Sunday, December 12, 2010

வார்த்தை வாதை வாழ்க்கை....

என்னுடைய தளத்தை தற்செயலாக அலுவலக நண்பர் ஒருவர் பார்க்க நேர்ந்து 'என்ன இது உருப்படியா ஒண்ணுமில்லையே?''என்றார்.'ஆஹா இந்த விஷயம் இவருக்கும் தெரிந்துவிட்டதா என்ன ''என்று துணுக்குற்றேன்.அவரைத் தீவிர இலக்கியவாதியாகவோ தமிழ்ப் பண்டிதராகவோ நான் அதுவரை அறிந்திராதலால் விளக்கும்படிக் கூறினேன்.''கதை கவிதைன்னு எல்லாமே ஹராம்.''என்றார்.அவர் ஒரு தீவிர வஹாபி  முஸ்லீம்.கதை கட்டுரைகள் போன்றவை எல்லாம் அத்துணை இறைவனுக்குப் பிரியமானவை அல்ல .மனிதனை வழி கெடுப்பதற்காக இப்லிஸ் [சாத்தான்]கண்டுபிடித்த உபாயங்கள் என்று சரியாகவோ தவறாகவோ புரிந்து வைத்திருந்தார்.அவரது பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கும் மிகச் செழுமையான இலக்கியங்கள் பற்றி கூட அவர் அறிந்து வைத்திராதது வருத்தமாக இருந்தது.ரூமி போன்றவர்களைப் பற்றி கூட அவருக்கு என்ன கற்பிக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை.அவர் மட்டுமல்ல வேறு நிறைய பேர் இவ்விதம் என்னை சொல்லி இருக்கிறார்கள்.அதிகாலை பால்காரன் மணி அடிக்கும் ஓசை வரை விளக்கு எரித்துப் படிக்கும்  என்னைப் பார்த்து பரீட்சைக்குத்தானே என்று தவறாது ஒரு சித்தப்பா கேட்பார்.நான் படிப்பது ஒன்றுக்கும் பயன்படாத கதைப் புத்தகங்கள் -உலக இலக்கியம் கூட அல்ல-ஸ்டீபன் கிங்  போன்றவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் பரப்பிய இலக்கியங்கள் அவற்றைப் படித்து ஒரு ஐ ஏ எஸ் ஆகக் கூட முடியாது என்று எப்படி அவரிடம் சொல்வது என்று சிரித்துவைப்பேன்.

இது ஒரு விதமான அவுரங்கசீப்தனம் என்று நண்பருடன்  விவாதிக்க விரும்பவில்லை.ஆள் மற்றபடி மிக நல்ல மனிதர்.'உருப்படியா சமூகத்துக்குப் பயன்படுற மாதிரி ஏதாவது எழுது நாளைக்கு கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டாமா'என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.எனக்கு குழப்பம் ஆகிவிட்டது.ஜட்ஜ்மென்ட் டே[அர்னால்ட் ச்வர்சநேக்கர்  படமல்ல]அன்று கடவுளிடம் டையரி வேறு காண்பிக்கவேண்டும் என்று சொல்கிறாரே!சமூகத்துக்குப் பயன்படுவது போல் நான் என்ன எழுத முடியும்?வழக்கமாக சமூகம் பயப் படுவது போல் அல்லவா எழுதிப் பழக்கம்?'இத்துடன் நான் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன்'என்று எண்டு கார்டு போட்டு விட்டால் சமூகம் மிகுந்த பயன்பெறும் என்று என் மனைவி சொன்னாள்.குறைந்த பட்சம் என் குடும்பமாவது சந்தோசம் அடையக் கூடும்.ஆனால் அவர் சொன்னது informative ஆக ஏதாவது எழுது என்று...நான் என்ன informative ஆகத் தர முடியும் என்று புரியவில்லை.சமையல் முதற்கொண்டு கணினி வரை எதிலும் நான் விற்பன்னன் இல்லை.சமையலை விடுங்கள்.சாப்பிடுவதில் கூட நான் சமர்த்து கிடையாது.சாப்பாட்டுப்  புராணமும் செய்ய முடியாது.எனக்குத் தெரிந்ததெல்லாம் வார்த்தைகளோடு விளையாடுவதே.சிறு வயதிலிருந்து நான் வார்த்தைகளைக் காதலித்து வந்திருக்கிறேன்.சிலர் பேனாக்கள்  சேர்ப்பது போல் நாணயங்களைச் சேர்ப்பது போல் விதம் விதமான பிள்ளையார் சிலைகளைச் சேர்ப்பது போல் வார்த்தைகளைச் சேகரித்து வந்திருக்கிறேன்[இந்த வாக்கியம் ரொம்ப எஸ் ராத் தனமா இருக்கே?]ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு கதவு போல்.ஒவ்வொரு கதவாய்த் திறந்து கொண்டு அடுத்தடுத்த  வார்த்தைகளுக்குப் போய்க் கொண்டே இருப்பேன்.

ஆகவே என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இதுதான்.எனக்குப் பிடித்த வார்த்தைகளுடனான பிரயாணத்தில் உங்களையும் சேர்த்துக் கொள்வதுதான்.பிரயாணம் என்று சொன்னாலும் எங்கு போய்ச் சேரப் போகிறோம் என்று ஒரு உத்தேசமும் கிடையாது.தெரியாது.எதையும் ஒரு இலக்கோடு செய்யவேண்டும் என்கிற 'இலக்கிய'வாதிகள் இந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளவும். இதில் எதுவும் வரிசையாகவோ குறிப்பிட்ட வடிவத்துடனோ இருக்காது.ஒரு காட்டுக்குள் நுழைவது போல்தான் இருக்கும்.அடுத்த திருப்பத்தில் கரடி வரலாம்.புலி வரலாம்.மானும் வரலாம்.அழகான அப்சரஸ் ஒருத்தி சுனையில் ஆடை இன்றிக் குளித்துக் கொண்டிருக்கலாம்.நடு நடுவே கவிதை வரலாம்.இசைக் கோவைகள்,கணிதக் குறிப்புகள்,ஒளிக் காட்சிகள் எதுவேண்டுமானாலும் வரலாம்.உங்களைப் போலவே எனக்கும் தெரியாது.எதையுமே ஒழுங்கற்றுப் படித்த ஒழுங்கற்ற மூளையின் ஒழுங்கற்றப் பிதற்றல்கள் இவை.[இன்னொரு தடவை பஸ்ஸை நிறுத்தச் சொல்லவா இறங்கிக்கிறீங்களா?]அந்தாதி என்ற தமிழ்ப் பாவகை போல் கடைசி வார்த்தையிலிருந்து அடுத்த வார்த்தை அது எனக்குத் தரும் அர்த்தங்கள் என்று  உறக்கமற்ற ஒரு மனதின் குரங்குப் பாய்ச்சல் என  இதை வகைப் படுத்திக் கொள்ளலாம்.அவ்வளவே.

முதலில் வார்த்தை  என்ற வார்த்தையையே  எடுத்துக் கொள்வோம்.விவிலியத்தில் யோவான் தனது சுவிசேசத்தை அதிரடியாக 'ஆதியில் வார்த்தை இருந்தது' என்றே ஆரம்பிக்கிறார்[ஜான் என்ற பேரை யோவான் என்று யார் தமிழில் மொழி பெயர்த்தது என்று சொன்னால் தேவலை..ஆரம்பத்தில் இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தேன்.ஜோசப்- யோசேப்பு கூட பரவாய் இல்லை.ஜானுக்கும் யோவானுக்கும் தொடர்பே இல்லை.எல்லாவற்றையும் தோய்த்து தூய தமிழாய்  ஆக்கியே தீருவேன் என்று முண்டு கட்டி நிற்பவர்கள் மொழியை வைத்துக் கொண்டு அர்த்தத்தை தொலைத்துவிடும் விளையாட்டாக அது மாறமால் பார்த்துக் கொள்ளவேண்டும்]'

ஜான் சொன்னது.''ஆதியில் வார்த்தை இருந்தது.வார்த்தை கடவுளுடன் இருந்தது.வார்த்தையே கடவுளாக இருந்தது''யோவான் 1;1
அட்டகாசம்!வார்த்தையே கடவுளாக இருந்தது என்ற வரி எனக்குப் பிடித்த வரி.இங்கு வார்த்தை என்று சொல்வது எதைக் குறிக்கிறது என்று சர்ச்சை உண்டு.அது கர்த்தரைத்தான் குறிக்கிறது என்று பொருள் சொல்வார்  உண்டு.மிகப் பெரிய இறையியல் சர்ச்சைகள் இந்த ஒரு வாக்கியத்தின்  மீது தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன.நமது  வேதங்களில்  பிரணவம் எனப்படும் ஒலியையே[ஓம்]பிரபஞ்சத்தின் ஆதாரமாக எதுவும் பிறப்பதற்கு முன்னால் இருந்ததும் அனைத்தையும்  பிரளயம் நடத்திக் கழித்தபிறக்கும் மிச்சமிருக்கும் பொருளாகவும்  சொல்வதுண்டு.இந்த வார்த்தை என்பது இந்த ஒலியையே குறிக்கிறது என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.இந்த ஓம் என்ற ஒலியே ஆமேனாக அமீனாக உலகெங்கும் திரிந்து திரிகிறது என்றும் சொல்வார்கள்.[நான் இந்த விளையாட்டுக்கு வரலை.நமக்கு கல்லெல்லாம் சிவலிங்கம்.காணாதது எல்லாம்  பரம்பொருள்]

ஆனால் வார்த்தை லேட்டு பொருளே பஸ்ட்டு [word is late,but the thing is ancient]என்கிறார் பேகன்.[[போகன் அல்ல]பிரான்சிஸ் பேகன் 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த அறிஞர்.நான் இன்று எழுதிக் கண்டிருக்கும் கட்டுரை [essay]என்ற வடிவத்தின் பிதாக்களில் ஒருவர்.அதற்கு  முன்னால் எல்லாமே கவிதைதான் காவியம்தான்.அலுவலகக் கோப்புகள் மட்டுமே உரைநடையில் எழுதப் பட்டன.அவருக்கும் முன்னால் ரோம அரசர் மார்க்கஸ் அரேலியஸ் போன்றவர்கள் கொஞ்சம் உரைநடையில் எழுதியிருக்கிறார்கள் எனினும் அது  அத்துணை சிலாக்கியமான வெளிப்பாட்டுவடிவாகப் பார்க்கப் படவில்லை.நீண்டநெடிய இலக்கியப் பாரம்பரியத்துக்கு உரிய நமக்கே அது ஆடி அசைந்து 19 ஆம் நூற்றாண்டில்தான் வந்து சேர்ந்தது.ஆகவே காலக் கணக்கில் பார்த்தால் தமிழின் தலை சிறந்த நாவல் இனிமேல்தான் வர வாய்ப்பு அதிகம்[ஆனால் இனி ஒரு போதும் பெருங்காவியங்கள் வரும் சாத்தியங்கள் இல்லை]

இங்கு பேகன் பொருள் என்று குறிப்பிடுவது அர்த்தம் என்ற அர்த்தத்தில் அல்ல.வஸ்து அல்லது thing என்ற அர்த்தத்தில் வஸ்துவும்  வாஸ்துவும் ஒரே சொல்லின் இரண்டு வெவ்வேறு பயன்பாட்டு வடிவங்களே.வஸ்து என்ற பொருளை எப்படி சரியாக வைத்துக் கொள்வது என்ற கலையே வாஸ்து.எல்லாவற்றுக்கும் மூத்து நிற்கும் இந்த வஸ்துவை நாம் பிரம்மம் என்று சொல்வோம்.வஸ்து என்பது வார்த்தை அல்ல [word is not the thing]என்று ஜெ கிருஷ்ணமூர்த்தி சொன்னதைப் படித்துவிட்டு மண்டை காய்ந்ததும் நினைவு வருகிறது

பேகன் பற்றி சில சுவையான தகவல்கள்.சேக்ஸ்பியர் என்பதே அவர்தான் என்று சொல்வார் உண்டு.[நம்மூரில் சித்தர்களின் பேரில் யார் யாரோ நூல்கள் எழுதியிருக்கிறார்கள்.நம்ம பேரைப் போட்டா கேட்பாங்களா என்று அகத்தியர் பேரையோ வேறு சித்தர் பேரையோ போட்டு எழுதி விடுவார்கள்.எது மூல அகத்தியர் எது அ-மூலம் என்று கண்டுபிடிப்பதற்குள் நாக்கு தள்ளி விடும்].மேலும் அவர்தான் மேற்கத்திய சிந்தனாமுறையில் ஒரு அறிவியல் நோக்கைக் கொண்டுவந்தார் என்பார்கள்.அதற்கு முன்னால் எல்லாம் களத்தில் இறங்கி என்ன நடக்கிறது என்று ஆராயும் முறையைவிட மேசையில் சங்கர்லால் போல் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து [ரூம் போட்டு]விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து திடீரென்று அங்கிருந்து உதிரும் முத்துக்களை 'இதுதான் நிசம் பார்த்தேளா''என்று அரசவையிலோ போப்பிடமோ  சொன்னால் மறுபேச்சு சொல்லாமல் கஜல் ரசிகர்கள் போல் வா வா என்று பாராட்டி அணைத்துக் கொள்வார்கள்.எல்லாம்  அரிஸ்டாட்டில் பண்ணிய வெறும் மூளைப் பலகாரம்.பேகன்தான் 'குதிரையைப் பத்தித் தெரியணும்னா முதல்ல குதிரையோட இறங்கிப் பழகிப் பேசணும்வே'[எஸ் ரா இதத்தான் பண்றார்.அதை ஏன் கிண்டலடிக்கவேண்டும் என்றே புரியவில்லை] என்றார்.Empricsm என்று எதையும் செய்து பார்த்து  பார்த்து நம்பும் முறை.இந்திய சிந்தனையில் அது கிடையாது என்பதை தெளிவாக நாம் காணலாம்.அதனால்தான் இவ்வளவு நீண்ட தத்துவ ஞான மரபு எல்லாம் இருந்தும் நவீன உலகில் எந்தப் புல்லையும் பிடுங்க முடியவில்லை.இந்த empricsm தான்  அறிவியலின்  ஆதார விசை.ஒரு வேலை பேகன் வராவிட்டால் நீங்கள் இதை வாசிக்கும் கணினி வந்திருக்காது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இந்த empricsm தான் அவரைக் கொன்றது.இறைச்சியை குளிர்பதனப் படுத்தினால் எத்தனை நாள் இருக்கிறதுஎன்று 'களத்தில்' இறங்கி ஆராயும்போது சளி பிடித்து நிமோனியா வந்து  செத்துப் போனார்.களப் பலி!
இன்னொரு விஷயம் bacon என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் மற்றொரு  அர்த்தமும்  உண்டு.[பன்றி]இறைச்சி என்பதே அது!அவர் பேரிலேயே அவர் மரணம் எழுதி இருந்ததோ என்னவோ..

                   [வார்த்தை வரும்]...

5 comments:

 1. திகட்ட திகட்ட திகட்டாமல் எழுதும் திறன் ...
  'களப்பணி' க்கு ஒரு சபாஷ் ..உங்கள் எழுத்தின் ஊடே வரும் satire இல் தெறிக்கும் அந்த intelectual arrogance தான் எழுத்துக்கே அழகூட்டுகிறது

  ReplyDelete
 2. //எல்லாம் அரிஸ்டாட்டில் பண்ணிய வெறும் மூளைப் பலகாரம்.//
  இது புதுமைப்பித்தன் தனமா இருக்கே? :)

  சொந்த கதையில் துவங்கி, வார்த்தையை தாண்டி வாழ்வுக்கும் தத்துவத்திற்கும் தொடர்கிறது. வாழ்க!

  //ஜான் என்ற பேரை யோவான் //
  இதே குழப்பம் எனக்கும் நீண்ட நாளாக உண்டு. அதுவும் தமிழில் 12 வரை படித்துவிட்டு வந்தேறிகளின் தேசத்தில் புழங்க, சில சமயம் மூச்சு முட்டும். இங்கு வந்தபின் ஸ்பானிஷில் J என்ற எழுத்தை Y உச்சரிப்பில் பயன்படுத்தும் வழக்கம் தெரிந்தது. Jonathan என்று எழுதி யோனாதன் என்று படிப்பார்கள். தமிழில் மொழி பெயர்த்தவர்கள் ஸ்பானிஷ் சாமியார்களாகவோ அல்லது ஸ்பானிஷ் பெயர் கொண்ட சாமியார் பற்றியோ இருக்கலாம்.

  மேலும் J வை H ஆக படிக்கவும் செய்வார்கள். (San Jose - சான் ஹோசே). பன்மொழி வித்தகர்கள் கருத்துரைப்பார்களாக.

  ReplyDelete
 3. வித்யாசமான கோணத்தில் எழுதும் உங்கள் எழுத்து நடையும், வார்த்தை தேர்வுகளும்தான் உங்கள் படைப்பின் சிறப்பே.
  உங்கள் 'வார்த்தை' பிரயாணம் மிகவும் சுவாரசியாமாக இருப்பதால் நானும் பிரயாணிக்கிறேன் ஆர்வத்துடன். தொடருங்கள்!

  ReplyDelete
 4. அருமையாக இருக்கிறது. நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 5. படித்தால் மறுபடியும் சிரிப்பு வருவது.. உங்கள் வெற்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails