Monday, December 20, 2010

உடல் தத்துவம் 14

எனது வாழ்க்கையின் நீண்ட நிமிடம் அதுவாகத்தான் இருக்கும்.நான் உறைந்த மெழுகு போல் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.நீல விடிவிளக்கின்ஒளியில் அவர்கள் உருவம் மேலும் துலங்கித் துலங்கி வந்தது.உருவம் மட்டுமல்ல பசித்த நாகம் போல் சீறும் அவர்கள் மூச்சும் மிக அடிக் குரலில் ஒரு மிருகம்போல அத்தை எழுப்பும் முனகல்களும் கூட மெல்ல  மெல்லப் பெரிதாகி என்னை நெருங்கிவந்தன.என் மனம் அதன் அத்தனை இயக்கங்களையும் நிறுத்தி முழுவதும் கண்ணாய்க் காதாய்
மாறி நின்றது.முதன் முதலாய் மரணத்தை  எதிர்கொள்வது போலவே காமத்தை எத்ர்கொள்வதும் ஒருவன் வாழ்வில் மிக நொய்மையான தருணமே  என்று மருத்துவர் ஒருதடவை சொன்னார்..அது சரியாக அறிமுகப் படுத்தப் படாதவர்கள் பெரும் மனச் சிக்கல்களுக்கு பின்னால்  ஆளாகிறார்கள் என்று சொன்னார்.என் விஷயத்தில் அது உண்மையே.நான் என்னுள் எதுவோ மிகுந்த வலியுடன் உடைவதை உணர்ந்தேன்.அந்த இடத்தைவிட்டு நகர மிக முயன்றேன்.ஆனால் கால்கள் வேர்விட்டு அசைய மறுத்தன.கைகால்கள் முறுக்கி வலித்தன.காதுக்குள் விர்ரென்று  ஒரு வண்டு சுழலும் சத்தம் கேட்டது.என்னையும் அறியாமல் ஒரு பெரிய கேவல் என்னிடமிருந்து எழுந்தது.நான் சட் என்ற ஒலியுடன் கீழே விழுந்தேன்..


விழித்த போது அத்தையின் மடியில் இருந்தேன்..பின் மண்டை வலித்தது.எஞ்சிநீயரைக் காணவில்லை.அத்தை உடை அணிந்திருந்தாள்.என் உடல் அவள் உடல் எல்லாம் தண்ணீரால் நனைந்திருந்தது.அவள் ''பிள்ளே ..பிள்ளே  என்னாச்சு பிள்ளே  எந்திரி பிள்ளே ''என்று கதறிக் கொண்டிருந்தாள்.நான் அவளை உதறி எழும்ப முயற்சித்தேன்.தடுமாரியவனை அவள் அணைக்க முயல வலிந்து உதறினேன்.அவள் உறைந்து ஒரு கணம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தாள்..மறுகணம் அவள் முகம் உடைந்து கண்ணீர் பெருக சட் சட்டென்று தலையில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.;;ஐயோ அய்யோ என்னா பண்ணிட்டேன் கர்த்தரே என்ன பண்ணிட்டேன்''என்று விசும்பினாள்.;;பிள்ளே  இங்க பாரேன்.ஐயோ இங்க பாரேன்''என்று என் முகத்தைப் பிடித்து நிமிர்த்த முயற்சிக்க நான் ''ம்ம்'''என்று உறுமினேன்.அவள் மேலும் உடைந்து ''என்ன மன்னிச்சிடு பிள்ளே  பிள்ளே நான் சொல்றதக் கேளு பிள்ளே  என்று திரும்பத் திரும்பக் கெஞ்சினாள்.அவளது மெலிய குரல் சிதறி நாராசமாய் அறையை நிறைத்தது.எனக்கு ரூபியைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது.அவள் மட்டும்தான் இப்போது என்னைப் புரிந்துகொள்வாள் என்று ஏனோ நினைத்தேன்.மெல்ல ''ரூபி ரூபி ''என்று விசும்பினேன்.மேலும் .'நான் வீட்டுக்குப் போணும் என்று அழ ஆரம்பித்தேன்.ஏனோ அம்மாவின்  நினைவும்  வந்து ''அம்மா அம்மா;;என்று தேம்பினேன்.''மறுபடியும் ''எனக்கு வீட்டுக்குப் போணும்''என்று அழ அவள் சமாதானமாய்த் தொட முயன்று ''இன்னும் விடியலை பிள்ள விடிஞ்ச உடனே போலாம்..என்ன ,,டே இங்கே  பார்டா...என்னை..அத்தையைப் பாரு ..நான் சொல்றதக் கேளுடா...அத்தை பாவமில்லையா'''என நான் குரோதமாய்  அவளிடமிருந்து தள்ளி நகர்ந்து ''நீ பாவம்தான்''என்று கத்தினேன்.விலுக்கென்று  எழும்பிஉள்ளறைக்கு ஓடி அவள் எனக்கு பரிசாகக் கொடுத்திருந்த சித்திர விவிலியத்தை எடுத்துவந்து அவள் மேல் தூக்கி எறிந்தேன்.''இனி எனக்கு  இது வேணாம்''

அவளது சகல இயக்கங்களும் நின்று உதடும் கன்னச் சதை மட்டும் துடிக்க தலை குனிந்துகொண்டாள்.முழங்காலுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டாள்.அவ்வபோது முதுகு மட்டும் விதிர்த்து விதிர்த்து அடங்கியது.அந்த தருணத்தில் எனக்கு அவள் மேல் ஏன் ஒரு துளிக் கருணை கூட தோன்றவில்லை என இப்போது நினைத்தால் கூட வியப்பாக இருக்கிறது.நான் ஒரு கணம் நெகிழ்ந்திருந்தால் கூட எல்லாம் வேறு விதமாய்ப்  போய் இருக்கும்.ஒருவேளை இந்த டையரியை நான் எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது.இந்த மாத்திரைகளுக்கும் தூக்கமின்மைக்கும் அவசியம் இருந்திருக்காது ஆனால் அது அவ்விதம் நிகழவில்லை ஏன் எனில் அது அவ்விதம் நிகழவில்லை என்று மட்டுமே சொல்லமுடிகிறது இப்போது.ஒரு கூண்டில் அடைபட்ட இரண்டு மிருகங்கள் போல அந்த ஒற்றை அறையில் இரவு முழுதும் கிடந்தோம் இருவரும்.ஒரு சவ்வு மூடுவது போல துக்கத்தை தூக்கம் மூடியது..

விழித்தபோது விடிந்திருந்தது.அத்தையும் அப்படியே சுவரோடு சுவராய்ச் சரிந்து கிடந்தாள்.நான் எழுந்து கதவைத் திறக்க முயற்சித்த சத்தம் கேட்டு விழித்தாள்.ஒரு கணம் ஒரே ஒரு கணம் அவள் விழிகள் நேற்றைய இரவின் சுவடு எதுவும் இல்லாமல் பளிச்சென்று தெளிவாக இருந்தது.நான் முதன் முதலில் அறிந்த அத்தையை அந்தக் கண்களில் கண்டேன்.அப்படியே கரைந்து அவள் கைகளுக்குள் விழுந்துவிட விரும்பிய ஒரு வினாடி.ஆனால் அது நீடிக்கவில்லை.அடுத்த கணமே அவற்றில் நினைவுகளின் அழுக்கு படிந்து மங்க எழுந்து பதற்றத்தோடு ஓடி வந்தாள்.
''தேயில குடிக்கலியா பிள்ள''
எப்போதுமே அதிக சர்க்கரை போட்டு ஒரு கோப்பை சிலோன் தேயிலை அவள் காலையில் தருவாள்.அதைக் குடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு சாப்பிட்டு பள்ளிக்குப் போவேன்.நான் பதில் பேசாது தாழ்பாளை நீக்கித் திறந்து வாசலில் நின்றேன்.அவள் ஒரு கணம் என் முழங்கையை அழுத்திப் பிடித்தவாறே ஏக்கமாக என் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தாள் ..''பிள்ள''என்று சொன்னவள் கண்கள் மறுபடி நீரால் நிறைந்தது.அவள் உதடுகள் ஏதோ சொல்ல விரும்புவது போல் துடித்தன.பிறகு கையை விட்டுவிட்டாள்.என் பின்னால் அவள் கதவுகள் சாத்தும் ஒலி கேட்டது..

நான் எந்திரம் போல் இறங்கி நடந்தேன்.அதே போல் குளித்து பளளி போனேன்.பள்ளியில் எதுவுமே பதியவில்லை.தூக்கம் இல்லாததும் அதிர்ச்சியும் என்னைக் களைப்படையச் செய்திருந்தன.திரும்பத் திரும்ப வெட்டுப் பட்டது போல் துடிக்கும் அத்தையின் நிர்வாணக் கால்களும் அதன் மீது அசையும் முதுகும்தான் நினைவு வந்தது..நான் தூங்கித் தூங்கி விழுவது பார்த்து டீச்சர் ''உடம்பு சரியில்லைன்ன ஏன் ஸ்கூலுக்கு வரே''என்று ஒரு பெரிய பையனுடன் வீட்டுக்கு மதியமே அனுப்பிவைத்தார்..திரும்பப் போகையில் க்வார்ட்டர்சில் ஒரே கூட்டமாக இருந்தது.என்னவென்று புரியாமல் ஆச்சியிடம் கேக்க ''ஒண்ணுமில்லே நீ ஏன் இப்ப வந்தே ''என்று கேட்டாள்.''உடம்பு சரியில்லைன்னா படுத்துத் தூங்கு''எனறாள்..நான் வேறு எதுவும் கேட்காது படுக்கையில் விழுந்து செத்தவன் போல் தூங்கினேன்.விழித்தபோது வானில் நீலம் அடர்ந்திருந்தது.ஆச்சி விளக்கைப் போட்டு ''ஏலே முழிச்சிட்டியா..உடம்பு எப்படி இருக்கு..முழிஎல்லாம் சிவு சிவுன்னு இருக்கே..சுக்குத்தண்ணீ போட்டுத்தாறேன் குடிக்கியா...ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போலாம்னா எல்லா ஆம்பிளைங்களும் திருநெல்வேலி போயிட்டாங்களே''எனறாள்

எனக்கு எதுவோ சரியில்லை என்று பட எழுந்து வெளியே போக முயற்சிக்க ''அய்யா இப்ப எங்கே போறே..உடம்பு சரியாகட்டு 'என்றதையும் மீறி வெளியே வந்தேன்.விநாயகம் வீட்டு முற்றத்தில் ஒரு பெண்கள் கூட்டமே குழுமியிருக்க சிறுவர்கள் எல்லாரும் சற்று தள்ளி நின்றிருந்தனர்/என்னைப் பார்த்ததுமே மஞ்சு பாவாடை பறக்க ஓடி வந்தாள்.மூச்சிரைக்க நின்று வாங்கிக் கொண்டு .''அத்தை விஷம் சாப்பிட்டிருச்சு.ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் இருக்காக''எனறாள்

பின்னாலேயே விநாயகமும் குலுங்க குலுங்க ஓடி வந்தான். அவன் ''அதெல்லாம் இல்லே நான்தான் சொன்னேன்லா அங்க பாம்பு இருக்குன்னு அது கடிச்சிடுச்சு..இங்க ஆஸ்பத்திரில முடியாதுன்னு சொல்லி டவுனுக்கு அப்பா வண்டில கொண்டு போயிருக்கு கூட உங்க சித்தப்பாவும் போய் இருக்கு..அதான்  சொல்லிட்டே இருந்தேன் பாம்பு அங்க ..''என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க பாதியிலேயே விட்டுவிட்டு  அத்தை வீட்டை நோக்கி நடந்தேன்.

அங்கிருந்த வீடுகளில் அந்த வீடு மட்டும் வெளிவிளக்கு இடப்படாமல் இருட்டாக இருக்க விளக்கைப் போட்டேன்.விநாயகம் தாழ்ந்த குரலில் கத்தினான்.''டேய் அங்க போகாதே.பாம்பு இருக்கு''

அவள் வீடு வெறுமனே சாத்தியிருந்ததை தாழ்ப்பாளிட்டு அடைத்தேன்.பெருக்கப் படாதிருந்த தாழ்வாரததைப் பெருக்கிச் சுத்தமாக்கினேன்.வாசலில் சிதறியிருந்த அவளது செருப்புகளை அவள் வைப்பது போலவே  ஒழுங்காய் ஓரமாக வைத்தேன்.அவள் வந்தவுடன் இதெல்லாம் நான்தான் செய்தேன் என்று சொல்லி அவளிடம் ஒரு புன்னகையை வாங்கவேண்டும் என்று நினைத்தவாறே சற்றுநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.ஆச்சி ''ஏலே அங்க என்ன பண்றே...இங்கே வா முதல்ல''என்று அதட்ட அங்கிருந்து  இறங்கும்போது சரசரவென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டு தலையை உயர்த்திப் பார்க்க வேகமாக இறங்கிக் கொண்டிருந்த மாலைவானின் பின்னணியில் ஒரு நிழலாக ஆனால் தெளிவாக காற்றில் ஆடும் ஒரு கொடியைப் போல் காற்றை முகர்வது போல் தலையைத்தூக்கிப்  பார்த்த அதை பார்த்தேன்.ஒரு கணம் அந்த இருட்டிலும் அதன் கண்கள் ஒளிர்ந்து என்னைப் பார்ப்பது போன்ற ஒரு பிரமைக்கு ஆளானேன்

பாம்பு.

திரும்பவும் கைகால் உதறி கீழே விழுந்த என்னை யாரோ வீட்டுக்குத் தூக்கிப் போனது மட்டுமே நினைவிருந்தது.மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சலில் கண்திறக்காமல் கிடந்தேன்.நான்காம் நாள் விழித்து எழுந்தபிறகு ஆச்சியிடம் முதல் கேள்வியாக கேட்டேன்.''அத்தை எங்கே'?'

அவள் தயக்கமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப் பட்ட அன்றிரவே  சிகிச்சை பலனின்றி அத்தை இறந்து போனதைச் சொன்னாள்..

5 comments:

 1. உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... எழுத்துநடை அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

  ReplyDelete
 2. மனதில் ஒரு சிறிய கனமான உணர்வு படித்து முடிக்கும் பொது..

  ReplyDelete
 3. தொடர்ந்து இரு பதிவுகளா? உடல் தத்துவத்திலா? வாழ்க!

  ReplyDelete
 4. ‘வாழ்க்கையின் நீண்ட நிமிடம் அதுவாகத்தான் இருக்கும்‘

  ‘நான் உறைந்த மெழுகு போல் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்‘

  ‘பசித்த நாகம் போல் சீறும் அவர்கள் மூச்சும்‘

  ‘என் மனம் அதன் அத்தனை இயக்கங்களையும் நிறுத்தி‘


  ரசித்தேன்,
  காத்திருக்கிறேன் மேலும் ரசிக்க.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails