Saturday, July 31, 2010

மஞ்சள் பல்பு

நான்
மஞ்சள் பல்புகளை
நேசிக்கிறேன்.
குழல் விளக்குகள்
வேபர் சுடர்கள்
நியான் மின்னல்கள் என்று
மேலும்
புதிய அறிவியலுடன்
ஏராள
ஒளி உமிழிகள்
வந்துவிட்டாலும்
நான்
மஞ்சள் பல்புகளையே
நேசிக்கிறேன்.

என்
பச்சைப் பால் நாட்கள்
முழுவதையும்
கிராமங்களின்
இருட்டுக்கு
தங்கச் சரிகை தைக்கும்
இந்த ஒற்றைத் தெரு விளக்குகளின்
அடியில்தான்
கழித்திருக்கிறேன்

இரவின்
தனிமையையும் அச்சத்தையும்
ஏக்கத்தையும் ஏகாந்தத்தையும்
மிகைபடுத்திக்
காண்பிக்கும்
சுவர்க் கோழிகளின்
ஒற்றை ஸ்வரப் பாட்டோடு
படித்துறையில் தளும்பும்
நதியில்
கரையும்
இந்த மஞ்சள் ஒளிவலையில்தான்
முதன் முதலாய்
உன் மீதான காதலை
உணர்ந்தேன்.

என்னென்னவோ சொல்கிறார்கள்.
அதிக மின்சக்தி அருந்தி
குறைந்த வெளிச்சமே கொடுக்கிறது.
புவியின் சூழலை
வெதுப்பி உருக்குகிறது .
ஆயுளும் குறைவே என்கிறார்கள்.

விட்டுவிடுவதற்கு
ஏராள காரணங்கள்
இருந்தபோதும்
உன்னையும்
மஞ்சள் பல்புகளையும்
ஏனோ
இன்னமும்
நேசிக்கவே செய்கிறேன்..

Friday, July 30, 2010

மீள்வாசிப்பு

இன்னும் எனக்குள்
காதல் உண்டோ
என்ற சந்தேகத்தை
பரிசோதிக்கும்
முயற்சியாய்தான்
அவளைக்
காதலிக்க ஆரம்பித்தேன்..
முதல் காதலின்
அத்தனை தீவிரத்துடனும்
பதைபதைத்து 
உருகுவதை
நானே
அச்சத்துடன் நோக்கினேன்.

முதல் அறிதலின்  பிறகு
எப்போதுமே
விரல்களின் நினைவில்
வீணை இருக்கிறது
என்றான் தோழன்

Thursday, July 29, 2010

உடல் தத்துவம் 3

எச்சரிக்கை! வயது வந்தவர்க்கு மட்டும்!


என் மனம் ஒருகணம் அதன் எல்லா ஓசைகளையும் நிறுத்தி மீண்டது.வேங்கையைக் கண்டதும் காட்டில் சட்டென்று ஒரு அமைதி சூழும்.கான் உலாவிகளுக்கு மட்டுமே அந்த திடீர் நிசப்தத்தின் அபாயம் புரியும்.அமைதியான காடு என்பதே கிடையாது.காடு ஒருவகையில் நம் மனதினைப் போல..எப்போதும் ஏதோ ஓசை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
நாய்கள் அந்தப் பிணத்தைப் பிடித்துவிட்டன.இரண்டு நாய்களும் உடலை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்க அது அங்குமிங்கும் நீரில் அலைந்தது.நாய்களின் மூச்சிறைப்பு கூட கேட்டது.என் புலன்கள் மிகக் கூர்மையாகிவிட்டதை உணர்ந்தேன்.கரைகளில் இருந்த மரங்களில் பறவைகள் அடையும் இரைச்சல் ஒரு ஆர்கெஸ்ட்ரா போல  விட்டுவிட்டு நதியின் மீது வந்து சேர்ந்தது.கங்கை ஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டுக்கொண்டே போய்க் கொண்டிருந்தது.பரிசல்காரன் மாறி மாறி துடுப்பு போடும் ஒலி.கொழுத்த மீன்கள் அங்குமிங்கும் கங்கையைத் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தன.

இது போல் மிகச் சில தருணங்களில்தான் உணர்ந்திருக்கிறேன்.ஆபத்துக் காலங்களிலும் அதீத காமத்தின் சில கணங்களிலும். சில புத்தகங்களில் தடுக்கிய ஏதோ ஒரு வரியிலும்...ஒருதடவை அகமதாபாத்தில் ஒரு பனியாப் பெண் தன் கீழாடையைக் கழற்றியவுடன் இதே போல் ஒரு அமைதிக்குப் போய்விட்டேன்.அவளது யோனி அத்தனை நேர்த்தியாய் இருந்தது.ஒரு ஓவியனின் கனவு யோனி அது.உலகப் புகழ்   பெறவேண்டிய யோனி.எல்லா ஆர்ட் காலரிகளிலும் படமாய் இருக்கவேண்டிய யோனி.நம்முடைய இலக்கியங்களில் புகழப்படும் அரவப் பட அல்குல்..!ஒரு விலை மதிப்பற்ற கலைப்பொருளை தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டிருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை.
''என்ன அப்படி பார்க்கிறாய்''என்றாள்.
நான் ''உன் யோனி அற்புதமாக இருக்கிறது!''
'க்யா''என்றாள்.கொஞ்சம் கிராக்கு என்று என்னை நினைத்திருக்க வேண்டும்.அவளைத் தொடவே எனக்கு அச்சமாய் இருந்தது.அதைத் தொட..தொட்டால் உடைந்துவிடும் ஒரு கலைப் பொருளை தூரத்தில் இருந்தே பார்க்கவிரும்பும் ஒரு கலாரசிகன் போல..நான் மறுபடியும் ''இட் இஸ் ப்யூடிபுல்'' என்றேன்.
''அரே இதைத்தான் கடைசி வரை சொல்லிக் கொண்டிருக்கப் போறியா''என்றாள் .பிறகு சற்று சந்தேகத்துடன்''நீ நபும்சகனா?''
 உண்மையில் அவள் அத்தனை அழகி அல்ல.ஆனால் அவள் அல்குல்!அதேசமயம் எதிர்விதமாயும் நிகழ்ந்தது உண்டு.மிகுந்த முக வசீகரமான பெண்களின் யோனிகள் மாமிசத்துண்டுகள் போல இருப்பதை கண்டிருக்கிறேன்.விதவிதமான யோனிகள் பற்றி யாரும் ஒப்பியல் ஆய்வு  செய்து இருக்கிறார்களா  தெரியவில்லை.நமக்கு எல்லாமே பாம்பு படம் எடுத்தார் போல என்று தான் உவமிக்க தெரியும்.உண்மையில் சில யோனிகள் செம்பருத்திப் பூ போல இருக்கும்.சில தாமரை இல்லை போல..சில பன்றியின் உதடுகள் போல .

அதே போல் ஒரு தடவை அஸ்ஸாமில் மரணத்தை மிக அருகில் பார்த்தவேளையில் உணர்ந்தேன்..பாம்பேயில் நான் வேலை பார்த்த கடத்தல்கார சேட்டுக்குகவுஹாத்தி மூலம் தான் சரக்கு வந்து கொண்டிருந்தது.ஹெராயின்.அப்போதெல்லாம் இந்தியாவில் ஹெராயின் பற்றி அதிகம் தெரியவில்லை.பர்மாவிலிருந்து கவ்ஹாத்தி கல்கத்தா பாம்பே வந்து படகு மூலமாய் பாகிஸ்தான் மூலம் யூரோப் முழுக்க ஊடுருவி தென் அமெரிக்க நாடுகளில் காத்திருக்கும் சிசிலியன்கள்[யார் எனத் தெரியாவிடில் காட்பாதர் படம் பார்க்கவும்]கிட்டே சேர்ந்து யு எஸ்ஸில் ஹிப்பிகளிடம் போய் அவர்கள் மகேஷ் யோகியை பார்க்க இமயமலை  வருகையில் திரும்ப இந்தியா வந்துவிடும்.ஒரு சுற்று.

இந்த ரிலே ரேசில் கவ்ஹாத்தியில் இருந்து பாம்பே கொண்டுவரும் சங்கிலியில் ஒரு கண்ணிதான் நான்.இன்றைய அளவு ரிஸ்க் இல்லை எனினும் ஆபத்தான வேலையே.இந்தியாவில் அப்போதுதான் ஹிப்பிக்களின் ஊடுருவல் தொடக்கி இருந்தது.பூக்களின் குழந்தைகள் என்று அழைக்கப் பட்ட இவர்கள்தான் கஞ்சா சரஸ் என்று நாட்டுச் சரக்கு மட்டும் அடித்துக் கொண்டிருந்த இந்தியருக்கு ஹெராயின் போன்ற சொர்க்கத்துக்கு அதிவிரைவு வண்டிகளை அறிமுகப் படுத்தியவர்கள்.எல் எஸ் டி சற்று பின்னால் வந்தது.அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of perception படித்துவிட்டு நான் போன எல் எஸ் டி பயணம் பற்றி பின்னால் எழுதுகிறேன்.மறந்தால் நினைவு படுத்துங்கள்.ஏன் எனில் நான் எந்த சத்தியங்களையும் காப்பாற்றுவதில்லை என்று தோழி சொல்கிறாள்.''அதை ஒரு கொள்கையாவே வைச்சிருக்கே நீ ஏன்  அரசியல்லே நுழையக் கூடாது?''

போதைப் பொருட்களின் முக்கோணம் எனப்படும் பர்மா தாய்லாந்து வியட்நாமின் கோணத்தில் ஒரு புள்ளியாய் கவ்ஹாத்தியில் 'முக்தி'க்காக காத்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது.[முக்திதான் பாஸ்வோர்ட்!]
 தென்னிந்தியர்கள் பலருக்கு நமது பாரத வர்ஷத்தின் வட கிழக்கு மாநிலங்களைப் பற்றி ஆன்னா ஆவன்னா கூட தெரியாது.துக்கடா மாநிலங்கள் என்பதாலோ என்னவோ நமது பைஜாமா குர்த்தாக்கள் அவற்றை அதிகம் கண்டுகொள்ளாததால் வந்த வினை தான் இன்றைய போடோ உல்பா நாக தீவிரவாத குழுக்கள்.சீன இந்திய கலப்படப் பணியாரம் போல் இருக்கும் அம் மக்களின் சுய அடையாள உரசல்கள் அப்போதே ஆரம்பித்திருந்தன.

அந்த தடவை சரக்கு கம்போடியாவில் இருந்து வரவேண்டும்.வரவில்லை.உள்நாட்டில் ஒரே வெட்டு குத்து எனறார்கள்.தாமதம் ஆகும் .ஆனால் வந்துவிடும் என செய்தி வந்தது.இன்று போல் இல்லை.டெலிபோன் என்பது போஸ்ட் ஆபிசிலும் பிரதம மந்திரி வீட்டிலும் மட்டும்தான் இருக்கும்.நான் சேட்டுக்கு போன் பண்ணி பதில் பெறவே ஒரு வாரம் ஆனது.ட்ரங்கால் பதிவு செய்து ஒரு வாழ்க்கை காத்திருந்தால் சில சமயம் கிடைக்கும்.சாவகாசமாய் பேர் தங்கியிருந்த விடுதி விலாசம் எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்தவாரம் வா எனறார்கள்.

காத்திருந்தேன்.ஆனால் பொழுது போவது சிரமமாக இருந்தது.மான்சூன் அந்த வருடம் உக்கிரமாக இருந்தது.மழை கொட்டு கொட்டென்று கொட்டி தங்கியிருந்த விடுதியின் கீழ் தளத்தில் முழங்கால் அளவு தண்ணீர்.சிலசமயம் மீன்கள் கூட பிடிபட்டன.விடுதி வெள்ளைக்காரன் கட்டியது.முடிந்தவரை மரத்தால் ஆனது.சிமிண்டை  விட மரம் அங்கெல்லாம் மலிவு.காடுகள் எதற்கு இருக்கின்றன.மூன்றாவது தளத்தில் யாராவது தும்மினால் கூட முழு விடுதியும் பிள்ளைத்தாச்சிப் பெண் போல நீளமாக அழுதது.
இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை.தலைக்குள் எப்போதும் மழை கொட்டும் ஒலி.பத்திரிகைகள் புத்தகங்கள் எதுவும் கையில் இல்லை.பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.சாப்பாட்டுக்கு ஒவ்வொரு முறையும் அடுத்த தெருவில் இருந்த ஹோட்டலுக்கு நீந்தித்தான் செல்ல வேண்டியிருந்தது.எல்லாமுறையும் முழங்கால்களில் ஒட்டிக் கொண்ட அட்டைகளைப் பிய்த்து எறிவது பெரிய வேலையாக இருந்தது
.
கொசுக்கள் வேறு.மான்சூன் சீசனில் அஸ்ஸாமியக் காடுகளில் இருந்து படையெடுத்து வரும் கொசுக்களை அன்னியர் கண்டால் மாரடைப்பு வந்துவிடும்.[வியட்நாமில் அமெரிக்கர்களைத் தோற்கடித்ததில் பெரும்பங்கு கொசுக்களுக்கு உண்டு]மாரடைப்பு வந்தாலும் பரவாய் இல்லை.மலேரியா வரக் கூடாது.அதுவும் cerebral malaria வந்துவிட்டால் நேரே பரம பிதாவின் காலடிதான்.சாவு பரவாய் இல்லை என்று தோன்றிவிடும்.Painful and lingering death.
அப்போது  டார்ட்டாய்ஸ் எல்லாம் கிடைக்காது.நாட்டுப் புகையிலையை உதிர்த்து உடல் எல்லாம் தடவிக் கொண்டால் கொசு கிட்டே வராது.நெடியில் தூக்கமும் வராது.சில மூலிகைகளை எரித்து புகை மூட்டம் போடுவார்கள்.மலேரியா வராது ஆனால் ஆஸ்த்மா வரலாம்.ரொம்ப சக்தி வாய்ந்த மருந்து 'மருந்து'தான்.யெஸ்.நாட்டுச் சாராயம் ஒரு புட்டி சாயங்காலங்களில் இறக்கிவிட்டீர்கள் என்றால் காண்டாமிருகம் கடித்தால் கூட உங்களுக்குத் தெரியாது.

வாட்ச்மேனிடம் விசாரித்தேன்.சாரயத்தைவிட கஞ்சா எளிதில் கிடைக்கும் என்றான்.கஞ்சா குண்டலினியை எழுப்பி விடும் .ஆனால் ஆண்குறியைத் தூங்கப் பண்ணிவிடும் என்று எங்கோ கேட்டிருந்தேன்.எனக்கு அவசரமாய் குண்டலினியை எழுப்பும் அவசியம் எல்லாம் இல்லை.எங்காவது புணரப் போனால் குறி எழுந்தால் போதும்.அதுகூட சில காலம் பிசகி நபும்சகனாகத் திரிந்தேன்.
''சாராயம் என்றால் பத்து ரூபாய் சாப்''
அந்தக் காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் அது பெரிய தொகை.தயங்கினேன்''சரி.கொண்டு வா''
''ஒரு போத்தல் போதுமா சாப்?''
''இரண்டு''
அரைமணி கழித்து இரண்டு மண் எண்ணெய் பாட்டில் நிறைய லோக்கல் சரக்கும் பொறித்த மீன் துண்டங்களும் கொண்டுவந்தான்.
''மீனுக்கு காசு வேணாம் சாப்.நம் மனைவி சுட்டது''சாராயம் கூட அவள் வடித்ததாகவே இருக்கலாம்என தோன்றியது.
மூடியைத் திறந்ததும் குபீர் என்று  ஆவி அடித்தது.ஒரு மிடறு குடித்ததும் தொண்டை எரிந்தது.கண் போய் விடுமோ என்று பயம் வந்தது.மிகக் காட்டமான சரக்கு.அரைமணியில் நல்ல போதை வந்துவிட்டது.வாட்ச்மேனிடம் அவன் மனைவியின் கற்பைச் சந்தேகப் பட ஆரம்பித்திருந்தேன்.
அவன்''படுத்துக்கோ  சாப்.சற்று அதிகமாகிவிட்டது சாப்''
''யாருக்கடா அதிகம்.வேசி மகனே.பத்து ரூபாயாடா இந்த நாற்றச் சரக்கிற்கு.மிச்ச காசுக்கு உன் பொண்டாட்டியைக்  கூட்டிவாடா''
அவன் பேசாமல் எழுந்து கதவை மூடிக்கொண்டு ''குட் நைட் சாப்''என்று போன பிறகும் கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தேன்.

எப்போது தூங்கினேன்.தெரியவில்லை.விழித்தபோது அடிவயிறு கனத்தது.பாத்ரூம் போக எழுந்தேன்.கக்கூஸ் வராண்டாவின் கடைசியில் பொதுவானது.இருபது அடியாவது நடக்க வேண்டும்.போய் விடுவேனா என்று சந்தேகம் வந்தது.தலை அப்படி கனத்தது.ஏன் வாழ்வில் அப்படி குடித்ததே இல்லை.தள்ளாடி கதவுடன் போராடி திறந்து வெளியே வந்தேன்.வெளியே மழை ஹோ வென்று இரைச்சலுடன் முகத்தில் அறைந்தது.மரத்தளம் முழுக்க ஈரம்.மணி தெரியவில்லை.சாயங்காலமாய் இருக்கலாம்.இருட்டு மழையினூடே தார் போல பரவிக் கொண்டு இருந்தது.பக்கத்து அறைகளில் அரவமே இல்லை.உலகம் அழிந்துவிட்டதா என்ன..சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க முயல்கையில் தான் அவனைப் பார்த்தேன்.

ஒரு அஸ்ஸாமியன்.கழிவறை அருகே புகைத்துக் கொண்டு நின்றிருந்தான்.இருட்டில் தெரியாவிடினும் அவன் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் என உணர முடிந்தது.மெல்ல நகர்ந்து என் அருகில் வந்தான்.அவன் முகம் அத்தனை தெளிவாய்த் தெரியவில்லை.ஆனால் அவன் கண்களை மட்டும் என்னால் நன்கு பார்க்க முடிந்ததுஒரு மிருகத்தின் கண்கள்.நான் ''கோன்?''என்றேன் அதட்டலாக.ஏனோ பயமாய் உணர்ந்தேன்.அவன் பதில் சொல்லவில்லை.அப்போதுதான் அவன் கையில் இருந்த பெரிய கத்தியைப் பார்த்தேன் .கூர்க்காக்கள் வைத்திருக்கும் குக்ரி என்ற வளைந்த கத்தி.
சட்டென்று அந்த கை நீண்டது.என் இடது விலாவில் பெரிய வலிப் பந்து வெடித்தது.

அடுத்த கணங்கள் தெளிவற்றவை.நான் கீழே விழுந்து கொண்டே இருந்தேன்.முடிவிலாத ஒரு பள்ளத்துக்குள் கால்களே  இல்லாதவன் போல..அவன் என்னைக் குத்திக் கொண்டே இருந்தான்.அவன் கண்களின் பிரகாசம் கூடிக்கொண்டே போனது.மழை பெய்துகொண்டே இருந்தது....

Monday, July 26, 2010

உறங்காப் புலியும் அடங்காப் பசியும்

ஒரு
மழைநாளின் மதியம்
மல்லி மாமி வீட்டு
மாடியறையில்
ஆரம்பித்தது அது.

விடியும் முன்பே
உதித்துவிட்ட
சூரியன்போல
முதிராது
சுடர்ந்த தீ
அணையாத
அனல் பூவாய்
உடலெங்கும்
கிளர்ந்து படர்ந்தது.
எழுப்பியவள்
உறங்கிய  பின்னும்
அந்த
ரகசிய விழிப்பின்
ருசி
மன நாவில்
இருந்துகொண்டே இருந்தது

இரவுகளில்
விட்டம் நோக்கி எறிந்த
பெருமூச்சுகளாய்
தலையணை அழுத்தல்களாய்
கால்கள் நடுவில்
கைகளாய்
மஞ்சள் படர்ந்த
புத்தகங்களாய்
நீலம் ஓடும்
பிம்பங்களாய்
மதில் தாண்டிக்
குதிப்பவனாய்
குளியலறைகளில்
ஒளிந்து பார்ப்பவனாய்
அகலிகைகள் தேடும்
இந்திரனாய்
அரை மலர்களை 
உதிர்த்துப் 
புஷ்பிப்பவனாய் 
நிழல் தெருக்களில் 
திரிபவனாய் 
பேருந்துகளில் 
பின்பக்கம் 
உரசுபவனாய் 
வேலைக்காரிகளின் 
உள்ளாடைகளை 
முகர்பவனாய் எல்லாம் 
என்னை 
மாற்றிக்கொண்டே இருந்தது 
அது.


எல்லாப் பெண்களையும் 
கொஞ்சம் மயிரும் 
சதைத் துண்டுமாய் 
மாற்றி விட்ட 
அந்த 
மழைக்கால மதியத்தை 
சபித்தபடியே 
வழியோரம் காத்திருக்கிறேன் 
அடங்காப் பசியோடு 
அலையும் மிருகமாய் ..

தோல்வியின் சுதந்திரம்

சட்டென்று
ஒரு சொல் வீசி
நம்
காதலை உடைத்தாய் .
என்
உதிர்ந்த புன்னகையின்
ஓரங்களைச்
சேகரிப்பது
அத்தனை எளிதாக
இல்லைதான் ..
விடாது கசியும்
ரத்தமாய்
கவிதைகள்
கொப்பளித்துக் கொண்டே இருந்தன.
நான்
முற்றிலும்
உடைந்துவிடாமல் இருக்க
இரவு பகலாய்
எழுதிக்கொண்டே இருந்தேன்
உன்
கடைசிச் சொல்லுக்கான
மறுமொழிகளை.
சட்டென்று
கவிழும்
மழை இருட்டு போல
நீ
என்மேல்
வீசிவிட்ட
அடர் தனிமையைக் கிழிக்க
என்னென்னவோ செய்தேன்
புகை வளையங்கள்
மதுக் கோப்பைகள்
சதைக் குப்பைகள் ..
காதலில் தோற்றவர்கள்
அலையும்
அத்தனை
முட்டுச் சந்துகளிலும்
நினைவற்று
விழுந்து கிடந்தேன்.

ஆனால்
திடீரென்று
ஒரு நாள்
காய்ச்சல் தீர்ந்தவன் போல
திரை விலகி
எழுந்தேன்..
இனி நான்
உனக்காய்
காலையில்
பதற்றத்துடன் எழுந்து
பஸ் நிறுத்தங்களில்
நிற்க வேண்டாம்
மாலைகளில்
உன்னைச் சந்திக்கும்
சில நிமிடங்களுக்காக
என் மொத்த நாளையும்
வடிவமைத்துக் கொள்ள வேண்டாம்
நீ சிந்தும்
ஒவ்வொரு சொல்லையும்
கவிதையாக்க  வேண்டிய
கட்டாயம்
இனி இல்லை என அறிந்தேன்.

ஒரு
பெரும் பாறை போல
என் பார்வைக் கோணம்
முழுதும்
நீயே மறைத்திருந்தாய்
என்பதை
அப்போது  உணர்ந்தேன்..

அட
உன்னைத் தவிரவும்
இவ்வுலகில்
நிறைய விசயங்கள்
இருந்திருக்கின்றன..

இப்போதெல்லாம்
மழையையும்
வானவில்லையும்
நிலவையும்
மலரையும்
உன்னுடன்
தொடர்புப் படுத்தாமலே
ரசிக்கிறேன் ....

ஒரு
கோப்பை
சூடான தேநீருடன்
காதல்
பேசாத
ஒரு புத்தகத்துடன் மட்டுமே
இம் மழைக்காலத்தை
நிம்மதியாய்க்
கடந்துவிடுவேன் நான்..

Thursday, July 22, 2010

பறப்பதே பறவை

என்னைக்
கவிதை செய்
என்றது பறவை.
எத்தனை முயன்றும்
அதன் சிறகுகளைக் குறிக்கும் 
சொற்கள் மட்டும்
காகிதத்தில் 
நிலையாது திரிந்தன.
சற்று நேரம்
பறக்காதிரு என்றேன்.
'பறவை 
என்பது பறப்பதே'
என்று சொல்லிப்
பறந்தது பறவை.

Wednesday, July 21, 2010

எந்திரன்

நான்
ஒரு கதை சொல்லி
என்று வந்தான்  அவன்.
உங்கள்
நாட்குறிப்புகளைக்
கொடுங்கள்.
உங்கள் வாழ்வைக்
கதையாய்ப்
பின்னித் தருகிறேன் என்றான்

என் நாட்கள் யாவும்
நகல்களால் நிரம்பியவை
எனினும்
தன்கதையைப்
பிறர் பேசக் கேட்கும்
அற்ப ஆசை
என்னையும் தொட்டது,

சில காலம் கழித்து
ஏமாற்றத்துடன்  வந்தான் .
'மன்னிக்கவேண்டும்
நான்
ஒரு
அறிவியல் கதை சொல்லி அல்ல.
இயந்திரங்களைப்
பற்றி எழுத
எனக்குத் தெரியாது.'
என்றான் வருத்தமாய்..

Monday, July 19, 2010

கேப்சூல் கவிதைகள் 3

1.கிழிந்த குடை .
ஆயினும்
நீ
நனைவாய் என்று
ஓடி வந்தேன்.
அதற்குள்
எவர் காரிலோ
போயிருந்தாய்..

2.நான்
ஒரு ரசவாதி.
உன்
புன்னகை
ஒன்று கொடுத்தால்
கவிதையாய் 
மாற்றித் தருகிறேன்.

3.தொடர்ச்சியாய்
தோற்றுக் கொண்டிருந்த
சாத்தான்
இறுதி நகர்த்தலாக
காமத்தை
கடவுளுக்கு எதிராய்
நிறுத்தினான்.
கடவுள்
தோற்க ஆரம்பித்தான்..

குற்றம்

வெளியில்
சென்றிருந்த நாய்
வீடு
திரும்பி
குட்டிகளைக் காணாது
தவித்தது.
ஊரெல்லாம்
தேடி அலைந்தது
ஊளையிட்டு அழுதது.
படி இறங்கவிடாமல்
என்னிடம்
வாலாட்டி முறையிட்டது.

தூக்கம்
தொலைகிறது என்று
நான்தான்
துணியில் சுற்றி
தூரதேசத்தில்
தொலைத்துவிட்டு வந்தேன்
என்பதை
அதற்கு
சொல்லவில்லை...

Sunday, July 18, 2010

உடல் தத்துவம் 2

எச்சரிக்கை;கண்டிப்பாக வயது வந்தவர் மட்டும் 

ஏறக்குறைய ஒரு டாக்டரின் கிளினிக் போல தான் இருந்தது அவள் வீடு.டோக்கன் மட்டுமே தரவில்லை.உள்ளே இடமில்லாமல் வெளியே சணலால் பின்னிய கட்டிலில் சர்க்கஸ் போல் அமர்ந்து சற்றுதொலைவில் கங்கை வெட்கமில்லாத ஸ்திரீ போல் போடும் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு மோட்டா கொசுக்களை பொளேர் என்று தொடையில் அறைந்து ரத்தம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டு தரையில் இரண்டுக்குப் போகிற ஆசனத்தில் தார்பாய்ச்சல் வேட்டியுடன் பூச்சிமருந்து உண்மையில் பயிருக்கு நல்லதா மாட்டுச் சானமா என்று பேசிக்கொண்டிருக்கும் உத்திரப் பிரதேச விவசாயிகள் பிடிக்கும் கடின நெடி சுருட்டுகளை வெறுத்துக் கொண்டு இருக்கையில்தான் அவரைப் பார்த்தேன்.

தொளதொள பைஜாமாவும் டைட்டான குர்த்தாவுமாக ஆனால் இரண்டும் அழுக்காக பளபளக்கிற வெண்ணிறத்தில் பளபளக்கிற வழுக்கையுடன் ...முகமெல்லாம் தினமும் எருமை வெண்ணை கொண்டு தேய்ப்பார் போல டாலடித்தது.சுத்தமாக ஒரு மயிர் கூட முகத்தில் இல்லை.மற்ற இடங்களில் எப்படியோ.புருவத்தைக் கூட பென்சிலில் எம்.ஜி.ஆர் மீசை போல வரைந்திருப்பாரோ என்று சந்தேகம் வரும் அளவில்தான் இருந்தது.எனக்கு எப்பவுமே மயிரில்லாத ஆண் பெண் இருவரையும் பிடிப்பதில்லை.ஆனால் பாருங்கள் நான் காலத்துக்கு எதிராக செல்கிறேன்.இப்போது எல்லாம் அந்தரங்க உறுப்புகளில் கூட ஷேவ் செய்து மழமழவென்று பட்டர்பன் போல வைத்திருக்கிறார்கள்.அதற்கென்று தனி ரேசர்கள் கூட வந்துவிட்டன.வயதுக்கு வந்துவிட்டார்களா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சரி.அதெல்லாம் நமக்கென்ன.மயிரே போச்சு.ஆனால் மயிர் போனால் உயிர்விடும் பரம்பரை அல்லவா நாம்?லா.ச.ரா கூட இதுபற்றி [கவரிமான் பற்றி சார்.நான் சொன்ன கன்ட் ரேசர்கள் பற்றி அல்ல]எழுதியிருக்கிறார்.நிற்க.இந்த மருந்துக்கு கூட மயிரில்லாத ஆஜானுபாகு [இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்னவென்று ஒரு பயலுக்கும் தெரியாது என்று சவால் விடுகிறேன்]மனிதர் தன் பையில் இருந்து ஹூக்கா ஒன்று எடுத்து 'சில்லம்?என்றார்.
''இல்லை.பழக்கம் இல்லை''என்றேன் ஹிந்தியில்.
அவர் பற்றவைத்துக் கொண்டு ஆழமாய் இழுத்தார்.''மதராசி?''
''ஆமாம்''
''காசிக்கு எதற்கு வந்திருக்கிறீர்கள்''
நான் அபத்தமாய்''காசியைப் பார்ப்பதற்கு''
அவர் சற்று கோபமாய்''நாங்கள் எல்லாம் பிறகு வேசியை பார்ப்பதற்கா வந்திருக்கிறோம்?''
''ஏன் இருக்க கூடாது.வேறெந்த இடத்தைவிடவும் இங்குதான் வேசிகள் தரமாகவும் சல்லிசாகவும் கிடைக்கிறார்கள்''
அவரை அந்த பதில் ரொம்பவே கவர்ந்துவிட்டது போலும்.''எஸ்.யூ ஆர் ரைட்.''என்றார்.என்னை சற்று ஆழ்ந்து பார்த்தார்.''இல்லை.நீங்கள் இதற்காய் காசிக்கு வரவில்லை.''என்றார்.
நான் சற்று அசவுகர்யமாய் உணர்ந்தேன்.அப்போது நான் ஒரு குழப்பமான காலகட்டத்தில் இருந்தேன்.நான் அந்தரங்கத்தில் நேசித்த ஒரு நபர் தற்கொலை செய்து இறந்திருந்தார்.அவரை அந்நிலைமைக்கு தள்ளியவர்களில் நானும் ஒருவராய் இருக்கக் கூடுமோ என்ற குற்ற உணர்வு என்னை அலைக்கழித்தது.அவர் இறந்தபிறகு அவர் மீது என்னுள் இருந்த காதல் இன்னும் பலமடங்கு ஆக்டோபஸ் போல பெருகி என் கழுத்தை இறுக்கியது.ஊர் ஊராய் அலையவைத்தது.யாரோ காசிக்குப் போகச் சொன்னார்கள்.காசி எல்லா பாவங்களையும் ஜீரணித்துவிடும் எனறார்கள்.நானோ காசிக்கு வந்து புதிய பாவங்கள் செய்வதற்காக க்யூவில் காத்திருக்கிறேன்!
''ஆம்.நான் காசிக்கு வந்தது கொஞ்சம் நிம்மதியும் ஞானமும் தேடி''
அவர் கடகடவென்று சிரித்து''இரண்டும் எதிர் எதிரான விசயமாயிற்றே''என்றார்.''ஞானம்!அதை எப்படி கண்டுகொள்வாய்?அது எப்போதாவது உன்னிடம் இருந்திருக்கிறதா என்ன?''
எனக்கு அந்தக் கேள்வி புரியவில்லை.அறிவிருக்காய்யா உனக்கு என்கிறாரா.
''ஏற்கனவே உங்களுக்கு தெரியாத பரிச்சயம் இல்லாத விஷயத்தை உங்களால் எப்படி தேடமுடியும்..கிடைத்தாலும் கண்டுகொள்ளமுடியும்?''
''மன்னிக்கணும் ஐயா.என்ன சொல்லுகிறீர்கள்''
''நீ ஞானத்தையும் ஒரு அனுபவம் ஆக்கி தேடி அலைகிறாய்.இதோ இந்த வேசியின் புணர்ச்சி அனுபவம் போல.அதற்காக எங்கெங்கோ போகிறாய்.காத்திருக்கிறாய்.ஞானம் ஒரு அனுபவம் அல்ல.அது அடையக் கூடியது அல்ல.'
''பிறகு நாம் என்னதான் செய்வது"
''சும்மா இரு.மாயை என்பது புதைசேறு மாதிரி .வெளியே வர நீ செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அதிலேயே மூழ்கடிக்கும்''
நான் சற்று சீண்டப்பட்டு''இந்தியாவில் பாதிபேர் சும்மாதான் வேலையற்று டீக்கடை பெஞ்சுகளில் பல் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் ஞானிகளா"'
அவர் சிரித்து''நீ ஞானத்தைத் தேடுகிறாயா.ஞானிகளையா?'
''ஞானிகளிடம் ஞானம் இருக்காதா என்ன''
''இருக்கலாம்.அது அவன் ஞானம்.உனக்கு எவ்விதம் உதவும்''
நான் சட்டென்று வெளிச்சமடைந்து''நீங்கள் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி விசுவாசிதானே''என்றேன்.
''யார் அது.பெரிய பெரிய பெயர்களை என் மேலே எறியாதே.''
அந்த சமயத்தில் உள்ளே போன ஆள் வேட்டியை சரிபண்ணியபடியே வெளிவந்தான்.அடுத்த முறை நான்தான்.எழுந்து உள்ளே போகையில் வாய் நிறைய பான்சிவப்புடன் கிழவி வந்து''குழந்தைக்கு திடீர் என்று ரத்தப் பெருக்கு ஆகிவிட்டது பாபு''என்றாள்

நான் வெறுப்புடன் வெளியே வந்தேன்.ஏறக்குறைய ஆறுமாதங்களாக சேர்த்துவைத்து இருந்த காமம்.''எல்லோரும் போய் கரமைதுனம் செய்யுங்கள்.தேவடியாளுக்கு தீட்டாகிவிட்டதாம்''என்று கத்தினேன்.
விவசாயிகள் ஆசனத்தை உதறி ''கோபம் வேண்டாம்.சாப்.ரம்பா இல்லாவிட்ட்டால் கும்பா இருக்கிறது''என்ற பொருள் வரும்படி ஹிந்தியில் ஒரு பழமொழி சொல்லி சிரித்தார்கள்.
அவர் ''வேசிகளுக்கு எப்ப்போது பெருகும் நிற்கும் என்று பிரம்மனுக்கு கூட தெரியாது''என்றார்.''சரி.பார்க்கலாம்''
நான் சற்று தயங்கி''நானும் உங்களுடன் வரலாமா''
''எதற்கு.என்னிடம் உனக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை.நானும் உன்னைப் போல ஒரு பிச்சைக் காரன்தான்.இரண்டுபேராய் சேர்ந்து பிச்சை எடுத்தால் இரண்டுபேருக்குமே கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது''என்றார்.பிறகு ஏமாற்றமான என் முகத்தைப் பார்த்து ''சரி.விதி வலியது''
கொஞ்ச நேரம் கங்கைக்கரையில் நடந்து ஒரு பரிசலைப் பிடித்தோம்.எங்கு போகிறோம் என்று கேட்டாலும் பதில் சொல்லவில்லை.பரிசல்காரபாய் பழக்கம் ஆனவன் போல் இருக்கிறது.அவனுக்கு ஒற்றைக்கண் இல்லை.அவனது சொத்தைபல் சிரிப்பு விகாரமாய் இருந்தது.
சந்திநேரம் அது.கரையில் இருந்த மரங்களில் பறவைகள் பெரும் கூச்சலுடன் அடைந்துகொண்டிருந்தன.தூரத்தில் கங்கா ஆரத்தியின் தீபத்துளிகள் தெரிந்தன.ஊறி வெளுத்த  பிணம் ஒன்று குப்புற மிதந்தவாறே பரிசலில் வந்து மோதியது.பாய் அதை 'சல்'என்று துடுப்பால் தள்ளிவிட்டான்.பெண் பிணம்.அதன் முதுகு ஏற்கனவே மீன்களால் குதறப் பட்டு சிவந்த மாமிசம் தெரிய அதன் மார்புகள் நீரில் பலூன்கள் போல அலைந்துகொண்டிருந்தன.கரையில் இருந்தே மோப்பம் பிடித்துவிட்ட நாய்கள் சில தலையை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு ஆவேசமாய் நீந்திவந்து கொண்டிருந்தன.பெரிய கழுகு ஒன்று மேலே வட்டமாய் மிதந்து கொண்டே இருக்க.அவர் என்னைப் பார்த்து ''கொஞ்சம் மாமிசம் சாப்பிடலாமா.மற்ற எந்த மிருகங்களை விடவும் மனித இறைச்சியைச் சாப்பிட மனிதனுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது ''என்றார்.

Saturday, July 17, 2010

உண்ணாமுலை

பழகாத சொல்
ஒன்றுக்கு
பதறி
பாலிடால் குடித்து
செத்துப் போனாள்
பச்சைப் பிள்ளைக்காரி.

அறியாத குழந்தை
நினைவில்
இறவாத முலையை
இழுத்துச் சப்பும்
இன்னும்..

Thursday, July 15, 2010

நீத்தார் கடன்

எப்போதோ
இறந்துபோன
அம்மா
நேற்றிரவு
கனவில் வந்தாள் .

வாஸ்து சரியில்லை
என்று
முன்தினம்
வெட்டி எறிந்த
வேப்பமரமும்
உடன் இருந்தது.

Wednesday, July 14, 2010

முகவரி அற்றவரின் சிரமங்கள்

எங்கு போனாலும்
எங்கிருந்து வருகிறீர்கள்
என்ற கேள்வி..
இங்கிருந்துதான் என்பேன்
பொதுவாய்..
நீ சொல்லும்
'இங்கிருந்து '
எங்கிருக்கிறது? என்பார்கள்
அங்கேயே வேர்விட்டு
நிலைபெற்றவர்கள்.
இங்குதான்
எங்கேயோ இருக்கிறது
என்றால் புரிவதே இல்லை அவர்களுக்கு..

Monday, July 12, 2010

உடல் தத்துவம் 1

Disclaimer;இந்த கதை வயதுக்கு வந்தவருக்கு மட்டுமே என்று முதலிலேயே எச்சரித்துவிடுகிறேன் ஆகவே குழந்தைகள் சிறுவர்கள்  எல்லோரும் இந்தப் பக்கத்தைப் புறக்கணித்துவிட்டு அம்புலிமாமா படிக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்
                        ''நீங்கள் எப்போதாவது எழுத்தாளராக விரும்பியது உண்டா?சங்கரன்பிள்ளை என் டயரியைப் படித்துவிட்டு வியப்புடன் கேட்டார்.நான் பிறவி எழுத்தாளன் என்று சிரித்தேன். நான் என் மனசுக்குள் எப்போதும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.அது ஒரு வியாதி மாதிரி ஆகிவிட்டது.நான் அழுதால் கூட கொஞ்சம் கவிதையாக தான் அழுவேன்.யாரும் மணி என்ன என்று கேட்டால் கூட சற்று இலக்கிய முலாம் பூசிய நேரம்தான் அவர்களுக்கு கிடைக்கும்.
                                                        சின்ன வயதில் கல்லூரி முதல் வருடம் படிக்கையில் அய்யங்கார் பெண்ணைக் காதலிக்கையில் ஆற்றங்கரை மண்டபத்தில் நான் படித்த கச்சடாவை எல்லாம் நீட்ஷே முதல் ரமண மகரிஷி வரை அவளிடம் பிதற்றி இருக்கிறேன்.அவளும் அவர்கள் எல்லாம் யார் என்று தெரியாவிட்டாலும் வாயை  அரை இன்ச் திறந்து வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருப்பாள். ஒரு அழகான பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு நீட்ஷே  பேசின அதிமுட்டாள் நானாக மட்டும்தான் [உலக வரலாற்றிலேயே] இருப்பேன் என்பதை நீட்ஷே கூட ஒத்துக் கொள்வார்.ஆனால் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது புரிகிறது.நாகேஷ் மாதிரி இருப்பேன் அப்போது.ஆகவே எதை வைத்து அவளை இம்ப்ரெஸ் செய்வது?பிராமணப் பெண் வேறயா..குறியின் நீளம் மட்டும் போதாது அறிவின் விசாலமும் வேண்டும் என நான் நினைத்திருக்க வேண்டும்.
                                                                                                அந்த அனுபவம் எனக்கு ரொம்பப் பிடித்துப் போயோ என்னவோ இப்போதும் பதினைந்து வருடம் கழித்தும் அவள் புத்திசாலித்தனமாக சுயஜாதியிலேயே கைக்கு அடக்கமாய் ஒரு பையனை கல்யாணம் பண்ணி சென்று விட்டால் கூட  எனது எல்லா மன சம்பாசனைகளையும் அவளுடனே பண்ணிக் கொண்டிருக்கிறேன்.நேற்றுகூட அவளிடம் பேசினேன்.இந்த கெட்ட பழக்கத்தை எத்தனையோ அழிரப்பர் போட்டு அழிக்க முயன்றும் முடியவில்லை.இதைப் பற்றி பம்பாயில் [எனக்கு 'மும்பை' பிடிக்கவில்லை] ஒரு உளவியல் மருத்துவரிடம் கேட்டதற்கு ''அதை அப்படியே விட்டால் என்ன?ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது.சிலர் எல்லாவற்றையும் காட்சிகளாக நினைவு வைத்திருப்பார்கள்.சிலர் ஒலிகளாக.நாம் எப்போதும் உள்ளுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறோம்.சிலர் தன்னைத் தானே விளித்து பேசுவார்கள்.சிலர் பிறரை.இன்று காலையில் வரும்போது மனைவியுடன் ஒரு பிணக்கு. நான் மருத்துவமனைக்கு வந்து விட்டேன்.ஆனால் என் மனம் இன்னும் வரவில்லை.அவளுடன் இன்னமும் கத்திக் கொண்டிருக்கிறது.நாம் எதையும் முழுமையாகச் செய்வதில்லை.அதுதான் பிரச்சினை.ஆனால் நமக்கு பித்து பிடித்துவிடாமல் இது போன்ற கெட்ட பழக்கங்கள் தான்  காப்பாற்றுகின்றன.''

ஆற்றங்கரையில் தனியிடங்களில் மாரையோ இடுப்பையோ தடவ முயற்சிக்காமல் நீட்சே பேசிக்கொண்டிருந்ததுதான் இதன் காரணமோ..அவளை அக்கணம் அங்கேயே வைத்து முடித்திருக்க வேண்டுமோ.பிராய்ட் சொன்னதுபோல் இனப்பெருக்க இச்சை மிகவும் பலமானதாக தான் இருக்கவேண்டும்.ஒரு இரண்டு நிமிட காரியத்தைப் பண்ணாமல் விட்டது இருபது வருடம் துரத்துகிறதே.அவர் இன்னமும் சொன்னார்.''ஒவ்வொருவர் மனதிலும் நிறைய பூதங்கள் தூங்குகின்றன.ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி எழுதிவைத்திருக்கிறது.யாராவது தப்பித் தவறி எழுப்பிவிட்டால் அதை முடிக்கும் வரை தூங்காது''

எதற்காக இதை எல்லாம் சொல்லவந்தேன் என மறந்துவிட்டேன்.வயசாச்சோல்லியோ?இந்த மேயில் முப்பத்தி ஆறு.காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி இருந்தால் மூத்த பெண் சமைந்திருப்பாள் என்று அம்மா அடிக்கடி சொல்கிறாள்.கல்யாணம் பண்ணாமலே எனது பெண் ஒன்று போன வாரம் வயசுக்கு வந்தது.அழைப்பு கூட வந்தது.போகவில்லை.ஏதோ அசட்டுத்தனமான உணர்ச்சி.முருகேஸ்வரி அத்தை ''வந்துரு என்ன''என்றபோது அபத்த நாடகம் போல் இருந்தது.அவள் இப்போது சிலப்பதிகாரத்தில் சொல்லும் சவுக்கப் பூதம் போல் ஆகிவிட்டாள்.பழைய கொடி உடல் கோமளம் அல்ல.ஆனால் கண்களில் அந்த கள்ளச்சிரிப்பு மாறவே இல்லை.''வந்துரு என்ன!''

இப்படியாக என் கூடப் படித்தவர்களும் கூடப் படுத்தவர்களும் அடுத்த தலைமுறைக்கு தாவிப் போய்விட நான் மட்டும் இன்னமும் பொண்டாட்டி கை சோறு தெரியாமல் அலைகிறேன்.பதினெட்டு வயதில் தாவரவியல் இரண்டாம் ஆண்டு ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் படிக்கையில் ஓடிப் போனேன்.காரணம் முன்பு சொன்ன முருகேஸ்வரி அத்தை.ஒரே நாள் தென்னந்தோப்பில் வைத்து அரை இருட்டில் நெஞ்சு துடிக்கும் பதட்டத்தில் எதை எங்கே வைத்தேன் என்று எனக்கே தெரியாது நடந்த விசயத்தில் ...திடீர் என்று ஒரு நாள் வீட்டுக்கு வந்து 'தனக்கு நாள் நின்றுவிட்டதாக' போட்ட குண்டு.

அப்பா ஊர் பிடாகைத் தலைவர்.மாமா குஸ்தி பயில்வான்.[ஆனால் 'அதில்' ரொம்ப நோஞ்சான் என்று பிறகே தெரிந்தது]கடைசி பஸ் ஏறி நெல்லை போய் பம்பாய் எக்ஸ்பிரஸ் பிடித்து  கழிவறை அருகே அமர்ந்து இரவெல்லாம் குளிரில் நடுங்கியபடி ஒவ்வொரு போலிஸ் காரனையும் பார்த்து நடுங்கியபடியே போனேன்.கையில் மாணவர்கள் என்எஸ் எஸ் பண்ட் அம்மா நெல்புரையில் வைத்திருந்தது என்று முன்னூறு ரூபாய் வைத்திருந்தேன்.அதனால் பட்டினி எல்லாம் இல்லை.பம்பாய் ஸ்டேசனில் மொத்த பணமும் பிக்பாக்கெட் ஆகிறவரை வழியில் கிடைத்த அத்தனை சமாச்சாரமும் வாங்கித் தின்று ஆரம்ப பயம் எல்லாம் விலகியபிறகு கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தது.

அங்கு ஐந்து வருஷம் இருந்தேன்.ஒரு நாள் இரவில் திடீர் என்று புறப்பட்டு ஊருக்கு வந்தேன்.ஒரு மாதம் முன்பு தான் அப்பா இறந்து விட்டிருந்தார்.எதுவும் உள்ளுணர்வா என்று தெரியவில்லை.முருகேஸ்வரி 'நீ ஏன் திடீர்னு ஓடிப் போனே?''என்று பச்சைப் புள்ள மாதிரி கேட்ட போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.இதற்குள் எனக்கு பெண்களின் உலகம் லேசாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது.இந்த இடைவேளையில் நான் விதம்விதமான பெண்களைப் பார்த்திருந்தேன்.வெவ்வேறு இன, ரூப பெண்களுக்கு தாசனாய்,எஜமானனாய்,நண்பனாய் ,காதலனாய் ஏன் மாமாவாய் கூட இருந்து விட்டேன்.

நான் பெண்களைப் பேய் என்று சொல்லும் சித்தனும் இல்லை.அவர்களை வழிபடும் சாக்தனும் இல்லை.காமத்துக்காக மட்டுமோ அல்லது அம்மா சொல்வதுபோல் 'வயசுக் காலத்தில் மூத்திரச் சட்டி தூக்க 'என்று மட்டுமோ ஒரு பெண்ணை மணக்க சித்தமாய் இல்லை,[துரதிர்ஷ்ட வசமாக நான் ஒரு ஹோமோ இல்லை ஆதலால் எந்த ஒரு ஆணையும்]

அந்தப்  பெண்ணைப் பார்த்தால் அப்படியே அலை அடித்து இழுத்துப் போவது போல் ஆகிவிடவேண்டும் என்பது போன்ற கற்பனைகள் வைத்திருந்தேன்.இது தவிர துறவு என்ற விசயத்தின் மீது வேறு ஈர்ப்பு இருந்தது.காரணம் காசியில் நான் சந்தித்த ஒரு சாமியார்.

அவரைச் சாமியார் என்று சொல்லலாமா தெரியவில்லை.சாமியாருக்கான எந்த குறிகளும் இல்லாத சாமியார் அவர்.அவரைப் பார்த்த இடமும் காசியில் எலி போகும் இடமெல்லாம் இருக்கும் இருக்கும் கோயில்களில் ஒன்றில் அல்ல.அவரைப் பார்த்தது காசியில் ஒரு வேசியின் வீட்டில்.[காசியில் ஒரு வேசி!நன்றாக இருக்கிறதல்லவா]

அந்த வேசி சற்று பிரபலம் ஆதலால் அவளுக்காய் காத்துக் கொண்டிருக்கையில் தான் அவரைச் சந்தித்தேன்.

Sunday, July 11, 2010

மகளே இறந்துவிடு

பிறந்த குழந்தை
கை அளவே இருந்தது .
குறைப் பிரசவம்.
பிழைக்குமா தெரியாது
பிழைத்தாலும்
பெரிய செலவாகுமாம்..
கிழிந்த துணி போல்
கூட்டுக்குள்
அசைவின்றி கிடந்தது.

எட்டிப் பார்த்த அவர்
சின்னக் கை அழுத்தல் கூட
இல்லாமல் போனார் .
எவ்வளவு செலவாகும்
என்று
வேண்டுமென்றே சத்தமாக
வராண்டாவில் பேசுகிறார்கள்.

கண்ணீர் பெருகி
படுக்கையை நனைத்தது
பால் பெருகி
நெஞ்சு வலித்தது.

மிருகங்களாய்க் கலந்து
பூஞ்சையாய்
ஒரு ஜீவனைப் பூத்து
அதன் முகம் கூடப்
பார்க்காது
ஓடுகிறார் அவர் .

மாமியார்
ஒரு
அழுகிய பொருளைப்
பார்க்கும் பாவனையுடன் சொன்னாள்
''எங்க பரம்பரையில்
யாருக்கும் இப்படி கிடையாது''

மேலே மின்விசிறி
என் வாழ்க்கை போல்
சுற்றுகிறது .
சுவர்களில் நீளும்
பல்லியின் நிழல்களை வெறிக்கிறேன்.

யாரும்
நம்பிக்கையாய்ப் பேசவில்லை.
பிழைத்தாலும்
மூளை வளர்ச்சி இருக்குமா
என்று சந்தேகம் அடைகிறார்கள்

கை ஊன்றி எழுந்து
கூண்டுக்குள் தூங்கும்
என் தலைச்சன் பிள்ளையைப்
பார்த்து
கண்ணீர் வழிய சொல்கிறேன்
''மகளே இறந்து விடு''

Friday, July 9, 2010

கவிதாபலன்

கவிதைகளினால்
என்ன பயன்
என்ற புரட்சியாளனிடம்
குறைந்தபட்சம்
கவிதை படிக்கும் நேரத்தில்
கொல்வதில்லை
வன் புணர்வதில்லை
யாரையும் வீழ்த்த
சதி செய்வதில்லை என்றேன்

ஆனால்
இதெல்லாம்
பிறர் செய்கையில்
மனம் மூடி
கவிதை
படித்துக் கொண்டிருக்கிறீர்களே
என்றதற்கு
பதில் தெரியாது
இன்னொரு
கவிதை
படிக்க ஆரம்பித்தேன்

Thursday, July 8, 2010

நாய்க்கவிதை சுலபம் அல்ல

பூனைகள்
போல் அல்ல
நாய்களைப் பற்றி
கவிதை சொன்னால் 
சில
பிரச்சினைகள் உண்டு

அவற்றை
நாய்களிடம் சொன்னால்
தங்களைக் குறிக்கவில்லை
என்பதுபோல்  வாளாவிருக்கும்

மனிதரிடம் சொன்னால்
தங்களைத்தான் குறிக்கிறது
என
வருத்தம் வரும்

நாய்க் கவிதைகள்
சுலபம் அல்ல

Tuesday, July 6, 2010

கேப்சூல் கவிதைகள் 2

1.மாற்றித் தர
மறுத்து விட்டார்கள்
வாங்கும்போதே
ஓரத்தில்
உடைந்திருந்தது நிலா.

2.எங்கிருந்தோ வந்து
என் வீட்டில்
இறந்துபோன
வெட்டுக் கிளியை
எரிக்கவேண்டுமா
புதைக்க வேண்டுமா

3.என் வீட்டில்
ஒரு நாய் இருந்தது.
எல்லாரையும் கடித்தது.
பிடித்து
கொட்டடியில் விட்டோம்.
எங்கள்  ஊரில்
ஒரு ரவுடி இருந்தான்.
எல்லாரையும் அடித்தான்
சட்டசபையில்
விட்டுவிட்டோம்

Saturday, July 3, 2010

இறப்பென்பது மரணம் அல்ல

கனவில் கண்ட
பறவையாய்
காலம்
பறந்து போயிற்று
கூடவே
படிக்க,பாட நடிக்க,எழுத
உதவ,உடுத்த
காதலிக்க,காமம் செய்ய
என்று எல்லா கனவுகளும்..

நான்
வானவில்லுக்காக
ஏங்கிக் கொண்டிருக்கையில்
கூடவே வந்த
பட்டாம்பூச்சி
ரயில் சக்கரங்களில்
சிக்கி
கிழிந்துபோனது

புறமுதுகு இருட்டில்
காத்திருக்கும்
சர்ப்பமாய் காலம்
எப்போதோ
நிகழ்ந்த
மரணத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள
காத்திருக்கிறது

இறப்பென்பது
மரணம் மட்டும் அல்ல

Friday, July 2, 2010

கேப்சூல் கவிதைகள் 1

1.மின்மினிப் பூச்சிகள்
அமரும்
முட்செடி
கிராமத்துக்
கிறிஸ்துமஸ் ட்ரீ!

2.கோலங்கள் போட
குனிந்த பெண்ணின்
மார்பில்
நெருடும் வேலியாய்
மரபு.

3.அவள்
சிவந்த கழுத்தோரம் மச்சம்
மாலைச் சூரியனில்
தகதகக்கும் கடலில்
அலையும் படகு.

Thursday, July 1, 2010

உயிர்த்தெழல்

தீய்ந்து கிடந்த
விதைகளிலும்
எங்கோ
ஒளிந்து கிடந்திருக்கிறது
உயிர்ப் பச்சை

துளி ஈரம் பட்டதும்
தளிர்த்து எழுந்தது
ஆவேசமாய்

தன் நடுவே
புதிதாய்
கிளர்ந்திருக்கும்
விரிசலை
அறியா வீடு
உறங்குது
அமைதியாய்...

LinkWithin

Related Posts with Thumbnails