Thursday, December 30, 2010

இன்னுமொரு இலை..

பேசினில் கழிவுநீர்போல்
கடைசிச் சொட்டு இரவும்
சுழித்தோடிப் போனபின்பே
இன்றும் கண்விழித்தேன்
மற்றுமொரு
அரக்கச் சூரியனின்
வெளிச்ச ஆபாசத்துக்கஞ்சி
சற்று நேரம் அசையாதிருந்தேன்
தாடையில்
பத்துநாள் மயிர்க்கறை முகத்தை
கண்ணாடி யில் பார்க்கையில்தான்
 தோன்றிற்று
இன்றோடு எனக்கு வயது நாற்பது
பச்சை நரம்பு தெரிய
யோடிகொலன் சவரம்
நகம் நனையும் வரை
நறுமணக்  குளியல்
 நாக்குருகும் வரை
நல்ல சாப்பாடு எல்லாம்
இன்றாவது செய்யவேண்டும்
கோயிலுக்குக் கூடப் போகலாம்
அல்லது குறைந்தது
யாரையாவது கொலை கூட செய்யலாம்
இந்நாளை
அர்த்தப் படுத்திக் கொள்ள
என நினைத்தேன்

ஆனால் இதில் எதையும் செய்யாமல்
எப்போதும்  போல்
படியிறங்கி வெளிப்போகையில்
உலகு மொத்தமும்
யாரோ துரத்துவது போல்
எங்கோ ஓடிக் கொண்டிருந்தது
பளளி நோக்கியோ
பணி நோக்கியோ
கடைக்கோ
கலக்டர் ஆபீசுக்கோ
விவாகத்துக்கோ
விவாகரத்துக்கோ
வாழ்வதற்கோ
சாவதற்கோ
வெளியெங்கும்
பதற்றம் ததும்பும் முகங்கள்
எப்படி என்னைத் தவிர
எல்லாருக்கும் செயவதற்கு
எப்போதும் ஏதோ இருக்கிறது
என்ற சிந்தனையுடன்
வழக்க ஹோட்டலில்
கருகிய முந்திரி கிடக்கும்
வழக்க பொங்கல்
கசப்புக் காபி சாப்பிட்டு
வழக்க சிரிப்புடன்
வழக்கப் பெட்டிக்கடையில்
வழக்கப் புகையை
வானோக்கி விட்டபோது
உச்சி மரத்திலிருந்து
ஒற்றை இலை ஒன்று
மேலிருந்து
யாரோ திருகிவிட்டாற்போல்
சுழன்று சுழன்று
மிதந்து மிதந்து வந்து
என் மூக்கில்
ஓர்கணம் உட்கார்ந்தது
பார்த்தாயா
என்று பரவசத்துடன்
பக்கத்தில் நின்றவனைப் பார்த்தேன்
அவன் பார்க்கவில்லை
எனத் தெரிந்தது
அவனுக்கு
அது
இன்னுமொரு மரத்தின்
இன்னுமொரு இலை
அவ்வளவுதான் என அறிந்தேன்
நானும் அவனுக்கு
அது போல்தான்
என்றுணர்ந்த நொடி தான்
தாங்காமல்
நான் கதறி அழ ஆரம்பித்தேன் ...

4 comments:

 1. இழப்பின் அதிர்ச்சியா
  எதிர்பார்ப்பின் அர்த்தமின்மையா

  இந்த ஏமாற்றம் உள்ளுக்குள் தாக்கி பாதிக்கிறது. இன்னொரு முறை படிக்க வேண்டும். அருமை.

  ReplyDelete
 2. உங்கள் கவிதையின் இரண்டாம் பகுதி மனதை மிகவும் பாதித்து விட்டது. சில நேரங்களில் தனிமையில் நடக்கும்போது எதிர்ப்படும் மனிதர்களின் எண்ணங்கள், தனியாக கோவில் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு, தரிசிக்க வருவோரின் எண்ணங்கள், பஸ்சிலும், ரயிலிலும் பிரயாணிக்கும் போது உடன் பிரயாணிப்பவர்களின் எண்ணங்கள், அவர்கள் எதற்காக எங்கு செல்கிறார்கள், நான் இவர்களை பற்றி இப்படி நினைக்கும்போது அவர்களும் இதே போல் என்னை பற்றி இப்படிதான் நினைப்பார்களா, இல்லை வேறு என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைப்பேன். இவ்வளவு காலமும் நான் மட்டும்தான் இப்படி எல்லாம் நினைக்கிறேனா, இல்லை என்னை போல இப்படி சிந்திப்பவர்கள் யாரவது ஒருத்தராவது இருப்பார்களா என்ற என் மனதில் இருந்த எண்ணத்திற்கு இன்று உங்கள் கவிதை ஒரு வடிகாலாகியது. பலமுறை படித்தேன்.

  //இழப்பின் அதிர்ச்சியா
  எதிர்பார்ப்பின் அர்த்தமின்மையா//
  அருமை, மிகவும் அருமை அப்பாதுரை! இந்த இரண்டின் விளைவுகள்தான் என் இந்த எண்ணங்களுக்கான விதையோ!

  ReplyDelete
 3. வயல்விட்டு வெளியேறி ட்ராக்டரில் ஏறி அமர்ந்ததுமே அந்நியமாதல் ஆரம்பமாகி விட்டது...தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகப் பெருகக் கூடிக் கொண்டே இருக்கிறது இது...வேடிக்கையாக இருக்கிறது இல்லையா கடல்நடுவில் தாகத்தில் சாகிறது போல ...

  ReplyDelete
 4. கடல்நடுவில் தாகத்தில் சாகிறது போல//
  :) nice

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails