Monday, February 28, 2011

மையம்

இரண்டு 
மதுக் கோப்பைகளில் 
இருந்து 
வ 
ழி 
ந் 
து 
வந்த 
ஒற்றைத் 
தேன்துளி போல 
தேங்கிக் கிடந்தது 
அவள் நாபி 
அங்கிருந்துதான் 
ஆரம்பிக்க வேண்டும் 
அடுத்த கவிதையை....

கூடு

யாரும் வாசிக்கவே இல்லை 
என்றால் கூட 
விழி எரித்து 
சுடும் கவிதைகள் 
எழுதிக் கொண்டேதானிருக்கிறேன் 
யாரும் கேட்கவேயில்லை 
எனினும் கூட 
மனம் மறுகி மறுகிப் 
பேசிக் கொண்டேதான் இருக்கிறேன் 
கடிந்து மறுத்தால் கூட 
காட்டருவி போல் 
காதலைக் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறேன் 
என்ன செய்வது 
இடிந்து இடிந்து விழுந்தாலும் 
இறுதிவரை 
இந்தச் சுவற்றை 
என்னைச் சுற்றி 
எழுப்பிக் கொண்டேதான் 
இருக்கவேண்டி இருக்கிறது 

உச்சிக் கிளையில் 
காற்று 
கலைக்க கலைக்க 
தினமும் 
கட்டிக் கொண்டேதானிருக்கிறது 
குருவி 
தனக்கான கூட்டை...

Thursday, February 24, 2011

இடறல்

விவிலியம் கூறுவது போல 
வெட்டிப் போட்டுவிட்டாலென்ன 
இதை 
என்று சிலநேரம் தோன்றுகிறது 
வளையில் சுருண்டு
மௌனித்திருக்க வேண்டிய 
இடங்களில் 
நேரங்களில் எல்லாம் 
சட்டென்று 
அசந்தர்ப்பமாய் 
கனத்து விரிந்து சீறுகிறது 
நட்பு நட்பு 
என்று கத்தினாலும் 
கற்பு கற்பு என்று 
கதறினாலும் 
காதில் ஏற்காது 
மயிர்ப் புற்றிலிருந்து 
படமெடுத்து ஆடுகிறது 
இரவுகளில் 
எலும்புவரை 
உயிரை 
இழுத்து உறிஞ்சி 
வெள்ளித் திரவமாய் 
கனவுகளில் பரவுகிறது  

படிக்கும்போது, 
பணி நடுவில், 
பிரார்த்தனையின் பாதியில், 
நோய்ப் படுக்கையில் கூட 
கடுக்கும் விஷமாய் 
கரைக்கும் அமிலமாய்.....
அறிவியல் 
அற நூல்கள் என்று 
அத்தனை போதனைக்கும் 
அடங்காது ஆடும் 
இந்தப் பாம்பை  

வெட்டிப் போட்டுவிட்டால்தான் என்ன?

Sunday, February 20, 2011

கோடை கால காற்றே ...

மலேசியா வாசுதேவன் இன்று இறந்துவிட்டதாக செய்தி வந்தது.நான் அதிர்ச்சியுறவில்லை.இப்படித்தானே இனி நடக்கும் என்ற ஸ்டாயிக் மனநிலைக்கு கொஞ்ச நாளுக்கு முன்பே வந்திருக்கிறேன்.மீசையும் ஆசையும்  நரைக்கத் துவங்கும் சந்தியில் நிற்கிறேன்.என் பால்யத்தை தங்கள் கவிதைகளாலும் கதைகளாலும் இசையாலும் நடிப்பாலும் நிரப்பியவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக விசை தீர்ந்த பொம்மைகள் போல களைத்து நின்றுவிடுவதைக் காண்கிறேன்.

சிறுவயதில் நான் என்றும் வீட்டுக்குள் தூங்கியதே இல்லை.பெரும்பாலும் வானம் பார்த்த படுக்கைதான்.உறங்கியதைவிட நட்சத்திரங்கள் மெல்லத் துலங்கி வருவதை பிரகாசம் கூடி ஒளிர்வதை மெல்ல மீண்டும் தளர்ந்து மங்குவதை முடிவில் பார்வையின் விளிம்பிலிருந்து தவறி  உதிர்வதை எல்லாம் கவனித்துக் கொண்டு விழித்திருந்த இரவுகளே அதிகம்.


என் பால்யம் முழுவதும்  நெல்லையைச் சுற்றியிருக்கும் சிறு கிராமங்களில் கழிந்தது.வானொலி  என்ற கருவியையே  ஒரு அலாவுதீன்  விளக்கைப் போல பார்த்த காலம்.பாளையங்கோட்டையில் எனது உறவினர் வீடு ஒன்று ரேடியோ வீடு என்றே என்னால் அழைக்கப் பட்டது.ஒரு பெரிய பானசோனிக் கடத்தல் ரேடியோ  அங்கு இருந்தது.ரேடியோ கேட்பதற்கென்றே ஒரு தல யாத்திரை செல்வது போல விடுமுறைகளில் அவர்கள் வீட்டுக்கு ஆச்சியுடன் போவேன்.பெரும்பாலும் இந்தியிலோ தமிழிலோ செய்திகளை மட்டுமே மொனமொன வென்று பேசிக் கொண்டிருக்கும் அந்த ரேடியோ திடீரென்று சிலிர்த்துக் கொண்டு தேனருவி கொட்டத் துவங்கும் அந்த நிமிசத்திற்காய் என் மொத்த நாளையும் வடிவமைத்துக் கொண்டு காத்திருப்பேன்.அப்போது கேட்டதுதான் மலேசியாவின் மந்திரக் குரல்.நான் டி எம் எஸ் போன்றோரின் காலத்து ஆள் இல்லை.எஸ் பி பி போன்றோரை ரசித்தேன் எனினும் [சுஜாதாவின் கதை நாயகர்களைப் போலவே] அவர்கள் என்னைப் போன்ற அரைக் கிராமத்தானின் அனுபவ வளையத்துக்குள் பொருந்தி வராதவர்கள். என் கனவுகளையும் காதலையும் அவர்கள் குரலில் நிச்சயமாகப் பாட முடியாது என உணர்ந்தேன்.அதனால்தானோ என்னவோ நான் வாசுதேவனுடன் மிக நெருக்கமாய் உணர்ந்தேன்.ஆட்டுக் குட்டி போட்ட முட்டையிலிருந்து கோடை காலம் வீசிய காற்று வரை அவர் என் உணர்வின் குரலாய் இருந்தார்.


பிறகு நான் எவ்விதமோ அவரை மறந்து போனேன்.நெல்லையை சுற்றிக் கிடந்த கிராமங்களில் இருந்து நாங்கள் நெல்லைக்கு வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.நகரப் படுத்தல் அன்னியப் படுத்தலாகவும் ஆகியது. இங்கு மலேசியாதான் எனக்குப் பிடித்த பாடகர் என்று சொல்வது நான் ஒரு காட்டுவாசி மனிதன் என்று சொல்வதற்கு இணை என்று அறிந்ததும் ஒரு புண் போல எனது பிரேமையை மறைத்துவிட்டேன்.ஷாஜியின் இந்த http://musicshaji.blogspot.com/2010/08/blog-post_16.htmlஉயிர்மைக்  கட்டுரை வரும்வரை இந்த அக மறைப்பு தொடர்ந்தது.அந்தக் கட்டுரையின் பின்னரே நான் அப்படி ஒன்றும் பட்டிக் காட்டான் அல்ல என்று உணர்ந்தேன்.மலேசியா வாசுதேவன் தனது பாடல்களால் எனது இளமையை நிரப்பியவர்.எத்தனையோ கிராமங்களில் சிள் வண்டுகளின் ரீங்காரத்துக்கு நடுவில் எப்போதோ கடந்து போகும் பேருந்து வீசிப் போகும் வெளிச்ச வரிகளைத் தவிர கும்மிருட்டில் குளிர்ந்து கிடக்கும் ஊர்களில்  கயிற்றுக் கட்டில்களில் அவர் குரல் விதைத்த கனவுகளோடு உறங்கப் போய் இருக்கிறேன்.நீர்க் கோல வாழ்வின் நிலையற்ற உறவுகளின் நடுவே கேட்கும்தோறும் என்னை என் அற்ப வாழ்வின் பிடியிலிருந்து கொஞ்ச நேரமேனும் விடுவித்து வானேற்ற மறக்காத மறுக்காத குரல் அவரது .


நான் சரியான அஞ்சலி எழுத்தாளன் அல்ல என்பதை நானறிவேன்.எனினும் சமீப காலபமாக எனது வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.நாகேஷ்,ஸ்ரீவித்யா,ரகுவரன்.லோகிதாஸ் ,முரளி[இரண்டு முரளிகளும்]]ஹனீபா, சுஜாதா,சொர்ணலதா  என்று பட்டியல் நீள்கிறது ,இது இன்னமும் நீளும் என அறிவேன்.இவர்கள் இறக்கையில் எல்லாம் என்னுள்ளும் ஒரு சிறு பகுதி இறந்து போய்விட்டது என உணர முடிகிறது.இறத்தல் ஒரு நாள் நிகழ்வல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது உதிர்ந்தவைகளுக்குப்  பதிலாய் புதிய நட்சத்திரங்கள் முளைக்க மறுக்கின்றன.அல்லது என் வானம் அவற்றிற்கு இடம் தர மறுக்கிறது.விதைக்கும் காலம் முடிந்துவிட்டது.இனி அறுக்கும் காலம் 


என் இளமையில் பல கனவுகளை விதைத்தவனுக்கு நன்றிகளும் அஞ்சலிகளும் 

Saturday, February 19, 2011

அதருக்கம்

இத்தனை
அலட்சியத்தை  
நீ என்மீது 
காட்டியபோதும் 
அவமானத்தின் சகதியை 
என் மீது 
அள்ளி அள்ளிக் கொட்டியபோதும் 
மன்னிக்க மன்னிக்க 
துரோக விஷத்தில் 
என்னை 
தோய்த்தபோதும் 
ஏன் மீண்டும் மீண்டும் 
உன்னையே 
காதலித்துக் கொண்டிருக்கிறேன் 
என்று 
கண்ணீரால் கரைந்த 
மற்றுமொரு  பின்னிரவில் 
யோசித்தேன் 
முடிவே அற்று நீண்ட 
பாலை  இரவு முழுதும் 
மெய்நிகர்க் காட்டில் 
திசை தப்பியவன் போல  திரிந்தேன் 
நான் ஏன் இப்படி 
என்னை வதைத்துக் கொள்கிறேன் 
என்று 
எதோ ஒரு கணினி 
சொல்லிவிடக் கூடுமென ...

விடிகாலைப் புலரியில் 
போதி வெளிச்சம் 
ஒன்று கிடைத்தது 
கொல்லவரும் புலியை நேசிப்பவரும் 
கொத்தவரும் 
கொடு நாகங்களை 
குழந்தைகள் போல பாவிப்பவரும் 
இவ்வுலகில் உண்டென 
அங்கு அறிந்தேன்  
புழுக்களை விரும்புபவரைக் 
கூட 
அவ்வுலகில்  நான் சந்தித்தேன்  
முன்பும் நான் 
அவர்கள் போன்றோரைக் 
கேள்விப்பட்டதுண்டு 
ஆனால் 
ஒருபோதும் 
அவர்களைப் புரிந்துகொள்ள 
முடிந்ததில்லை 
ஆனால் தோழி 
அடுத்த முறை சந்திக்க 
நேரிடும்போது 
பாம்புகளைக் காதலிப்பவர்களை 
புழுக்களைக் கொஞ்சுபவர்களை 
எல்லாம் என்னால் 
புரிந்து கொள்ளமுடியும் 
என்றே தோன்றுகிறது  

அவர்கள் தான் சொன்னார்கள் 
எனக்கு 
மனிதன் 
ஒருபோதும் தருக்கத்தால் 
ஆனவன் அல்ல 
மாறாய் 
அவன் 
காதலினால் ஆனவன் என்று...

Sunday, February 13, 2011

உன் அடையாளம்

நீ யார் என்று கேட்ட
கௌபீனச் சாமியிடம்
என்  பேரைச் சொன்னேன்
ஒத்துக் கொள்ள மறுத்தது
உலகப் புகழ் சாமி

என் சான்றிதழ்ப்  பெயர்
சாதிப் பெயர்
அம்மை என்னை விளிக்கும் பெயர்
பள்ளியில் என்னைப் படுத்திய
பட்டப்  பெயர்
படுக்கையில் உடன் படுத்தவள்
உச்சத்தில் காதோரம் உளறும் பெயர்
எதுவும்  இல்லை என்றபோது
இன்னும் யோசித்தேன்
நான் யார்
ஒல்லிப் பிச்சான்
ஓணான் உடம்புக்காரன்
வீங்கிய தலை யில்
விழுந்து விடுவது போன்ற
கண்களுடன்
தினம்தோறும் குடிப்பவன்
அதனால் குடல் புண்காரன்

நெல்லையில் பிறந்தவன்
குமரியில் வசிப்பவன்
கணினி மூலமாய்
ககனத்துடன் சம்பாஷிப்பவன்
அரசுவேலை
பதினைந்து  வருட சர்வீஸ்
நாற்பத்தி ஐந்து சத டி ஏ
 நாலு விசாரணை
இரண்டு பணியிடை   நீக்கம்
விஷயம் தெரிந்தவன்
ஆனால் கொஞ்சம் விசரன்
என்று
அலுவலகத்தில் பேசப் படுபவன்

ராமனை வெறுப்பவன்
கம்பனைக் காதலிப்பவன்
மடோன்னா கேட்பவன்
மலையாளப் படங்கள் பார்ப்பவன்
கடவுளை மறந்தவன்
நாத்திகத்திலும் நிலை கொள்ளாதவன்
கூடலில் விருப்புள்ளவன் 
கூட்டம் கண்டு பதறுபவன் 
பெண்களை வெறுப்பவன் 
ஆனால் அவர்கள் ஆடைகளை 
எப்போதும் உள்ளே 
உரித்துக்  கொண்டே இருப்பவன்   
என்றெல்லாம் 
என்னை உருவி உருவி அடுக்கினேன் 
போட்டுப் போன பொய் 
எல்லாம் களைந்து
அம்மணமாய் 
அதன் முன் நின்றேன் 
அனைத்தையும் கண்ணால் 
மறுத்தது மறை வேண்டா ஞானி 
அழுகிய பழம் போல 
எல்லாம் வாங்கி 
இடப்புறம் எறிந்தது

பின்னர் நாள்முழுக்க
வெளியில்
ஆல்நிழலில்
அமர்ந்து யோசித்து
தயக்கமாய்
அருகணைந்து
நான் போகன்
எழுத்தாளன்
என்றேன் மெல்ல ...
இம்முறை
மறுக்காமல்
மௌனமாய் இருந்தது
மலைச் சாமி 

Saturday, February 12, 2011

படுதா

சில நாட்களாகவே கேரள தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள மழைக் காடுகளில் திரிந்து கொண்டிருந்தேன்.ஒளிந்து கொண்டிருந்தேன் என்று சொல்லவேண்டும்.அலைபேசிக் கற்றைகள் அணுக முடியாத உயரங்களைத்  தேடித் தேடிப்  போய்க் கொண்டிருந்தேன்.ஒரு பஜாஜ் பிளாடினா  பைக்கில் மலையாளத்தின் பச்சைக்குள் ஒரு குறி யோனியில் நுழைவது போல் துழாவித் துழாவிப் போய்க் கொண்டே இருந்தேன்.ஒரு பெண் காமத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இளகி தன்னை விரித்துக் கொள்வது போல் அது  என்னை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது .பகல் முழுக்க பருந்துகள் திரியும் உச்சிகளில் சுற்றிவிட்டு இரவு தங்கலுக்காக ரப்பர் தோட்டங்களுக்கு இறங்குவேன்.மின்சார வசதி இல்லாத பழைய  தூசி ஒழுகும் ஒரு ஓட்டுவீடு.ரப்பர் மரங்களுக்குள் ஒரு ரகசிய நோய் போல் புதைந்து  கிடந்தது.ஜெனரேட்டர்  இருந்தது.ஆனால் அதைத் தொடவே இல்லை.கையில் ஒரு சிறு மின்விளக்கு இருந்தது.ஏசுநாதரைப் போல் கதறிக் கதறிப் பொங்கி உருகும் சில மெழுகுவர்த்திகள்.உண்மையில் அவற்றைக் கூட அதிகம் பயன்படுத்தவில்லை.சிறு இருள் பொந்து கிடைத்தாலும் அதில் புதைந்து மறைந்து கொள்ளவே விரும்பினேன்.வெளிச்சம்ஏனோ ரொம்ப ஆபாசமாய் இருப்பது போல் பட்டது அப்போது.

விடிகாலைகளில் ஒரு சாம்பல் பலூன்  போல் ரப்பர் மரங்களின் தலைக்குமேல் கதிரவன் உயர்வதை ,பிறகு என்ன நினைத்தாயடா என்னை என்று சற்றுநேரம் சினம் கொண்டு எழுந்து ஆள்வதை பிறகு ஸ்கலிதம் செய்துவிட்ட  ஆண் போல் தளர்ந்து  அவற்றின் காலடியில் தளர்ந்துவிழுவதை பார்த்தேன்.அதிகாலை இரண்டு மணிக்கே  தலையில் பொருத்திய விளக்குகளுடன் கொள்ளிவாய்ப் பேய்கள் போல் ஆட்கள் ரப்பர் மரங்கள் ஊடே பால் கறக்க அலைவதை,மரங்களின்  தொடைகளைக் கீறி வழியும் வெண் குருதியை  சிரட்டைகளில் சேர்ப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.வெட்டுப் பட்ட பிளவுகளில் பிளாஸ்டிக் சருகுகளை பெண்கள் மாதந்திர தினங்களில் அடைத்துக் கொள்வது போல் சொருகிச் சுற்றுவதைப் பார்த்தேன்.சேகரித்த றப்பர்த் துளிகள் இயந்திரத்தின் பற்களிடையே ஒரு தசைத் தட்டு போல் உருவாவதைப் பார்த்தேன்.அதன் அழுகிய நிண வீச்சத்தை ஒரு நறுமணம் போல்  முகர்ந்து கொண்டு இரவெல்லாம் இருளில் பத்து நாட்களுக்கும் மேலாக படுத்துக் கிடந்தேன்.

முதல் நாள் மட்டும் தனிமை கனத்து திண்டுக்கல்லில் உள்ள நண்பனிடம் பேசினேன்.
''என்னடா எங்கிருக்கே..என்ன ஆச்சு ஆபிசுக்கு பத்துநாளா வரலியாமே.லீவ் லெட்டரும் கொடுக்கலைன்னு சொல்றாங்க...உங்க அம்மா வேற எனக்குப் போன் பண்ணி அழறாங்க...ஏன் இப்படிப் பண்றே..இந்த தேவடியா இல்லேன்னா உலகத்துல எழவு வேற ஒண்ணா இல்லே?''என்ற போது வைத்துவிட்டேன்.
வேற இருக்கா இவ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன்.அதற்குப் பிறகு அவனுக்குப் போன் செய்யவில்லை.சார்ஜ் தீர்ந்த போனை உயிர்ப்பிக்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

ரப்பர் தோட்டங்களில் பெரும்பாலும்  காலை இரண்டு மணிக்கு வேலை ஆரம்பித்து பத்து மணிக்கு முன்பே ஆள் அரவமற்றுப் போய்விடும்.இரவெல்லாம் புணரப் பட்டபிறகு பகலில் களைத்துப் படுத்துறங்கும் வேசி போலதான் அவை என நினைத்துக் கொண்டேன்.அதன்பிறகு அவற்றின் இலைகளின் ஊடே உதிரும் வெயில் ஊசிகளின்  சத்தத்தைக் கூட கேட்கும்படியாகத் தானிருக்கும்.பழக்கமற்றவர்களைப் பயப் படுத்திவிடக் கூடிய நிசப்தம்.மற்ற மரங்களைப் போல் இல்லாமல் அவை உஷ்ணம் என்பதால் பறவைகள் கூட அதிகம் அங்கே தங்குவதில்லை.அவ்வபோது கீழே குப்பையாய்க் குவிந்துகிடக்கும் சருகுகளின் ஊடே அணில்கள் ஓடும் சரசரப்பு  மட்டுமே கேக்கும்.அவை பாம்புகளாகக்  கூட பல சமயங்களில் இருக்கும்.பிற்பகல்களில் அந்த அமைதி ஒரு கம்பளிப் போர்வைபோல கனத்துக் கொண்டே வந்து முன்னிரவுகளில் இதயத்தை வெடிக்கச் செய்வது போல் யாரோ நெஞ்சின் மீது ஏறி நின்று மிதிப்பது போல் ஆகிவிடும்.அப்போதெல்லாம் நான் உரத்த குரலில் அழுவேன்.பெரும்பாலும் அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுவேன்.திட்டியவுடனே துணுக்குற்று  வருந்தி அழுவேன்.அவளிடம் மன்னிப்பு கேட்பேன்.நடு ராத்திரிகளில்  நான் அவ்வாறு ஓநாயைப் போல் நிலவைப் பார்த்துக் கதறிக் கூவும்போது சமவெளியைச் சார்ந்தவர்கள் கண்டால் அச்சம் அடையக்  கூடும்.ஆனால் மலையில் இருப்பவர்களுக்கு அது புதுமையாக இருக்கவில்லை.இதுபோல அவர்கள் நிறைய கண்டிருக்கிறார்கள்.தனிமை என்ன செய்யும் என்று அவர்கள் அறிவார்கள்.அதுவும் மலைகளின் தனிமை.
''என்ன சாரே கரைஞ்சு தீரல்லே இன்னும்?''என்பார்கள்.''கொஞ்சம் வள்ளம் வடிக்கனும்  சாரே.எல்லாத்தையும் கரைக்கும் அமிர்தமாக்கும் அது''

ஆனால் எப்போதுமே என்னால் குடிக்க முடிந்ததில்லை.புகை பிடிக்க முடிந்ததில்லை.என்னால் எப்போதுமே பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாகவேணும்பொய்யாகவேனும் கொஞ்சநேரம் கூட விலகி இருக்க முடிந்ததில்லை.கொல்லவரும் புலியின் கண்களிலிருந்து விலக முடியாத  இரை போல் அது தன்னைத்  தின்று தீரும்வரை  அங்கேயே நிற்கும் மடமிருகம் போலதான் நான்..

சில நேரம் பின்மதியங்கள் உடைந்து மழை பெய்வதுண்டு ரப்பர்க் காடுகளில்  மழை ஒரு ஹிந்துஸ்தானி பாடகன் போல் ஒரே ச்வரமாய்ப் பெய்யும்.யாரோ ஸ்தாயியை திருகுவது போல் நிதானமாக ஏறி இறங்கி..ஆனால் உச்சிகளில் அப்படிப் பெய்யாது.அங்கு மழை என்பது பிரளயம் அம்மாதிரியான மதியங்களில் நான் அவள் மீது எழுதிய கவிதைகளை எழுதிக் கொண்ட காதல் கடிதங்களை எல்லாம் திரும்ப வாசித்துப் பார்பேன் நிறைய கடிதங்கள் எனக்கு ஏமாற்றமே  அளித்தன.என் காதலை ஒருதுளி கூட அவற்றில் நான் சொல்லி இருக்கவில்லை.அதனாலதான் அவள் என்னைவிட்டுப் போய்விட்டாள், என் காதலை அவளிடம் சரியாகச் சொல்லவில்லை என்பது போல் ஒரு பரிதவிப்புக்குள்ளாகி புதிய கடிதங்களை விளக்கெரித்து எழுத ஆரம்பித்தேன்.மெல்ல என் தலை நிறைய அவளுக்கான கடிதங்கள் நிரம்பின.சட்டென்று ஒருநாள் வார்த்தைகளின் சுமை தாங்காது எல்லா  கடிதங்களையும் பெரிய வட்ட நிலா  கீழே குவித்து எரித்தேன்.சடத்து தெறித்து  எறிந்த அக்னியில் ஆகுதி போல் ஒவ்வொரு கடிதமாய் இட்டுக் கொண்டே இருந்தேன் அது உடல் நீங்கிப் போகும்  ஆன்மா போல் புகையாகி சாம்பல் வானில் ஏறிப் பரந்தது.

முதலிரண்டு நாட்கள் மலையை விட்டு இறங்கி  களியல்  என்ற ஊர் வரை வந்து ஓட்டலில் சாப்பிட்டேன்.மோடா அரிசி .மீன் குழம்பு,வட்டத் தோசை.மாட்டிறைச்சி,கிழங்கு,பயறு,பப்படம் என்று மலையாள மணம் வீசும் சாப்பாடு.ஆனால் இரண்டாம் நாள் போகையில் மாஸ்டர் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார் இளையராஜா ரசிகர் போலும்.ரசித்துக் கொண்டே 'இந்த ஆள் எப்படி பாண்டியில போய் பிறந்தான்''என்று அடிக்கடி ஐயம்  கொண்டார்.அன்னக்கிளியிளிருந்து ஒவ்வொரு பாட்டாய்ப் போட்டுக் கொண்டிருந்தார்.பாட்டுவீச்சில்  குழம்பு ஊற்ற மறந்து வசவு வாங்கினர்.''எளவு அந்த சாமானை உடைச்சாத்தான் உம்ம  கடை விளங்கும்.சொல்லச் சொல்ல மூணாவது தடவையா சாம்பாரே  ஊத்திதீரே''''

நான் அதை எதிர் பார்த்திருக்கவேண்டும் அந்த ஸ்வர வரிசை ஆரம்பிக்கும்போதே உணர்ந்து நிறுத்தச்  சொல்லியிருக்கவேண்டும்.செய்யவில்லை.சுலோச்சனாவுக்கு மிகவும் பிடித்த பாட்டு அது.ஆரம்பத்தில் தமிழில் இருந்து  வந்த எதன் மீதும் அவளுக்கு பிடிப்பு இருந்ததில்லை.பாட்டாயினும்  படிப்பாயினும் சரி.''ஒரு தமிழனைக் காதலிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்த்ததில்லே''என்று அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.இவ்வளவுக்கும் தமிழ் நன்றாகத் தெரியும்.ஆனால் இந்தப் பாடல் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.ரொம்பப் பிரபலமான பாடல்தான்.ஆனால் கேட்கும்போதெல்லாம் கண்கள் உள்ளிறங்கி காணாமற் போய் விடுவாள்..வைர முத்துவைவிட பெரிய ஆட்கள் எல்லாம் தமிழில் உண்டு என்று சிலதடவை சொல்லிப் பார்த்தேன்.ஏறவில்லை.ஏனோ இந்தப் பாட்டு அவளை உருக்கி உள்ளுக்குள் எறிந்தது.கூடவே குரல் நடுங்கப் பாடுவாள்.ஒவ்வொரு தடவை  பாட்டு முடிந்ததும் நெஞ்சில் கைவைத்து'ஐயோ  ஆசானே ''என்பாள் .என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ''ஒருக்கலும்என்ன மறக்கறது முரளி .கேட்டோ?''என்பாள்.''ஒருக்கலும்''

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...

என்ற வரியிலேயே நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுதவிழிகளோடு என்றபோது மூச்சிரைத்து கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றேன்.
எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சப்தம் என்று சசிரேகா தேய்ந்தபோது வெடித்தழுதுவிட்டேன்.சட்டென்று கடையில் எல்லோரும் ஸ்தம்பித்து நிற்க மாஸ்டர் ''ஐயோ சாரே.என்ன ஆச்சு''என்று பதறி ஓடிவர நான் விருட்டென்று எழுந்து சோற்றோடு இலையை வாரிக் குழிக்குள் எறிந்தேன். உள்ளிருந்து பையன் அகப்பையோடு வந்து ''ஆம்லேட் வேண்டே?''என்றதற்கு மறுத்து பைசாவைக் கொடுத்துவிட்டு துரத்தப் படுபவன்போல பைக்கை உதைத்து விலகி ஓடினேன்.

தீப் பிடித்தவன் போல் வண்டியை காளிமலை சாலையில் செலுத்தினேன்.வழியில் நின்றுகொண்டிருந்தவன் 'சாரே அ வழி வேண்டா..பாறை மறிஞ்சு கிடக்கு ''என்று சொன்னதைப் பொருட்படுத்தவில்லை.அங்கு சாலை என்பதே இல்லை.என்றோ போட்ட சாலையின் நினைவுகள் மட்டுமே இருந்தன.சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் அங்கு நடக்கும் திருவிழாவுக்காக கொஞ்சம் சாலையை சரி செய்வது போல் பாவனை செய்வார்கள்.மற்ற நாட்களில் அந்த வழியில் செல்வது அதுவும் மழைநாட்களில் பைக்கில் வேகமாகப் போவது தற்கொலை  முயற்சிதான்.ஆனால் அது எனக்குத் தேவையாக இருந்தது.ஏறக்குறைய செங்குத்தாக ஏறிய அந்தப் பாதையில் ஏறி ஏறிப் போய்க் கொண்டிருந்தேன்.வண்டி தொடர்ச்சியாக முதல் கியரில் முனகி முனகி ஏறியது அது எந்த நேரமும் என்னை பள்ளத்தில் தள்ளிக் கொன்றுவிடும் தருணத்தை எதிர்பார்த்தேன்.ஒருவகையில் அதை விரும்பவும் செய்தேன்.ஆனால் அது விசுவாசமான ஒரு குதிரையைப் போல் நான் என்ன செய்தாலும் ஒத்துழைத்தது.

பகல் முழுக்க மலையுச்சியில் விசை தீராமல் நிறுத்த முடியாத பம்பரம் போல் திரிந்தேன்.பின்மதியத்தில்தான்  பசியாலும் களைப்பாலும் மெல்லத் தளர்ந்து கீழிறங்கினேன்.சிற்றாறு அணை அருகில் வண்டியை நிறுத்தினேன்.அணை நிறைய தண்ணீர் சலனமே இன்றி ஒரு பளிங்குத் தாள் போல் கிடந்தது.ஒரே ஒரு நாரை மட்டுமே நீர்ப்பரப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க செங்கால் நாராய் செங்கால் நாராய் என்று நான் கூப்பிட்டதைக் கேட்டுத் துணுக்குற்று ஒரு மௌனப் படம் போல் சிறகு பிரித்து பறந்து போனது.உள்ளே இறங்கி உடல்முழுவதும் ஏறி இருந்த தூசியைக் கழுவிக் கொண்டேன்.இது போல் அவள் நினைவுகளையும் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்..ஒரு வாய்த் தண்ணீர் குடித்துவிட்டு தூரத்தில் தெரியும் நீல மலை   முகடுகளை வெறித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்.நேரம் செல்லச் செல்ல நீர்ப் பரப்பு அப்படி ஒன்றும் சலனமற்று இருக்கவில்லை என்று அறிந்தேன்.குச்சி போன்ற பூச்சிகள்  நீர்ப் பரப்பின் மேலே துள்ளிக் கொண்டிருந்தன.அவற்றுக்குப் பேர் உண்டா என்று யோசித்தேன்.கருத்த மீன்கள் நீரின் கீழே சிறிய கப்பல்கள் போல் உள்ளேயே அமைந்திருக்கும் அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிந்த நீர்ச் சாலைகளில் அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன.அவற்றின் பின்னால் ஒரு நீர்ப்பாம்பு கூட போவதைப் பார்த்தேன்.
''என்னா சாரே வெள்ளம் கண்டு மதியாயில்லே''என்று குரல் கேட்டு விழித்தேன்.முப்பது வயதுகளில் ஒரு கருத்த பெண்.பக்கத்தில் இருக்கும் குடிசைகளில் வசிப்பவளாய் இருக்கலாம்.கையில் பிளாஸ்டிக் வாளியில் துணிகளுடன் இறங்கிவந்தாள் .அவள் வாளியைவைத்துவிட்டு ''ஸ்தலம் எவிட''

நான் பொதுவாய் ''தாழ''என்றேன்.அவள் ''மார்த்தான்டமா..அங்க மழை உண்டா .இன்னலே இங்கு வலிய மழ''எனறாள்.'இப்போ எங்கு போச்சு அந்த மழ..என்ன ஒரு சூடு இன்னு கண்டோ ''என்ற வண்ணம் அப்புறம் திரும்பி சேலையைக் கலைந்து வெள்ளை நிறப் பாவாடையை அணிந்துகொண்டாள்.என்னை அதிகம் பொருட்படுத்தவில்லை.பிறகு வரித்து உட்கார்ந்துகொண்டு துணி கழுவ ஆரம்பித்தாள்.தண்ணீர் தெறித்து தெறித்து அவள் பாவாடை மெலிந்து பாலாடைக்குள்  கருப்பட்டிகள் போல் அவள் முலைகள் அசைவது பார்த்தேன்.நான் கவனிப்பது உணர்ந்து அவள் நிமிர்ந்து ''சார்  முன்னம் முலை கண்டில்லே?''என்று சிரித்தாள்.அவளது பற்கள் வெளேரென்று மினுங்கின .உதட்டுக்கு மேலே வியர்வை பூத்திருந்தது உயிர் அறுத்தது.நான் மேலேறினேன்.கீழே பார்க்கையில் அவள் அவளது பின்பாகங்கள் இரண்டும் கல் தசை உருளிகள் போல் அசைய அவள் நீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தாள்,
சுலோச்சனாவுக்கு இரண்டு புட்டங்களும் பிரியும் இடத்தில் ஒரு மச்சமுண்டு.நான்தான் அதை அவளுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன்.மதுரையில் காலேஜ் மேன்சனில் அறையில் வைத்து ''உனக்கு இங்கே ஒரு மச்சம் இருக்கு''
அவள் திரும்பிப் பார்க்க முயன்று ''எங்கே''
நான் கைவைத்து அழுத்தி  ''இங்கே''
அவள் முழுக்கத் திரும்பி மிதக்கும் கண்களுடன் 'வரு''
ஒரு துளி ஆடை கூட அவள் மேல் இல்லை.உடம்பு முழுக்க உடம்பாக மட்டுமே நின்றிருந்தாள்.
நான் ''என்ன''
''அகத்த வருன்னான்னு பறஞ்சது''
''உள்ளேதானே  இருக்கோம் இப்ப''என்றேன் மூடிய கதவைப் பார்த்தவாறு.
அவள் ''அந்த உள்ளே இல்லை ஆசானே''எனறாள்.
பைக்கை உதைக்கும்போது என் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.அன்றைக்கு அதைச் செய்திருந்தால் இன்றைக்குப் பித்து பிடித்தவன் போல் இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று என் மனம் சொல்லிக் கொண்டது.பைக் கிளம்ப மறுத்தது.ஆத்திரமுற்று ஒரு மாட்டை அடிப்பது போல் அதை உதைத்தேன்.நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் பெட்ரோலைப் பூட்டிவைத்திருக்கிறேன் என்று உணர்ந்து திருப்பி வைத்தேன்.ஒரு வழியாக கிளம்பும்போது தோன்றியது அந்த புட்டத்து மச்சத்தை இந்நேரம் அவள் புருஷன் கண்டுபிடித்திருப்பானா ?

தன்னிச்சையாய் கண்களில் நீர் வழிந்தது

                                                                                                                        

Thursday, February 10, 2011

துளிவனம்

அடர் வனத்தின்
சிறுதுளியே என
ஐம்புலன்களையும்
அடக்கிக் குறுக்கிய
ரிஷியென
என் உள்ளங்கை
மேல்
ஒரு புத்தனென
உலகடக்கி
உட்கார்ந்திருக்கிறது
இந்தப் போன்சாய் மரம்
அறிவாயோ நீ
இம்மரம் போலதான்
உன்னிடத்தில் நான்...

Saturday, February 5, 2011

ஜெயமோகன் அறம் வளர்த்த கதை

சமீபத்தில் ஜெயமோகன் தனது தளத்தில் அறம் என்ற ஒரு சிறு கதையை எழுதினார்.அதைத் தொடர்ந்து சோற்றுக் கணக்கு என்று இன்னும் ஒரு நல்ல  கதை.கதைகள் என்னுள் சில கேள்விகளை எழுப்பின  [நல்ல இலக்கியம் அதைத்தானே செய்யும்?]சிறுகதையோ நாவலோ கவிதையோ அவை அளிக்கும் நேரடி வாசிப்பனுபவம் தவிர்த்து அவை வைக்கும் வாழ்க்கைப் பார்வை,அரசியல் போன்றவற்றின் அடிப்படையிலும் யோசிப்பது எனது கெட்ட பழக்கங்களில் ஒன்று.[சிலருக்கு இது வியாதியாகவே மாறிவிட்டிருப்பதை இணையத்தில் காண்கிறேன்]இதைத்தான் கட்டுடைப்பு செய்கிறேன் கட்டுடைப்பு செய்கிறேன் என்று சொல்கிறார்கள் என்று தெரிவதற்கு முன்பே நான் இதை பண்ணிக் கொண்டிருந்தேன்.கட்டை ஏன்யா உடைக்கிறே என்று சிலர் கேட்டார்கள்.கட்டுறதுதான்யா பெருசு உடைக்கிறது லேசு என்ற ரீதியில் பேசினார்கள்.என்ன செய்வது எனக்குத் தெரிந்ததுதானே பண்ண முடியும்?ஜெ சி பி  ஒட்டுகிரவனிடம் போய் ஏன்யா எல்லாத்தையும் உடைக்கிறே என்று நான் கேட்க மாட்டேன்.ஏனெனில் அது அவனது 'அறம்' அல்லவா

இங்கு அறம் என்ற சொல்லை  மேலதிக அர்த்தங்கள் வரும் தொனியில் ஜெமோ பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது உனக்கு மஞ்சக் காமாலைக் கண்.எல்லாம் மஞ்சளாகத்தான் தோணும் என்று மனைவி சொல்கிறாள்.[சிலருக்கு காவிக் காமாலை இருக்கிறது இணையத்தில் என்பதைக் காண்கிறேன்.எல்லாமே காவியாகத் தெரிகிறது அவர்களுக்கு]நான் அப்படியெல்லாம் நினைச்சு எழுதலே என்று எழுத்தாளர் சொல்லக் கூடும்.அவர் யார் அதைச் சொல்வதற்கு என்று எனக்குப் புரியவில்லை.பிரதி வெளிவந்தவுடன் அது எழுத்தாளனை விட்டு விலகிவிடுகிறது என்ற  கோஷத்தைக் கேட்டதில்லையா அவர் ?..அவருக்குத் தோன்றியதை அவர் எழுதலாம் அதற்கான உரிமை ஜனநாயக முறைப்படி அவருக்கு இருக்கிறது [மதுரைல போய் அழகிரியைப் பத்தி எழுதும் உரிமை இதில் வருமா என்று இடக்கர் அடக்கல்கள் இங்கு வேண்டாம்.இது ரொம்ப சீரியசான இலக்கியக் கட்டுரை தோழர்களே நினைவில் வையுங்கள்]அதை எனக்குப் பிடித்த வகையில் வாசித்துக் கொள்ளும் உரிமையும் அதேசமயம் எனக்கு இருக்கிறது இல்லையா?[இரும்புக் கை மாயாவி கதைகளில் இருத்தலியம் என்று அடுத்த கட்டுரை தயாராய் இருக்கிறது ]கிடக்கட்டு..


இந்த அறம்னா என்ன ..அறம்னு ஒரு பாவகை இருக்கிறது ஒருத்தரைப் பிடிக்கலைன்னா அவர் மீது பாடினா அந்த ஆள் காலியாயிடுவான்னு சொல்றாங்க யாரோ ஒரு பல்லவன் மேல ஒரு வல்லவன் புலவன் பாடி ஆள் கபர்ச்தானுக்குள்ளே  போய்ட்டார்னு சொல்றாங்க.எனக்குத் தெரியாது.யாராவது பேராசிரியர்கள் விளக்குவாங்க.முக நூலில் பின் நவீனத்துவக் கவிதை என்று சிலர் எழுதுவது அறம் தானோ என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.ஒவ்வொரு கவிதையும் படிப்பவர்  வாழ்நாளில் குறைந்தது ஒரு நாளையாவது குறைக்கிறது

நான் அறம் என்ற பாவகையைச் சொல்லவில்லை.அறம் என்றால் நீதி ,தர்மம் என்ற ரீதியில் புரிந்து கொள்கிறேன்.எது நீதி எது தர்மம் என்பதில் கருத்து வேறுபாடுகளும் கொலைவெறிச் சண்டைகளும் உண்டு.ஒவ்வொரு வர்ணத்துக்கொரு தர்மம். காபிருக்கும்  புறஜாதியாருக்கும் வேறு  தர்மம் அல்லது அறம் நம்மளவாக்கு  வேறு  அறம் என்ற அரசியலிலும் நான் குதிக்கவில்லை [நாளை குதிக்கமாட்டேன் என்று  உறுதி சொல்லமுடியாது.விஜய் குதிக்கும்போது நான் குதிக்கக் கூடாதா]

ஜெமோ ஒரு கதையில் அல்லது கட்டுரையில் [பலசமயம் இரண்டும் ஒரே நடைல இருக்கு.]எழுதி இருந்தார்.நான் முதல் முதலாக  அப்பாவின் சட்டையிலிருந்து திருடியபோது பிரபஞ்சமே  என்னை விழித்துப்  பார்ப்பது போல் உணர்ந்தேன் என்று ..அவர் கதைகளின் அடிநாதமாக ஓடுவதாக இந்த கூற்றை நான் காண்கிறேன் .ஜெமோ பிரபஞ்சத்தின் அடிப்படையிலேயே அறம் பொதிந்திருக்கிறது  என்று நம்புகிறார் [என்று சந்தேகிக்கிறேன் ]முன்ன பின்ன இப்ப இருந்தாலும் மனுசனை பிரபஞ்சம் க்ளைமாக்ஸ்ல அறம் அருகே கொண்டு சேர்த்துவிடும் என்று நம்புகிறார் [என்று நம்புகிறேன்]சாரு கூட அவரின் இந்த நோக்கு பற்றி ஒருதடவை  எழுதி இருந்தார்.அவர் பைபாஸ் பண்ணி படுக்கையில்  கிடக்கும்போது ஜெமோ அனுப்பிய குறுஞ்செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பத்தி அது என்று நினைவு[அவர் ஒரு நல்ல பத்தி எழுத்தாளர்!]இந்த நம்பிக்கைதான் அவரை கண்ணகி காந்தி போன்ற திசைகளுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது  எனத் தோன்றுகிறது .உண்மையில் அவர் காந்திக்கு வந்து சேர்வார் என்று எனக்கு முன்கூட்டியே ஒரு கணிப்பு இருந்தது.ஆர் எஸ் எஸ் இலிருந்து  காந்திக்கு![காமத்திலிருந்து கடவுளுக்குப் போல்]இப்போது நீங்கள் ஜெமோவை மட்டும் மறுக்க முடியாது காந்தியையும் சேர்த்தே மறுக்க வேண்டும்!என்னா ஒரு வில்லத்தனம்?!

'இப்ப கஷ்டப் படறேன்னு தளர்ந்துடாதே மக்கா பரலோக ராஜ்யம் சமீபத்தில்தான் இருக்கு,அப்ப உன் துக்கமெல்லாம் சந்தோசமா மாறும் ' என்று சமீபத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கையில் எனக்காக ஜபம் பண்ண வந்த வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டி சுவிசேசி சொன்னதன் மேல்  சந்தேகம் ஏற்பட்டு  'சார்வாள் உங்களுக்கு ஜெயமோகனைத் தெரியுமா' என்று கேட்டேன்.அவர் ''யாரு நம்ம மேரிக்க மவனா ''என்றார்நான் 'அது ஏசு நாதருல்லா .இது வேற.கடைசியா வந்த அபோச்தலர் கேள்விப்பட்டதில்லே?''என்றதை நம்பாமல் என்னை ஆர் எஸ் எஸ் காரன்  என்று சந்தேகித்து ''அப்பாலே போ சாத்தானே என்பது போல் பார்த்து ''விசுவாசம் வேணும் மக்களே.இல்லாட்டி ஜீவிதம் துயரமாக்கும்'என்று விலகிப்  போனார்.

பிரபஞ்சம் அறத்தின் அடிப்படையில்தான் கட்டப் பட்டிருக்கிறது என்ற 'விசுவாசம்' எனக்கும் கொஞ்சநாள் இருந்தது.பலருக்கும் இருக்கிறது 'கடவுள் இருக்கான் குமாரு 'என்றோ 'என்ன இருந்தாலும் நியாயம்னு ஒண்னு இருக்குல்லாடே' என்றோ 'எல்லாம் என் கர்மாடி கர்மா' என்று புலம்பலாகவோ நம் தினப் படி கேட்கும் சம்பாசனைகளின் அடியில் எல்லாம் இந்த அறம் பற்றிய நம்பிக்கை ஒளிந்திருக்கிறது.கொஞ்சம் பழைய நம்பிக்கைதான்.சத்யமேவ ஜெயதே .நல்லவன் [நடுவில் கஷ்டப் பட்டாலும்]வாழ்வான்.நீதி நிலைக்கும் ....பிற பிற...

அதே சமயம் அப்படியெல்லாம் இல்லை.இந்த உலகே அநீதியால் கட்டப் பட்டிருக்கிறது அநீதியின் மீது கட்டப் பட்டிருக்கிறது என்ற கருத்தும் ஓங்கி ஒலிக்கிறது நல்லது ஜெயிக்கும் என்று யாராவது இளைஞர்களுக்கு திடீர் உபதேசியாகி நான் போதிக்கும் நேரத்தில் 'புடுங்கும் போங்க சார்.ஜோலியைப் பார்த்துட்டு ..இங்கே வல்லதுதான் நல்லது ..பேசத் தெரிஞ்சவந்தான் நல்லவன்.பிடுங்கத் தெரிஞ்சவந்தான் தர்மப் பிறப்பு.அடிக்கத் தெரிஞ்சவந்தான்  ஆண்டவன்''னு எதிர் உபதேசமும் செய்கிறார்கள்.அதற்கு ஏராளமான உதாரணங்களை நேர்வாழ்விலிருந்து சமகால வாழ்விலிருந்து காட்டுகிறார்கள்.பதிலாக நான் காண்பிக்கிற உதாரணங்கள் எல்லாம் புராணங்களில் இருந்தோ சரித்திரம் என்று சொல்லப் படும் நவீன புராணங்களில் இருந்தோ தான் வருவதை அவர்கள் சுட்டிக் காட்டும்போது  கொஞ்சம் தர்மசங்கடமாகி 'காலத்தைக் கடந்து பார்க்கக் கத்துக்கணும் தம்பி.பருந்து பார்வை வேணும்'என்று தப்பித்துவருவதற்குள் பெரும்பாடாகிவிடுகிறது

இலங்கைப் பிரச்சினை போன்ற  சமயங்களில் சிலர் என்னிடம் இவை எல்லாம் எந்த அறத்தின் அடிப்படையில் நிகழ்கிறது என்று கேட்கும்போது என்னால் இதுபோல் தப்பிக்க முடிவதில்லை.இப்போதெல்லாம் அறம் என்று ஒன்று இருக்கிறதா சார் என்று யாராவது கேட்டால் ''இருக்கிறது .ஜெயமோகன் கதைகளில்''என்று  சொல்லி விடுகிறேன் Wednesday, February 2, 2011

காதலின் வெளிச்சம்

பிறர் முன்பு
ஒரு போதும்
எங்கள்
கண்கள் கலந்ததில்லை
பொதுவெளியில்
தனித்துப்
பேசிக் கொண்டதே இல்லை
புன்னகையின் கீற்றுகளைக் கூட
பிறர் பார்க்க
பகிர்ந்ததில்லை
குரல்களில் கூட
நெருக்கம்
கொண்டதேயில்லை
சந்திக்க நேரும்போதெல்லாம்
முகத்தில்
பிரகாசம் கூட
அனுமதிப்பதே இல்லை 

ஆனாலும்
எப்படியோ
எந்தக் கூட்டத்திலும்
எளிதாய்க் கண்டுகொள்கிறார்கள்
நாங்கள்
காதலில் இருப்பதை...

LinkWithin

Related Posts with Thumbnails