Friday, December 31, 2010

Thursday, December 30, 2010

இன்னுமொரு இலை..

பேசினில் கழிவுநீர்போல்
கடைசிச் சொட்டு இரவும்
சுழித்தோடிப் போனபின்பே
இன்றும் கண்விழித்தேன்
மற்றுமொரு
அரக்கச் சூரியனின்
வெளிச்ச ஆபாசத்துக்கஞ்சி
சற்று நேரம் அசையாதிருந்தேன்
தாடையில்
பத்துநாள் மயிர்க்கறை முகத்தை
கண்ணாடி யில் பார்க்கையில்தான்
 தோன்றிற்று
இன்றோடு எனக்கு வயது நாற்பது
பச்சை நரம்பு தெரிய
யோடிகொலன் சவரம்
நகம் நனையும் வரை
நறுமணக்  குளியல்
 நாக்குருகும் வரை
நல்ல சாப்பாடு எல்லாம்
இன்றாவது செய்யவேண்டும்
கோயிலுக்குக் கூடப் போகலாம்
அல்லது குறைந்தது
யாரையாவது கொலை கூட செய்யலாம்
இந்நாளை
அர்த்தப் படுத்திக் கொள்ள
என நினைத்தேன்

ஆனால் இதில் எதையும் செய்யாமல்
எப்போதும்  போல்
படியிறங்கி வெளிப்போகையில்
உலகு மொத்தமும்
யாரோ துரத்துவது போல்
எங்கோ ஓடிக் கொண்டிருந்தது
பளளி நோக்கியோ
பணி நோக்கியோ
கடைக்கோ
கலக்டர் ஆபீசுக்கோ
விவாகத்துக்கோ
விவாகரத்துக்கோ
வாழ்வதற்கோ
சாவதற்கோ
வெளியெங்கும்
பதற்றம் ததும்பும் முகங்கள்
எப்படி என்னைத் தவிர
எல்லாருக்கும் செயவதற்கு
எப்போதும் ஏதோ இருக்கிறது
என்ற சிந்தனையுடன்
வழக்க ஹோட்டலில்
கருகிய முந்திரி கிடக்கும்
வழக்க பொங்கல்
கசப்புக் காபி சாப்பிட்டு
வழக்க சிரிப்புடன்
வழக்கப் பெட்டிக்கடையில்
வழக்கப் புகையை
வானோக்கி விட்டபோது
உச்சி மரத்திலிருந்து
ஒற்றை இலை ஒன்று
மேலிருந்து
யாரோ திருகிவிட்டாற்போல்
சுழன்று சுழன்று
மிதந்து மிதந்து வந்து
என் மூக்கில்
ஓர்கணம் உட்கார்ந்தது
பார்த்தாயா
என்று பரவசத்துடன்
பக்கத்தில் நின்றவனைப் பார்த்தேன்
அவன் பார்க்கவில்லை
எனத் தெரிந்தது
அவனுக்கு
அது
இன்னுமொரு மரத்தின்
இன்னுமொரு இலை
அவ்வளவுதான் என அறிந்தேன்
நானும் அவனுக்கு
அது போல்தான்
என்றுணர்ந்த நொடி தான்
தாங்காமல்
நான் கதறி அழ ஆரம்பித்தேன் ...

Wednesday, December 29, 2010

புணர்ச்சி விதி

நீ
தொட்ட இடமெல்லாம் தீ
எழும்பிப் பரவுது என்றேன்
அவள்
நீ தொட்ட இடமெல்லாம்
தீம்புனல்
பெருகி வழியுது எனறாள்
உடனே வெட்கி
ச்சீ காமம் பேசாதே எனறாள்
காமம் பேசல்
பெண்களுக்குப் பிடிக்கும் என்றாரே
என்றதற்கு
காமம் பின் பேசல் பிடிக்கும்
என்று விளக்கினாள்
பிறகு யோசித்து
காமத்தின் முன் பேசலும் எனறாள்
இன்னும் ஆழக் கண்புதைய  யோசித்து
பேசல் பிடிக்கும் பெண்களுக்கு
எனறாள் பெருமூச்சுடன்
வேறு எதன் பொருட்டு
நீங்கள் எங்களைப் பேச அனுமதிக்கிறீர்கள்
என்றதற்கு
என்னிடம் இல்லை
எந்தப் பதிலும்

Monday, December 27, 2010

வலை மீறும்...

விடாது முயன்றும்
அவள் கைபேசி
மறுத்துக் கொண்டே இருந்தது
என் அழைப்பை....
நடுவில் ஒரு தடவை
நூலறுத்து
எங்கிருக்கிறாய் என்று கேட்டேன்
இங்குதான் வீட்டில்
என்று சொன்னாள்
போனபோது
வழக்கத்தைவிட
அவள் கண்கள்
தேன் சுமக்கும்
படகுகள் போல்
கனத்து அகன்று
களிப்பில் மிதந்தன...
என்னுடன் பேசும்போது மட்டும்
தொலைக்கட்சியில் செய்திகள்
சொல்பவள் போல்
அவை எப்படி மாறிவிடுகின்றன
என வியந்தேன்...
குடித்தாயா எனறாள் தயங்கி ...
ஆம்
ஆனால்
நீ குடித்துக் கொண்டிருப்பதைவிட
குறைந்த போதை மதுதான் என்றேன்
அவள் பதறிக்
கைபேசியை
இறுகப் பற்றிக் கொள்வதைப் பார்த்தேன்
அருகில் நெருங்கி அணைத்து
இன்று நீ மிக
அழகாய் இருக்கிறாய் ...
நட்சத்திரம் போல் ஒளிர்கிறாய்
திடீரென்று
உன் விழிகள்
உதடுகள்
தனங்கள்
யாவும் பெரிதாய் விரிந்திருக்கின்றன
நீ எதற்கோ
ரொம்பத் தயாராக இருக்கிறாய் அல்லவா
என்றேன்
பூமிக்கு
சட்டென்று
இழுக்கப் பட்ட
பறவை போல்
அவள் முகம் அணைந்தது
தூங்கும் பல சொற்கள்
துடித்த  அவள் இதழ்களை நெருடி
மீண்டும் உன் அலுவலக நண்பர் அல்லவா
அவருடன் உலக இலக்கியம் அல்லவா
என்றதற்கு விசும்பி அழ ஆரம்பித்தவளை
புன்னகையுடன் விலக்கி
என் குகைக்குள்  புகுந்துகொண்டேன்
இனி இரவு  முழுவதும்
தூங்காது
குற்ற உணர்ச்சியின் சாலைகளில்
அவள் மீள மீள
ஓடிக் கொண்டிருப்பாள்
என்பதை உணர்ந்ததும்
புன்னகை பெருகி நிறைந்தது
ஒரு பறவையைப்
பறக்கும்போதே கொல்வதுதான்
இன்பமானது என நான் அறிவேன்
அந்த திருப்தியுடன்
மெல்ல கைபேசியை உயிர்ப்பித்து
என் தோழியிடம் பேச ஆரம்பித்தேன்
அவள் கணவன்
இன்று
ஊரில் இல்லை பேசு என்று
காலையிலேயே சொன்னாள்....

பிடிவாதப் பூ....

யாருக்காக எனில்
இடுகாட்டுப் புகை மூலையில்
வரிப்பார் யாரும்
இல்லை எனினும்
பிடிவாதமாய்
தினம்
ஒரு பூ
தலை உயர்த்தி
சூரியனுக்கனுப்பும்
பெயரறியா
காட்டுக் குறும் செடிக்கும்
சேர்த்தே
பொன்வெயிலும்
இள மழையும்...

Thursday, December 23, 2010

சொல்வதற்கில்லை இந்தச் சொல்...

உம்பேர்டோ இகோ
பற்றிப் பேசலாம்
பாழ்நிலம் பற்றியோ
பெலினி பற்றியோ
பாலகுமாரன் பற்றியோ 
போல்ஷெவிக் புரட்சி பற்றியோ
பேசலாம்

உன் கணவர் பற்றியோ
என் மனைவி பற்றியோ
நம் குழந்தைகளின் கல்வி பற்றியோ
அவர்கள் மேல்
அதிகரித்துவரும் குற்றங்கள் பற்றியோ
நண்பர்கள் பற்றியோ
அவர்கள் எழுதும்
புத்தகங்கள் பற்றியோ
அவர்களில் சிலர் காதலிப்பது
பற்றியோ கூட பேசலாம்
மடோனா பற்றியோ
மார்கழி இசைப் பருவம் பற்றியோ
அடைப் பிரதமன் பற்றியோ
அக்கார  வடிசல் பற்றியோ கூட பேசலாம்
இரவு கரையும்வரை 
இமை கனக்கும்வரை
கைபேசி இறக்கும்வரை பேசினாலும்
எல்லாப் பேச்சுக்கும் அடியில் 
நட்சத்திரங்கள் ஒளிரா இரவில்
பழுத்துதிர்ந்த இலைகளின் படுக்கையில்
தடித்த நிழல்களின் இருளில்
உதிர வீச்சம் தேடி
புதைந்துகிடக்கும் வேங்கைபோல
உன் கண்களில் ஒளிந்து கிடக்கும் 
காமத்தையும் காதலையும் மட்டும்
நாம்
பேசவேண்டாம்தானே?

Wednesday, December 22, 2010

உடல் தத்துவம் 15

மருத்துவர் ஆழமாய் ஒரு பெருமூச்சுடன் டயரியை மூடிவிட்டு எழுந்தார்.''ஒரு மருத்துவர் இந்தச் சொல்லை ஒரு நோயாளியிடம் சொல்லக் கூடாது.ஆனாலும் இதை நான் சொல்கிறேன்''என்றவர் சற்று நேரம் மெளனமாக இருந்தார்.''You are a fucking bastard..you know?''

நான் மறுக்காமல் ''யெஸ்.ஐ நோ''என்றேன்.ஏறக்குறைய லீலா தாமசும் இது போன்றதொரு கருத்தை ஒரு தடவை  சொன்னாள்.நான் சற்று எரிச்சல் அடைந்தேன்.அவளைப்  போலவே இவரும் அத்தையின் மரணத்திற்கு என்னை ஒற்றைப் பொறுப்பாளியாக ஆக்கப்  பார்க்கிறார்.நான் பார்த்ததிலேயே மிக முட்டாள் மனநல மருத்துவர் இவர்தான் என்று நினைத்தேன்.ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஏறக் குறைய எல்லா மனநல மருத்துவர்களும் இவரைப் போன்றுதான் இருக்கிறார்கள்.இவர் கொஞ்சம் அதிகம் தத்தி அவ்வளவுதான்.மனித  மனம் எவ்விதம் இயங்குகிறது என்று இவர்கள் சில தேற்றங்களை வைத்திருக்கிறார்கள்.ரெடிமேடு ஆடைகள் போல் சில விதிகள்.நீங்கள் உங்களது பிரச்சினைகளுடன் அவர்களை அணுகும்போது அந்தச் சட்டைகளுக்குள் ஒன்றில்  உங்களைத் திணித்து வகைப் படுத்திவிட்டு மறந்து போவார்கள்.உங்களுக்கு அந்தச் சட்டைப் பொருந்துகிறதா இல்லையோ நீங்கள் அதை அணிந்து கொண்டே ஆகவேண்டும்.இல்லாவிடில் வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் கோடைக்கும் எதிரே நிர்வாணமாக நிற்கவேண்டும்.உங்களுக்கு வேறு வாய்ப்பே கிடையாது.இவர்களைப் பொறுத்தவரை  மனமும்  உடல் போல  ஒரு இயந்திரமே.சற்று நுட்பமான இயந்திரம் அவ்வளவுதான்.ஆனால் இந்த -எந்த நூற்றாண்டிலும் எவராலும் கண்டுபிடுத்துவிட முடியாத நுட்பத்துடன் இயங்கும் நகரும் மனம் எனும் இந்த எந்திர யானை இவர்கள் காட்டுகிற ஸ்டூலில் பல நேரங்களில் உட்காருவதில்லை உட்காருவது போல் ஒரு தோற்றத்தை மட்டுமே அளித்துவிட்டு அவர்கள் அறியா ஆழங்களில் உழன்றுகொண்டிருக்கிறது என்பதை இந்த முமுக்ஷூக்கள் கொஞ்சம் கூட அறியவில்லை என்பதுதான் பரிதாபம்.

''So Magthaleen the harlot இல்லையா'''

நான் லேசாக சினமுற்று ''இல்லை மகதலின் கடவுளின் தோழி''என்றேன்...


சங்குவின் மரணத்தை எதிர்கொண்டது போல் அல்லாமல் அத்தையின் மரணத்தை நான் இயல்பான ஒன்று போல் ஏற்றுக்  கொண்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.சங்குவின் மரணத்தில் இல்லாத ஒரு நியாயம் அத்தையின் மரணத்தில் இருந்தது போல் நான் ஆழ்மனதில் நினைத்தேனா என்ன..சங்குவின் மரணம் ஒரு அபத்தமான நிகழ்வு...அவன் அந்த வயதில் அப்படி ஒரு மரணம் அடைவதற்கு என்ன ஒரு தர்க்கம் யார் தர  முடியும்.....அவன் விஷயம் பிரபஞ்சத்தின் காரண காரியச் சக்கரத்தின் நடுவில் எறியப் பட்ட ஒரு கல்.ஆனால் அத்தையின் மரணம் அப்படி அல்ல.பாவத்தின் சம்பளம் அது என்பது போன்ற ஒரு தருக்கத்திற்கு என் மனம் வந்திருந்தது..ஆனால் அந்தத் தருக்கத்தை அளித்ததே அத்தைதான் என்பதை சவுகர்யமாய் மறந்திருந்தேன்.நம்மைவிடப் பெரிய சக்திகளால் அலைக்கழிக்கப் படும்போது நம் மனம் கிடைக்கிற எதையும் அது எத்தனை அபத்தமாய் இருந்தாலும் பிடித்துக் கொண்டு எப்படியாவது கரையேற முயற்சிக்கிறது.பலநேரங்களில் ஏதோ விளக்கமுடியாத கருணையின்  காரணமாகவோ அல்லது வெறும் தற்செயலாகவோ அந்தப் பெரும்சக்திகள் நம்மைவிட்டு விலகிவிடுவதை அந்தத் துரும்பின் வலிவுக்கு சான்றாக நம்பி ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்....'

சங்குவின் மரணத்தில் கிடைத்த  துரும்பு மேகி  அத்தை.அந்தத் துரும்பையும்  ஆழ்கடல் அலை பறித்துச் சென்ற பிறகு நான் கடவுள் எனும் இன்னொரு.சற்றே பெரிய துரும்பைப் பிடித்துக் கொண்டேன்.பளளி சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தேன்.ஒவ்வொரு இரவும் நெடுநேரம் முழங்காலிட்டுப் பிரார்த்திப்பது செய்வது கண்ட சித்தப்பா கவலை  கொள்ள ஆரம்பித்தார்.''ஏலே உனக்கு வட்டு எதுவும் பிடிச்சுடுச்சா''என்று ஏச ஆரம்பித்தார்.ஆச்சியை வேறு ''பிள்ளைங்கள யார் யார் கூட  பழகவிடறதுன்னு ஒரு அறிவே இல்லை மூதிக்கு ''என்று திட்டுவார்.எனக்குப் பள்ளியில் அருகில் இருந்த சர்ச்சில் இருந்து ஒரு புதிய ஏற்பாடு கிடைத்தது.அதைக்  கொடுத்த ஊழியகாரரிடம் பழைய ஏற்பாடு கேட்டதற்கு புன்னகையுடன் தவிர்த்துவிட்டார்.அது நீ பெரிய ஆளான  பொறவு என்று சொல்லிவிட்டார்.நல்லவேளையாக அதை அவர் செய்யவில்லை ஏன் என்று பின்னால் அதைப் படிகையில்தான் புரிந்தது.அப்போது நான் ஒரு பெரிய பள்ளத்தாக்கின் விளிம்பில் மிகா பலவீனமான எப்போதும் சரிந்துவிடக் கூடிய ஒரு தளத்தில் நின்று கொண்டிருந்தேன்.பழைய ஏற்பாட்டின் பொறாமைக் கார பெருங் கோபக்  கடவுள் என்னை அச்சுறுத்தி  அந்தகாரத்தில் நிரந்தரமாகத் தள்ளி இருக்கக் கூடும்.புதிய ஏற்பாட்டுக் கடவுள் அப்படி அல்ல.அவர் தீன  தயாளன்.புற சாதியினரிடம் தயங்காது தண்ணீர் வாங்கிக் குடிப்பவர்..வேசையையும் கல்லெறியாமல் தோள் தொட்டு எழுப்பி இனி பாவம்  செய்யாதே போ என்பவர்.காட்டிக் கொடுக்கும் யூதாசுக்கும் கன்னம்  கொடுப்பவர்.தன்னை மரணத்தருவாயில் விலாவில் கூரிய ஈட்டியால் குத்துபவர்க்கும் சேர்த்துப் பிரார்த்திப்பவர்.கடைசியில் வரும் வெளிப்படுத்தல் அதிகாரத்தைத் தவிர மற்ற நிரூபணங்களை எல்லாம் நான் திருப்பித் திருப்பிப் படித்தேன்.வெளிப்படுத்தல் மட்டுமே என்னைக் குழப்பியது.அச்சமுருத்தியது அது பழைய ஏற்பாட்டில் இருக்கவேண்டிய ஒன்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன்.

எனக்கு புதிய ஏற்பாடைக் கொடுத்தவர் ஏறக்குறைய அத்தை வயதை ஒத்த ஒரு பெண்மணிதான்.ஏதோ ஒரு சபையின் முழுநேர ஊழியை என்று நினைவு.முரட்டுச் சேலையில் முழுக்கை ரவிக்கையுடன் அத்தையின் நேரெதிர் வடிவம்.ஏறக்குறைய தினமும் பளளி முடிகிற தருவாயில் வாசலில்  என்னைச் சந்திப்பாள் .''தம்பி நேற்று இறைவனுடன் பேசினீர்களா''என்று விசாரிப்பாள்.சில நேரங்களில் சில துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு வருவாள்.வண்ண வண்ணத் தாள்களில் பாவிகளை மனம் திரும்ப உரத்த குரலில் அழைப்பவை அவை.ஆனால் அவளிடம் அத்தையிடம் இருந்த ஒரு உயிரோட்டம் இல்லை.அவள் ஒரு விவிலிய இயந்திரம் என்று பின்னால் உணர்ந்தேன்.துட்டு போட்டால் பாட்டு பாடும் ஒரு ஜூக் பாக்ஸ் போலதான் அவள்.ஒவ்வொரு சந்தர்ப்பந்த்திற்கும் ஏற்றார் போல் சொல்வதற்கு அவளிடம் பொருத்தமான வசனங்கள் தயாரித்து அளிக்கப் பட்டிருந்தன.எதுவும் பொருத்தமாகத் தோன்றாவிடில் விசுவாசம் என்ற சொல்லைப் பிரயோகிக்கும்படி அவளிடம் சொல்லப் பட்டிருந்தது.இதேபோல் எல்லா மதங்களிலும் இசங்களிலும் இருக்கிறார்கள் என பின்னர் அறிந்தேன்.விசுவாசத்திற்குப் பதிலாக ஈமான் என்றோ பக்தி என்றோ மார்க்கம் என்றோ சித்தாந்தம் என்றோ தர்மம் என்றோ வேறு வேறு மொழிகளில் பேசினாலும் அவர்களிடம் அதிகவித்தியாசம் இல்லை என்று மெதுவாகப் புரிந்தது.


அவள் என்னை ஏதாவது சந்தேகம் இருக்கிறதா சந்தேகம் இருக்கிறதா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.ஏன் எனில் விசுவாசம் எப்படி கர்த்தருக்குப் பிரியமானதோ அதே போல் சந்தேகம் அவருக்கு வெறுப்பானது என்று அவள் சொன்னால்.அது சாத்தானின் தலைமை ஆயுதம் என்றும்  அவள் சொன்னாள்.நான் ரொம்பத் தயக்கத்திற்குப் பிறகு அத்தையின் கதையைச்  சொல்லிவிட்டு இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டேன்.ஒன்று எல்லாரும் உயிர்த்தெழுவது போல் அத்தையும் ஒருநாள் உயிர்த்தெழுவாள் அல்லவா...இரண்டு பாவம் செய்தாலும் மனம் திருந்திவிட்டதால் அத்தைக்கு மீட்பு உண்டு அல்லவா...

அவள் முகம் வெளுத்துவிட்டது .அத்தையை அவள் அறிந்திருக்கக் கூடும் என்று தெரிந்தது.ஆனால் அவளது தற்கொலைக்கான காரணம் அவள் அதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.நடுங்கும் குரலில்''பிரார்த்தனையும் விசுவாசமும் ''என்று கூவினாள்.

நான் முன்னிலும் உக்கிரமாக அத்தையின் ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.சில கட்டங்களில் அது அளவு மீறி சித்தப்பாவிடம் அறை வாங்கினேன்.அவர் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அந்த ஊழியக்கரி என்றுதான் கண்டுபிடித்து ஒருநாள் அவளிடம் வலுத்த சண்டைக்குப் போனார்/அவள் சித்தப்பாவின் கவனத்தை ஈர்க்காமல் என்னை விடாது பிரார்த்தனை செய்யுமாறு சொன்னாள்.நான் அவள் சொன்னவிதமே செய்தேன்.

ஒரு அக்டோபர் மாதம் ..தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு.வீட்டின் வெளியே உள்ள திண்டில் அமர்ந்து 'புனிதர்களின் கதைகள்' என்று நினைக்கிறேன் படித்துக் கொண்டிருந்தேன்.மதியத்திலிருந்தே இருட்டு மேற்கிலிருந்து வானில் திரண்டு வந்து கொண்டிருந்தது..ஆபிசிலிருந்து வந்த சித்தப்பா ''தென்காசில எல்லாம்  கடுமையான மழையாம்''என்று ஆச்சியிடம் சொன்னார்.வழக்கமாய்  அவர் செய்வது போல் வீட்டிலிருந்த பெரிய மர்பி ரேடியோவின் காதைத்  திருகி ஆறுமணி செய்திக்கு காபி குடித்துவிட்டுக் காத்திருந்தார்.சரோஜ் நாராயணசாமி வடக்கத்திய செய்திகளை எல்லாம் கரகரத்துவிட்டு தென் தமிழகத்தின் மேல் ஒரு வலுவான காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் உருவாகி உள்ளது என்று சொன்ன கணம் பெரிய மின்னல் ஒன்று ஒரு ப்ளாஷ்  அடித்தது.அதுவரை அமைதியாக சலனமே இல்லாது இறுக்கமாய் இருந்த காற்று நகர ஆரம்பித்து கீழே  கிடந்த குப்பைகளை  எல்லாம் கிழக்கு நோக்கி விரட்டிப் போனது.க்வார்ட்டர்சில் இருந்த அத்தனை வீடுகளிலும் சொல்லிவைத்தாற்போல் மஞ்சள் விளக்குகள் வரிசையாகப் பூத்தன..அத்தை வீடு மட்டும் இருட்டாய்க் கிடந்தது.அவள் இறந்த பிறகு யாருமே அங்கு குடி வரவில்லை.அவள் எப்போதும் சுத்தமாய் வைத்திருந்த  தாழ்வாரத்தில் எப்போதும் தூசியும் புழுதியும் ஆங்காரமாகச்  சுழன்றுகொண்டே இருந்தது.சில நேரங்களில் அங்கு இரவுகளில் அழுகைச் சத்தம் கேட்பதாக சுதாவின் அம்மா ஆச்சியிடம் ஒருநாள் சொன்னதைக் கேட்டேன்.

சற்றுநேரத்தில் பலத்த் சத்தத்துடன் பெரிய மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன.இன்னொரு ராட்சச மின்னல் மின்சாரத்தை அழைத்துக் கொண்டு போய்விட ஒரு தடித்த போர்வை போல் சூழ்ந்துவிட்ட இருளில் கிழிசல் போல் மின்னல்கள் வெட்டிக் கொண்டே இருக்க ஒரே ஒரு கணம் அத்தையின் வீட்டுத் திண்டில் அவள் வழக்கமாக  உட்காரும் இடத்தில் யாரோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.அதற்குள் ஆச்சி வந்து ''ஏலே தலைச்சன் புள்ள மின்னல்ல உட்காரக் கூடாது ''என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்..மழை சாதாரண மழை அல்ல என்று கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது.ஏற்கனவே அந்த வீடு ஓட்டுவீடு.நாவல் பழங்களும் அதற்காக விழுந்த கற்களும் ஏற்படுத்திய ஓட்டைகள் வழியே மழை வீட்டுக்கு உள்ளேயே வந்திறங்கியது.ஒழுகும் நீரைப் பிடிக்க வைத்த அண்டா குண்டாக்கள் எல்லாம் இசையுடன் நிரம்பி தரையில் வழிய ஆரம்பித்தன ஆச்சி சிம்னி வெளிச்சத்தில் கெரசின்  வாசனையுடன் தோசைகள் சுட்டுக் கொடுத்தாள்..மழை தொடாத உலர்வான இடத்தில் உயரமான முரட்டுத் துணியில் ஆன இரண்டு ஆர்மிக் கட்டில்களில் ஒன்றில் ஆச்சியும் மற்றதில் சித்தப்பாவும் நானும் படுத்துக் கொண்டோம்.ஆச்சி அதை கேம்ப் கட்டில் என்றுதான் சொல்வாள்.. கொஞ்சம் தொட்டில் மாதிரிதான் இருக்கும்.ஒரு ஆள் படுக்கவேண்டிய கட்டிலில் சித்தப்பாவுடன் நெருங்கிக் கிடப்பது அ சவுகர்யமாக இருந்தது.ஆனால் அவர் படுத்தவுடனே தூங்கிவிட்டார்.ஆச்சி மட்டும் பெரிதாக இடி வெடிக்கும் தருணங்களில் எல்லாம் அர்ச்சுனா அர்ச்சுனா என்று விளித்துக் கொண்டிருந்தாள்.எனக்கு உறக்கம் வரவில்லை.இதே போன்றதொரு மழை இரவில்தான் அத்தை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலை இரையாதே என்று சொல்லி கர்த்தர் அடக்கிய கதையைச் சொன்னாள்  என்ற நினைவு வந்தது.எப்படி இது என்று வியந்த சீஷரிடம்  விசுவாசத்தால் எதுவும் சாத்தியம் இதைவிட பெரிய அற்புதங்களை உங்களாலும் செய்யமுடியும் என்று அவர் அப்போது சொன்னதும் சொன்னாள் .நான் கண்களை மூடியவாறே பரமண்டலப்  பிதாவே என்று எண்ணீக்கை இறந்த தடவையாக சொல்ல ஆரம்பித்தேன்.கூரையை ஒரு ரவுடி போல் மழை தட்டும் ஓசையும் இடி இடிக்கும் ஓசையும் மாறி மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருக்க ஆச்சிக்கு சீதனமாக வந்த பெரிய கடிகாரம் அரை மணிக்கொருதடவை கனத்த முதிய  குரலில் பேசுவதை பதினோரு மணி வரை எண்ணிக் கொண்டிருந்தேன்.எப்போது தூங்கினேன் தூங்கினேனா  தெரியாது .விழித்தபோது அடிவயிறு கனத்தது.மழை தனது ஆக்ரோஷத்தைக் குறைக்காமல் ஆனால் சீராகப் பெய்துகொண்டிருக்க எழுந்தேன்.விழித்துக் கொண்ட சித்தப்பா ''என்னலே''என்றார்.
''ஒன்னுக்கு'''
''இந்தா ''என்று மண்டைகனத்த ஐந்துசெல் எவரெடி பேட்டரியை எடுத்துக் கொடுத்தார்.அதை எடுத்துக் கொண்டு ஆச்சியைத் தாண்டி போனேன்.பின் கதவைத் திறந்ததுமே மழை ஆங்காரமாய் முகத்தில் அடிக்க பாத்ரூம் போக வழி இல்லாமல் வாசலில் நின்று கொண்டே சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பும் போதே  கவனித்தேன்.எங்கள் க்வார்ட்டர்சின் பின்கதவு எப்போதோ சிதிலம் அடைந்திருந்தது.அடிக்கடி நாய் வந்துவிடுகிறது என்று சித்தப்பா முட்களால்  தடுத்து வைத்திருந்தார்.அதன் பின்னால் ஒரு மாமரம் உண்டு.அந்த மரத்தடியில் ஒரு பெரிய கோளப் பந்து போன்ற வெளிச்சத்தின் நடுவே உறை பனி போன்ற வெண்மையான உடையில் சோகமாக  என்னையே பார்த்தபடி ........அத்தை!


நான் வாய் திறந்து கூவுவதற்குள் சட்டென்று பின்னால் பலமாக இழுக்கப் பட்டேன்.சித்தப்பா .என்னை உள்ளே தள்ளிவிட்டு சட்டென்று கதவைச் சாத்தினார்.இதற்குள் ஆச்சி சத்தம் கேட்டு எழுந்து ''ஏல என்னா'''


சித்தப்பா சற்றே தயங்கி ''பின்னால மரத்தடில  யாரோ ஒரு பொம்பிள நிக்றாப்பில  தெரியுது''என்றார்.சற்று நேரம் பேசாது இருந்தார். ''செத்துப் போன அந்த பொம்பள மாதிரி இருக்கு எழவு''

ஆச்சி ''ஐயோ மகமாயி என்று எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.
சித்தப்பாவை அந்த காட்சி சற்று அசைத்துவிட்டிருப்பதைப் பார்த்தேன்.

'ஐயோ அவ வாதையாத் திரியறா போல் இருக்கே ''என்று ஆச்சி புலம்ப ஆரம்பிக்க நான் மெளனமாக இருந்தேன்.

ஆக சித்தப்பாவும் அத்தையைப் பார்த்திருக்கிறார்

ஆனால் அவளுக்கு சற்று பின்னால் ஆட்டுத் தலையுடன் தீ போல் கனன்ற ஓநாய் விழிகளுடன் வழியும் கோழையுடன் கையில் திருகிய வாலுடன் அவளையே வெறித்துக் கொண்டிருந்த அந்த எட்டு அடி ராட்சத உருவத்தை -சாத்தானை  அவர் பார்க்கவில்லை போல் தெரிந்தது..



.

Monday, December 20, 2010

நான்சென்ஸ் ....

1.அவள்
உதடு இரண்டும் படகு
படகு நிறைய சிறகு
சிறகில் நேற்று
ஒட்டியிருந்த பூச்சி
செத்ததை பார்த்த
ஒரே சாட்சி
நம்ம சீனிவாசனின் ஆச்சி..



2.எனக்கு
முன்னால் போன
பெண்ணின் கையில்
ஒரு பலூன் இருந்தது
அதனுள்
ஒரு பல்பு ஒளிர்கிறது
இல்லை இல்லை
 பல்பைச் சுற்றி
ஒரு பலூன் ...
அந்தப் பலூன்
ஊதா நிறமாக இருந்திருக்கலாம்
ஒருவேளை
ஆயினும்
பல்பின் காரணமாக
மஞ்சளாகவே தெரிகிறது
ஆனால் கடவுளே
நான் ஏன்
அந்த எழவெடுத்த
பலூனைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறேன்?
இது அந்தப்
பெண்ணை பற்றிய கவிதை
அல்லவா....


3.இங்குதான்
விட்டுப் போய் இருந்தேன்
என் கவிதையை
சில பறவைகள்
சில பட்டாம்பூச்சிகள்
கொஞ்சம்
அழகான பெண்களின் கண்கள்
அழகற்ற ஆண்களின் இருதயங்கள்
எல்லாவற்றையும்
ஒரு நளினமான  பையில் போட்டுக்
கொறித்துக் கொண்டு
இங்கேயே இரு
என்று
பூங்காவின்  காவலாளியிடம்
சொல்லி
விட்டுப் போனேன்...
எங்கே
போய்த் தொலைந்தது?

4.இந்தக்க் கவிதையைக்
கவனமாகக் கையாளும்படி
உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்
ஏனெனில்
இதற்கு முன்னால்
படிக்கும்போதே
பலர்முகத்தில்
இது வெடித்திருக்கிறது

உடல் தத்துவம் 14

எனது வாழ்க்கையின் நீண்ட நிமிடம் அதுவாகத்தான் இருக்கும்.நான் உறைந்த மெழுகு போல் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.நீல விடிவிளக்கின்ஒளியில் அவர்கள் உருவம் மேலும் துலங்கித் துலங்கி வந்தது.உருவம் மட்டுமல்ல பசித்த நாகம் போல் சீறும் அவர்கள் மூச்சும் மிக அடிக் குரலில் ஒரு மிருகம்போல அத்தை எழுப்பும் முனகல்களும் கூட மெல்ல  மெல்லப் பெரிதாகி என்னை நெருங்கிவந்தன.என் மனம் அதன் அத்தனை இயக்கங்களையும் நிறுத்தி முழுவதும் கண்ணாய்க் காதாய்
மாறி நின்றது.முதன் முதலாய் மரணத்தை  எதிர்கொள்வது போலவே காமத்தை எத்ர்கொள்வதும் ஒருவன் வாழ்வில் மிக நொய்மையான தருணமே  என்று மருத்துவர் ஒருதடவை சொன்னார்..அது சரியாக அறிமுகப் படுத்தப் படாதவர்கள் பெரும் மனச் சிக்கல்களுக்கு பின்னால்  ஆளாகிறார்கள் என்று சொன்னார்.என் விஷயத்தில் அது உண்மையே.நான் என்னுள் எதுவோ மிகுந்த வலியுடன் உடைவதை உணர்ந்தேன்.அந்த இடத்தைவிட்டு நகர மிக முயன்றேன்.ஆனால் கால்கள் வேர்விட்டு அசைய மறுத்தன.கைகால்கள் முறுக்கி வலித்தன.காதுக்குள் விர்ரென்று  ஒரு வண்டு சுழலும் சத்தம் கேட்டது.என்னையும் அறியாமல் ஒரு பெரிய கேவல் என்னிடமிருந்து எழுந்தது.நான் சட் என்ற ஒலியுடன் கீழே விழுந்தேன்..


விழித்த போது அத்தையின் மடியில் இருந்தேன்..பின் மண்டை வலித்தது.எஞ்சிநீயரைக் காணவில்லை.அத்தை உடை அணிந்திருந்தாள்.என் உடல் அவள் உடல் எல்லாம் தண்ணீரால் நனைந்திருந்தது.அவள் ''பிள்ளே ..பிள்ளே  என்னாச்சு பிள்ளே  எந்திரி பிள்ளே ''என்று கதறிக் கொண்டிருந்தாள்.நான் அவளை உதறி எழும்ப முயற்சித்தேன்.தடுமாரியவனை அவள் அணைக்க முயல வலிந்து உதறினேன்.அவள் உறைந்து ஒரு கணம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தாள்..மறுகணம் அவள் முகம் உடைந்து கண்ணீர் பெருக சட் சட்டென்று தலையில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.;;ஐயோ அய்யோ என்னா பண்ணிட்டேன் கர்த்தரே என்ன பண்ணிட்டேன்''என்று விசும்பினாள்.;;பிள்ளே  இங்க பாரேன்.ஐயோ இங்க பாரேன்''என்று என் முகத்தைப் பிடித்து நிமிர்த்த முயற்சிக்க நான் ''ம்ம்'''என்று உறுமினேன்.அவள் மேலும் உடைந்து ''என்ன மன்னிச்சிடு பிள்ளே  பிள்ளே நான் சொல்றதக் கேளு பிள்ளே  என்று திரும்பத் திரும்பக் கெஞ்சினாள்.அவளது மெலிய குரல் சிதறி நாராசமாய் அறையை நிறைத்தது.எனக்கு ரூபியைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது.அவள் மட்டும்தான் இப்போது என்னைப் புரிந்துகொள்வாள் என்று ஏனோ நினைத்தேன்.மெல்ல ''ரூபி ரூபி ''என்று விசும்பினேன்.மேலும் .'நான் வீட்டுக்குப் போணும் என்று அழ ஆரம்பித்தேன்.ஏனோ அம்மாவின்  நினைவும்  வந்து ''அம்மா அம்மா;;என்று தேம்பினேன்.''மறுபடியும் ''எனக்கு வீட்டுக்குப் போணும்''என்று அழ அவள் சமாதானமாய்த் தொட முயன்று ''இன்னும் விடியலை பிள்ள விடிஞ்ச உடனே போலாம்..என்ன ,,டே இங்கே  பார்டா...என்னை..அத்தையைப் பாரு ..நான் சொல்றதக் கேளுடா...அத்தை பாவமில்லையா'''என நான் குரோதமாய்  அவளிடமிருந்து தள்ளி நகர்ந்து ''நீ பாவம்தான்''என்று கத்தினேன்.விலுக்கென்று  எழும்பிஉள்ளறைக்கு ஓடி அவள் எனக்கு பரிசாகக் கொடுத்திருந்த சித்திர விவிலியத்தை எடுத்துவந்து அவள் மேல் தூக்கி எறிந்தேன்.''இனி எனக்கு  இது வேணாம்''

அவளது சகல இயக்கங்களும் நின்று உதடும் கன்னச் சதை மட்டும் துடிக்க தலை குனிந்துகொண்டாள்.முழங்காலுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டாள்.அவ்வபோது முதுகு மட்டும் விதிர்த்து விதிர்த்து அடங்கியது.அந்த தருணத்தில் எனக்கு அவள் மேல் ஏன் ஒரு துளிக் கருணை கூட தோன்றவில்லை என இப்போது நினைத்தால் கூட வியப்பாக இருக்கிறது.நான் ஒரு கணம் நெகிழ்ந்திருந்தால் கூட எல்லாம் வேறு விதமாய்ப்  போய் இருக்கும்.ஒருவேளை இந்த டையரியை நான் எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது.இந்த மாத்திரைகளுக்கும் தூக்கமின்மைக்கும் அவசியம் இருந்திருக்காது ஆனால் அது அவ்விதம் நிகழவில்லை ஏன் எனில் அது அவ்விதம் நிகழவில்லை என்று மட்டுமே சொல்லமுடிகிறது இப்போது.ஒரு கூண்டில் அடைபட்ட இரண்டு மிருகங்கள் போல அந்த ஒற்றை அறையில் இரவு முழுதும் கிடந்தோம் இருவரும்.ஒரு சவ்வு மூடுவது போல துக்கத்தை தூக்கம் மூடியது..

விழித்தபோது விடிந்திருந்தது.அத்தையும் அப்படியே சுவரோடு சுவராய்ச் சரிந்து கிடந்தாள்.நான் எழுந்து கதவைத் திறக்க முயற்சித்த சத்தம் கேட்டு விழித்தாள்.ஒரு கணம் ஒரே ஒரு கணம் அவள் விழிகள் நேற்றைய இரவின் சுவடு எதுவும் இல்லாமல் பளிச்சென்று தெளிவாக இருந்தது.நான் முதன் முதலில் அறிந்த அத்தையை அந்தக் கண்களில் கண்டேன்.அப்படியே கரைந்து அவள் கைகளுக்குள் விழுந்துவிட விரும்பிய ஒரு வினாடி.ஆனால் அது நீடிக்கவில்லை.அடுத்த கணமே அவற்றில் நினைவுகளின் அழுக்கு படிந்து மங்க எழுந்து பதற்றத்தோடு ஓடி வந்தாள்.
''தேயில குடிக்கலியா பிள்ள''
எப்போதுமே அதிக சர்க்கரை போட்டு ஒரு கோப்பை சிலோன் தேயிலை அவள் காலையில் தருவாள்.அதைக் குடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு சாப்பிட்டு பள்ளிக்குப் போவேன்.நான் பதில் பேசாது தாழ்பாளை நீக்கித் திறந்து வாசலில் நின்றேன்.அவள் ஒரு கணம் என் முழங்கையை அழுத்திப் பிடித்தவாறே ஏக்கமாக என் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தாள் ..''பிள்ள''என்று சொன்னவள் கண்கள் மறுபடி நீரால் நிறைந்தது.அவள் உதடுகள் ஏதோ சொல்ல விரும்புவது போல் துடித்தன.பிறகு கையை விட்டுவிட்டாள்.என் பின்னால் அவள் கதவுகள் சாத்தும் ஒலி கேட்டது..

நான் எந்திரம் போல் இறங்கி நடந்தேன்.அதே போல் குளித்து பளளி போனேன்.பள்ளியில் எதுவுமே பதியவில்லை.தூக்கம் இல்லாததும் அதிர்ச்சியும் என்னைக் களைப்படையச் செய்திருந்தன.திரும்பத் திரும்ப வெட்டுப் பட்டது போல் துடிக்கும் அத்தையின் நிர்வாணக் கால்களும் அதன் மீது அசையும் முதுகும்தான் நினைவு வந்தது..நான் தூங்கித் தூங்கி விழுவது பார்த்து டீச்சர் ''உடம்பு சரியில்லைன்ன ஏன் ஸ்கூலுக்கு வரே''என்று ஒரு பெரிய பையனுடன் வீட்டுக்கு மதியமே அனுப்பிவைத்தார்..திரும்பப் போகையில் க்வார்ட்டர்சில் ஒரே கூட்டமாக இருந்தது.என்னவென்று புரியாமல் ஆச்சியிடம் கேக்க ''ஒண்ணுமில்லே நீ ஏன் இப்ப வந்தே ''என்று கேட்டாள்.''உடம்பு சரியில்லைன்னா படுத்துத் தூங்கு''எனறாள்..நான் வேறு எதுவும் கேட்காது படுக்கையில் விழுந்து செத்தவன் போல் தூங்கினேன்.விழித்தபோது வானில் நீலம் அடர்ந்திருந்தது.ஆச்சி விளக்கைப் போட்டு ''ஏலே முழிச்சிட்டியா..உடம்பு எப்படி இருக்கு..முழிஎல்லாம் சிவு சிவுன்னு இருக்கே..சுக்குத்தண்ணீ போட்டுத்தாறேன் குடிக்கியா...ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போலாம்னா எல்லா ஆம்பிளைங்களும் திருநெல்வேலி போயிட்டாங்களே''எனறாள்

எனக்கு எதுவோ சரியில்லை என்று பட எழுந்து வெளியே போக முயற்சிக்க ''அய்யா இப்ப எங்கே போறே..உடம்பு சரியாகட்டு 'என்றதையும் மீறி வெளியே வந்தேன்.விநாயகம் வீட்டு முற்றத்தில் ஒரு பெண்கள் கூட்டமே குழுமியிருக்க சிறுவர்கள் எல்லாரும் சற்று தள்ளி நின்றிருந்தனர்/என்னைப் பார்த்ததுமே மஞ்சு பாவாடை பறக்க ஓடி வந்தாள்.மூச்சிரைக்க நின்று வாங்கிக் கொண்டு .''அத்தை விஷம் சாப்பிட்டிருச்சு.ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் இருக்காக''எனறாள்

பின்னாலேயே விநாயகமும் குலுங்க குலுங்க ஓடி வந்தான். அவன் ''அதெல்லாம் இல்லே நான்தான் சொன்னேன்லா அங்க பாம்பு இருக்குன்னு அது கடிச்சிடுச்சு..இங்க ஆஸ்பத்திரில முடியாதுன்னு சொல்லி டவுனுக்கு அப்பா வண்டில கொண்டு போயிருக்கு கூட உங்க சித்தப்பாவும் போய் இருக்கு..அதான்  சொல்லிட்டே இருந்தேன் பாம்பு அங்க ..''என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க பாதியிலேயே விட்டுவிட்டு  அத்தை வீட்டை நோக்கி நடந்தேன்.

அங்கிருந்த வீடுகளில் அந்த வீடு மட்டும் வெளிவிளக்கு இடப்படாமல் இருட்டாக இருக்க விளக்கைப் போட்டேன்.விநாயகம் தாழ்ந்த குரலில் கத்தினான்.''டேய் அங்க போகாதே.பாம்பு இருக்கு''

அவள் வீடு வெறுமனே சாத்தியிருந்ததை தாழ்ப்பாளிட்டு அடைத்தேன்.பெருக்கப் படாதிருந்த தாழ்வாரததைப் பெருக்கிச் சுத்தமாக்கினேன்.வாசலில் சிதறியிருந்த அவளது செருப்புகளை அவள் வைப்பது போலவே  ஒழுங்காய் ஓரமாக வைத்தேன்.அவள் வந்தவுடன் இதெல்லாம் நான்தான் செய்தேன் என்று சொல்லி அவளிடம் ஒரு புன்னகையை வாங்கவேண்டும் என்று நினைத்தவாறே சற்றுநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.ஆச்சி ''ஏலே அங்க என்ன பண்றே...இங்கே வா முதல்ல''என்று அதட்ட அங்கிருந்து  இறங்கும்போது சரசரவென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டு தலையை உயர்த்திப் பார்க்க வேகமாக இறங்கிக் கொண்டிருந்த மாலைவானின் பின்னணியில் ஒரு நிழலாக ஆனால் தெளிவாக காற்றில் ஆடும் ஒரு கொடியைப் போல் காற்றை முகர்வது போல் தலையைத்தூக்கிப்  பார்த்த அதை பார்த்தேன்.ஒரு கணம் அந்த இருட்டிலும் அதன் கண்கள் ஒளிர்ந்து என்னைப் பார்ப்பது போன்ற ஒரு பிரமைக்கு ஆளானேன்

பாம்பு.

திரும்பவும் கைகால் உதறி கீழே விழுந்த என்னை யாரோ வீட்டுக்குத் தூக்கிப் போனது மட்டுமே நினைவிருந்தது.மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சலில் கண்திறக்காமல் கிடந்தேன்.நான்காம் நாள் விழித்து எழுந்தபிறகு ஆச்சியிடம் முதல் கேள்வியாக கேட்டேன்.''அத்தை எங்கே'?'

அவள் தயக்கமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப் பட்ட அன்றிரவே  சிகிச்சை பலனின்றி அத்தை இறந்து போனதைச் சொன்னாள்..

Saturday, December 18, 2010

உடல் தத்துவம் 13

இரண்டாம் நாளே விடுமுறை முடியும் முன்பே ரூபியை  அத்தை நாகர் கோயிலில் கொண்டு போய் விட்டு விட்டாள்.ரூபி யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை.திரும்ப அவள் வருவாளா  என்பது சந்தேகம்தான் என்று விநாயகம் ஆராய்ந்து தெரிவித்தான்.ஊருக்குப் போய் வந்ததில் இருந்து அத்தை ஆளே மாறி இருந்தாள்.அவளிடம் பழைய ஒளி இல்லை.ஒரு சாம்பல் வெளிச்சம் அவளை இப்போது சூழ்ந்து விட்டிருந்தது.இப்போதெல்லாம் அவள் எப்போதும் பதற்றமாகவோ அல்லது ஆழ்ந்த சிந்தனையாகவோ இருந்தாள்..அல்லது என் அம்மாவைப் போல் ஏதாவது தீவிரமான வீட்டுவேலைகள் விடாது செய்து கொண்டிருந்தாள்.அலையும் அவள் மனதைத் தடுக்கும் முயற்சியாக அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள் என்று இப்போது புரிகிறது.அவளுக்கு தெரிந்த தையல் வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.விவிலிய வாசகங்கள் எழுதிய தலையணை உறைகளை எல்லாருக்கும் இலவசமாக நெய்து கொடுத்தாள்..

அப்படி  இல்லாத சமயங்களில் எல்லாம் யாருக்கோ நீள நீள கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள் .யாருக்கு என்று கேட்டதற்கு கடவுளுக்கு எழுதுகிறேன் என்று சொன்னால்.கடவுள் பதில் போடுவாரா என நான்  சந்தேகப் பட்டதற்கு மலைபோல் அசையாத விசுவாசம்  இருந்தால் நிச்சயம் பதில் அளிப்பார் .விசுவாசத்தால் கடலைப் புரட்டுவதும் சாத்தியமே  என்று சொன்னாள்.அப்போது அவள் கண்களில் தெரிந்த ஒளி அச்சம் அளிப்பதாக இருந்தது.அவள் சொன்னது போல் அவளது கடவுள் சில சமயம் பதில் அளிக்கவே செய்தார்.அத்தையின் கடிதங்களைப் போல் அவை நீளமான பதில்களாக இருக்கவில்லை.நீல இண்லேண்டு கடிதத்தில் அவர் பதில்கள் வரும் அன்றெல்லாம் அவள் பித்து பிடித்தது போல் இருப்பாள்..சில கடிதங்கள் அவளைசொர்க்கத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றன..சில  அவளை நரகத்தின் வெங்குழியில் ஆழ்த்தின.சில சமயம் எந்த தருணத்திலும் சிறகை உயர்த்திப் பறந்து போய் விடப் போகிறவள் போல் அவள் இருந்தாள்.மற்ற தருணங்களில் இதோ உடைந்து சுக்கு நூறாகப் போகிறேன் என்பது போல் காணப்பட்டாள்.

வெள்ளிக் கிழமைப்  பிரார்த்தனைக் கூட்டங்கள்வழக்கம் போல் நடந்தன.ஆனால் முன்பைப் போல் ஒரு சாந்தமான நிகழ்வாய் இருக்கவில்லை அது.பிரார்த்தனைகளோடு அவள் இப்போது மெலிய குரலில் சில கிறித்துவக் கீர்த்தனைகளைப் பாடவும் செய்தாள் ..அவளுடைய மனநிலைக்கேற்றார் போல் அவளது பாடல்களின் தெரிவு மாறியது.'எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே' என்ற பாடலை சில நாட்கள் மிகுந்த களிப்பான குரலிலும் சில நாட்கள் கண்ணீர் மல்கி உடைந்து நடுங்கும் குரலிலும் பாடுவாள்....அந்தப் பாடலில்  வரும் 'ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான மணவாளனும்' என்ற வரியை மட்டும் தனியே இருக்கும் போது கூட குரல் தேய்ந்து அழுகையில் முடியும் வரைப் பாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக மற்ற சிறுவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள்.ஏன் என்றதற்கு மஞ்சு ஒற்றை வரியில் 'எனக்கு அவளைப் பார்த்தாலே பயமா இருக்கு 'என்று சொல்லி விட்டாள்.''உனக்குப் பயமா இல்லையா''என்றால்.எனக்கும் பயமாகவே இருந்தது .ஆனால் அதை மீறி அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

குழந்தைகள் மட்டுமல்ல க்வார்ட்டர்சில் இருந்த மற்றப் பெண்களும் கூட அவளை இப்போது தவிர்க்க ஆரம்பித்தார்கள்..அத்தையின் மன நிலை மட்டுமல்ல அவளது உடல் கூட வேறுவிதமாக மாற  ஆரம்பித்தது உணர முடிந்தது.சில பெண்களைப் போல் துக்கமோ களிப்போ அத்தையால் தொடாமல் பகிர்ந்து கொள்ள முடியாது..மற்ற குழந்தைகள் அவளை விரும்ப அவளது சிலீரென்ற வாஞ்சை ததும்பும் ஸ்பரிசமும் ஒரு காரணம்.பல  இரவுகளில் நான் எதேச்சையாக விழித்தபோது கூட அவள் என் நெற்றியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.அவள் சருமம் எப்போதுமே பனித்துளி போல் சிலீரென்று இருக்கும்.நம்முடைய அத்தனை பதற்றங்களும் அவளது ஒற்றைத் தொடுகையில் கரைந்துவிடுவது போல் உணர வைக்கும்.ஆனால் இப்போது அப்படி அல்ல.ஒரு நாள் தற்செயலாக அவளைத் தொட நேர்ந்த போது அவள் உடல் அனல்துண்டு போல் கொதித்துக் கொண்டிருப்பதை  உணர்ந்து திடுக்கிட்டு விலகினேன்.காய்ச்சலா  என்று என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லி விடடாள்..அதிலும் சில இரவுகளில் அவள் உடலிலிருந்து உஷ்ணம் செங்கல் சூளையிலிருந்து வீசுவது போல் தாங்க முடியாது வீச ஆரம்பித்தது.பெரும்பாலும் கடவுளிடமிருந்து கடிதங்கள் வரும் நாட்களிலேயே இவ்விதம் நிகழ்ந்தது.முன்பு இருந்தது போல் இல்லாமல் அவள் உடம்பிலிருந்து இப்போது மெலிதான நாற்றமும் எழும்பி வந்தது.அப்போதெல்லாம் அவள் நள்ளிரவுகளில் எழுந்து குளித்துவிட்டு பிரார்த்தனை செய்வதையும் கண்டேன்.இப்போது அவள் என்னையா மற்றவரையோ முன்பு போல் தொடுவதில்லை.நான் தொட்டால் கூட விலகிப் போனாள்


இப்போது அவளுக்கு மற்றவர்களின் சிநேகம் குறைந்து போய் விட்டதின் இன்னொரு காரணம் மெதுவாகத்தான் எனக்குத்தெரிந்தது.ஒரு நாள் பளளி விட்டு நடந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது என்ஜினீயரை வழியில் சந்தித்தேன்.அவர் என்னிடம் ஒரு காகிதப் பொதியைக் கொடுத்து அத்தையிடம் கொடுக்கச் சொன்னார்.நான் மறுத்தேன்.அதுவரை அத்தைக்கு அவரைப் பற்றி சரியான அபிப்பிராயம் இருந்ததில்லை.அவர்எங்காவது அவளைச் சந்தித்து  அவளிடம்  பேச முயற்சிக்கும் போதெல்லாம் ஒரு அவசரப் புன்சிரிப்புடன் கடந்து போய்விடுவாள்.நான் அதை அத்தை வாங்க மாட்டாள் என்று சொன்னேன்.அவர் சிரித்து ''கொடுறே இப்ப.மாட்டேன்னு சொல்லட்டு '''என்று வற்புறுத்திக் கொடுத்தார்.நான் அதைப் பிரித்துப் பார்த்தேன்..அல்வா ஜிலேபி என்று வாழை இலையில் சுற்றிய திருநெல்வேலி லாலா இனிப்புகள் .அவர் போனதும் அப்படியே அதை வெறுப்புடன்  தூர எறிந்துவிட்டு மறந்துவிட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து அத்தை தூங்கும் முன்பு மெதுவாகக்  கேட்டாள்..''என்ஜினீயர் சார் ஏதாவது உன்கிட்டே கொடுத்தாரா பிள்ளே ?''
நான் ''ஆமா''என்றேன் தயக்கமாய்.
''சொல்லவே இல்லை?''எனறாள்.நான் பதில் பேசவில்லை.அவள் சற்று கோபமாக இருந்தது போல் இருந்தது.

அன்றிரவு சரியாகத் தூக்கமே  வரவில்லை.ஜன்னல் கம்பிகளில் வடியும் பூசணி மஞ்சள் நிலவை பார்த்துக் கொண்டே இருந்தேன்.எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.விழித்தபோது நிலா ஜன்னலை விட்டு மேலெழும்பிப் போய் இருந்தது.சில்லென்று சிள் வண்டின் இசை  அறையை நிறைத்திருந்தது .பக்கத்தில் அத்தையைக் காணவில்லை.ஒருவேளை பின்னால் குளிக்கிறாள் போல என்று இருந்தேன்.ஆனால் அங்கும்  வெளிச்சம் இல்லை.மெல்ல இருளுக்கு கண்ணும் காதும் கூர்ந்தன.சாம்பல் இரவு வெளிச்சத்தில் ஏசு நாதர் வானோக்கி பிதாவை இன்னமும் விளித்துக் கொண்டிருந்தார்.மின்மினிப் பூச்சி ஒன்று ஒரு ஒளித்துணுக்கு போல் மிதந்து மிதந்து அருகில் வந்தது.காற்று முழுக்க வேனையில் பூக்கும் வேப்பம்பூக்களின்  வாசம் நிரம்பித் திணற டித்தது.எனக்கு தாகம் எடுத்தது.பக்க்கத்தில் இருந்த ஈயச் செம்பில் தண்ணீர் காலியாக இருந்தது.நான் நீரில் நீந்துபவன் போல் இருட்டில் நீந்தி முன் அறைக்குப் போனேன்.அங்கு மெலிய நீல விடிவிளக்கு  ஒளியில் ஒரு வினோதமான காட்சியைக் கண்டேன்.ரூபி எப்போதும் கிடக்கும் பத்தமடைப் பாயின் மீது ஒரு வெற்று முதுகு மட்டும் தெரிந்தது.சுருள்  சுருளாக மயிருடன்  தெரிந்த முதுகாகவே இருந்தது.அது அதன் கீழே கிடந்த மற்றொரு  உடலின் மீது மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.பக்கத்தில் குவியலாகக்  கிடக்கும் சில உடைகள்.வீடு முழுவதும் ஒரு வியர்வை நாற்றமும்  மெலிதான முனகல்களும்  நிறைந்திருந்தது.முதுகு எஞ்சிநீயருடையது .கீழே அகன்று  ஆடையின்றி, வெட்டப்படும் ஒரு தவளையின் கால்கள் போல் துடித்துக் கொண்டுக்   கிடந்த கால்கள் அத்தையுடையது ....

உடைந்த கவிதை

கவிதை செய்தலின்
பாதியில்
எட்டிப் பார்த்தாள் தோழி
பெரு ஆகாசத்தில்
எழும்பிப்
பறத்தலை
 பாதியில்
நிறுத்திவிட்ட பறவை போல்
விசும்பிலிருந்து  வீழாது
வெளியில்
உறைந்துவிட்ட மழைத்துளி போல்
பதறி நின்றது கவிதை

உடை மாற்றும் போது
ஒளிந்திருந்து பார்க்கப் படுவது போல்
கலவியின் உச்சத்தில்
தடை செய்யப் படுவது போல்
முலை சுரந்து
சிசுவுக்கூட்டுகையில்
வெறிக்கப் படுவது போல்
வலிக்கிறது என்று சொன்னேன்
புரிந்தும் புரியாமலும் விலகினாள்..
ஒருவேளை என்னை
அதீத அகங்காரன் என்று
நினைத்திருக்கக் கூடும்

திரும்பி வந்து பார்த்தேன்
மேசையில்
கவிதையின்
முறிந்த சிறகு
ஒன்று மட்டுமே
மிச்சமாய்க் கிடந்தது...

Friday, December 17, 2010

வார்த்தை வாதை வாழ்க்கை 2

உங்கள் கட்டுரைத் தலைப்பில் உள்ள வாதை என்றால் என்ன என்று ஒருவர் கேட்டார்.வாதை என்ற வார்த்தை சமீபத்தில் அடிக்கடி இலக்கிய வெளியில் உபயோகிக்கப் படுகிறது.ஒவ்வொரு சீசனுக்கும் சில வார்த்தைகள் பிரபலமாக இருக்கும்.பிறகு வேறு வார்த்தைகள் வந்து பீடத்தில் ஏறும்.சரித்திரத்தில் வார்த்தைகளின் இந்தப் பரமபத விளையாட்டைக் கவனிப்பதே  சுவராஸ்யமான ஒரு பொழுது போக்காக  இருக்கும்.இடத்திற்கேற்றார் போல் தொழிலுக்கு ஏற்றது  போல் வயதுக்கு ஏற்றார் போல் கூட சில வார்த்தைகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.இவற்றை ஆங்கிலத்தில் jargon என்று சொல்வார்கள்.ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேக ஜார்கன்கள் உள்ளன.அதற்கான அகராதிகளும் வெளிவருகின்றன.காய்கறி மார்க்கட்டில் இருந்து ஷேர் மார்க்கட் வரை வேறு வேறு ஜார்கன்கள்.தமிழில் பரிபாசை என்று சொல்லலாம்..ஆனால் குதிரைகளின் மொழி என்று புரிந்து கொள்ளக் கூடாது.[ம்ஹூம்...மறு படி எஸ்ராவைப் பத்தி எழுதாதே போகன்.கட்டுப் படுத்திக்க]

பதின்ம மற்றும் கல்லூரி மாணவர்களின் தொழில் வார்த்தைகளை நம்மால் அவளவு எளிதில் புரிந்து கொள்வது கடினம்..என்னுடைய பதின்ம வயதில் நண்பர் வட்டாரத்தில்  விதம் விதமான பெண்களுக்காய் ரகம் ரகமான ரகசிய வார்த்தைகள் இருந்தன.''மச்சான் குத்துவிளக்குடா''என்று சொன்னால் பறவை  கல்யாணம் மட்டுமே செய்து கொள்ளும் காதல் செய்யாது என்று அர்த்தம்.சுவராஸ்யம் கம்மி.பொட்டிக்கடைடா என்று சொன்னால்...யார் கேட்டாலும் சாமான் கிடைக்கும் என்று அர்த்தம்[இங்கு 'சாமான்' என்பது எதையும் 'குறி'ப்பது அல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்].M.B.B.S என்றால் மருத்துவர் என்று நீங்கள் நினைத்தால் பாவம்.கல்யாணம் ஆனாலும் களையான கலையாத சித்திரம் என்று பொருள்.இது போல ஆண்களுக்கும் பெண்கள் நிறைய குறியீட்டுச் சொற்கள் வைத்திருக்கக் கூடும்.என்னுடன் பேசும் பெண்கள் எல்லாரும் o.k o.k என்று அடிக்கடி சொல்வார்கள் .நாம் என்ன சொனாலும் தலையாட்டுகிறார்களே என்று புளகாங்கிதத்தில் திரிந்தேன்.அது ஒட்டடைக் குச்சி என்று அர்த்தம் தருவது என அறிந்தபோது நடுவானில் விமானத்திலிருந்து தள்ளிவிடப் பட்டவன் போல் உணர்ந்தேன்.அது போல் பங்கி,[தூங்கு மூஞ்சி கேஸ்]s.p [சின்னப் பையன்] பால் டப்பி,பிஸ்கோத்து என்று பல பெயர்கள் எனக்கு இருந்திருக்கின்றன என அறிந்த போது....!இப்போது  சொற்கள் மாறிவிட்டன...ஆனால் அவை குறிக்கும் அர்த்தங்கள் அதிகம் மாறவில்லை.her hard drive is heavily infected என்று ஒரு நவ யுவர் சொன்ன போது புரிவது போலதான் தோன்றியது.நாங்க பொட்டிக் கடை என்போம்.[பெண்ணியர்கள் மன்னிக்க]

எங்கோ போய்விட்டோம்...வாதைக்கு வருவோம்.இந்த வாதை என்ற சொல்லை முதல் முதலாய் விவிலியத்தில்தான் அறிமுகம்..வாதை உன் கூடாரத்தை அணுகாது...என்று அடிக்கடி தெரு முனைகளில் புதிய மெசையாக்கள் உங்கள் காதுகளுக்கு உள்ளேயே வந்து கூவுவதைக் கேட்டிருப்பீர்கள்.விவிலியத்தில் நிறைய வாதைகள் உலாவுகின்றன.விவிலியத்தின் தமிழ் பற்றி தனியாக ஒருநாள் முழுக்கப் பேசலாம்.வாதை உன்  கூடாரத்தை அணுகாது என்று விவிலியம் சொல்கிறது.எதனால் வீட்டை அணுகாது என்று சொல்லவில்லை?[கூடாரம் என்று சொன்னால் எனக்கு சர்க்கசும் பெண்களின் பாவடையும்தான் நினைவு வருகிறது.இரண்டும் மிருகங்கள் உலவும் இடம்.]வேதங்களைப் போலவே விவிலியத்திலும் நிறைய மேய்ப்பர்களின் மொழி பயன் படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.ஏசுவே ஆட்டுக் குட்டியாகத்  தான் உருவகப் படுத்தப் படுகிறார்.ஆனால் அதே சமயம் சாத்தனுக்கும் பல இடங்களில் ஆட்டு உருவமே.!...ஆம்.சாத்தானும் ஒரு அஜமுகனே.[அஜன்-ஆடு]

அவர்களுக்கு ஆடு என்றால் நமக்கு மாடு.குறிப்பாக பசு.மனிதர்களையே பல்வேறு கோத்திரங்கள் ஆகத்தான்  பிரித்துக் கொண்டார்கள்.கோத்திரம் என்றால் தமிழில் சுமாராய் மாட்டுக் கொட்டகை என்று சொல்லலாம்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் நீங்கள் எந்த கொட்டகை என்று கேட்பது வழக்கமாய் இருந்திருக்கிறது.இது சாதியைப் போன்ற ஒரு பிரிவல்ல...சாதியைப் போன்று அல்லாமல் வேறு வேறு கோத்திரங்களில் மணம் புரிவதே ஊக்குவிக்கப் பட்டது.இது கொஞ்சம் மரபியல் சார்ந்த பகுப்புமுறை என்று தோன்றுகிறது.ஒரே கோத்திரங்களில் சேர்ந்தவர்கள் சகோதர உறவு முறையாகப் பார்க்கப்  பட்டது.அவர்கள் திருமணம் செய்து கொள்வது கடுமையாக எதிர்க்கப் பட்டது அவ்வாறு செய்வதை சட்ட பூர்வமாய்த் தடுக்கக் கோரி நீதிமன்றத்துக்கெல்லாம் போய் இருக்கிறார்கள்.ஆதி கோத்திரங்கள் எட்டு.எட்டு ரிஷிகளை மூலவராகக் கொண்டது.பின்னர் பிரிந்து 49 ஆக உயர்ந்தது.ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர் எல்லாம் சகோத்திரர்கள் அல்லது சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.சகோதரர் என்ற சொல்லுக்கு வேர்ச் சொல் ஒரு மாட்டுக் கொட்டகையில் இருக்கிறது !தமிழ்நாட்டிலும் பல சாதிகளில் கோத்திர முறை  கிளை என்ற பேரில் உலவுகிறது.ஒரே கிளையைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சகிக்காது கொலைகள் கூட நடந்திருக்கின்றன.


அதை விடுங்க..உன்னோட பெரிய வாதையாப் போச்சே என்கிறான் நண்பன்.வாதை  என்னன்னு கேட்டா மாடு ஆடுன்னு ஊரைச் சுத்தறியே என்கிறான்.வாதை வதை வதம் எல்லாம் துன்பம் என்ற ஒரே  பொருள் தரும் பல்வேறு சொற்களே எனத் தோன்றுகிறது.கீசக  வதம் தென் இந்தியாவின் முதல் திரைப்படம்.கேரளாவில் இன்றும் பிரபலமானதொரு கதக்களி நாடகம்.மகாபாரதத்தில்  வரும் ஒரு உபகதை.வனவாசத்தில் மாறுவேசத்தில் இருந்த திரவுபதியின் அழகில் மயங்கி ரொம்ப ஜொள்ளு விட்டு தொல்லை செய்த கீசகன என்ற கலா ரசிகனை பீமன்  நைச்சியமாய் வேறு இடத்துக்கு அழைத்துப் போய் வதக்கிக் கொன்ற கதை.

தென் தமிழகத்திலும் கேரளத்திலும் வாதை என்ற சொல்லுக்கு ஒரு தீய சக்தி  என்று லேசாக மாறுபட்ட பொருளும் உண்டு.'உன்னை  ஏதோ வாதை பிடிச்சிருக்கு போய் கோயில்ல  காட்டி தண்ணி எறியணும்' என்று அம்மா அடிக்கடி சொல்வாள்.வாதைகளிளிலும் பலவகைகள்.பெரும்பாலும் பெண்களையே பீடிக்கும்  வாதைகள்.பேய் பிசாசு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் எல்லா வாதைகளும் பிசாசுகள் அல்ல.முனி,மாடன் என்ற குட்டி தெய்வங்களும் உண்டு.பெரும்பாலும் நடு ராத்திரிகளில் வாக்கிங் போகும் வினோத பழக்கம் இவற்றிற்கு உண்டு.அப்போது நடுவில் வந்து டிஸ்டர்ப் செய்பவரை ரசிக்காது.வாதைகளை விரட்ட சிறப்பு வழிபாடுகளும் கோயில்களும் உள்ளன.கிறித்துவத்தில் இதற்கென்று சிறப்பு பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் அதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர்.நம்மூரில் கேரளாவில் தான் வாதை அதிகம்.எனவே அந்தத் துறை  ஸ்பெசலிஸ்ட்களும் அதிகம்.அங்கு இது ஒரு இண்டஸ்ட்ரி.சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் பிரசித்தம்.அங்கு நள்ளிரவில் நடைபெறும் குருதி பூஜை என்ற வாதை விரட்டு பூஜையைப் பார்ப்பது நல்ல ஒரு பின் நவீனத்துவ நாவலைப் படிப்பது போல் திகிலான  அனுபவமாக இருக்கும்

Thursday, December 16, 2010

பொஸ்தவ விளா...

வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி என்னுடைய ஐந்து புத்தகங்களை மடமைப் பதிப்பகம் வெளியிடுகிறது
                               இடம் -சொறி படையார் வகை திருமண அரங்கம்
                                             வாயில்லா நாயினார் தெரு 
                                              பாளையம்கோட்டை  
                          
1.தாகம்-பாட்டிலின் எண்ணற்ற ரகசியங்களை ஓப்பனர் இல்லாமலே திறந்து நமக்கு ஊற்றும் காவியம்.குடி எப்படி வயிற்றில் போய் புரட்சியாக உருமாறி வாய்வழியே கலகமாக வெளிவருகிறது என்பது பற்றி இந்நூல விரிவாகப் பேசுகிறது.
2.குடித்துத் திரிபவனின் குடலியல்-முப்பது ஆண்டுகளாக இலக்கியக் கூட்டங்களில் உள்ளும் வெளியிலும் புத்தக வெளியீட்டுக்கு முன்பும் பின்பும் பாரின் சரக்கை யூரின் சந்துகளில் குடித்துத் திரிந்தவனின் முப்பது வருட குடி அனுபவங்கள்.
3.ஜாக்கி ஜட்டியும் ஜனதாயிசமும் -ஒரு துண்டு கோவணத்திலிருந்து முழுநீள லங்கோடு வரை மிக விரிவாக இந்நூல் 'அலசுகிறது'.ஒரு முன் நவீனத்துவ புடைப்பு ...சாரி...படைப்பு.
4.ஸ்டார்ட் காமிரா -திரை மறைவில் சுவாமி நிக்கியானந்தா பக்தைக்கு அருளியதை மறைந்திருந்து பார்த்த அவரது பிரதான சீடர் ஒருவரின் கண் வழியே இக்கதை விரிகிறது.ஒரு கண்ணின் கதை.நிக்கிலீக்ஸ்.Nikki leaks என்றும் வாசிக்கலாம்.
5.மோச லீலா என்ற ஸ்கலித புராணம் -ஒரு நவீனக்  கதையாடல் உத்தி ..இதில் வரும் எல்லோருக்கும் இரண்டு ஆண்குறிகள் உள்ளன.ஒன்று குறியீட்டுக்  குறி.இன்னொன்று குறி ஈட்டும் குறி.


                                விழா சரியாக உச்சி வெயில் நச்சென்று தலையில் இறங்கும் நேரத்தில் தொடங்கப் படும்.முந்தி வரும் முப்பது பேருக்கு மட்டும் டீயும் பொறையும் போடப் படும்.ஆனால் அதற்கு காலை ஆறு மணிக்கே வந்து டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.


                           புத்தகங்களை மடமைப் பதிப்பக உரிமையாளர் தேவ குமாரன் புனித ஆவி பறக்க வெளியிட 'கலாச் சாரம் அது மின்சாரம்'படத்தில் நடித்த புரட்சி நடிகை மப்பு வாங்கிக் கொள்வார்.அவர் வராவிட்டால் பல்லி பப்புசாமி  பெட்டியார் [பைபாஸில் பெட்டிக் கடை வைத்து அந்தரங்கம்,,ஆன்டி விகடன் போன்ற அரிய இலக்கியங்களை மறைத்து வைத்து கொடுத்து என் போன்ற வளரும் இலக்கியவாதிகளுக்கு சேவை செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.ஒரு தலை முறைக்கே பெண்களின் உடற் கூறியல் பற்றி இந்தப் புத்தகங்கள் தான் கற்றுதத் தந்தன என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும் ]மேலும் கவிஞர்கள் [என்று நம்பப்படும் நம்பும்படி வற்புறுத்தப் படும்]பனிவிழி.தெலுங்கி ,மற்றும் அடிக்கடி பூனைகளுடன் பேசுபவரும் பூனைகள் எருமைகள்.குதிரைகள் எதுவும் கிடைக்காத தருணங்களில் மேடைகளில் பேசுபவருமான எனது சக எழுத்தாளர் ராசா பேசுவார்.சிறப்பு விருந்தினராக எனது முதல் பட இயக்குனரும் [அந்தப் படத்தில் கடைசிக் காட்சியில் இடது மூலையில் முப்பத்தி  ஏழாவது நபராக நின்று கைத் தட்டுபவன் நான்தான்]சமீபத்தில் வந்து வெற்றிகரமாக தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் 'லாலாக் கடை அல்வா' வின் இயக்குனருமான பம்ப்கின் பேசுவார்.[முன் எச்சரிக்கையாக அவருக்கு என் நூல்களைப் பற்றிய சகஸ்ர நாம துதி ஒரு பிரதி கொடுக்கப் பட்டிருக்கிறது.அதை மீறியும் அவர் தான் எப்படி அல்வா கிண்டினார் என்பதைப் பற்றியே  பேச ஆரம்பித்தால்..அவரது அல்வாவில் என்னென்ன ஒரிஜினல் பொருட்கள் கலந்திருக்கிறது என்ற ரகசியம் பதிவு பதிவாக வரும் என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறார்]அது போக முன்னாள் எழுத்தாளர் எழுத்துப் புத்தர் குண்டலினி குமாரனும் கலந்து கொண்டு மணமக்களை மன்னிக்க... தற்காலத் தமிழ் இலக்கியத்தையும் அவர் எழுதும் கற்காலத் தமிழ் இலக்கியத்தையும் ஆசிர்வதித்து அருளுவார்...


பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது சிறிய சிலாமூர்த்தி அரங்கின் வெளியே வைக்கப் படிருக்கிறது.பீராலோ பாலாலோ  அபிசேகம் செய்யலாம்.ஆனால் பக்கத்திலேயே தற்காலிகமாகத் திறக்கப் பட்டிருக்கும் தேவசம் போர்டிடம் அபிசேகச் சீட்டு வாங்கிக் கொண்டு முறையாகச் செய்யவும்.நெய் விளக்கும் ஏற்றலாம்.சரஸ்வதி கடாச்சம் கிட்டும்.ரோக மோகனின் நூல்களைப் படிப்பதால் ஏற்படும் தீராத பிரம தத்தி தோஷம் நீங்கும்.




அனுமதி எல்லோருக்கும் இலவசம்.ஆனால் உள்ளே நுழைந்தவர்கள் அனைவரும் நூல்களை வாங்கிய பிறகே வெளியேற அனுமதிக்கப் படுவார் என்று வருத்தத்துடன் தெரிவிக்கப் படுகிறது.ஒரு இலக்கியவாதியாக நான் இந்த சமூகத்தில் நீடித்திருப்பதற்கு மிகுந்த செலவாகிறது என்பதால் இது கட்டாயம் ஆகிறது. 


ஆகவே விழாவிற்கு நீங்கள் அனைவரும் அலை கடலென கடல் மணலென குடல் புழுவெனச் சாடி வந்து .சிறப்பித்து தமிழ் இலக்கியத்தை மரணப் படுக்கையில் இருந்து காப்பாற்றவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் 


பி.கு-லேட்டஸ்ட்டாக ஒரு செய்தி.த்ரீ இடியட்சில் நானும் ஒரு இடியட்டாக நடிக்க புக் செய்யப் பட்டிருக்கிறேன் என்பதை சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மற்ற இரண்டு இடியட்சைப் பற்றி நீங்கள் நினைப்பது சரிதான்.அவர்களேதான்..

Sunday, December 12, 2010

வார்த்தை வாதை வாழ்க்கை....

என்னுடைய தளத்தை தற்செயலாக அலுவலக நண்பர் ஒருவர் பார்க்க நேர்ந்து 'என்ன இது உருப்படியா ஒண்ணுமில்லையே?''என்றார்.'ஆஹா இந்த விஷயம் இவருக்கும் தெரிந்துவிட்டதா என்ன ''என்று துணுக்குற்றேன்.அவரைத் தீவிர இலக்கியவாதியாகவோ தமிழ்ப் பண்டிதராகவோ நான் அதுவரை அறிந்திராதலால் விளக்கும்படிக் கூறினேன்.''கதை கவிதைன்னு எல்லாமே ஹராம்.''என்றார்.அவர் ஒரு தீவிர வஹாபி  முஸ்லீம்.கதை கட்டுரைகள் போன்றவை எல்லாம் அத்துணை இறைவனுக்குப் பிரியமானவை அல்ல .மனிதனை வழி கெடுப்பதற்காக இப்லிஸ் [சாத்தான்]கண்டுபிடித்த உபாயங்கள் என்று சரியாகவோ தவறாகவோ புரிந்து வைத்திருந்தார்.அவரது பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கும் மிகச் செழுமையான இலக்கியங்கள் பற்றி கூட அவர் அறிந்து வைத்திராதது வருத்தமாக இருந்தது.ரூமி போன்றவர்களைப் பற்றி கூட அவருக்கு என்ன கற்பிக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை.அவர் மட்டுமல்ல வேறு நிறைய பேர் இவ்விதம் என்னை சொல்லி இருக்கிறார்கள்.அதிகாலை பால்காரன் மணி அடிக்கும் ஓசை வரை விளக்கு எரித்துப் படிக்கும்  என்னைப் பார்த்து பரீட்சைக்குத்தானே என்று தவறாது ஒரு சித்தப்பா கேட்பார்.நான் படிப்பது ஒன்றுக்கும் பயன்படாத கதைப் புத்தகங்கள் -உலக இலக்கியம் கூட அல்ல-ஸ்டீபன் கிங்  போன்றவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் பரப்பிய இலக்கியங்கள் அவற்றைப் படித்து ஒரு ஐ ஏ எஸ் ஆகக் கூட முடியாது என்று எப்படி அவரிடம் சொல்வது என்று சிரித்துவைப்பேன்.

இது ஒரு விதமான அவுரங்கசீப்தனம் என்று நண்பருடன்  விவாதிக்க விரும்பவில்லை.ஆள் மற்றபடி மிக நல்ல மனிதர்.'உருப்படியா சமூகத்துக்குப் பயன்படுற மாதிரி ஏதாவது எழுது நாளைக்கு கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டாமா'என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.எனக்கு குழப்பம் ஆகிவிட்டது.ஜட்ஜ்மென்ட் டே[அர்னால்ட் ச்வர்சநேக்கர்  படமல்ல]அன்று கடவுளிடம் டையரி வேறு காண்பிக்கவேண்டும் என்று சொல்கிறாரே!சமூகத்துக்குப் பயன்படுவது போல் நான் என்ன எழுத முடியும்?வழக்கமாக சமூகம் பயப் படுவது போல் அல்லவா எழுதிப் பழக்கம்?'இத்துடன் நான் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன்'என்று எண்டு கார்டு போட்டு விட்டால் சமூகம் மிகுந்த பயன்பெறும் என்று என் மனைவி சொன்னாள்.குறைந்த பட்சம் என் குடும்பமாவது சந்தோசம் அடையக் கூடும்.ஆனால் அவர் சொன்னது informative ஆக ஏதாவது எழுது என்று...நான் என்ன informative ஆகத் தர முடியும் என்று புரியவில்லை.சமையல் முதற்கொண்டு கணினி வரை எதிலும் நான் விற்பன்னன் இல்லை.சமையலை விடுங்கள்.சாப்பிடுவதில் கூட நான் சமர்த்து கிடையாது.சாப்பாட்டுப்  புராணமும் செய்ய முடியாது.எனக்குத் தெரிந்ததெல்லாம் வார்த்தைகளோடு விளையாடுவதே.சிறு வயதிலிருந்து நான் வார்த்தைகளைக் காதலித்து வந்திருக்கிறேன்.சிலர் பேனாக்கள்  சேர்ப்பது போல் நாணயங்களைச் சேர்ப்பது போல் விதம் விதமான பிள்ளையார் சிலைகளைச் சேர்ப்பது போல் வார்த்தைகளைச் சேகரித்து வந்திருக்கிறேன்[இந்த வாக்கியம் ரொம்ப எஸ் ராத் தனமா இருக்கே?]ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு கதவு போல்.ஒவ்வொரு கதவாய்த் திறந்து கொண்டு அடுத்தடுத்த  வார்த்தைகளுக்குப் போய்க் கொண்டே இருப்பேன்.

ஆகவே என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இதுதான்.எனக்குப் பிடித்த வார்த்தைகளுடனான பிரயாணத்தில் உங்களையும் சேர்த்துக் கொள்வதுதான்.பிரயாணம் என்று சொன்னாலும் எங்கு போய்ச் சேரப் போகிறோம் என்று ஒரு உத்தேசமும் கிடையாது.தெரியாது.எதையும் ஒரு இலக்கோடு செய்யவேண்டும் என்கிற 'இலக்கிய'வாதிகள் இந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளவும். இதில் எதுவும் வரிசையாகவோ குறிப்பிட்ட வடிவத்துடனோ இருக்காது.ஒரு காட்டுக்குள் நுழைவது போல்தான் இருக்கும்.அடுத்த திருப்பத்தில் கரடி வரலாம்.புலி வரலாம்.மானும் வரலாம்.அழகான அப்சரஸ் ஒருத்தி சுனையில் ஆடை இன்றிக் குளித்துக் கொண்டிருக்கலாம்.நடு நடுவே கவிதை வரலாம்.இசைக் கோவைகள்,கணிதக் குறிப்புகள்,ஒளிக் காட்சிகள் எதுவேண்டுமானாலும் வரலாம்.உங்களைப் போலவே எனக்கும் தெரியாது.எதையுமே ஒழுங்கற்றுப் படித்த ஒழுங்கற்ற மூளையின் ஒழுங்கற்றப் பிதற்றல்கள் இவை.[இன்னொரு தடவை பஸ்ஸை நிறுத்தச் சொல்லவா இறங்கிக்கிறீங்களா?]அந்தாதி என்ற தமிழ்ப் பாவகை போல் கடைசி வார்த்தையிலிருந்து அடுத்த வார்த்தை அது எனக்குத் தரும் அர்த்தங்கள் என்று  உறக்கமற்ற ஒரு மனதின் குரங்குப் பாய்ச்சல் என  இதை வகைப் படுத்திக் கொள்ளலாம்.அவ்வளவே.

முதலில் வார்த்தை  என்ற வார்த்தையையே  எடுத்துக் கொள்வோம்.விவிலியத்தில் யோவான் தனது சுவிசேசத்தை அதிரடியாக 'ஆதியில் வார்த்தை இருந்தது' என்றே ஆரம்பிக்கிறார்[ஜான் என்ற பேரை யோவான் என்று யார் தமிழில் மொழி பெயர்த்தது என்று சொன்னால் தேவலை..ஆரம்பத்தில் இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தேன்.ஜோசப்- யோசேப்பு கூட பரவாய் இல்லை.ஜானுக்கும் யோவானுக்கும் தொடர்பே இல்லை.எல்லாவற்றையும் தோய்த்து தூய தமிழாய்  ஆக்கியே தீருவேன் என்று முண்டு கட்டி நிற்பவர்கள் மொழியை வைத்துக் கொண்டு அர்த்தத்தை தொலைத்துவிடும் விளையாட்டாக அது மாறமால் பார்த்துக் கொள்ளவேண்டும்]'

ஜான் சொன்னது.''ஆதியில் வார்த்தை இருந்தது.வார்த்தை கடவுளுடன் இருந்தது.வார்த்தையே கடவுளாக இருந்தது''யோவான் 1;1
அட்டகாசம்!வார்த்தையே கடவுளாக இருந்தது என்ற வரி எனக்குப் பிடித்த வரி.இங்கு வார்த்தை என்று சொல்வது எதைக் குறிக்கிறது என்று சர்ச்சை உண்டு.அது கர்த்தரைத்தான் குறிக்கிறது என்று பொருள் சொல்வார்  உண்டு.மிகப் பெரிய இறையியல் சர்ச்சைகள் இந்த ஒரு வாக்கியத்தின்  மீது தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன.நமது  வேதங்களில்  பிரணவம் எனப்படும் ஒலியையே[ஓம்]பிரபஞ்சத்தின் ஆதாரமாக எதுவும் பிறப்பதற்கு முன்னால் இருந்ததும் அனைத்தையும்  பிரளயம் நடத்திக் கழித்தபிறக்கும் மிச்சமிருக்கும் பொருளாகவும்  சொல்வதுண்டு.இந்த வார்த்தை என்பது இந்த ஒலியையே குறிக்கிறது என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.இந்த ஓம் என்ற ஒலியே ஆமேனாக அமீனாக உலகெங்கும் திரிந்து திரிகிறது என்றும் சொல்வார்கள்.[நான் இந்த விளையாட்டுக்கு வரலை.நமக்கு கல்லெல்லாம் சிவலிங்கம்.காணாதது எல்லாம்  பரம்பொருள்]

ஆனால் வார்த்தை லேட்டு பொருளே பஸ்ட்டு [word is late,but the thing is ancient]என்கிறார் பேகன்.[[போகன் அல்ல]பிரான்சிஸ் பேகன் 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த அறிஞர்.நான் இன்று எழுதிக் கண்டிருக்கும் கட்டுரை [essay]என்ற வடிவத்தின் பிதாக்களில் ஒருவர்.அதற்கு  முன்னால் எல்லாமே கவிதைதான் காவியம்தான்.அலுவலகக் கோப்புகள் மட்டுமே உரைநடையில் எழுதப் பட்டன.அவருக்கும் முன்னால் ரோம அரசர் மார்க்கஸ் அரேலியஸ் போன்றவர்கள் கொஞ்சம் உரைநடையில் எழுதியிருக்கிறார்கள் எனினும் அது  அத்துணை சிலாக்கியமான வெளிப்பாட்டுவடிவாகப் பார்க்கப் படவில்லை.நீண்டநெடிய இலக்கியப் பாரம்பரியத்துக்கு உரிய நமக்கே அது ஆடி அசைந்து 19 ஆம் நூற்றாண்டில்தான் வந்து சேர்ந்தது.ஆகவே காலக் கணக்கில் பார்த்தால் தமிழின் தலை சிறந்த நாவல் இனிமேல்தான் வர வாய்ப்பு அதிகம்[ஆனால் இனி ஒரு போதும் பெருங்காவியங்கள் வரும் சாத்தியங்கள் இல்லை]

