இப்போதெல்லாம்
என் கவிதைகளைப் படித்துவிட்டு
யாராவது என்னைத்
தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள்..
ஆனால் ஒவ்வொருவரும்
வெவ்வேறு மனச் சித்திரத்தோடு வருகிறார்கள்.
சிலர் மார்புவரை
தத்துவத்தாடி நுரைத்துத்
தொங்கும் கிழவனாக
என்னை உருவகித்துக் கொள்கிறார்கள்..
அவர்கள் வாழ்வு முழுதும்
ஒற்றைச் சொல்லில்
தங்கள் துயர் அனைத்தையும்
துடைத்தெறிந்துவிடும்
ஒரு குருவைத்
தேடி அலைபவர்கள்
என யூகிக்கிறேன்
சிலர் என்னை
எப்போதும் புகையும்
துப்பாக்கியுடன் திரியும்
புரட்சிக் காரனாக
கற்பனை செய்து கொள்கிறார்கள்
அவ்வாறு வருபவர்கள்
பனியன்களில் இருந்து மட்டும்
பத்து விதமான
சே குவேராக்களை நான் அறிவேன்.
இன்னும் சிலர்
மலர்மை கொஞ்சும்
ஒரு பெண்ணை எதிர்பார்த்து வருகிறார்கள்
அவர்கள் என்னுடன்
'சேர்ந்து '
ஒரு கவிதை எழுதும்
கனவோடு வருகிறார்கள்
வேறு சிலர்
ஏதாவது பெரிய குற்றம் ஒன்றைச்
செய்துவிட்டு வருகிறார்கள்
அவர்கள் எதிர்பார்த்து வருவது
பாவ மன்னிப்புத் தண்ணீருடன்
ஒரு பாதிரியை ...
பெண்களில் அநேகம் பேர்
செத்துப் போன
அவர்கள் அப்பாக்களைத்
தேடியே வருகிறார்கள்
அல்லது
அவர்களைத் துரத்தும்
இருத்தலில் இருந்து விடுவித்து
மார்பு நெருங்க
அணைத்துத் தூக்கி
குதிரை மேல் இருத்தி
காவிரிக்கரை முழுதும்
செலுத்திப் போகும்
ஒரு வந்தியத் தேவனாய் நான் இருப்பேன்
என்று கற்பனையில் வருகிறார்கள்
எனக்கு சைக்கிள் கூட
ஓட்டத தெரியாது
என்று தெரிந்ததும்
அவர்கள் திரும்பி வருவதே இல்லை
பெரும்பாலான நபர்களை
கீழ்வீட்டுப் பெண்மணியே
அப்படி யாரும் இல்லை
என்று விரட்டிவிடுகிறாள்
அவள் எனை
யார் முகமும்
பார்த்துப் பேசாத
மூன்றுமாத வாடகை தராத
சந்தேகக் கஞ்சாக் கேசாகவே
அறிந்திருக்கிறாள்
இருப்பினும் அவளையும் மீறி
யாராவது வந்துவிடுகிறார்கள்
இதோ இப்போது கூட
யாரோ அழைப்பு மணியைத்
துன்புறுத்துகிறார்கள்
கணினியில் இருந்து
இந்தக் கவிதை காயாத கையுடனே
எழுந்து கதவு திறக்கிறேன்
நீலப் பூக்கள்
ஒழுகும் சுடியில்
ஒட்டகச் செருப்பில்
திகிரிக் கண்ணாடிக் கடியில்
எண்ணெய்த் துளிகள் போன்று
மினுங்கும் கண்களுடன்
வந்தவள் கேட்கிறாள் ..
''மிஸ்டர் வந்தியத் தேவன்?''
//அவள் எனை
ReplyDeleteயார் முகமும்
பார்த்துப் பேசாத
மூன்றுமாத வாடகை தராத
சந்தேகக் கஞ்சாக் கேசாகவே
அறிந்திருக்கிறாள்//hahaha
அசத்தல்
இன்று தான் உங்கள் வலைபூவிற்கு முதல் வரவு. மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்
ReplyDeleteSimply Superb :)
ReplyDelete//கவிதை காயாத கையுடனே//
ReplyDeleteஅது என்றும் வற்றாத ஜீவநதி... காயாது போகன்..... வழக்கம் போல் அருமை அசத்தல்...;-) ;-)
அருமையான தொடக்கம்.
ReplyDeleteநாம் யார் என்பதை நம் செயல் உருவகப்படுத்துவதை எண்ணி அடிக்கடி வியந்திருக்கிறேன். முதல் பத்து வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் :)
தேடல்...????
ReplyDeleteNice. Vanthathu Kundhavai thaane? Nandhini illaiye?
ReplyDeleteஹலோ போகனே!
ReplyDeleteவந்தியத் தேவன் .....ஒரு கற்பனை கதாபாத்திரம். போகன் உண்மையெனில் .....வந்தியத் தேவனாகும் வாய்ப்பில்லை.
என்னுடைய கையும் உன் கதவை தட்டுகிறது, ஆனால் வந்தியத் தேவனை எதிர்பார்த்தல்ல.
என்னமாய் எழுதுகிறாய்? ஆன்மாவை எழுத்தில் கொட்டி ......... ஒவ்வொரு கவிதையிலும் முதுகுத் தண்டு சிலிர்த்தது.....இதுவரை எப்போதும் அவ்வாறு நிகழ்ந்ததாக நினைவில்லை. என் மனதார்ந்த நன்றி , இப்படி ஒரு அனுபவத்தை அளித்தமைக்கு........
Do you know why I commented here. Just to tell you that I read all your posts! :) Wonderful work.
Thanks again.