Monday, December 27, 2010

வலை மீறும்...

விடாது முயன்றும்
அவள் கைபேசி
மறுத்துக் கொண்டே இருந்தது
என் அழைப்பை....
நடுவில் ஒரு தடவை
நூலறுத்து
எங்கிருக்கிறாய் என்று கேட்டேன்
இங்குதான் வீட்டில்
என்று சொன்னாள்
போனபோது
வழக்கத்தைவிட
அவள் கண்கள்
தேன் சுமக்கும்
படகுகள் போல்
கனத்து அகன்று
களிப்பில் மிதந்தன...
என்னுடன் பேசும்போது மட்டும்
தொலைக்கட்சியில் செய்திகள்
சொல்பவள் போல்
அவை எப்படி மாறிவிடுகின்றன
என வியந்தேன்...
குடித்தாயா எனறாள் தயங்கி ...
ஆம்
ஆனால்
நீ குடித்துக் கொண்டிருப்பதைவிட
குறைந்த போதை மதுதான் என்றேன்
அவள் பதறிக்
கைபேசியை
இறுகப் பற்றிக் கொள்வதைப் பார்த்தேன்
அருகில் நெருங்கி அணைத்து
இன்று நீ மிக
அழகாய் இருக்கிறாய் ...
நட்சத்திரம் போல் ஒளிர்கிறாய்
திடீரென்று
உன் விழிகள்
உதடுகள்
தனங்கள்
யாவும் பெரிதாய் விரிந்திருக்கின்றன
நீ எதற்கோ
ரொம்பத் தயாராக இருக்கிறாய் அல்லவா
என்றேன்
பூமிக்கு
சட்டென்று
இழுக்கப் பட்ட
பறவை போல்
அவள் முகம் அணைந்தது
தூங்கும் பல சொற்கள்
துடித்த  அவள் இதழ்களை நெருடி
மீண்டும் உன் அலுவலக நண்பர் அல்லவா
அவருடன் உலக இலக்கியம் அல்லவா
என்றதற்கு விசும்பி அழ ஆரம்பித்தவளை
புன்னகையுடன் விலக்கி
என் குகைக்குள்  புகுந்துகொண்டேன்
இனி இரவு  முழுவதும்
தூங்காது
குற்ற உணர்ச்சியின் சாலைகளில்
அவள் மீள மீள
ஓடிக் கொண்டிருப்பாள்
என்பதை உணர்ந்ததும்
புன்னகை பெருகி நிறைந்தது
ஒரு பறவையைப்
பறக்கும்போதே கொல்வதுதான்
இன்பமானது என நான் அறிவேன்
அந்த திருப்தியுடன்
மெல்ல கைபேசியை உயிர்ப்பித்து
என் தோழியிடம் பேச ஆரம்பித்தேன்
அவள் கணவன்
இன்று
ஊரில் இல்லை பேசு என்று
காலையிலேயே சொன்னாள்....

6 comments:

  1. சரி, சரி....:)

    ReplyDelete
  2. padma நன்றி.இது ஒரு பாசிசக் கவிதை என்று ஒரு பெண் திட்டி மடல் எழுதி இருந்தார்.இப்பலாம் பொம்பளைங்க கையில ஏச்சுவாங்காம பொழுதே விடிய மாட்டேன்கிறது.

    மோகன் நன்றி

    வினோத் நீங்கள் கொஞ்சம் வில்லங்கமான ஆள் என தெரிகிறது.)))[நானும்தான்.சேம் ப்ளட்

    மீனக்ஷி சார் என் எழுத்தை தொடர்ச்சியாகப் படித்து என்னைப் பதட்டப் படுத்துகிறீர்களே...)))எதற்கு எழுதுவது என்று சலித்து அயர்கிற பொழுது எல்லாம் யாரோ அனுப்பிய புறாபோல உங்கள் பின்னூட்டம் வந்துவிடும் நன்றி

    ReplyDelete
  3. உங்கள் பின்னூட்டம் மனதை நெகிழ வைக்கிறது போகன். உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை. உங்களின் சில கவிதைகளை மிகவும் ரசிக்கிறேன். இப்பொழுது கூட நீங்கள் எழுதி இருக்கும் 'பிடிவாதப் பூ' கவிதையை பல முறை ரசித்து படித்து விட்டேன். எழுதுவது உங்களுக்கும் நிறைவை தருகிறது, படிக்கும் என்னை போன்றவர்களுக்கும் நிறைவை தருகிறது. அதனால் சலித்துக் கொள்ளாமல் எழுதுங்கள். :)

    மீனாக்ஷி என்ற பெயரை ஆண்பாலாக நினைக்கும் சிலரில் நீங்களும் ஒருவராகி விட்டீர்களே! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails