அவனது கவிதைகள்
நன்றாய் இருப்பதாய்
நான்குபேர் சொன்னபோது
அவன் திடுக்கிட்டு
இருக்காதே என்றான் தயக்கமாய்
உங்கள் வைப்பாட்டி
அழகாய் இருக்கிறார்
என்று யாரோ நடுத்தெருவில்
நிறுத்தி
சொல்லிவிட்டது போல
சற்றே லஜ்ஜையாய் உணர்ந்தான்
அப்படி இருக்க வாய்ப்பில்லையே
என்று சந்தேகித்தான்
தன்னைத்தான் சொல்கிறார்களா
என்று பலமுறை கேட்டு
உறுதிப் படுத்திக் கொண்டான்
ஏனெனில் அவை எல்லாம் பெரும்பாலும்
அவன் பொழுதுபோகாமல்
இடது கையால் கிறுக்கியவை
ஆனாலும் பலபேர்
திரும்பத் திரும்பச் சொல்வது
உண்மையாகத்தான் இருக்கவேண்டும் அல்லவா
என்று அவனுக்கே தோன்றியது
எல்லா நேரமும்
கவிதைக் கண்களுடன்
அலைய ஆரம்பித்தான்
விழித்திருக்கும் ஒவ்வொரு கனமும்
கவிதை ஒன்று விழவேண்டும்
என நினைத்துக் கொண்டான்
ஆனால் அந்தோ
அவன் கவி என்று
உலகம் ஒத்துக் கொண்ட
அந்த வினாடியில் இருந்து
அந்த வேசி
அவன் வீட்டுப் பக்கமே வரவில்லை
நவீனக் கவிதைப் புத்தகங்களில் இருந்து
நிகண்டுகள் வரை படித்தும்
அவனது மனப் பூட்டுகள்
மௌனித்தே இருந்தன
கஞ்சாவும் கள்ளும்
இன்ன பிற வஸ்துக்களுக்கும் என
கள்ளச் சாவிகளுக்குக் கூட
அது கால்விரிக்காமலே இருந்தது
ஆனால் அதற்குள் அவனது கவிதைகளுக்கான
ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தன
கொஞ்ச நாட்கள்
அவனது பழைய உருப்படிகளையே
புது உடை பூசி அனுப்பிக் கொண்டிருந்தான்
ஆனால் எத்தனை நாட்கள்
இலக்கிய மல்லர்களை
ஏய்க்க முடியும் என்று அஞ்சி
நண்பர்களிடம் ஆலோசித்தான்
எல்லா நேரமும் கவிதை
உன்னைத் தேடி வராது
நாம்தாம் அதைத் தேடிப் போகவேண்டும்
என்று யாரோ சொனார்கள்
அவன் ஜோல்னாப் பையுடன்
தூரதேசங்கள் போக ஆரம்பித்தான்
நினைத்தறியாத இடங்களிலெல்லாம்
யூகிக்க முடியாத வேடங்களில்
அவன் கவிதைக்காய்க் காத்திருந்தான்
பிணவறை வாசல்களில் காவலாளியாக
கோயில்களில் பிச்சை எடுப்பவனாக
தொழுநோயாளிகளின் புண்களுக்கு
மருந்து தடபுவனாக
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
காதல் கடிதம் எழுதிக் கொடுப்பவனாக
ஈரினங்கள் புணரும்போது
ஆம்லேட்டுடன் ஆணுறை வாங்கி வருபவனாக
கழிப்பறைக் கோப்பைகளைச்
சுத்தம் செய்பவனாக கூட
எல்லாம் கவிதைக்காக
என்று தளரும்போதெல்லாம்
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்
பாரதிக்கு அடுத்த மகாகவி அவன்தான்
என கர்ணப் பிசாசுகள்
அவன் இடது காதில்
ஓதிக் கொண்டே இருந்தன
சில சமயங்களில் அபூர்வமாய்
அவன் தேடல்களுக்குப்
பலன் கிடைக்கவே செய்தது
புழுதி பறக்கும் வெயிலில்
ஆந்திரத்து பொட்டலில்
ஒரு கவிதை கிடைத்தது
கேரளத்துக் காயலில் ஒன்று
காசி மயானத்தில் ஒன்று
இமயத்தின் உச்சியில் ஒன்று
ஆல்ப்ஸ் மலையின் உச்சிகளில்
ஆங்கிலக் கவிதைகள் மட்டுமே கிடைக்கும்
என்று சொன்னதால் அங்கு போகவில்லை
கல்கத்தாவில் சாந்தி நிகேதனில்
இந்த வருஷம் சீசன் மோசம் எனறார்கள்
பிரமிள்களும் பிச்சமூர்த்திகளும்
பொறுக்கியது போக
மிச்சமிருந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டு
அவன் பை கனக்கக
வீடு திரும்பியபோது
காற்று இப்போது எதிர்த்திசையில்
மாறி இருப்பதை உணர்ந்தான்
அவர்கள் இப்போது
அவனை வழியிலும்
இணையத்திலும்
சந்தித்து
அவன் கவிதைகள்
அப்படி ஒன்றும் உயர்ந்தவை அல்ல
என்று சொல்லத் தொடங்கினார்கள் .
வாழ்நாளில் ஒரு கவிதை கூட
செய்யாதவர்கள் எல்லாரும்
நீண்ட கோட்பாட்டு வாள்களோடு வந்து
உன் வைப்பாட்டி
அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொன்னபோது
அவன் தளர்ந்து
இதைத்தானே நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன்
என்று அழ ஆரம்பித்தான்...
//அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொன்னபோது
ReplyDeleteஅவன் தளர்ந்து
இதைத்தானே நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன்//
நல்ல அலசல்.... வாழ்த்துக்கள்
கலக்கல்! நிதர்சனம்...
ReplyDeleteபோகன் சார்
ReplyDeleteஇந்த கவிதையை விமர்சிக்க என்னிடம் வார்த்தையில்லைங்க
நீளமானாலும் நயம்.
ReplyDeletematchless!
>>>இந்த வருஷம் சீசன் மோசம்
Paaaaaaavam...
ReplyDelete