Thursday, October 28, 2010

சூலி

உச்சியில் ஆந்தைகள் தூங்கும்
இந்த மரத்தில்தான்
வெகு காலமாய் இருக்கிறேன்
உத்திரத்தில் கால் உதறித் துடித்தபோது
என்னோடு உள்ளே துடித்த
மூன்று மாத சிசுவோடு,.
பட்டுப் போன இந்த வாகை மரத்தில் ...

அன்பென மயங்கி
அகன்ற பூவில்
பெயரற்ற சூல் இட்டவன்
இந்த ஊரில்தான் இருக்கிறான்
எனை அறியேன் என்று  அவன்
ஊர்  நடுவில் மறுதலித்த கணமே இறந்தேன்
மலத் தொட்டியாய் உலகில்
தொடர விரும்பாது
இன்னொருமுறை இறந்தேன் 
ஆயினும் முற்றிலும்
பெருவெளியில் கரைந்துவிடாது
பிடித்திழுத்தது உடனிறந்த  முதிராச் சிசு
அதைச் சூல் கொண்ட
இந்த மரத்தின் உச்சியிலேயே
இரவுண்டு நிலவுண்டு
இருவரும் காத்திருந்தோம்
அவன் மண ஊர்வலம் போவதை
மனைவியுடன் சிரிப்பதை
மகனுடன் கொஞ்சுவதை
எல்லாம் கொதிப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தோம்
மெல்ல அவர்கள் என்னை மறந்து போனார்கள்
ஆனால் நான் மறக்கவில்லை
நானும்  என் சிசுவும் ..
விரிந்த வான் உதிர்க்கும்
விண்மீன்களை  எண்ணியபடியே
காத்திருந்தோம்
இலைகள் பழுப்பதை 
பூக்கள் இறப்பதை
திசைகள் தொலைவதை 
நதிகள் உலர்வதை
வழிகள் உறைவதை
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு..
அரை விழிப்பில் ..
அரை உயிர்ப்பில் ..

ஒரு இருள் இரவு
மெலிதாய் ஒரு உதிரவீச்சம் 
முகர்ந்து விழித்தோம்
மரத்தடியில் 
ஒரு பெண்ணை யாரோ
முகர்ந்துகொண்டிருந்தான்
ஆடையற்ற அவள் உடல் மீது
அசைந்துகொண்டிருந்த  அந்த முதுகை
நான் எங்கோ அறிந்திருக்கிறேன்
நான் 
அது அவனென உணர்ந்தேன்
அவனல்ல அவன் ரத்தம்
எனினும் அவன் ரத்தம்!
நான் நெடுநாட்கள் கழித்துப்  புன்னகைத்தேன்


முதிரும் முன்பே உதிர்ந்துவிட்ட
என் கருவைக் கையில் இடுக்கிக் கொண்டு
உலர்ந்த நாவில் உதிரத்தின் சுவையோடு 
தலைகீழாய்
நான் அவனை நோக்கி இறங்கினேன்...
என் காத்திருப்பு முடிந்துவிட்டது...

Wednesday, October 27, 2010

கூடு

நெஞ்சு வெந்துவிட்டதா
என்று அவன்
குத்திப் பார்க்கையில்
நான் அவன் அருகில்தான்
அமர்ந்திருந்தேன்..
அவன் குடிக்கிற
காட்டமான பீடி
ஒன்றைப் புகைத்துப் பார்க்க
மிக விரும்பினேன்
எனக்கு புகைக்கும் பழக்கம்
அதுவரை இல்லை எனினும்...
எரிதழல் தாங்காது
நானில்லாத என்கூடு
தானே எழுந்து அமர்வதை
ஆச்சர்யமாய்ப் பார்த்தேன்
கடைசிநேரத்திலும் பேரம் பேசிய
என் மகனைத் திட்டிக் கொண்டே
அவன் அதை அடித்து
அமர்த்திக் கொண்டிருந்தான்

மகனைச் சொல்லிக் குற்றமில்லை
கருமச் செலவுகளில் யாரும்
பங்கு கொள்ள வராதது பற்றி
அவன் ஏற்கனவே வருத்தத்தில் இருந்தான்
என்னுடைய காப்பீடுதாள்கள் எதுவும்
சகோதரிகள் கையில் சிக்கும் முன்பு
அவன் சென்றாகவேண்டும்
வாரிசுச் சான்றிதழ்கள் வங்கிக் கணக்குகள் என்று
 முக்கியமான கவலைகள் இருக்கின்றன..
அம்மா யாருடன் இருப்பாள்
என்று வேறு தீர்மானிக்க வேண்டும்
அவள் பேரில் தான் வீடு இருக்கிறது..
நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன்
கடைசியாக அவளைப் பார்க்கையில்
அவள் என் கடன் அட்டையைத்
தேடிக் கொன்டிருந்தாள்
நேற்று நெஞ்சில் ஆடிய பேரன்
என்னைக் கண்டு பயப்பட ஆரம்பித்திருந்தான்
அழுதுகொண்டிருந்த மகள்கள்
மாப்பிள்ளைகள் வந்ததும்
எழுந்து தனியறைக்குள் சென்று  கிசுகிசுத்தனர்

இனி அங்கு நான்
திரும்ப முடியாது என உணர்ந்தேன்
முதல் முறையாக செய்வதற்கு
ஒன்றுமில்லாது
தெரியாது
அந்த அந்தியில்
சடசடத்து எரியும்
தங்கத் தீச்சுடர்கள் நடுவே
கருகும் என் அடையாளத்தை
வெறித்தவாறே
அவன் அருகே அமர்ந்திருந்தேன்
என் கூடு மீண்டும் ஒருமுறை எழுந்தது
அவன் மீண்டும் ஒரு முறை
கம்பியால் ஓங்கி அடித்தான்
நான் 'மெல்ல''என்றது
அவனுக்குக் கேட்கவில்லை...

Friday, October 22, 2010

கவிதையின் வழிகள்...

சில கவிதைகளை எழுதியவுடன் 
ஒரு மௌனம் சூழ்ந்து விடுகிறது
ரயிலில் நட்பை ஏற்றிவிட்டு
தனித்து நடக்கும் மனிதன் போல
காதலியின் திருமணத்துக்கு
வாழ்த்துச் சொல்லி
கீழ் இறங்குபவன் போல
மகளை மணம் கொடுத்துக்
கையசைத்து வழியனுப்புகையில்
சுரக்கும் விழிநீர் மறைக்கும் தகப்பன் போல் 
ஒரு சோகம் வந்து விடுகிறது


சில கவிதைகளை
மீள வாசிக்கையில்
எப்படி இவற்றை எழுதினோம்
எனத் திகைப்பு தோன்றுகிறது
வானிலிருந்து என் வழி
இறங்கிவந்த கவிதையோ
என்று கூட மயக்குகிறது..

சிலவற்றை
இன்னும் சில காலம்
கர்ப்பத்திலேயே 
உறை கலையாமல்
வைத்திருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது

சில கவிதைகள்
சூல் கொள்ளாமலே
இருந்திருக்கலாம்

ஆனாலும்
என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ...

அதைத் கண்டுகொள்வதே
இங்கு இலக்கு .
அதன் பிறகு
என்னிடம் சொல்வதற்கு
ஒன்றுமிருக்காது
அதற்கான தேவையும்...

Tuesday, October 19, 2010

பறவைக்கொரு சிறகு..

வர்ணங்களற்ற
ஒற்றைச் சொல்லுடன்தான்
நம் நட்பும் ஆரம்பித்தது
நெடுநாட்கள் நகராது
அச்சொல்லிலேயே நின்றிருந்தது
ஆனால்
எந்தத் தருணத்தில்
அச்சொல் விதையானது ..?
என்று
பழுப்பு இலைகள் தளிர்த்தன...
கருப்பு வெளுப்பு பார்வைகள்
வர்ணங்கள் பூசிக் கொண்டன...
நம் உரையாடல்களின் நடுவே
இடைவெளிகள் விழுந்தன?
அந்த இடைவெளிகளில்
நிறைய பெருமூச்சுகள் கலந்தன?

மெல்ல நமக்கிடையே
நம் உடல்கள் முளைத்து நின்றன..
சவரம் செய்யாத
என் முகத்தை
ஒருநாள்
நீ பார்க்க நேர்ந்ததற்காய்
நான் மிகுந்த பதற்றமடைந்தேன்
 மீண்டும்
கவிதை எழுதவும்
புகைக்கவும் ஆரம்பித்தேன்
உன் உடைகளின்
நிறச் சேர்க்கை பற்றி
நீ மிகுந்த கவனம்
கொள்ள ஆரம்பித்தாய்
தினமும் 
புதிது புதிதாய்
வேறு வேறு
வாசனைகள் தரும் பூ போல
தோன்றினாய்
அனிச்சையான தொடுகைகளுக்கு கூட
என் கவனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு
கன்னம் சிவந்து விரைந்து விலகினாய்


கொஞ்சம் கொஞ்சமாய்
நம்மிடையே
ஒரு பனித்   திரைபோல
மழைச் சுவர் போல
புகை மூட்டம்போல
காமம் வளர்வது
எனக்கே  ஆச்சர்யமாக  இருக்கிறது
இருத்தலின் சுழலில்
உதிர்ந்த சிறகை
மறுபடி ஒட்டிக் கொண்டு
பறக்க நினைக்கும்
பறவை போலதான்
இன்னும் இருக்கிறதா இந்த  மனது ..?

Monday, October 18, 2010

அப்பாலிருந்து ஒரு அழைப்பு

கடைசியாய்
அவள் எழுதிய கடிதத்தில்
தற்கொலை பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை
அவள் உயிர் உறைந்த
கிணற்றின்
சுவரில் அமர்ந்து
ஏன் ஏன்  என்று
திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டிருந்தேன்
பாசி நீரில்
தெள்ளுப் பூச்சிகள்
துள்ளும் ஓசை தவிர
எல்லா சத்தங்களும்
களைத்து நின்றிருந்தன
மறுநாளும்
அவளுக்காய்
நான் எழுதிவைத்திருந்த
கவிதைகளோடு போனேன்
ஆனால்
தவளைகள் கூட 
அவற்றைக் கேட்க மறுத்தன
மெல்ல அவள் முகம்
என் நினைவிலிருந்து தொலைவதை
நான் பதற்றத்துடன் உணர்ந்தேன்
என் கனவுகளுக்கு
முகம் கொடுத்த முகம் ....
என் முதல் முத்தம்
பூத்த முகம்..
கண் பிரிந்து உருக
கசந்து அழுதேன்

அழுகை நின்றதும்
அவளை உணர்ந்தேன்
முல்லை மொக்கு
உடையும் வாசனையாய்
பூமியின் ஆழத்திலிருந்து
வெடித்த விசும்பலாய்
அலை மோதிப் புரண்ட
கொலுசு மணியாய்
மீன்கள் மோதி உடைத்த
கண்ணாடி வளையல்களாய்
அவள் மெல்ல உயர்ந்து  வந்தாள்
அசையும் நீர்விளிம்பில்
மிதக்கும் கூந்தல்
அசைக்கும்  அவள் முகம்
தெளிந்து வருவதைப் பார்த்தேன்
அவள் புன்னகைத்து
''அழாதே
இங்கு எல்லாமே
அமைதியாகவும்
குளிர்ச்சியாகவும் இருக்கிறது''எனறாள்
பிறகு கண் சிமிட்டி
'' நீயும் வா''எனறாள் ஆதூரமாய்..
என் தயக்கம் கண்டு  
மீண்டுமொருமுறை கைநீட்டி 
''வா''எனறாள்

அனேகமாக
இந்த வரியை
நீங்கள் படிக்கும்போது
நான் போயிருக்கக் கூடும்..

Sunday, October 17, 2010

பின்தொடரும் நிழலின் குரல்...

எல்லா கண்களும்
உறங்கிவிட்டன
என்ற நம்பிக்கையோடுதான்
அந்த அறமும் மீறப்பட்டது
ஆனாலும் அறியாது
விழித்திருந்தது
வானத்தில் ஒரு கண்...
மீறிய
மறு கணத்திலிருந்து
ஒரு நிழல் போல்
அவனைத் தொடர்ந்தது
அவன் கோயில் போனால்
அவனுக்கு முந்தி
அது கடவுளிடம்
தன் வருகையைப்
பதிவு செய்திருந்தது
குடிக்கப் போனால்
அவனது போதையை
அது ஏற்கனவே குடித்திருந்தது
அவனுக்கான மலர்களை
அவை பூக்கும் முன்பே
அது முகர்ந்து பார்த்திருந்தது

சிலசமயம்
அவனது கை உறைகளில்
அதன் விரல்கள் கிடந்தன
அவன் போக விரும்பாத
சில இடங்களுக்கு
அவன் காலணிகளுடன்
அது 
போய் வந்திருந்தது
பலநேரங்களில்
அவனது கடிதங்களில்
அதன் வார்த்தைகள்
சிலவும் கலந்திருந்தன
நெருக்கடியான தருணங்களில்
அவன் உதடுகள்
அவனை மீறி
அதன் சொற்களைப்
பேசுவது
அதிகரித்துக் கொண்டே இருந்தது
அவனை அது
மெல்ல
மரணம் நோக்கி
இழுத்துச் செல்வதை
அவன் உணர்ந்தான்
இறுதி நாள்வரை
தன்னைத் துரத்திய
அதன் முகத்தைக் காண
அவன்
முயன்றுகொண்டே இருந்தான்
சிதையில் கூடாய் எரிகையில் தான்
அதன் முகம்
தன் முகமே
என்று கண்டுகொண்டான்
ஆனால் அதற்குள்
காலம் கடந்துவிட்டிருந்தது ..

Friday, October 15, 2010

மயங்கும் காலம்

கடைசிச் சில்லுவரை
என்னை உடைத்து
உன் கிண்ணத்தில்
ஊற்றிக் கொள் ...
கடைசிச்  சொட்டுவரை
என் உயிரை
உனக்குள் நிரப்பிக் கொள் .
உன் செல்களின்
அத்தனை முடுக்குகளிலும்
என் நினைவுகளின் 
போதை ஏற்றித் திரி ..
அமுதென்றும் விஷம் என்றும்
அனைவரிடமும் பிதற்று
தெளிந்ததும்
சொர்க்கத்தில்
நீ இருந்த நாட்கள் பற்றி
பின்வரும் நபர்களுக்காய்
ஒரு சிறிய குறிப்பேனும் எழுதி வை...

LinkWithin

Related Posts with Thumbnails