Sunday, March 15, 2015

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்


நிறைய பெண்கள் கோலமிடுகிறார்கள் .சிலர் கோலமிடுவதற்கே
பிறக்கிறார்கள்.உம்மிணி சேச்சி அப்படி பிறந்தவள்தான் .உம்மிணி  என்றால்
என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியவில்லை .உம்மிணி என்றால் ஒரு பிடி
தங்கம் .இன்றைய பரதேசித் தங்கமல்ல .நல்ல கனமுள்ள தம்புராக்கமார் காலத்து
பழந்தங்கம் என்றார் சந்திர சேகரன் பிள்ளை .அவர் சொன்னதை  யாரும்
நம்பவில்லை .அவர் நிறைய கதை சொல்வார் .குழித்துறையில் ஒருமுறை வெள்ளம்
வந்தபோது அவர் வீட்டுக்குள் ஒரு முதலை ஏறி வந்து விட்டது என்று சொன்னவர்

அந்தக் கதை இப்படிப் போகிறது

அந்த வருடம் மழை அப்படிப் பெய்துகொண்டிருந்ததது.இரவெது  பகலெது என்று
தெரியாதபடிக்கு குழித்துறையை மழை இருட்டு சூழ்ந்திருந்தது.ஆற்றில்
வெள்ளம் வரும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். குழித்துறையில்
பெய்து வராது.இங்கே எவ்வளவு பெய்தாலும் ஆற்றில் நுரைத்துக் கொண்டு
போய்விடும்.ஆனால் திடீரென்று பேச்சிப்பாறையில் அணையைத்
திறந்துவிட்டுவிடுவார்கள்.அப்போது திடீரென்று வெள்ளம்
பெருகிவிடும்.நியாயப்படி கரையோர சனங்களுக்கு அறிவிப்பு கொடுக்க
வேண்டும்.கொடுப்பார்கள் ரேடியோவில் உழவர் உலகத்துக்கு நடுவில் ஒரு முறை
ஆகாசவாணி டெல்லி செய்திகளுக்கு அப்புறம் ஒரு முறை.ஆனால் யார் வீட்டில்
ரேடியோ இருந்தது !தவிர அவர்கள் சொல்லியிருந்தாலும் அவருக்குக்
கேட்டிருக்காது.அவர் புதிதாய் அரிஷ்டம் குடிக்கப் பழகி
இருந்தார்.தேங்காப்பட்டினத்துக்கு அருகே அவருக்கென்று கணக்கு வைத்து
மாம்பட்டை கொடுத்தார்கள்.அந்த அடாத மழையிலும் அவர் எப்படியோ அங்கு போய்
ஒரு பாட்டிலை அங்கேயே வைத்துக் குடித்து விட்டு வீட்டுக்கும் கொண்டு
வந்துவிட்டார்

 உண்மையில் அவர் குடிகாரர் இல்லை.அவருக்குப் பிரியமானமகள் வயிற்றுப்
பேரன் ஒருவன் செத்துப் போனதிலிருந்துதான் அவரிப்படி ஆகிவிட்டார்.அவரது
பெயரன் உண்மையிலேயே ஒரு உன்னி கிருஷ்ணன்.அப்படியொரு சத்துவமும் ஒளியும்
துலங்கும் முகம்.தினமும் ஆற்றில் குளித்து விட்டு அவன் அவரின் கைகளைப்
பிடித்துக் கொண்டு மகாதேவரைத் தொழும்போது விரியாத கண்களே இல்லை..அவனுக்கு
அம்மை வேண்டாம்.அப்பா வேண்டாம்.தாத்தா போதும்.அவன் பள்ளி சென்ற பொழுது
தவிர மீதி  நேரங்களில் அவருடன்தான் இருந்தான்.அவர் சொன்ன கதைகளைக்
கேட்டான்.அவருக்கு கதைகள் சொன்னான்.அவருடனேயே உறங்கினான் .ஒருநாள்
இருவரும் அம்பலத்திலிருந்து வரும்போது அவன் எதன்  மீதோ இடித்துக்
கொண்டான்.சிறு  கீறல்தான்.பிள்ளை அவன் காயத்தை முத்தமிட்டு தேங்காய்
எண்ணெய் தடவினார் .அப்போது அது சரியாகப் போனது.அவன் பள்ளிக்குப்
போய்விட்டான்.மாலை வரும்போது அவனை வண்டி வைத்துக்
கொண்டுவந்தார்கள்.கடுமையான காய்ச்சல்.அவனை வெட்டுமணி ஆஸ்பத்திரியில்
சேர்த்தார்கள்.காய்ச்சல் குறையவே இல்லை.அதிகாலையில் அவனுக்கு வில்வாதம்
வந்துவிட்டது.படுக்கையிலிருந்து தலையாலும் கால்களாலும் குத்தி எழும்பி
நின்றான்.பிள்ளை அவனை அணைத்துக் கொண்டு கிடத்த
முயன்றார்.முடியவில்லை.அவன் பற்கள் கிட்டி கண்கள் தெறித்து விடுவதைப் போல
தள்ளி நின்றன.அவர் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.விடியும் போது அவன்
உடம்பு தளர்ந்தது.தளர்ந்த போது அவன் இறந்து
போயிருந்தான்,.அன்றிலிருந்துதான் அவர் குடிக்க ஆரம்பித்தார்

அப்படி குடித்து விட்டு வந்து தூங்கி எழுந்த நாள் ஒன்றின் காலையில்தான்
அவர் தனது அறையில் ஒரு முதலையைக் கண்டார்.அது வெள்ளத்தில் எப்படியோ தப்பி
ஊருக்குள்ளும் அவர் வீட்டுக்குள்ளும் வந்திருக்கிறது .சிறிய முதலை.அவர்
பார்க்கையில் அது  உறங்கிக் கொண்டிருந்தது.சட்டென்று பார்க்க அவருக்கு
அது தனது உன்னி கிருஷ்ணனைப் போலவே இருந்தது.அவருக்கு கண்ணிலிருந்து நீர்
வழிந்தது.,அவனும் இதே போலதான் இதே இடத்தில்தான் தூங்குவான்.

அவர் தோளின்  மீது ஒரு துவர்த்து போல அதைப் போட்டுக் கொண்டு
திரும்பவும் தாமிரபரணி யிலேயே விட்டுவிட்டதாகச் சொன்னார்.

ஊரில் யாரும் இந்தக் கதையை நம்பவில்லை.ஆனாலும் அவர் அதைச் சொல்லிக்
கொண்டுதான் இருந்தார்

உண்மையில் உம்மிணி என்றால் சிறிய என்றுதான் அர்த்தம் .மார்த்தாண்ட வர்மா
செயித்ததும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு இறந்துவிட்ட உம்மிணித்
தங்கச்சியை உங்களுக்கு நினைவில்லையா ?என்று புட்பராசு
கேட்டார்.உண்மைதான். என்று பிள்ளை ஒத்துக் கொண்டார்.தான் ஒரு காவியச்
சுவைக்காகவே அப்படிச் சொன்னதாக அவர் சொன்னார்.உம்மிணி  என்றால் சிறிய
என்பதுதான் சரி. ஆனால் உம்மினி சேச்சியிடம் சிறிதாக என்ன இருக்கிறது
?கோலம் போட அவள் குனியும்போது .அவளது பின்னம்பாகம் பரலோகராஜ்யம்
முழுவதையும் மறைக்கிறதே என்பார் போதகர் பால்ராஜ். நடுக்கத்துடன் அவளைக்
கடக்கும் போது  மட்டும் அவர் தனது பைபிளை இன்னும் இறுக்கமாய் அணைத்துக்
கொள்வார் .அவளது ஸ்தனங்கள் அப்படியே பொங்கி அவள் வரையும் கிருஷ்ணனை
நோக்கிப் பாய்கிறது என்பார் பத்மநாப பணிக்கர் .

