Monday, May 31, 2010

பாதை

கொடைக்கானல் தாண்டி ஜமீன்பட்டி வளைவில் பஸ் அவனை சரியாக ஐந்து மணிக்கு இறக்கிவிட்டது,இதுதான் ஊரா என்று சந்தேகமாகக் கேட்டான்.அங்கிருந்து இரண்டு கிமீ நடக்க வேண்டும் என்றான் கண்டக்டர் வினோதமான பார்வையுடன் .பஸ் விலகிப் போனதும் சட்டென்று ஒரு அமைதி அந்த இடத்தை நிரப்பியது.பறவைகள் சத்தத்தைக் கூட கேட்க முடியவில்லை  என்பதை கவனித்தான் .சுற்றிலும் பார்த்தான்.
அந்த இடத்தில் ஒரு எலிக் குஞ்சைக் காணவில்லை.அதற்குள் இருட்டு வரத் துடங்கி இருந்தது.ஜாமீன் பட்டி வளைவு என்று கைகட்டிய இடத்தில் இன்னும்  இருட்டாக இருக்க மூடுபனி வேறு தரை இறங்கி கைவிரல் தெரிவதே கடினமாக இருந்தது.

அர்த்த்நாரிச்வரன் அரிதான ஒரு பூஞ் செடியைத்  தேடி அங்கு வந்திருந்தான். ஆர்கிட் என அழைக்கப் படும் பூஞ்செடிகளின் மீது அவனுக்கு பெரிய காதல் இருந்தது.உலகம் எங்கும் இருக்கும் அவனைப் போல் உள்ள  பூக்களின் காதலர்களுடன் அவனுக்கு தொடர்பு இருந்தது.கொடைக்கானல் மலைகளில் நிறைய ஆர்கிட்கள் உள்ளன.போன நூற்றாண்டில் மட்டுமே தென்பட்ட ஒரு அரிய பூ இருக்குமிடம் தெரிந்த நபர் ஒருவரைத் தேடிக் கொண்டுதான் அந்த ஊருக்கு வந்திருந்தான்.கடிதத்தில் அவர் மதியத்துக்கு முன்பே வரச் சொல்லி எழுதியிருந்தது ஏன் என்று இப்போதுதான் விளங்கியது அவனுக்கு.இந்தப் பகுதிகளில் சீக்கிரம்  இருட்டிவிடும் போல என்று நினைத்துக் கொண்டான்.

அந்த ஒற்றை அடிப்பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.அதற்குள் சூரியன் சாம்பலாய்த் தேய்ந்திருக்க நிலவு வந்திருந்தது.யூகலிப்டஸ் மரங்களின் உச்சியில் மாறி மாறித் தங்கும் நிலவும் இருட்டும் முதுகந்தண்டில் வினோத அதிர்வைக் கொடுத்தது.மருந்துக்கு கூட  ஆள் நடமாட்டம் இல்லாது பாதை ஹோ என்று   தனித்திருந்தது.எங்கோ கிளிகள் கிறிச்சிடும் ஒலிகள் மட்டுமே கேட்டது.புதர்களில் நெருப்புத் துண்டங்கள் போல் பிரகாசிப்பது போல் பார்த்தான்.ஓநாய்கள்?ச்சே .கொடைக்கானலில் ஏது ஓநாய்கள்?மின்மினிப்  பூச்சிகளாக இருக்கக் கூடும்.


சட்டென்று அர்த்தநாரிச்வரன் நின்றான்.பாதை அந்த இடத்தில் இரண்டாகப் பிரிந்தது.
எந்த பாதை சரியான பாதை?என்று தீர்மானிக்க முடியாமல் தடுமாறினான்.கொஞ்ச நேரம் அங்கேயே அபத்தமாய் நின்றிருந்தான்.ஸ்வெட்டர் மீறியும் குளிர் நடுக்கியது.திடீர் என்று சில் வண்டுகள் இரைய ஆரம்பித்திருந்தன.நிலவு அவ்வப்போது மறைவிலிருந்து வெளிவந்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று ஆர்வத்துடன் பார்த்தது.தூரத்தில் ஓநாய்கள்[?]ஊளையிடும் சத்தம் தேய்வாய் ஒலித்தது.பேசாமல் பஸ் நிறுத்தத்துக்கே திரும்பலாம் என்றால் அடுத்த பஸ் காலையில்தான் என்று கண்டக்டர் சொன்னான்.காலைவரை அங்கேயே உட்கார்ந்திருந்தால் பனியில் விறைத்தே செத்துப் போய் விடுவோம் என்று தோன்றியது .

