1.இரவு
இறங்கிச் செல்வது போல
நான் உறக்கத்துக்குள்
இறங்கிச் சென்றேன்
இருண்ட படித்துறையின்
ஒவ்வொரு படியிலும்
உணர்வின் வெளிச்சத்தை
ஒவ்வொரு துகிலாய்
உதிர்த்தவாறே
முதலில் என் விரல் நுனிகளை
தின்றுபார்த்தது நதி
பிறகு கால்கள்
வயிறு மார்பு என
என் உறுப்புகள் ஒவ்வொன்றாய்த்
தின்று தீர்த்தது
இரு அகல் விளக்குகள் போல
விழிகள் மட்டுமே
இறுதி வரை மினுங்கிக் கொண்டிருந்தன
ஓங்கி எழுந்த
பேரலையில்
அவையும்
கடைசியாய்க்
கரைந்த பொழுது
நதி என்றும்
நானென்றும்
எதுவுமிருக்கவில்லை
2.உறவு
மதில் போல
கிடக்கிறது இது
நீந்தித் தீரா
நதி போல
புணர்ந்து தீராக் காமம்
கண்ணாடி அறைக்குள்
மாட்டிக் கொண்ட
ஈசல் போல
முட்டி முட்டித்
துடிக்கிறது உடல்.
துரத்த முடியா
நிழல் போல
தொடர்ந்து வருகிறது
ஆழ்மனதில்
புதைத்து விட்டாலும்
கல்லறையை
உடைத்து வரும்
காட்டேரி போல
நள்ளிரவில் எழுந்துவந்து
கதவைத் தட்டுகிறது
கழுத்து நரம்பைப்
பற்றி இழுத்துக் கடிக்கிறது
கைகளில்
வழியும்
இளம் சூடான குருதியில்
தோய்த்து எழுதப் படுகிறது
இன்னுமொரு முறையும்
உடல் திரவங்களின் வரலாறு.
இரவு :
ReplyDeleteவெகு நுட்பமான விவரிப்பு, நான் எப்போதும் உணர்வதைப் போலவே. ஆனால் நதியாக மட்டும் எப்போதும் நினைத்ததில்லை.
வெகு நாட்களாக எழுதவில்லையோ? நானும் இங்கு வந்து நாளாகிறது.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் மூலம் வாழ்வின் நுட்பத்தின் சுவையை அளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இரவில் ஆழம் இருக்கிறது. திரும்பி வந்ததற்கு நன்றி - வாழ்த்துக்கள்.
ReplyDeletegood to see you back after a break
ReplyDeletethe swings of mood and the flow of words are fickle indeed ??
கவிதை இரவில் ஊர்ந்தேன்.... உறவில் ந்னைந்தேன்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteதினமும், உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்து புதிய பதிவுகள் ஏதும் காணாது, ஏமாற்றத்துடனும், பலவாறான சிந்தனைகளுடனும் திரும்பினேன். ஆனால், இணையத்தில் எழுதுபவர்களுக்கு இப்படியான அஞ்ஞாத வாசம் சில வேளைகளில் தவிர்க்க முடியாதது எனப் புரிந்தது. எனினும், திரும்பி வந்தமைக்கு மிக்க நன்றி. எப்போதும் போல, அக உணர்வுகளை மிக நுட்பமாக இந்தக் கவிதைகளில் வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDelete