Sunday, March 27, 2011

கண்ணி 5

கவனம்-முதிர் வாசகருக்கானது 
உச்சிப் பொழுதில் ஒரு ஆரெம்கேவி பையில் சுற்றி அப்பா 'சாமானைக் 'கொண்டு வந்தார்.எஸ் ஐ அதை மூன்று தடவை எண்ணிப் பார்த்துவிட்டு ''அவனை வெளியே விடுலே''என்றார்.சில வெள்ளைக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அரைமணி நேரம் அப்பாவுக்கும் எனக்கும் கீதோபதேசம் செய்தார்.;;கொஞ்ச நாள் வெளியூரு எதுக்காம் அனுப்பி வையும் ..கேட்டீரா...சேர்க்கை சரியில்லை போல தெரியுது ..''என்றார். 

எல்லோருக்கும் தெரியப் போக வேண்டாமென்று அப்பா வள்ளியின் காரைக் கொண்டு வந்தார்.நான் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டேன்.வள்ளி திரும்பி ''ஏலே சின்னப் பொண்ணு சாமானைக் கிழிச்சிட்டியாமே அப்படியா''என்று சிரித்தான்.சித்தப்பா மகன் அதற்குள் வண்டியில் வந்து ஏறிக் கொண்டு 'வண்டி ஓட்ட வந்தா ஓன் சோலிய மட்டும் பார்க்கணும் கேட்டியா  ''

டவுனை அதுவரை ஒரு காரின் உள்ளிருந்து உச்சிப் பொழுதில் பார்த்ததே இல்லை.வேறு உலகம் மாதிரி இருந்தது.கடை பூட்டிக்  கிடந்தது.இரண்டு நாளாய்ப் பேப்பர் போடவில்லை என்று சித்தப்பா மகன் சொன்னான்.நான் அவனிடம் திரும்பி ''உன் பேர் என்ன''என்று கேட்டதற்கு நம்ப முடியாதவன் போல பார்த்தான்.முன் சீட்டில் இருந்த அப்பா பேசவே இல்லை.அவரது கழுத்துத் தசைகள்  இறுகி நரம்பு புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.ஏனோ இவை எல்ல்லாவற்றிற்கும் அவர்தான் காரணம் என்பது போல ஒரு வெறுப்பு எழுதந்தது.பாப்புலரில் படம் மாற்றி இருந்தான்.''தியேட்டரை மூடப் போறான்''என்றான் வள்ளி சிவசக்தியில் ரதி நிர்வேதம்  மறுபடி போட்டிருந்தான்.நானும் சண்முகமும் அந்தப் படம் எங்கு போட்டாலும் துரத்தித் துரத்திப் பார்த்திருக்கிறோம்.ஜெய பாரதியின் வாளிப்பான மலையாள முலைகள்  மீது எங்களுக்கு வெறியே ஏற்பட்டிருந்தது..''ஏம்லே அவளுங்களுக்கு மட்டும் இப்படி விளைஞ்சு  இருக்கு ..நம்ம மூதிங்க  சாமானை பாரு செப்புச் சாமான்  மாதிரி'..தொட்டாக் கரஞ்சுரும்  போல எழவு ''என்பான் சண்முகம்.''எல்லாம் சாப்பாடுதான் கேட்டியா.கால சாப்பாட்டுக்கே அவிங்க மாடு திங்கிறாங்க ...நம்ம ஆளுங்க தோசை மிளகாப் பொடின்னு ..பிறகு எங்கடே மஸ்து ஏறும் ''

கொஞ்ச நாட்கள் பெண்களின் மார்புகளின் வடிவ வித்தியாசங்களைப் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம்.கருப்பட்டி போல, காம்பசில் வரைந்தது போல சரியான வட்ட மார்புகள்.மதுக் கோப்பைகள் போல அரை வட்ட மார்புகள்.ஒரு கண்ணீர்த் துளி போல தேங்கி நிற்கும் மார்புகள்.முனையில் சிறுத்து பின்னர் பெருகிவரும் முலாம் பழ மார்புகள்.எனக்கு கருப்பட்டிகளே  பிடிக்கும்.அவனுக்கு முலாம் பழங்கள்..கடை மாடியில்  நின்றுகொண்டு இவளுக்கு ஆப்பிள் அவளுக்கு கருப்பட்டி என்று யூகித்துக் கொண்டிருந்தோம்.
சண்முகத்தை நினைத்ததும் அவனது அழகான மனைவி நினைவு வந்தது.அவளுக்கு கருப்பட்டியா முலாம் பழமா?என்று நினைத்தேன்.சிறையில் இருந்தபோது அவன் ஒரு தடவை கூட பார்க்க வரவில்லை என உணர்ந்து ''சண்முகம் ஊரில இருக்கானாடே''என்றேன்.அப்பா சட்டென்று திரும்பி ''அவனைப் பத்திப் பேசுனாக் கூட உன்ன வெட்டிக் கூறு போட்டுடுவேம்ல ''என்றார்,நான் மௌனமாக இருந்தேன்.

தெருவில் இறங்கும் போது பக்கத்து வீடுகளில் பெண்கள் சிறு சிறு கூட்டங்களாக  நின்று கொண்டிருப்பதைக் கவனித்தேன்.அம்மாவைக் காணோம்.அடுப்பாங்கரையில்  இருக்கக் கூடும்.அம்மாவின் இரண்டாவது தங்கைசித்தி வந்து ''ஏலே வந்தியா ''என்றால் என் அருகே வந்ததும் ''பின்னால போய்க் குளிச்சிட்டு வந்திர்ரியா அய்யா''என்றாள்.நான் கிணற்றடிக்குச் சென்று மொண்டு மொண்டு குளித்தேன் அந்த உடைகளை அப்படியே தூர  எறிந்து விட்டு உள்ளே வந்து ஒரு பருத்தி வேட்டியைக் கட்டிக் கொண்டு ஈயச் சொம்பிலிருந்து திருநீறு எடுத்து பூசிக் கொண்டேன்.பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி.அப்பாவுக்கு திருச்செந்தூர் விபூதி பிடிக்காது .அம்மாவைப் பார்க்கப் போனேன் அம்மா உள்ளே கட்டிலில் படுத்திருந்தாள்.என்னைக் கண்டதும் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.சித்தி காபி தம்ளருடன் உள்ளே வந்து என்னிடம் கொடுத்துவிட்டு  'எக்கா யாரு வந்திருக்கா பாரு''என்றால்.அம்மாவின் கழுத்தின் தசை  மணி ஏறி ஏறி இறங்குவதைப் பார்த்தேன்.அவள் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.நான் உடைந்து அழ ஆரம்பித்தேன்..

அந்தி மயங்கும்வரை நான் மச்சில் தூங்கிக் கிடந்தேன் .எழுகையில் வியர்த்து உடம்பெல்லாம் கசகசத்தது..மேலெல்லாம் குமட்டுவது போல ஒரு நாற்றமடித்தது..வியர்வை நாற்றமாக இருக்குமோ...ஆனால் இதற்கு முன்பு இந்த நாற்றத்தை நான் உணர்ந்ததில்லை.இன்னுமொரு தடவை குளிக்க வேண்டும் எனத் தோன்றியது.குளித்து முடித்து மீண்டும் உடை மாற்றி திருநீறு  பூசிய பிறகும் அந்த நாற்றம் லேசாக இருப்பது போல தோன்றியது..சித்தியிடம் சென்று காபி கேட்டேன்.''மக்கா ஒரு துண்டு  தோசை சாப்பிட்டுட்டு குடிக்கியா மத்தியானம் எழுப்பி எழுப்பிப் பார்த்தேன் நல்லாத் தூங்கிட்டே''
நான் சரி என்று அமர்ந்தேன்.
அவள் தோசை வார்த்து வந்தாள்.முதல் துண்டை எடுத்து வாயில் வைக்கும் போது மீண்டும் அந்த நாற்றம் எழும்பி வந்தது.
''சித்தி எதுவும் எலி கிலி செத்துக் கிடக்கா இங்கே?''
அவள் தோசையுடன் வந்து ''இல்லியே ..தோசை ஸ்டவ்ல சுட்டேன்.மண் எண்ணெய் வாசம் அடிக்கோவ் ? '''
''இல்லே இது வேற ''
தோசையை எடுத்து வாயில் வைக்கும் போதுதான் எனக்கு சட்டென்று அந்த நாற்றம் பிடிப்பட்டது.சிறுநீர் நாற்றம்.சித்தனின் சிறுநீர்.சீழ் கலந்த அவனது சிறுநீர் நாற்றமே அது 
நான் ஒங்கரித்துக் கொண்டே எழுந்து ஓடினேன்.பின்னால் போய் ஒவ் ஒவ் என்று குடலே வெளியே வந்து விடுவது போல வாந்தி எடுத்தேன்.சித்தி பின்னாலேயே ஒரு தண்ணீர்ச் சொம்புடன் ஓடி வந்தாள்.நான் எடுத்து முடிந்ததும் கிணற்றுத் திண்டைப் பிடித்தவாறே அப்படியே நின்றிருந்தேன்.காற்றில் மாமரம் சலசலத்துக் கொண்டிருக்க பறவைகள் கடைசி சம்பாசனைகளை கூச்சலாய் நிகழ்த்திக் கொண்டிருந்தன.ஒரு கணத்தில் மந்திரம் சொன்னாற் போல எல்லா பறவைகளும் அதை நிறுத்தி ஒரு பெரிய அமைதி சட்டென்று ஒரு போர்வை போல அங்கு விழுந்து விட்டது..பௌர்ணமி அருகில் இருக்கக் கூடும்.நிலா வெகு சோம்பலாய் நகர்ந்து கொண்டிருந்தது.

எனக்கு மெல்ல மெல்ல எல்லாம் தெளிவானது.இனி நான் என்ன செய்யவேண்டும் என உணர்ந்தேன்.வீட்டுக்குள் திரும்பி வந்தேன் சித்தியிடம் ஒரு காப்பி மட்டும் கொடு என்றேன் .மச்சில் ஏறி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து வைத்து வேட்டியில் மறைத்து வைத்துக் கொண்டேன்.ஒவ்வொரு வருடமும் வயல் அறுப்புக்கு முதல் கதிர் அறுக்க வாங்கிப் போவார்கள் இப்போது அதன் தேவை இல்லை.அந்த வயலைத்தான் விற்றாகி விட்டதே.அதன் மீது சட்டை அணிந்தேன் .அப்பாவின் ஈசி சேரில் அமர்ந்து எந்த வரிசையில் கொல்வது என்று யோசித்தேன்.அது சற்றுக் குழம்பிப் பின்பு தெளிவாயிற்று.முதலில் அந்த பிச்சைக் காரன்.அவனைக் கொன்றால்தான் என் மீது கிடக்கும் இந்த நாற்றம் போகும்.அவன் இளித்துக் கொண்டே என் மீது தன் குறியைத் தூக்கியது நினைவு வந்தது.''தாயோளி தாயோளி''என்று கத்தினேன்.முதலில் அவனைக் கழுத்தை அறுத்துக் கொல்லவேண்டும்.பிறகு அந்த ரைட்டர்.பிறகு சண்முகத்தின் மனைவி.அதன் பிறகு சண்முகம்.

இந்த வரிசையில் சண்முகத்தின் மனைவியை ஏன் சேர்த்தேன் என்பது எனக்கேப்  பிடிபடவில்லை.ஆனால் அது அவசியம் என்று ஏனோ தோன்றிக் கொண்டே இருந்தது.


காப்பியைக் குடித்துவிட்டு வானொலியில் உழவர் உலகம் தொடங்கும் நேரத்தில் வயிற்றில் மறைத்த அரிவாள் சில்லென்று உறுத்த நான் தெருவில் இறங்கி நடந்தேன்.7 comments:

 1. this could be your great work! பிரமாதமாக வருகிறது.

  ReplyDelete
 2. கருப்பட்டி முலை? அகராதியில் வெல்லம், பனை அட்டு என்று போட்டிருக்கிறது. sweet tits? என்ன உவமை?

  ReplyDelete
 3. Feels like you are showing some true faces of humans. Also Feels uncomfortable though.

  ReplyDelete
 4. very good... raw, native and alive

  ReplyDelete
 5. Appadurai refer this site for the pictures of Karuppatti.
  http://elitefoods.blogspot.com/2011/03/karuppatti-aappam.html

  ////hayyo hayyo :) ////

  ReplyDelete
 6. கருப்பட்டி link பார்த்தேன் - நன்றி Nanum enn Kadavulum.

  ம்ம்ம்.. கல்லாதது கருப்பட்டியளவு!

  ReplyDelete
 7. எந்த வேளாளர் வீட்டில் தோசை "வார்த்து" வருவார்கள்???

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails