ஒரு பாத்திரத்தைத்
திறப்பது போல
இரவை
சூரியன் திறந்து பார்த்த
பொழுதில் கண்விழித்தேன்
ஒரு சிறு குழந்தையின்
விரல்கள் கொண்டு
மென்னடையுடன்
ஓசையற்று
பரவிப் பரவி
ஒவ்வொரு செடியாய்
ஒவ்வொரு இலையாய்
ஒவ்வொரு பூவாய்
எழுப்பிக் கொண்டிருந்தது பனிப்புகை...
துயரத்தின் அத்தனைக் கனமும்
உதிர்ந்து
ஒரு இறகைப் போல
கனமற்று
பூமியின் மீது அமர்ந்திருந்தேன்
தெற்கிலிருந்து
ஷெல்கள் சிதறும் ஒலி
நெருங்கிவந்து கொண்டே இருந்தது
இந்த அழகான அதிகாலையிலும்
யாரோ கொல்கிறார்கள்
யாரோ சாகிறார்கள்...
நானும் அவர்களும்
ஒரே உலகைத்தான்
பகிர்ந்து கொண்டிருக்கிறோமா
என்று சந்தேகம் கொள்கிறேன்
சட்டைப்பையில் உறுத்தும்
என் பெண்ணின்
கருகிய வளைகளை
எடுத்து
கன்னத்தில் சேர்த்துக் கொள்கிறேன்
அவளது சிரிப்புச் சத்தம்
அதில் கேட்கிறதாவென...
நேற்றைய ஷெல்வீச்சில்
அவளிடமிருந்து கிடைத்த
ஒரே பொருள் அதுவே...
ஒரு வகையில்
எதையும் மிச்சம் வைக்காமல்
இறந்ததற்காக அவளுக்கு
நன்றி சொன்னேன்
அல்லது
நான் நன்றி சொல்லவேண்டியது
எதிரிக்கா..
இனி இறப்பதற்கும்
இழப்பதற்கும் எதுவுமில்லை
என்ற விடுதலையோடு
ஒரு ஆரஞ்சுப் பழம் போல
பூத்துக் கொண்டிருந்த
சூரியனைவிட்டு விட்டு
ஒரு இயந்திர சங்கீதம் போல்
உறங்கிக் கிடந்தவர்கள் மேல்
துடித்துக் கொண்டிருக்கும்
ஷெல்களின் திசை நோக்கி
நடக்கத் தொடங்கினேன்
இனி இருப்பதற்கும்
இங்கு எதுவுமில்லை .....
ஆரம்பமே அபாரம்! பாத்திரத்தைத் திறந்து பார்ப்பது போல் - ரொம்ப ரசித்தேன்.
ReplyDeleteஎதையும் மிச்சம் வைக்காமல் இறந்தது - தைத்த வரி.
மிகவும் அருமை!
ReplyDelete//இந்த அழகான அதிகாலையிலும்
யாரோ கொல்கிறார்கள்
யாரோ சாகிறார்கள்...
நானும் அவர்களும்
ஒரே உலகைத்தான்
பகிர்ந்து கொண்டிருக்கிறோமா//
நானும் பலமுறை இது போல யோசித்து இருக்கிறேன்.
இறுதி வரிகள் மனதை மிகவும் பாதித்தது.