எல்லா கண்களும்
உறங்கிவிட்டன
என்ற நம்பிக்கையோடுதான்
அந்த அறமும் மீறப்பட்டது
ஆனாலும் அறியாது
விழித்திருந்தது
வானத்தில் ஒரு கண்...
மீறிய
மறு கணத்திலிருந்து
ஒரு நிழல் போல்
அவனைத் தொடர்ந்தது
அவன் கோயில் போனால்
அவனுக்கு முந்தி
அது கடவுளிடம்
தன் வருகையைப்
பதிவு செய்திருந்தது
குடிக்கப் போனால்
அவனது போதையை
அது ஏற்கனவே குடித்திருந்தது
அவனுக்கான மலர்களை
அவை பூக்கும் முன்பே
அது முகர்ந்து பார்த்திருந்தது
சிலசமயம்
அவனது கை உறைகளில்
அதன் விரல்கள் கிடந்தன
அவன் போக விரும்பாத
சில இடங்களுக்கு
அவன் காலணிகளுடன்
அது
போய் வந்திருந்தது
பலநேரங்களில்
அவனது கடிதங்களில்
அதன் வார்த்தைகள்
சிலவும் கலந்திருந்தன
நெருக்கடியான தருணங்களில்
அவன் உதடுகள்
அவனை மீறி
அதன் சொற்களைப்
பேசுவது
அதிகரித்துக் கொண்டே இருந்தது
அவனை அது
மெல்ல
மரணம் நோக்கி
இழுத்துச் செல்வதை
அவன் உணர்ந்தான்
இறுதி நாள்வரை
தன்னைத் துரத்திய
அதன் முகத்தைக் காண
அவன்
முயன்றுகொண்டே இருந்தான்
சிதையில் கூடாய் எரிகையில் தான்
அதன் முகம்
தன் முகமே
என்று கண்டுகொண்டான்
ஆனால் அதற்குள்
காலம் கடந்துவிட்டிருந்தது ..
ஜெ. மோ டைட்டில்...
ReplyDeleteஆனாலும் //சிதையில் கூடாய் எரிகையில் தான்
அதன் முகம்
தன் முகமே
என்று கண்டுகொண்டான்//
என்ற இடத்தில் டச்சிங்... போகன்...
யாருக்கு dejavu?
ReplyDeleteoscar wildeன் dark humor and realism புலப்படும் வரிகள். ரசித்தேன்.