Tuesday, August 31, 2010

குளிரின் ருசி

பனைகள் கூடக் கருகும்
பாலையில் முளைத்தேன்  நான்..
பால்ய நாட்களில்
பெரியகனவு
பள்ளிக்கு
கால் கொப்பளிக்காது செல்ல
ஒரு ஜோடி செருப்பு
என்பதாகவே இருந்தது
நள்ளிரவில் கூட
சூரியன் எரியும்
நகரத்தில்தான்
பணி தேடித் திரிந்தேன்..
அதன் கான்க்ரீட் ஓவன்களில்
எப்போதும் பொங்கும் வியர்வையுடன்
துடைத்து துடைத்து
எரியும் சருமத்துடன்
தீர்ந்து போன மின்சாரத்தை
அதனால்
சுழலாத மின்விசிறியை
வெறுத்துக் கொண்டே
ஏராள இரவுகளைக் கழித்தேன்..
சட்டென்று ஒருநாள்
நல்லூழ் போல்
உச்சிப் போதிலும்
மஞ்சு மிதக்கும்
இம்மலை நகரத்திற்கு மாற்ற்லாகிவிட்டேன்..
வந்த நாள் முதல்
சட்டை கூட இல்லாமல்
இரவு முழுக்க
ள்ள் ளென்று இரையும் தெருவிளக்கின் கீழே
யாமத்தின் பச்சை வாசனையை
இழுத்து இழுத்து முகர்ந்துகொண்டு
பித்தனைப்  போல்
போதை ஏறி சுற்றுபவனைப் பற்றி
கிசுகிசுத்துப் பேசுகிறது ஊர்.
எப்படிப் புரியவைப்பது
இவர்களுக்கு
இந்தக் குளிரின் ருசியை
என்று யோசிக்கிறேன்..

Monday, August 30, 2010

அப்பாவின் வீடு அல்ல

நேற்றைய இரவு
எப்படியோகடந்துவிட்டிருந்தது.
அப்பாவின் நடைத் தோழர்
காதில் மப்ளருடன்
தனியாக மூச்சிரைக்க
திரும்பிக் கொண்டிருந்தார்.
தினமணி
அச்சுமணத்துடன் பிரிக்காமல்
பனியில் நனைந்திருந்தது.
வாழ்நாளில் முதன்முறையாக
எடுக்கப் படாத
அப்பாவின் படுக்கையை பார்த்தேன்.
அப்பாவின் டூத் பிரஷ்
ஷேவிங் ப்ளேட் இரண்டும்
முறையாக மூடிக் கொண்டு காத்திருந்தன.
குளியறையில்
அவர் குளிக்கும்
சிந்தால் சோப்பின் மணம்
இன்று மூச்சை நிறைக்கவில்லை.
முதல் டிகாஷன் காப்பியை
இன்று நான்தான் குடித்தேன்.
பூஜைக்குப் பறிக்கப் படாமல்
செம்பருத்திகள்
சிகப்பு ஆச்சர்யமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.
தொலைகாட்சி செய்திகளில்
அப்பாவின் டிராவிட்
சதம் அடித்திருந்தான்
அதைப் பார்க்காமலே அவசரமாய்
அப்பா நேற்று இறந்திருந்தார்.
திடீரென்று நினைத்து
காதில் அப்பாவின்  மப்ளருடன்
நடைக்காக கிளம்பியபோது
தோன்றியது.
இனி ஒருபோதும்
அது அப்பாவின் வீடு அல்ல.
அது
அப்பா இருந்த வீடு .
அவ்வளவே.

Saturday, August 28, 2010

நகரத்துடன் பழகுதல்

ஒவ்வொரு இரவும்
புள்ளிகளை மாற்றிக் கொள்ளும்
புலி போல
நகரம்
தன்னை
மாற்றிக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு நாளும்
அதனுள் நாம்
அறிந்த வழிகள் அழிந்து
 அறியாப் புதுவழிகள்
முளைத்து
வந்து கொண்டே இருக்கின்றன.

நேற்றைய சொற்களை
உதிர்த்து
எப்போதும் 
புதிய சொற்களை
பிரசவித்துக் கொண்டே இருக்கிறது
நகரம்..
மீதமுள்ள சொற்களின்
அர்த்தங்களும் 
நள்ளிரவில்
மாறிக் கொண்டே இருக்கின்றன..
ஒருநாள் விலகினாலும்
புதிதாய் கண்டவர்  போல் 
மனிதர்களைத்
திரும்பவும் திரும்பவும்
அறிமுகம்
செய்துகொள்ள வேண்டியிருக்கிறது..
நகரத்தில் எதுவும்
நிரந்தரமில்லை.
எதுவும் 
இலவசமில்லை..
எல்லாப் புன்னகைகளின்
பின்பும்
நிச்சயமாய்
ஒரு வியாபாரம் இருக்கிறது..
ஏன்
ஒவ்வொரு கண்நீர்த்துளியின்
அடியில்கூட...
முற்றிய
நகர மனிதன் கூட
ஒரு பொழுதும்
கையுறைகள் இல்லாமால்
அதனுடன்
கைகுலுக்க
முடிவதே இல்லை..
எவ்வளவு பழகினாலும்
அறியாத மிருகம் போல
அச்சத்துடனே
அணுகவேண்டி இருக்கிறது
இன்னும்
நகரத்தை...

Friday, August 27, 2010

உடல் தத்துவம் 5

எச்சரிக்கை!வயது வந்தவர்க்கு மட்டும்!
 அப்பா நாகர்கோயிலில் ஒரு தனியார்வங்கியில் குமாஸ்தாவாக இருந்தார்.அதனால் அவருக்கு தனி மரியாதை இருந்தது.ஊரில் நிறைய பெருக்கு நிலத்தையோ நகையையோ அடகு வைக்க வேண்டி இருந்தது.பின்னால் இந்திராகாந்தி வந்து வங்கிகளை அரசுடமை ஆக்கியபிறகு இன்னும் மரியாதை கூடியது.அப்பா சாதியைத் தோள் மீது தூக்கித் திரிந்தவர் அல்ல.ஆனால் சருமத்துக்கு அடியில் இருக்கும் இன்னொரு தோல் போல அது நுட்பமாக  துடித்துக் கொண்டிருந்தது.ஆனால் வீட்டுப் பெண்டுகளைப் போல அவரால் குழப்பம் அற்று தெளிவாக இருக்க முடியவில்லை.காரணம் அன்றைய சூழ்நிலை.அரசியல்.அவருக்குள் தெரியாமல் வந்து படிந்துவிட்ட புத்தகம் வாசிக்கிற பழக்கம்.பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த செய்தி கேட்டு இரண்டு நாட்கள் உடம்புக்கு சரியில்லாமல் ஆகிவிட்டது என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.அம்மா பெரியாரை 'நீக்க்கம்புல போறவன் என்ன பண்ணின்னா இவருக்கு என்ன .பிள்ளளையார செருப்பால அடிச்சா பிள்ளையாரு பாத்துக்குவாரு.இவரு என்னத்துக்கு இந்த துடி துடி துடிக்காரு''என்று எளிதாக கடந்துபோயவிட்டார்.அப்பாவால் அப்படி இருக்க முடியவில்ல்லை.'அது அப்படி நிசாரமா சொல்ல முடியாதுல்லா..'என்று புலம்பிக் கொண்டிருந்தார்.அம்மா சொன்னது போல பெரியாருக்கு  பிள்ளையார் ஏதாவது ரியாக்ட் செய்வார் என்று காத்திருந்தார்.அப்படி ஏதும் நிகழாததால் தானே பிள்ளையாரின் சார்பாக எதிர்வினை புரிய தீர்மானித்தார்.திருநெல்வேலி போய் பெரியாரின் புத்தகங்கள் ஒவ்வொன்றாய் வாங்கி வந்து இரவெல்லாம் விளக்கெரித்து படித்தார்.அம்மா நடு இரவுகளில் புறவாசலுக்குப் போகும்போதெல்லாம் பெரியாருடன் யுத்தம் செய்துகொண்டிருந்த அப்பாவைப் பார்த்து 'காந்திமதி அம்மா..இந்த மனுஷனுக்கு எப்ப எங்கே இளகும்னு தெரியலியே.பொம்பளைக் கிறுக்கு போயி இப்ப புஸ்தகக் கிறுக்குல்லா பிடிச்சிருக்கு''

பிரச்சினை சற்று தீவிரமானது என்று அது ஆச்சியின் செவிட்டுக் காதுகள் வரை போன பின்பே  உறைத்தது.அவள் தனது வெற்றிலை அரையலை  நிறுத்திவிட்டு பூ உலகுக்கு தன் பார்வையை திருப்பிய அரிதான சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று.ஒருநாள் ''ஏலே..உடம்புக்கு எதுவும் குறைவு உண்டுமா''என்று ஆரம்பித்தாள்.அப்பா பதில் சொல்லவில்லை.அவர் என்றைக்கும் அவளுக்கு பதில் சொன்னதே இல்லை.ஆனால் அவள் சொல்வதை  தீவிரமாக பரிசீலிக்கத் தவறுவதும் இல்லை.
''உனக்கு வல்லநாட்டு அய்யரைத் தெரியுமா''
''......''
''நல்ல மனுஷன் பார்த்துக்க. வெள்ளைக்காரன் சர்க்காரில கரம் [வரி]பிரிக்கிற சோளில இருந்தாரு.சொர்ணம் மாதிரி ஒரு பொண்டாட்டி.இரண்டு பொட்டப் புள்ளைங்க வேற.உண்டும் பார்த்துக்க.அதுல ஒருத்தி மூணாங்கிளாஸ் வரைக்கு ஏன் கூட படிச்சா..கொலுசுன்னு ஒன்னை நாங்க எல்லாம் அப்பத்தான்பாத்தோம்.அதே மாதிரி ஒண்னு வேணுமின்னு அடம் பிடிச்சு அடி வாங்கினேன்.அப்பா அதெல்லாம் குடும்பத்தில உள்ளவங்க போடக் கூடாதுன்னு சொல்லிட்டார்.இரண்டு மூணு தடவை வீட்டுக்கு போய் இருக்கேன் பார்த்துக்க. வீடுன்னா ஆள் இருக்கறதே தெரியாது பார்த்துக்க.சத்தமே தெரியாது.ஆனா யார் என்ன பண்ணா தெரியாது.அவர் வேலைக்குப் போகாம வீட்டிலய உட்காந்து என்னென்னவோ புத்தகம் படிக்க ஆரம்பிச்சுடாரு.வெள்ளைக்காரன் கிட்டே இருந்து நோட்டிஸ் மேல நோட்டிஸ் வருது.வேலைக்கு வரியா இல்லையான்னு.அய்யரு அசையலை.பொண்டாட்டிக்காரி யான ஒரே அழுகை.அப்பாக்கிட்ட வந்து நீங்க கொஞ்சம் கேளுங்கன்னு சொல்றா..அப்பாவுக்கு கொஞ்சம் வைத்தியமும் தெரியும் பார்த்துக்க.வீட்டுக்கு போறப்ப அய்யரு மாடி ஏறி நட்சத்திரத்தோட பேசிட்டு இருந்தது பார்த்தாரா.. மூஞ்சி பாத்ததுமே சட்டுன்னு சொல்லிட்டாரு..இது வெள்ளைக்கார வியாதிம்மா..யாரோ ஒரு பரங்கி கிட்டே இருந்து ஒட்டியிருக்கு..நம்ம கைக்கு நிக்காது..தின்னவேலிக்கு கூட்டிட்டுப் போயிருங்க ன்னு சொல்லிட்டாரு..அப்போரம் அங்கெல்லாம் போய்ப் பார்த்ததும் தீரலே...அந்தக் குடும்பமே செரழிஞ்சு போச்சு..''எனறாள்.''எங்க அப்பா எப்பவும் சொல்வாரு.எல்ல்லா பண்டமும் எல்லாருக்கும் சீரணிக்காது.சீரணிக்காதது தின்னு கழியறதவிட பட்டினியாக் கிடந்துடலாம்.என்ன சொல்றே''
அப்பா எதுவும் சொல்லவில்லை.ஆனால் அம்மாவும்ஆச்சியும் செய்யமுடியாத அந்த  காரியத்தை ஒரு அய்யர் ஆத்து மாமி செய்தாள்.
பெரியார் அப்பாவின் மண்டைக்குள் புகுந்துகொண்டு அப்பாவை ஏறக்குறைய ஒரு காதலி போல அலைக் கழித்தார்.அப்பா எப்போதும் அவர் புத்தகங்களுடனே திரிந்தார்.கூடவே ஒரு கோடு போட்ட நோட்டுப் புத்தகமும் ...அது முழுக்க பெரியாருக்கான பதில்களைத் தோன்றத் தோன்ற எழுதிவந்தார்.எப்போதும் சவர சுத்தமான முகத்தில் இப்போது முடிமுட்கள் அவ்வப்போது தலைகாட்ட ஆரம்பித்தன.நடு இரவுகளில் திடீர் திடீர் என்று அவர் எழுப்பும் ஆஹா என்ற கொலம்பஸ் ஒலிகள் திகிலை ஊட்டின.சரியாக தூக்கம் இல்லாததால் எப்போதும் அவர் முகத்தில் ஒரு பித்துக் களை இருந்தது. தெரிந்த ஆட்களை தெரியாதது போல் பார்க்கவும் தெரியாத ஆட்களை சௌக்கியமா இருக்கிகளா என்று குசலம் விசாரிக்கவும் செய்தார்.ஒரு நாள் வழக்கம் போல சவரித்துத்  தலை முழுகி பட்டை அடித்து  நாகர்கோயிலுக்கு ஆபிசுக்குப் போய்விட்டு 'இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாம்லே'என்று திரும்பிவந்தார்.
பெரியாருக்கான தனது பதில்க் கேள்விகளை எல்லாம் அவர் அன்று நாகர்கோயிலில் இருந்து வந்த நாஞ்சில்நேசன் என்ற பத்திரிக்கைக்கு அனுப்பிவைத்தார்.மொத்தம் நூறு பேரே படிக்கக் கூடிய [அதில் பாதி  பேர் இலவசப் பிரதி] அந்தப் பத்திரிகையில் அதற்கு முப்பத்தி ஏழு எதிர்வினைகள் வந்தன. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திக்கித்துப் போனார்.முப்பத்தி ஏழில் குளச்சல் தேவராஜ் என்பவர் அப்பாவைக் கடுமையாக மறுத்து எழுதி இருந்தார்.அவருக்கும் அப்பாவுக்கும் ஒரு ஆறுமாதம் மாபெரும் சொற்போர் பத்திரிக்கை மூலமாக நடந்தது.பத்திரிக்கையின் சுற்று நூற்றி ஐம்பதாக உயர்ந்தது.

அப்பாவைப் பெரியாரை முழுதாக எதிர்ப்பதில் ஒரு சிரமம் இருந்தது.அப்பாவுக்கும் பார்ப்பனர்கள் மீது ஒரு வெறுப்பு உள்ளூர இருந்தது.ஆனால் பெரியாருக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்தால் அடுத்து நமது மடியில்தான் கைவைப்பார் என்ற அச்சமும் இருந்தது. இன்னுமொரு விஷயம் அவருக்கு கவலை அளித்தது.நாகர்கோயில்  மெல்ல மெல்ல கிறித்துவர்களின் நகரமாக மாறுவதை அவர் கவனித்துவந்தார்.அவரது நெற்றியில் போடும் திருநீற்றுப் பட்டை அதன் மரியாதையை இழந்து  ஒரு கேலிப்பொருளாய் மாறுவதை அவர் உணர்ந்தார்.'என்னடே நெத்திக்கு வெள்ளை அடிச்சுகிட்டு திரியுதாரு.வட்டா'என்ற வசனங்கள் அவர் காதில் விழுந்தன.ஆவிக்குரிய நற்செய்தியாளர்கள் அவர் பால் வெகுவாய் ஈர்க்கப் பட்டனர்.ஒவ்வொரு நாளும் அவர் கையில் திணிக்கப் பட்ட இலவச விவிலியங்களும் பாவிகள் மனம் திரும்புவதற்கான வழிகாட்டிக் கையேடுகளும் பெருகின.'இதையெல்லாம் ஏன் வாங்குறாரு இவரு.வட்டா''என்று அம்மையாலும் வசை பாடப்பெற்றார்.இதற்கும் பெரியாரின் கருத்துக்களின் எழுச்சிக்கும் ஏதோ ஒரு தொடர்பை அவர் உணர்ந்தார்.
அப்பாவிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது.ஒருவேளை அவரது குமாஸ்தா புத்தியாக அது இருக்கலாம்.எழுத்தில் வந்த எதையும் அவரால் புறக்கணிக்க முடியாது.எவ்வளவு பெரிய பொய் ஆனாலும் புத்தகத்தில் வந்தால் அது சத்தியமாக மாறிவிடுகிறது என்று அவர் உள்ளூர நம்பினார்.அது சரஸ்வதி சொருபம்லா என்பார்.ஆகவே அவரிடம் வந்துசேர்ந்த அத்தனை சுவிஷேச இலக்கியத்தையும் ஒரு தடவையாவது படிக்க முயற்சித்தார்.நீங்கள் பிசாசை வணங்குகிறீர்களா என்ற துண்டுப் பிரசுரம் படித்துவிட்டு முத்தாரம்மன் கோயிலுக்கு நடு இரவில் கிளம்பிப் போய்  அம்மனையே ரொம்ப நேரம் வெறித்துக் கொண்டிருந்தார்.'உங்கப்பனுக்கு நிச்சயம் வட்டுதாம்லே''எனறாள் அம்மை.
மெல்ல ஊரினுள் அவரைப் போல படிக்கும் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி உருவாகியது.பெரியாரைப் பற்றியும் நாஞ்சில் நேசனில் அப்பாவின் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகள் பற்றியும் முத்தாரம்மன் கோயில் திண்டில் வட்டமாய்  அமர்ந்து விவாதிக்கப் பட்டது.ரொம்ப நாள் காரசார விவாதத்தின் பின்பு குழு இரண்டு முடிவுகளை எடுத்தது.ஒன்று பெரியார் சொல்வது போல ஹிந்து மதம் மூடநம்பிக்கைகளின் மூட்டை அல்ல.ஆனால் அவர் பார்ப்பனனைப் பற்றி சொல்வதெல்லாம் சரிதான்.அவன்தான் ஹிந்துமதத்தை இந்த தீன நிலைக்கு தள்ளியவன்.ஆகவே அவனை எதிர்க்கவேண்டும்.

இந்த முடிவின் உடனடி விளைவாக கோயிலில் பத்து வருசமாக பூசை பண்ணிக் கொண்டிருந்த ஐயரை நீக்கி விட்டு பழையபடி ஓதுவார் வகையராவையே வைத்து பூசை பண்ணுவது என்று தீர்மானம் பண்ணப் பட்டது.இரவு பூசையை முடித்துவிட்டு சாவகாசமாக ஏதோ  பொழுதுபோக்கு என்ற மட்டிலே அறிந்திருந்த அய்யர் அதை எதிர்பார்க்கவில்லை.தெரிந்திருந்தாலும் அவர் பக்க நியாயத்தை  வாதாடும் திறமை அவருக்கில்லை.உண்மையில் அவருக்கு அம்மே நமசிவாயா நாராயணா என்ற பதங்களைத் தவிர வேறு மந்திரங்கள் எதுவும் தெரியாது என்ற புரளி உண்டு.''அதுதான் நம்ம ஊர் .....னுக்கு  தெரியுமே''என்று அப்பாவிடம் ஒரு பெரும்தலை சொன்னார்.உண்மையில் அப்பாவே அதை எதிர் பார்க்கவில்லை.ஆனால் சரித்திரத்தை எப்படி திருப்பமுடியும்?
அய்யர் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்.அப்பா சரித்திரம் என்ற தேர் நகர்வதை தான் ஒருவனால்  நிறுத்தமுடியாது என்றும் சில வரலாற்றுப் பிழைகள் சரிசெய்யப் பட்டே ஆகவேண்டும் என்றும் இதில் தனிப்பட்ட ஆசைகளுக்கு இடமில்லை என்று சொன்ன எதுவும் அய்யருக்கு புரியவில்லை.''சரியாச் சொன்னேள்.கோயில்னா ஒரு தேர் வேணாமோ''என்ற ரீதியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.அப்பா அவருக்குப் பதிலாய் பணகுடியில் இருந்து ஒரு ஓதுவாரையும் தேடிக் கண்டுபிடித்துவிட்ட செய்தி தெரிந்ததில் இருந்து அவர் முகம் பார்க்க முடியவில்லை.
இப்போது அப்பாவின் குழுவில் இருந்த சிலருக்கே அய்யர் மேல் பரிதாபம் தோன்றிவிட்டது.'இருக்கட்டும் விடறே..அவருக்கு இத விட்ட வேற ஒரு எழவும் தெரியாது'தினம் அதிகாலையில்  பெண்டுகள் சொம்புடன் ஒதுங்கும் நேரத்திலேயே வீட்டுத் திண்ணையில் வந்து காத்திருக்கும் ஐயரால் சங்கடம் அடைந்து அம்மாவே ''இருக்கட்டுமே எளவு..ஒதுவார்தான் வேணும்னு ஆத்தாள் கேட்டாளா..புள்ளகுட்டி வேற இருக்கு..எங்கியாவது கடல்ல பாஞ்சிரப் போறாரு''என்று சொல்லிப் பார்த்தாள்.
அப்பா அசையவில்ல்லை.அவரைப் பொறுத்தவரை அந்த செய்கைதான் பெரியாருக்கான அவரது பதில்.இல்லாவிடில் அவர் வேறு ஒரு பதில் தேட வேண்டும்.
மெல்ல ஊரெங்கும் அவ்விசயம் ஒரு பேச்சலையை உருவாக்கியது.ஊர் இரண்டாய்ப் பிரிந்து அப்பாவிடம் தனது கருத்தை தெரிவிக்க வந்துகொண்டே இருந்தது.அய்யர் பூசையை எல்லாம் விட்டுவிட்டு ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினார்.கடைசியில் ஓதுவாரும் தன் குடும்பத்துடன் வந்து இறங்கிவிட்டார்.அவருக்கு ஒரு வீடும் ஒதுக்கப் பட்டது.அன்றிரவு அப்பா வெகுநேரம் கழித்தே வீடு திரும்பினார்.அய்யர் கடைசி முயற்சியாக நெடுநேரம் காத்திருந்துவிட்டு போனார்.போகும்போது அவர் நடையைக் காணச் சகியாது அம்மா ''ஏன் இந்த பாவத்த வாங்கிச் சேக்காறு உன் அப்பன்''என்று கசந்துகொண்டாள்
அப்பா அன்று சாப்பிடவில்லை.அவரால் சாப்பிடமுடியாத படி ஒரு தத்தளிப்பில் இருந்தார்.அவரது நோட்டுப் புத்தகத்தில் தீவிரமாக ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.அப்போது கதவு தட்டப் பட்டது.நான் போய் கதவு திறக்கப் போனேன்.அப்பா தடுத்து 'அய்யரா இருந்தா தூங்கியாச்சுன்னு சொல்லு''என்றார்.
அய்யர் இல்லை.முப்பது வயது மிக்க ஒரு பெண் தலையில் முக்காடிட்டிருந்தாள்.நான் அதுவரை அவளைப் பார்த்ததில்லை.ஆனால் அவளது சிவந்த முகமும் மூக்குத்தியும்  காதோரமும் முடியை ஒதுக்கையில் முழங்கையிலும் ஓடியிருந்த மென்ரோம வரிசையும் இன்றும் நினைவில் இருக்கிறது.நான் வந்து சொன்னேன்.அப்பா வேட்டியை இருக்கக் கட்டிக் கொண்டு வெளியே போனார்.திண்ணையின் இருட்டில் அவர்கள் வெகுநேரம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.அம்மா கிசுகிசுப்பாய் ''அய்யரோட சம்சாரம்''எனறாள்.
மறுநாள் ஓதுவார் திருப்ப பணகுடிக்கே அனுப்பப் பட்டார்.அப்பாவை அதற்குப் பிறகு பெரியார் தொந்திரவு செய்யவில்லை.
அப்படி என்ன அந்த மாமி சொன்னாள் என்று  வீட்டில் வெகுகாலம் பேச்சாய் இருந்தது.அம்மா ஒரு நாள் நொடிப்பாய் ''வேறென்ன சொல்லிருப்பா..தெரியாதா..'.......'விரிச்சாதான் ஆச்சு..பாப்பாத்தி சிரிச்சாலே போச்சு''எனறாள்.
'விரிச்சுன்னா' என்ன ?என்று கேட்டு நான் அம்மாவிடம் அடிவாங்கினேன்.

Thursday, August 26, 2010

உடல் தத்துவம் 4

எச்சரிக்கை! வயது வந்தவர்க்கு மட்டும்!

 நாங்கள் பரம்பரையாக சைவக் குடும்பம்.பூண்டு வெங்காயம் கூட முக்கிய நாட்களில் விலக்கப் பட்டிருந்தது.சோம்பு,[இலவங்கப் ]பட்டை போன்றவற்றை நான் காலேஜ் போகும்வரை அறிந்ததே இல்லை.முதன் முறையாக சோம்பு போட்ட பிரியாணி சாப்பிட்டுவிட்டு கடும் தலைவலியில் அவதிப் பட்டேன்.அந்த ஊரில் இருந்த சொற்ப சைவ  வேளாளரில் எங்கள் குடும்பமும் ஒன்று.ராஜராஜ சோழன்  குமரிக்கும் கேரளத்துக்கும் வந்தபோது சைவத்தையும் அதை பாதுகாப்பதற்காக சைவ வேளாளரான எங்களையும் கொண்டுவந்தான் என்பார் அப்பா.சுற்றிலும் இருக்கும் மக்கவழி மருமக்கவழி வெள்ளாளர்களுடன் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு உறவு இருந்தது.அவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களுக்கு அவர்களைப் பற்றியும் பரஸ்பரம் ஒரு எள்ளல் இருந்தது.அவர்கள் வீட்டு விசேடங்கள் அனைத்துக்கும் போவோம்.மொய் வைப்போம்.பந்தி வேளையில் இதோ வரேன் மக்கா என்று ஒழுகி வந்துவிடுவோம்.போகும் போதே சொல்லி அனுப்புவார்கள்.'லே போறது சரி சாப்பாட்டுக்கு உட்காந்திராதே..'அவர்கள்வருவார்கள். சாப்பிடுவார்கள் ஆனால் 'என்னடே ஆணைக்கு அருகம்புல்லில  சொரிஞ்சாப்பில அவைய்ன்களோட ஒரு சாப்பாடு...'என்று சலித்துக்  கொள்வார்கள்.

ஆனால் உடல் மாற மாற ருசி மாறியது.முதல் முதலாக நாகர்கோயிலில் மணிக் கூண்டருகில் ஒரு புரோட்டாக்கடையில் புரோட்டா சால்னா சாப்பிட்டு விக்கித்துப் போய் அமர்ந்திருந்தேன்.இப்படி ஒரு சுவையான பொருளை ஏன் தடை பண்ணி வைத்திருக்கிறார்கள்!என்று பேசிக் கொண்டே சுசீந்திரம் சாலையில் நடந்தே வீட்டுக்குப் போனோம்.பஸ் காசைத் தான் புரோட்டாவில் விட்டுவிட்டோமே.'லே அதில ரசவடை கணக்கா ஒண்னு கிடந்ததே அது என்னடே'என்றேன் புரோட்டாவை அறிமுகப் படுத்திய நண்பனிடம்.அவன் சற்று தயங்கி 'உங்க வீட்டுல சொல்லிறாதே.ஆட்டுக் குடல் 'என்றான்.நான் கொஞ்ச நேரம் கடவுள் என்னை வானத்திலிருந்து இடி கொண்டு தாக்கக் காத்திருந்தேன். ஆனால் அவ்விதம் எதுவும் நிகழவில்லை.அன்று வானம் மிகத் துல்லியமாக இருந்தது.பழையாற்றின் கரையிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது.ஏனோ ரொம்ப சந்தோசமாக இருந்தது.ஆட்டின் குடலுக்கு  உள்ள குணம் அது என்று ரொம்ப நாளே முடிச்சுப் போட்டு நம்பிக் கொண்டிருந்தேன்.அதன் பிறகு எப்போது மனக் கிலேசமாக இருந்தாலும் நாகர்கோயில் போய் ஆட்டுக் குடல் சாப்பிடுவேன்.

நாங்கள் ஊருக்கு நடந்து போவதற்குள் நான் புரோட்டாக் கடையில் ஒரு நாடார் பையனுடன் 'தென்பட்ட' செய்தி பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விட்டது.போகும்போது வீடே மயான அமைதியாய் இருந்தது.வழக்கமாய் வந்த உடனே ஏதாவது குடிக்கறியா என்று கேட்கும் அம்மா கிணற்றடியில் மிகத் தீவிரமாய் ஒரு வெண்கல உருளியை விளக்கோ விளக்கென்று விளக்கிக் கொண்டிருந்தாள்.என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.அப்பா சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடி  கண்களை இடுக்கி எதையோ படித்துக் கொண்டிருந்தார்.நான் ஏதோ அந்நிய வீட்டுக்குள் நுழைபவன் போலதான் புகுந்தேன்.ஆச்சி கேடராக்ட் கண்ணாடி வழியே பெரிதாகத் தெரியும் கண்களால் என்னை வாய் பிளந்து பார்த்தாள்.நான்  சிரிக்க முயன்று 'என்ன ஆச்சி'என்றேன்.அவள் 'ஏலே.குடியைக் கெடுத்தியே' என்றாள்.எனக்கு புரிந்துவிட்டது.
அதற்குள் புறவாசலில் அம்மா பாத்திரங்களை எறியும் சத்தம் கேட்டது.'எளவு மனுஷன் சொன்னா கேட்கறாரா.நம்ம ஊர்ப் பக்கம் போலாம்னு.இந்த வெருவாகெட்ட ஊரில எந்த சிறுக்கி இருக்காளோ தெரியலியே.இங்கேயே மோப்பம் பிடிச்சு சாவுதாரு.இப்ப பயலும் நாசமாப் போக ஆரம்பிச்சாச்சு.காந்திமதி அம்மா.கேட்க ஆள் இல்லியே''
அம்மாவின் ஊர் பாண்டிநாட்டில் சேரன்மாதேவி.இங்கு அப்பாவுக்கு தலை வணங்கி வந்த நாளில் இருந்து சின்ன சண்டை வந்தாலும் ஊருக்குப் போவோம் என்ற பல்லவியை ஆரம்பித்துவிடுவாள்.சேரன்மாதேவி தாமிரபரணிக் கரையில் உள்ள நல்ல ஊர்தான்.வயலும் வரப்புமாய் நாஞ்சில் நாடு மாதிரிதான் இருக்கும்.சோழர்காலத்துப் பழங்கோயில்கள் நிறைய உண்டு. பாண்டியின்  காஞ்சிபுரம் என்று சொல்வார்கள். ஒருநாள் ஏதோ ஒரு விசேடத்துக்கு  போனபோது 'அம்மை சொன்னத கேட்டா என்ன ..ஊரு நல்ல ஊரு 'என்றதற்கு 'ஊரு நல்ல ஊருதான் ஆனா உன் அம்மைக்க ஊருல்லா..அதான் பயமாருக்கு..இங்க வந்தா என்னைத் துவைச்சி தொங்கல்ல போட்டிறமட்டாளா' என்றார்.
அம்மா அப்பாவுடன் எங்கள் பார்வையில் நேரடியாக பேசவே மாட்டாள்.கோபம் வந்தால் கூட.அப்பாவுக்கு கோபம்வந்தால் கைகால் எல்லாம் வலிப்பு வந்தவன் போல உதறும்.ஒன்று யாரையாவது அடிப்பார்.அல்லது சாய்வு நாற்காலியில் சாய்ந்து இப்போது இருப்பது போல ஏதோ ஒரு புத்தகத்தில் ஏதோ ஒரு எழுத்தை தேடிக் கொண்டிருப்பார்.அம்மாவுக்கு கோபம் வந்தால் வீடே சுத்தமாகிவிடும்.உத்திரத்தில் மக்கிப் போய்விட்ட பாத்திரம் வரைக்கும் எடுத்து துலக்குவாள்.ஏற்கனவே பெருக்கியவீட்டை மறுபடி மறுபடி பெருக்குவாள்.அவள் பாத்திரத்தை விட்டுவிட்டு இப்போது  விளக்குமாறுடன் வீட்டுக்குள் வந்து 'தள்ளு .பெருக்கணும்.'என்றாள்.நான் கடைசி முயற்சியாக 'எனக்கு பசிக்குது.சோறு போடறியா'என்றேன்.அம்மா சட்டென்று திரும்பி 'ஏன் ஆடு தின்னு அடங்கலியா''என்றாள்.நான் அப்படியே சாய்ந்து தரையில் உட்கார்ந்தேன்.அப்பா எழுந்து உள்ளே வந்தார்.கையிலிருந்த புத்தகத்தை ஏன் அருகில்  மடித்து வைத்து 'இதைப் படி'
நான் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.காந்தியின் சத்தியசோதனை. அவர் ஆடு தின்று வயிற்றுக்குள் சத்தம் போடுவதுபோல் உணர்ந்த கட்டத்தில் மடித்து வைத்திருந்தார்.

மறுநாள் கல்லூரி விட்டு வரும்போது அதே நண்பன் 'என்னடே .இன்னைக்கு குடல் வேணாமா''என்றான்.நான் ''நா வரலை''என்றேன்.அவன்  பெரிதும் ஏமாற்றம் அடைந்தது தெரிந்தது.ஏன் எனில் அவனிடம் காசு கிடையாது.''நான் வெய்ட் பண்றேன்.நீ போய் பார்சல் வாங்கிட்டுவா''என்றேன்.

இன்று அந்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன்.சாதாரணமாக ஊன் சாப்பிடுபவர் கூட சாப்பிடாத மிருகங்களைப் புசித்திருக்கிறேன்.ஆண்மைக்கு நல்லது என்று ஒரு தடவை வாழை இலையில் சுற்றி காளையின் விதைகளைக் கொடுத்தார்கள்.அதைக் கூட சாப்பிட்டிருக்கிறேன்.நாடோடி வாழ்வில் மரக்கறி உணவாளனாய் இருப்பது எளிதல்ல.

கொஞ்சம் கொஞ்சமாக நான் மாமிசத்தின் ருசிக்கு அடிமை ஆனேன்.விதம் விதமாய் புலால் உணவுகளை தேடித் தேடி சாப்பிட ஆரம்பித்தேன்.மாமிசம் சாப்பிட சாப்பிட என் உடல் மனம் புத்தி எல்லாம் மாறுவது உணர்ந்தேன்.ஆனால் மாட்டுமாமிசம் மட்டும் ரொம்ப நாள் சாப்பிடவில்லை.அந்த எல்லைக் கோட்டைத் தாண்ட ஏனோ ஒரு தயக்கம் இருந்தது.அப்பா  காந்தி வேலைக்கு ஆகவில்லை என்று உணர்ந்து சிவனாந்தா விவேகானந்தா சிவசைலம் சாமியாரின் மரக்கறியின் உன்னதம் என்று புதிது புதிதாக புத்தகங்கள் கொடுத்துப் பார்த்தார்.நான் அதெல்லாம் படித்துவிட்டு தான் இவற்றை எல்லாம் சாபஈட்டுக் கொண்டிருந்தேன்.மாமிசம் கொடுக்கிற தினவு எனக்குப் பிடித்திருந்தது.அந்த தினவு கொடுக்கிற காமம்..அதுவும் பிடித்திருந்தது.
உண்மையில் மாமிசத்தின் மீதுள்ள ஏன் ருசியை வைத்துதான் முருகேஸ்வரி அத்தை என்னை மடக்கினாள்
'என்னடே.கறி திங்க ஆரம்பிச்சிட்டியாமே''என்றாள் ஒருநாள்.''உங்க அம்மை சொல்லி ஆத்தாமைப் படறா''.பிறகு என்னை சாய்வாய்ப் பார்த்துக் கொண்டே ''நாளைக்கு வீட்டுக்கு வா.உனக்கு நீ பார்க்காத கறி ஒண்னு காமிக்கேன்.''என்றாள்.
நான் கேலியாய்  ''அதென்ன கறி அது.ஆனைக் கறியைத்தவிர எல்லா கறியும் சாப்பிட்டாச்சு''
அவள் என்னை ஊடுருவிப் பார்த்து ஏறக் குறைய இந்த சாமியார் சொன்னது போல தான் சொன்னாள்.''இது மனுசக் கறி பார்த்துக்க.ஒருதடவை தின்னா விடவே மாட்டே''

Sunday, August 22, 2010

அம்மாவை அழைத்து வா

இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய  கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய் 
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள் 

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம்  அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ...

Tuesday, August 17, 2010

காதலின் சாம்பல்

வரலாற்றின் வழிமாறாமல்
ஒரு கோப்பை மதுவுடன்தான்
என் காதல் தோல்வியையும்
தொடங்கினேன்.
இனி என் வாழ்வின்
வளைவுகளில்
காண நேரும்
அத்தனை பெண்களின்
முகங்களிலும்,
வாசிக்கநேரும்
அத்தனை கவிதைகளின்
ஏதோ ஒரு வரியிலும் ,
கேட்கநேரும் இசையிலும்
சினிமாக்களின் நடுவிலும் என
அவள் நினைப்பு
காய்ச்சல் கசப்பாய்
எழுந்து
வந்துகொண்டே இருக்கும்
என்பதை
தனிமையின் சுவர்கள்
நெருக்கி அழுத்தும் போதெல்லாம்
பீதியுடன் உணர்ந்தேன்.

நினைவின் கனல் துரத்த
போதையின் 
மறதி அடுக்குகளில் 
புதைந்து கொள்ள 
உயிர் பதற ஓடினேன்.
ஆனால் அங்கும் 
என் இருதயத்தின் உதிரம் 
சொட்டும் பற்களுடன் 
அதன் நிழல் நிற்பதைக் கண்டேன்.
எனினும்
ஒவ்வொரு இரவும்
எரிந்து போன
காதலின் சாம்பலை 
என் ரத்தத்திலிருந்து
கரைத்துவிடும்
அந்த
ஒற்றைக் கோப்பை மதுவைத்
தேடிச்
சென்று கொண்டேதான் இருக்கிறேன்.
.

Thursday, August 12, 2010

சொற்களால் ஆனது

கேட்போர் பற்றிக்
கவலையின்றி
நீ
சொற்களை
சரம் போல்
பெய்துகொண்டே இரு.
ஏதோ ஒரு
பலவீன தருணத்தில்
அவர்கள் செவிகளின் 
மௌனப் பறை உடையும்.
கிடைத்த சிறிய
இடைவெளியில்
நுழைந்துவிடும்
போதை விஷம் தடவிய
நமது ஒற்றைச் சொல்.
மூளையெங்கும்
புற்றாய்
பல்கிப் பரவும்.
ஒரே இரவில்
அவர்கள்
ஆன்மா முழுதும்
நமது
சொற்களால் நிரம்பியிருக்கும்.
இனி சிரமமில்லை.
அவர்களை நாம்
அவர்களின் உள்ளிருந்தே
ஆளலாம்.
ஏனெனில்
சொற்களால் ஆனது
அவர்கள் உலகம்.

Wednesday, August 11, 2010

ஓசையற்ற குரல்கள்

நெருங்கிவிட்டது
பூமாலைகளும்
தோரணங்களும்.
சடங்குகளுக்கும்
சம்பிரதாயங்களுக்குமான
நேரம்.

உறையாத
புன்னகைகளும்
அலுப்பான போஸ்களும்
ஆசிகளும்
பரிசுகளும்
நீளமான நன்றிகளும்
பந்திச் சச்சரவுகளும்
உறவுக் கூச்சல்களுமென
நினைக்கும்போதே
சலிப்பு  தட்டிற்று.

கனவுகளே இல்லாது
கடந்து போகவேண்டிய
இன்னொருநாள் .
முடிக்கவேண்டிய
இன்னொரு வேலை
என்பதாய்..
யாரோ ஒருத்திக்கு
யாரோ ஒருவனோடு
திருமணம் என்பதாய்
இருந்தேன்.


இந்த
இறுதி நிமிடத்திலாவது
என்
இதயம் அறிவானா
என்ற ஆசையில்
அவனை
அலைபேசியில்
குரல்நடுங்க அழைத்து
என் காதலின்
கடைசிச் சொல்லாக
எனக்கு திருமணம் என்றேன்.
அவன்
அனிச்சையாய்
வாழ்த்துக்கள்
என்றான்.

Tuesday, August 3, 2010

சொல்விஷம்


கவனமற்ற
ஒரு தருணத்தில்
தவறி விழுந்த
ஒற்றைச் சொல்லில்
தொடங்கியது  அது.
பாதியில் உறைந்த
புன்னகைகளுடன்
தனிமையின் வெறுமையில்
ஒரு விஷ ஸ்வரம் போல
திரும்ப திரும்ப
மீட்டப் பட்டது
ஆக்டோபஸின் விரல்கள் போல்
அச்சொல்லின் விரல்கள்
மூளையின்
இடுக்குகள் யாவும்
நுழைந்தன.
ஆகாசத் தாமரையாய்
மனக் குளமெங்கும் பரவின.
நீள இரவுகள் முழுதும்
எதிர்ச் சொற்கள்
நெய்யப் பட்டன.
எய்யாத சொற்கள்
நெஞ்சில் தேங்கி
இன்னும் அழுகின.

இனி உடைக்கவே முடியாது என்று
 நாம் பதற்றத்துடன் 
உணர்வதற்குள்ளேயே
நம்மிடையே
ஒரு ராட்சச வலிச் சுவரை
எழுப்பியிருந்தது
அந்தப்
பார்த்தீனியச் சொல்.

LinkWithin

Related Posts with Thumbnails