Sunday, May 29, 2011

தேவி


எதையோ தேடியாரோ அழைத்தது போல்திடீரென்று கிளம்பி
நான் அங்கு சென்றேன்
ஏறத்தாழ ஐந்து மணி நேரம்
செங்குத்துமலை பாதையில்
மூச்சு சிதற நடை..

போன பொழுதில்
அந்திபகலின் பாவாடை விளிம்பில்
நீலச் சரிகையைப் பின்னிக் கொண்டிருந்தது மஞ்சள் வெளிச்சம் பழுக்கத் துவங்கியிருக்க  கொழுத்த பசுக்கள்
அன்றைய தினத்தின்
கடைசிப் புற்களை
மேய்ந்து கொண்டிருந்தன
கடைகளில் சிறு பெண்கள்
மணிகள் கிணுகிணுப்பது  போல 
தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்

யாரும் என்னைக் கவனிக்கவே இல்லை
கோயில் திறந்தே கிடந்தது
மினுங்கும் விளக்குகள்
நடுவே மிகத்
தனியாய் தேவி
நின்று கொண்டிருந்தாள்
அவள் கண்கள்
இரு எண்ணெய்த் துளிகள் போல
என்னை நோக்கி ஒளிர்ந்து வந்தன
தூரத்தில் கல் மண்டபங்களின் ஆழங்களில்
குரல்கள் எதிரொலித்தன
ஒரு குடம்
தண்ணீருக்குள் அமிழ்வது போன்ற சத்தங்கள் ..
குரலுக்கு உடையவர்கள்
அருகில் வர நான் காத்திருந்தேன்

காத்திருக்கையில்
சுற்றிலும் நிழல்கள்
வேகமாக வளர்ந்து வந்தன
கல் தூண்கள்
மூச்சு விடுவது போல விம்மின
வௌவால்கள் மௌனப் படம் போல
தூண்கள் மாற்றி மாற்றி அமர்ந்தன
குரல்கள் நெருங்கி விலகி
நெருங்கி விலகிச் சென்றன
தூபத்தின் வாசனை சட்டென்று
பெருகி
கருவறையை நிறைத்தது
இருள் இன்னும் திரண்டு 
தீபங்கள் இன்னும் கூர்ந்தன
 ஆயிரம் கண்கள்
என்னைப் பார்ப்பது போல் உணர்ந்தேன்
யுகம் யுகமாய்
அங்கேயே நிற்கும் சிற்பங்களின் கண்கள்...

இப்போது சட்டென்று
குரல்கள் யாவும் நின்றுவிட்டன
ஒரு கம்பளிப் போர்வை போல
கனத்த மௌனம் அங்கே நிறைந்தது
என் பின்னமுதுகில்
வியர்வைத் துளி ஒன்று புறப்பட்டு
உருண்டு உருண்டு இறங்கியது
உள்ளிருந்து யாரோ ஒரு பெண்
கிளுகிளுத்துச் சிரிக்கும் சப்தம் கேட்டது
கூடவே இசையாய்
தளும்பும் சலங்கை ..
யாரோ துருத்தி போல் மூச்சுவிடும் ஓசை  கிளம்பி பிரகாரத்தில் அலைந்தது 
நான் 'எல்லாம் பிரமை'
என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கருவறையில் தேவியின்
கல்முலைகள்
ஒருகணம்
உயர்ந்து தாழ்ந்தது
பீடத்திலிருந்து பூமி வெடித்தார் போல்  பெரும் ஒலியுடன் அவளிறங்கி வர ஆரம்பித்தாள்

அச்சத்துடன் நான்
பின்வாங்க முயன்ற போதே
உணர்ந்தேன்.
என் கால்கள்
இரண்டும்
நின்ற இடத்தில் வேர்விட்டு
கல்லாய் இறுகி இருந்தன
என் முதுகுத் துளி வேர்வை
கூட கல்பூவாய்
உறைந்திருந்தது

அங்கிருந்த ஆயிரம் சிலைகளுடன்
நானும் ஒரு சிலையாய்
மாறியிருப்பதை ..
நான் உணர்ந்த போது
நேரம் கடந்துவிட்டிருந்தது.

4 comments:

  1. நேரம் கடந்தே விட்டாலும், தேவியின் இருப்பு, உணரப் பட்டு விட்டது. சந்தோஷம்.

    ReplyDelete
  2. போகன்,
    தேவியின் சந்நிதியில் சிலையாய்ச் சமைந்து விடும் பெரும்பேறு எவருக்கு வாய்க்கும்? உங்களுக்கு வாய்த்திருக்கிறதே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சில கோயில் சிற்பங்களைப் பார்க்கையில் சிலையாகும் எண்ணம் தோன்றியிருக்கிறது :)
    வர்ண்னைகளும் உவமைகளும் பிரமாதம். அந்தி வானத்தை அழகுப் பாவாடையாகப் பார்த்திருப்பது அருமை! புதுமை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails