இலவங்காய்
உடைந்து சிதறுவது போல
சாம்பல்க் காய்ச் சூரியன்
வெடித்துச் சிதறி
வெளியெங்கும் பறந்தது
வெயில் தூசு..
மஞ்சள்த் தூமை
திரண்டுருவான
அரக்கன் போலே
மண்ணிறங்கி வந்தது வெயில்
பிறந்ததும்
அப்பனற்ற
அசுரச் சிசு போல
பூமியின்
ஆழத்தில் உறைந்த
உயிர்நீர் அத்தனையும்
முலை சப்பிக் குடித்தது
குடித்தோங்கி
பிடரி மயிர் பறக்க
ஒரு பெருங் காட்டுக் குதிரை போலவே
வளர்ந்தது
பச்சைப் பெண்மை
கண்ட இடமெல்லாம்
கதறக் கதற
கால் பாவிக் கற்புண்டது
ககனத்தின் சாலைகளெங்கும்
ஆதிமனிதன் போலவே
எந்நேரமும் எழும்பிய
ஊர்த்துவ லிங்கத்துடன்
அடங்காது
அணையாது
அலைந்து திரிந்தது
யவனத்தின்
பித்தேறி
கருத்த தொடைகளுடன்
கனத்து வந்த
கனத்து வந்த
காளி வாய்க் காலத்துடன்
புணரப் பொருதி
கதிர் சிதற
உதிரம் பெருகி
இறந்து போனது
வீழ்ந்த
கதிர்விந்தின் துளிகளை எல்லாம்
காளிப் பெண் காலம்
அள்ளி அள்ளி
முகில் முலைகள் தொங்கும்
கருநீல
வானமெங்கும்
விதைச் சோறாய்
வீசி எறிந்தது
அவை யாவும்
விண்மீன்களாய் முளைத்து அசைய
கண்மூடி
அக ஒளிகேட்ட
எல்லா அறிவர்க்கும்
வெயிலென வாழ்ந்து
வெயிலென வீழ்
என்று
மந்திரம் சொல்லி
மறைந்து போனது
very nice one
ReplyDeleteவெயிலையே காணோம்!
ReplyDeleteSuperb.
ReplyDelete