Wednesday, August 29, 2012

இன்று ஓணம்

இன்று ஓணம்.வழக்கமாய் சுஜித் என்கிற எனது மலையாள நண்பர் ஒருவருக்கு வாழ்த்து சொல்வேன்.சமீபத்திய சொந்த அதிர்ச்சியில் மறந்துவிட்டேன்.காலையில் ஒரு போன் வந்தது .அவர் இறந்துவிட்டதாக.

tear jerker என்பார்களே அப்படி ஒரு வாழ்வு அவருடையது.அவருக்கு இரு பெண் குழந்தைகள்.மூத்தப் பெண்ணிற்கு பிறவியிலிருந்தே காது கேட்காது.மாற்றுத் திறனாளியான பெண்ணை வளர்க்க அவர் பட்ட பாட்டை எழுதப் போவதில்லை.எழுத்து எல்லாத்  துக்கத்தையும் பளபளப்பாக்கி விடுகிறது.காது கேளாதோருக்கான  சிறப்புப் பள்ளியில் அவளைச் சேர்த்தார்.ஆனால் அதற்கான செலவை அவரது அரசுச் சம்பளத்தில் ஈடு செய்யமுடியவில்லை.அதைச் சரி பண்ண அந்தப் பள்ளியிலேயே அவரது மனைவி ஒரு பயிற்றுனராகச் சேர்ந்தார்.கொஞ்ச காலத்திற்குப் பிறகு காக்ளியர் இம்ப்ளான்ட் என்றொரு வித்தை வந்தது..பொருத்தினால் காது கேட்கிறது எனறார்கள்.ஆனால் செலவு மிக அதிகம்.குறைந்தது பனிரெண்டு லட்சம்.அவ்வளவு பணத்துக்கு அவர் எங்கே போவார்?அரசிடம் கேட்டுப்பார்த்தார்.அரசு ஒரு விதி எண்ணைச் சொல்லி மறுத்துவிட்டது.இருந்தாலும் ஆசை விடவில்லை.சில தான அமைப்புகளிடம் முயன்றார்.அவை அவர் குறிப்பிட்ட மதத்தையோ குழுவையோ சேர்ந்தவராய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தன.அல்லது அவர் குடிசையில் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தின.இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை.காக்ளியர் கருவியின் விலை குறையும் என்று பணம் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான்  அந்த நோய் அவருக்கு வந்து சேர்ந்தது.வலது கையைத் தூக்குவதில் அவருக்குச் சிரமம் இருந்தது.பிறகு அடுத்த கைக்குப் பரவியது.பிறகு கால்களுக்கு.டாக்டர்கள் அவருக்கு பார்கின்சன்ஸ் என்று கண்டு பிடித்தார்கள்.வழக்கமாய் அறுபது வயதுக்கு பிறகு  மட்டுமே வரக் கூடிய நோய்.இவருக்கு நாற்பது வயதில் வந்துவிட்டது.இந்த நோய் உடையவர்களுக்கு தலையும் கை கால்களும்  ஆடிக் கொண்டே இருக்கும் .எல்லாத் தசைகளும்  கல் போல் இறுகிவிடும்.ஒரு அடி எடுத்து வைப்பதே பெரிய சாதனை போல் இருக்கும்.ஏதோ ஒரு சாபத்தினால் கல்லாய் சமைந்துவிடுகிறவர்கள் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோமே அது போல்.புன்னகை செய்வது கூடக் கடினமாக இருக்கும். பர்கின்சனின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று கல்முகம் எனப்படும்  முகத் தசை இறுக்கம்.ஆனாலும் அவர் கடைசிவரை புன்னகைக்க  முயன்றுகொண்டே இருந்தார்.