இரண்டு பாதைகளும் நேர் எதிர் திசைகளை நோக்கி நடந்தன.கொஞ்சம் யோசித்த பின்பு இடது பக்கம் என்று முடிவெடுத்தான்.Always keep left என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.நடக்க ஆரம்பிக்கவும் .ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.காதோரம் ஏதோ விஷ் என்று பறக்க திடுக்கிட்டான்.டார்ச் கொண்டு வந்திருக்கலாம்.ஆனால் யாருக்குத் தெரியும்?அவ்வப்போது  மேகங்களுக்கு இடையில் ஒய்வு எடுக்கப் போய் விடும் எட்டாம் நாள் நிலவை நம்பி நடப்பது சிரமமாக இருந்தது.சில மரக்குச்சிகளை சேர்த்து தீப் பந்தம் போல் ஆக்க முயற்சித்தான்.பனியில் நனைந்து அவை பற்ற மறுத்தன.எல்லாக் குச்சிகளையும் தீர்த்த பிறகு தான் தனது மடத்தனத்தை உணர்ந்தான்.ஒரே ஆறுதலான சிகரெட்டுக்கும் இனி வழியில்லை.

வேறு வழியின்றி நடக்க ஆரம்பித்தான்.யூகலிப்டஸ் மரங்கள் இடையே எவ்வளவு நேரம் நடந்திருப்பான் என தெரியவில்லை.ரொம்ப நேரம் நடந்தது போல் தோன்றி மணி பார்க்க பத்து நிமிஷம் தான் ஆகி இருந்தது.குளிரில் கடிகாரம் மெதுவாய் ஓடுகிறதா என்ன?

குளிர் இப்போது மிக அதிகமாகி இருந்தது.பற்களெல்லாம் கிட்டிப் போய் நடுங்க ஆரம்பித்து விட்டன.ஓநாய்களின் ஊளைகள் இப்போது பக்க்கத்தில் கேட்க ஆரம்பித்தன.அர்த்தநாரீஸ்வரன் சட்டென்று முடிவு செய்தான்.மெய்ன் ரோட்டிற்கே போய் விடலாம்.பஸ் இல்லாவிட்டால் என்ன ...வேறு ஏதாவது வாகனங்கள் வரலாம்.இந்தப் பாதை எங்கும் போவதுபோல் தெரியவில்லை.நாய்கள் வேறு கூட்டமாக வந்துவிட்டால் என்ன செய்வது?

அந்த முடிவுக்கு வந்த உடன்  சற்று உற்சாகம் அடைந்து நடக்க ஆரம்பித்தான்.கொஞ்சநேரம் நடந்தபிறகுதான் தான் வழி தப்பிவிட்டது அவனுக்கு புரிந்தது.இரண்டு பாதைகள்  பிரிந்துபோன அந்த இடம் திரும்ப அவன் வாழ்க்கையில் வரவே இல்லை.


கன்னிமாராவில் தற்செயலாக அந்த புத்தகம் கிடைத்தது.Treasures of kodaikanal hills என்று ஒரு சின்ன புத்தகம்.லீ வில்லியம்ஸ் என்று அந்தப் பகுதியில் சப் கலெக்டராக பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தவரின் குறிப்புகள்.அதில் எழுதிய ஒரு  விஷயம் அவனை ஈர்த்தது.
     ''இங்கு ஜமீன்பட்டி என்ற கிராமத்தில் நிகழ்ந்த விசயத்தைப் பற்றி பதிவு செய்ய வேண்டும்.முக்கியச் சாலையில் இருந்து உள்ளே தள்ளியுள்ள இந்த கிராமத்தில் மாலை நான்கு மணிக்கு மேல் யாரும் நடமாடுவதில்லை.காரணம் இங்கு நிகழ்வதாக சொல்லப் படும் அரூபமான விசயங்கள்.இந்த மக்கள் இந்த மலையையே  தெய்வமாக வணங்குகிறார்கள்.அந்த தெய்வம் வெளியாட்களை அதிகம் விரும்புவதில்லையாம்.சாயங்கால நேரங்களில் இங்கு வரும் அந்நியர்களை வழி தவற வைத்துக் கொன்று விடுகிறதாம்!இந்தியர்கள் இந்த மாதிரி அமானுடங்களை எளிதில் நம்புகிறவர்கள்.ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் அங்கு நடந்திருக்கிறது.பிரபல கொள்ளையன் ஜம்புலிங்கம் இந்த மலைகளில் ஒளிந்திருப்பதாக தகவல் வந்து அவனைப் பிடிக்க சார்ஜென்ட் ஜான் மேஜர் தலைமையில் பத்துபேரை ஆயுதங்களுடன் அனுப்பிவைத்தேன்.மூன்று ஆங்கிலேயர்களும் அதில் அடக்கம்.ஜெம்புலிங்கம் குதிரையில் ஏறி தப்பிப்பதைக் கண்டதும் இவர்களும் விரட்டிப் போய் உள்ளனர்.திடீர் என்று ஜம்புலிங்கம் மறைந்து விட அந்தப் பாதையில் குதிரைக் காலடிகளைத் தொடர்ந்து போனபோது பாதை இரண்டாக பிரிந்திருக்கிறது.குதிரைக் காலடி இரண்டு பாதைகளிலும் காணப் படவே  ஜான் மேஜர் சற்றுநேரம் திகைத்து இரண்டு வழிகளிலும் நான்கு பேரை அனுப்பிவிட்டு அவன் மட்டும் இரண்டு பேருடன்  அங்கேயே காத்திருந்தான்.வலதுபக்கம் போன சிப்பாய்கள் இரண்டு மணிநேரத்தில் வெறுங்கையுடன் திரும்பிவர இடது பக்கம் போனவர்கள் வரவே இல்லை!அதற்குள் இருட்டி விட்டதால் ஜமீன்பட்டி கிராமத்தில் இரவு தங்கி மறுநாள் காலையில் கிராமவாசிகளுடன் வந்து தேடிய போது அப்படி இரண்டாக பிரியும் பாதையையே கண்டுபிடிக்க முடியவில்லை.கிராம வாசிகள் அப்படி ஒரு பாதையே இல்லை என்று சொல்கின்றனர்.காணாமல் போன அந்த நான்கு சிப்பாய்களும் என்னதான் ஆனார்கள்?மூன்று சாத்தியங்களே உள்ளன.ஒன்று அவர்களை ஜம்பு லிங்கம் கொன்றிருக்கவேண்டும்.கிராம மக்கள் அவனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.இரண்டு  ஏதோ வனவிலங்குகள் ...சிப்பாய்களுக்கு அந்த காடுகள் புதிசு.ஆகையால் வழி தப்பி விட்டார்கள்.அல்லது...அந்த மக்கள் நம்புவது போல் .அவர்களை அந்த மலை தான் கொன்றுவிட்டது!


'' என்ன தானா சிரிச்சுக்கிறீங்க?''எனறாள் மனைவி .
''ஒண்ணுமில்லை  ஒரு ஸ்டீபன் கிங் டைப் கதை.இந்த வெள்ளைக் காரர்கள்...''

''சரி படுக்க வாங்க .நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கணுமே''எனறாள்  
சங்கர் அவன் மனைவி இருவருமே நாளை கொடைக் கானல் போகிறார்கள் .
அவள் சுற்றிப் பார்ப்பதற்கு.
சங்கருக்கு பட்டாம் பூச்சிகளின் மீது பெரிய காதல்.கோடை மலைகளில் ஆயிரக் கணக்கான பட்டாம் பூச்சிகள் இருக்கின்றன.

Monday, May 24, 2010

கடிதம்

சில சமயம்
நீ எழுதும்
நீண்ட
காதல் கடிதங்களில்
காதல்
இல்லவே இல்லை

இரைச்சல்

இந்த மௌனத்தை
நாம்
உடைத்துவிடலாம்
ரொம்ப சத்தமாக
இருக்கிறது

சுதந்திரம்

பாதுகாப்பு கருதி
கதவைப்
பூட்டியிருந்தேன்
உள்ளிருந்த தேவதை
மூச்சு முட்டுகிறது
கதவைத் திறந்தால் என்ன என்றது
கதவு திறந்தேன்
சற்று காற்று வாங்கி வரட்டுமா
என்று வெளியே போனது
வரவே இல்லை
கவலையுற்று தேடிப் போனேன்
களைத்து திரும்பி வந்தவன் அதிர்ச்சியுற்றேன்
அங்கு ஒரு பிசாசு இருந்தது
யார் நீ என்றேன்
அது வியந்து
நான்தான் வெளியில் சென்ற தேவதை
என்றது

LinkWithin

Related Posts with Thumbnails