இங்கு பேகன் பொருள் என்று குறிப்பிடுவது அர்த்தம் என்ற அர்த்தத்தில் அல்ல.வஸ்து அல்லது thing என்ற அர்த்தத்தில் வஸ்துவும்  வாஸ்துவும் ஒரே சொல்லின் இரண்டு வெவ்வேறு பயன்பாட்டு வடிவங்களே.வஸ்து என்ற பொருளை எப்படி சரியாக வைத்துக் கொள்வது என்ற கலையே வாஸ்து.எல்லாவற்றுக்கும் மூத்து நிற்கும் இந்த வஸ்துவை நாம் பிரம்மம் என்று சொல்வோம்.வஸ்து என்பது வார்த்தை அல்ல [word is not the thing]என்று ஜெ கிருஷ்ணமூர்த்தி சொன்னதைப் படித்துவிட்டு மண்டை காய்ந்ததும் நினைவு வருகிறது

பேகன் பற்றி சில சுவையான தகவல்கள்.சேக்ஸ்பியர் என்பதே அவர்தான் என்று சொல்வார் உண்டு.[நம்மூரில் சித்தர்களின் பேரில் யார் யாரோ நூல்கள் எழுதியிருக்கிறார்கள்.நம்ம பேரைப் போட்டா கேட்பாங்களா என்று அகத்தியர் பேரையோ வேறு சித்தர் பேரையோ போட்டு எழுதி விடுவார்கள்.எது மூல அகத்தியர் எது அ-மூலம் என்று கண்டுபிடிப்பதற்குள் நாக்கு தள்ளி விடும்].மேலும் அவர்தான் மேற்கத்திய சிந்தனாமுறையில் ஒரு அறிவியல் நோக்கைக் கொண்டுவந்தார் என்பார்கள்.அதற்கு முன்னால் எல்லாம் களத்தில் இறங்கி என்ன நடக்கிறது என்று ஆராயும் முறையைவிட மேசையில் சங்கர்லால் போல் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து [ரூம் போட்டு]விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து திடீரென்று அங்கிருந்து உதிரும் முத்துக்களை 'இதுதான் நிசம் பார்த்தேளா''என்று அரசவையிலோ போப்பிடமோ  சொன்னால் மறுபேச்சு சொல்லாமல் கஜல் ரசிகர்கள் போல் வா வா என்று பாராட்டி அணைத்துக் கொள்வார்கள்.எல்லாம்  அரிஸ்டாட்டில் பண்ணிய வெறும் மூளைப் பலகாரம்.பேகன்தான் 'குதிரையைப் பத்தித் தெரியணும்னா முதல்ல குதிரையோட இறங்கிப் பழகிப் பேசணும்வே'[எஸ் ரா இதத்தான் பண்றார்.அதை ஏன் கிண்டலடிக்கவேண்டும் என்றே புரியவில்லை] என்றார்.Empricsm என்று எதையும் செய்து பார்த்து  பார்த்து நம்பும் முறை.இந்திய சிந்தனையில் அது கிடையாது என்பதை தெளிவாக நாம் காணலாம்.அதனால்தான் இவ்வளவு நீண்ட தத்துவ ஞான மரபு எல்லாம் இருந்தும் நவீன உலகில் எந்தப் புல்லையும் பிடுங்க முடியவில்லை.இந்த empricsm தான்  அறிவியலின்  ஆதார விசை.ஒரு வேலை பேகன் வராவிட்டால் நீங்கள் இதை வாசிக்கும் கணினி வந்திருக்காது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இந்த empricsm தான் அவரைக் கொன்றது.இறைச்சியை குளிர்பதனப் படுத்தினால் எத்தனை நாள் இருக்கிறதுஎன்று 'களத்தில்' இறங்கி ஆராயும்போது சளி பிடித்து நிமோனியா வந்து  செத்துப் போனார்.களப் பலி!
இன்னொரு விஷயம் bacon என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் மற்றொரு  அர்த்தமும்  உண்டு.[பன்றி]இறைச்சி என்பதே அது!அவர் பேரிலேயே அவர் மரணம் எழுதி இருந்ததோ என்னவோ..

                   [வார்த்தை வரும்]...

மனமெனும் மென்பொருள்

ஒரு முழுச் சந்திரக் கிரகணமன்று ஊரிலிருந்து போன் வந்தது.அப்பா.வழக்கத்தை விடப் பதட்டமான குரல்.பேச்சு சரியாகப் புரியவில்லை.ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிந்தது.அம்மாவிடம் போனைக் கொடுக்கச் சொல்லி பேசினேன்.அம்மா கடுப்பாக ''உங்க அப்பனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுலே''எனறாள்.அவள் வழக்கமாய்ச் சொல்வதுதான் அது எனினும் சற்றே நெருடலாகத் தோன்றியதால்  கைக்குழந்தையுடன் நண்பர்களற்ற ஒரு ஊரில் மனைவியைத் தனியாக விட்டுவிட்டு பேருந்து ஏறி வீடு போய்ச் சேரும்வரை அது உண்மையாக இருக்கும் என நினைக்கவில்லை.உண்மையில் அது உறைக்க எனக்கு இரண்டொரு நாட்கள் பிடித்தது.ஆம்.அப்பாவின் மனநிலை முற்றிலுமாகத் தவறி இருந்தது.யாரோ அவரைக் கொல்ல வருவதாக .நினைக்க ஆரம்பித்திருந்தார்.இரவெல்லாம் தூங்காமல் யாரையும் தூங்கவிடாமல் பயந்து பிதற்றிக் கொண்டே இருந்தார்.அம்மா  அவர் நடிப்பதாக சொன்னாள்.யாரோ மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி சொன்னார்கள்.நான் சினந்து மறுத்தேன்.மன நோய் என்ற சொல்லையே சிந்திக்க மறுத்தேன்.

கொஞ்சகாலத்துக்கு முன்புவரை தெருவிலேயே மிக மரியாதையான  கவுரவம் கலையாத குடும்பம்.என்ன கம்பனி டிவி வாங்குவது என்பது முதல் வீட்டுச் சுவற்றுக்கு என்ன வர்ணம் பூசுவது என்பது வரை எங்கள் வீட்டின் முடிவுகளே பின்பற்றப் படும்..அதுவும் அப்போது நான் வேறு சக்தி உபாசகன்!எப்படி என் வீட்டில் இது நிகழக் கூடும்?அம்மாவின் தொடர்ந்த நச்சரிப்பினல்தான்  ஏதேதோ பேசுகிறார் என்று நினைத்தேன்.அங்கிருந்து  வற்புறுத்தி அப்பாவை நான் வேலை பார்க்கும் ஊருக்கு அழைத்துவந்தேன்.இட மாற்றம் அவரை மாற்றும் என்று நினைத்தேன்.ஆனால் அப்பாவுக்கு மகனைவிட ஊரைவிட அவர் கட்டிய அவர் வீடு தான் உயிர்.வேறெங்கும் அவர் இயல்பாக உணரமாட்டார்என்பது மெதுவாகத்தான் புரிந்தது.அங்கிருந்த  ஒரு வாரமும் எந்த முன்னேற்றமும் இல்லை.அப்பாவின் மீது உயிராக இருந்த என் குழந்தையும் மனைவியுமே அவரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தார்கள்.நான் எளிய தூக்க மாத்திரைகளை முதலில் கொடுத்துப் பார்த்தேன்.தூங்கி எழுந்து சற்று நேரம் தெளிவாகப் பேசுவார்.ஒரு நாள் மாலை அவரது வழக்கமான நகைச்சுவையுடன் என்னை அடை மழைக்கும்  அசையாத  எருமை என்று கிண்டலடித்தார்.ஆனால் அந்தத் தருணங்கள் குறைந்து கொண்டே வந்தன .அப்போது நான் வணங்கிக் கொண்டிருந்த சக்தி அவரைக் காப்பாற்றுவாள் என்று நான் முட்டாள்த் தனமாக நம்பினேன்.அது போன்ற அற்புதங்கள் அப்போது நான் படித்துக் கொண்டிருந்த பாலகுமாரன் நாவல்களில் மட்டுமே நிகழ்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாரம் ஆனது.அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி எனக்கு அழுத்தங்கள் தரப் பட்டன.

நான்  நெல்லையில் ஒரு புகழ்பெற்ற மன நல மருத்துவரிடம் மிகுந்த அவமானத்துடன் அவரை அழைத்துச் சென்றேன்.அங்கு எதிர்பார்த்ததைவிட கூட்டமாக இருந்தது.ஆலோசனை கூறுபவர் ஒவ்வொரு நோயாளியின் கூட வந்தவர்களிடமும் கேள்விகள் கேட்டு படிவம் ஒன்றை இயந்திரத் தனமாக நிரப்பிக் கொண்டிருந்தார்.மருத்துவரின் சிரிப்பு கூட போலியாகவே பட்டது.ஒரு வியாபாரியின் சிரிப்பு.தடிமனான திரு நீற்றுப் பட்டை அணிந்திருந்தார்.தலைக்கு மேல் உயரமான சாமிப் படங்கள்.நான் ஆழ்மனதில் ஒரு கிறித்து போன்ற ஒரு ஆளை  எதிர்பார்த்தேனோ என்னவோ தெரியவில்லை.ஏமாற்றமாக இருந்தது.மாத்திரைகள் ஊசிகள்..அப்பா  முதல் இரண்டு நாட்கள் தூங்கிக் கொண்டே இருந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக மருந்தின் வீர்யம் குறைந்து . விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் வீட்டுக்கு யாரோ தீ வைப்பதாக பிதற்றிக் கொண்டே இருந்தார்..ஒரு நாள் காலைநடை  போகிறேன் என்று போய் கமிசனர் ஆபிசில் பக்கத்து வீட்டுக் காரர்கள் மீது புகார் செய்துவிட்டு வந்ததும்தான் தீவிரத்தை உணர்ந்து அவர் போக்குவரத்தை கண்காணிக்க ஆரம்பித்தோம்.

அப்பா ஸ்டைலான ஒரு மனிதர்.சுந்தர ராமசாமியை அழகன்யா என்று ஒரு எழுத்தாளர் சொன்னதாகப் படித்த போது அப்பா நினைவுதான் வந்தது.அப்பாவும் அழகர்.உடையில் உருவத்தில் பேச்சில்...ஒரு பெண்ணைவிட அதிகநேரம் உடைத் தேர்விலும் அதைத் தைப்பதிலும் எடுத்துக் கொள்வார்.அதன் கடைசிக் கோணமும் அவருக்குச் சரியாகப் பொருந்தும் வரைத்  தையல்காரனைத் தொந்திரவு செய்வார்.ஆனால் எல்லாம் ஒரு கலைக்கப் படும் ஓவியம் போல் ஆகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.அப்பா அழகர் மட்டுமல்ல பேருக்கேற்றாற்போல் ராஜா மாதிரி இருந்தவர்.ஆனால் அம்மா அவருக்கேற்றவர் அல்ல.அம்மா மட்டுமல்ல நான் எனது உடன்பிறப்புகள் யாருமே அவர் தரம் அல்ல.இந்த சுருதி  பேதத்தின் நடுவே தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க நேர்ந்தது.

ஆனால் ராஜவாழ்க்கை  எல்லாம்  ஒய்வு பெறும் வரையே..ஓய்வூதியத்தின் அத்துணை தொகையையும் கடனும் வாங்கி தங்கை கல்யாணம் செய்யவேண்டி இருந்தது.கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்னால் என்னுடைய பொறுப்பற்ற டிரைவிங்கில் பெரிய விபத்து ஏற்பட்டு வலது கை முழுக்கச் செயல்படாமல் போனது.பின்னர் தொடர்ச்சியான பயிற்சி மூலம் அதைப் பகுதி திரும்பப் பெற்றார்.அது அவருக்கு பெருத்த அடியாக இருந்தது.அவர் எழுதி எழுதியே வாழ்ந்தவர்.[எழுத்தாளர் அல்ல]அரசுப் பணியில் ஆரம்பநிலை குமாஸ்தாவாகச்  சேர்ந்து நிலை நிலையாக  உயர்ந்தவர்.ஒரு மாதிரி இறுக்கமான அலுவலக ஆங்கிலத்தில்  வேகமாக பொடிவைத்து எழுதுவார்.ஒய்வு பெற்ற பிறகும் பல்வேறு வகை அலுவல்  கடிதங்களுக்காக அவரைத் தேடி வருவார்கள்.நான் அந்த எழுதும் கையைத்தான் பொறுப்பற்று வண்டி ஒட்டி உடைத்துவிட்டேன்..அது மட்டுமல்ல அந்த பாகப் பிரிவினை கை பல இடங்களில் அவருக்கு அவமானத்தைக் கொடுப்பதாய் உணர்ந்தார்...ஆனால் அதைவிட பெருத்த அவமானங்கள் தனக்குக் காத்திருப்பது தெரிந்திருந்தால் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்

அவர் ஒரு தூய்மைவாதி.உடல்  உடை மட்டுமல்ல எல்லாமே அவருக்கு நேர்த்தியாக இருக்கவேண்டும்.அவரது படுக்கை விரிப்புகள் கூட மிக நேர்த்தியாக விரிக்கப் பட்டிருக்கும்.அவர் துணிகளை அவரே துவைத்து அவரே சட்டையின் விளிம்பு கையைக் கீறும்வரை அயர்ன் செய்துதான் அணிவார்.தலைமுடி எவ்வளவு உயரம் வரை வளரவேண்டும் என்று சரியான மனக் கணிதம் ஒன்று  அவரிடம் உண்டு.அதே போல் வீட்டையும் நேரத்தியாக்க முயன்றுகொண்டே இருப்பார்.தினமும் வீட்டில் ஏதாவது ஒரு திருத்த வேலை நடந்து கொண்டிருக்கும்.

ஆனால் நாங்கள் அவருக்கு நேர் எதிர்.எதிலும் நேர்த்தியில்லை.அவரைப் போல் நாங்கள் இருக்கவேண்டும் என  அவர் நினைத்தாலும் நிர்ப்பந்திக்கவில்லை.எங்களுடன் ஒரு தோழரைப் போலவே பழகினார்.நாங்கள் அவரது ஒவ்வொரு எதிர்பார்ப்பையும்  பொய் ஆக்கினோம்.சரியாகப் படிக்காமல் திரிந்தோம்.படித்தாலும் வேலைக்குப் போகாமல் வீட்டோடு கிடந்தோம்.அவரது  குடும்ப உறவினர்கள் சூழலில் இருந்தவர்கள் அடுத்த தலைமுறைகளெல்லாம் மெல்ல மெல்ல படித்தோ பணி புரிந்தோ எங்களைவிட  உயர்ந்து விலகிப் போவதை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார் அவர்.ஆனாலும் கடைசிவரை எங்கும் எங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்.

அம்மாவுக்கும் அவருக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை.அம்மா அதிகம் படிக்காத சாதாரண வெள்ளாளப் பெண்.அவளுக்கு அப்பாவைப் புரியவில்லை..அதே போல் அப்பாவும் அவள் இடத்துக்கு இறங்கிப் போகவில்லை.மேலும் அப்பாவுக்கு அவர் அம்மா மீதும் தம்பி மீதும் பெரிய பற்றுதல் இருந்தது.அது மிகப் பெரிய பூசல்களுக்கு வழிவகுத்தது.அவர்கள் மண உறவின் பெரும்பகுதி இந்தப் பூசல்களால்தான் நிறைந்திருந்தது.மேலும் அப்பாவுக்கு அளவுக்கு மீறிய தற்பெருமிதமும் சற்று நக்கலாய்ப்  பேசும் பழக்கமும் இருந்தது.உண்மையில் அவை அவரது நொய்மையான மனத்தை உலகத்திடமிருந்து மறைத்து  வைக்க அவர் பயன்படுத்திய யுத்திகள் என்றுபின்னரே உணர்ந்தேன்.

மற்ற விசயங்களில் இருந்த நேர்த்தி அவருக்கு பண விசயத்தில் இல்லை.சற்று பெரிய கைதான்.யார் கேட்டாலும் கொடுக்கும் கை. அந்தக் கை மெல்லச் சுருங்கி பிறர் கையை நோக்கவேண்டிய காலம் வந்ததில் இருந்தே எங்களது எல்லா துயரங்களும் தொடங்கியது...
                                              [வரும்]

Saturday, December 11, 2010

இறத்தலியம்...

உங்களுக்கு அச்சமாக இல்லையா.. .
உலகத்தில் 99.9999 சதவீத பேருக்கு
நீங்கள் என்ற ஒருவர்
உலகில்
இருப்பதே தெரியாது என்று அறியும்போது?
மீதியுள்ள புள்ளி புள்ளி புள்ளி ஒரு சதவீதத்திலும்
99.9999 விழுக்காட்டிற்கு 
உங்கள் இருப்பும் இல்லாமையும்
பொருட்டில்லை  என்று தெரியும்போது?
எஞ்சியுள்ள  புள்ளி புள்ளி ஒன்றிலும்
பாதி பேர்கள்
நீங்கள் இருப்பதைவிட
இல்லாது போவதையே விரும்புகிறார்கள்
என்று உணரும்போது...
உங்களுக்கு அச்சமாக இல்லையா...?

Friday, December 10, 2010

நாலு பரோட்டா ஒரு புரட்சி

பூக்களைப் பற்றியும் பூவையரைப் பற்றியும்
இனி நான் கவிதை செய்யக் கூடாது
என்றார்கள் புதிதாய்ச் சேர்ந்த கட்சியில் ...

பூக்கள் மட்டுமல்ல
பூனைகள்,குழந்தைகள்
மழை,நிலா,
மேகங்கள் வானவில்கள்
என்று
புரட்சியை நமுத்துப் போகச் செய்யும்
எதையுமே
அவர்கள் விரும்பவில்லை
தீக்குச்சிகள்,எரிதழல்
கத்தி வாள்
போன்றவையோ
அதிகம் எழுதி எழுதித் தேய்க்கப் பட்டுவிட்டன
சரிதான் என்றிருந்தேன்
பாட்டாளியின் வாழ்வில்
தினசரி குறுக்கிடும் பொருள்
ஒன்றைத் தேடி அலைந்தேன்
அப்படித்தான் நான்
புனைய ஆரம்பித்தேன்
புரோட்டாவைப்  பற்றிய கவிதைகளை
பூவைத் தடுத்தவரிடம்
புரோட்டாவைப் பற்றி
சொன்னபோது புளகாங்கிதம் அடைந்தார்
பின்னர் நீங்கள் ஏன் இட்டிலியைக்
கருத்தில் கொள்ளவில்லை
என்று கேட்டார்
இட்டிலி ஒரு பூர்ஷ்வா பண்டம்
என்றேன் நான்
மேலும்
அது குஷ்பூவுடன்
சம்பந்தப் பட்டிருக்கிறது
என்றதும் புரிந்து கொண்டார் 
ஒரே இடத்துக்குப் போனாலும் 
ஒவ்வொரு புரோட்டாவும் 
ஒவ்வொரு விதமாய் இருக்கிறது 
முபாரக் கடை புரோட்டா 
முழுக் கோதுமையில் செய்தது 
உடம்புக்கு நல்லது 
சித்ரா கபே 
புரோட்டா 
வெளேரென்று அழகாய் 
இருந்தாலும் 
பாசிச மைதாவில் செய்தது 
வயிற்றைக் கெடுப்பது 
முட்டை பரோட்டா 
சோசலிசம் போல 
முட்டையும் அல்ல 
புரோட்டாவும் அல்ல 
சில்லி பரோட்டா 
சிகப்பாய் இருந்தாலும் 
அதிக விலை ஆதலால் 
முதலாளித்துவப் போலி 
புரோட்டாவுக்கு குருமாவே 
நல்ல சோடி 
சாம்பாரும் சேர்த்துக் கொள்ளலாம் 
எனினும் 
நல்ல சித்தாந்தத்தில் ஊறியவர்கள் 
அதைச் செய்ய மாட்டார்கள் 
வெங்காயச் சம்பல் அவசியம் 
சட்னி தேவையில்லை 
புரோட்டாவுக்கு முன்பு 
சாராயமும் 
பின்பு சாயாவும்
அருந்துவது நல்லது 
வயிற்றுக்குள் ஒரு 
சமத்துவம் நிலவும் 
அது தவறி  
முடிவின்றி பீச்சும் தருணங்களில் 
பின்னால் அடைக்கும் 
கார்க் போலவும் புரோட்டா பயன்படும்  
ஒரே பொருளால் 
ஆனது எனினும் 
பூரி ப்ரோலிடேரெட் உணவல்ல 
அது 
உபரி கொழுத்த  
பூர்ஷ்வாவின் உப்பிய கன்னம் 
அவன் வைப்பாட்டியின் 
வீங்கிய தனம 
புரோட்டாவோ 
பாட்டாளியின் வற்றிய வயிறு 


இதுபோல் 
புரோட்டாவைப் பற்றி 
ஒரு நூறு கவிதைகள் செய்து 
புரட்சியாளரிடம் கொடுத்தேன் 
படித்துவிட்டு 
அவர் ஆழ்ந்த சிந்தனையில் புதைந்தார் 
பிறகு பெருமூச்செறிந்து 
நீங்கள் பழையபடி 
பூ நிலா போர்வாள் என்றே 
கவி செய்யுங்கள் 
புரோட்டாவைச் சாப்பிடத்தான் முடியும் 
கவிதை செய்ய முடியாது 
என்று தெரிகிறது என்றார் 

Wednesday, December 8, 2010

வெளியாள்....

நான் கவனித்திருக்கிறேன்
எப்போதும்
நான் பேசிக் கொண்டிருக்கையிலேயே
நீங்கள்
டெலிபோனை வைத்துவிடுகிறீர்கள்
எந்த ஒரு கூட்டத்திலும்
நான் பேச எழுந்ததுமே
உங்களுக்குள் பேச ஆரம்பிக்கிறீர்கள்
எந்த விவாதம் என்றாலும்
என் கருத்துக்கு முன்பே
ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள்
வீதிகளில்
என்னை சந்திக்க நேர்ந்தால்
நான் புன்னகைக்குமுன்பே
பதறி கண்களை விலக்கிக் கொள்கிறீர்கள்
உங்கள் உதடுகளை சுருக்கிக் கொள்கிறீர்கள்
நான் கைகளை நீட்டும் போதெல்லாம்
தீவிர சிந்தனையில் இருப்பது போல்
வேறெங்கோ பார்க்கிறீர்கள்

இப்போதெல்லாம்
மாலை நேரங்களில்
நான் ஏன்
தனியே பேசிக் கொள்ள
ஆரம்பித்திருக்கிறேன்
என்ற உங்கள் கேள்விக்கு
இந்தப் பதிலை  அளிக்கும்போதுகூட
வேறேதோ செய்துகொண்டிருக்கிறீர்கள்...

Monday, December 6, 2010

இன்னும் சில கவிதைகள்? ....

1.கொஞ்சம்
நகருங்கள்
என் கவிதை மீது
நிற்கிறீர்கள்..

2.மாடியில் இருந்து
இறங்கினால்
மீண்டும்
மாடியே வருகிறது
கனவு.

3.பழைய தோழியைத் தேடி
 வீட்டுக்குப் போனேன் 
சுவரில் தொங்கிய
புகைப்படத்தைக் காண்பித்தார்கள் 
அவளில்லை இது
என்றேன்
அவள் அணிந்த உடைகள்
பாவித்த காலணிகள்
அவள் ஓட்டிய சைக்கிள்
வாசித்த புத்தகங்கள்
வாங்கிய பட்டங்கள்
அவளை எரித்த சாம்பல்
எல்லாம் எல்லாம் காண்பித்தார்கள்
எதுவும் அவளில்லை என்றேன்
அவள் அறையில் தோண்டி
அவள் எழுதிய
கவிதைகளை எடுத்து
இதோ அவள்
என்று சொன்னேன்...
.

மேலும் சில கேப்சூல்கள் ..

1.பசித்துவரும்
பிள்ளைகளுக்காய்
கைப்பிடியளவு நிலவைக்
கண்ணீரில்
கரைத்துவைத்தேன் ...

2.ஒரு துண்டு
சர்க்கரை கூடுதல்
உன் இதழ் என்றவனிடம்
ஒரு துண்டு தீ
அதிகம்
உன் இதழ் எனறாள்...

3.இந்தப் பாதை
எங்கு முடிகிறது
என்றவருக்கு
இன்னொரு பாதையில்
முடிகிற
இன்னொரு பாதையில் என்றால்
ஏன் புரியவில்லை?
4.மழை பொழிந்ததில் 
இலை விழுந்ததில் 
அலை எழுந்ததில் 
மரம் வீழ்ந்ததில் 
மழை நின்றதில் 
வெயில் எரிந்ததில் 
மீண்டும் 
இலை விழுந்தது...


5.உடனே வருகிறேன் 
என்றவன் 
எவளுடனோ வந்தான்...



மீண்டும் சில கேப்சூல் கவிதைகள்

1.வெயில் அடிக்கிறது
  மழை பொழிகிறது
  இலை விழுகிறது
 அலை எழுகிறது 
 நான் இருக்கிறேன்
 அல்லது
 இருக்கிறேனா?

2.மின்சாரத்தில் உயிர்விட்ட
  காக்கையின் உறவினர்கள்
  இன்னும் வரவில்லை
  காத்திருக்கிறேன்

3.இந்தக் கவிதை ஒருபோதும்
   கவிதை என்ற பேரில்
   அழைக்கப் படவில்லை

4.இந்த வீடுதான் என்று
  அடையாளம் காட்டிய
  அழகிய கண் பெண்ணுக்கு
  எந்த வீடு?

5.கடிகாரத்தைக் கொன்றுவிட்டேன்
  இன்று காலையில்
  இனி எனக்கு இறப்பில்லை
  ஆனால் கொன்ற நேரம் எது?
  என்று அத்தாட்சி கேட்கிறார்கள்  
  எப்படி அறிவேன்?

Sunday, December 5, 2010

ஷெல்களின் சங்கீதம்...

ஒரு பாத்திரத்தைத்
திறப்பது போல
இரவை
சூரியன் திறந்து பார்த்த
பொழுதில் கண்விழித்தேன்
ஒரு சிறு குழந்தையின்
விரல்கள் கொண்டு
மென்னடையுடன்
ஓசையற்று
பரவிப் பரவி
ஒவ்வொரு செடியாய்
ஒவ்வொரு இலையாய்
ஒவ்வொரு பூவாய்
எழுப்பிக் கொண்டிருந்தது பனிப்புகை...
துயரத்தின் அத்தனைக் கனமும்
உதிர்ந்து
ஒரு இறகைப் போல
கனமற்று
பூமியின் மீது அமர்ந்திருந்தேன்
தெற்கிலிருந்து
ஷெல்கள் சிதறும் ஒலி 
நெருங்கிவந்து கொண்டே இருந்தது
இந்த  அழகான அதிகாலையிலும்
யாரோ கொல்கிறார்கள்
யாரோ சாகிறார்கள்...
நானும் அவர்களும்
ஒரே உலகைத்தான்
பகிர்ந்து  கொண்டிருக்கிறோமா
என்று சந்தேகம் கொள்கிறேன்
சட்டைப்பையில் உறுத்தும்
என் பெண்ணின்
கருகிய வளைகளை
எடுத்து
கன்னத்தில் சேர்த்துக் கொள்கிறேன்
அவளது சிரிப்புச் சத்தம்
அதில் கேட்கிறதாவென...

நேற்றைய ஷெல்வீச்சில்
அவளிடமிருந்து கிடைத்த
ஒரே பொருள் அதுவே...
ஒரு வகையில்
எதையும் மிச்சம் வைக்காமல்
இறந்ததற்காக அவளுக்கு
நன்றி சொன்னேன்
அல்லது
 நான் நன்றி சொல்லவேண்டியது
எதிரிக்கா..
இனி இறப்பதற்கும்
இழப்பதற்கும் எதுவுமில்லை
என்ற விடுதலையோடு
ஒரு ஆரஞ்சுப் பழம் போல
பூத்துக் கொண்டிருந்த
சூரியனைவிட்டு விட்டு
ஒரு இயந்திர சங்கீதம் போல் 
 உறங்கிக் கிடந்தவர்கள் மேல்
துடித்துக் கொண்டிருக்கும்
ஷெல்களின் திசை நோக்கி
நடக்கத் தொடங்கினேன்
இனி இருப்பதற்கும்
இங்கு எதுவுமில்லை .....

Friday, December 3, 2010

பிரதி இலக்கியவியாதி ...

சினிமா விமர்சகர்களைப் பகுப்பாய்வு செய்தது போல இலக்கிய விமர்சகர்களையும் பகுப்பாய்வு செய்யமுடியுமா என்று ஒரு நண்பர் கேட்டார் .ஒரு ப்ளாக் ஆரம்பித்து உலகத் தமிழர்களுக்கு இலக்கிய சேவை அளிக்கவேண்டும் என்று அவர் கொஞ்ச நாளாய்  யோசித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் ஒரு 'தொழில்' ஆரம்பிக்கும் முன்பு அதன் இலாப நட்டங்கள் தெரிந்துகொள்வது நல்லதல்லவா என்று ஏற்கனவே பிசினெஸ் பண்ணிக் கொண்டிருக்கும் என்னிடம் ஆலோசனை கேட்டபோது அதற்கு நமக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம்  ரொம்ப நல்லவன் போல யோசித்துக் கொண்டிருக்காமல் உடனே களத்தில் இறங்கி எங்கெல்லாம் இலக்கியம் என்று மூச்சு விடுகிறார்களோ அங்கெல்லாம் சென்று ஆராய்ச்சி செய்ததில் சில பல வரலாற்று உண்மைகள் புரிந்தன.இணையத்தில் சில இலக்கியவாதிகளும் பல 'இளகிய'வாதிகளும் மிகப் பல இலக்கிய விமர்சகர்களும் இருக்கிறார்கள்.சமையல் குறிப்பு  எழுதுபவர்கள் கணினி நுட்பங்கள் பற்றி எழுதுபவர்கள் தவிர மீதி எல்லோரும் நேரடியாகவோ உறை அணிந்து கொண்டோ இலக்கியர்களாக இலக்கிய விமர்சகர்களாக  உலா வருகிறார்கள் என அறிந்து கொண்டேன்எத்தனை வகை இலக்கியம் உண்டோ அத்தனை வகை விமர்சகர்களும் இருக்கிறார்கள் எனப் புரிந்தது.இவர்களை ஒரு கச்சைக்குள் அடக்கமுடியாது எனினும் முயற்சித்தேன் .அவனுக்கு நான் அளித்த ஆய்வு அறிக்கையின் ஒரு பகுதி இதோ.. 

விமர்சகர்களில் கோட்பாடு சார்ந்து விமர்சிப்பவர்கள் அல்லாதவர்கள் என்று இரண்டு வகை.கோட்பாட்டுப் புலிகளிலும் இடது வலது என்று இரண்டு கோஷ்டியாகப் பிரித்துக் கொள்ளலாம்.

வலது சாரிப் புலிகளின் வாசிப்பறிவு ஆச்சர்யப் படுத்துவதாக இருக்கும்.அதாவது  ஏறக்குறைய பூஜ்யமாக இருக்கும்.!கோயில் தல புராணங்களையும் கும்பாபிஷேக நோடிச்களையுமே இலக்கியமாக கருதிக் கொள்ளும் விசித்திர நோய் இவர்களுக்கு உண்டு.தங்களது அரசியலைப் பேசும் புத்தகங்களையே கூட தடவிப் பார்ப்பதோடு திருப்தி அடைந்து கிளம்பி துணிச்சலாக களத்துக்கு வந்துவிடுவார்கள்.எதிர் சாரிகளின் தளங்களுக்குப் போய் மிகத் துணிச்சலாய் மிக அபத்தமான ஒரு கருத்தை அநாயசமாகச் சொல்லிவிட்டு எல்லோரும் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில் வெளியேறிவிடுவார்கள்...கொஞ்சம் படித்தவர்கள் ஜெமோ போன்றவர்களின் தளத்துக்குப் போய் இன்செப்சன் முண்டக உபநிஷத்தில் காணக் கிடைக்கிறது...ஆணுறை பற்றி ஆரண்ய காண்டத்தில்  வருகிறது என்றெல்லாம் திடுக்கிடும் தகவல்களைச் சொல்லி நெளியவைப்பார்கள்...சத்து இல்லையென்றாலும் சத்தம் அதிகம் உண்டு...பெரும்பாலும் நல்ல நிலைமையில் வெளிநாட்டில் இருப்பார்கள்.எல்லா இலக்கியத்திலும் ஏதாவது 'தரிசனம்' இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.அது என்னவென்று அவர்களுக்கே தெரியாது.தெரிந்தால் ஏன் உங்களைப் படிக்கிறார்கள்?உங்களைப் பிடித்துப் போய்விட்டால் புதிய மாடல் மடிக் கணினி வரை அனுப்பி வைப்பார்கள்.

அடுத்து இடது சாரி நோக்கு விமர்சகர்கள் ..இணையத்தில் ஒவ்வொரு சந்திலும் இவர்கள் துண்டு போட்டு இடம் பிடித்து அமர்ந்திருப்பார்கள்.இவர்களுக்குள்ளேயே சின்ன இடது சின்ன வலது பெரிய வலது பெரிய இட வலது என்று உட்சாதிப் பிரிவுகள் உண்டு...சோசலிசப் பழம் தின்று புரட்சிக் கொட்டை போட்டவர்களால் கூட வித்தியாசம் கண்டு பிடிப்பது சிரமம்.முந்தையவர்கள் போல் அல்லாது இவர்களது வாசிப்பு விச்தீரம் பிரமிக்க வைக்கும்.எந்த புத்தகத்தை எடுத்துப் பேசினாலும் தலைகீழாய் ஒப்பிப்பார்கள்.புரிந்து கொள்வதும் தலைகீழாகத்தான் என்பதுதான் பிரச்சினையே...உங்கள் படைப்புகளை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து உங்கள் படைப்பில் நீங்களே அறியாத ஆதிக்கப் போக்குகளை எல்லாம் உங்களுக்கு எடுத்து எழுதுவதோடு மட்டும் நின்று விடமாட்டார்கள்.தேவைப்பட்டால் உங்கள் வீட்டுக்கே வந்து 'அன்பாக' தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து விட்டுப் போவார்கள்.கடுமையான இயங்கியலுக்குச்சொந்தக்காரர்கள்.பெரும்பாலும் ஆட்டோவில்தான் இயங்குவார்கள்.சீனா மேற்குவங்கம் என்று எழுதினால் மட்டும் தயங்கியல் ஆகிவிடுவார்கள்..

கோட்பாடு சாராதவர்களில்  முதல் வகை விமர்சனங்களை பெரும்பாலும் முன்னாள் எழுத்தாளர்கள், எழுத்தாளராக விரும்பினவர்கள், எழுத விரும்பியும் வராதவர்கள், தங்கள் எழுத்தை தானே துணையில்லாது படிக்க முடியாதவர்கள் செய்கிறார்கள்.பெரும்பாலும் காண்டு விமர்சனமாகத்தான் இருக்கும்.உங்கள் படைப்பில் ஏழாவது பக்கத்தில் மூன்றாவது பத்தியில் இரண்டாவது வார்த்தையில் ஒற்று மிகுந்திருப்பதைக் காரணமாகச் சொல்லி உங்கள் முழுப் படைப்பையுமே நிராகரித்துவிடுவார்கள்.அல்லாவிடில் அவர்கள் போன பிறவியில் எழுதிய ஒரு  துணுக்கில் இருந்து சுட்டதுதான் உங்கள் ஆக்கம் என்று விக்கிலீக்ஸ் செய்யும்போது உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. கிகிஜிரோவைத் திருடிய மிஸ்கின் போல் திருதிருவென்று விழிப்பீர்கள். பெரும்பாலும் கையில் ஒரு அறச் சீற்ற வாளை லத்தி போல் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளமாகச் சுற்றி இலக்கியத்தை தங்களைத் தவிர வேறு யாரும் கற்பழித்துவிடாமல் காப்பாற்றுவதே இவர்கள் பணி.

இரண்டாவது குரூப் அவர்களே சொந்தமாக ஒரு பெட்டிக் கடை வைத்து இலக்கிய சப்ளை செய்பவர்கள்.பெரிய இதழ்கள் எல்லாம் கொங்கைகளே சிவலிங்கம் என்று காளிதாச இலக்கியத்துக்குப் போய்விட்டதாலும் சிற்றிதழ்கள் எல்லாம் ஆயுள்சந்தா  கட்டச் சொல்லி பயப் படுத்துவதாலும் கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் சொந்தமாக காய்ச்சுபவர்கள்..யார் என்ன எழுதினாலும் 'கிரேட்..அற்புதம் இருத்தலின் இயலாமையை  நன்கு வெளிப் படுத்தி இருக்கிறீர்கள்.'[பைல்ஸ் பற்றிய படைப்பா அது என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படுத்திவிட்டு ]அப்படியே இதோ நான் எழுதிய முன்னூறு பக்க தொடர்கதை என்று சுட்டியை அனுப்பி கருத்து கேட்பார்கள்.நீங்கள் உங்கள் 'இயலாமையின் இருத்தல்' பற்றி விளக்கிச் சொன்னாலும் 'உங்கள் கருத்துக்கு நன்றி இதோ நான் நேற்று எழுதிய நூறு பக்க காவியம் உங்கள் கருத்தை அதற்கு முந்திய நாளே எதிர்பார்க்கிறேன்' என்று புதிய சுட்டிகள் அனுப்பி பதறவைபார்கள்.

பின்னூட்டமும் ஒருவகை இலக்கிய வடிவமே என்று கருதுபவர்கள் அடுத்தவகை.இவர்கள் பெரும்பாலும் இணையத்திலேயே பல்விளக்கி முகம் கழுவி கக்கூஸ் போய் அங்கு தோன்றி அங்கேயே திரியும் இணைய உயிரிகள்.'அத்தை தின்று அங்கேயே கிடக்கும்' என்று நம்மாழ்வார் சொன்னது இவர்களைத்தான்..நீங்கள் என்ன எழுதினாலும் பகிர்வுக்கு நன்றி தெரிவிக்கும் ரொம்ப நல்லவர்கள்.எங்கு சண்டை நடந்தாலும் சமாதானம் பேசப் போகிறவர்களும் இவர்களே.புலவர்களுக்குள் சண்டை வரலாம் ஆனால் மண்டை உடையக் கூடாது என்ற தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்.மிகுந்த ஜனநாயகப் பண்பும் எதையும் சமமாக பார்க்கும் சமரசப் பண்பாடும் இவர்களுக்கு உண்டு.'நீங்கள் எழுதியது போலவே ஒரு கதை அம்புலிமாமாவில் படித்திருக்கிறேன் அதுவும் நன்றாய் இருக்கும்.அம்புலிமாமா என் வாழ்க்கையை மாற்றிய ஒரு நூல் 'என்று பின்னூட்டம் இடும்வரை இவர்கள் நோக்கம் மீது உங்களுக்கு சந்தேகமே வராது.


அடுத்த குரூப் சற்று விளங்கிக் கொள்ள கஷ்டமானது .இந்தக் குரூப்புக்கு எதிரி முகாமைச் சேர்ந்தவர்கள் என்று லேசாக சந்தேகம் இவர்களுக்கு வந்தால் கூட போச்சு.சரமாரியான கல் எறிவார்கள்.அவை யாவும் உங்கள் மீது வீசப் படும் கற்கள் என்று நீங்கள் நினைத்து விடலாகாது.அவர்களுக்கு பிடிக்காத எழுத்தாளரைப் போல உங்கள் மீசை இருப்பதாக அவர்களுக்குத் தோன்றிவிட்டால் கூட ஓடிவந்து அங்கு எறியவேண்டிய விமர்சனங்களை எல்லாம் உங்கள் மீது எறிந்துவிட்டு ஓடிப் போய் விடுவார்கள்...நான் அவர் ஆள் இல்லை என்று கதறினாலும் எடுபடாது.அந்த பஸ்சில் ஏறு இல்லாவிடில் எங்கள் பஸ் என்று வற்புறுத்தி நீங்கள் விரும்பா விட்டால் கூட அவர்களே உங்களை ஏதாவது ஒரு பஸ்சில் ஏற்றிவிட்டு அடிப்பார்கள்..மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் இவர்களிடம்.


ஆகவே இத்தனை இடர்கள் இருக்கின்றன ..இணையத்தில் இலக்கியம் செய்வதற்கு....நீ கட்டாயம் அந்த ஆபத்தான காரியத்தைச் செய்யத்தான் வேண்டுமா என்று வேதாளம் விக்கிரமாதித்தனை கேட்டது போல் அவனிடம் கேட்டதற்கு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அது ஒரு துன்பியல் கேள்வி என்று பதில் சொல்ல மறுத்துவிட்டான்....

Wednesday, December 1, 2010

உலக அழகியும் உள்ளூர்க் கிழவியும் -நந்தலாலாவை முன்வைத்து

இணையத்தில் வழக்கமாக ஏதாவது ஒரு அலை அடித்துக் கொண்டிருக்கும்.அந்த அலையில் கணினி வைத்திருக்கும் அனைத்து தமிழர்களும் குதித்துக் கருத்து சொல்லி எதிர்க் கருத்துச் சொல்லி நட்பாகி காதலாகி கோபமாகி வன்மமாகி கண்ணீர் உகுத்து காரித்த்துப்பி விஷயத்தை ஆரம்பித்தவர் தான் முதலில் என்ன சொன்னோம் என்பதையே மறந்து குழம்பி அதற்கு நேர் எதிரான கருத்தை கடைசியில் சொல்லி அதான் நான் சொன்னது என்று கோமாளியாகிவிடும் வரை இது நடக்கும்.அதற்குப் பிறகு வேறொரு அலை வர மொத்த ஜனமும் இந்தக் குதிரையை விட்டு அடுத்தக் குதிரையில் ஏற ஓட ..ஒரு ரிலே ரேஸ் போல் இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.கணினி ஓய்வை விரும்பினாலும் பதிவர்கள் விடுவதில்லை! 


கொஞ்ச நாளாக ஆணும பெண்ணும் சேர்ந்து வாழ்வதால் கலாச்சாரத்தின் உயிருக்கு ஹானி எதுவும் வந்துவிடுமா என்று கட்சி பிரிந்து அடித்துக் கொண்டதில் இரண்டு அணிகளும் சமமான கோல் அடித்து தொடர்ச்சியாக டை ஆகித் திணறிக் கொண்டிருந்ததில் நல்லவேளையாக நந்தலாலா வந்தது.உடனேயே அதன் மீதான விமர்சன மேளா தொடங்கிவிட்டது. முதல் நாள் முதல் காட்சிக்கு முன்னாலேயே வந்து குவிந்துவிட்ட முன்னூறு விமர்சனங்களைப் படித்து மிஸ்கினே சற்று கலங்கிப் போய் இருக்கக் கூடும்.இந்த  அலையில் பெரிய பெரிய தலைகளே கலந்துகொண்டு அடிப்பது அடிவாங்குவதுமாக இருப்பது பார்த்ததும் எனக்கும் ஒரு மாதிரி குளிர்காய்ச்சல் மாதிரி வந்து விமர்சனம் எழுதலாம் என்று பார்த்தால் எங்கள் ஊருக்குப் படம் வரவில்லை.செய்திகளைப் பார்த்தால் வரும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே  நந்தலாலாவைப் பற்றிய விமர்சனங்களைப்  பற்றிய விமர்சனம் இது.

 

முடிந்த அளவு எல்லா விமர்சனங்களையும் தேடிப்  பிடித்துப் படித்ததில் இந்த விமர்சனங்களில் சில விசயங்கள் எனக்கு கலங்கலாகப் புரிந்தது.படத்தைப் பார்க்காமலே 
சஞ்சய திருஷ்டியில் நீ என்ன எடுத்துவிடுவாய் எனக்குத் தெரியாதா என்று குத்துமதிப்பாய் விமர்சனம் எழுதுபவர் ஒருவகை.பார்த்துவிட்டு எழுதுபவரை விட இவர்கள் விமர்சனம்தான் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு வகை மூலப் படத்தையே பார்த்தவர்கள்.இவர்கள் பெரும்பாலும் தமிழில் வராத எல்லாப் படத்தையும் உடனுக்குடன் திருட்டு டிவிடியிலோ டவுன்லோடோ செய்து பார்த்துவிடுவார்கள்.இரவு முழுக்க கண் சிவக்கப் பார்த்துவிட்டு வெள்ளாட்டுக்காகக் காத்திருக்கும் வேங்கை போல காத்திருப்பார்கள்.யாராவது தமிழ்ப் படக் காரர்கள் உலகத் திரைப் படம் என்று தப்பித் தவறி சொல்லிவிட்டால் போச்சு. ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து குரல்வளையைக் கடித்துவிடுவார்கள்.எந்தெந்த காட்சிகள் எங்கெங்கிருந்து எடுத்தது என்ற குறிப்புகளை சட்டைப் பையில் பிட்டுகள் எல்லாம் வைத்திருந்து எடுத்து வீசிக் கொண்டே இருப்பார்கள்.வழக்கமாய் கமல் சங்கர் அமீர் போன்றவர்கள்தான் இவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னம் அடைவார்கள்.சமீபமாக மிஸ்கின் அந்த வண்டியில் யாரும் அழைக்காமலே ஓடி வந்து ஏறிக் கொண்டு நானும் ரவுடிதான் என்னையும் அடிங்க என்று ஆஜர் ஆகி இருக்கிறார்.இவர்கள் எழுதிய எதிராளிக்கு கிலிஏற்படுத்தும் டெர்ரர் விமர்சனங்கள் 

இன்னும் சில விமர்சனங்கள் இருக்கின்றன.அது படத்தைப் பற்றியது போலவே இருந்தாலும் உண்மையில் அதன் கீழ் வேறு மறைமுகச் செய்திகள் இருக்கும்.தனக்குப் பிடிக்காத ஒரு நபர் படத்தைப் பாராட்டிவிட்டால் அவருக்கு சமீபத்தில் பிடிக்காமல் போன நண்பர் இதெல்லாம் ஒரு படம் சீ தூ என்று குமுறுவார். இளையராஜாவின் இசையில் அழுதுவிட்டேன் என்று இவர் சொன்னால் அதைக் கேட்டதும் எனக்கு காக்காய்வலிப்பு வந்துவிட்டது அவர் இசையால் ஆஸ்கார் பறிபோய் விட்டது என்று மற்றவர் வருந்துவார் ...இவர்கள் நடுவே நடக்கும் முகமூடிச் சண்டைகள் பற்றித் தெரியாத சில அப்பாவிகள் இவர்கள் திரைப் படத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பி வந்து கருத்துச் சொல்லி ஏமாறுவார்கள். 


இது தவிர இந்த பேட்டையில் சாரு ஜெமோ என்று இரண்டு தாதாக்கள் இருக்கிறார்கள அவர்களுக்குக் கீழே நிறைய சிஷ்ய கேடிகளும் உண்டு...இந்த சீடர்களுக்கு என்று எந்த தனி அபிப்பிராயமும் இருக்காது.தலைகள் என்ன சொல்கிறதோ அதற்குத் தலையாட்டிவைப்பார்கள்.அவர்கள் வீட்டில் கக்கூஸ் கழுவுவது என்றாலும் இவர்களுக்கு கடிதம் எழுதி அன்புள்ள ஜெமோ கக்கூஸ் கழுவுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுத அவர் 'நல்ல கேள்வி கக்கூஸ் கழுவுவது நமது கலாச்சராத்தின் ஒரு பகுதியே அது பற்றி நாராயணகுரு காந்தியுடன் ஒருமுறை அவர் ஆஸ்ரமத்தில் வைத்து விவாதித்திருக்கிறார்.அது மலபார் மானுவலில் வந்திருக்கிறது..என்ன மலையாளத்தில் இருக்கிறது .எனக்கு மட்டுமே புரியும் 'என்று பதில் எழுத சாருவின் ரசிகர்களுக்கு அவர் ''நானே கக்கூஸ் கழுவிய ஒரு விளிம்பு நிலை புரட்சியாளந்தான்..அந்த அனுபவங்களை வைத்து நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பார். .இதற்கே இப்படி எனில் நந்தலாலா பற்றியும் கருத்துக் கேட்காமல் எப்படி இருப்பார்கள... ஆகவே இந்த வகை விமர்சனங்கள். ஒரு வகையில் மடத்து விமர்சனங்கள் எனலாம்..மூலவரைப் படித்துவிட்டால் பரிவாரத் தேவதைகளைப் படிக்கவேண்டாம்...ஆனால் சில சமயம் மூலவர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தொடர்புப் பிழையாகி மாறுபட்ட விமர்சனங்களும் வந்துவிடுவதுண்டு.நானும் சாமிதான் என்று பரிவாரங்கள் தங்கள் இருப்பை நிலைநாட்டும் தருணம் அது...மூலவர்கள் பெரும்பாலும் இந்தப் புரட்சியைக் கண்டுகொள்ளாமல் புத்திசாலித்தனமாக நிஷ்டையில் ஆழ்ந்துவிடுவார்கள்... 


 


இந்த வகைகள் தவிர கணித்துச் சொல்ல முடியமால் சில சமயம் இடதாகவும் சில சமயம் வலதாகவும் எல்லார்  விமர்சனத்தையும் குறை சொல்லி எழுதப் படும் விமர்சனத்தின் மீதான விமர்சனங்கள் தனிவகை.எல்லோரையும் உதைக்கும் freekick சுதந்திரத்தை தங்களே எடுத்துக் கொண்டு அலையும் free radicals இவர்கள்.. 

கமல் அமீர் மிஸ்கின் தங்கர் பச்சான் போன்றவர்களுக்கெல்லாம் ஒரு வினோத வியாதி இருக்கிறது.இவர்கள் அனைவரும் தங்கள் படத்தின் நீளத்தைவிட அதிகமாகத் தங்கள் படத்தைப் பற்றிப் பேசுபவர்கள்..இவ்வாறு அவர்கள் பீட்டர் விட விட அதைக் கேட்கும் அறிவு ஜீவிகள் அறிவுஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் அத்தனை பேரின் அகங்காரமும் சீண்டப் பட்டு 'அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா  நீ 'என்று கடுப்பாகி திரைப்படத்தைப் பற்றி கோடார்ட் என்னை சொல்கிறார்ணா  என்று ஆரம்பித்து யாருக்கும் புரியாமால் எழுதும் கோட்பாட்டுக் கொலைவெறி விமர்சனங்கள் ஒரு வகை. எப்போதும் இவர்கள்  'உன் பொண்டாட்டி ஒன்றும் உலக அழகி இல்லை.உள்ளூர் கிழவியே 'என்பதைத்தான் இச்பநேஞ்சல் மொழியில் சொல்வார்கள்  என்ற புரிதலோடு வாசிக்கத் தொடங்கினால் ஒருவேளை புரியக் கூடும்.



இந்த விமர்சனங்களில் எந்த வகையை நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலும் படித்திருந்தாலும் உடனே எல்லாவற்றையும் நிறுத்தி வெறி நாய்க்  கடி ஊசி ஒன்றைப் போட்டுக் கொள்வது நல்லது

LinkWithin

Related Posts with Thumbnails