Friday, April 15, 2011

ஏழாம் நாள் ...

ஒரு கள்ளக் காதலன் போலே
சவுக்கு மரங்களிடையே
சத்தமின்றி ரகசியமாய்
இறங்குகிறது முதிராப் பொன்வெயில்

பாதையில் வெயில் காயும் பூனை
கடந்து போகிறவரை எல்லாம்
சோம்பலாய்
கண் சுருக்கிப் பார்க்கிறது .

சதுரங்கக் கட்டங்கள் போல
கருப்பு வெளுப்பாய்
மினுங்கும் சிறிய குருவி
வாலைத்தூக்கித் தூக்கிக்
கூவுகிறது

காப்பான் இல்லாக் குடத்துக்கும்
கருணையோடு பொழிகிறது
தண்ணீரை
கிராமத்துக் குழாய்...

ஈரக கூந்தல்
ரவிக்கையில சொட்ட
வாசனையோடு தாண்டிப் போகிறாள்
இளம் பெண்

நீளமாய்க் கிடக்கும் ரயில் நிலையத்தில்
சிமிண்டு பெஞ்சில்
தூரப் பார்வையுடன்
தனியாய் அமர்ந்திருக்கிறாள்
குறப் பெண் குழந்தையுடன்..

மரத்திலிருந்து குதித்த
ஒரு இலை போல
காற்றில் இறங்கும்
பட்டாம் பூச்சியை
கைநீட்டிப் பிடிக்க முயல்கிறது
அவள் குழந்தை..

ஓய்வுநாள் காலை
என்ற ஒன்றை
உருவாக்கியவருக்கு
நன்றிகளுடன்
எல்லாவற்றையும்
கடந்து செல்கிறேன் நான்.

6 comments:

  1. ஒரு சோம்பல் காலையின் செய்நேர்த்தியுடன் சிக்கனமான வார்த்தைகளில் காட்சிப்படுத்தப்பட்ட எளிமையான கவிதை. அற்புதம் போகன்.

    ReplyDelete
  2. தலைப்பை விட்டுவிட்டேனே?

    அது ஏழாம் நாள் அல்லது முதல்நாள்.

    சரிதானே போகன்?

    ReplyDelete
  3. நன்றி நாகா

    சுந்தர்ஜி ஏழாம் நாள் என்பது விவிலியச் சொல்லாடல்.அறிந்திருப்பீர்கள்.எல்லாம்செய்துவிட்டு கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்பார்கள்.

    ReplyDelete
  4. விவிலியத்தின் சொல்லில் ஏழாம் நாள்.(பாளையங்கோட்டை ஜான்ஸில்தான் கல்வி)

    வாரத்தின் சொல்லிலும் ஏழாம் நாள் அல்லது முதல் நாள்.

    இப்படித்தான் அர்த்தப்படுத்தினேன் போகன்.

    ஆனாலும் விவிலிய ஏழாம்நாள்தான் பொருத்தமாய் அமர்கிறது.

    ReplyDelete
  5. முதிரா பொன்வெயில், கண்சுருக்கி பார்க்கும் பூனை, ரயில் நிலைய சிமென்ட் பென்ச்......... அருமை, அருமை! மிகவும் ரசித்தேன் போகன்.

    வேலை செல்லும் நாட்களில், ஞாயிற்றுக் கிழமை மதியத்தில், மொட்டை மாடி திட்டில் ஒரு சோம்பேறிதனத்துடன் அமர்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்து ரசித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. உங்கள் கவிதை வரிகளில் அந்த இனிமையை உணர்ந்தேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails