Sunday, March 13, 2011

மற்றும் சில கவிதைகள்






1.கதவு திறந்ததும்
கண்ணதிரக் கிடந்தது
கூடம் நிறைய
வெள்ளி துளிரும்
வெளிச்ச விரிப்பு

போகும்போது பத்திரமாகப்
பூட்டிவைத்துப் போன
இருட்டை
களவாடிப் போன
கயவன் எவனென
கூரை மீதேறிப் பார்த்தேன்
திடுக்கிட்டு நகர்ந்தது
திருட்டு நிலா


2.ஒரு சீழ்க் கட்டி போல
ஆபாசமாய்ப்
பழுத்தொழுகிக் கொண்டிருக்கிறது
இந்த நிலா

திரட்டுப் பால்க் கிண்ணம்
போல
முன்பு
தோன்றிய
அதே நிலா

பழைய சிறகைக்
களையும்
பறவையாய்
நீ என்னை
களைந்தோடும் முன்பு..
தோன்றியது அது



3..எழுத்தின்
நாவினால்
உன்னைத் தொடுகிறேன்
முத்தத்தில்
இது ஒரு வகை



4.முள்ளோடு
கலந்தது
முளரி
கள்ளோடு
இறங்கிற்று
கலயம்
கலயத்தில்
புரண்ட
கரு நாவல் துண்டுகள்
உண்ண உண்ணத் தீரா
உயிர்ச்சோறு



5.பெருவழிப் பாதையில்
உறங்கும் சிறு முயல்
கடிக்கும் புதுத் தளிர்
பசித்த வயிற்றுக்குப்
பச்சை ரத்தம்
கொதிக்கும் உலையில்
குதித்துருகும் பறவை


6.இந்தக் குகை
எங்கு முடிகிறது
என்றவனிடம்
உன்னால்
எதுவரை
போக முடிகிறதோ
அங்கு என்றாள்

6 comments:

  1. ஒவ்வொன்றும் ஒரு ஒரு வகை... வெகுவாய் ஈர்த்து விட்டன....

    வாழ்த்துகள் :)

    ReplyDelete
  2. கவிதை அருமை.வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ////எழுத்தின்
    நாவினால்
    உன்னைத் தொடுகிறேன்
    முத்தத்தில்
    இது ஒரு வகை/////

    ம்ம் .......இந்த முத்தமும் நன்றாகத்தான் இருக்கிறது.
    அழகு விவரணை .....நிலவின் வெளிச்சம் குறித்து.

    ReplyDelete
  4. ///.இந்தக் குகை
    எங்கு முடிகிறது
    என்றவனிடம்
    உன்னால்
    எதுவரை
    போக முடிகிறதோ
    அங்கு என்றாள்///

    WOw !!

    ReplyDelete
  5. /////திடுக்கிட்டு நகர்ந்தது
    திருட்டு நிலா/////

    நிலாவை திருட்டு நிலாவென்று செல்லமாய் இப்படியும் வையலாமோ ??

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails