Sunday, August 16, 2015

நடிகன்




இரண்டு வலித்தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது .தெளிவாக இல்லை.எனினும் ஓரளவு.தாக்குதல்களின் போது சிந்திக்கவே முடியவே இல்லை.நாய் நாய் என்ற சொல் மட்டும் உள்ளே வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வலி தாங்காது தலையும் காலும் மட்டும் படுக்கையில் குத்தி முதுகு வில் போல வளைந்து கூரையைப் பார்க்க விறைத்து கட்டை போல நிற்கிற மனிதன் என்ன யோசிக்க முடியும் வலியையும் மரணத்தையும் தவிர ?
அப்பொழுதுகளில் வார்டு முழுக்க படுத்துக் கிடந்தவர்கள் அவனை அச்சத்துடன் பார்ப்பது உணர முடிந்தது ‘’பாவம் நாய் கடிச்சிட்டுதா பிள்ளை?’’என்று ஒரு கிழவி கேட்டாள்.அவனால் பதில் பேச முடியவில்லை.,நர்ஸ் வந்து பார்த்துவிட்டு ‘’இந்த ஆளோட சம்சாரம் எங்கே ?’’என்று சத்தம் போட்டாள்.கல்யாணி மிகுந்த சலிப்புடன் எங்கிருந்தோ வந்தாள்’’ஏம்மா?அட்டாக் வரும்போது தலையைத் தாங்கிப் பிடிச்சுக்கனும்னு சொன்னேனே ?இல்லேன்னா கழுத்து எலும்பு முறிஞ்சு ரொம்பக் கஷ்டமாயிடும் ‘’


கல்யாணி ‘’தலையைப் பிடிச்சுகிட்டா இது குணமாயிடுமா சிஸ்டர் ?’’என்றாள்


சிஸ்டர் நம்ப முடியாதவள் போல அவசரமாகத் திரும்பப் போனாள்.உள்ளே  சென்று அங்கிருந்த சக செவிலியிடம் ‘’அந்த ஸ்டமக் கேன்சர் பேசண்ட் சீக்கிரம் செத்துப் போனா நல்லது .அவன் பொண்டாட்டி அத்துணை கொடூரமா இருக்கா ‘’


அவள் ‘’அந்த ஆளு ஒரு நடிகராம் ‘’என்றாள்


‘’ஓ நான் சினிமாவே பார்க்கிறதில்லை.அது சாத்தானுக்க முதன்மை ஆயுதம்னு எங்க வீட்டுல சொல்வாக ‘’
மற்றவள்  சற்று தயங்கி ‘’நான் பார்த்திருக்கேன்.கொஞ்சம் மலையாளத்திலயும் தமிழிலேயும் நடிச்சிருக்காரு.நல்ல சினிமாக்கள்தான்.நிறைய நாடகங்கள்ல கூட வேஷம் கொடுப்பாரு.நான் பார்த்திருக்கேன்.பாலவிளை கணேஷ்னு.’’


‘’இந்துவா ?’’
அவள் மறுபடியும் தயங்கி ‘’சர்ச்ல போடற  நாடகத்துல கூட நடிப்பாரு.சாம்சன் லைலாவில சாம்சனா வருவாரு பொறவு தேவ சகாயம் பிள்ளை கதையில தேவ சகாயம் பிள்ளையா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னால பார்த்திருக்கேன் சிகப்பா கீத்து மீசையோட..’’என்றவள் பெருமூச்சு விட்டாள்
‘'என்ன திறமை இருந்தாலும் சாத்தான் கடசில வழி கெடுத்திட்டான் பார்த்தியா ‘’


மற்றவள் பேசவில்லை.முதல் நர்ஸ் ஏதோ ஒரு பிரார்த்தனையை முணுமுணுக்க ஆரம்பித்தாள்
பாலவிளை கணேசன் இப்போது வலி சற்று குறைந்து படுக்கையில் கிடை மட்டத்துக்கு வந்திருந்தான்


‘’கொஞ்சம் கஞ்சி ‘’என்று முணுமுணுத்தான்
கல்யாணி ‘’எதுக்கு எல்லாம் வாந்தி எடுக்கவா ?’’என்றாள்
அவன் சிரமத்துடன் ‘’பசிக்கி.கொஞ்சம் தண்ணியாவது’’


அவள் எழுந்து ஒரு டம்ளரிலிருந்து அவனது திறந்த வாயில் சிறிது தண்ணீரை ஊற்றினாள்.சற்று வேகமாக ஊற்றி விட்டாள்.அது அவனது பொதைப்பில் ஏறி சிரசில் அடித்து ஏறக்குறைய அவள் மூஞ்சியில் துப்பியது போல ஆகிவிட்டது


அவள் வேகமாய் எழுந்து ‘’ச்சீ இந்த இழவுக்குத்தான் சொன்னேன் ‘’என்று கத்தினாள்.புடவையால்முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.விடுவிடுவென்று எழுந்து வெளியே போனாள்.வெளியே வரண்டாவில் யாரோ  நிற்பது போலத் தெரிந்தது அவர்களிடம் போனாள்.அது யாரென்று கணேசனால் யோசிக்க முடிந்தது.கவுன்சிலர் சுந்தர்.சட்டென்று வலி மீண்டும் வருவது போலத் தோன்றியது.இந்த சுந்தரம் சற்று சுதந்திரமாகப் பேசுகிறான் என்று ஒருநாள் எப்படியெல்லாம் குதித்தாள்?
‘’நீ இப்படி தெருவில நின்னு நாடகம் கீடகம்னு ஆட்றதால இல்லே கண்ட நாய்ங்களும் என்கிட்டே வாலாட்டுது ?’’


அவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை


‘’உனக்கு நாடகம் பிடிக்காதா கல்யாணி ?சினிமா பார்க்க மாட்டியா நீ ‘’


‘’பார்ப்பேன்.ஆனா அதுக்கெல்லாம் வேற ஆளுங்க இருக்காங்க .குடும்பத்தில உள்ள ஆளுங்களுக்கு பாட்டும் கூத்தும் எதுக்கு ‘’


கணேசன் முதன் முறையாக அந்தத் தர்க்கத்தைக் கேட்கிறான்.ஆகவே வியந்து ‘’அப்படியெல்லாம் இல்லை கல்யாணி.இது ஒரு கலை.அது யாருக்கும் கைகவரலாம் உனக்கு கூட வரலாம்.அது ஒரு மனோ பாவம் அவ்வளவுதான்


அவள் மலத்தை மிதித்தவள் போல ‘’ச்சீ ‘’என்றாள்


பிறகு  முகம் சிவந்து ‘’அதெல்லாம் இல்லை.இது ஒரு திமிர்.நீங்க அழகா இருக்கீங்கன்னு ஊருக்குக் காட்ட நினைக்கறீங்க.உங்களுக்கு பொண்ணுங்க உங்களுக்காக ஏங்கறதும் கூட நடிக்கிறவங்க தொட்டுத் தொட்டுப் பேசறதும் பிடிச்சிருக்கு அதான் இதெல்லாம் பண்றீங்க ‘’


அவன் அவளை அணைத்துக் கொள்ள முயன்று சமாதானப் படுத்தும் விதமாக ‘’நீயும் அழகாத்தான் இருக்கே கல்யாணி ‘’
‘’தெரியும் ஆனா நான் அதை உங்களை மாதிரி  ஊருக்கு விரிச்சு காமிச்சுட்டு நிக்க  மாட்டேன் ‘’
கணேசன் சற்று எரிச்சலடைந்து ‘’இவ்வளவு முட்டாளா நீ ‘’என்றான்
அவள் சட்டென்று  கையை  விலக்கி படுக்கையிலிருந்து இறங்கிப் போனாள்
அதன் பிறகு அவள் நேரிடையாக தனது  எதிர்ப்பைத் தெரிவித்ததில்லை.ஆனால் பெண்களுக்கு மட்டுமே தெரிந்த சில ஊடுவழிகள் உள்ளன.அதன் மூலம் ஒருவரது  மனச் சம நிலையைக் குறைப்பது எவ்விதம் என்று அவர்கள் அறிவார்கள்.நாடகங்கள் இருக்கும் நாட்களில் அவளால் வீட்டை ஒரு எரிமலை போல ஆக்கிவிட முடியும். பெரும்பாலும் மிகுந்த பதற்றத்துடன்தான்  அவன் நாடகத்துக்குக் கிளம்பிப் போகவேண்டி இருந்தது .ஒரு கலைஞனுக்குத் தேவையான அமைதியை அவள் கொடுத்ததே இல்லை.பெரும்பாலான அழுத்தங்களை அவள் மகன் மூலம் கொடுத்தாள்.அவனுக்கு அடிக்கடி உடல் சரியில்லாமல் போய்க் கொண்டிருந்தது அந்த வயதிலேயே அல்சர் இருந்தது .திடீரென்று திக்குவாய் வேறு வந்துவிட்டது.ஒருநாள் அவனைப் பார்க்க அவன் பள்ளிக்குப் போனான் வாத்தியார் அவனிடம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யார் என்று கேட்டார்.அவன் ''சு... சு....''என்று திக்கிக் கொண்டிருந்தான்.வாத்தியார் ''என்னலே கெட்ட வார்த்தை பேசுதே ?’’என்றார் வகுப்பு முழுக்க சிரித்தது. அவன் கண்ணீர் வழிய இன்னமும் சொல்லிக்கொண்டே இருந்தான்


கணேஷ் கொதிப்பு தாங்காது வாசலில் நின்று ‘’ஏலே வாத்தி என் மவனைக் களியாக்கிக் கொன்னுடாதலே’’என்று கத்தினான்.அது பெரிய பிரச்சினையானது
அவன் மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்
வரும்வழியெங்கும் அவனிடம் ‘’மவனே என்னடா ஆச்சு உனக்கு ?முந்தி திக்க மாட்டியே ?”’என்று கேட்டுக்கொண்டே இருந்தான்
வீட்டுக்கு வந்ததும் கல்யாணியிடம்  ‘’இவனுக்கு இந்த ஸ்கூல் வேண்டாம் ‘’என்றான்
அவள் ‘’அவன் அங்கேதான் படிப்பான்’’
‘’அங்கே இவன் திக்குதான்னு கேலி பண்றாங்க’’


‘’அதுக்கென்ன பண்றது ?ஊரெல்லாம் கூத்தாடி பொண்டாட்டின்னு என்னைக் கேலி பண்ணுது நான் என்ன தாலியை அத்துகிட்டா போயிட்டேன் ?”’


மருத்துவர் உடன் படித்தவர் அவனைத் தனியே அழைத்து ‘’He is under severe mental pressure உடம்புக்கு வேற ஒண்ணுமில்லை.உன் குடும்பத்தில் என்ன நடக்கிறது ?””


அவனுக்குப் படவாய்ப்புகள் வரத் துவங்கி வெளியூரில் இருக்கிற நாட்களில்தான் சொல்லி வைத்தாற்போல் அவனுக்கு அவளிடமிருந்து  போன் வரும்.மற்ற நாட்களில் அவள் பேசும் பழக்கமே இல்லை. மகனுக்கு உடல் சரியில்லை என்று.அதை விவரமாகவும் சொல்வதில்லை,போனை டக்கென்று வைத்துவிடுவாள்.இவன் பரிதவித்துப்போய்சென்னையிலோ எர்ணா குளத்திலோ அல்லது கர்நாடகத்தின் ஒரு மூலையிலிருந்தோ  எதை எதையோ பிடித்து  ஊருக்கு வருவான்.வருவதற்குள் எல்லாம் சரியாகி இருக்கும்
‘’அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லைன்னு சொல்லிருக்கலாமே ‘’என்று சொன்னால் ‘’ஏதோ இந்த தடவை புழைச்சிகிட்டான் இனி அவன் செத்துக் குளிந்தப்புறம் போன் பண்றேன்’’என்று பதில்
கணேசன் குற்ற உணர்வில் மகனிடம் பேச முனைகையில் அவனுக்கு கடுமையான ஏச்சு விழும் ‘’எலே அவர் இன்னிக்கி உன்னிய கொஞ்சுவாரு நாளைக்கு நடிகையைக் கொஞ்சப் போயிடுவாரு பிறகு அம்மே கொம்மேன்னு என்கிட்டே வந்தே பார்த்துக்க ‘’ஆசையாக வந்த பிள்ளை சுருங்கிப் பின்போய்விடுவதைப் பார்த்தபடியே கையற்று நிற்பான் அவன்


ஒருமுறை இதுபற்றி அவளது அப்பாவிடம் பேச முனைந்தான்.அவர் சிரித்தபடி டை அடித்த மீசையை நீவி விட்டுக்கொண்டு  ‘’உங்களுக்கு நல்ல வேலை இருக்குன்னுதான் பொண்ணு கொடுத்தோம்.உங்களுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்குன்னு தெரியாது ‘’


அவன் சற்று கோபமடைந்து ‘’என்ன இப்படி சொல்தீக?உங்களுக்கு இருக்கிற வெத்திலை பாக்குப் பழக்கம் கூட எனக்கு கிடையாது ‘’


அவர் ‘’அதெல்லாம் மாத்திரலாம் இது குடி கெடுக்கிற பழக்கம்லா.எங்க குடும்பத்தில கூத்தாடறவங்களை மதிக்கிறதே இல்லை.கணேசன்னு பெயரிருந்தா சிவாஜின்னு நினைப்பா .. .சின்ன வயசில பண்ணலாம் ஒரு பொழுதுபோக்குக்கு.இப்போவும் அதே சோலியாத் திரிஞ்சா வீட்டுல  கொஞ்சுவாளா?”’


வீட்டுக்கு யாராவது பெண் தொலைபேசிவிட்டால் அன்று முழுக்க வீடு தீயின் மீது நின்றார்போல இருக்கும்.பிறகு அது அவனது நண்பர்கள் யார் பேசினாலும் என்று விரிந்தது
ஒரு தடவை மகனுக்குஉண்மையிலேயே  டெங்கு காய்ச்சல் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டான் அப்போது கொஞ்ச நாள் நாடகம் சினிமா எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனருகில் இருந்தான். .அந்த நாட்களில் ஏறக்குறைய அவன் செத்தவன் போலதான் இருந்தான்.சாவி கொடுத்த பெரிய பொம்மை போல.ஒரு மிகச் சிறிய நாற்காலியில் நாள் முழுவதும் உடலைக் குறுக்கி உட்கார்ந்திருக்கிறவன் போல உணர்ந்தான்.
ஆனால் அந்த நாட்களில் அவள் சந்தோசமாக இருந்ததை அவன் கவனித்தான்.ஒரு நாள் இரவில் அவள் கூடலுக்கு முயன்றபோது அவனால் முடியவே இல்லை.அவள் சட்டென்று அவனைத் தள்ளி எழுந்துகொண்டு தலையை ஆவேசமாக முடிந்தவாறே ‘’எல்லாத்தியும் தேவிடியாளுங்க கூதில  வாரி  ஊத்திட்டா இங்கே என்னத்த இருக்கும் ?’’


கணேசன் மிகுந்த அதிர்ச்சியடைந்தான் .அவள் அப்படியொரு வார்த்தையை பயன்படுத்துவாள் அல்லது பயன்படுத்தக் கூடியவள் என்பது நம்பக் கடினமாக இருந்தது  குடும்பத்தில் உள்ளவர்கள் இதுமாதிரி வார்த்தைகளை மட்டும் உபயோகப் படுத்தலாமா ?


அலுவலகத்திலும் அவனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்த நாட்கள். தமிழ்ப் படம் ஒன்றில் .அவன் நடித்த சிறிய வேடம் ஒன்று எதிர்பாராதவிதமாக நல்ல வரவேற்பைப் பெற்று .ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவனுக்கு ஒரு விருதும் அளிக்கப் பட்டது.அவ்வளவு நாட்கள் அவனது வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படாத அலுவலகம் திடீரென்று விழித்துக்கொண்டது.சிலர் பாராட்டினார்கள்.சிலர் அது ஒன்னும் பெரிய விசயமில்லை என்பது போல நடந்துகொண்டார்கள்.அதிகாரி அழைத்து ‘’அவன் அனுமதி இல்லாது எப்படி சினிமாக்களில் நடிக்கலாம் ‘’என்று மெமோ கொடுத்தார்.அவன் தான் விடுமுறைகளிலும் விடுப்புகளிலும் மட்டுமே அதைச் செய்ததாகப் பதில் எழுதிக்கொடுத்தான்.பதில் ஏற்றுக் கொள்ளப்படாமல்  ஒரு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டான்


அவனது எத்தனையோ நண்பர்களைப் போல அவனுக்கு குடியோ அல்லது அது போன்ற வேறு எதுவோ தேவைப்பட்ட நாட்கள் அவை.திருவனந்தபுரத்தில் அரிஸ்டோ ஹோமில் தங்கி இருந்த மலையாள நடிகர் டைரக்டரிடம்  ஒருநாள் புலம்பினான் .அவர் ‘டால்ஸ்டாயின் மனைவி சோபியா அவரிடம் எப்படி நடந்துகிட்டாங்க தெரியுமா அவர் அவளைத் தாங்கவே முடியாம இறுதிக்காலத்துல வீட்டை விட்டு வெளியேறிப் போயி அனாதையா ஒரு ரயில்வே ஸ்டேசன்ல செத்தாரு.’’


‘’மந்தைத்தனம் என்பதுதான் சமூகத்தோட நார்ம்.அதைவிட்டு மேலேறி வெளியேற விரும்பறவங்க ஒவ்வொருத்தரையும் அது கொடுரமாப் பழிவாங்கும்.இங்கே உன் கதை மட்டுமில்லை என் கதையும் எல்லார் கதையும் இதுதான்.இங்கே உன் ஆபிஸ், பொண்டாட்டி மட்டுமில்லை எல்லாருமே இப்படித்தான் நடந்துப்பாங்க.ஒருவகைல உன் பொண்டாட்டி சொன்னது சரி.நமக்கு குடும்பம் சரிப்படாது.குடும்பத்துல உள்ளவங்க பண்ற காரியமில்லை இது ‘’என்று உரக்கச் சிரித்தார்.’’நான் கேள்விப்பட்டிருக்கேன் .தமிழ்ல உள்ள ஒரு பெரிய எழுத்தாளரைப் பற்றி.அவர் மனைவி பற்றி.அவர் ஒவ்வொரு சொல்லையும் அவர் மனைவிக்குப் பயந்துதான் எழுதுறார்னு சொன்னாங்க.பாவம் ‘’என்றார்


‘’அவ சொல்றதும் சரிதானே  .நமக்குள் இருப்பது திமிர்.அழகன்னு திமிர்.திறமைசாலின்னு திமிர்.அறிவாளின்னு திமிர்.நமக்கு நிறைய பேரு நம்மைப் பார்க்கணும்.நிறைய பேரு நம்மைப் பாராட்டி  நம்மைப் பார்த்து ஏங்கணும்’’என்றவர் கூர்ந்து பார்த்து ‘’நாம் ஒருவருக்கு உரியவர் அல்ல.நமக்கு நிறைய குடும்பம் வேணும்’’


ஒருவகையில் உண்மைதான்.அவன் ரொம்ப சுத்த பத்தமாக ஒன்றும் இருக்கவில்லைதான்.சில மேனகைகள் அவன் வழியில் குறுக்கிடாமலோ அவன் மயங்கிடாமலோ இல்லை.


கோவளத்தைச் சார்ந்த ஒரு நாயர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.அவள் மலையாளத்தில் சிறிய  வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தாள்.பிறகு டெலிவிசனிலும். அழகி இல்லை.ஆனால் நல்ல நடிகை.மலையாளத்தின் புகழ்பெற்ற ஒரு கவிஞர் அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தினார் ‘’கணேசன் நல்ல கலாக்காரன் சாமளே.தமிழன்.தமிழன்மாரைப் பிடிச்சுக்கோ.மலையாள சினிமால கலைதான் உண்டு.காசு தமிழ் சினிமாலதான் ’’
பிறகு கணேசனிடம் ‘’சாமளா இங்கே கேரளத்தின் சுமிதா பாட்டில் இவளாக்கும் ’’என்றார்


சாமளா  கழுத்தை வெட்டி  ‘’ஏன் சுமிதா பாட்டில்? கறுப்புன்னா...?””


கணேசன் ‘’கருப்பே அழகு காந்தலே ருசி ‘’என்ற தமிழ்ப் பழமொழியைச் சொன்னான்
அவள் ‘’என்ன? என்ன அது ?’’என்று கேட்டுப் புரிந்துகொண்டு சிரித்தாள்


அவனுக்கு அந்த சிரிப்பு பிடித்திருந்தது


அன்றிரவு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் குடிப்பவர்களிடமிருந்து விலகி  பின்னால்  இருந்த கடற்கரையில் நடந்தான்.காற்று பரபரவென்று வீசிக் கொண்டிருந்தது .அறையின்  அடைத்த காற்றுக்கு அந்த உப்புக் காற்று மருந்து போல இருந்தது


கொஞ்ச நேரம் கடலின் ஓசையைக் கேட்டவாறே இருந்தான்


கடல் ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் ஒரே மாதிரி ஒலிப்பதில்லை. காலையில் அது ஒரு பாட்டை முணுமுணுக்கிற பெண்ணாய் இருக்கிறது  மாலை நேரங்களில் பெரும்பாலும் அது எதையோ சொல்ல விழையும் குழந்தையாக..அவனது மகனைப் போல.இரவுகளில் அது நிச்சயமாக  சீறுகிறது அவனது மனைவியைப் போல.
‘’கணேசனுக்கு வள்ளம் அடி இல்லியோ?’’
கணேசன் திரும்பிப் பார்த்தான்
சாமளா


கேரளத்து வழக்கப்படி மாலை குளித்து சந்தன வெள்ளைப் புடவையில்  கூந்தலைத் தழைய விட்டிருந்தாள்


அவன் ‘’இல்லை’’என்றான்  
‘’குடிக்கும்போ எனக்கு கண்ட்ரோல் போயிடுது ‘’என்றான் ‘’ஒரு நடிகனுக்கு அது போகக் கூடாது ‘’


அவள் ‘’ஏன்?’’என்றாள்’’ தன் வயமில்லாம நடிக்கறதுன்னு ஒன்னு கிடையாதா ?சைக்கிள் விடுவது போல என்னிக்காவது ஒருநாள் அது இயல்பா புத்தி நடுவில குறுக்கிடாம  வந்துடாதா ?’’


அவன் ‘’வரக் கூடாது ‘’என்றான் .ஒருகணம் ஏனோ ஒரு இனம் புரியா அச்சத்தில்  உடல் நடுங்கியது.எல்லா இடங்களிலும் பாவனை இயல்பாக வந்துவிடுகிற ஒரு  மனிதன்.கண்ணாடியில் இடம்வலம் மாறித் திரியாது தெரிகின்ற மிகச் சரியான மிகப் பிழையான ஒரு பிம்பம்.


அவன் சாமளாவிடம் அவன் கதகளி பார்த்த சம்பவம் ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தான்
குருவாயூர் கோவிலில்  ஒருநாள் அங்கிருந்த கலையரங்கில் கதகளி நடந்தது.கலாமண்டலம் கோபி மாஸ்டர்  அதை நிகழ்த்திக் கொண்டிருந்தார் .ஒரு நாள் கீசக வதம்.மறுநாள் கல்யாண சவுகந்திகம்.இரண்டுமே பீமனையும் திரவுபதியையும்  மையமாகக் கொண்ட பாரதக் கதைகள் .ஒன்றில் பீமன் மிகுந்த ரவுத்திரனாக பாஞ்சாலியை இம்சிக்கும்  கீசகனைக் கைகளால் கிழித்துக்  கொல்லும் ஒரு கொடும்கோபனாக வருகிறான்.இன்னொன்றில் அவனே ஒரு காதலனாக திரவுபதிக்கு  அவளது இஷ்டமலரைத்  தேடிப் போகிற மெல்லுணர்வு கொண்டவனாக


கோபி மாஸ்டருக்கு அறுபது வயது.ஆனால் அவரது பீமனுக்கு எந்த வயதும் இல்லை.அவன் வயதற்றவனாக  இருந்தான்


‘’அவருக்கு தனது  கலையின் மீது உடலின் மீது மிகுந்த கட்டுப்பாடு இருந்தது ‘’என்று அவன் சொன்னான் ‘’களி முடிந்ததும் அவரைப் பார்த்தேன்.அப்போது அவரிடம் ஒரு துளி பீமன் கூட மிச்சமில்லை.அவரால் நினைத்தபோது பீமனை வரவைக்கவும்  விரட்டவும் முடிந்தது ‘’
கணேசனுக்குத் தன்குரலில் இருந்த வியப்பு அவனுக்கே வியப்பாகவிருந்தது


அவள் அதைக் கவனிக்காமல் ‘’கல்யாண சவுகந்திகம் னு மலையாளத்துல  இரண்டு சினிமா வந்திருக்கு ‘’என்றாள் ‘’ஒண்ணு ஜெயபாரதி நடிச்சது .மற்றது திலீப் படம்..இரண்டாவது படத்துல நல்ல பாட்டு ஒண்ணு இருக்கு எல்லா கல்யாண வீட்டுலயும் கச்சேரில பாடுவாங்க’’என்றாள்.’’என் கல்யாணத்துல பாடுனாங்க’’ என்றவள்  பாடலின் சில வரிகளைப் பாடிக் காண்பித்தாள்’’கல்யாண சவுகந்திகம் முடியனியுன்ன திருவாதிரே ..’’’


மண்வீணை உணருன்னு... என்று பாடும்போது அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது


அவள் நெருங்கி ஒரு விசும்பலுடன் அவன் தோளின் மீது சாய்ந்துகொண்டாள்


அவர்கள் கொஞ்ச காலம் பூவாரில் ஒரு வீடெடுத்து வாழ்ந்தார்கள்.கேரளத்தின் காயல்கள் கால் தொட்டு அலம்பும் ஒரு வீடு .


அவன் அவளது கடந்த காலம்  பற்றி எதுவுமே கேட்கவில்லைஒரு நாள்  ‘’கூத்தாடிகளுக்கும்  துறவிகளுக்கும் ஒரே மாதிரியான பூர்வீகமே உள்ளது ‘’என்று மட்டும் சொன்னாள்


ஒரு நாள்  அவர்கள்   ஒரு சர்க்கஸ் பார்க்கப் போனார்கள்.அவன்தான் வற்புறுத்தி அழைத்துப் போனான்.அவளுக்கு ஏனோ அதில் இஷ்டமே இல்லை.அவனுக்கு சிறு வயதிலிருந்தே அது மாதிரியான விசயங்களில் பிரியம் இருந்தது


மிகச் சுமாரான சர்க்கஸ்.அவர்கள் இடைவேளையிலேயே  கிளம்பினார்கள் அப்போது ஒரு குள்ளன் ஓடிவந்து அவர்களை உள்ளே அழைப்பதாகக் கூறினான்.உள்ளே ஒரு சிவந்து தடித்த குட்டையான நபர் முகத்தில் பாதி கோமாளி  ஒப்பனையுடன்  ஸ்டூலில் அமர்ந்திருந்தார்
இவர்களைப் பார்த்ததும் எழுந்து  ‘’சாமளே..’’என்றார்
சாமளாவின் முகம் இறுகியது ‘’அச்சன் இப்போ இவிடத்தோ ?’’என்றாள்


‘ஆமா இப்போ இதாக்கும் வேஷம் ‘’
அவர் இவனை ஏறிட்டுப்  பார்த்தார்
சாமளா ‘’இப்போ இவரோட தாமசம்’’என்றாள்
‘’ஸ்ரீதரன் எவிட சாமளா ?’’
‘’தெரியலை  அச்சா ‘’
‘’ஸ்ரீ குட்டியோ ?’’
‘’தெரியலை ‘’
மவுனம்.குள்ளன் வந்து ‘’கலர்  வங்கி வரட்டே ?’’என்றான்
அவர் கலைந்து ‘’மோளே மங்கலாபுரத்தில வச்சு   நீ   நடிச்ச கடைசிப்  படம் பார்த்தேன்..இப்போ உன் ஸ்திதி இது.இல்லையா?வேலைக்காரி வேஷம்.’’என்றார் ‘’ ஹீரோயின் அந்த மேனோன் அவளுக்கு நடிப்பே வரலை அவளைக் காட்டிலும் நீ என்ன குறைச்சல் மோளே?’’
சாமளாவின் பாதங்கள்  இறுகி தரையைப் பற்றுவதை கணேசன் பார்த்தான் அவள் ‘’தெரியலை அச்சா  ‘’என்றாள்

அன்றிரவு அவள் தூங்கவே இல்லை.படுக்கையறையில்  கண்ணாடி முன் அமர்ந்து தனது  உருவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.கணேசன் பின்னால் போய்  அவளை அணைத்துக்கொண்டான்

ஆனால் அதுவும் நிற்கவில்லை. ஒருநாள் நல்ல ஒரு கூடலுக்குப் பிறகு சாமளையின் கூந்தலில் தலை புதைத்து அவன் உறங்கி விட்டான்.அவளுக்கு நல்ல  கூந்தல் மணம் உண்டு.முல்லையும் தேங்காய் எண்ணெயும் கூடி முயங்கிய ஒரு மணம்.நள்ளிரவில் விழித்தான். பெரிய நிலவு ஜன்னலில் மெளனமாக ஒரு சித்திரம் போலத் தொங்கிக் கொண்டிருந்தது. மேகங்களே அற்ற துல்லிய  வானம்.தூரத்தில் காயலின் அலைமுகடுகள் சிறிய பளபளப்புடன் தளும்பிக்கொண்டிருந்தன


அவன் அவளைக் காணாது இறங்கிப் பின்பக்கம் வந்தான். அவள் வாழை மரங்கள் நடுவே நின்றுகொண்டு போனில் தழைந்த குரலில் யாரோடோ பேசிக்கொண்டிருந்தாள்.சிறிய சிணுக்கமும் சிரிப்பும்.ஏறக்குறைய சற்றுமுன் கூடலின் போது அவள் முகத்தில் காட்டிய அதே  பாவனைகள் .கணேசனின் அடி வயிற்றிலிருந்து ஒரு கசப்பு எழுந்தது .அதே சமயம் ஒரு நடிகனுக்கே உரிய வியப்பும் தனக்குள் எழுவதை உணர்ந்தான்.சாமளா மிகப் பெரிய நடிகை என்று தோன்றியது ஆனால் எது உண்மை ?அவள் என்னிடம் காட்டியதா ?இதோ போனில் ஒரு முகம் காணாகாதலன் அவனுக்குக் காட்டுவதா?



ஒருவேளை கல்யாணியின் வெறுப்புக்கும் இதுதான் காரணமா ?இதே முகத்தோடுதானே உன் நடிகைகளையும் கொஞ்சுகிறாய் ?என்றவள் ஒரு நாள் கேட்டாள்


‘’ஆனால் உண்மையான பிரச்சினை ..... ‘’என்றார்  டைரக்டர் ‘’நாம் எப்போதும் தூரப் பார்க்கிறவர்கள்.நம் கண் எப்போதும் வானத்து முகட்டில் இருக்கும் நட்சத்திரம் மீதே இருக்கிறது .கலை என்பதே அதுதான் நம்மால் நம் அருகில் இருக்கும் எதையுமே பார்க்க முடியாது என்பதுதான்.  ரொம்பத் தூரப் பார்க்கிறவர்களை மனிதர்கள் விரும்புவதில்லை ‘’


கணேசன் ‘’ஆனால் கிட்டே இருக்கிறது பார்க்க ஆரம்பித்தால் ...’’’என்றான் ‘’அங்கே என்ன இருக்கிறது ?ஆபாசமும் குப்பையும் ....அம்மைக்குழி விழுந்த சாமளையின் கன்னங்கள்... ‘’


‘’ஆனால் அவையும்  கொஞ்ச நாட்கள் அழகாக இருந்தன அல்லவா ?’’


கணேசன் ‘’ஆமாம் ‘’என்று ஒத்துக்கொண்டான்.நள்ளிரவு உடைந்ததும் வருகிற  விடிவெள்ளிகளைப் போன்ற மிகப் பிரகாசமான அழகுடன் அவை இருந்தன
‘’‘இந்த பிளவு என்னைத் துன்புறுத்துகிறது .இந்த வேதனையிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?இவர்களுடன் நாம் பேசவே முடியாதா ?நாம் எப்போதும் தனிதானா ?”’


‘’வேதனையை மறக்க வழி  உண்டு.நீ இதுவரை அடைந்ததெல்லாம் சிறிய வெற்றிகள்.நீ அவர்கள் மறுக்க முடியாத பெரிய வெற்றிகளை அடைய வேண்டும்.நீ அவர்களைச் சார்ந்தவன் அல்ல என்று அவர்கள் தெளிவாக அவர்களுக்கு உணர்த்தும் பெரிய வெற்றிகளை .தெய்வங்களுக்கு எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது உனக்குத் தெரிந்ததுதானே .பிறகு நீ அவர்களிடம் மண்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறுத்திவிட்டு அவர்கள் உன்னிடம் மண்டியிட ஆரம்பிப்பார்கள் .பிறகு அவர்கள் உன்னிடம் பிரார்த்தனைகளை மட்டுமே வைப்பார்கள் ‘’


அப்படியொரு வெற்றிக்கான வழியை  அவரே உருவாக்கித் தந்தார்.அவரது அடுத்த படத்தில் மிக முக்கியமான ஒரு ரோல்.அது அவனுக்குப் பெரிய பெயர் வாங்கித் தரும் என்பதை அவனால்  உணரமுடிந்தது .ஏறக்குறைய அவனது வாழ்க்கையை ஒட்டிய ஒரு கதை.ஒரு கதகளிக்காரனின் அக வாழ்க்கையைப் பற்றிய கதை
கேரளத்தின் கலையைப் பிரதிபலிக்க ஒரு தமிழன்தான் கிடைத்தானா?என்று அங்கே பெரிய எதிர்ப்பு எழுந்தது.மலையாள சினிமாவே ஒரு தமிழன் தொடங்கியதுதான் என்றொரு எழுத்தாளர் எழுதி கோட்டயத்தில் தாக்கப்பட்டார் ஆனால் டைரக்டர் பிடிவாதமாக இருந்தார் ‘’கணேசன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது .தவிர கணேசன் அவர் தாய்வழியில் ஒரு மலையாளி ‘’


அவன் ஊர் ஊராகப்  போய் கதகளி மாஸ்டர்களைப் பார்த்தான்.அவர்கள் வீட்டுப் புற நடைகளில் தூங்கினான்


அலுவலகம் மிகுந்த பிரச்சனைகளை அளித்தது  அவனது  மருத்துவ விடுப்பை ஏற்றுக்கொள்ளாமல் போர்டுக்கு அனுப்பி வைத்தது அவன் அதற்குச் செல்லவில்லை..அவன் வேலையிலிருந்து விலகினான்.கல்யாணி அதற்கு மேல்.அவன் படப்பிடிப்பில் இருந்து எத்தனையோ நாட்கள் தனது மகனுடன் பேச முயன்றான்.அவள் ஒருமுறை கூட அனுமதிக்கவில்லை


அந்தக் கால கட்டத்தில்தான் அவனுக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது .ஒருநாள் படப்பிடிப்பின் நடுவே மயங்கி விழுந்தான்.எனினும்  வலியோடு  நடித்தான்.’’தொடர்ச்சியான ஹோட்டல் சாப்பாடு காரணம்‘’என்றொரு வைத்தியர் சொன்னார் ‘’வீட்டுல இருந்து சாப்பிடுங்க ‘’கல்யாணியிடம் போனில் அதைத் தெரிவித்தான்.அவள் ‘’என்னால அங்கெல்லாம் வர முடியாது.வேலையையும் தொலைச்சாச்சு. உன்னோட கூத்தியாளுங்க யாரையாவது கூப்பிட்டுக்கோ  ‘’என்று போனை வைத்து விட்டாள்.அன்றிரவு அவன் மிகத் தனிமையானவனாக உணர்ந்தான்.டைரக்டர் வந்து ‘’நீ கொஞ்சம் குடி ‘’என்று சொன்னார் .அவன் குடிக்கவில்லை


கடும் வேதனைக்கிடையே  படப்பிடிப்பு முடிந்தது.டைரக்டர் அவருக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போனார்.அவர் ஸ்கேன் எடுக்கச் சொன்னார்.மறுநாள் அவன் இருந்த ஹோட்டலுக்கே போன் செய்து அழைத்து ‘’நீங்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதியாகவேண்டும் ‘’என்றார் அவர்
அவனை திருவனந்தபுரம் ரீஜனல் கேன்சர் மருத்துவமனையில் சேர்த்தார்கள்அவன் கல்யாணிக்குத்  தகவல் அனுப்பினான்.சாமளையைக் கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்
ஒரு வாரம் கழித்து கல்யாணி வந்தாள். .அதற்குள் புற்று முழுக்கப் பரவி விட்டது என்று கழுத்துவரை குடலை வெட்டி எறிந்துவிட்டார்கள்.மீதமிருந்தது உணவுக்குழல் மட்டும்தான்.அதன்வழியே சிறிது தண்ணீர் அருந்த முடியும்.மிகுந்த  சிரமத்துக்குப் பிறகு.கொஞ்சம் அரைத்த கூழ் போன்ற கஞ்சி.அதையும் பல நேரம் வாந்தி எடுத்துவிடுவான்.


படம் வெளியாகி பெருத்த வெற்றி அடைந்தது.டைரக்டர் அவனைப் பார்க்க வந்தார் . .சில பத்திரிக்கை விமர்சனங்களைக் காண்பித்து ’’எல்லோரும் பாராட்டுறாங்க சீக்கிரம் எழுந்திரிச்சி வாங்க இன்னொரு படம் பண்றோம்.தமிழ்ல  ‘’என்றார் போகும்போது கல்யாணியிடம் கைகூப்பி வணங்கி  ‘’பெரிய கலைஞன்,கொஞ்ச நாள் ஜீவிச்சிருக்கட்டே ‘’என்றார்


அவர் போனதும் கல்யாணி அருகில் வந்து படுக்கையில் அவர் வைத்துப் போன செக்கை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள்.பிறகு ‘’ப்பூ உங்க கஞ்சி செலவுக்குக் கூட காணாது ‘’என்றாள்


அங்கே ரொம்ப நாள் வைத்திருக்க அனுமதிக்கவில்லை
நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தார்கள்


அம்மா ஒருநாள் வந்து பார்த்தாள்’’நோய்லாம் இல்லைடா.கைவிஷம்.உன்னை வசப்படுத்த கைவிஷம் வச்சிருக்கா  இழவெடுத்தவ.திற்பரப்பு மந்திரவாதிகிட்டே அவ போனதைப் பார்த்தவங்க இருக்காங்க என்னிக்காவது நீ வாந்தி எடுத்தப்ப அதுல கருப்பா ஏதாவது இருந்துச்சா சொல்லு  ‘’என்று அழுதாள்.சற்று தூரத்தில் கல்யாணி சம்பந்தமில்லாதவள் போல வேறெங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்


அவனுக்கு ஆயாசமாக இருந்தது ‘அவ கைவிஷம் வைச்சிருந்தாக் கூட அது ஒரு அன்புலதானே ‘’என்றான்.அவ்வாறு சொன்னது அவனுக்கே வியப்பாக இருந்தது அவள் போனபிறகு அன்று முழுக்க கல்யாணியிடம் வெறுப்பைக் காட்டாமல் இருக்க முயன்றான்.கையைப் பிடித்து அழுத்தினான்


அவள் அதைக்கண்டுகொண்டு சட்டென்று வெடித்து அழுதாள்’’இது என்ன புது இழவு.இதுவும் உன் நடிப்புல ஒண்ணா.நீ நல்லா இருந்தப்ப எல்லாம் வேற யார் யார் கூடயோ இருந்தே,இப்போ கிழிஞ்ச  பாய் போல ஆனதும் என்கிட்டே வந்து நாடகம் போடறியா ‘’


கணேசன் பேச முயன்றான்.சட்டென்று வார்த்தைகள் வராமல் திக்கிற்று .அவள் அவனை உற்றுப் பார்த்து ‘’உன்னோட நடிப்பை நீ நிப்பாட்டவே மாட்டியா ?’’என்றாள்.


அவனது முதல் வலித்தாக்குதல் அன்றுதான் ஆரம்பித்தது.வலியென்றால் பேய்வலி.
வலி வரும்போது படுக்கையில் வில்லாய் வளைந்துவிடுவான் மார்பைன் போட்டு கூட
அடங்காத வலி. அரசு ஆசுபத்திரியில் மார்பைன் ஸ்டாக் அதிகம் இல்லவும் இல்லை.அந்த மாதிரி சமயங்களில் கத்தி ஊரைக் கூட்டினான்.ஆனால்
அப்போதெல்லாம் அவனுக்கு ஒரே ஒரு நினைவுதான் இருந்தது

அவன் மகன் நினைவு

‘’எனக்கு அவனைப் பார்க்கணும் ‘’என்று சொன்னான்’’ஒரே ஒரு தடவை’’அவனைப் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்’’


அவனுக்கு அது நிச்சயமாக நடிப்பில்லை  என்று தெரிந்தது


‘’இல்லை  என் அகம் எனக்கே நிகழ்த்திக்காட்டும் களியல்லஇது இந்த வலி போல மிக உண்மையானது ‘’என்று நினைத்துக்கொண்டான்

அவள் அதை உணர்ந்தவள் போல இளகி முகத்தைத் திருப்பிக்கொண்டு  ‘’இங்கே
வேணாம் அவன் பயந்திடுவான் .ஊருக்குப் போய்ப் பார்க்கலாம்’’
அதுவும் சரியெனவே பட்டது.ஊருக்குப் போய் அவனைத் தூக்கிக் கொஞ்சவேண்டும்.அவன் திக்குவாய்க்கு நல்ல டாக்டரைப் பார்க்கவேண்டும்.’மகனே இனி நான் எந்த நாடகத்துக்கும் போகப் போவதில்லை.மந்தையில் இருப்பதிலும் சில நன்மைகள் இருக்கின்றன.தங்களது குட்டிகளின் ஸ்பரிச நெருக்கம் அதில் முக்கியமான ஒன்று .இனி நீ திக்க வேண்டாம்’’
சட்டென்று  மீண்டும் வலி தாக்கியது .அவன் ஐயோ என்று தொண்டைவரை எழுந்த
கூவலை அடக்கிக் கொண்டான்
கணேசன் கலாமண்டலம் கோபி மாஸ்டரை நினைத்துக்கொண்டான்.அவரது உடல் மீதான கட்டுப்பாட்டை.


கணேசன் இப்போது  தன்னை பீமனாக உருவகித்துக்கொண்டான்.கீசகனை வெறும் கையால் பிய்த்துப் போட்ட பீமன்.ஒரு கணம் யோசித்து கீசக  வதத்தின் முக பாவனைகளை படுக்கையில் இருந்தவாறே பாவிக்க முயன்றான்


ஒரு ஆரம்பத் தயக்கத்திற்குப் பிறகு அவன் முகம் ஒத்துழைக்க ஆரம்பித்தது
படுத்துக்கொண்டே அவன் செய்யும் வினோத கையசைவுகளை  அறையிலிருந்தவாறே செவிலி பார்த்தாள்


கணேசனுக்கு சாமளா ‘சைக்கிள் விடுவது போல இயல்பாக; என்று கேட்டது நினைவுக்கு வந்தது


அவனது பாவங்கள் கூர்மை பெற்றன
ஆச்சர்யப்படும் விதமாக வலி குறைந்தது


இப்போது கணேசன் பீமன் ஆனான் கீசகனைக் கொன்ற பிறகு திரவுபதிக்காக  மலர் பறிக்க மலைப் பள்ளத்தாக்கில் இறங்கினான்


இங்கே திரவுபதி  யார் ?கல்யாணிதான்
ஒருகணம் அவன் முகம் கல்யாணி அவனைப் பீமன் என ஒத்துக் கொள்வாளா  என்று  தயங்கியது
வலி மின்னல் போல அரவத்தின் நாவைப் போல ஒருகணம் அவனைத் தீண்டியது


ஆனால் ஒரு கணம்தான்
நிச்சயம் ஒத்துக்கொள்வாள்  என்று நாடகத்தின் அசரீரி போல ஒரு குரல் கேட்டது
ஏன் மாட்டாள்?அவன் மலர்களைக் கொணர்கையில் ...


அவன் சட்டென்று உற்சாகமாக உணர்ந்தான்.ஒருவேளை நர்ஸ் போட்ட ஊசி வேலை செய்யத் துவங்கியதால் இருக்கலாம்.கழுத்தை நீட்டி கல்யாணி எங்கே என்று பார்க்க முயன்றான்.அவள் அந்த கவுன்சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறாளா ?கொஞ்ச நாட்களாகவே  இவன் கண்ணில் படவில்லை எனினும் அவன்தான் கல்யாணிக்கு உதவிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.எனக்கு எல்லாம் தெரியும் என்று அவளிடம் சொல்லலாமா என்று யோசித்தான்.வேண்டாம்.போகட்டும்.மந்தைகளுக்கும் ஒரு வழிதெட்டு வேண்டுமல்லவா ?


எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்


பாலவிளை கணேசன் என்கிற  என்கிற பீமன்  புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான்
அந்த கடும்கிறித்துவ செவிலி பணி முடியும் நேரத்தில் மீண்டுமொருமுறை சுற்றிவருகையிலும் அவன் அதே புன்னகையுடன் கண்மூடித்தான் இருந்தான்.பீமனைப் போல தோள்களைப் பரத்தி கால்களை அகட்டி விநோதமாகக் கிடந்தான்.


அவள் நெருங்கிவந்து நாடி பிடித்துப் பார்த்தாள். பக்கத்தில் கீழே சுருண்டு தூங்கிக் கொண்டிருந்த கல்யாணியைப் பார்த்தாள்


பிறகு  அவள் அறைக்குப் போய் தனது தோழியிடம்  ‘’உனது நடிகன் போயிட்டான் ‘’என்றாள்


Saturday, April 25, 2015

மீட்பு

''அப்பா உலகத்திலேயே அரிதான பட்டாம்பூச்சி எது தெரியுமா ?''
''தெரியாதே ''
''palos verdes peninsula .கலிபோர்நியாவிலே இருக்கு ''
''ம்ம்''என்றான் பிலிப்.
''உலகத்தின் அழகான பட்டாம்பூச்சி எது தெரியுமா ?"'
''தெரியுமே''என்றான் பிலிப் ஒரு புன்னகையுடன்.அவள் கண் விரித்து ''தெரியுமா ?"'
''தெரியுமே .அதன் பெயர் லில்லி ''

லில்லி நாணமுற்று ''போப்பா''என்று அவனை ஆரஞ்சுச் சுளைகள் போன்ற குளிர்ந்த
உதடுகளால் முத்தமிட்டாள் .''banded peacock butterfly.கொடைக்கானல்
மலைகளில் இருக்கு .அங்கே எங்களைக் கூட்டிட்டுப் போவியா ?"'
''நிச்சயமா .அதுசரி உன்னோட தங்கச்சி பட்டாம்பூச்சி எங்கே பொண்ணே ?''
''அவ தூங்கறாப்பா ''என்றவள் நெருங்கி ரகசியமாக அவன் காதில் ''தேவமலர்
தூங்கும்போது குறட்டை விடறாப்பா ''என்றாள்

நேற்று பியூலா காணாமல் போன தேவ மலரின் ஒற்றைக் கொலுசைக் கண்டுபிடித்தாள்
.அது பீரோவில் உட்கார்ந்திருந்த அவளது பாண்டா கரடி பொம்மைக்கு
அணிவிக்கப்பட்டிருந்தது

பியூலா  அதைக் கண்டதும் சுவரோரம் சரிந்து அப்படியே அமர்ந்துவிட்டாள்

உள்ளிருந்து ஓடிவந்த வள்ளியம்மாள் ''ஐயோ ''என்றலற
யாரோ அவளை அதட்டி நிறுத்துவதை பிலிப் படுக்கையிலிருந்து நடுங்கியவன்னமே
கேட்டுக் கொண்டிருந்தான்.

போன் ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.பாய்ந்து
எழுந்து அதை அணைத்தான்
அதைப் பார்த்தாலே பயமாக இருந்தது

''மிஸ்டர் பிலிப் ?"'
''ஆமா நீங்க ?''
பிலிப் ஆபிசிலிருந்து  கிளம்பும் அவசரத்தில்
இருந்தான்.நாளையிலிருந்து கிறித்துமஸ் விடுமுறை தொடங்குகிறது.அந்தப்
பரபரப்பும் மனதில் இருந்தது.

''வந்து உங்க பொண்ணு சாலோம் இண்டர்நேசனல்  ஸ்கூலில் படிக்கிறாங்களா ?"'

அவன் ''ஆமாம் "'என்றான் ''என் பொண்ணுங்க ""

குரல் தயங்கி நின்றது.பின்னணியில் ஆற்றுநீரில் குடம் முழுகுவது போல
குழப்பமான சத்தங்கள் கேட்டன. .பிறகு ''நீங்க ஜி எச் வரை வர முடியுமா ?ஒரு
சிறிய விபத்து ''


''தம்பி மதியமாச்சி எந்திருக்கலியா ''சகாயம் படுக்கையருகில் வந்து
நின்றார்''காலையிலே ஒருதடவை சகாவு கோபாலன் நாயர் வந்துட்டுப் போனார் .நீ
இன்னும் உறங்கிக் கிடக்கறது பாரத்ததும் போயிட்டார் ''என்றவர்
கவிழ்ந்துகிடந்த காலி மதுப் புட்டிகளை  அகற்ற ஆரம்பித்தார் ''அந்த
பள்ளிக் கூடத்து ஓனரைக்  கைது பண்ணிட்டாங்களாம் ''

ஒரு கண எழுச்சிக்குப் பிறகு பிலிப் மிகுந்த வெறுமையாக
உணர்ந்தான்.முடிவேயில்லாது நீண்ட இந்த துக்க இரவின் நடுவில் அந்த நபர்
மீதான வெறுப்பு மட்டுமே கொஞ்சம் சிகப்பாக ஒரு கங்கு
ஒளிர்ந்துகொண்டிருந்தது என்பதை உணர்ந்தான்.இனி என்ன ?இனி என்ன நான் செய்ய
வேண்டும் ?

சாகவு கோபாலன் நாயருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று
தோன்றியது.பிறகு...பிறகு செத்துப் போய்விடலாம்.

முணுக்கென்று கண்ணீர் புறப்பட்டு வழிந்தது .எவ்வளவு கண்ணீர்!ஊற்று மாதிரி
புறப்பட்டு வந்துகொண்டே இருக்கிறது

எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு சன்னல்  வழியே எட்டிப் பார்த்தான்.வாசலில்
இன்னும் பிளாஸ்டிக் சேர்கள் கிடந்தன.வெயில் அதன் மீது தூசி போல
புரண்டுகொண்டிருந்தது வாசலுக்கு நேர் எதிரே கருப்பு எழுத்துக்களில்
''அஞ்சலி!எங்கள் இதயத்துக் கண்மணிகளுக்கு ..லில்லி மற்றும் தேவமலர்''என்று போட்டிருந்தது

பிலிப் நடுங்கி சகாயத்தை அழைத்து ''அந்த போஸ்டரைக்  கிழியும்வே  ''என்று கத்தினான்
அவர் ''ரோடெல்லாம் ஒட்டிருக்குது பிலிப்பு ''என்றார்

இதே சகாயம் தான் அன்று ''ரோடெல்லாம் ரத்தம் பிலிப்பு ''என்றார் ''நம்ம
குழந்தைங்களோட ரத்தம் ''

பிலிப் முகத்தைத் திருப்பிக் கொண்டு ''பியூலா எங்கே ''என்றான்
கேட்கும்போதே அதற்கான பதில் அவனுக்குத் தெரிந்திருந்தது ''அவ இன்னும்
நேத்து போட்ட ஊசி மருந்து மயக்கத்திலருந்து வெளியே வரலை ''என்றார் சகாயம்
''டாக்டர் வந்து தொடர்ச்சியா இப்படி ஊசி  போட்டுட்டே இருக்க முடியாதுன்னு
சொல்றார் ''

பிலிப் பேசாது இருந்தான்

''வெளியே வரணும் பிலிப்பு ''என்றார் சகாயம்

பிலிப் சட்டென்று ''என்ன மயித்துக்கு வெளியே வரணும் ?இனி என்னவே இருக்கு
இங்கே ?போரும்வே உம்ம சோலியப் பார்த்துகிட்டு '' என்று கத்தினான்

சட்டென்று ஒரு எதிர்வினை போல அடுக்களையிலிருந்து வள்ளியம்மாளின் ஒப்பாரி எழுந்தது


''மழை பெய்த வாசலிலே மண்ணளையப் பிள்ளையில்ல
தண்ணிக்குப்  போகையிலே தடம் மறிக்கப் பிள்ளையில்ல
கறித்தேங்காய் அரைக்கையிலே கை நீட்டப் பிள்ளையில்ல...''

சகாயத்தின் முகம் விடுபட்டு ''ஏட்டி இப்போ நிறுத்தப் போறியா இல்லியா
''என்று அங்கிருந்தே கத்தினார்

''உனக்கு இங்கனக்குள்ளவேலைக்கு  ஆள் கிடைகல்லைன்னா பாண்டில இருந்து ஆள்
பிடிச்சிட்டு வந்தே..இவ நம்மையும் குழிக்குள்ள ஆக்கிட்டுத்தான் மறுவேலை
பார்ப்பா போலிருக்கு ''

பிலிப் பரபரப்பாய்த் தேடி மேசை டிராயரிடமிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து
சகாயத்திடம் எறிந்து  ''கடை வரைக்குப் போயிட்டு வாரும்  ''என்றான்.அவர்
வாங்காமல் நிற்கவே '' ''தாயோளி .சொன்ன வேலையைப் பண்ணுவே.என்னால தெருவில
இறங்க ஒக்காது ''என்று கத்தினான்

அவர் அப்போதும் அப்படியே நிற்கவே ''நல்லது .நீரு என்னைக் கொல்லாம விட
மாட்டீரு இல்லையா ''என்று தேடி சட்டையை அணிந்துகொண்டான்.அதன் மீது
முழுக்க வாந்தி வீச்சமடித்து குமட்டியது

கூடத்தைக் கடக்கையில் ப்யூலாவின் அறையில் எட்டிப் பார்த்தான்.அணக்கமே
இல்லை.இருளாய் இருந்தது .இவன் வெளியே கிளம்பியது பார்த்ததும்
வள்ளியம்மாள் ஓடிவந்து ''அய்யா எங்கே போறே ?"

அவன் மீண்டுமொரு முறை ப்யூலாவின் அறையைப் பார்த்து ''முழிச்சாளா ?''

வள்ளியம்மாள் முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ''காலைல ஒருதடவை
முழிச்சு வள்ளியம்மை குட்டிங்களுக்கு இன்னிக்கு ஸ்கூலுக்கு என்ன
கொடுத்துவிடறதுன்னு  கேட்டா..''என்றவள் மீண்டும் உரத்த குரலெடுத்துப் பாட
ஆரம்பித்தாள்.அவள் கண்களிலிருந்து கண்ணீர் வாய்க்கால்கள் போல வழிந்து
அவளது மார்ச் சட்டையை நனைப்பதைப் பார்த்தான்.


பிலிப்  சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தான் .கால்கள் தளர்ந்து
இற்றுவிடுவது போல ஆடின.தலை சுற்றியது.பிறகு வள்ளியம்மாள் அவன் கையில்
இப்போதும் நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்த ரூபாய் நோட்டைப் பார்த்து
''என்ன வாங்கனுமய்யா ?நான் வாங்கிட்டு வாறன்''

அவன் அதிர்ந்து ''ச்சேச்சே ''என்று மறுத்துவிட்டு இறங்கி நடந்தான்

வெயில் பளீரென்று முகத்தில் அறைந்தது.நல்ல வேளையாக தெருவில் அதிகம்
கூட்டம் இல்லை .அலை உள்வாங்கிவிட்ட கடற்கரை போல இருந்தது இன்று வேலை
நாளாக இருக்கவேண்டும்.வீடுகளில் குழந்தைகள் அரவம் இல்லை.எல்லோரும்
பள்ளிக்குப் போயிருக்கவேண்டும்..பள்ளிக்கு....ஆனால் அவர்கள்
வீட்டுக்கெல்லாம் அலை திரும்ப வரும்.என் வீட்டுக்கு ..ஐயோ...

தெருவெங்கும் சகாயம் சொன்னது போல அஞ்சலி போஸ்டர்கள் சிறிதும் பெரிதுமாக
ஒட்டப்பட்டிருந்தன.பெரும்பாலும் ஒரே புகைப்படம் இந்த புகைப்படங்களை
அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்று யோசித்தபடியே ஒரு போஸ்டரின் முன்
அவன் நின்றான்.இது அவர்களைப் பற்றி ஒருதடவை செய்திதாளின் சிறுவர்
வாரந்தரி யில் வந்த புகைப்படம் அல்லவா ?அதில் லில்லி பட்டாம்பூச்சிகள்
பற்றி எழுதியிருந்த ஒரு சிறிய கட்டுரையும் அதற்கு தேவமலர் வரைந்திருந்த
சித்திரங்களும் வந்திருந்தது லில்லி -தேவ மலர்... தேவனின்
பட்டாம்பூச்சிகள்

தேவனின் பட்டாம்பூச்சிகள்.....

''தேவனே உங்களது கரங்களில் இந்த ஆன்மாவை ஒப்படைக்கிறோம் பிதாவே.பூமியின்
மீது அவர்கள் இருந்த சிறிய வாழ்வில் உமது கிருபையை அவர்கள் மீது
செலுத்தினீர்கள்.அதற்காக எங்களது நன்றிகள்.இப்போது உமது  சித்தத்தால்
இவர்களை உம்மோடு சேர்த்துக் கொண்டீர்கள்.நித்திய சமாதானமும் அமைதியும்
உள்ள உமது பரலோக ராஜ்யத்தில் இவர்களை சேர்த்துக் கொள்ளும்படி உம்மை
மன்றாடி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் பிதாவே.இந்த ஆன்மாக்கள்தங்களை
அறியாது  செய்திருக்கக் கூடிய சிறிய சிறிய பாவங்களைக் கூட மன்னித்து
.....''

''பாவங்கள் !மயிரு!''என்று கத்திய பிலிப்பை யாரோ பின்னிருந்து அமைதிப்
படுத்தினார்கள்
ஐரெனியஸ் பாதிரியார் ஒருமுறை கண்ணை உயர்த்திப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்

''மண்ணிலிருந்து உருவாகிய எதுவும் மண்ணுக்குத் திரும்புகிறது  எனினும்
எங்கள் ஆன்மா துயரம் தாங்காமல் அலைப்புறுகிறது .அதைத் தாங்கும்
பெலத்தையும் ஞானத்தையும் எங்களுக்குத் தாரும் கர்த்தாவே ...''

பிலிப்புக்கு இப்போது யோசிக்க வியப்பாக இருந்தது.நான் இவற்றையெல்லாம்
எப்படி கடந்தேன் ?ஏறக்குறைய ஒரு கனவு மாதிரி இருந்தது

ஆசுபத்திரிக்கு அவனேதான் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டு
சென்றான்.அடுத்த தெருவில் இருந்த தம்பிக்கு மட்டும் போன் செய்து
சொன்னான்.அவன் பதறியபோது கூட ''ஒன்னுமில்லடா சின்ன விபத்துன்னுதான்
சொல்றாங்க.அங்கே நம்ம அருள்ராஜன் தானே பார்மசிஸ்ட்டா இருக்கான் ?அவனுக்கு
நம்ம லில்லியை நல்லாத் தெரியுமே ''

போகும்போதே ஒருமுறை பள்ளி எண்ணுக்கு போன்செய்து பார்த்தான். ரிங் போய்க்
கொண்டே இருந்தது


நன்றாக நினைவிருக்கிறது.நகரம் ஜகஜோதியாக
ஒளிர்ந்துகொண்டிருந்தது.மரங்களில்  எல்லாம் நட்சத்திரங்கள் பூத்தது போல
வண்ண விளக்குகள் உதித்து விழுதுகளாய்ப் பூமி நோக்கி
வந்துகொண்டிருந்தன..ட்ராபிக் ஜாமாகி வாகன வரிசை நின்று நின்று
ஊர்ந்துகொண்டிருந்தது . ஆற்றுப் பாலத்தில் அது நெடு நேரம்
நின்றுகொண்டிருந்தது.ஆற்று நீரில் விளக்குகள் கரைந்ந்து சரிகை போல
படபடத்தன.அந்தோனியார் கோவிலிலிருந்து மாலை பூசைக்கான மணி எழுந்து வந்தது
பக்கத்தில் வந்து நின்ற பைக் காரர் அவனை நோக்கிப் புன்னகைத்தார் .இவனும்
புன்னகைத்தான் 'ஆ !புது வருஷம்  முடியறவரைக்கும் இந்த ரோட்டில
இப்படித்தான் இருக்கும்.இந்த நாற்கர சாலையை போட்டுத் தீரானுங்க இல்லை ''

''ஆமா.ஒரு மாநிலத் தலை நகரத்துக்கு பிச்சைக்காரன் கோவணம் மாதிரி இந்த
ஒத்தை ரோட்டை வச்சிக்கிட்டு உயிரை வாங்கறாங்க .இந்தா இருக்கிற
நாரோயிலுக்கு காலைலயும் அந்தியிலயும் போக இரண்டு மணிக் கூறாவுது ''
இன்னொருவர் ''ட்ராபிக் நெரிசல் மட்டுமா ?ஆக்ஸிடண்டு ..நித்தம்  ஒரு ஆக்ஸிடண்டு ..''

பிலிப் சப்பாத்துப் பாலத்தில் பூச்சி போல நடந்து செல்கிற மனிதர்களைப்
பார்த்தான்.மீன் சந்தைக்குப் போய் வரச் சொன்னாள் பியூலா.பண்டிகைக் காலம்
.எல்லாமே குதிரை விலையாயிருக்கும்.ஆனால் மீன் இல்லாவிட்டால் தேவ மலருக்கு
சாப்பாடு இறங்காது..

இன்னொருவர் தொடர்ந்து ''இன்னிக்கு கூட ஒரு ஆக்ஸிடண்டு ''என்றார் ''இரண்டு
பள்ளிக் குழந்தைகள் ரோட்டைக் கடக்கையில்  கேரளா பஸ்லே மாட்டி ....''

மற்றவர் ''அய்யோ ''என்றார்


பிலிப் அவசரமாக வண்டியைத் திருப்பி அவர்களிடமிருந்து தள்ளி நிறுத்த
முயற்சித்தான் யாரோ ஒருவர் திட்டினார் ''இங்கே எங்கே இடமிருக்குன்னு
நுழையறீங்க ?''யாரோ ஒருவர் நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து எட்டிப்
பார்த்து  ''ஏ பிலிப்பு  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்டே  ''
பிலிப் வெட்டுப் பட்டவன் போல நிமிர்ந்து பார்த்து சன்னமாய்
''வாழ்த்துக்கள் ''என்றான்


யாரோ அவன் தோளில் கை வைத்தார்கள் ''பிலிப்பு என்ன இங்கே நிக்கறே ?""அவன்
திரும்பிப் பார்த்தான்.சாஜன் வண்டியை நிறுத்தி நின்றுகொண்டிருந்தான்
.அவன் முகத்தில் கவலை இருந்தது .பிறகு அந்த போஸ்டரைப் பார்த்து  பதறி
கண்ணை விலகி ''எங்கியாவது போகனுமா பிலிப்பு ?''

பிலிப் வேண்டாம் என்பது போல விலகி நடந்தான் .அவன் வண்டியை பின்னாலேயே
உருட்டிக் கொண்டு வந்து ''வண்டில போகலாம் பிலிப்பு ''

பலவருடங்களுக்கு முன்பு சாஜனை இதே தெருவில் வைத்து பிலிப் ஒருமுறை
அடித்திருக்கிறான்.ரொம்ப நாட்களாக அவர்கள் குடும்பங்களிடையே பகை
இருந்தது.பதிலுக்கு சாஜன் ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டுவந்து பிலிப்பை
அடித்திருக்கிறான்.போலிஸ் வழக்கெல்லாம் பதிவாகி ஐரெனியஸ் பாதிரியாரின்
சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு வழக்கு விலக்கிக்
கொள்ளப்பட்டது.பிரச்சினைக்குக் காரணமான ப்ளோரி இருவருக்கும் கிடைக்காமல்
போனாள் .அவள் புருஷன் அந்த ஊரின் கடும் குடிகாரனாக கொஞ்ச நாள் திரிந்து
ஒருநாள் காணாமல் போனான்.பிலிப் கண் கூச ஒரு கணம் ப்ளோரியின் வீட்டை
ஏறிட்டு பார்த்தான்.அவள் வீட்டின் மாடிசன்னலின் திரைச் சீலைகள் ஒருகணம்
அசைந்து மீள்வதைப் போலத் தோன்றியது.அவள் புருஷன் தொலைந்து போன பிறகு அவள்
வெளியே வருவதேயில்லை.

''பிலிப்பு ?பேச மாட்டியா ?"'சாஜன் குரல் மறுபடி கேட்டது.பிலிப் கண்களைத்
தாழ்த்திக் கொண்டான்.


''அந்த பிலோமினாள் தேவிடிச்சி குடும்பம்தான் ஏதோ மந்திரவாதம் பண்ணி எம்
வம்சத்தைக் கருவருத்துடுச்சு ''அம்மா அடக்க ராத்திரி அன்றைக்கு கத்தியது
நினைவுக்கு வந்தது

அவன் சாஜனின் கண்களை உறுத்துப் பார்த்தான் .அவன் உடைந்து ''எங்களுக்கும்
புள்ளை குட்டி இருக்கு பிலிப்பு .நானும் ஒரு தாயி வயித்துல ஜனிச்ச மனுஷப்
பிறவிதான்.என்றான்

பிலிப் அவன் வண்டியில் ஏறிக்  கொண்டு ''எங்கியாவது குடிக்கிற
இடத்துக்குக் கூட்டிட்டுப் போடா ..முழிச்சிருக்கவே முடியலை ''


 தேவையானதை வாங்கிக் கொண்டு திரும்புகையில் வீட்டில் ஐரேனியஸ் சாமியார்
அமர்ந்திருந்தார் .அம்மா அவருக்கருகே நின்று விசித்துக்
கொண்டிருந்தார்அவள்தான் அவரைக் கூட்டி வந்திருக்க வேண்டும்..ப்யுலாவின்
அறையில் இன்னமும் எந்த அசைவுமில்லை.பாதர் ''பிலிப்பு நீனும் ப்யுலாவும்
இங்க இருந்து கொஞ்சம் மாறி நில்லுங்க ''

அவன் கேட்காதது போல ''சகாயம் இதை உள்ளே கொஞ்சம் வையி .கொஞ்சம் தண்ணி கொண்டா ''

அவர் விடாது ''பள்ளி தாளாளரைக் கைது பண்ணியாச்சு.''என்றார் .பிலிப்
ஆங்காரமாய்த் திரும்பி ''அது சகாவு பண்ணின காரியம்.உங்க சபை அவரைக்
காப்பாத்தல்லா முயற்சி பண்ணுச்சு ?''

அவர் பேசாதிருந்தார் ''ஐஸ்வர்யம் உள்ளவனும் கள்ளக்  கடத்தல் காரனும்தான்
உங்க சபையோட மக்கமாரு .இல்லே?எங்க உதிரம் நீங்க அவங்களுக்கு கொடுக்கிற
பலி ''

அவர் ''நடந்தது ஒரு விபத்து பிலிப் ''

''சிலரோட பொறுப்பின்மையால நிகழ்ந்த விபத்து .சிலரோட அலட்சியத்தால
நிகழ்ந்த விபத்து '' என்று பிலிப் சீறினான் ''உங்க பிள்ளைகளை யார்
துணையுமில்லாம ஒரு நேசனல் ஹைவேயில இறக்கி விட்டுட்டுப் போயிடுவீங்களா
?உங்க பிள்ளைகளைஆயா இல்லாம  ஒரு குடிகார ட்ரைவர் கிட்டே ஒப்படைப்பீங்களா
?பள்ளிக் கூடம் சீக்கிரம் விடறோம் னு  பெற்றோர்கள் கிட்டே கூட சொல்லாம
செய்வீங்களா ?"'

பாதர் ''யாரும் எதிர்பார்க்கலை பிலிப்பு .அன்னிக்கு அந்தவிடத்துல
ட்ராபிக் ப்ளாக் ஆகும்னு யார் எதிர்பார்த்திருக்க முடியும்
?எல்லோருக்கும் பண்டிகை அவசரம்''

''இது முதல் தடவை இல்லை பாதர் ஏற்கனவே நிறைய  கம்ப்ளைன்ட் போயிருக்கு
.அந்த வேன் ட்ரைவர் அவரோட சொந்தக் காரன்.குடிகாரன்.பொம்பளைப் பொறுக்கி
அவன் மேல ஏற்கனவே ஒரு கேசு இருக்கு.தெரிஞ்சே வச்சிருக்கார் ''என்று
கத்தினான் ''பணத்திமிர்.அவங்க பின்னால நீங்க இருக்கற திமிர்''

அவர் ''நான் அவர் பின்னால இல்லை பிலிப் ''என்றார்

பிலிப் தளர்ந்து ''போங்க பாதர்.இனி என்ன ?என் செல்லங்க போயிட்டாங்க .இனி
எதன் மீதும் எனக்கு ஆர்வமில்லை.எதுவும் அவங்களைத் திருப்பிக் கொடுத்திடப்
போறதில்லை ''

''நீ கொஞ்சம் இந்த இடத்தைவிட்டு மாறி நில்லு ''என்றார் அவர் மறுபடியும்
''உன்னை உன் அம்மையை  உன் புள்ளைங்களை எனக்கு சின்ன வயசிலருந்தே தெரியும்
உங்களை இப்படிப் பார்க்கவே கஷ்டமா இருக்கப்பா ''

''நான் எங்கே போறது பாதர் ?செத்தா என் மக்க  கிட்டே போயிடலாம்னா
அங்கேதான் போக விரும்பறேன் .ஆனா அதுக்கும் சம்மதிக்காத உங்க கடவுள
நினைச்சா அடிவயித்திலிருந்து கசப்பா வருது ...ஆ!பண்டிகை !இவர்
பண்டிகைக்கு என் மகள்க ரத்தத்தைல்லா குடிச்சிருக்காரு உங்க கருணா
மூர்த்தி !''

அம்மா அழுதபடியே ''தேவ தூஷணை பண்ணாதே மவனே ''என்று கிட்டே வர அவன் அவளைப்
பிடித்துத் தள்ளினான் ''போட்டி இங்கிருந்து.நான் பாட்டுக்கு துபாய்ல
சந்தோஷமா இருந்தேன்.என்னை நைநைன்னு நச்சரிச்சி இங்கே கூட்டி வந்து
கல்யாணம் பண்ணி வச்சி ...''

சாமியார்  எழுந்து ''கொடைக்கானலுக்குப் போ ''என்றார் ''அங்கே என் நண்பர்
ஒருவர் இருக்கார் .அங்கே நம்ம சபைக்கு சொந்தமான ஒரு ஆற்றுப்படுத்தும்
மையம் இருக்கு .அங்கே போயி கொஞ்ச நாள் இரு.அங்கே போனா உனக்கு நீ இழந்த மன
சமாதனம் திரும்பக் கிடைக்கும் ''

பிலிப் சிரித்து ''மன சமாதானம் !''என்றான் ''உங்க சமாதானத்தை வேற யாராவது
பணம் உள்ளவன் கிட்டே  விக்கக் கூடாதா பாதர் ..என்கிட்டே உங்களுக்கு என்ன
கிடைக்கும் ?"

அவர் நெருங்கி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு ''உன் துக்கம் எனக்குப்
புரியுதுடே ''

பிலிப் கைகளை உதறிக் கொண்டு ''உங்களுக்கு எப்படிப் புரியும் பாதர்
?உங்களுக்கு ஆயிரம் புள்ளைங்க.ஆயிரம் பொண்டாட்டிங்க ''என்றான்
இகழ்ச்சியாக.

அம்மா எழுந்து ''அப்படிப் பேசாதே மவனே.சொல்லுங்க பாதர் .இவனுக்கு இன்னும்
என்ன வயசாச்சி.கர்த்தர் நினைச்சார்னா இன்னும் இவனுக்கு நூறு சந்தானத்தைத்
தர மாட்டாரா ? ''

பிலிப் அடுத்து என்ன செய்தான் என்று அவனுக்கு நினைவு வரவில்லை
.உள்ளிருந்து சகாயம் ஓடிவந்து அம்மாவைத் தூக்குவதைத்தான் அடுத்து
கவனித்தான் .அவள் உதடு கிழிந்து ரத்தம் சொட்டி தரையில் பரவிக்
கொண்டிருக்க  பியூலா உள்ளிருந்து தள்ளாட்டமாய் எழுந்து வந்து ''அத்தே
இன்னிக்கு ராத்திரி ஆப்பத்துக்குக் கடலைக் கறி  பண்ணனும் .தேவ மலர்
இரண்டு நாளா கேட்டுட்டு இருக்கா ''என்றாள்



கொடைக்கானலுக்குக் கிளம்பும் அன்று மாலை திடீரென்று தோன்றி பிலிப்
மகள்களின் பள்ளிப் பக்கம் போனான்.மதியத்துக்கான இடை வேளை
விடப்பட்டிருந்தது.பிள்ளைகள் புழுதி எழும்ப விளையாடிக் கொண்டிருந்தார்கள்
உள்ளே வரிசையாக மஞ்சள் நிறத்தில் பள்ளி வாகனங்கள்
நிறுத்தபட்டிருந்தன.ஒருகணம் மனம் அதிர்ந்து கண்களை விலக்கிக்
கொண்டான்.காவலாளி அவனைக் கண்டுகொண்டு ''சார் ''என்றான்.பிலிப் பதில்
பேசாது பிள்ளைகளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.எத்தனையோ தடவை இந்த
கேட்டின் முன்பு அவர்களுக்காகக் காத்திருந்திருக்கிறான்.அந்த மாலை
மட்டும் அது போல அவன் காத்த்திருந்திருப்பான் எனில் ..காவலாளி அவனை
நெருங்கி ''சின்ன பாப்பா என்கிட்டே நல்ல அன்பா இருக்கும் சார் '' என்றான்
''அன்னிக்கு போகும்போது கூட எனக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து
சொல்லிச்சி''பிலிப் காவலாளி சொல்லிய காட்சியை மனத்தில் உருவாக்க
முயன்றான்.என் செல்லங்கள் இந்த மண்ணில் கடைசியாக கால் வைத்த
தருணங்கள்.அப்போது அவர்கள் என்ன நினைத்துக் கொண்டார்கள் ?தேவ மலருக்கு
இந்த கிறிஸ்துமசுக்கு சிறிய சைக்கிள் வாங்கித் தருவதாகச் சொல்லி
இருந்தான் (பிங்க் கலர் )அவள் அதைக் காண மிகுந்த ஆவலாக இருந்தாள் .
லில்லியின் உடைகள் அன்று மாலைதான் தைத்து வருவதாக இருந்தது.அவள்
''டெய்லர் கொடுத்துடுவாராப்பா?'என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் பிலிப்
கண்கலங்கி  குனிந்து அந்தப் பள்ளி மைதானத்து மண்ணை  எடுத்து ''மகளே நான்
போறன்  ''என்றான்


ரயிலடிக்கு பாதர் வந்திருந்தார்.அம்மாவை வரவேண்டாம் என்று
சொல்லிவிட்டிருந்தான்.சகாயம் ''பிலிப்பு ப்யுலாவை கொஞ்சம் கவனிச்சிக்க
''என்றார்.ஒருவகையில் பிலிப்புக்கு அவள் மேல் பொறாமையாகக் கூட இருந்தது
.அவள் பிரயாணத்துக்கு எப்போதும் போலவே மகள்களின் துணிகளையும் எடுத்து
வைத்துக் கொண்டுதானிருந்தாள் ''அண்ணே அங்கே ரொம்ப குளிருமே ...போனதடவை
ஊட்டில புள்ளைகளுக்கு வாங்கின ஸ்வெட்டரெல்லாம் எங்கே ?"அவளிடம் ஏதோ
சொல்லப்போன அம்மாவை சகாயம் அதட்டி அந்தத் துணிகளையும் எடுத்துக்
கொடுத்தார்.,அவள் அவற்றை நெஞ்சோடு அணைத்துப்  பத்திரமாக எடுத்து வைத்துக்
கொண்டாள்

அன்றைக்கு ரயிலில் கூட்டமில்லை.ரயில் நகரும்போது தன்னையும் மீறி ஒரு
கேவல் எழுந்தது.போன தடவை பிரயாணம் குழந்தைகளுடன் மேற்கு நோக்கி
இருந்தது.இரண்டு நாட்கள் வர்கலையில் தங்கியிருந்தார்கள் .இரவும் பகலும்
அதன்  கடற்கரையிலேயே கிடந்தார்கள் .டூ பீஸ் மட்டுமே அணிந்து கிடந்த
வெள்ளைக்காரிச்சிகளைப்  பார்த்து லில்லி  ''ச்சை!''என்று நாணினாள்
.தேவமலருக்கு நாணமெல்லாம் இல்லை.அவர்களை ஆவென்று பார்த்தாள் .அன்றிரவு
பியூலா அறையில் ''பிள்ளைகளை எங்கே கூட்டிட்டு வந்து என்னத்தியெல்லாம்
காமிக்கீக ?"'என்று சிணுங்கினாள்.பிலிப் அவளை அனைத்துக் கொண்டு
''இதிலென்னட்டி இருக்கு ?கர்த்தர் படைச்ச ரூபம்தானே ?ஆதாமும் ஏவாளும்
இப்படித்தானே ஏதேன்லே திரிஞ்சாவ?''என்றான் ''அதுக்காக ?சின்னப்
பிள்ளைகளல்லா ...''என்றாள்  அவள் ''எது சின்னப் பிள்ளை ?லில்லி பொறந்த
அன்னிக்கு ஓர்மையிருக்கா ?சின்னதா ஒரு வெள்ளைப் பல்லி மாதிரி கிடந்தா
..எனக்கு கூட இதுக்கா இத்தனை பாடுன்னு தோனுச்சு ..இப்போ பாரு எப்படி
இருக்கா உன் வெள்ளைப் பல்லி குட்டித் தேவதை கணக்கா?காலம் ரொம்ப வேகமா
ஓடுது ..நாளைக்கே திமுதிமுன்னு வளர்ந்து கல்யாணத்துக்கு நிப்பா பாரு ''

பிலிப் தன்னை உலுக்கிக் கொண்டான்.காலம் இனி எங்கும் ஓடப் போவதில்லை.அது
ஒரு டிசம்பர் மாதம் மாலைப் பொழுதில் நிரந்தரமாக நின்று போய்விட்டது .

இரணியலில் ஒரு வெள்ளைக் காரர் மட்டும் ஏறினார்.அவனைப் பார்த்துப்
புன்னகைத்தார்.ரயில் சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது .இரண்டு
தட்டான்கள்  ரயில் பெட்டிக்குள் ஒன்றையொன்று  துரத்திக் கொண்டு
வந்தன.அவன் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தான்.ரயில் சட்டென்று
கிளம்பியது.பிலிப் சற்றே பதற்றத்துடன் அந்த தட்டான்களைத் தேடினான்.அவை
லாகவமாக வெளியே போய்விட்டன.


வர்கலையில் கடலை விட அங்கு மனிதர்கள் பாரா கிளைட் மூலம் பறப்பது
லில்லிக்கு வியப்பாக இருந்தது ''நானும் இப்படிப் பறக்கணும் அப்பா''என்றாள்.
ப்யூலா ''அம்மாடி .நான் விட மாட்டேன் ''என்றாள்.பிலிப் அவள்
தலையைத் தடவி ''கொஞ்சம் நீ பெரிசாகணும் அதுக்கு கை கால் பலம்
வரணும்.இப்படி குச்சி கணக்கா இருந்தியான்னா ?  ''

ப்யுலா ''காய்கறியே சாப்பிடறதில்லை.மீன் மட்டும் போதுமா ?''
தேவமலர் ''பட்டம்பூச்சியெல்லாம் குட்டியா இருக்கப்பவே பறக்குதே ?"'என்றாள்



பிலிப் ரொம்ப நாட்களுக்குப் பிறகு போனை எடுத்து செய்திகளைப்
பார்த்தான்.ஆறுதல் செய்திகளைத் தவிர்த்தான்.கொடைக்கானலில் இருந்து
ஐரேனியஸ் பாதிரியாரின் நண்பர் தாமஸ் ஒரு மின்மடல் எழுதியிருந்தார் .அதைத்
திறந்தான்


அன்புள்ள பிலிப்


ஐரேனியஸ் உங்களைப் பற்றி எல்லாம் சொன்னான்.நான் உங்களது துயரத்த்துக்கு
ஆறுதல் என்று எதுவும் சொல்லப்போவதில்லை.எங்களைப் போன்றவர்கள் சொல்லும்
எதுவும் இங்கு சொற்களாகவே இருக்கும் என்பதை அறியாதவனல்ல நான்.அது
அப்பத்தைக் கேட்கிறவனுக்கு கற்களை அளிப்பது.உங்களைத் தேற்றவும்
குணப்படுத்தவும் ஒருவராலேதான் முடியும்.அவர் கூட தனது இறுதிப்பாட்டை
நெருங்கும்போது ''முடியுமானால் இதை என்னிடமிருந்து நீக்கும் பிதாவே
''என்று கலங்கியிருக்கிறார் எனில் நாம் எம்மாத்திரம் ?தந்தை இந்த
சிலுவையை சுமக்க உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத்
தெரியாது.தந்தை என்று ஒருவர் இருக்கிறாரா உண்மையில் அதுவும் எனக்கு
நிச்சயமாகத் தெரியாது.நான் பிரார்த்தனைகள் செய்கிறேன்.அவை எங்கு போகின்றன
?அதுவும் எனக்குத் தெரியாது .கர்த்தர் நம் பிரார்த்தனைகளைக்
கேட்கிறாரா?ன்று கேட்டால் அதுவும் எனக்குத் தெரியாது.ஆனால் ஒன்று
சொல்வேன்.எப்போதாவது மாலைப் பொழுதுகளில் இந்த மலைப்  பிரதேசத்தில்
நடக்கப் போகும்போது அவர் நமது பிராத்தனைகளுக்குப் பதில் சொல்வது போல
உணர்கிறேன்.அவரை மிக நெருக்கமாக குரான் சொல்வது போல பிடரியில் துடிக்கும்
நரம்பு போல உணர்கிறேன்.உண்மையில் அவர்தான் பதில் சொல்கிறாரா ?பதில்
சொல்வது அந்த மலைகளாகக் கூட இருக்கலாம்.ஏனெனில் இந்த மலைகளைப் பற்றி
இங்கு உலவும் கதைகள் விசித்திரமானவை.பெரும்பாலும் பழங்குடிகளின்
கதைகள்.அறிவியலுக்கும் நமது மதத்துக்கும் புறம்பாலான வெளிகளில் கிடக்கிற
கதைகள்.அதனாலேயே சில சமயம் இந்த மலைகள் கொடுக்கிற அமைதி எனும் மதுவை
அருந்துகையில் எனக்கு குற்ற உணர்வு கூட ஏற்படுவதுண்டு.ஆ னால் இந்த மலைகள்
நிச்சயம் நமக்கு மன அமைதியை அளிக்கின்றன.இதை நமது சபை முன்னோர்களும்
உணர்ந்திருக்க வேண்டும்.அதனால்தான் இப்படி ஒரு இடத்தில் இவ்விதமொரு
மையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது



அந்தக் கதைகளில் ஒன்றை இங்கே உனக்குச் சொல்லட்டுமா ?

இந்தப் பக்கத்தில் உள்ளவர்களின் வாய்மொழிப்படி இந்த மலை
உயிருள்ளது.அதற்கு நல்லவர்கள் தீயவர்கள் யாரென்று பகுத்தறியும்
அறிவுள்ளது.தனக்குப் பிடிக்காதவர்  எவரும் உள்ளே நுழைந்தால் அவர்களை வழி
தவறச் செய்து கொன்றுவிடும் குணமுடையது.அதே சமயம் தனக்குப் பிடித்தவர்களை
தாய் போல அணைத்துக் கொள்ளும் தன்மையுடையது

போன நூற்றாண்டில் ஒரு சமயம் பிரபலக் கொள்ளைக் காரன் செம்புலிங்கம் இங்கே
ஒளிந்திருக்கிறான்.செம்பு லிங்கம் பற்றி நீ கேள்விப் பட்டிருக்கிறாயா
?அவன் தென்னகத்தின் ராபின் ஹூட் என்று சொல்லலாம்.கொள்ளைக் காரனே தவிர
ஏழைகளின் மீது கருணை உள்ளவன்.டோனாவூரில் இருக்கும் நமது கன்னியர்
மடத்தின் மீது அவனுக்கு நிறைய மதிப்புண்டு என்று சொல்வார்கள் .ஒரு தடவை
அவனைத் துரத்திக் கொண்டு  ஒரு வெள்ளைக்கார அதிகாரி தலைமையில் படை இந்த
மலைக் காட்டுக்குள் நுழைந்திருக்கிறது .ஒரு இடத்தில் பாதை இரண்டாகப்
பிரிந்திருக்கிறது .வெள்ளைக்காரர் சிலரை மட்டும் தன்னுடன் நிறுத்திக்
கொண்டு இரண்டு குழுக்களைப் பிரித்து அனுப்பியிருக்கிறார்.இரண்டு
குழுக்களும்  காலை வரை திரும்பாமல் போகவே மறுநாள் கொடைக்கானலுக்குத்
திரும்பி மேலும் கொஞ்சம் படைகளுடன் திரும்பி இருக்கிறார் .மறுநாள் அவர்
எவ்வளவோ தேடியும் அந்தப் பாதைகள் பிரிந்த இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே
முடியவில்லையாம்.காணாமல் போன அந்த வீரர்களும் இன்றுவரை வீடு
திரும்பவில்லையாம் .கொடைக்கானலில் இருந்தவரை செம்பு லிங்கத்தை யாராலும்
பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் ...இங்கிருந்தவரை செம்புலிங்கத்தை
இந்த மலைகள் காப்பாற்றின,

பிலிப் சலிப்புடன் போனை மூடி வைத்தான்.மலைகள்.மனிதர்கள்.கடவுள்கள் என்று
எதுவும் யாரும் என் பிள்ளைகளைக் காப்பாற்றவில்லை.மலைகள் கூட கள்ளர்களையே
காப்பாற்றுகின்றன


ஆசுபத்திரிக்குள்  ஒரு சிறிய கூட்டம் இருந்தது..வெளியே ஒரு ஆம்புலன்ஸ்
நின்றிருந்தது.அதன் வாசல் திறந்து கிடக்க அதன் படிகளிலிருந்து ரத்தம் ஒரு
சாலை  போல இறங்கி ஆஸ்பத்திரிக்குள் ஏறிச் செல்வதைப் பார்த்தான்.டாக்டர்
 ஒருவர் பணியாளர் ஒருவரை அதைச் சுத்தம் செய்யும்படி சத்தம் போட்டுக்
கொண்டிருந்தார்.அருகில் ஒரு போலிஸ் வாகனம் நின்றிருந்தது.பிலிப்
அதனருகில் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை நோக்கிப் போனான்.கிட்டே போனதும்
அந்தக் கூட்டத்தில் அருள்ராஜ் இருப்பதைப் பார்த்தான்.இவனைப் பார்த்ததும்
அருள் ராஜ் விலகி வந்து ''பிலிப்பு ? என்ன இங்கே?''என்றான்
பிலிப் ''போன்  வந்துச்சு ''என்றான் .''இங்கே வரச் சொல்லி .புள்ளைகளுக்கு
ஏதோ ஆக்சிடண்டுன்னு ''
அருள்ராஜின் கண்கள் சட்டென்று மாறின .அவன் ''அய்யோ !''என்று கத்தினான்


பிலிப் வண்டி நாகர்கோவிலை தாண்டிவிட்டதை  உணர்ந்தான்.ப்யுலா வெளியே
வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் காற்றில் அவள் சிகை
புரண்டுகொண்டிருந்தது.பத்து நாட்களிலேயே அவள் மிக வயதானவள் போல
ஆகிவிட்டதை பார்த்தான்.அவன் இதுவரை பார்த்தேயிராத நரை வெள்ளிகள் அவள்
தலையில் மின்னின.கண்களுக்குக் கீழே கருத்த பைகள்

''ப்யுலா சாப்பிடறியா ?''

அவள் திரும்பி ''சாப்பிடலாம் ''என்றாள் .பிறகு யோசித்து ''புள்ளைக  வந்துடட்டுமே ''

பிலிப் அவளையே பார்த்தான்.அவள் ஏதோ தப்பு செய்த குழந்தை போல சங்கடமாக
மறுபடியும் புன்னகைத்தாள்

எதிரே இருந்த வெள்ளைக்காரர் புன்னகைத்து ''Going far ?''என்று கேட்டார்
பிலிப் ''Very far ''என்றான்

அந்த இரவுதான் அவனது மிகக் கொடுமையான இரவாக இருந்திருக்க வேண்டும்.ஆனால்
அவனுக்கு அதுவெல்லாம் மிக தூரத்தில் வேறு யாருக்கோ நடப்பது போலவேதான்
இருந்தது.குரல்கள் கூட எங்கோ தூரத்தில் இருந்து வருவது போலதான்
கேட்டன.தம்பி வந்து கதறியபோது கூட  இவன்தான் சமாதானப்படுத்தினான்.விசயம்
கேள்விப் பட்டு வந்து சகாவுதான் எல்லா விசயங்களையும் பார்த்துக்
கொண்டார்.ஆனால் அவர் எவ்வளவோ முயன்றும் கூட அன்றிரவே உடல்களை வாங்கக்
கூடவில்லை.''ஆறுமணிக்கு மேலே போஸ்ட் மார்ட்டம் பண்ணக் கூடாது
கவர்ன்மெண்ட் ரூல் ''

தம்பி கொதித்து ''அதெல்லாம் பண்ணக் கூடாது என்று கத்தினான் .அருள்ராஜ்
நெருங்கி ''கொஞ்சம் பெரிய ஆக்சிடன்ட் தம்பி.அடக்கத்துக்கு ஏத்ததா உடம்பை
தயார் பண்ண வேண்டாமா ?''

சகாவு பிலிப்பிடம் நெருங்கி ''காலைலதான் தருவாங்களாம் பிலிப் ''என்றார்
பிறகு தயங்கி ''நாம காலைல வரலாம் ''


பிலிப் அவரைப் புரியாமல் பார்த்து ''சரி காலைல வாங்க ''என்றான்
பிறகு சம்பந்தமில்லாமால் ''அந்த முந்திரி பேக்டரி சமரம் சரியாயிடுச்சா
அண்ணாச்சி ''

அவர் அவன் கையைப் பிடித்து இழுத்து ''இல்ல தம்பி இப்போ நாம போகணும் காலைல
வருவோம்  ''

பிலிப் கைகளை விடுவித்துக் கொண்டு ''நான் எப்படி என் பிள்ளைகளை விட்டுட்டு
வர்றது ?''என்றன் ''அதுவும் தேவ மலருக்கு புது இடம்,இருட்டுன்னா ரொம்பப் பயம்
''என்றவன் அங்கு நின்றிருந்த அட்டெண்டரிடம் ஒரு நூறு ரூபாயை சட்டென்று எடுத்து
கொடுத்து ''உள்ளே ராத்திரில எல்லா லைட்டையும் அணைச்சிராதீகண்ணே  '


பெரிய டாக்டர் வந்து ''எல்லோரும் காலைல வாங்க இங்கே நிக்காதீங்க ப்ளீஸ் ''என்றார்
யாரோ அவரிடம் ஆவேசமாகப் பேசப் போக பிலிப் தடுத்து ''இவங்க போயிடுவாங்க
.நான் என் பிள்ளைகளைக் கூடீட்டுப் போகாம எப்படி வீட்டுக்குப்
போவேன்?அவளுக்கு பண்டிகைக்கு துணியெல்லாம் எடுத்து வச்சிருக்கு
.சின்னவளுக்கு சைக்கிள் வேற வாங்கணும்.பிங்க் கலர் ''என்றான்

சகாவு டாக்டரிடம் ''சார் புள்ளைங்களோட அப்பா இவரும்  நானும் மட்டும்
இன்னிக்கு இங்கே நிக்கோம் ''

அவர் தயங்கி ''பிரச்சினை ஆகக் கூடாது அவ்ளோதான்..வேணும்னா இவருக்கு ஒரு
அட்மிசன் போட்டு பெட்டு தரேன்.காம்போஸ் இன்ஜெக்சன் போடச் சொல்றேன் ''

பிலிப் ''அதெல்லாம் வேணாம் டாக்டர் நான் தூங்கிட்டா புள்ளைங்க பயப்படும்''என்றான்
ஆனால் எப்படியோ தூங்கி விட்டான்.நடு இரவில் விழித்தபோது ஏதோ
ஒரு வார்டில் இருந்தான்.பக்கத்து படுக்கையில் சகாவு
படுத்திருந்தார்.நன்றாக உறக்கத்தில் இருந்தார்.கொஞ்ச நேரம் அவரையே
பார்த்தபடி அமர்ந்திருந்தான்.வார்டின் எல்லா
விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து
கொண்டிருந்தது.எங்கோ யாரோ வேதனையில் முனகும் ஒலி  மட்டும்.பிலிப் எழுந்து
வெளியே வந்தான்.ட்யூட்டி அறையில் பைல்களின் மீது தலைவைத்து சாய்ந்திருந்த
அரைத் தூக்க நர்ஸ் நிமிர்ந்து பார்த்து ''எங்கே ?''என்றாள் .பிலிப்
''ஒண்ணுக்கு ''என்றான்.

பிலிப் மெதுவாக கீழே  இறங்கி பிண  அறை என்று போட்டிருந்த அந்த அறையை
நோக்கிப் போனான் பூட்டியிருந்தது.பெரிய புங்க மரத்தின் நிழலில் மௌனமாக
இருந்தது.வெளியே இருந்த  டீக்கடையிலிருந்து மட்டும் பெட்ரோ மக்ஸ் விளக்கின்
புஸ்சென்று சத்தம் வந்ந்து கொண்டிருந்தது.மற்றபடி மௌனம்.பிலிப்
சுற்றிவந்து ஒவ்வொரு சன்னலாய் முயற்சித்துப் பார்த்தான்.கண்ணாடி
சன்னல்கள்.உள்ளே ஒன்றும் தெரியவில்லை.''விளக்கு போடச் சொன்னேனே ?அந்த
தாயோளியிடம் ?'ஒரு கணம் கடும் கோபம் வந்து.பிலிப் லேசாக ஒரு சன்னல்
கண்ணாடியைத் தட்டி ''லில்லி?''என்றான் ''லில்லி ?தேவ மலர் ?நான்தான்
அப்பா...டா ..''என்று சொல்லிப் பார்த்தான்

பதிலில்லை.பிறகு இன்னொரு சன்னலுக்கு நகர்ந்து சன்னல் கண்ணாடியோடு
முகத்தை ஒட்டி வைத்துக் கொண்டு 'பேடிக்காத மக்களே..நான் இங்கேதான்
இருக்கேன் ''

சற்று நேரம் அங்கே அப்படிய ஏதோ ஒரு சங்கீதத்தை உற்றுக் கேட்பது போல
நின்றான்.இப்போது அந்த வார்டு நர்சு மாடிப்படி உச்சியில் நின்று தன்னைத்
தேடுவதைப் பார்த்தான். சரி போகலாம் என்று மீள்கையில்தான் அந்த சத்தத்தைக் கேட்டான்
உள்ளிருந்து.என்ன சத்தம் அது ?எதுவோ நகர்வது போன்ற சத்தம்.கிசுகிசுப்பு
போன்ற சத்தம்.ஒரு விளி போன்ற சத்தம்.பிலிப் மிகுந்த ஆவேசத்துடன் ஓடி ஒரு
பெரிய கல்லை எடுத்து சன்னலை உடைக்க ஆரம்பித்தான்.






திண்டுக் கல்லில் இறங்கும்போதே மதியமாகியிருந்தது.பாதர் வண்டி அனுப்பி
இருந்தார்.ட்ரைவர் ''இருட்டறதுக்குள்ள மலை ஏறிடணும் சார்.கொடைக்கானலுக்கு
மேலே பத்து கிலோ மீட்டர் போகணும் ''என்றான்


பியூலாவை வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.சில நாட்களிலேயே ப்யூலாவின்
உடல்மொழி ஒரு சிறுமியைப் போல மாறிவருவதைக் கவனித்தான்.கண்ணை மூடிக்
கொண்டு கேட்டால் சில நேரங்களில் அவளது குரல் லில்லியின் குரல் போலவே
ஒலித்தது .போகும் வழியெங்கும் அவள் காரில் ஒரு சிறுபெண் போலவே சுருண்டு
தூங்கினாள் .லேசாக வாய் பிளந்து சிறிய மகள் தேவ மலர் போலவே ...




கொடைக்கானலில் ட்ரைவர் வண்டியை நிறுத்தினான்.''சார் டீ
சாப்பிட்டுக்கலாம் ''ப்யூலா  இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்
.ரெஸ்டாரண்டில் அந்த வெள்ளைக்காரர்  அமர்ந்திருந்தார் .அவனைப்
பார்த்ததும் ' கையசைத்து ''ஹலோ...மறுபடியும்....''என்றார்.அவர்
பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரி நெருக்கமாக இருக்க அவர்கள் நடுவில் பூக்கள்
சிதறிய கவுன் அணிந்து வைக்கோல் நிறத்தில் தலைமுடியும் இரட்டை சடையும்
சற்றே பெரிய பற்களுமாய் ஒரு சிறுமி இருந்தாள் .அவளது வெளுத்த சருமத்தில்
மருதாணிப் புள்ளிகள் போல வெயில் கன்றல்கள் .அவள் ஒரு ஐஸ் க்ரீம் கூம்பை
தின்று கொண்டிருந்தாள் .பிலிப் செலுத்தப் பட்டவன் போல அவர்களை நோக்கிப்
போனான்.வெள்ளைக்காரர் எழுந்து அவனுக்கு ஒரு நாற்காலியைக் கொடுத்தார்
.''காபி ?"'

அவன் சரி ''என்றான்.அந்த சிறுமி மிகக் கவனமாக ஐஸ் கிரீமை
தின்றுகொண்டிருந்தாள்.அப்போது அவள் முகத்தில்  காணப்பட்ட தீவிரம் சாதாரண
நேரங்களில் புன்னகையை வரவழைக்க் கூடியது.தேவ மலரிடமும் அவன் இதே  போன்ற
ஒரு மனக் கூர்மையைப் பார்த்திருக்கிறான்.குழந்தைகளுக்கே உரிய
தீவிரம்.அவளால் ஒரு எறும்பை  ஒரு நாள் முழுவதும்  பார்த்துக் கொண்டே
நிற்க முடியும்.

வெள்ளைக்காரர் திடீரென்று ''இங்கே பட்டாம்பூச்சிகளைப் பார்க்க வந்தோம் ''என்றார்


பிலிப் ''என்ன ?''என்றான்
''பட்டாம்பூச்சிகள்.பட்டாம்பூச்சிகள் பற்றி உங்களுக்கு ஏதாவது  தெரியுமா ?"'

அவன் ஒரு இயந்திரம் போல ''தெரியும் உலகத்தின் மிக அரிதான பட்டாம்பூச்சி
பாலோஸ் வெர்டிஸ் .கலிபோர்னியாவில் இருக்கிறது .உலத்தின் மிக அழகான
பட்டாம்பூச்சி மயில் பட்டாம்பூச்சி எனப்படும் Banded butterfly .இங்கே
இந்தியாவில் கொடைக்கானலில் இருக்கிறது ''

அவர் ''அற்புதம் ''என்றார் .அவன் எழுந்து வெளியே வந்து காருள் ஏறிக்
கொண்டான்.''போகலாம் ''


கொடைக்கானலில் அன்று அவ்வளவு பனி இல்லை.தூரத்தில் மலை முகடுகள் தெளிவாக
தங்கக் கோபுரங்கள் போல தெரிந்தன.ட்ரைவர் ''அம்மா முழிக்கவே இல்லை
''என்றான்.வண்டி மெதுவாக சுற்றுலாப் பயணிகள் ஊடே நகர்ந்தது.சிகப்பு பீச்
ப்ளம் பழங்கள் தள்ளுவண்டிகளில் குவிக்கப் பட்டிருந்தன.அவற்றை ஸ்வெட்டர்
அணிந்த பெண்கள் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள் மலைப்பாதை
சட்டென்றுஉயர ஆரம்பித்தது''இப்படியே போனா மூனாறு போயிடலாம் சார்.வெள்ளைக்
காரங்க போட்ட ஒரு ரோடு இருக்கு.இப்போ விட மாட்டாங்க ''. பிலிப்
சுற்றிலும் விரிகிற பசுமையைப் பார்த்துக் கொண்டே வந்தான்.வண்டியை இப்போது
பெரும்பாலும் முதல் இரண்டு கியர்களிலேயே ஓட்ட முடிந்தது.வண்டி
திணறியது''இதான் சார் குணா படத்தில வருகிற குகை .சின்ன வயசில இங்கே வந்து
விளாண்டிருக்கேன்.கொஞ்சம்  பசங்க இங்கே வந்து செத்துப் போனதிலிருந்து
இங்கேயும் விடறதில்லை '' பிலிப் வெளியே எட்டிப் பார்த்தான்.'பிசாசின்
சமையலறை 'என்றொரு கைகாட்டி சொல்லியது.அதன் மேல் ஒரு குருவி மெளனமாக
தாடையை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தது'' வண்டி ல கொஞ்சம் வேலை இருக்கு
சார் ''என்றார் ட்ரைவர் ''சாமிட்டே சொல்லிட்டே இருக்கேன் ''
பியூலா பின் சீட்டில் எழுந்து ''தலை சுத்துது ''என்றாள் .ட்ரைவர் ''இப்போ
வந்துடும்மா ''என்று சொன்ன கணத்தில் வண்டி சட்டென்று ஒரு குலுக்கு
குலுக்கி நின்றுவிட்டது

சற்று நேரம் வண்டியிலேயே அமர்ந்து பார்த்து விட்டு பிலிப்  கீழே
இறங்கினான் .ட்ரைவர் பானட்டிலிருந்து வியர்வை மினுங்கும் முகத்துடன்
நிமிர்ந்து பார்த்து ''பெரிய பிரச்சினையா இருக்கும் போல சார் ''என்றான்
பரிதவிப்புடன்

பிலிப் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்
பிறகு செல்போனை எடுத்து பார்த்தான் டவர் சுத்தமாக இல்லை.''இங்கே டவர்
கிடைக்காது சார் .ஒன்றரை கிலோ மீட்டர் தாண்டி பாரஸ்ட் செக் போஸ்ட்
இருக்கு அங்கேதான் கிடைக்கும் ''

''இப்போ என்ன பண்றது ?''என்றாள் ப்யுலா.அவள் கண்கள் இடுகி சிறுத்திருந்தன.


ட்ரைவர் ''தப்பா நினைச்சிக்கலைன்னா ஒன்னு சொல்லவா ''என்றான் ''வண்டியை
இப்படியே விட்டுட்டு வர முடியாது.ஏதாவது லாரி பிடிச்சி கொடைக்கானலுக்கு
போய் மெக்கானிக்க கூட்டிட்டு வரணும்.உங்களால ஒரு கிமீ நடக்க முடியுமா ?"'

பிலிப் ப்யூலவை பார்த்தான்.அவள்  சரி என்றாள் ''எனக்கும் நடக்கணும்
போலத்தான் இருக்கு ''

''இப்படியே நடந்தீங்கன்னா ஒரு கிமீட்டர்ல பாரஸ்ட் செக்போஸ்ட் வரும்.அங்கே
சிக்னல் கிடைக்கும்.அங்கிருந்து பாதருக்கு போன் பண்ணுங்க.அவரே வந்து
கூட்டிட்டுப் போவார் ''என்றான் பிறகு தயங்கி ''போயிடுவீங்க இல்லே..நான்
வரணுமா ?"'

பிலிப் ''போயிடலாம் ட்ரைவர் நேர் ரோடுதானே .தவிர க்ளைமேட்டும் தெளிவா இருக்கு ''


அவர்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.வானம் தெளிவாக இருந்தது.ட்ரைவர்
அங்கே நின்று கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தான்.வளைவில் ஒருமுறை பிலிப்
திரும்பிப் பார்த்து கை அசைத்தான்.ட்ரைவர் அப்படியே போங்க என்பது போல
கையை ஆட்டினான்.பிறகு பார்வையிலிருந்து தொலைந்து போனான்

காற்றில் இப்போது சட்டென்று குளிர் ஏறத் தொடங்கியதை பிலிப்
கவனித்தான்.ப்யுலா முதல் முறையாக ''''குளிருது என்றாள் ''ஸ்வெட்டரை
வண்டிலேயே விட்டுட்டு வந்துட்டோம் ''

பிலிப் ''இதோ வந்துடும் ''என்றான்

குளிர் மட்டுமல்ல இப்போது வானம் சட்டென்று அடர்ந்து இருட்டுவதையும்
பிலிப் கவனித்து ''இங்கே சட்டுன்னு வெதர் மாறிடுதே ''பியூலா நெருங்கி
அவனை அனைத்துக் கொண்டாள் .அவள் கண்கள் இப்போது நன்கு
திறந்திருந்தன.அவற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெளிவு திரும்பி
இருப்பதை அவன் கண்டான்.அவை நீரால் நிரம்பி இருந்தன.''பிலிப்பு லில்லி
இங்கே வரணும்னு கேட்டா நினைவிருக்கா ''என்றாள்

பிலிப்பின் உடல் வாளால் ஊடுருவியது போல அதிர்ந்தது .அவளை நன்கு அணைத்துக்
கொண்டான் .

இப்போது இருட்டு நன்கு முற்றி இருந்தது.மேகங்கள் கருத்த பட்சிகள்  போல
தரைக்கு இறங்கத் துவங்குவதை அவர்கள் கண்டார்கள்.பறவைகளின் சத்தம்
வெளியில் முற்றிலுமாக நின்று ஒரு கனத்த அமைதி அங்கே சூழ்ந்துகொண்டது
.பத்தடிக்கு அப்புறம் உள்ள பொருட்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
பணிப்புகைக்குள் புதைந்து போயின.சூரியன் இருந்த இடத்தைக் காணவே
இல்லை.பிலிப் மணி பார்க்க முயன்றான்.அதன் கண்ணாடி முழுவதும் பனியால்
மூடப்பட்டிருந்தது

அவர்கள் தடுமாறி தடுமாறி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு நடந்தார்கள்.ஒரு
கட்டத்தில் ஒளி முற்றிலுமாகவே நிலத்தின் மீதிருந்து விலக்கிக்
கொள்ளப்பட்டு இருள் ஒரு ஊற்று போல சுரந்து சுரந்து பூமியை
நிரப்பியது.பியூலா ''பிலிப் ''ன்றாள் பிலிப் கைபேசியை உயிர்ப்பித்து
அதிலிருந்த டார்ச்சை ஏற்ற முயன்றான் .அதன் திரை உறைந்து நகர
மறுத்தது.பிலிப் ''பயப்படாதே ப்யூலலா ஒரு கிமீ தானே சொன்னான்.இப்படியே
போனா வந்துடும்.கொஞ்சம் விரசலா நட ''என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
நிலவு ஒரு பெரிய பந்து போல அவர்கள் மீது எழுந்தது.அவ்வளவு பெரிய நிலவை
அவன் பார்த்ததே இல்லை . அது திடீரென்று வானில் எழுந்த வேகமும் வியப்பை
அளிக்கக் கூடியதாக இருந்தது.வானில் ஏறக்குறைய செலுத்தப்பட்டது போல அது
ஏறிக்  கொண்டே போய்  சரியாக அவர்கள் தலை மீது அது நிலைத்தது.

இப்போது ஒரு வினோதமான வெளிச்சம் பூமியின் மீது  படர்ந்தது.வழக்கமாய்
நிலவு சுரக்கும்  வெள்ளி வெளிச்சமோ தங்க வெளிச்சமோ அல்ல அது.ஒரு மாதிரி
மண் நிறத்தில் பழுப்பு வெளிச்சம்.அந்த வெளிச்சத்தில் கை ரேகைகளைப்
பார்த்தால் ரத்த நிறத்தில் தெரிந்தது...இப்போது அவர்கள் முன்பு பாதை
மிகச் சரியாக இரண்டாகப் பிரிந்து கிடந்தது.அவர்கள் ஒருகணம் திடுக்கிட்டு
நின்றார்கள் .ட்ரைவர் இந்த பிரிவு பற்றி எதுவுமே சொல்லியிருக்கவில்லை.

குளிர் இப்போது எலும்பைத் துளைக்கிற அளவுக்கு இருந்தது.பியூலா தன்னை
அறியாமல் நடுங்கினாள் .பிலிப் புதர்களில் இருந்து அடையாளம் காண முடியாத
சலசலப்புகள் கேட்டன. ஒரு புதர் சட்டென்று தீப்பந்தம் போல ஒளிர்ந்து
அணிவதைப் பார்த்தான்.எங்கோ ஆந்தை ஒன்றின் கூச்சலும் சிறகடிப்பும் கேட்டது
காற்று ஊளையிடத் துவங்கியது பிலிப் ஒரு முடிவெடுத்தவனாக ப்யூலா வை
இழுத்துக் கொண்டு வலது  பக்க பாதையில் திரும்பினான் .அந்தப் பாதை
முழுவதும் யூகலிப்டஸ் மரங்களும் தேவதாரு மரங்களும்
அடர்ந்திருந்தன.யூகலிப்டஸ் மரங்களின் உச்சியில் மாறி மாறித் தங்கும்
நிலவும் இருட்டும் முதுகந்தண்டில் வினோத அதிர்வைக் கொடுத்தது.மருந்துக்கு
கூட  ஆள் நடமாட்டம் இல்லாது பாதை ஹோ என்று   தனித்திருந்தது.எங்கோ
கிளிகள் கிறிச்சிடும் ஒலிகள் மட்டுமே கேட்டது.புதர்களில் நெருப்புத்
துண்டங்கள் போல் ஒளிப்பொட்டுகள் பிரகாசிப்பது போல்
பார்த்தான்.ஓநாய்கள்?ச்சே .கொடைக்கானலில் ஏது ஓநாய்கள்?மின்மினிப்
பூச்சிகளாக இருக்கக் கூடும்.

தலைக்கு மேலே ஹூம் என்றொரு பெரிய ஊங்காரம் கேட்டது.அவர்கள் நிமிர்ந்து
பார்த்தார்கள்.ஒரு பெரிய பருந்து. ?ஏறக்குறைய மூன்றடி இருக்கக் கூடிய
ராட்சதப் பருந்து மரத்து மேல் அமர்ந்திருந்தது அதன் கனம்  தாங்காமல்
மரக்கிளை முனகுவதை அவர்கள் கேட்டார்கள்.பருந்தாய் இருந்தாலும்  அதன்
முகம் ஒரு வௌவாலின் முகமே இருந்தது.ஒரு வவ்வாலின் பழுத்த நாவல் பழம்
போன்ற கண்கள்

அவர்கள் வழி தவறி விட்டோம் என்று இன்னும் சற்று தொலைவு போன பிறகே
உணர்ந்தார்கள் பியூலா நடுங்கி ''திரும்பப் போயிடலாம் பிலிப் ''என்றாள்
.ஆனால்  அந்தப் பருந்து இப்போது மரத்திலிருந்து இறங்கி அவர்களது பாதையின்
நடுவில் நின்றிருந்தது.இப்போது அது இன்னமும் வளர்ந்து விட்டது போலத்
தோன்றியது.ஏறக்குறைய ஒரு சிறிய மனிதனின் உயரம்.அது அஅது வர்களை நோக்கி
நடந்து வர முயல்வதைப் போல இருக்க அதன் கால்கள் பறவையின் கால்கள் போல
அல்லாமல் ஒரு ஆட்டின் குளம்புகள் போல இருப்பதை பிலிப் கவனித்தான்.ப்யூலா
ஏறக்குறைய ஒரு வீறலாய் ''கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார் ''என்று
சத்தமிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்

இப்போது அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்டார்கள்.ஒரு பெருங்காற்று அடிப்பது
போல சத்தம்.கணவாயில் காற்று புகுந்து வருவது போல சத்தம்ஆரல்வாய்மொழிக்
கணவாயில் அவன் அது போன்ற சத்தத்தைக் கேட்டிருக்கிறான்..ஊஊஊம் என்று ஒரு
ஆழமான கார்வை கொண்ட ஒலி .அவர்கள் ஏறக்குறைய அந்த சத்தம் வரும் திசை
நோக்கி ஓடினார்கள் ஓடியோடி அவர்கள் அந்த மலை விளிம்பை அடைந்தார்கள் .
அங்கு அவர்களுக்கு கிடைத்த காட்சியை விவரிக்க பிலிப்பால் முடியவேயில்லை
என்று பின்னால் பாதிரியார் சொன்னார்.

அங்கு அவர்கள் கண்டது ஒரு பெரிய பள்ளத்தாக்கு.பள்ளத்தாக்கு முழுவதும்
பல்வேறு நிறங்களில் ஒளிரும் ரத்தினங்கள்.நகைகள் .ஆம் முதலில் அவர்கள்
அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் அவை ரத்தினங்களோ நகைகளோ அல்ல.அவை
அசைந்து கொண்டிருந்தன.பிலிப் சற்று முன் நகர்ந்து மலை விளிம்பிலிருந்து
பார்த்தான்.அவை ஒவ்வொன்றும்  மினுங்கி மினுங்கி ஒரு இருதயம் சுருங்கி
சுருங்கி விரிவது போல ஒளி  விட்டுக் கொண்டிருந்தன.காற்று முழுவதும் அந்த
ஓங்காரச் சத்தம் கேட்டது,இப்போது அது அதன் அச்சுறுத்தும் தன்மையை இழந்து
மென்மையாக  கம்பீரமாக இருந்தது.இப்போது நிலவொ ளியின் நிறம் மாறி
விட்டிருந்ததையும்  அவர்கள் கவனித்தார்கள்.அது உருக்கிய நெய் போன்ற பொன்
நிறத்தில் வழிந்து பரவிக் கொண்டிருந்தது.ப்யூலா ''கீழே பாரு பிலிப்
''என்று கத்தினாள் .பள்ளத்தாக்கு முழுவதும் பளிங்கு போன்ற நீர் நிரம்பி
இருப்பதை அவன் அப்போதுதான் கவனித்தான்.அது மிகச் சிறிய தளும்பும்
சத்தங்களோடு அசைந்துகொண்டிருந்தது.அதனுள்ளே வானவில்லின் அத்துணை
நிறங்களிலும் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.பியூலா அதை உற்றுக் கவனித்து
''மீன்களல்ல,பட்டாம்பூச்சிகள் !''என்று கத்தினாள் நீந்தும்
பட்டாம்பூச்சிகள் !

அவள் குரல் கேட்டதும் சட்டென்று அந்த நீந்தும் பட்டாம்பூச்சிகள் பெருங்
கூட்டமாக  நீரிலிருந்து எழுந்து வானத்தில் பறந்தன.காற்றில் அவை
பறக்கும்போது வளையல்கள் கினுங்குவது போன்ற ஒரு இசை  ஏற்பட்டது அவை
வானத்தின் உச்சி வரைக்கும் போய்  ஏறி  பின்பு கீழே  வந்தன.ஒரு கட்டத்தில்
அவை நிலவு முழுவதையும் மொய்த்துக் கொண்டது போல மறைத்துக்
கொண்டன.வெளியெங்கும் ஒரு கனத்த மவுனம் நிரம்பியது.பிறகு அவை  மிகுந்த
வேகத்துடன் திரும்பி கீழே திரும்பி வந்தன.அவற்றின் வேகம் பிரமிக்கத்
தக்கதாய் இருந்தன.அதே வேகத்துடன் அவை தலை கீழாக
நீருக்குள் பாய்ந்தன.அப்போது பள்ளத்தாக்கில் இருந்த நீரிலிருந்து
குழந்தைகள்  முலை சப்புவதைப் போன்ற ஒரு சத்தம் ஏற்பட்டது

ப்யூலாவும் பிலிப்பும் பிரமிப்புடன் மலை  விளிம்பு வரை சென்று குனிந்து
கீழே நீரில் வெட்டி வெட்டி திரும்பி நீந்தும் பட்டாம் பூச்சிகளைக்
கவனித்தனர்.


பிறகு பிலிப்தான் முதலில் அவற்றை பார்த்தான்
இரண்டே இரண்டு பட்டாம்பூச்சிகள் மட்டும் நீருக்குள் பாயாமல் வானிலேயே
துடித்துக் கொண்டிருந்தன.இரண்டுமே சிறிய ஒளிரும் மயில் பட்டாம்பூச்சிகள்
.அவை மெல்ல அவர்கள் தலை மேலிருந்து இறங்கி அவர்கள் முன்பு வந்து
சிறகடித்த வண்ணமே நின்றன.அவை சிறகடிக்கும் ஓசையை மட்டும் அவர்கள்
துல்லியமாகக் கேட்டார்கள்.ஒரு கணம் அவை பறப்பதை நிறுத்தி  அந்தரத்திலேயே
நிற்பது போல நின்றன.எதையோ எதிர்பார்த்து நிற்பது போல..

சற்று நேரம் அங்கே ஒரு ஆழ்ந்த மவுனம் நிலவியது

அந்த  ஒரு கணத்தில் ப்யூலா அவர்களைக் கண்டு கொண்டு ''மக்களே! ''என்று
கதறினாள் ''மக்களே லில்லி தேவமலர்! ''


என் குறிப்பு

பிலிப்பின் கதையை நான் என்னுடைய வாழ்வின் மிக துக்கமான தருணம் ஒன்றில்
கேட்டேன்.பாதர் தோமஸ் அந்தக் கதையை என்னிடம் சொன்னதற்கு அதுவே ஒரு
காரணமாகவும் இருக்கக் கூடும்.ஒரு சிகிச்சை  போல.நாங்கள் இருவருமே சற்று
மது அருந்தி இருந்தோம்.பாதரின் பங்களா வராண்டாவில் வனம் இரவில் எழுப்பும்
ஓசைகளைக் கேட்டவாறு அமர்ந்திருந்தோம்.சங்கப் பாடல்களில் சொல்வது போலவே ள்
ளென்று இரையும் யாமம்.

நான் ''அந்த இரவு அந்தப் பள்ளத்தாக்கில் அவர்களுக்கு என்ன நடந்தது பாதர் ?''என்றேன்
அவர் தனது சிவந்த கண்களைத் திருப்பி என்னைப் பார்த்து ''நீ என்னை நினைக்கிறாய் ?""

நான் தயக்கமே இல்லாமல் ''பிரமை.delusion ''என்றேன் ''அவர்கள் அடைந்தது
ஒரு தீவிரமான மன உடைவு ''

அவர் பேசாதிருந்தார்

நான் சற்று சினத்துடன் ''நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?அது கர்த்தர்
காட்டிய ஒரு அடையாளம் என்றா ?''என்று கேட்டேன்.''அல்லது அந்த
மலைதெய்வத்தின் செய்தி ?''

அவர் சிரித்து ''எது உண்மை என்பது இருக்கட்டும..அது கடவுளின் வெளிப்பாடு
என்ற விஷயம் ஏனுனக்கு இவ்வளவு கோபத்தை அளிக்கிறது ?''

நான் ''ஏனென்றால்.... ஏனென்றால் ...''என்று தடுமாறினேன் ''ஏனென்றால் அது
ஆபாசமானது . அது கடவுளாகவே இருந்தாலும் இரண்டு ரத்தமும் சதையுமான
உயிர்களைப் பறித்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு பிரமையை அளிப்பது ''

அவர் எழுந்து அங்குமிங்கும் கொஞ்சம் நடந்தார்.பிறகு மீண்டும் உட்கார்ந்து
இன்னொரு பெக்  ஊற்றிக் கொண்டார்


''பிலிப்பும் அவன் மனைவியும் மூன்று நாட்கள் இங்கு வரவே இல்லை நாங்கள்
வனத் துறை யின் உதவியோடு மலையெங்கும் தேடினோம்.கிடைக்கவே இல்லை சலித்துக்
கைவிட்டோம்.நான்காம் நாள் காலையில் கதவு திறக்கும்போது இருவரும் நாம்
அமர்ந்திருக்கும்  இதே திண்ணையில் அமர்ந்திருந்தனர்.என்னைக் கண்டதும்
பிலிப் எழுந்து வந்து ஸ்தோத்திரம் பாதர் என்றார் .நான் அவர்களிடம் எங்கு
போயிருந்தீர்கள் என்று கேட்டேன்.அவர் சிரித்து ''எங்கள் மகள்களிடம்
''என்று சொன்னார் .அவ்வளவுதான்.அதன்பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத்
திரும்பவில்லை.மறுவாரமே இங்கே பிலிப் சிறிய அளவில் ஒரு பட்டாம்பூச்சிப்
பூங்காவை உருவாக்க ஆரம்பித்தார்.பட்டாம்பூச்சிகள் பற்றிய அவரது அறிவு
வியக்கத்தக்கதாக இருந்தது.சில வருடங்களிலேயே அவரது பூங்கா பெரிய அளவில்
விரிவாக்கப்பட்டது.எங்கிருந்தெல்லாமோ அவருக்கு உதவிகள் வந்து
குவிந்தன.இன்று தென்னகத்தின் பெரிய பட்டாம்பூச்சிப் பண்ணையாக இது
இருக்கிறதுஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சி இனங்கள் இங்கு
இருக்கின்றன.வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இதைப் பார்க்க மனிதர்கள்
வருகிறார்கள்.போன மாதம் டிஸ்கவரி சானலில் இருந்து  ஒரு ஆவணப்படத்துக்காக
வந்து போனார்கள் ''என்றார் .பிறகு நிறுத்தி என்னை உற்றுப் பார்த்து
''நீங்கள் சொல்கிற அந்த மனப் பிரமை அவரைக் காப்பாற்றி விட்டது
.ஆயிரக்கணக்கான அரிதான பட்டாம்பூச்சி இனங்களையும் ''என்றார் ''காலையில்
பட்டாம்பூச்சிகள் சிறிய மேகம் போல அவரைப் பின்தொடர அவர் மலைக்குள் நடை
போவதை நீங்கள் காணவேண்டும் ''

நான் திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன் பிறகு

''அவர் தனது மகள்கள் பற்றி எப்போதாவது பேசுவதுண்டா ?''

பாதர் எழுந்து தனது கச்சையைத் தளர்த்திக் கொண்டு ''உண்டு ''என்றார்

''ஆனால் எப்போதும் நிகழ் காலத்தில் .இறந்த காலத்தில் அல்ல ''

LinkWithin

Related Posts with Thumbnails