Tuesday, April 17, 2012

கந்தர்வன்

பேராற்றின் கரையில் 
நுண்மணல் மலர 
அமர்ந்திருந்தாள் அவள் 
இருள் 
ஒரு பெரும்பாம்பு போல 
பூமி மீது படரும் பொழுதில் 
வானிலிருந்து 
வீழ்ந்து கொண்டிருத்த 
அவன் அவளைக் கண்டான் 
மனிதர்களைப் போலவே இருந்தாலும் 
அவன் மனிதன் அல்லன். 
புராணங்களில் 
அவன் கந்தர்வனாகவும் 
விஞ்சையனாகவும் 
தேவனாகவும் 
இயக்கனாகவும் 
அறியப் படுகிறான் 
அங்கிருந்து நோக்க 
கரை மேல் ஏற்றி வைத்த அகல் போல 
அவளிருக்கக் கண்டு 
அவனருகில் வந்தான் 
சூறைக் காற்றில் ஒடுங்கி நடுங்கும் 
சிற்றகல் அவள் 
எனினும் 
முனைகளில் ஆடக முனை 
விட்டெறிந்த அந்த அகல் 
வெளிச்ச ஏணிபற்றி 
தான் வீழ்ந்த 
சொர்க்கத்திற்கு ஏற முடியும் 
என்று அவன் கண்டு கொண்டான் 
மெல்ல ஒரு இறகு போல 
இறங்கி அவளருகில் நின்றான் 
கைகூப்பி 
வான் முனை காண்பித்து 
அவளிடம் ஏதோ சொன்னான் 
ஒருவேளை 
நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி 
அவளிடம் சொல்லி இருக்கக் கூடும் 
அல்லது 
அவள் தனது கருவறையில் 
பொதிந்துவைத்திருக்கும் 
இன்னும் பிறக்காத பிரபஞ்சங்கள் பற்றி 
அவள் அதைக் கேட்டாளா 
தெரியவில்லை.
அதன்பிறகு 
இப்புவி மீது 
அவளைக் கண்டவரில்லை.

ஆனால் 
ஒன்று நிச்சயம் 
கணிணியில் 
வெறும் எண்களாய் 
அவளை 
நான் மாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் 
இவையெல்லாம் நிகழ்ந்தது.

2 comments:

  1. ம்ம்.

    ஆந்தைக்கண் கொண்டு இதைக்காண முடியாது.

    ஆழக்கண் கொண்டு தான் காணமுடியும்.

    ReplyDelete
  2. பொருளறியாத சொற்கள் பல. கருத்து புரிகிறது. மனதைப் பிசைகிறது.

    சில மாலைகளில் ஓடிவிட்டு புல்தரை மேட்டில் தலைகீழாகச் சரிந்து படுத்து மேல்வானத்தைப் பார்த்தபடி இருப்பேன்.. சில உருவங்கள் இப்படி வழி தொலைந்து என்னையே பார்த்தபடி அருகில் வருவதா வேண்டாமா என்று உயர உயர வானில் தயங்கி நிற்பது போல் தோன்றும். இதைப் படித்ததும் கொஞ்சம் திடுக்கிட்டேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails