நள்ளிரவில்
ராஜராஜச் சோழனை
என் கட்டிலின் காலருகே
சத்தியமாக நான் எதிர்பார்த்திருக்கவில்லை
பதறி எழுந்து உற்றுப் பார்த்தேன்
அவரேதான்
முகத்தில் சரித்திரத்தின்
சுமை வரிவரியாகத் தெரிந்தது
உடைகள் முழுக்க
காலத்தின் புழுதி படிந்திருக்க
கண்கள் அழுக்கடைந்த
வைரங்கள் போலிருந்தன
ஏனென்று விசாரித்தேன்
நான் எழுதப் போகும்
புதிய சரித்திர நாவலிடமிருந்து
தயவு செய்து
தன்னை விடுவித்துவிடும்படி
கேட்டுக் கொள்ளவே
தான் வந்திருப்பதாக
அவர் சொன்னார்.
உங்களால்தான் ஆயிரம் வருடங்களாக
நான் இதைத் தூக்கிக் கொண்டே அலைகிறேன்
என்று அவர் தனது உடைவாளைக் காண்பித்தார்.
[அதன் முனையில்
இன்னமும் பாண்டியர்களின் ரத்தம் காயாது இருந்தது ]
நான் தூங்கி ஆயிரம் வருடமாகிவிட்டது என்றார்
பெரிய கோயிலின் அத்தனைஇருட்டு மூலைகளிலும்
வவ்வால்களோடு வவ்வாலாக
தானும் தலை கீழாகத் தொங்குவதாக
விசனத்துடன் குறிப்பிட்டார்
தன்னுடன் குந்தவையும் நந்தினியும் கூட
சரித்திரத்தைச் சுமந்து கொண்டு
தஞ்சையின் சாலைகளில்
உறக்கமின்றி அலைந்து கொண்டே
இருப்பதாகச் சொன்னார்
பழையாறைக்கும் தஞ்சைக்கும்
நடுவில் இருந்த ராஜ பாட்டையில்ஒவ்வொரு இரவும்ஒற்றர்களைத் துரத்திக் கொண்டு ஓடி ஓடி
நான் மட்டுமல்ல
எனது குதிரையும் களைத்துவிட்டது என்றார்
சோர்வாய் ..
மரணமின்மை அப்படி ஒன்றும்
பொறாமைப் படக் கூடிய
விஷயம் இல்லை என்று விளக்கினார்
ஏசுவோ கிருஷ்ணனோ
தெய்வமோ மனிதனோ
சோழனோ பாண்டியனோ
எல்லோருமே ஒருநாள்
மரித்துவிடுவது நல்லது என்றும் உபதேசித்தார்செத்துப் போனவர்களை உயிர்ப்பது பாவம் என்றார்
இதை தான் உணர்வதற்குள்
கல்கி பொன்னியின் செல்வனை எழுதிவிட்டார்
என்று வருத்தம் அடைந்தார்
குறைந்த பட்சம்
பால குமாரனிடமாவது
நான் இதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கவேண்டும்
முடியவில்லை
இப்போது உங்களிடம் கேட்கிறேன்
தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்று கை கூப்பியபோது நான் பரிதாபப் பட்டேன்
ஆனால் தேவரே
நிலைமை கை மீறிவிட்டது
இப்போது நீங்கள்
மணி ரத்தினத்திடமும்
ஜெயமோகனிடமும் வேறு
அகப் பட்டுவிட்டீர்கள்
நான் விட்டாலும்
அவர்கள் விட மாட்டார்கள்
என்று நான் சொன்னபோது
அவர் முகம் சட்டென்று வெளுத்தது
ஐயோ அவர்களா இன்னும் ஒரு நூறுவருடங்களுக்கு எனக்கு விடுதலையே கிடையாதா
என்ற பெரிய கூச்சலுடன்
அணைந்த விளக்கிலிருந்து பிரியும்
புகை போல அலறிய படி மறைந்தார்
அவர் போன பிறகும்
கொஞ்ச நேரம்
அவரது குதிரையின் குளம்படிகள்
மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது
நான் நல்லிரவு
என்று பின்னால் கத்தியதை
அவர் கேட்டிருப்பார் என தோன்றவில்லை
சிரிக்கத் தூண்டும் பகடி வகைக் கவிதை. உங்களுக்கேயுரிய படிம முத்திரைகளுடன்!
ReplyDelete//கண்கள் அழுக்கடைந்த
ReplyDeleteவைரங்கள் போலிருந்தன//
//செத்துப் போனவர்களை
உயிர்ப்பது பாவம் என்றார்//
//அணைந்த விளக்கிலிருந்து பிரியும்
புகை போல அலறிய படி மறைந்தார்//
-- இவையெல்லாம் நான் 'அடடா' போட்டு ரசித்த வரிகள்.
'பெரிய கோயிலின் அத்தனை இருட்டு மூலைகளிலும்'--
'பழையாறைக்கும் தஞ்சைக்கும் நடுவிலிருந்த ராஜபாட்டையில்'--
'அவர் போனபிறகும் கொஞ்ச நேரம்
அவரது குதிரையின் குளம்படிகள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது'--
-- என்று ஒரு சரித்திர பின்னணியிலேயே கவிதை சரமாய் நீளுவது எடுத்துக் கொண்ட விஷயத்தில் வாசிப்போரை இருத்தி வைக்கிறது..
'பொன்னியின் செல்வனை' கல்கி உலாவ விட்ட அழகை அணுஅணுவாக ரசித்திருப்பது தெரிகிறது..
ஒரு புத்தம்புதுப் புதுப்பார்வைக்கு
வாழ்த்துக்கள்.
நள்ளிரவில் ராஜராஜசோழன் கத்தி முனை என்றதும் கவிதை எங்கேயோ போகிறதே என்று நினைத்தேன்.. நல்ல நகைச்சுவை. சரித்திரம் நம் கையில் சிக்கித் தவிப்பதை நானும் நிறைய ரசித்திருக்கிறேன். பின்னணியைத் தெரிந்து/புரிந்து கொண்டு இன்னும் பலமாகச் சிரிக்கிறேன்... இப்போதைக்கு இதுவே அருமை.
ReplyDeleteநான் ரசித்துச் சிரிப்பதை எப்படி வார்த்தைகளாக்குவது? அடைக்கலம் ஸ்மைலி. :) :) :௦ ) :)
ReplyDeleteராஜா ராஜனைக் கூட பரிதாபத்துக்குரிய ஜீவனாய்
மாற்றி விட்டீர்களே.
சத்தியமாக மிக மிக அருமையான நகைச்சுவை! இன்னமும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்! வாய்ப்பே இல்லைங்க :-)
ReplyDeleteரசனை :)
ReplyDelete