Thursday, November 25, 2010

ஒரு வாளின் வீர கதா..

இன்னுமொரு முறை
காதல்
மறுக்கப்பட்ட
ஒரு சாம்பல்நாளில்
கடலோரம்
இன்னுமொரு முறை
தற்கொலையைப் பற்றி
சிந்தித்துக் கொண்டிருந்தபோது
அந்த வாள் கிடைத்தது
மாமிச  வீச்சம் அடிக்கும்
மிருகத் தோல் உறையுடன்
முனையில் உலர்ந்த
உதிரக் கறையுடன்

அன்றிரவு அவனுடன்
அவன் படுக்கையில்
அதுவும் உறங்கியது
ஆண்குறியை
சதா சீண்டிக் கொண்டிருக்கும்
விடலைப் பையன் போல
அவன் அதை தொட்டுக் கொண்டே இருந்தான்
அல்லது இரவோடு இரவாக
தன்னைவிட்டு ஓடிவிடக் கூடும்
துரோக மனைவியைக்
கண்காணிப்பது போல
உளவு பார்த்துக் கொண்டே இருந்தான்
ஆனால் அது அங்கேதான் இருந்தது
அலுவலகம் செல்ல
அவன் ஆயத்தம் ஆகையில்தான்
அது பேசியது
தன்னையும் அழைத்துச் செல்லும்படி ...
அலுவலகத்தில் அதை
அனுமதிப்பார்களா  என்று
அவன்  முதலில் தயங்கினான்
ஆனாலும் அது விடாது வற்புறுத்தவே
கொண்டு போனான் 
பேருந்தை நடத்துபவன் 
பாதியிலேயே இறக்கிவிட
நடந்தே வேலைக்குப் போனான் 
அலுவலகத்திலும்
அது சும்மா
இருக்கவில்லை
அவனறியாது
பக்கத்து இருக்கையில் இருந்தவனை
குத்திப் பார்த்ததில்
மேல் அதிகாரியிடம்
அழைத்துச் செல்லப்பட்டான்
அங்கும்  அவன்
மன்னிப்ப்பு
கேட்பதற்குள்
அது  போரை அறிவித்துவிட்டது 
பணியிடை நீக்க  உத்தரவுடன்
படியிறங்கி
குடிக்கப் போன இடத்தில்
கலகமாகி கைது செய்யப் பட்டான்
தவறு அவனுடையதல்ல என்று
அவன் எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை
அவர்கள் யார் கண்ணுக்கும்
அது தெரியவில்லை
விடுதலை ஆனதும் 
போன இலக்கியக் கூட்டத்திலும்
அவனது வாள்
அறச் சீற்றம்
பிடித்து அலறியதில்
மூக்கில் குத்தப் பட்டு
புறக்கணிப்பின் மூலைக்கு
தள்ளப் பட்டான்
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் வாழ்வை அது
வாழத் தொடங்கி இருக்கிறது
என்பதை அவன்
உணர்ந்தபோது
காலம் தாமதமாகி இருந்தது
மூன்று நாட்கள்
இரவும் பகலும்
விடாது
அவன் அதனுடன்
பேசிக் கொண்டிருப்பது பார்த்து
அவன் வீட்டார் கொண்டு போன
மருத்துவர்தான்
அவனது பிரச்சினையைப் புரிந்து கொண்டார்
அவர் கண்ணுக்கு மட்டும்
இந்த வாள் எப்படி தெரிந்தது
என்று அவன் கேட்டதற்கு
ஒவ்வொருவர் ஆன்மாவிலும்
குத்தி  நிற்கும் வாள்களைப்
பார்க்கும் சிறப்புப் பயிற்சி
தனக்கிருப்பதாக சொன்னார்
அவனது வாளை வாங்கிப் பார்த்துவிட்டு
இது சங்க காலத்திய வாள் என்றார்
ஒன்று இது தட்டானிடம் இருக்கவேண்டும்
அல்லது போர் வீரனிடம்
நீ இரண்டுமே இல்லை
உனக்கு  இது சரிப்படாது  என்றார்

அதன் முனையில் இருப்பது
பெரும்பாலும்
அதை வைத்திருந்தவர் உதிரமே
உடனே இதைத் தொலைத்துவிடு என்றார்
அன்றிரவு அவனும் அவரும்
அது கிடைத்த இடத்திற்கே போய்
அதை கடற்கரை மணலில்
புதைத்துவிட்டு வந்தார்கள் 

அன்றிரவு  அவன்
நிம்மதியாக உறங்கினான்
விடிகாலை எழுந்து
நெடுநாள் அறிந்திராத
சுதந்திர உணர்வுடன்
காலை நடை போக தீர்மானித்து
காலணிகளை மாட்டும்போது தான்
கவனித்தான்
ஈர ஓசோன் வீச்ச
மணலுடன்
மெலிதான மூச்சிரைப்புடன்
அவனுடன் நடை போக
காத்திருந்த அவன் வாளை.....

3 comments:

  1. கவிதையின் முடிவு புன்னகைக்க வைத்தது. தொட்டதெல்லாம் தொடரும். மலையாள வாசனை தலைப்பில்.

    ReplyDelete
  2. வடக்கன் வீர கதா!!!
    குத்திக் கிளப்புகிறது... நன்று ;-)

    ReplyDelete
  3. மெடபோர் புரிகிறது. (புரிகிற மாதிரி தோன்றுகிறது)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails