Friday, December 17, 2010

வார்த்தை வாதை வாழ்க்கை 2

உங்கள் கட்டுரைத் தலைப்பில் உள்ள வாதை என்றால் என்ன என்று ஒருவர் கேட்டார்.வாதை என்ற வார்த்தை சமீபத்தில் அடிக்கடி இலக்கிய வெளியில் உபயோகிக்கப் படுகிறது.ஒவ்வொரு சீசனுக்கும் சில வார்த்தைகள் பிரபலமாக இருக்கும்.பிறகு வேறு வார்த்தைகள் வந்து பீடத்தில் ஏறும்.சரித்திரத்தில் வார்த்தைகளின் இந்தப் பரமபத விளையாட்டைக் கவனிப்பதே  சுவராஸ்யமான ஒரு பொழுது போக்காக  இருக்கும்.இடத்திற்கேற்றார் போல் தொழிலுக்கு ஏற்றது  போல் வயதுக்கு ஏற்றார் போல் கூட சில வார்த்தைகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.இவற்றை ஆங்கிலத்தில் jargon என்று சொல்வார்கள்.ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேக ஜார்கன்கள் உள்ளன.அதற்கான அகராதிகளும் வெளிவருகின்றன.காய்கறி மார்க்கட்டில் இருந்து ஷேர் மார்க்கட் வரை வேறு வேறு ஜார்கன்கள்.தமிழில் பரிபாசை என்று சொல்லலாம்..ஆனால் குதிரைகளின் மொழி என்று புரிந்து கொள்ளக் கூடாது.[ம்ஹூம்...மறு படி எஸ்ராவைப் பத்தி எழுதாதே போகன்.கட்டுப் படுத்திக்க]

பதின்ம மற்றும் கல்லூரி மாணவர்களின் தொழில் வார்த்தைகளை நம்மால் அவளவு எளிதில் புரிந்து கொள்வது கடினம்..என்னுடைய பதின்ம வயதில் நண்பர் வட்டாரத்தில்  விதம் விதமான பெண்களுக்காய் ரகம் ரகமான ரகசிய வார்த்தைகள் இருந்தன.''மச்சான் குத்துவிளக்குடா''என்று சொன்னால் பறவை  கல்யாணம் மட்டுமே செய்து கொள்ளும் காதல் செய்யாது என்று அர்த்தம்.சுவராஸ்யம் கம்மி.பொட்டிக்கடைடா என்று சொன்னால்...யார் கேட்டாலும் சாமான் கிடைக்கும் என்று அர்த்தம்[இங்கு 'சாமான்' என்பது எதையும் 'குறி'ப்பது அல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்].M.B.B.S என்றால் மருத்துவர் என்று நீங்கள் நினைத்தால் பாவம்.கல்யாணம் ஆனாலும் களையான கலையாத சித்திரம் என்று பொருள்.இது போல ஆண்களுக்கும் பெண்கள் நிறைய குறியீட்டுச் சொற்கள் வைத்திருக்கக் கூடும்.என்னுடன் பேசும் பெண்கள் எல்லாரும் o.k o.k என்று அடிக்கடி சொல்வார்கள் .நாம் என்ன சொனாலும் தலையாட்டுகிறார்களே என்று புளகாங்கிதத்தில் திரிந்தேன்.அது ஒட்டடைக் குச்சி என்று அர்த்தம் தருவது என அறிந்தபோது நடுவானில் விமானத்திலிருந்து தள்ளிவிடப் பட்டவன் போல் உணர்ந்தேன்.அது போல் பங்கி,[தூங்கு மூஞ்சி கேஸ்]s.p [சின்னப் பையன்] பால் டப்பி,பிஸ்கோத்து என்று பல பெயர்கள் எனக்கு இருந்திருக்கின்றன என அறிந்த போது....!இப்போது  சொற்கள் மாறிவிட்டன...ஆனால் அவை குறிக்கும் அர்த்தங்கள் அதிகம் மாறவில்லை.her hard drive is heavily infected என்று ஒரு நவ யுவர் சொன்ன போது புரிவது போலதான் தோன்றியது.நாங்க பொட்டிக் கடை என்போம்.[பெண்ணியர்கள் மன்னிக்க]

எங்கோ போய்விட்டோம்...வாதைக்கு வருவோம்.இந்த வாதை என்ற சொல்லை முதல் முதலாய் விவிலியத்தில்தான் அறிமுகம்..வாதை உன் கூடாரத்தை அணுகாது...என்று அடிக்கடி தெரு முனைகளில் புதிய மெசையாக்கள் உங்கள் காதுகளுக்கு உள்ளேயே வந்து கூவுவதைக் கேட்டிருப்பீர்கள்.விவிலியத்தில் நிறைய வாதைகள் உலாவுகின்றன.விவிலியத்தின் தமிழ் பற்றி தனியாக ஒருநாள் முழுக்கப் பேசலாம்.வாதை உன்  கூடாரத்தை அணுகாது என்று விவிலியம் சொல்கிறது.எதனால் வீட்டை அணுகாது என்று சொல்லவில்லை?[கூடாரம் என்று சொன்னால் எனக்கு சர்க்கசும் பெண்களின் பாவடையும்தான் நினைவு வருகிறது.இரண்டும் மிருகங்கள் உலவும் இடம்.]வேதங்களைப் போலவே விவிலியத்திலும் நிறைய மேய்ப்பர்களின் மொழி பயன் படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.ஏசுவே ஆட்டுக் குட்டியாகத்  தான் உருவகப் படுத்தப் படுகிறார்.ஆனால் அதே சமயம் சாத்தனுக்கும் பல இடங்களில் ஆட்டு உருவமே.!...ஆம்.சாத்தானும் ஒரு அஜமுகனே.[அஜன்-ஆடு]

அவர்களுக்கு ஆடு என்றால் நமக்கு மாடு.குறிப்பாக பசு.மனிதர்களையே பல்வேறு கோத்திரங்கள் ஆகத்தான்  பிரித்துக் கொண்டார்கள்.கோத்திரம் என்றால் தமிழில் சுமாராய் மாட்டுக் கொட்டகை என்று சொல்லலாம்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் நீங்கள் எந்த கொட்டகை என்று கேட்பது வழக்கமாய் இருந்திருக்கிறது.இது சாதியைப் போன்ற ஒரு பிரிவல்ல...சாதியைப் போன்று அல்லாமல் வேறு வேறு கோத்திரங்களில் மணம் புரிவதே ஊக்குவிக்கப் பட்டது.இது கொஞ்சம் மரபியல் சார்ந்த பகுப்புமுறை என்று தோன்றுகிறது.ஒரே கோத்திரங்களில் சேர்ந்தவர்கள் சகோதர உறவு முறையாகப் பார்க்கப்  பட்டது.அவர்கள் திருமணம் செய்து கொள்வது கடுமையாக எதிர்க்கப் பட்டது அவ்வாறு செய்வதை சட்ட பூர்வமாய்த் தடுக்கக் கோரி நீதிமன்றத்துக்கெல்லாம் போய் இருக்கிறார்கள்.ஆதி கோத்திரங்கள் எட்டு.எட்டு ரிஷிகளை மூலவராகக் கொண்டது.பின்னர் பிரிந்து 49 ஆக உயர்ந்தது.ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர் எல்லாம் சகோத்திரர்கள் அல்லது சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.சகோதரர் என்ற சொல்லுக்கு வேர்ச் சொல் ஒரு மாட்டுக் கொட்டகையில் இருக்கிறது !தமிழ்நாட்டிலும் பல சாதிகளில் கோத்திர முறை  கிளை என்ற பேரில் உலவுகிறது.ஒரே கிளையைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சகிக்காது கொலைகள் கூட நடந்திருக்கின்றன.


அதை விடுங்க..உன்னோட பெரிய வாதையாப் போச்சே என்கிறான் நண்பன்.வாதை  என்னன்னு கேட்டா மாடு ஆடுன்னு ஊரைச் சுத்தறியே என்கிறான்.வாதை வதை வதம் எல்லாம் துன்பம் என்ற ஒரே  பொருள் தரும் பல்வேறு சொற்களே எனத் தோன்றுகிறது.கீசக  வதம் தென் இந்தியாவின் முதல் திரைப்படம்.கேரளாவில் இன்றும் பிரபலமானதொரு கதக்களி நாடகம்.மகாபாரதத்தில்  வரும் ஒரு உபகதை.வனவாசத்தில் மாறுவேசத்தில் இருந்த திரவுபதியின் அழகில் மயங்கி ரொம்ப ஜொள்ளு விட்டு தொல்லை செய்த கீசகன என்ற கலா ரசிகனை பீமன்  நைச்சியமாய் வேறு இடத்துக்கு அழைத்துப் போய் வதக்கிக் கொன்ற கதை.

தென் தமிழகத்திலும் கேரளத்திலும் வாதை என்ற சொல்லுக்கு ஒரு தீய சக்தி  என்று லேசாக மாறுபட்ட பொருளும் உண்டு.'உன்னை  ஏதோ வாதை பிடிச்சிருக்கு போய் கோயில்ல  காட்டி தண்ணி எறியணும்' என்று அம்மா அடிக்கடி சொல்வாள்.வாதைகளிளிலும் பலவகைகள்.பெரும்பாலும் பெண்களையே பீடிக்கும்  வாதைகள்.பேய் பிசாசு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் எல்லா வாதைகளும் பிசாசுகள் அல்ல.முனி,மாடன் என்ற குட்டி தெய்வங்களும் உண்டு.பெரும்பாலும் நடு ராத்திரிகளில் வாக்கிங் போகும் வினோத பழக்கம் இவற்றிற்கு உண்டு.அப்போது நடுவில் வந்து டிஸ்டர்ப் செய்பவரை ரசிக்காது.வாதைகளை விரட்ட சிறப்பு வழிபாடுகளும் கோயில்களும் உள்ளன.கிறித்துவத்தில் இதற்கென்று சிறப்பு பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் அதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர்.நம்மூரில் கேரளாவில் தான் வாதை அதிகம்.எனவே அந்தத் துறை  ஸ்பெசலிஸ்ட்களும் அதிகம்.அங்கு இது ஒரு இண்டஸ்ட்ரி.சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் பிரசித்தம்.அங்கு நள்ளிரவில் நடைபெறும் குருதி பூஜை என்ற வாதை விரட்டு பூஜையைப் பார்ப்பது நல்ல ஒரு பின் நவீனத்துவ நாவலைப் படிப்பது போல் திகிலான  அனுபவமாக இருக்கும்

3 comments:

  1. எனக்கு வாதை பீடிக்காம, ’வாதை’ படிச்சிட்டேன்!

    ReplyDelete
  2. என்னமோ சொல்ல வந்தீர்கள் என்று தோன்றுகிறது. நகைச்சுவை ரசிக்க முடிகிறது. MBBS மண்டையைக் குடைகிறது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails