Friday, April 1, 2011

எச்சம்

எப்போதும்
மூடியேக் கிடந்தது
அந்த வீடு
இறுகிய முஷ்டி போல
அல்லது
ஒரு சிப்பி போல
பறவைகள் இல்லாது
தானே
தன்னைக் கட்டிக் கொண்ட
ஒரு கூடு போல....
கனத்த திரைகள் மீறி
கசியும் ஒளியைத் தவிர
உயிர்ப்பின் சுவடுகள்
ஒன்றையும் காட்டா வீடு ....

பள்ளி போகும் குழந்தை
நடை போகும் முதியவர்
கோலம போடக் குனியும் பெண்
ஆபிஸ் போக
வண்டி உதைக்கும் ஆண்
என்று
எந்த மனிதரும்
அந்த வீட்டிலிருந்து
வெளியே வருவதைக்
நான் கண்டதில்லை

கீரை விற்பவள்
குறி சொல்பவர்
ஓட்டு கேட்பவர்
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்
என்று எவரும்
அதற்குள்
சென்றதையும் பார்த்ததில்லை
நடுவானில் உறைந்துவிட்ட
மழைத்துளி போல
காலத்தில் தனியாக நின்றிருந்தது
வீடு

நேற்று
முதன் முறையாக
திறந்து கிடந்தது
அதன் அத்தனை கதவுகளும்
ஜன்னல்களும்
ஆபாசமாகத் திறந்து கிடந்தன
வாசலில் ஈக்கள் போல
சிறிய கூட்டம்
பதற்றத்துடன் அணுகினேன்

அந்த வீட்டில் இருந்த பெண்
இறந்து விட்டாள் என்றார்கள்
அந்த வீட்டில்
ஒரு பெண்
இருந்தாரா
என்று அவர்களிடம் கேட்டேன்
இருந்திருக்க வேண்டும்
இல்லாவிடில்
இறந்தது யார்
என்று அவர்கள் கேட்டார்கள்
சரிதான் இல்லையா
இறக்கிறதின் மூலமாகவே
தான் இருப்பதை
சிலர்
நிரூபிக்கிறார்கள்

8 comments:

  1. இறந்தது யார்
    என்று அவர்கள் கேட்டார்கள்
    சரிதான் இல்லையா
    இறக்கிறதின் மூலமாகவே
    தான்
    இருப்பதை
    சிலர்
    நிரூபிக்கிறார்கள்//

    nice vaalththukkal

    ReplyDelete
  2. உண்மைதாங்க .. ரொம்ப எளிமையான புரியும்படியான கவிதை :-)

    ReplyDelete
  3. //இறக்கிறதின் மூலமாகவே
    தான்
    இருப்பதை
    சிலர்
    நிரூபிக்கிறார்கள்//

    பிரமாதம்.

    ReplyDelete
  4. பல வரிகள் பலமானவை. 'தானே கட்டிக்கொண்ட கூடு', 'நடுவானின் மழைத்துளி', 'திறந்த கதவுகளின் ஆபாசம்'.. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. நல்ல அர்த்தமுள்ள வார்த்தைகளின் அணிவகுப்புள்ள கவிதை. மேலும் தொடரட்டும் கவிதையின் மழை!!!

    ReplyDelete
  6. ///இறக்கிறதின் மூலமாகவே
    தான் இருப்பதை
    சிலர்
    நிரூபிக்கிறார்கள்// Wow !! what a pity.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails