Monday, May 30, 2011

உடல் தத்துவம் 17

எச்சரிக்கை -முதிர் வாசகருக்கு மட்டும் 

எச்சரிக்கை 2-பாத்திரங்கள் வெளிப் படுத்தும் அரசியல் நிலைப்பாடுகள் எழுதுபவரின் நிலைப்பாடாய் இருக்க வேண்டிய  அவசியமில்லை.

''உலகத்துல பாதி பேர்கிட்ட உள்ள பொருளை எவ்வளவு அரிதான பொருளாக்கி வைச்சிருக்கோம் பாத்தியா''என்றான் அன்வர் திரும்பி நடந்து வருகையில்.வழியெங்கும் அவனை அன்வர் பாய் ஆசுன் ஆசுன் என்று யாரேனும் விளித்துக் கூவிக் கொண்டே இருந்தார்கள்.நான் புரியாமல் ''என்ன பொருள்?''என்றேன்

''அதான் பொம்பிளைங்க சாமானைத்தான் சொல்றேன்.தங்கம் விலை அதிகம்னு சொன்னா ஒரு லாஜிக் இருக்கு.சப்ளை  கம்மி டெமான்ட் ஜாஸ்தி.சாமானுக்கு ஏன் இத்தனை டெமாண்டு?அதான் நிறைய இருக்குதே.''என்று சிரித்தான்.பிறகு படு சீரியசாய்  .''எல்லாவற்றிற்கும் பதுக்கல்தான் காரணம்''என்று சொன்னான்.கல்கத்தாவுக்கு அடிக்கடி வர நேர்வதால் கம்யூனிஸ்டுக்கள் மொழியை தவிர்க்க முடிவதில்லை என்று சொன்னான்.''பொழுது போகலைன்னா ஏதாவது ஒரு கூட்டத்துக்குப் போய் என்ன சொல்றாங்கன்னு கேட்பேன்.பெங்கால்ல இந்த மாதிரி தெரு முனைக் கூட்டங்களுக்குப் பஞ்சமே கிடையாது ''

.''பல சமயம் அவனுங்க சொல்றது சரியா இருக்கறா மாதிரியே இருக்கும் நாளைக்கே எல்லா அநியாயமும் சரியாகி ஜன்னத் பூமில இறங்கிட்டாப்பில இருக்கும்.ஆனா ஒண்ணுமே நடந்திருக்காது..ஆனா பாரு நான் பம்பாய்ல சேரில பொறந்து வளர்ந்தவன்.வறுமைன்னா என்னன்னு எனக்குத் தெரியும்.பம்பாய்ல கம்யூனிஸ்ட்டை சாமானுக்குள்ள போன பேனு மாதிரி லென்ஸ் வச்சுதான் தேடனும்.துணி பேக்டரில, பெஸ்ட் பஸ் டிப்போலன்னு கொஞ்ச பேர் சிகப்புக் கொடியோட நிப்பாங்க..அங்கியும் இப்ப பி எம் எஸ் கரன் வந்துட்டான்.அங்க எல்லாம் காங்கிரசும் மராட்டிக் கட்சிக் காரனும் தான் மராட்டி மனுஷ் காரனுக்கு வேலையே யாரெல்லாம் ஊரை விட்டு விரட்டனும்னு யோசிக்கரதுதான்.அதுல ஆரம்பிச்சு இப்ப மதத்தையும் சேர்த்துகிட்டு எங்களை நாட்டை விட்டு விரட்டனும்னு சொல்றான்.எங்க ஆளுங்க தொழில்ல கொஞ்சம் பெரிய ஆளா வந்துட்டா கூட மால் கேட்டு மிரட்டறது தரலைன்னு கடையையே ஆளோடு எரிச்சுட்டுப் போய்டறது.அப்படின்னு போகுது.அவன் தனியா ஒரு கவர்மெண்டு நடத்திகிட்டு இருக்கான்.அரசாங்கத்துக்கு வரி கட்டலைன்னாலும் பரவா இல்லை அவனுக்கு கட்டணும் சில சமயம் வரி எங்க ஆள் ரத்தமாவும் எங்க பொண்ணுங்க மானமாவும் இருக்கும்''என்றான்.

''எதிரடியா எங்க ஆளுங்களும் இப்ப அதே வேலையைப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.எங்க ஏரியாவுல ஒரு ஹிந்து காபிர் வந்து ஒரு புல்லைக் கூட விக்க முடியாது.பாகிஸ்தானுக்கா போச் சொல்றேன்னு உள்ளயே பாகிஸ்தான் கொடியை.ஏத்திகிட்டு அலையறான்.இதுதான் இன்னைக்கு பம்பாய் நிலைமை.ஒரு வகைல நாங்க இரண்டு பெரும் தலாக் சொல்ல முடியாத ஆனா எப்பவும் அடிசுசுட்டிருக்கிற புருஷன் பொஞ்சாதி மாதிரி ஆயிட்டோம்.ஆனா இதெல்லாம் மீறி கூட அங்கே கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு.ஆனா இந்த கல்கத்தா வருஷம் வருசமா அப்படியே இருக்கு.தேவடியாளுங்க கூட சடையும் பேணுமா அழுது வடிஞ்சுட்டு.என்னமோ சரியில்லை இங்கே.நியாயமா எல்லா நம்பிக்கையும் பிறக்கற இடமா இந்த பூமி இருக்கனும்.ஆனா எல்லா நம்பிக்கையும் சாகற இடமா இருக்குது ''

எனக்கு அவன் பேசும் அரசியல் தத்துவங்களில் அதிகம் மனம் நிலைக்கவில்லை.அது அவனது கேள்வி சிலுவை என்று உணர்ந்தேன்.என் கேள்வி வேறு.பொம்பிள சாமானுக்கு ஏனித்தனை கிராக்கி என்று அவன் சாதாரணமாய் கேட்டதில் உழன்று கொண்டிருந்தேன்.இந்தக் கேள்விக்குப் பதில் தேடுவதுதான் என் வாழ்வின் அடிப்படை என்பது போல்... என் பிரச்சினை உடலும் காமமும் தான் என்பதைத் தெளிவாக அந்தக் கணம்தான் உணர்ந்தேன் எனச் சொல்ல வேண்டும்.அவன் சொன்னது போல காமத்துக்கு ஏன் இத்தனை 'டிமாண்ட்?.ஒருவேளை அவனே மேலும் சொன்னது போல 'பதுக்கி வைப்பது'தான் தட்டுப்பாட்டுக்குக் காரணமா?பின்னொருநாள்  திருக்குறுங்குடியில் குரங்குச் சாமியார் என்று ஒருவரை ஒருதடவை சந்தித்தேன்.வங்கியில் மேலாளராய் இருந்தவர் திடீரென்று போட்டிருந்த சட்டையை இரண்டு ஒண்ணாச்சு இன்று என்று கூவிக் கொண்டே ஆபிஸ் நடுவே கிழித்து சாமியாராகிவிட்டார் என்று சொன்னார்கள்.அவர் ஒருதடவை இதே போல் ''அரைக் கிலோ கறி அதில கொஞ்சம் மசிரு அதுல போகுது எல்லார் உசிரு என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தார்.

ஆனால் அன்வர் துறவி அல்லவே.என் மனதுக்கு திண்டுக்கல் செல்வி ''மாதநாளில் கூட துணி சொருகுவதை யாராவது பார்க்கறான்' என்று சொன்னது நினைவு வந்தது.முதுகு சொடுக்கியது.அன்வரின் மீது கோபம் வந்தது.இவன் இங்கு எதற்கு என்னைக் கூட்டி வந்தான்?காமம் தீர்த்தலை கழிப்பறைக்குச் செல்வது போல என்னை உணரச் செய்துவிட்டான்.நான் இறுக்கத்துடன் பேசாது நடந்தேன்
''என்னாச்சு?'பேச்சையே காணோம்.'
.நான் சற்று நேரம் கழித்து ''கோழிப் பண்ணைல கூண்டு கூண்டா கோழி அடச்சுவச்ச மாதிரி ஒவ்வொரு ரூமா அடச்சு வச்சிருக்காங்க.அன்வர்''என்றேன்
அன்வர் என்னை உற்றுப் பார்த்தான்.

''பாவம் ஆயிடுச்சாக்கும்?இங்கே எல்லாமே காட்டு நியாயம்தான்.பாபு.தின்னு அல்லது தின்னப் படு.இங்கே ஒருத்தன் உயிர்வாழனும்னா இன்னொருத்தனைக் கொல்லனும்.காட்டிக் கொடுக்கணும்.அல்லது கூட்டிக் கொடுக்கணும்.உனக்கென்ன இப்ப.உங்க ஊர் பொண்ண பார்த்தவுடனே கஸ்டமயிடுச்சா...அப்ப எங்க ஊருப் பொண்ணுங்க தேவடியாளா இருந்தா பரவாயில்லையா ''என்றான் .குரலில் லேசாக கோபம் இருந்தது.''இப்ப என்ன பண்லாம்..அந்தப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ்க்கை கொடுக்கறியா.''

''அதில்லை..அந்தப் பொண்ண இந்த இடத்துல இருந்து நகர்த்திட முடியாதா .யாரோ ஒருத்தன் லவ் பண்றேன்னு ஏமாத்தி இங்க கொண்டு விட்டிருக்கான்''

''இங்க எல்லார் கதையும் அதுதான்.மத்தவங்க எல்லாம் பிறக்கும் போதே தேவடியாளாப் போகணும்னு வேண்டிக்கிட்டு இங்க வந்து சேர்ந்துட்டாங்களா என்ன ''என்று சிரித்தான்.

''அத விடு.நீ நினச்ச உடனே கூட்டிட்டு போயிடலாம்னு நினக்கரியா..வெள்ளைக் காரன் காலத்துல இருந்து நடக்குது இங்கே இது..உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கும் இந்த கச்சி.ஏறக்குறைய ஒரு ராஜாங்கம் மாதிரிதான்.ராசா மந்திரி காவலாளி உளவாளி எல்லாம் உண்டு.நீ அவளைக் கூட்டிட்டு சந்து தாண்டுறது முன்னால வெட்டிப் போட்டுடுவான்.அப்படியே நீ கூட்டிட்டுப் போயிட்டாலும் யார் கூட்டிட்டு வந்தது யாரோட வந்ததுன்னு துப்பெடுத்து வந்துடுவான்.புரியுதா.இதற்கு தீர்வு இது இல்ல.நான் இதுக்கு கூட்டிட்டு வரலை உன்னை.இந்தத் தொழில்ல தெரியாத மூலையே உனக்கு இருக்கக் கூடாதுன்னு தான் கூட்டிட்டு வந்தேன்.இந்த மாதிரி நோஞ்சான் மனச வச்சுகிட்டு இதுல ரொம்ப நாள் இருக்க முடியாது.செத்துப் போய்டுவே ''என்றான்..

நான் பேசவில்லை.அன்று இரவு முழுக்கத் தூங்காமல் புரண்டு அதிகாலை கோழி கூவும் போது உறங்கினேன்.பகல் முழுக்க உறங்கி மதியம்தான் எழுந்தேன்.

மறுநாள் மாலை அன்வர் என்னை ஹூக்ளி நதிக கரையில் புகழ்பெற்ற தக்ஷிநேச்வர் காளி கோயிலுக்கு அழைத்துச் சென்றான்.''நேத்து பண்ண பாவத்துக்குப் பரிகாரம்''என்று சிரிக்காமல் சொன்னான்.ஒருவேளை அதை உள்ளூர நம்புகிறான் போலவோ என்னவோ..

''எங்க தீன்ல பாவ மன்னிப்பு பரிகாரம் எல்லாம் கிடையாது.''என்றான்.''ஆனா பாவம் பண்ணாம எப்படி வாழறது?அதுவும் இந்தியாவுல மும்பைல தாராவில ஒரு முஸ்லிம் எப்படி பாவம் பண்ணாம வாழறது?''என்ற போது அவன் முகம் சிவந்து உதடுகள் துடித்தன.அவனை நான் அப்படி அதுவரை பார்த்ததே இல்லை.

கோயிலில் கூட்டம் இருந்தது.நவராத்திரி சமயம் ஆதலால் .எங்கு பார்த்தாலும் பஜனைகளும் மணி முழக்கமும்.''காளிமாதா கி ஜே''என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது.தலை முக்காட்டை பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு கை நிறைய வளையல்களும் நாணமுமாக.பெங்கால் பெண்கள் மதுரைப் பெண்களைப் போல கருப்பாகத் தான் இருந்தார்கள்.ஒரு மாதிரி எண்ணெய் தடவினார் போன்ற கருப்பு..நான் செல்வியை வங்காள உடையில் நினைத்துப் பார்த்தேன்.''அவனுக்கு நான் பாவாடைல இருக்கப்ப பண்ணினா தான் மூடு வரும்''என்று சொன்னது நினைவு வந்தது.

''இதுதான் ராமகிருஷ்ணர் இருந்து தேவியை தரிசம் பண்ணிய இடம்'' என்று ஒரு முதியவர் சொன்னார்

.''ராமகிருஷ்ணர் ஒரு சாது.விவேகானந்தரின் குரு.விவேகானந்தர் ...'என்று அன்வர் விளக்க முற்பட நான் அவனைக் கடுமையாக பார்த்தேன்.''இது கூட எனக்குத் தெரியாது என நினைக்கிறாயா?உண்மையில் உனக்குத் தெரிந்ததுதான் ஆச்சர்யம்''என்றேன்.அவன் இகழ்ச்சியான குரலில் ''ஒரு ஆச்சரியமும் இல்லை.அல்லாவையும் நபியையும் விட விநாயகரையும் ராமனையும் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்.தெரிந்தாக வேண்டும்.உயிர்ப் பிரச்சினை பாபு.மதராசில் பிறந்த உனக்குப் புரியாது''

அதுவரை அருகில் மௌனமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அந்த முதியவர் வறண்ட நிலத்தின் வெடிப்புகள் போன்ற அவரது முகத்தில் இடுங்கிய கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நெருங்கி வந்து ''ஆமி சாது''என்றார்.பின்னர் கை நீட்டி ''பக்ஷீஷ்''என்றார்.அன்வர் ''அதானே பார்த்தேன்''என்று சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக் கையில் வைத்து ''ஜா என்றான்.'

'பெங்கால்ல நவராத்திரி ரொம்ப பெரிசா இருக்கும்.பம்பாய்ல தீபாவளி மாதிரி.ஜனங்கள் செலவழிக்கத் தயங்க மாட்டாங்க.தான தர்மமும் பெரிசு பெரிசா நடக்கும்.எல்லா இடத்திலையும் நல்ல வியாபாரம் நடக்கும்.''என்றான்''பிறகு மெதுவாக ''சோனா கச்சியில கூட ''

நான் சட்டென்று பின்னந்தலையில் இரும்புத் தடியால் தாக்கப் பட்டவன் போல நிலை குலைந்தேன்.அந்த வாக்கியம் என்னைப் புரட்டிப் போட்டுவிட்டது.உதறிக் கொண்டு எதிரே நின்றிருந்த காளியை உற்றுப் பார்த்தேன்.அவள் மேல் பூக்கள் விழுந்து கொண்டே இருந்தன.அவளது நாக்கு ரத்தச் சிகப்பாய் இருக்க அவள் கண்கள் என் மீது படிந்து கிடப்பது போன்றொரு பிரமை எழுந்தது.வங்காளத்தில் காளியே பெரும் தெய்வம்.கல்கத்தா என்ற பெயரே அவளால் வந்தது.ஆனால் அவள் இருக்கும் அதே ஊரில்தான் உலகின் பெரிய பெண் சந்தையும் இருக்கிறது.இங்கு அவள் மீது மலர் மாலைகள் ஒவ்வொன்றாய் விழுந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் அங்கே இன்னும் வயதுக்கு வராத பெண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளில் கூட ஆண் குறிகள் நுழைக்கப் பட்டுக் கொண்டே இருகின்றன..!இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் ஏன் அண்டை நாடுகளில் இருந்தும் பெண்கள் மாடுகளைப் போல வாங்கப் பட்டும் விற்கப் பட்டும் காளியைக் கொண்டாடும் கல்கத்தாவுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள் அதுவும் நவராத்திரி நாட்களில் அதிகமாக!.

உண்மையில் நேரு சொல்லும் வேற்றுமையில் ஒற்றுமையை நீங்கள் கல்கத்தாவின் சோனா கச்சியில்தான் பார்க்கலாம்.எத்தனை விதம் விதமான பெண்கள்.எல்லா பிராயத்திலும் எல்லா அளவுகளிலும்.'ஆனால் எல்லாம் ஒரே காரியத்திற்காக.ஒரு தசைத் துண்டு இன்னொரு தசைக் குழியில் நுழைவதற்காக!

எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.கிழவன் ஒரு ரூபாயுடன் திருப்தி அடையாமல் என்னையும் அணுகி ''சாது.பக்ஷீஷ்''என்றான்.கொட்டுச் சத்தங்கள் அதிகரிக்க இரைச்சல் மிகுந்தது.அவன் என் முகத்துக்கு அருகே கை நீட்டி மறுபடி ''பைசா''என்றான்..அன்வர் கோபமடைந்து 'ஜா''என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.அவன் மண்ணில் விழுந்து உதட்டை வெட்டிக் கொண்டான்.மெலிதாக ரத்தம் கசியும் வாயுடன் தடுமாறி எழுந்தான்.   கோபத்துடன் அன்வர் கொடுத்த ரூபாயை அவன் மீதே வீசினான்,கோயிலில் மணி ஓசை உச்ச கட்டத்தை அடைந்தது. ''காளி மாதா கி ஜே'என்ற கோஷம் விண்ணை முட்டியது.
.'

4 comments:

 1. ஆணின் உலகை அனாயாசமாய், கடை விரிக்கிறீர்கள். கலவையான உணர்வோட்டம் உருவாகிறது.

  ReplyDelete
 2. ஒரு பந்துல ரெண்டு சிக்சர் அடிச்சிருக்கீங்க. நிறைய இடங்களில் பிரமிப்பூட்டும் எழுத்து.

  ReplyDelete
 3. ஆண், பெண், காமம் இவை பற்றிய சிந்தனைத் தேடலில், உங்களது எழுத்துப் படகில் நானும் பயணிக்கிறேன். நன்றி போகன்!

  ReplyDelete
 4. வங்காளத்தில் காளியே பெரும் தெய்வம்.கல்கத்தா என்ற பெயரே அவளால் வந்தது.ஆனால் அவள் இருக்கும் அதே ஊரில்தான் உலகின் பெரிய பெண் சந்தையும் இருக்கிறது/// சிந்திக்கவைக்கும் வரிகள்!ஏதோ மனம் வலிக்கின்றது!!!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails