Saturday, August 27, 2016


நாகப்படம்

நாகப்படம்

1




ஒரு நாள் தனியாக மார்த்தாண்டம் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் என் அருகே வந்து அமர்ந்தார்.நல்ல உயரம்.தாடி.அந்தப் பகுதிகளில் ஓரளவு அறியப்பட்டவர்.ஓவியர்.சிற்பி.மலையாளப்படங்கள் சிலவற்றில் பணி புரிந்திருக்கிறார்.அவரை அங்கே பார்த்ததுண்டு.பேசியதில்லை


சற்று நேர மவுனத்துக்குப் பிறகு ''உங்களுக்கு என்னாயிற்று உடம்புக்கு ?"'

''தெரியவில்லை multiple sclerosis என்று சந்தேகப்படுகிறார்கள் ''

''அப்படிஎன்றால் ?''

''ஒருவகையான auto immune நோய்.உங்கள் உடலே உங்களைத் தாக்கும் ''
அவர் ''ஆ!''என்றார் ''நான் ஒரு படம் பார்த்தேன்.அதில் உங்கள் கையே உங்களைத் தாக்கும் ''

''Alien hand syndrome''

''இதற்கு மருத்துவம் என்ன ?''

''அவ்வளவு சக்தியாக இதற்கு இல்லை ''

''இந்த நோய் என்ன செய்யும்?"'

''எது வேண்டுமானாலும் .உங்கள் உடலே உங்கள் எதிரியாக மாறிவிடும்போது எது நிகழாது ?""

அவர் ''சரிதான்''

அவருக்கு நல்ல ஆகிருதியான உடம்பு .அவரது கைகளில் ரோமங்கள் அடர்ந்திருந்தன.அவை காலைப் பொன்வெயிலில் வியர்வையில் மினுமினுத்தன.ஒரு சிறிய எறும்பு அந்த ரோமக் காட்டுக்குள் திணறுவதைப் பார்த்தேன்.அவர் அதைப் பத்திரமாகப் பொறுக்கி வெளியே விட்டார்


''நேற்று நீங்கள் கால்பந்து விளையாடுகிறவர்களைப் பார்ப்பது உங்கள் நோயைச் சாந்தப்படுத்துகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்''

நான் ''ஆமாம்.ஆரோக்கியமான உடல்களைக் காண்பது ''என்றேன் ''ஏதோ ஒரு வகையில் என்னைச் சமனப் படுத்துகிறது ''

அவர் என்னிடம் கைகளை நீட்டி ''என் பெயர் ............ஒரு ஓவியன் ''என்றார்


2

மறுநாள் நான் போகவில்லை.என் உடம்பு அதிகமாகி விட்டிருந்தது

அடுத்த நாள் போனேன்.அவர் ஏறக்குறைய அதே இடத்தில் எனக்காகக் காத்திருப்பது போல இருந்தார்

''ஆமாம் ஆரோக்கியமான உடல்களைக் காண்பது நல்ல ஒரு சிகிச்சையாக இருக்க முடியும் ''என்றார் .''மேற்கில் நிர்வாண உடல்கள் ஒரு சிகிச்சையாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள்''


நான் ''ஆமாம்.ஆப்ரஹாம் மாஸ்லோ கூட அது பற்றி பேசியிருக்கிறார் .என்று நினைக்கிறேன் ''

அவர் சற்று நேரம் எதையோ தீர்மானிக்க முயல்வது போல அவருடைய தடித்த கண்ணாடியைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்.பிறகு ''நான் பத்து வயதிலிருந்து வரைகிறேன்.செதுக்குகிறேன் ''என்றார் ''காயாங்குளம் .......பணிக்கர் தெரியுமா ?"'

நான் தெரியாது என்றேன் ''எனது குரு .அவர்தான் எனக்கு எல்லாம் பயில்ப்பித்தார்.எங்கள் வீட்டில் ஒன்பது பிள்ளைகள்.ஒருத்தருக்குக் கூட அரை வயிற்றுக் கஞ்சி கிடையாது.என் அம்மா அவரிடம் நீங்கள் இவனை வளர்த்தாலும் சரி வெட்டினாலும் சரி என்று விட்டுவிட்டார்.குரு என்னை ஒருமுறை அருகே அழைத்து என் கைகளை விரித்துப் பார்த்தார்.பிறகு ''செரி .இவனை நான் வளர்த்திக் கொள்ளாம் .ஆனால் நான் இவனைக் கொன்னாலும் நீ கேட்கக் கூடாது.இவன் நான் சாகச் சொன்னாலும் சாக வேண்டும் ''என்றார்.''


''குருவின் வீட்டில் எனக்கு கஞ்சி தாரளாமாக கிடைத்தது.முதலில் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.அவர் ஒரு மரப்பணிக் கூடம் வைத்திருந்தார்.அவரது ஜீவிதத்துக்கான வருமானம் அதிலிருந்துதான் கிடைத்தது.ஓய்ந்த நேரங்களில் படம் வரைவார்.சில சிற்பங்கள் .அங்கேயே வைத்து எனக்கு கொஞ்சம் எழுத்தும் காவியமும் கூட சொல்லிக் கொடுத்தார்.அவரைப் பார்க்க யாரெல்லாமோ வருவார்கள்.ராஜ குடும்பங்களிலிருந்து கூட பெரும்பாலும் ஸ்திரீகள்.அவர்கள் ஏன் அவரைப் பார்க்க வருகிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் இருந்தது தெரிந்த நாளை நான் மறக்க முடியாது.அவருக்கு பழைய கேரளபாணி இரண்டடுக்கு ஓட்டு வீடு இருந்தது.அன்று நான் கீழே ஒரு மேசையைத் தயார் பண்ணிக்கொண்டிருந்தேன்.ஒரு குதிரைவண்டி வந்து முற்றத்தில் நிற்பதைப் பார்த்தேன்.ஒரு நடுத்தர வயதுப் பெண் இறங்கினார்.ஈரக்கூந்தல்.சந்தனக் குறி.முண்டின் மீது மலையாள பாணியில் ஒரு சந்தனச் சார்த்து .என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் .ஆசானின் மனைவி வெளியே வந்து ''வரணும் ''என்று அழைத்துப் போனாள்


நான் அவர்கள் உள்ளே செல்வதை ஆசானின் குச்சு அறைக்கு அவள் அழைத்துச் செல்லப்படுவதையெல்லாம் முற்றத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன்.சற்று நேரம் கழித்து ஆசானின் மனைவி மட்டும் இறங்கி வந்தாள் .குதிரை வண்டிக்காரனிடம் ''கோப்பி குடிச்சோ ?"'

வண்டிக்காரன் இறங்கி வண்டியின் மடியிலிருந்த பொதியிலிருந்து கொஞ்சம் காய்ந்த புற்களைக் குதிரைக்குப் போட்டான்.நான் அதன் முதுகு சிலிர்ப்பதை அதன் புட்டத்துத் தசைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன் .பிறகு மெதுவாக எழுந்து உள்ளே போனேன்.அடுமுறியில் இருந்து புகை சுழன்று சுழன்று யாரோ கோபத்துடன் கழற்றி கழற்றி எறிந்துகொண்டிருந்த வளையல்கள் போல வந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.


சத்தமே வராமல் மரப்படிகளில் கள்ளப்பாதம் வைத்து மேலே போனேன்.


அங்கே ஆசான் சட்டம் பொருத்தி வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அவர் முதுகு வியர்வையில் பளபளத்தது .ஒரு வியர்வைக் கோடு கத்தி போல கீழே இறங்கியது.

அவர் ஏறக்குறைய அனந்தபத்மநாபனைப் போல ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருந்த ஒரு உருவத்தின் விளிம்புகளை வரைந்திருந்தார்


நான் போகும்போது அவர் விரல்கள் ஒரு தவிப்புடன் இறங்க சரியான கிளையைத் தேடும் பறவை போல அந்த சித்திரத்தின் மீது பாவி துடித்துக்கொண்டிருந்தன.

பிறகு சட்டென்று ஒரு கணத்தில் அவற்றை வரைந்துவிட்டார் .மார்புகள்.மார்புகள் இறங்கிய அதே வேகத்தில் அவற்றின் முகடுகளும் கூர்ந்து எழும்பிவிட்டன.


நான் ஒரு கணத்தில் அந்த மார்புகள் எப்படி அவர் கையில் வந்தன என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த வியப்பை பகிர்ந்துகொள்வது போல என் பக்கமிருந்து ''அல்புதம்''என்றொரு குரல் கேட்டது.


நான் திரும்பிப் பார்த்தேன்.சந்தனக் குறிப் பெண்தான் என் பக்கம் மாடிப்படியில் எனக்கும் பின்னால் இருந்த நீண்ட மோடாவில் அனந்தபத்ம நாபனின் சயன கோலத்தில் படுத்திருந்தாள்


அவள் தன் உடலில் அந்த சந்தனக் குறியை மட்டுமே அணிந்திருந்தாள்


3


அவர் என்னை மேலும் கீழும் நோக்கி ''உங்களுக்கு உடல்பயிற்சிப் பழக்கம் இல்லை போல தெரிகிறது "என்றார் .


நான் ''அதற்கான மன உந்துதலை என்னால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.''


''ஆனால் நோய்ப்பட்டதும் இயல்பாக உடல்ப்பயிற்சிக் களங்கள் நோக்கி ஈர்க்கப்படுகிறீர்கள் அல்லவா ?""

''ஆம்''என்றேன்''இங்கே இருப்பதே கொஞ்சம் புத்துணர்வை அளிக்கிறது ''


''நீங்கள் ஒருவிதமான sympathetic magic ஐ எதிர்பார்க்கிறீர்கள் ''


''ஒருவேளை ''என்றேன்


''விவிலியத்தில் ஒரு கதை உண்டு.எகிப்திலிருந்து துரத்தப்பட்டபிறகு யூதர்களும் மோசசும் வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் அலைந்தார்கள்.ஒரு கட்டத்தில் அவர்களில் பலர் பாலைவனப் பாம்புகளால் கடிக்கப்பட்டு இறந்துபோனார்கள்.பிரச்சினை கை மீறிப்போனபோது மோசஸ் பிதாவிடம் கேட்டார் .அவர் வெண்கலத்தில் ஒரு நாகப்பாம்பின் சிலையைச் செய்து வைக்கவும் யூதர்கள் எல்லோரையும் அதைப் பார்க்கவும் சொன்னார்.அவர்கள் அதைவந்து பார்த்தார்கள்.அதன்பிறகு பாம்புக்கடியால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து போயிற்று''


எனக்கு அவர் சொல்ல வந்தது புரியவில்லை

உடல் என்பது நாகப்பாம்பு போல என்கிறாரா ?''


''ஆசான் சொல்வார்.மனித உடலைத் தவிர உலகில் அழகான விஷயம் கிடையாது.மனிதனை மட்டுமே கடவுள் அவரது சாயலில் படைத்தார் என்று சொல்வதின் பொருள் இதுவே,இந்த உண்மையை பூமியில் அறிந்தவர்கள் ஓவியர்களும் சிற்பிகளும் மட்டுமே "

நான் ''எல்லா உடல்களும் அழகானவையா ?''

அவர் கேட்காதது போல் ''உடலை மறைக்கிறவன் ஏதேனை விட்டுத் துரத்தப்படுகிறான் ''என்றார் '' விரோசனர் என்ற ரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?''

நான் ''இல்லை ''என்றேன் ''சாந்தோக்கிய உப நிடதத்தில் அவரைப் பற்றி வருகிறது .அவர் உடலையே ஆன்மா என்று சொல்லியவர்.அவரை அசுரர்களின் ரிஷி என்று சாந்தோக்யம் கேலி செய்கிறது '''


நான் திரும்பவும் ''எல்லா உடல்களும் அழகானவையா ?''என்றேன்

அவர் ''சில உடல்கள் மிக அழகானவை .பூரணமானவை .அமிர்தம் நிரம்பியவை.ஆரோக்கியத்தை அளிப்பவை ''

அவர் சட்டென்று எரிச்சலடைந்தார் ''நீங்கள் ஒரு ஓவியரோ சிற்பியோ அல்ல .ஆனாலும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைத்தேன் தங்க பாகை பற்றிக் கேள்விப்பட்டதில்லையா ?''


நான் ''புரிகிறது.அதனால்தான் நம் கோவில்களில் நிர்வாணச் சிலைகளை வைத்திருந்தார்கள் இல்லையா ?''

''கிரேக்கத்தில் வீதிகளில் வைத்திருந்தார்கள் ''

''ஆனால் பொதுவாக நம் கோவில்களில் பெண்கள் சிலைகள்தான் காணபடுகின்றன ''


அவர் ''இல்லை நாம் பெண்கள் உடலை மட்டுமே பார்க்கிறோம்.ஒரு கிரேக்கனின் அதிகபட்ச அழகு ஆணின் உடலில்தான் வெளிப்படுகிறது ''


நான் ''ஆம் உடல் அழகியது ''என்றேன் ''எல்லா உடலும் ''

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.ஒரு கால்பந்து எங்களை நோக்கி வந்தது.அவர் அதை எடுத்து பலமாக உதைத்தார்.அது வானில் அம்பு போல பாய்ந்து சென்றது .ஒரு வாலிபன் ''அண்ணாவே சூப்பர் ''என்று கத்தினான்


அவர் திரும்பவந்து ''நான் அவருடன் பதினெட்டு வயது வரை இருந்தேன்.பதினெட்டு நிரம்பிய மூன்றாவது நாள் அம்மா வந்துவிட்டாள் .அவள் ஊரில் எனக்கு ஒரு பெண்ணை நிச்சயித்திருந்தாள் .ஆசான் அவளைக் காணவே மறுத்தார்.இவன் ஒரு கலைஞன்.இவனுக்குப் பத்திரமாக இணை சேர்க்கவேண்டும் .இல்லாவிட்டால் இவன் சிதறி விடுவான்.எனது இத்தனை நாள் வாழ்க்கையையும் இவனுள் செலுத்தியிருக்கிறேன்.இவனை வீணடிக்க முடியாது என்று சொன்னார் .அம்மா அவர் வீட்டு முற்றத்திலேயே ஒரு வாரம் சாப்பிடாமல் கிடந்தாள் .ஒரு வாரம் கழித்து ஆசானின் மனைவி அவளை வீட்டுக்குள் கூட்டிப் போனாள் ,ஆசான் அம்மாவிடம் ஒரு சமரசத்தை முன்வைத்தார்.அந்தப் பெண்ணை நான் பார்க்கவேண்டும் என்றார் ''

பத்து வருடங்கள் கழித்து நான் ஆசானுடன் ஊருக்கு வந்தேன்.வரும்போது அவர் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது ''நீ பறவைகளை எழுதுகிறவன் .அதை நினைவில் வைத்துக்கொள் ''


ஊருக்குப் போகும் முன்பே அவள் குடிசை இருந்தது.அம்மா வண்டியை நிறுத்தி இப்போதே பார்த்துவிடலாம் என்றாள் .நான் ஆசானுடன் அப்படியே திரும்பப் போகிறோம் என்று நினைத்தேன் ''


அவள் பனங்காட்டுக்குள் போயிருந்தாள் ஈரக் கால்களோடும் நாணத்தோடும் வந்தாள் .நல்ல கருப்பு.பனை மரம் போன்ற அதே கருப்பு.கால்களில் ஒரு சோடி ஜெர்மன் சில்வர் கொலுசுகள் மட்டுமே அவளது ஒரே ஆபரணம்

ஆசான் திகைத்து நின்றுவிட்டார்

அம்மா ''வீட்டுல கருப்பட்டி இருக்கா ?காப்பி போட?''என்றாள் அவளிடம் ரகசியமாக ''இதுதான் பையன்.அது அவனோட வாத்தியார் ''


அவள் மலங்க விழிக்க ''வணக்கம் சொல்லட்டி ''என்று அம்மா கடிந்தாள்

ஆசான் ''மகனே இவளே உனது பெண் ''என்றார்



4


கல்யாணம் கழிந்ததும் நான் ஊரிலேயே இருந்துவிட்டேன்.முதலில் தச்சுப் பணிகள் செய்தேன்.பிறகு வேறு விஷயங்கள் வந்தன,கொஞ்சம் கொஞ்சமாக ஆசானுடன் தொடர்பு போயிற்று.அவருக்கு உடல் சரியில்லாது போயிற்று.நிறைய பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு நிறைய குடிக்கிறார்.தொழிலை விட்டுவிட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டேன்.ஆகவே ஏறக்குறைய இருபது வருடங்கள் கழித்து என் வீட்டு வாசலில் குவிந்து உட்கார்ந்திருந்தவரை பிச்சைக்காரர் என்று நினைத்ததில் தவறில்லை


அவர் ''நான் உன்னிடம் சாக வந்திருக்கிறேன் ''என்றார்


அவர் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது .அவர் தலை நிற்கவே இல்லை.உட்கார்ந்த இடத்திலேயே அவர் நீராக பேதி போய்க்கொண்டிருந்தார் .கடும் துர்நாற்றம்.


நாங்கள் அவரை உள்ளே தூக்கிப் போய் குளிப்பாட்டினோம்.உணவளிக்க முயன்றோம்.உள்ளூர் டாக்டர் ''சரிப்ப்படும்னு தோணலை ''என்றார்

அவர் முற்றத்திலிருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்தபடியே எங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார் .எனது ஓவியங்களை வாங்கி ஒருமுறை பார்த்தார் .ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு ''உனக்கு வயித்துல எதுவும் பிரச்சினை இருக்கா ''என்று தொடர்பில்லாமல் கேட்டார்

பொதுவாக இரவெல்லாம் வலியில் அரற்றிவிட்டு நடுப்பகல் வரை உறங்குவார் ஆகவே ஒரு வெள்ளிக்கிழமை காலையிலேயே அவர் எழுந்து உட்கார்ந்திருப்பது பார்த்து வியப்பாக இருந்தது

நான் அவரிடம் சென்றேன்.

அவர் என் கண்களைப் பார்த்து ''நான் ஒரே ஒரு முறை உன் மனைவியை படம் வரைந்து கொள்கிறேன் ''என்றார் ''அது என்னைக் குணப்படுத்திடும்னு தோணுது ''


5


நான் சட்டென்று பேச்சிழந்து அப்படியே அமர்ந்திருந்தேன்

''நீங்க நம்புவீங்களா ?அதன்பிறகு அவர் மூன்று வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார்.மீண்டும் நிறைய வரைந்தார்.என் மனைவியை மகளாக சுவீகரித்து அவரது வீட்டை எழுதிவைத்தார்.ஒரு நாள் இரவு உறங்கும்போதே இறந்து போனார் ''

பள்ளியின் காவலாளி வந்து ''சார் பூட்டப் போறோம் ''என்றான்


நாங்கள் மவுனமாக எழுந்தோம்.நடந்தோம்.தட்டிக் கதவு அருகே வந்ததும் அவர் நின்று ''அவர் வரைந்த படம் இன்றும் என்னிடம்தான் இருக்கிறது ''என்றார்

நான் அவர் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று யோசித்தேன்

அவர் தனது முரட்டு ஜிப்பாவின் பையிலிருந்து ''குடிப்பீர்களா ??"'என்றார்


நான் ''இல்லை ''என்றேன்

அவர் ''நான் ஒரு மிடறு குடித்துக் கொள்கிறேன் ''என்றார் ''உங்கள் உடல்நலத்துக்காக''

LinkWithin

Related Posts with Thumbnails