அவள் எப்போதும் வரைவது கிருஷ்ணனைத்தான் .முற்றத்தின் மீது பட்டுப்பூச்சி
போல பாவிப் பாவி அவள் வரையும் கிருஷ்ணன்களை நீங்கள் மறக்கவே முடியாது
.தினமொரு கிருஷ்ணன் .நேற்றைய கிருஷ்ணன் மறந்தும் கூட  மறுபடி வர மாட்டான்
.கிருஷ்ணனைத் தவிர அவள் வேறு வரைந்ததில்லை .உதிரப் பெருக்கு தினங்களில்
அவள் எளிதாக வரையும் கோடுகளில் கூட ஒரு கிருஷ்ணனே இருப்பான் .ஆயிரமாயிரம்
வருஷம் எழுதியும் வரைந்தும் கூட இன்னுமொரு கிருஷ்ணனை புதிதாய் எழுதுவது
சாத்தியமாகவே இருக்கிறது .''கிருஷ்ணன் இந்தியப் பெண்களின் ஒட்டு மொத்த
ஆழ்மன ஆசைகளின் ஒட்டு மொத்தவடிவம் ''என்றார் அவர்.
போதகர் ''இந்துப் பெண்கள்''என்று முனகினார்
பணிக்கர் ''இந்தியப் பெண்கள் ''என்று உறுமினார்
போதகர் விட்டுவிட்டார் .அவர் சமீபத்தில்தான் போதகர் பால் ராஜாக மன
மாற்றம் பெற்றார்.அதன் கதை இது..இதற்கு  முன்பு அவர் ஜோதிடர் பால
கிருஷ்ணனாக இருந்தார்.ஒரு  நாள் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே
ஒன்றுக்குப் போக   வந்தவர் புதருக்கு மறுபுறம் நின்றுகொண்டிருந்த
உருவத்தைப்பார்த்து  பயந்து ''யாருவே அது?''என்றார்

உருவம் ''பயப்படாதே .நான்தான் மெய்யான தேவன்
வந்திருக்கிறேன்''என்றது.அன்றிலிருந்து ஜோதிடர் பாலகிருஷ்ணன் சாது
பால்ராஜ் ஆகிவிட்டார்.
அதெல்லாம் கதை.உண்மையான காரணம் அவருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த
பிரச்சினைகள்தான் என்று பணிக்கர் ஒருநாள்  என்னிடம் விளக்கினார். ''அவரு
சம்சாரம் கேரக்டர் சரியில்லை.ஒருநா அவ பக்கத்து வீட்டுக் காரனோட
இருக்கறதை அவரு பார்த்துட்டாரு''பணிக்கர் ஒரு தீவிர
இந்துத்துவர்.''கொடுங்களூர்ல இந்தியாவின் முதல் மசூதியைக் கட்டின சேரமான்
எப்படி மதம் மாறினான்னு சொல்றே ?அதுவும் ஒரு ஸ்திரீயால்
நிகழ்ந்ததுதான்.அவன் பெரிய சிவ பக்தன்.அதே சமயம் ராணி மேலயும் ரொம்பப்
பிரியம் .ஆனா  ஒருநாள் அவன் ராணி குதிரைக் காரனோட உல்லாசமாக இருக்கிறதைப்
பார்த்துட்டான்.அந்த வெறுப்புல பண்ணது அது ''

பிள்ளை  சந்தேகமாய் ''இது உள்ளதா?''என்று கேட்டார் .பணிக்கர்
''பின்னே?''என்றார் .''பொண்ணுங்களை திருப்திப் படுத்தறது
கஷ்டம்.ஓட்டையுள்ள குடம் என்னிக்கு நிறையும் ?''

பிள்ளை அந்த சரித்திரத்தை சந்தேகப்படுவது தெரிந்தது.ஆனால் இப்போது அவர்
அதைச் சொல்ல முடியாது.

புட்பராசு ''உண்மை ''என்று ஒத்துக் கொண்டார்.அவர் ஒரு சித்த மருத்துவரும்
கூட.''கேரளத்தில் ஆண்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு வருகிறது ஏன் என்று
நினைக்கிறீர்கள்?''

நான் ''ஏன் ?''என்று கேட்டேன்..புட்பராசு சிரித்து ''நீர் பாண்டி .உமது
பொண்டாட்டியும் பாண்டி.உமக்குப் புரியாது ''என்றார்

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.குறுப்புதான் சந்தேகத்தை தீர்த்து
வைத்தார்.''இன்றும் யானைக் கால் போல தடி வந்த பின்பும் என் பார்யாள் என்
நெஞ்சின் மீது கால் போட்டு ஏறுகிறாள் .நான் சொல்லிவிட்டேன்.அம்பிலியே
நான் இன்னும் கொஞ்ச நாள் ஜீவிச்சிருக்கட்டும் என்று ''

அவர்கள் எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள் ''இதற்கு ஏதாவது மருந்து
இருக்கிறதா ?நேற்று என் மனைவி என்னை ஒரு பல்லி  போல தூக்கி எறிந்து
விட்டாள் .''

புட்பராசு ஏதோ வாயைத் திறக்க ''உம்மோட அஸ்வகந்தாதி லேகியங்களைச்
சொல்லாதீரும் .அது ஒரு மயிரைக் கூட எழுப்பவில்லை ''

புட்பராசு ''யுனானி மருந்து ஒன்றிருக்கிறது .தஸ்  கபீர் என்று.அதைச்
சாப்பிட்டால் ஒரே இரவில் ஆயிரம் பெண்களைக் கூடலாம். ''
பணிக்கர் அவசரமாக உள்புகுந்து ''அது மாப்பிள்ளமார் மருந்தல்லவா
மாட்டிறைச்சி கலந்திருப்பான் ''

நான்  ''நீங்கள் இறைச்சி சாப்பிட மாட்டீர்களா ?''என்று கேட்டேன்
''நான் சாப்பிடுவது ஆட்டிறைச்சி .மாட்டிறைச்சி தாயைத் தின்னுவதற்குச் சமம் ''

குருப்பு போதகர் நெளிவதைப் பார்த்துவிட்டு ''அது போகட்டும்.இந்த
பெண்டுங்கள் ஏனிப்படி ரத்தம் உறிஞ்சும் பைசாசங்கள்  போலாகிவிட்டார்கள்
?நமது அம்மாமார்கள் இப்படியில்லையே ?''

புட்பராசு ''முன்பைவிட பெண்டுங்கள் இப்போது நன்றாக சாப்பிடுகிறார்கள்
.''என்றார் ''ஒருநாள் உம்மிணியின் புருசனுக்கு பனி என்று மருந்து கொடுக்க
அவன் வீட்டுக்குப் போயிருந்தேன்.அவன் கட்டிலில் படுத்திருந்தான்.நான்
கொஞ்சம் சூரணம் குழைக்க தேன்  வேண்டும் என்று கேட்க சமையல் உள்ளுக்குப்
போனால் உம்மிணி ஒரு பாத்திரத்தில் வைத்து நெய்யையும் சர்க்கரையையும்
சேர்த்து வழித்துச்  சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் .அப்போது அவள் பூதகி
மாதிரி இருந்தாள் ''


போதகர் ''அவள் பூதகியா கோபிகையா ?""என்றார்

பணிக்கர் ''இரண்டும்தான் .இருவருக்கும் கிருஷ்ணன்தான் தேவைப்படுகிறான் ''


ஆனால் உம்மிணி  சேச்சியின் புருஷன் ஒரு பொட்டன்.அவனுக்கு கோலமும்
தெரியாது கிருஷ்ணனும் தெரியாது .கேரளத்துக்  கல்யாணங்களுக்கு
சமையலுக்குப் போவான் .அவன் உடம்பில் எப்போதும் ஒரு ஊசக்  குழம்பு வாசனை
அடிக்கிறது என்றார் நாயர் .அவன் கொல்லங்கள் உருண்டு போனபின்பும் .உம்மினி
சேச்சியை பொட்டித் திறக்காத  சேச்சியாகவே வைத்திருந்தான் .அவள் உம்மிணி
அம்மாவாக நாமெல்லாம் தான் உதவி செய்யவேண்டும் என்று கவலூர் குறுப்பு ஒரு
குடியிரவில் சொல்லியபோது எல்லோரும் உரத்த குரலில் ஆமோதித்தார்கள் ''ஆனால்
அதற்கு நீங்கள் கிருஷ்ணனாக இருக்க வேண்டுமே 'என்றேன் நான்
''இங்கிருக்கும் கிருஷ்ணன்கள்!தொப்பையும் சாளேச்வரமும் விழுந்துவிட்ட
அரிஷ்டம் இல்லாமலே தடுமாறும் கிருஷ்ணன்கள் !''

நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம்.எங்களில் யாருமே கிருஷ்ணன் இல்லை.

ஆனால் எங்களை மட்டுமல்ல வயது குறைந்த வாலிபரகளைக் கூட அவள் கிருஷ்ணனாக
ஏற்றுக் கொள்ளவில்லை.அவர்கள் அவளைப் பார்க்கவே பயந்தார்கள்.