சிகிச்சை எடுத்துக் கொண்டார்.ஆரம்பத்தில் கேட்டது.ஆனால் பக்க விளைவுகள் மிக அதிகம்.ஒரு மருத்துவர் அதிக வீர்யம்  உள்ள  மருந்து கொடுத்தது மூளையைப் பாதித்து மனக் கோளாறுகளில்  கொண்டு போய் விட்டது.மூன்று மாதம் எர்ணாகுளம் அமிர்தானந்த  மயி மருத்துவமனையில் தங்கி இருந்தார்.தன் மனைவி வேறு யாருடனோ ஓடிப் போய்விடப் போவதாக சந்தேகம்.மனைவியைக் கண்டாலே அடிக்க ஆரம்பித்தார்.இந்த  நாட்களைப் பற்றிப் பின்னால் என்னிடம் ஒரு புன்னகையுடன் சொல்லி இருக்கிறார்.'என்னுள் இரண்டு நான்கள் அப்போது இருந்தன.ஒரு நான் அவளைச் சந்தேகித்துக் கொண்டே இருந்தது.இன்னொரு நான் அதைத் தவறெனச் சொல்லிக் கொண்டே இருந்தது.எனது இரண்டாவது நானால் முதல் நானைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.'

விளைவாக ஆங்கில மருத்துவத்தை நிறுத்திவிட்டு சித்தம்,ஆயுர்வேதம்.ஹோமியோ என்று எது எதுவோ சாப்பிட்டார்.பூனைக்காலி சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்றாங்க  சங்கர்.அதுலதான் இயற்கை டோப்பமின் இருக்குதாம் என்பார்.மேலும் ஆங்கில மருத்துவம் செலவு பிடிப்பதாகவும் இருந்தது.அடிக்கடி லீவ் போடவும் முடியவில்லை.சம்பள இழப்பு.அதிகாரிகளின் கடிதல்கள்.நியாயமாகப் பார்த்தால் அவருக்கு நிறைய ஒய்வு தேவை.ஆனால் ஓய்வெடுக்க முடியாத நிலையில் அவர் இருந்தார்..அதிகாலையிலே திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி குழித்துறையில் இறங்கி பஸ் மாறவேண்டும்.ஆனால் குழித்துறை ரோட்டைக் கடக்க முடியாமல் கால்கள் இழுத்துக் கொண்டு ஒரு சிலை போல் ஒரே இடத்தில் கால் மணி நேரத்துக்கு மேலாய் நிற்பதை பார்த்திருக்கிறேன்.விபரம் புரியாதவர்கள் அவரைத் தண்ணி கேசு என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

மாற்று மருத்துவமும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு செயல் இழந்தது/இடையில் அவரது தாய் வேறு மார்புப் புற்று நோய் வந்து இறந்து போனார்.அவருடைய எல்லா இடர்கள் நடுவிலும்  அவர் உளம் சாய்ந்து கொள்ளும் தூணாக அவர் இருந்தார்.மீண்டும் ஆங்கில மருத்துவம்.அதன் பக்கவிளைவுகள்.ஒரு விடச்  சுழல்.

இப்போது காக்ளியர் கருவியின் விலை சற்று இறங்கிவந்தது.ஆறு லட்சம்..ஆனால் ஆறு லட்சமும் கூட  இப்போது அவர்களுக்குப் பெரிய தொகை ஆகியிருந்தது.சேர்த்து வைத்திருந்தது எல்லாம் இவரது மருத்துவச் செலவுக்கே  சரியாகி இருந்தது .ஆனால் மீண்டும் ஒரு ஒளிக் கீற்று .மறுபடியும் பணம் சேர்க்க ஆரம்பித்தார்.விற்றார்.கடன் வாங்கினார்.அரசு கொடுத்த அத்தனை லோன்களையும் வாங்கினார்.அவரது சம்பளப் பில்லை ஒருதடவை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன்.மிகச் சிறு தொகை.

காக்ளியர் கருவிக்குப் பின்னால் அலைந்ததில் ஒருதடவை அவர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து தலையில் அடிபட்டு ஒரு மாதம் மீண்டும் ஆஸ்பத்திரியில் இருந்தார்.
சங்கர் ஆலுவால ஒரு ஆஸ்பத்திரில இருக்கேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
கடைசியாக இரண்டு மதங்களுக்கு முன்பு அவர் மகளுக்கு அந்தக் கருவி பொருத்தப் பட்டுவிட்டது.சந்தோசமாய் என்னிடம் போன் பண்ணிச் சொன்னார்.'இப்போது அவளுக்கு மழைச் சத்தம் எல்லாம் கேட்குது சங்கர்' என்றார்.


நான் அவரை மந்திராலயத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்து விடாதா  என்ற நம்பிக்கையில்.உண்மையில் சமீபத்திய அஹோபிலப் பிரயாணத்தில் அவர் பற்றி நினைத்துக் கொண்டே வந்தேன்.நானும் அவரும் நிறையப் பேசி இருக்கிறோம்.வாழ்வு  பற்றி,நோய் பற்றி,மன நலம் பற்றி,கடவுள் பற்றி,கர்மா பற்றி.ஜே கிருஷ்ண மூர்த்தி பற்றி,ஓஷோ பற்றி,கம்யூனிசம் பற்றி.,சினிமா பற்றி ..அவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு இருந்தது.தன்மாத்திரா படம் பார்த்து அவரது மொத்தக் குடும்பமும் அழுதது என்றார் சிரித்துக் கொண்டே..

அருமனை ஆபிசில் இருந்து திரும்புகையில்  சில சமயம் போன் செய்வார்.நான் குழித்துறை ரயில் நிலையத்தில் காத்திருப்பேன்.சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து ரயில் வரும்வரை பேசிக் கொண்டிருப்போம்.நான் எப்போதுமே ஒரு நம்பிக்கையற்ற பதட்டத்தில் இருப்பேன் அல்லது அதீத நம்பிக்கையில் இருப்பேன்.இதைச்   செய்தால்எல்லாம் சரியாகிவிடும்.இந்தக் கோயிலுக்குப் போனால் போதும்.இந்த மருந்தை சுவாசித்தாலே போதும்,இந்தத் தத்துவம்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு இது போன்ற மிகை உணர்வுகள்.அவர் எப்போதுமே நிதானமாய் ஒரு புன் சிரிப்புடன் இருப்பார்.கடைசிக் காலங்களில் அவரது தசை இறுகி  புன்னகைப்பது கூட கடினமாக இருந்தும்...ஏனெனில் நான் பேசுவதை எல்லாம் அவர் நேர் வாழ்வில் கடந்துவிட்டிருந்தார்.நான் துயரத்தின் ஆழ் கிணற்றுக்குள்  விழும்போது எல்லாம் அவரைத்தான் நினைத்துக் கொள்வேன்.அவருடன் ஒப்பிட என் துக்கங்கள் என்ன?ஒன்றுமே இல்லை.


ஆகவே அவரது மகளுக்கு ஆப்பரேசன் முடிந்ததும் அவர் தனது துக்கக் குகையின் முடிவுக்கு வந்துவிட்டார் என்றே நினைத்தேன்.எல்லா குகைகளின் முடிவிலும் ஒரு வெளிச்சப் புனல் உண்டு என்று சொல்லி இருக்கிறதே.முதன்முதலாய் மழைத்துளியின் சத்தத்தைக் கேட்கும் மகள்...

ஆனால் 

நேற்று ஓணத்திற்காக அவரது வீட்டில் எல்லோரும் கொட்டாரக்கரை சென்றிருக்கிறார்கள்.இரவு பணி முடிந்ததும் அவரும் கொட்டாரக் கரைக்கு வருவதாக சொல்.வரவில்லை.தேடி இருக்கிறார்கள்.இங்கே வீட்டில் விளக்கு எரிந்த வண்ணமே இருந்திருக்கிறது.முற்றத்தில் எடுக்கப்படாத பால் பாக்கட்டுகள்  செய்தித்தாள்கள்.எந்த விளிக்கும் பதில் இல்லை.போலீசுக்குச் செய்தி சொல்லி கதவுடைத்துப் போனால் பாத்ரூமில் இறந்து கிடந்திருக்கிறார்.கீழே விழந்ததில் நல்ல அடிபட்டு ரத்தம் பெருகி இறந்திருக்கிறார்.இன்று போஸ்ட் மார்ட்டத்துக்குப்பிறகு கொட்டாரக் கரைக்குக் கொண்டு போகிறார்கள்.கடைசியாகப் போன் பண்ணும்போது ''சங்கர்.என் சம்பளத்துல ஏதோ பிரச்சினை சரியான தொகை வரலை .ஆபிஸ்ல என்னன்னு பார்க்க முடியுமா?இத வைச்சுதான்  ஓணம் பர்சேசிங் பண்ணனும்.மகள் 'கேட்கிற' முதல் ஓணம் !''என்றார்.

இன்று ஓணம்.

தாயோளி கடவுளே என்ன டைமிங்டா  உன்னுது...

LinkWithin

Related Posts with Thumbnails