Wednesday, October 6, 2010

மழை நாளில் தொலைந்தவள்

காலை
எழும்போதே
காதில்
மழை வெடிக்கும்
சத்தத்துடன்தான் விழித்தேன்.
விடிந்தபிறகும்
தீராது
வீழ்ந்து கொண்டிருந்தது மழை.
முதல் குவளை
தேநீருடன்
ஒருதுளி
மழைத் தேனும் கலந்தது.
போர்வைக் கண்ணிகள்
அத்தனையும்
உடைத்துவிட்டு
உள் புகுந்து
எலும்புகளின் தாழ்கள்
அத்தனையும்
குளிரால் திறந்தது

வானிலிருந்து வீழும்
மது போல
எல்லார் கோப்பைகளையும்
நிரப்பிக் கொண்டிருந்த
மழைக்கு
தமிழில்
இன்னுமொரு
நல்ல பெயர் தேடி
இன்னுமொரு முறை
உறக்க உலகில் நுழைந்தேன்
வெறும் கையுடன்
மீண்டு வந்த போதும்
வீதியை
அலம்பிக் கொண்டிருந்தது மழை
ஒரு வேளை
அருகில்
நீ இருந்திருந்தால்
சொல்லி இருக்கக் கூடும்
தலையணையை கரைக்கும்
கண்ணீர்த் துளிகளுடன்
நடுங்கும் விரல்களுடன்
அலை பேசியில்
உன்னைத் தேடினேன் 

நகங்கள் கூட
அதன் உறைகளில்
கனக்கும்
கோழிக் குஞ்சுகள் கூட
கூடு சூடு தேடி
ஒடுங்கும்
இந்நாளில்
எதற்கும் பதில்தராது
எங்கோ
போய்த் தொலைந்திருந்தாய்  நீ...

4 comments:

  1. நன்றி தமிழ்த் தோட்டம்/பத்மா பாட்டு நல்லா இல்லேன்னு சொல்றீங்க அப்படித்தானே.என்ன ஒரு வில்லத்தனம்!/குட்டிப்பையா நன்றி.ஆனா நீங்க குட்டிப் பொண் இல்லையோ..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails