Wednesday, November 3, 2010

இந்தக் கவிதையில் நீங்கள் உட்கார முடியாது ..

என்னிடம்
ஒரு நாற்காலி இருந்தது
அதன் பெயர் ஜிம்மி
ராஜ பாளையத்தில் வாங்கியது
என்னிடம்
இன்னுமொரு நாற்காலியும் இருக்கிறது
அதுவும் ராஜ பாளையத்தில்
செய்ததுதான்
ஆனால்
அதற்கு ஏனோ
எந்தப் பெயரும் இல்லை
ஜிம்மியைப் போல
அது இங்கும் அங்கும்
அலைவதில்லை
வருசத்துக்கு
இரண்டு குட்டி போடுவதில்லை
மார்பில் ஏறி
மூக்கை நக்குவதில்லை
எப்போதும்
என் எதிரில் நின்றுகொண்டு
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது
இதுவரை நான்
அதைப் பொருட்படுத்தியதே இல்லை
ஆனால் முதல் முறையாக
எல்லோரும் போன பின்பு
என்னிடம் இன்று பேசியது
என்னைச் சற்று
உட்கார  வைக்க முடியுமா என்றது
என் வலது முழங்கால்
ரொம்ப வலிக்கிறது என்றது
நான் பிறந்ததில் இருந்து
நின்று கொண்டே இருக்கிறேன்
நீங்கள் எல்லோரும்
போன பிறகும் கூட
கால் கடுக்க நிற்கிறேன் என்றது
எனக்கு அதன் பிரச்சினை புரிந்தாலும்
நாற்காலிகளின் மேல் உட்காரமுடியுமே தவிர
நாற்காலிகளால் உட்கார முடியாது
என்று நான் விளக்கினேன்
ஜிம்மிக்கும் நான்கு கால்கள் தானே
என்று அது வாதித்தது
எனக்கும் நியாயம்தானே
என்று தோன்றியது
நான் இது பற்றி
நிரம்ப யோசித்தேன்
நண்பர்களிடமும் விவாதித்தேன்
அவர்கள்
நான் குடிக்கவில்லை என்று
உறுதி செய்து கொண்டு
மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்
அவருக்காக காத்திருக்கையில்
அங்கிருக்கும் பணக்கார பஞ்சு நாற்காலியும்
அறிமுகம் செய்து கொண்டு என்னுடன் பேசியது
அந்த டாக்டருக்கு
எல்லோரையும் பைத்தியம்
என்று சொல்லும் வியாதி
வந்திருக்கும் ரகசியத்தை
அதுதான் சொன்னது

நான் தப்பித்து ஓடிவந்து
பஸ் சிற்கு காத்திருக்கையில்
இரண்டு காலுமற்றவன்
ஒருவன்
தரையைத் தேய்த்துக் கொண்டு வந்து
பிச்சை கேட்டான்
அவனிடம்  என் நாற்காலியின்
கால்வலி பற்றி சொன்னேன்
அவன் அது எல்லாம் கனவு என்றான்
யார் கனவு என்றதற்கு
நாற்காலியும் நானும்
அவனும் சேர்ந்து காணும் கனவு என்றான்
சொல்லிக் கொண்டிருக்கையிலேயே
அவன் ஆயிரங்கால் பூச்சியாக மாறி
பூமியைத் துளைத்துப் போவதைப் பார்த்தேன்
பஸ் வந்ததும்
பதறி ஏறி அமர்ந்தேன்
பிறகே கவனித்தேன்
ஆளற்ற அந்தக் கடைசிப் பேருந்துள்ளே
என்னிடம் பேசுவதற்காக
இன்னும் பல நாற்காலிகள்
ஆவலுடன் காத்திருந்தன...


[டிஸ்கி-சல்வடோர் டாலியின் நினைவாக]

5 comments:

  1. இந்தக் கவிதைக்கு கொகெய்ன் என்று பெயர் வைத்திருக்கலாமோ?

    ReplyDelete
  2. நாற்காலி அருமையாக கவிதை சொல்லுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாவ், ரொம்ப நல்லா இருக்கு. அய்யனார் அறிமுகத்தில் இங்கு வந்தேன். உங்கள் தளம் பிடிச்சிருக்கு. பொறுமையாக, நேரம் கிடைக்கும் போது முழுதும் படிக்க வேண்டும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  4. போகன்,
    ரொம்பவே ரசிச்சு படிச்சேன். நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன் (via FB - Hope you are alright with it). It has been a long time since a poem left me this satiated! Thanks. The flow was so smooth that I was with the poem to the very end. Beautiful work.

    Warm regards,
    Tharangini

    ReplyDelete
  5. குட்டி கதை மாதிரி இருந்தது :)
    பொறுமையாக உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails