Wednesday, October 5, 2011

சாலைத் தெரு


உருசுக் குட்டியின்
கூர் தீட்டிய முலைகளிடமிருந்து
விடைபெற்று
ல சா ரா
சாலைத் தெரு
ஆ மாதவனிடம் போனார்
அங்கிருந்து இருவரும்
நகுலனிடம் சென்றார்கள்
நகுலனும் அவர் நாயும்
ஒரே வீட்டில்
தனித்தனியாக இருந்தார்கள்
சுசீலா எங்கே இருக்கிறாள்
என்றதற்கு
''சுசீலாவும் செத்துக் கிடக்கிறாள்''என்றார் நகுலன்
ஜகன்மித்யை
என்று கசிந்தார் லா சா ரா
துரும்பைத் துரத்திப் போகும் துரும்பும்
என்றார் மாதவன்
நிணக் கச்சோடம்
நிணக் கச்சோடம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நகுலனின் நாய்
அவர்களை முறைத்துக் கொண்டிருந்தது
''அவனுக்கு இறைச்சி நாள் இன்று ''
என்றார் நகுலன்
''நேரம் போகப் போக
நாம் எல்லாரும்
அவனுக்கு இறைச்சிப் பொதிகளாய் மாறிக் கொண்டிருக்கிறோம் ''
என்றார் எச்சரிக்கையாக,
லா ச ரா கால்களை
இழுத்துக் கொண்டார்
ஒருக்கால் ..ஒரு கால்
என்று எழுதிக் கொண்டது அவர் மனம்
பிஜாய்ஸ் குப்பியைத் திறந்ததும்
பட்டு உத்தரியம் தொங்க
கம்பனும்
ஈசுவர மூலியுடன்
மீசை தளரா பாரதியும் வந்து சேர்ந்துகொண்டார்கள்
இரண்டாம் கோப்பைக்கு மேல்
ஜாய்சும் ஹென்றி ஜேம்சும் வில்லியம் பாக்னரும்....
ஹோமரும் ஷேக்ஸ்பியரும் .
.இன்னும் இன்னும் பலரும்


நான் போய்ச சேர்ந்த போது
மது தீர்ந்து போயிருந்தது
அவர்கள் போயிருந்தார்கள்

Tuesday, October 4, 2011

துணை

இருள்மூடிக் கிடக்கிறது
அவள் முகம்
உதிரம் கசியத்
தோண்டித் தோண்டி
வெளியே வீசுகிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
அவள் வெளியேறுகிறாள்
நினைவின் கல்லறையிலிருந்து
மீண்டவள்
ஓவென்று அலறி
என் கழுத்து நரம்பைத் தேடி வந்தாள்
நிணம் உருகும்
கைகளால் என்னை இழுத்து
அணைத்துக் கொள்கிறாள்
வேள்வியில் ஆகுதிஎன ஆகிறது என் உயிர்
கோர்த்துக் கொண்ட
அவள் குளிர் விரல்களில்
என் வெப்பம் ஏறுகிறது
இன்னும் கொஞ்ச நேரம் தான்
என்று தேற்றுகிறாள் என்னை
அதன்பிறகு இருவருமே அமரர்கள்
என்றதை நான் நம்ப மிக விரும்புகிறேன்
மூங்கில் படலின்
வெளியே நிற்கிறது
கோச்சுவண்டி
கால் மாற்றி கால் மாற்றி
நிற்கும் குதிரை கனைக்கிறது

இருள் சூழ்ந்த இரவில்
வானத்தில்
ஒரு ஒளித்திரள் போவதை
நீங்கள் கண்டால்
அது நாங்களாகவே இருக்கலாம்

Monday, October 3, 2011

உயிர்த்தெழல்


1.திரும்பவும்
ஏசு பிறக்க
திரும்பவும் காட்டிக் கொடுக்க
யூதாசுக்கு
திரும்பவும்
முப்பது வெள்ளிக் காசுகள்
கொடுக்கப் பட்டது
அவன் அதை வீசி எறிந்துவிட்டு
''ஆட்டோ காசுக்குக் கூட போதாது
விலைவாசி ரொம்ப ஏறிவிட்டது
ஏசுவின விலையும்...''என்றான்
''தவிரவும் அவர் இப்போது
உலகின் மிகப்பெரிய
பணக்காரர்... ''


2.குகைக்குள்
தனிமையாயிருக்கிறது
என்று
உயிர்த்தெழுந்து வந்தவர்
வாசலில்
நெருக்கிக் கொண்டிருந்த
டிவிக் காரர்களைக் கண்டு
இங்கு ரொம்ப கூட்டமாக இருக்கிறது
என்று கூறி
திரும்ப மரித்துப் போனார்3.விலாத் தழும்பைக் காட்டி
இப்போது நம்புகிறாயா
என்றவர் முன்
தலைகுப்புற விழுந்து
சந்தேகத் தோமா
''மெய்யாகவே
உங்களது பிளாஸ்டிக் சர்ஜன்
தேவகிருபை பெற்றவர் ''
என்றார்


4.அங்கியல்ல
வானத்திலிருந்து ஒலித்த
பிதாவின் குரல்
சந்தேகத்துக்கு இடமின்றி
ஸ்கர்ட் தான் அணிந்திருந்தது !

ஏறெடுத்து பார்த்தவனை
''அந்தக் கோணத்தில் இருந்து
பார்க்காதே இழவெடுத்தவனே''
என்று அதட்டியது

LinkWithin

Related Posts with Thumbnails