உச்சியில் ஆந்தைகள் தூங்கும்
இந்த மரத்தில்தான்
வெகு காலமாய் இருக்கிறேன்
உத்திரத்தில் கால் உதறித் துடித்தபோது
என்னோடு உள்ளே துடித்த
மூன்று மாத சிசுவோடு,.
பட்டுப் போன இந்த வாகை மரத்தில் ...
அன்பென மயங்கி
அகன்ற பூவில்
பெயரற்ற சூல் இட்டவன்
இந்த ஊரில்தான் இருக்கிறான்
எனை அறியேன் என்று அவன்
ஊர் நடுவில் மறுதலித்த கணமே இறந்தேன்
மலத் தொட்டியாய் உலகில்
தொடர விரும்பாது
இன்னொருமுறை இறந்தேன்
ஆயினும் முற்றிலும்
பெருவெளியில் கரைந்துவிடாது
பிடித்திழுத்தது உடனிறந்த முதிராச் சிசு
அதைச் சூல் கொண்ட
இந்த மரத்தின் உச்சியிலேயே
இரவுண்டு நிலவுண்டு
இருவரும் காத்திருந்தோம்
அவன் மண ஊர்வலம் போவதை
மனைவியுடன் சிரிப்பதை
மகனுடன் கொஞ்சுவதை
எல்லாம் கொதிப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தோம்
மெல்ல அவர்கள் என்னை மறந்து போனார்கள்
ஆனால் நான் மறக்கவில்லை
நானும் என் சிசுவும் ..
விரிந்த வான் உதிர்க்கும்
விண்மீன்களை எண்ணியபடியே
காத்திருந்தோம்
இலைகள் பழுப்பதை
பூக்கள் இறப்பதை
திசைகள் தொலைவதை
நதிகள் உலர்வதை
வழிகள் உறைவதை
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு..
அரை விழிப்பில் ..
அரை உயிர்ப்பில் ..
ஒரு இருள் இரவு
மெலிதாய் ஒரு உதிரவீச்சம்
முகர்ந்து விழித்தோம்
மரத்தடியில்
ஒரு பெண்ணை யாரோ
முகர்ந்துகொண்டிருந்தான்
ஆடையற்ற அவள் உடல் மீது
அசைந்துகொண்டிருந்த அந்த முதுகை
நான் எங்கோ அறிந்திருக்கிறேன்
நான்
அது அவனென உணர்ந்தேன்
அவனல்ல அவன் ரத்தம்
எனினும் அவன் ரத்தம்!
நான் நெடுநாட்கள் கழித்துப் புன்னகைத்தேன்
முதிரும் முன்பே உதிர்ந்துவிட்ட
என் கருவைக் கையில் இடுக்கிக் கொண்டு
உலர்ந்த நாவில் உதிரத்தின் சுவையோடு
தலைகீழாய்
நான் அவனை நோக்கி இறங்கினேன்...
என் காத்திருப்பு முடிந்துவிட்டது...
ayyo!! கிளாஸ் ....ஆனா கொஞ்சம் பயமாவும் .....
ReplyDeleteகவிதையின் தலைப்பும், வரிகளும், படமும் திகிலூட்டுகிறது. ஒரு அருமையான பேய் படம் பார்த்த உணர்வு.
ReplyDeleteகிலி ஏத்துது கவிதை. வெடவெடக்க வெச்சுடறீங்க சார்!
ReplyDeleteரசிக்க வைத்த வரிகள்.
ReplyDelete>>>இரவுண்டு நிலவுண்டு