Saturday, November 20, 2010

மழைத்தலின் விதிகள்

ஒரு ராட்சத
டெகிலாக் கோப்பையைக்
கவிழ்த்தது போல
மண் மாதுவின்
ரகசியத் துவாரங்கள் அனைத்தையும்
திறந்துவிடத் துடிக்கும் அசுரன் போல
ஒரு நீர்மத்தாப்பூ  வேடிக்கை போல
பெய்துகொண்டிருந்தது மழை .
பட் பட்டென்று
குடை மொட்டுக்கள்
சாலைகள் மேல்
வெடித்துக் கொண்டே இருந்தன.
யாரோ
பெருக்கித் தள்ளியது போல
நிமிடத்தில்
தெருவோரத்தில்ஒதுங்கியது
ஜனக் குப்பை.
வீடற்ற விளிம்பனும்
வீதியுலா போகும் இறைவனும்
மழைச் சுருள் சாட்டைக்குப் பயந்து
ஒரே கூரை கீழ் பதுங்க
பேருந்து ஜன்னல்களிலிருந்து
வரிசையாய் சிலிர்ப்புடன்
மழைப் பதம் பார்க்கும்   
பெண்களின் கைகள்..
மழை உறைகள் தந்த
தற்காலிகப் பாதுகாப்புடன்
உலர்துளைகள் தேடி
இரு சக்கரங்களில்
கருத்த பாம்புச் சாலைகளில்
வழுக்கி விரையும்   ஆண்கள்.

காபிக் கப்புகளின் கீழே
விரியும் கவிதைப் புத்தகங்கள் 
நீண்ட பெருமூச்சுடன்
மூடப் படும்  அலுவல் கோப்புகள்

ஓயாத திரிதலை மறந்து 
தூக்கிய  வால்களுடன்
வீடுகளோரம் ஒதுங்கி
வேதாந்த சிந்தனையில்
ஆழும் தெருநாய்கள்
எல்லா  இசையும்   நிறுத்தி
மழைப் பிடில் மட்டுமே
நீளமாய் வாசிக்கும்
மண்டூகப் பாகவதர்கள்

என எப்போதும் எங்கும் என்றும்
மழைத்தலின் விதிகள்
மாறுவதே இல்லை

5 comments:

  1. போகன் கவிதை மிக அருமை

    ReplyDelete
  2. மண் வாசனை

    யாரோ
    பெருக்கித் தள்ளியது போல
    நிமிடத்தில்
    தெருவோரத்தில்ஒதுங்கியது
    ஜனக் குப்பை.

    இது கிளாஸ்

    ReplyDelete
  3. //எல்லா இசையும் நிறுத்தி
    மழைப் பிடில் மட்டுமே
    நீளமாய் வாசிக்கும்
    மண்டூகப் பாகவதர்கள்//

    இதுவும் இன்னுமொரு இடமும் க்ளாஸ் .

    ReplyDelete
  4. புகைப்படமும் ஜனக்குப்பை, பாம்புச்சாலை சொல்லாடலும் என்னை மிகக் கவர்ந்தது.

    ReplyDelete
  5. நயமாக எழுதியிருக்கிறீர்கள். (அடுத்த முறை மழையில் ஒதுங்கும் பொழுது குப்பை போல் உணரப்போகிறேன்; என் egoவுக்கு பலத்த இடி :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails