடன் குறிப்பிட்டார்
தன்னுடன் குந்தவையும் நந்தினியும் கூட
சரித்திரத்தைச் சுமந்து கொண்டு
தஞ்சையின் சாலைகளில்
உறக்கமின்றி அலைந்து கொண்டே
இருப்பதாகச் சொன்னார்
பழையாறைக்கும் தஞ்சைக்கும்
நடுவில் இருந்த ராஜ பாட்டையில்
ஒவ்வொரு இரவும்ஒற்றர்களைத் துரத்திக் கொண்டு ஓடி ஓடி
நான் மட்டுமல்ல
எனது குதிரையும் களைத்துவிட்டது என்றார்
சோர்வாய் ..

மரணமின்மை அப்படி ஒன்றும்
பொறாமைப் படக் கூடிய
விஷயம் இல்லை என்று விளக்கினார்
ஏசுவோ கிருஷ்ணனோ
தெய்வமோ மனிதனோ
சோழனோ பாண்டியனோ
எல்லோருமே ஒருநாள்
மரித்துவிடுவது நல்லது என்றும் உபதேசித்தார்
செத்துப் போனவர்களை உயிர்ப்பது பாவம் என்றார் 
இதை தான் உணர்வதற்குள்
கல்கி பொன்னியின் செல்வனை எழுதிவிட்டார்
என்று வருத்தம் அடைந்தார்
குறைந்த பட்சம்
பால குமாரனிடமாவது
நான் இதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கவேண்டும்
முடியவில்லை
இப்போது உங்களிடம் கேட்கிறேன்
தயவுசெய்து விட்டுவிடுங்கள்
என்று கை கூப்பியபோது நான் பரிதாபப் பட்டேன்
ஆனால் தேவரே
நிலைமை கை மீறிவிட்டது
இப்போது நீங்கள்
மணி ரத்தினத்திடமும்
ஜெயமோகனிடமும் வேறு
அகப் பட்டுவிட்டீர்கள்
நான் விட்டாலும்
அவர்கள் விட மாட்டார்கள்
என்று நான் சொன்னபோது
அவர் முகம் சட்டென்று வெளுத்தது
ஐயோ அவர்களா
இன்னும் ஒரு நூறுவருடங்களுக்கு எனக்கு விடுதலையே கிடையாதா
என்ற பெரிய கூச்சலுடன்
அணைந்த விளக்கிலிருந்து பிரியும்
புகை போல அலறிய படி மறைந்தார்
அவர் போன பிறகும்
கொஞ்ச நேரம்
அவரது குதிரையின் குளம்படிகள்
மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது
நான் நல்லிரவு
என்று பின்னால் கத்தியதை
அவர் கேட்டிருப்பார் என தோன்றவில்லை

Monday, May 23, 2011

கண்ணி 7

எச்சரிக்கை-முதிர்வாசகருக்கு மட்டும்



பாம்புச் சாமி என்றழைக்கப் பட்ட அந்த மனிதரை அன்றுதான் அப்படிதான் என் வாழ்வில் முதன் முறையாகச் சந்தித்தேன்.நம் வாழ்வில் சில மனிதர்களின் வருகை ஒரு திறப்பாய் அமைகிறது.சிலர் பெருவெடிப்பு போல நிகழ்ந்து நம் வாழ்வை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார்கள்.சிலர் மென்விஷம் போல உதிரத்தில்கொஞ்சம் கொஞ்சமாக கலந்து நாம் அறியாமலே வாழ்வு பற்றிய பார்வையை மாற்றுகிறார்கள்.எல்லாருமே இப்படி ஒரு மனிதருக்காய் ஆழ்மனதில் காத்திருக்கிறோம்.நம் பாலியல் இணை எப்படி இருக்கவேண்டும் என்று நமக்குள் இருக்கும் ஒரு மனச் சித்திரம் போல இப்படியான ஒரு ஆசிரியருக்குமான ஒரு சித்திரம் நமக்குள் இருக்கிறது.அந்தச் சித்திரத்துக்கு சற்றே அருகில் வரக் கூடிய ஒருவரைக் கண்டால் கூட நம்மை செலுத்தக் கூடிய அத்தனை விசைகளும் பூதங்களும் விழித்துக் கொண்டு அவர் பின்னால் ஓடுகிறது.


பாம்புச் சாமியின் உண்மையான பெயர் எனக்கு கடைசிவரை தெரியாது.சில தடவை கேட்ட பொது ''செத்ததுக்கு எல்லாம் ஒரே பேர்தான் ..பொணம்.வேணும்னா என்னை பொனம்னு கூப்பிட்டுக்க''என்றார்.சுற்றி இருந்த மற்றவர்களைப் போல ஒரு பிச்சைக் காரர் மட்டுமே அல்ல அவர் என்று முதலிலேயே தெரிந்துவிட்டது எனக்கு.ஆனால் நான் அவ்விதம் தெரிந்து கொண்டதை அவர் வெறுத்தார்.சில முறைகள் என்னை கடுஞ்சொற்களால் தன்னைப் பார்க்க வரக் கூடாதென்று விரட்டி இருக்கிறார்.''இங்கே அவுத்துப் போட்டு ஆடுரான்னா வந்து  வந்து நிக்கே''என்று ஒருதடவை சொன்னார்.

நெல்லையப்பர் கோயில் வாசலில் இல்லாத தருணங்களில் எல்லாம் கருப்பன் துறையில்  சென்று உட்கார்ந்திருப்பார்.கருப்பந்துறை  அந்தப் பகுதியின் சுடுகாடு.அங்குள்ள வெட்டியானுக்கு பிணத்தை எரிக்க உதவி செய்வார்.அவன் கொஞ்சம் காசு கொடுப்பான்.அந்தக் காசுக்கு எல்லாம் அவல் பொரி வாங்கி படித்துறையில் எல்லா மீன்களுக்கும் போட்டு விடுவார்.ஒரு நாள் அந்தியில் மண்டப இருளில் ஆற்றிற்கு குளிக்க வந்த பெண்ணிடம் அவளது மாதவிலக்குத் துணி கிடைக்குமா என்று கேட்டு அந்தப் பெண் அலறி ஊரைக் கூட்டி கொஞ்சம் பிரச்சினையாகி விட்டது.


அதைப் போய் அந்தப் பெண்ணிடம் ஏன் கேட்டார் என்று கேட்டதற்கு பதில் சொல்லாது சிரித்தார்.பிறகொரு நாள் ''உனக்கு பெட்ரோல் வாசம் பிடிக்குமா''
என்றார்.நான் இல்லியே என்றேன்.''சிலருக்குப் பிடிக்கும் பெட்ரோல் வாசம் டீசல் வாசம் இதெல்லாம் துணில நனைச்சு வச்சுகிட்டு மோந்து மோந்து பார்பாங்க..அத மாதிரி எனக்கு ரத்த வாசனைபிடிக்கும் அப்படின்னு வச்சுக்கோயேன்.அதுவும் தீட்டு ரத்தம்னா ரொம்ப பிடிக்கும்''என்று விட்டு 

''சென்பவப் பூ வாசம்
பால் முலைப்   பசு வாசம்
சீவனை சிவத்தில்  ஏத்தும்
சின்னப் பொண்ணின் சினைப் பூ வாசம்''

என்று பாடினார்.பன்றி போல முகத்தை வைத்துக் கொண்டு காற்றை மோந்து மோந்து காண்பித்தார்.''வராக மூர்த்தி''என்றார்.சுற்றி உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.''இங்க பாரு இங்க உள்ளவங்கள எல்லாம் சாதாரணமா நெனச்சுக்காத இதோ இவளைப் பாரு''என்று பக்கத்தில் பரட்டைத் தலையும் சிரங்குமாய் இருந்த பெண்ணைப் பார்த்து ''இவ போன பிறவில சோழ தேசத்தில பெரிய தாசியாக்கும்.இவ சாமான ஒரு தடவைப் பார்த்தா போதும்னு ராஜாக்கள் எல்லாம் தவம் கிடந்தாங்க ''என அந்தப் பெண் வெட்கி ''போ சாமி அப்புறம் ''என்று சிரித்தாள்.
''ஆன்னா இப்பப் பாரு ..சாமான மோந்து பார்த்த நாயி செத்துப் போயிடும்''என அவள் கோபப் பட்டு எழுந்து போக அவளையே  பார்த்துக் கொண்டு ''அம்பாளோ அவிசாரியோ  பொம்பளைங்க எல்லாம் ஒரு வார்ப்புத்தான் ''என்றார்.''மகிசாசூரன் எப்படி செத்தாங்கே ?அம்பாளோட சாமானைப் பார்த்தே தீருவேன்னு ஒத்தக் கால்ல நின்னான்.செத்துப் போனான்.இததான் சண்டைல செத்தவனை விட புண்டைல செத்தவன் அதிகம்னு சொல்றது ''


அவ்வப்போது அவரை யாராவது பாம்பு பிடிக்க அழைத்துப் போவார்கள்.அவருக்கு பாம்புகள் மேல் அலாதியான பிரியம் இருந்தது.பிரியம் மட்டுமல்ல அவர் சொல்படி அவை கேட்டன.பூனைக் குட்டிகளோ நாய்க் குட்டிகளோ வளர்ப்பவர்கள் மேல் வாஞ்சையுடன் உரசுவது போல அவை அவரோடு இழைந்து கிடப்பதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன்.எண்பதுகளில் தாமிர பரணியில் அடிக்கடி வரும் வெள்ளம் பொதிகை  மலையில்  இருந்து விதம் விதமான பாம்புகளைத் தாழ்வான இடங்களுக்கு அடித்து வருவது வழக்கமாய் இருந்தது.அவ்வாறு வரும் பாம்புகள் திடீர் திடீரென்று கரையோர வீடுகளுக்கும் அரசாங்க அலுவலகங்களுக்குள்ளும் ஏறி தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.ஒரு தடவை கலக்டர் ஆபிசிலேயே ஒரு பாம்பு அவர் அறை  வரை மனு கொடுக்கப் போய்  விட சாமிக்கு அவசர அழைப்பு வந்து ஜீப்பில் அழைத்துப் போனார்கள்.அவர் அதைப் பிடித்து காட்டில் விட்டுவிட்டார்.வவுச்சரில் விஷப் பாம்பை பிடித்த வகைக்காக என கையெழுத்து வாங்கி ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள்.திரும்பி வரும்போது பஸ்ஸில் போய்க்கொள் என்பது போல சொல்லிவிட  அடுத்த தடவை பாம்பு வந்த போது  அவர் பிடிவாதமாக மறுத்தார்.கடைசியில் திரும்பவும் ஜீப்பில் கொண்டு விடுகிறேன் என்று  தாசில்தார் வந்து 'வவுச்சர்'' எழுதிக் கையெழுத்து போட்ட பிறகுதான் போனார்.

அவர் பாம்பு பிடிக்கும் விதம் வித்தியாசனமது.மகுடி எல்லாம் ஊதிப் பிடிப்பதில்லைஅவர்.அதெல்லாம் ஒரு ப்டம்டே என்று சொல்லிட்டார்.பெரும்பாலும் வாசனை மூலமாகத்தான் கண்டு பிடிப்பார்.''ஒவ்வொரு வகைப் பாம்புக்கும் ஒவ்வொரு வாசனை இருக்குடே.நல்ல பாம்பு அழுகின செம்பவப் பூ வசம் அடிக்கும்.சாரை உளுந்து அப்பளம் வாசம் அடிக்கும்.விரியனுக்கு காரக் குழம்பு வாசம்'' எனபார். அவர் கூடவே அலைந்தாலும் எனக்கு  எந்த வாசனையும் அடித்ததில்லை ''உனக்கு மூலம் நிறைய பாசி அடச்சுருக்கு,அப்பப்ப சாக்கடையக் குத்திவிட்டிருகனும் ''என்பார் எனக்குப் புரியாது.

நமக்கு ஒவ்வொரு ஊரிலும் சொந்த காரர்கள் இருப்பது போல அவருக்கு ஒவ்வோர் இடத்திலும் பாம்பு நண்பர்கள் இருந்தார்கள்.திடீரென்று நினைத்துக் கொண்டார் போல கால்நடையாக அவர்களைத் தேடிப் போய் விடுவார்.ஒவ்வொரு பாம்புக்கும் தனித் தனியாக பெயர் வேறு வைத்திருந்தார். பெரும்பாலும் பாழடைந்த கோயில்களில் கட்டிடங்களில் அவர்கள் குடி இருந்தார்கள்.அங்கெல்லாம் போய்  அவர்களைப் பெயர் சொல்லியே கூப்பிடுவார்.கூடவே வினோதமான தாளத்துடன் நடனமாடுவது போல கால்களால் தரையைத் தட்ட அதுவரை செடி கொடிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் சட்டென்று உயிர்பெற்று நெளிந்து அவரருகே வருவதைப் பார்த்து அரண்டு போ இருக்கிறேன்.மனிதர்கள் போலவே பாம்புகளும் வெவ்வேறு குணமுடையவர்கள் உண்டு.என்பார்.அம்பாசமுத்திரம் அருகே சாட்டப்  பத்து என்ற ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் ஒரு பாம்பு இவர் போனதுமே சீறி வந்தது.புஸ் புஸ் என்று படம் எடுத்துக் கொண்டு ஒரு ஆங்காரமான பெண் போல இவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.தன நாக்கை அவர் முகத்தின் மீது மோதி மோதி சத்தமிட்டது .அவர் சிரித்துக் கொண்டே அஞ்சி ஒடுங்கி அமைந்திருந்த என்னிடம் ''முத்துறா''என்றார்.''இவ இப்படித்தான் மலையாளப் பொண்ணு மாதிரி .அடக்கம் கிடையாது ''என்ற படியே அதனுடன் விளையாடினர்.அதன் தலையைத் தட்டத் தட்ட அது புஸ் புஸ் என்று சீறிக் கொண்டே இருந்தது..சுமார் ஒரு மணி நேரம்வரை ஒரு தேர்ந்த பாலே நடன இணை போல அவர்கள் இருவரும் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.

பாம்புகள் போலவே பெண்களுடனான அவரது உறவும் சற்று சிக்கலானதுதான்.எல்லா ஊரிலும்  அவரைத் தேடி வந்து பெண்கள் பார்த்தார்கள்.கல்லத்தி முடுக்கில் இருந்து நாற்பது வயது மதிக்கத் தக்க ஒரு செட்டியார்ப் பெண்மணி அவரை அடிக்கடி  வந்து பார்ப்பாள்.பெரும்பாலும் சந்தியில் கோயில் நடை அடைக்கும் சமயங்களில் வருவாள்.இவரைப் பார்த்து ''சாமி ஒரு நாள் வீட்டுக்கு வரணும்''என்று கும்பிடுவாள்.இவர் பெரும்பாலும் போ போ என்று விரட்டி விடுவார்.

ஒரு நாள் அவர் விரும்பிக் கேட்டாரென  ஜங்சன்  வரை போய் ஜன்னத் ஓட்டலில் பீப் வறுவல் வாங்கிக் கொடுத்தேன்.சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தவர் திடீரென்று எழுந்து ''வா போயி ஒரு உசிரக் காப்பத்துவோம்''என்று விருட்டென்று எழுந்தார்.விடுவிடுவென்று பார்வதி தியேட்டர் வழியாக கல்லத்தி  முடுக்கில்  நுழைந்தார்.ஒரு வளவு வீட்டுக்குள் வழியில் கிடந்த பாத்திரங்களை எல்லாம் வேகமாகக் கடந்து பேச்சியம்மன் துணை என்று போட்டிருந்த வீட்டின் முன்பு நின்று அழிக் கதவைப் பிடித்துக் கொண்டு தடதடவென்று உலுக்கினார்.உள்ளிருந்து பத்து வயது மதிக்கக் கூடிய ஒரு சிறுவன் ஓடி வந்தான்.அவனது ஒரு கால் சூம்பி இருந்தது.அவர் வேட்டியிலிருந்து பிரித்து ஐந்து ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து ''டே போய்  டைகர் பாம் ஒன்னு வாங்கி வாடே''என்றார்.அவன் போன பிறகு சடசடவென்று கூடத்துக்குள் போனார்.கூடத்தில் அந்த அம்மாள் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.அவள் முகம் சிவந்திருந்தது.அழுதிருக்க வேண்டும் போலத் தெரிந்தது.உள்ளே அறையில் இருந்து யாரோ இருமல் கேட்டது சாமி சட்டென்று அவள் காலடியில் அமர்ந்து அவள் புடவையைத் தூக்கினார்.வெளேரென்ற அவளது  தொடைகளைப் பார்த்து நான் மூச்சடைத்தேன்.அவள் என்னைத் தயக்கமாய்ப் பார்க்க ''அங்க பார்க்காத ..நம்ம ஆள்தான்.சொல்றதக் கேளு மூச்சை நல்லா உள்ளே இழு;;என்று உத்தரவிட்டார்.அவளது ஆடுகால் சதையில் ஒரு இடத்தைத் தேடி தனது விரல்களால் அழுத்தினார்.சட்டென்று அந்த அம்மாள் தளர்ந்தாள்.அப்படியே ஊஞ்சலில் சாய வெள்ளை ஜம்பரூடே அவள் முலைகள் விரைப்பதைப்  பார்த்தேன்.அவள் முகம் சிவக்க கண்களை அரைவாசி மூடிக் கொண்டு அர்த்தமற்று முனக தொடங்கினாள்..அவர் அழுத்த அழுத்த அவள் இன்னும் வேகமாக முனக ஆரம்பித்தாள் ஒரு கட்டத்தில் அவள் ஐயோ என்று கத்தி வில் போல வளைந்து தளர்ந்தாள்.அவளது கால்கள்   வழியே மதனம் பெருகி சேலை விளிம்புகளை நனைத்திருந்தது.சாமி எழுந்து கொண்டு ''நீ சாகும்வரை இனி உனக்கு இது வேணும்னு தோணாது''என்றுவிட்டு வெளியே வந்தார்.எதிரே பையன் டைகர் பாமோடு விந்தி விந்தி வர ''போடே அம்மைக்கு கொண்டு போய்க் கொடு .வலி தீரட்டு..''என்றார்.







Saturday, May 21, 2011

அருசி

ஒரு தனித்த இரவாய்ப்
போயிற்று இது
மூடிக் கிடக்கும்
பெரிய வீட்டில்
ஒற்றையாய் அலையும்
பூனை போல திரிகிறேன்
கடிகாரம் உதிர்க்கும்
மணித் துளிகள்
பெருகிப் பெருகி
வெறுமையை நிரப்புவதைப் பார்த்துக் கொண்டு..

காட்டின் வாசனை
இன்னமும் வீசும்
புத்தகங்களை மேய்கிறேன்
உலகப் பெருங்கவிகள்
உதிரம் கொண்டு எழுதியவை அவை ..
உயிர் கொடுத்திசைத்த
இசைத் தட்டுகளை வருடுகிறேன்
கந்தர்வர்களின் மூச்சுக் காற்று
அவையெல்லாம்
என அறிவேன்

ஆனாலும் எதிலும்
ருசியற்று
சலித்தது மன நாக்கு..

உறை பனி மேல்
விழும்
தீத் துளிகள் போல 

அவை யாவும்
கடுங்குளிரில் அவிந்தன


கரை நனைத்தோடும்
பெருவாற்றில்
கைகள் அற்றவன் தாகத்துக்குத்
தண்ணீர் இல்லை

யாராலும் கொடுக்கமுடியவில்லை
இறந்தவனுக்கு

வாழ்வின் வெப்பத்தை..

Wednesday, May 18, 2011

இரவும் உறவும் ..

1.இரவு 

 
ஒரு நதிக்குள்
இறங்கிச் செல்வது போல
நான் உறக்கத்துக்குள்
இறங்கிச் சென்றேன்
இருண்ட படித்துறையின்
ஒவ்வொரு படியிலும்
உணர்வின் வெளிச்சத்தை
ஒவ்வொரு துகிலாய்
உதிர்த்தவாறே

முதலில் என் விரல் நுனிகளை
தின்றுபார்த்தது நதி
பிறகு கால்கள்
வயிறு மார்பு என
என் உறுப்புகள் ஒவ்வொன்றாய்த்
தின்று தீர்த்தது

இரு அகல் விளக்குகள் போல
விழிகள் மட்டுமே
இறுதி வரை மினுங்கிக் கொண்டிருந்தன


ஓங்கி எழுந்த
பேரலையில்
அவையும்
கடைசியாய்க்
கரைந்த பொழுது
நதி என்றும்
நானென்றும்
எதுவுமிருக்கவில்லை



2.உறவு 

கடக்க முடியாத
மதில் போல
கிடக்கிறது இது
நீந்தித் தீரா
நதி போல
புணர்ந்து தீராக் காமம்

கண்ணாடி அறைக்குள்
மாட்டிக் கொண்ட
ஈசல் போல
முட்டி முட்டித்
துடிக்கிறது உடல்.
துரத்த முடியா
நிழல் போல
தொடர்ந்து வருகிறது

ஆழ்மனதில்
புதைத்து விட்டாலும்
கல்லறையை
உடைத்து வரும்
காட்டேரி போல
நள்ளிரவில் எழுந்துவந்து
கதவைத் தட்டுகிறது
கழுத்து நரம்பைப்
பற்றி இழுத்துக் கடிக்கிறது

கைகளில்
வழியும்
இளம் சூடான குருதியில்
தோய்த்து எழுதப் படுகிறது
இன்னுமொரு முறையும்
உடல் திரவங்களின் வரலாறு.

  

LinkWithin

Related Posts with Thumbnails