இப்படியே போயிற்று ஒரு சில  வருசங்கள் .ஒருநாள் உம்மினி சேச்சி கோலமிட
வரவில்லை .இரண்டாம் நாளும் வரவில்லை .மூன்றாம் நாளும் வராதபோது எல்லோரும்
அவள் படியேறிப் போனார்கள் .அவளது சம்பந்தக் காரனிடம் கேட்டபோது .அவன்
அவள் தனது கிருஷ்ணனோடு போய்விட்டாள்  என்றான்
அதன் மேல் அவன் எதையும் சொல்லவில்லை .அவனுக்கு வேறு எதுவும் தெரியவில்லை
.நாங்கள் வீடெல்லாம் தேடிப்  பார்த்தோம்
உம்மினி சேச்சியின்  ஒரு துண்டு அடையாளம் கூட அங்கில்லை .புடவைகள் நகைகள்
மை தீட்டும் குச்சி  எதுவுமே அங்கில்லை .அவள் தனது காமுகனோடு
போய்விட்டாள் என்று நாயர் முடிவு செய்தார் எல்லோரும் பெருமூச்சு
விட்டார்கள்
''அவள் தனது கோலப் பெட்டிகளையும் எடுத்துப் போய்விட்டாள் !''என்றார் குறுப்பு
எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது.''அவன் யாராக இருந்தாலும் உண்மையில்
ஒரு கிருஷ்ணனைப் போலல்லவா அவளைக் களவாடிக் கொண்டு போய்விட்டான்
?''என்றார் பிள்ளை.

நாங்கள் மெல்ல கோலமில்லாத உம்மினி சேச்சியின் முற்றத்துக்குப் பழகிக்
கொண்டோம்.அவள் புருஷன் எதுவுமே நடக்காதது போலத் திரிந்தான்.முன்பை விட
அவன் சந்தோசமாக இருப்பது  போல கூட பட்டது.
ஒரு மாதம் கழிந்தது  கழித்து நன்றாக மழை பெய்தது குழித்துறை ஆற்றில்
மறுபடி வெள்ளம் வந்தது இந்த முறை முதலை வருமா என்று கேட்டோம் பிள்ளையிடம்
முதலை வரவில்லை .உம்மினி சேச்சிதான் மிதந்தபடி மறுபடி வந்தாள்
அவள் எடுத்துப் போன  துணி எதுவுமே அவள் உடம்பில் இல்லை .அவளது இரண்டு
கண்களையும் மீன்கள் அரித்திருந்தன . அவளது .யோனி முழுவதையும் அவை
குடைந்து குடைந்து தின்றிருந்தன.அவளைத் தூக்கும் போது  அங்கிருந்து
அவற்றின்  குஞ்சுகள் வந்துகொண்டே இருந்தன என்று கூட பயர் சர்வீஸ் தாமஸ்
சொன்னான்

அடுத்தவாரம் அவளை அப்படிச் செய்தவனை  போலிசார் கண்டுபிடித்தார்கள்
அவன் அப்படியொரு கருப்பு.தலை சொட்டை வேறு.உம்மினிசேச்சி அவன் பின்னால்
எப்படிப் போனாள் என்றெல்லோரும் வியந்தார்கள் அவளும் சரசாரிப் பெண்தான்
நாம்தான் அவளை காவியப்படுத்திவிட்டோம் என்றார் பணிக்கர்..மறுநாள் அவன்
முதுகின் பின்னால் கைகளை துண்டால் கட்டி கச்சேரிக்கு  அழைத்து
வந்தார்கள். போதகர் பின்னாலேயே போய் அறிந்துவந்தார்
''பாற  சாலைக் காரன் .அவன் வீடு முத்தம் முழுக்க உம்மிணி  கோலங்களால்
நிறைத்திருக்கிறாளாம்.அதை வைத்து கண்டு பிடித்தார்களாம் ''என்றார்

''அவர்கள் கண்டுபிடித்த போது அவன் வீட்டிலேயே கட்டிலுக்கு கீழே
ஒளிந்திருந்தானாம் .மூன்று நாட்களாய் சாப்பிடாமால் கொள்ளாமல் அங்கேயே
இருந்திருக்கிறான்.அழுதுகொண்டே இருந்தானாம்.ஏன் உம்மிணியைக் கொன்றாய்
என்றதற்கு இல்லாவிட்டால் அவள்  என்னைக் கொன்றிருப்பாள்  என்று
'சொல்லியிருக்கிறான் .அவனுக்கு மனநிலை சரியில்லை என்கிறார்கள் ''

பணிக்கர் ''பொய்.அவன் சிட்சையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவ்வாறு
சொல்கிறான் ''என்றார்

போதகர் பேசாது இருந்தார்.பிறகு  ''தெரியவில்லை.ஆனால்  ஒன்றுமட்டும்
உரப்பு.ஆசாமியின் பெயர் மட்டும் கிருஷ்ணன்தான் ''

LinkWithin

Related Posts with Thumbnails