Monday, October 11, 2010

மலர்களுடன் பேசுபவள்

அவளைச்
சந்திக்கச் சென்றபோது
மலர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்
மனிதர்கள்
அவள் பேசுவதை
புரிந்து கொள்வதில்லை எனறாள்..
பவளமல்லிகள்
பகலில்கூட
அவள் தொட்டால்
பூக்கத் தயாராய் இருந்தன
அவள் பேசும்
ஒவ்வொரு சொல்லுக்கும்
பாரிஜாதம்
ஒரு பூ
கொடுத்துக்கொண்டே  இருந்தது
அவள்
சொல்லாத
ஒவ்வொரு சொல்லுக்கும் ஏங்கி
மரமல்லி
உதிர்ந்து கொண்டே இருந்தது
அவளது ஒவ்வொரு
விழிநீர்த் துளியும்
நிலம் தொட்டதும்
நீலப் பூவாய் முளைத்தன
செம்பருத்திகளின் உதிரமே
அவள் அதரங்களில்
ஓடிக் கொண்டிருந்தது
அவள்
பச்சைவிரல் தொட்டதும்
மண்ணெல்லாம் மலராய் துளிர்ப்பதை 
நேரில் பார்த்தேன்
நான் என் பெயர் சொன்னதும்
விழிமலர்ந்து  கரம் தந்தாள்
விரல் தீண்டியதும்
மெய் பூத்து
நானே
ஒரு மலர்மரமாய் மாறி
அவளருகே நின்றேன்

3 comments:

  1. //அவள் பேசும்
    ஒவ்வொரு சொல்லுக்கும்
    பாரிஜாதம்
    ஒரு பூ
    கொடுத்துக்கொண்டே இருந்தது //

    பாரிஜாதம் சற்று அவசரமாய்ப் பூ
    உதிர்க்கும்.. பேச்சில் வெளிப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும்...
    கண்ணுள் காட்சி விரிகிறது.. உங்கள் சொல்லாடல் மணக்கிறது பேகன்....

    ReplyDelete
  2. படத்துக்கேத்த கவிதை எழுதுவீங்களா, கவிதைக்கேத்த படம் தேடுவீங்களா?
    அழகான படம், அருமையான கவிதை. சொல்லாத சொல்லுக்கு மரமல்லியின் விலை மணக்கிறது.

    ReplyDelete
  3. படிக்கும் போதே மணக்குது!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails