ஒரு முழுச் சந்திரக் கிரகணமன்று ஊரிலிருந்து போன் வந்தது.அப்பா.வழக்கத்தை விடப் பதட்டமான குரல்.பேச்சு சரியாகப் புரியவில்லை.ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிந்தது.அம்மாவிடம் போனைக் கொடுக்கச் சொல்லி பேசினேன்.அம்மா கடுப்பாக ''உங்க அப்பனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுலே''எனறாள்.அவள் வழக்கமாய்ச் சொல்வதுதான் அது எனினும் சற்றே நெருடலாகத் தோன்றியதால் கைக்குழந்தையுடன் நண்பர்களற்ற ஒரு ஊரில் மனைவியைத் தனியாக விட்டுவிட்டு பேருந்து ஏறி வீடு போய்ச் சேரும்வரை அது உண்மையாக இருக்கும் என நினைக்கவில்லை.உண்மையில் அது உறைக்க எனக்கு இரண்டொரு நாட்கள் பிடித்தது.ஆம்.அப்பாவின் மனநிலை முற்றிலுமாகத் தவறி இருந்தது.யாரோ அவரைக் கொல்ல வருவதாக .நினைக்க ஆரம்பித்திருந்தார்.இரவெல்லாம் தூங்காமல் யாரையும் தூங்கவிடாமல் பயந்து பிதற்றிக் கொண்டே இருந்தார்.அம்மா அவர் நடிப்பதாக சொன்னாள்.யாரோ மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி சொன்னார்கள்.நான் சினந்து மறுத்தேன்.மன நோய் என்ற சொல்லையே சிந்திக்க மறுத்தேன்.
கொஞ்சகாலத்துக்கு முன்புவரை தெருவிலேயே மிக மரியாதையான கவுரவம் கலையாத குடும்பம்.என்ன கம்பனி டிவி வாங்குவது என்பது முதல் வீட்டுச் சுவற்றுக்கு என்ன வர்ணம் பூசுவது என்பது வரை எங்கள் வீட்டின் முடிவுகளே பின்பற்றப் படும்..அதுவும் அப்போது நான் வேறு சக்தி உபாசகன்!எப்படி என் வீட்டில் இது நிகழக் கூடும்?அம்மாவின் தொடர்ந்த நச்சரிப்பினல்தான் ஏதேதோ பேசுகிறார் என்று நினைத்தேன்.அங்கிருந்து வற்புறுத்தி அப்பாவை நான் வேலை பார்க்கும் ஊருக்கு அழைத்துவந்தேன்.இட மாற்றம் அவரை மாற்றும் என்று நினைத்தேன்.ஆனால் அப்பாவுக்கு மகனைவிட ஊரைவிட அவர் கட்டிய அவர் வீடு தான் உயிர்.வேறெங்கும் அவர் இயல்பாக உணரமாட்டார்என்பது மெதுவாகத்தான் புரிந்தது.அங்கிருந்த ஒரு வாரமும் எந்த முன்னேற்றமும் இல்லை.அப்பாவின் மீது உயிராக இருந்த என் குழந்தையும் மனைவியுமே அவரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தார்கள்.நான் எளிய தூக்க மாத்திரைகளை முதலில் கொடுத்துப் பார்த்தேன்.தூங்கி எழுந்து சற்று நேரம் தெளிவாகப் பேசுவார்.ஒரு நாள் மாலை அவரது வழக்கமான நகைச்சுவையுடன் என்னை அடை மழைக்கும் அசையாத எருமை என்று கிண்டலடித்தார்.ஆனால் அந்தத் தருணங்கள் குறைந்து கொண்டே வந்தன .அப்போது நான் வணங்கிக் கொண்டிருந்த சக்தி அவரைக் காப்பாற்றுவாள் என்று நான் முட்டாள்த் தனமாக நம்பினேன்.அது போன்ற அற்புதங்கள் அப்போது நான் படித்துக் கொண்டிருந்த பாலகுமாரன் நாவல்களில் மட்டுமே நிகழ்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாரம் ஆனது.அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி எனக்கு அழுத்தங்கள் தரப் பட்டன.
நான் நெல்லையில் ஒரு புகழ்பெற்ற மன நல மருத்துவரிடம் மிகுந்த அவமானத்துடன் அவரை அழைத்துச் சென்றேன்.அங்கு எதிர்பார்த்ததைவிட கூட்டமாக இருந்தது.ஆலோசனை கூறுபவர் ஒவ்வொரு நோயாளியின் கூட வந்தவர்களிடமும் கேள்விகள் கேட்டு படிவம் ஒன்றை இயந்திரத் தனமாக நிரப்பிக் கொண்டிருந்தார்.மருத்துவரின் சிரிப்பு கூட போலியாகவே பட்டது.ஒரு வியாபாரியின் சிரிப்பு.தடிமனான திரு நீற்றுப் பட்டை அணிந்திருந்தார்.தலைக்கு மேல் உயரமான சாமிப் படங்கள்.நான் ஆழ்மனதில் ஒரு கிறித்து போன்ற ஒரு ஆளை எதிர்பார்த்தேனோ என்னவோ தெரியவில்லை.ஏமாற்றமாக இருந்தது.மாத்திரைகள் ஊசிகள்..அப்பா முதல் இரண்டு நாட்கள் தூங்கிக் கொண்டே இருந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக மருந்தின் வீர்யம் குறைந்து . விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் வீட்டுக்கு யாரோ தீ வைப்பதாக பிதற்றிக் கொண்டே இருந்தார்..ஒரு நாள் காலைநடை போகிறேன் என்று போய் கமிசனர் ஆபிசில் பக்கத்து வீட்டுக் காரர்கள் மீது புகார் செய்துவிட்டு வந்ததும்தான் தீவிரத்தை உணர்ந்து அவர் போக்குவரத்தை கண்காணிக்க ஆரம்பித்தோம்.
அப்பா ஸ்டைலான ஒரு மனிதர்.சுந்தர ராமசாமியை அழகன்யா என்று ஒரு எழுத்தாளர் சொன்னதாகப் படித்த போது அப்பா நினைவுதான் வந்தது.அப்பாவும் அழகர்.உடையில் உருவத்தில் பேச்சில்...ஒரு பெண்ணைவிட அதிகநேரம் உடைத் தேர்விலும் அதைத் தைப்பதிலும் எடுத்துக் கொள்வார்.அதன் கடைசிக் கோணமும் அவருக்குச் சரியாகப் பொருந்தும் வரைத் தையல்காரனைத் தொந்திரவு செய்வார்.ஆனால் எல்லாம் ஒரு கலைக்கப் படும் ஓவியம் போல் ஆகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.அப்பா அழகர் மட்டுமல்ல பேருக்கேற்றாற்போல் ராஜா மாதிரி இருந்தவர்.ஆனால் அம்மா அவருக்கேற்றவர் அல்ல.அம்மா மட்டுமல்ல நான் எனது உடன்பிறப்புகள் யாருமே அவர் தரம் அல்ல.இந்த சுருதி பேதத்தின் நடுவே தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க நேர்ந்தது.
ஆனால் ராஜவாழ்க்கை எல்லாம் ஒய்வு பெறும் வரையே..ஓய்வூதியத்தின் அத்துணை தொகையையும் கடனும் வாங்கி தங்கை கல்யாணம் செய்யவேண்டி இருந்தது.கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்னால் என்னுடைய பொறுப்பற்ற டிரைவிங்கில் பெரிய விபத்து ஏற்பட்டு வலது கை முழுக்கச் செயல்படாமல் போனது.பின்னர் தொடர்ச்சியான பயிற்சி மூலம் அதைப் பகுதி திரும்பப் பெற்றார்.அது அவருக்கு பெருத்த அடியாக இருந்தது.அவர் எழுதி எழுதியே வாழ்ந்தவர்.[எழுத்தாளர் அல்ல]அரசுப் பணியில் ஆரம்பநிலை குமாஸ்தாவாகச் சேர்ந்து நிலை நிலையாக உயர்ந்தவர்.ஒரு மாதிரி இறுக்கமான அலுவலக ஆங்கிலத்தில் வேகமாக பொடிவைத்து எழுதுவார்.ஒய்வு பெற்ற பிறகும் பல்வேறு வகை அலுவல் கடிதங்களுக்காக அவரைத் தேடி வருவார்கள்.நான் அந்த எழுதும் கையைத்தான் பொறுப்பற்று வண்டி ஒட்டி உடைத்துவிட்டேன்..அது மட்டுமல்ல அந்த பாகப் பிரிவினை கை பல இடங்களில் அவருக்கு அவமானத்தைக் கொடுப்பதாய் உணர்ந்தார்...ஆனால் அதைவிட பெருத்த அவமானங்கள் தனக்குக் காத்திருப்பது தெரிந்திருந்தால் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்
அவர் ஒரு தூய்மைவாதி.உடல் உடை மட்டுமல்ல எல்லாமே அவருக்கு நேர்த்தியாக இருக்கவேண்டும்.அவரது படுக்கை விரிப்புகள் கூட மிக நேர்த்தியாக விரிக்கப் பட்டிருக்கும்.அவர் துணிகளை அவரே துவைத்து அவரே சட்டையின் விளிம்பு கையைக் கீறும்வரை அயர்ன் செய்துதான் அணிவார்.தலைமுடி எவ்வளவு உயரம் வரை வளரவேண்டும் என்று சரியான மனக் கணிதம் ஒன்று அவரிடம் உண்டு.அதே போல் வீட்டையும் நேரத்தியாக்க முயன்றுகொண்டே இருப்பார்.தினமும் வீட்டில் ஏதாவது ஒரு திருத்த வேலை நடந்து கொண்டிருக்கும்.
ஆனால் நாங்கள் அவருக்கு நேர் எதிர்.எதிலும் நேர்த்தியில்லை.அவரைப் போல் நாங்கள் இருக்கவேண்டும் என அவர் நினைத்தாலும் நிர்ப்பந்திக்கவில்லை.எங்களுடன் ஒரு தோழரைப் போலவே பழகினார்.நாங்கள் அவரது ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் பொய் ஆக்கினோம்.சரியாகப் படிக்காமல் திரிந்தோம்.படித்தாலும் வேலைக்குப் போகாமல் வீட்டோடு கிடந்தோம்.அவரது குடும்ப உறவினர்கள் சூழலில் இருந்தவர்கள் அடுத்த தலைமுறைகளெல்லாம் மெல்ல மெல்ல படித்தோ பணி புரிந்தோ எங்களைவிட உயர்ந்து விலகிப் போவதை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார் அவர்.ஆனாலும் கடைசிவரை எங்கும் எங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்.
அம்மாவுக்கும் அவருக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை.அம்மா அதிகம் படிக்காத சாதாரண வெள்ளாளப் பெண்.அவளுக்கு அப்பாவைப் புரியவில்லை..அதே போல் அப்பாவும் அவள் இடத்துக்கு இறங்கிப் போகவில்லை.மேலும் அப்பாவுக்கு அவர் அம்மா மீதும் தம்பி மீதும் பெரிய பற்றுதல் இருந்தது.அது மிகப் பெரிய பூசல்களுக்கு வழிவகுத்தது.அவர்கள் மண உறவின் பெரும்பகுதி இந்தப் பூசல்களால்தான் நிறைந்திருந்தது.மேலும் அப்பாவுக்கு அளவுக்கு மீறிய தற்பெருமிதமும் சற்று நக்கலாய்ப் பேசும் பழக்கமும் இருந்தது.உண்மையில் அவை அவரது நொய்மையான மனத்தை உலகத்திடமிருந்து மறைத்து வைக்க அவர் பயன்படுத்திய யுத்திகள் என்றுபின்னரே உணர்ந்தேன்.
மற்ற விசயங்களில் இருந்த நேர்த்தி அவருக்கு பண விசயத்தில் இல்லை.சற்று பெரிய கைதான்.யார் கேட்டாலும் கொடுக்கும் கை. அந்தக் கை மெல்லச் சுருங்கி பிறர் கையை நோக்கவேண்டிய காலம் வந்ததில் இருந்தே எங்களது எல்லா துயரங்களும் தொடங்கியது...
[வரும்]
//அதன் கடைசிக் கோணமும் அவருக்குச் சரியாகப் பொருந்தும் வரைத் தையல்காரனைத் தொந்திரவு செய்வார்.
ReplyDeleteசட்டையின் விளிம்பு கையைக் கீறும்வரை அயர்ன் செய்துதான் அணிவார்//
நல்லா எழுதியிருக்கீங்க!
நல்ல flow .
ReplyDeleteதூங்காமல் எழுத ஆரம்பிச்சாச்சா?
பார்த்து !
ரசிக்க மறந்து கனமான மனதுடன் படித்தேன்..
ReplyDeleteஅருமையான நடை...