Wednesday, July 27, 2011

இரு காட்சிகள்

                                                                      


                                                
                                                            1


எல்லாம் முடிந்ததும் 
மீண்டுமொரு முறை 
''இதை ஏன் நாம் செய்கிறோம்''என்று கேட்டாள் கசப்புடன் 
''ஏன் என்றறிந்தால் 
எதையுமே செய்யமாட்டோம் அல்லவா.''.
என்றவன் 
சட்டையை மாட்டியபடியே கீழிறங்கினேன் 
தெருவில் ஒரே சத்தம் 
யாரோ ஒருவன் வேகமாய் 
கையில் 
ரத்தம் சொட்டும் தலை 
ஒன்றைத் தூக்கிக் கொண்டு 
வீசி வீசி நடந்து வந்து கொண்டிருந்தான் 

பின்னால் ஓடி வந்தவர்கள் 
எல்லோரும் 
அவன் 
கையிலிருந்த தலையையே 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
நான் மட்டும் 
அவன் முதுகில் முறுக்கிக் கொண்டிருந்த சாவியை..

கூட்டம் கடந்ததும் 
அண்ணாந்து 
மாடியில் நின்றுகொண்டிருந்த 
அவளைப் பார்த்தேன் 
ஏன் என்ற கேள்வி 
அவள் கண்ணில் 
இன்னமும் இருந்தது 
''ஏனோ''என்றபடி 
நடக்க ஆரம்பித்தேன்.

                              
                                                            2

நாம் பிரிந்துவிடுவோம்
என்று கெஞ்சினாள் அவள்..

கடற்கரை இருளில்
காகங்கள் கத்துவதை
திடீரென்று நிறுத்தி அமைதியாகின
சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களும்
குதிரை ஒட்டிக கொண்டிருந்தவர்களும்
மாலை நடை போய்க கொண்டிருந்தவர்களும்
வலையைப் பிரித்துக் கொண்டிருந்தவர்களும்
ஒருகணம் நின்று
கடலைப் பார்த்த்ர்ர்கள்
''கடல் உள்வாங்குகிறது''
என்று சொல்லிச் சென்றார் ஒருவர்

நாம் பிரிந்து விடுவோம்
என்றாள் அவள் மீண்டும்
கடல் உள்வாங்குகிறது
என்றார்கள் அவர்கள் மீண்டும் ..

Friday, July 15, 2011

இடரிடை வாழ்க்கை

மந்தையிலிருந்து 
ஆடு தவறிவிட்டது
மாலை விழும்போது
ஆடு
மலையின் தனிமையில் இருந்தது
நேரம் போகப் போக
அதற்கு பசித்தது
கொடுமையான குளிரில் நடுங்கியது

வேகமாக படியும்
இருட்டைக் கண்டு மிரண்டது 
புதர்களில் இருந்து கிளம்பிவரும்
வினோத ஒலிகளைக் கேட்டு
அஞ்சியது

அங்குமிங்கும் ஓடியபடி
மேய்ப்பர்களைத் தேடி ஓடியது
பரிதாபமாக கதறியது
பள்ளத்தாக்கின் கீழ்வளைவில் 
இரைக்கும் வயிற்றுடன்
நின்றிருந்த ஓநாய்க் கூட்டத்தின்
ஒளிரும் கண்களில் 
எரியும் பசியைக் கண்டு திடுக்கிட்டது 

சட்டென்று நின்று
ஒருகணம்
ராட்சதத் தட்டு போல் எழும்பும்
பெரிய
மஞ்சள் நிலவை வியந்தது

Wednesday, July 13, 2011

சிறிதெனும் பெரிது ..

1.வலி என்ற 
வார்த்தையைப் போல 
அவ்வளவு 
சின்னதாய் இல்லை 
வலி.


2.பளபளக்கும் பெரிய காரில் 
மின்மினுக்கும் நகைகளுடன் 
ஒப்பனை மூடிய முகத்துடன் 
வந்த பெண்மணி 
கூண்டிலிருந்த பறவையை 
வாங்கிப் போனாள் 

பெரிய கூண்டில் வசிப்பது 
சிறிய கூண்டில் வசிப்பதை 
வாங்குகிறது 
என்றெழுத வேண்டும் இதை...


3.வெற்றி பெற்றவனின் 
தத்துவத்துக்கும் 
தோல்வியுற்றவனின் 
தத்துவத்துக்கும் 
ஒரு வித்தியாசம் இருக்கிறது 

தோல்வியுற்றவன் 
தன் தத்துவத்தை 
வாழ்ந்து தீர்க்கவேண்டி இருக்கிறது


4.அருமனை சர்ச்சைக் கடக்கையில்
அருட் தந்தை
'பிதாவே மன்னியும் 
இவர்கள்
தங்கள் செய்வது இன்னதென்று
அறியாது செய்கிறார்கள் '
என்று ஒலிபெருக்கியில்
கெஞ்சிக் கொண்டிருந்தார்
இணையத்தில் இலக்கியம்
செய்பவர்களைப் பற்றிச்
சொல்கிறாரோ என்று
ஒரு கணம் திடுக்கிட்டேன்

5.உள்நாட்டிலோ
வெளிதேசத்திலோ
ஊர் நடுவிலோ
புதர் மண்டிய
ஒதுக்குப் புறத்திலோ
மண் மீதோ
கடல் நீரிலோ
கிடக்கிறது
எனக்கான ஆறடி ...

இன்றிரவு
என் வீட்டுக் கட்டிலில்
கிடைத்தது

Saturday, July 9, 2011

அளவினால் ஆனது அகிலம்

'எனக்கொரு யானை
வாங்கித் தர்றியா''
என்று கொஞ்சினாள் மகள்
''எனக்கு ரெண்டு''
என்றான் மகன் விரல் விரித்து.

சரியென்று சொல்லி
பள்ளியனுப்பி வைத்தேன்.
சிந்தனையுடன்
திரும்பி வந்து
பாதி படித்து
சலித்து
வைத்த
தத்துவப் புத்தகத்தை திறந்தேன்
மீண்டும் மூளை சலித்து விலகியது

சிறிய அலகால்
பெரிய உலகை
கொத்தித் தின்ன
விரும்பும் குருவிகள் நாம்
என்றொரு வரி தோன்றிற்று

மிகச் சிறிய அலகு..
மிகப் பெரிய உலகு......

Thursday, July 7, 2011

அவள் இவள்

இவளுக்கு
உம்பெர்டோ ஈகோவைத்தெரியாது
ஆல்பர்ட் காம்யூவையும்
அன்னியமாதலையும் தெரியாது
அந்நியன் படம் மட்டுமே
இவளுக்கு தெரிந்திருக்கிறது ..

காரல் மார்கஸ் தெரியாது
சரி
தெரியாதிருப்பதே நல்லது
கெவின வில்பரையும்
லியோ டால்ஸ்டாயையும் விடடுவிடுங்கள்
புதுமைப் பித்தனையும்
கல்கியையும் கூடத் தெரியாது
சலீல் சவுத்ரி
ஒரு இசை அமைப்பாளர் என்று
தெரிந்தால் அல்லவா
அவர் இசையைக் கேட்பதற்கு...
ஹிட்ச்காக் என்பது
போதையேற்றும் ஒரு பானம்
என்பதாக ஒரு கருத்தில் இருக்கிறாள்
நேற்று இவளுக்கு
சுஜாதாவையும் கூடத்
தெரியாது என்ற போது
சற்று திக்கென்றுதான் இருந்தது.

ஆனாலும் இழவு
இவளை
இப்படி
உடலும் உயிரும்
உருகி உருகி
காதலிப்பதை
நிறுத்தவே முடியவில்லை தோழரே
எனக்கு
எதுவும் பிரச்சினையா?

Monday, July 4, 2011

அம்மாவின் பூனை

அம்மாவுக்கு
எப்போதுமே
பூனைகளைப் பிடிக்காது
ஆஸ்துமா வரும்
பூனையின் ஒரு மயிர்விழுந்தால்
ஒருகோடி பாவம்
என்றெல்லாம் ஏதேதோ சொல்வாள்
ரொம்ப செல்லமான கடைசித் தம்பி
கெஞ்சிக் கேட்டும் கூட
அப்பா சொல்லியும் கூட
அனுமதிக்க மறுத்துவிட்டாள்


அக்கா டில்லியில் கல்யாணமாகிப் போனாள்
நான் கேரளாவுக்கு வேலைக்கு வந்தேன்
தம்பி யூ எஸ் போனான்

அம்மாவும் அப்பாவும்
கொஞ்சநாள் என்னுடன்
வந்து தங்கினார்கள்
மலையாளக் குளிர்
அப்பாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை
இருமிக் கொண்டே ஊர் போனார்
போன மூன்றாம் நாள் மரித்தார்

எவ்வளவோ சொல்லியும்
அம்மா ஊரிலேயே இருந்துவிட்டாள்

போன மாதம்
அவளைப் பார்க்க வந்திருந்த
அக்கா போன் செய்தாள்
''விஷயம் தெரியுமா
அம்மாக்குத் துணையாக
இப்போது பழுப்பு நிறத்தில்
ஒரு பூனை இருக்கிறது''என்றாள் ''
பிறகு சற்றே கரைந்த குரலில்
''அம்மாவுக்கு இப்போது
பூனைகளைப் பிடிக்கிறது''

LinkWithin

Related Posts with Thumbnails